Saturday 18 May 2013

வரலாற்றியல் பொருள்முதல்வாதம்



மார்க்சுக்கு முன்பானவர்களின் சமூகம் பற்றிய கருத்துக்கள்

சமூகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பற்றிய தேடல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்தே நடைபெற்றுவருகிறது. மக்கள் தமது நடவடிக்கைகளை தமது உணர்வுநிலையின் அடிப்படையில் தான் அமைத்துக் கொள்கின்றனர். அதனால் உணர்வுநிலை என்பது தத்துவ ஆராய்வில் முதலிடம் பெறுகிறது.

கருத்துமுதல்வாதிகளின், மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதிகளின் சமூக சிந்தனை, விஞ்ஞானத்துக்கு புறம்பான கருத்துமுதல்வாதத் தன்மை பெற்றதாக இருந்தது.

கருத்துமுதல்வாதிகளில் அகநிலை, புறநிலை என்ற இருபிரிவுகளும் தத்தமது போக்கில் சமூகம் பற்றிய கருத்தினை புரிந்து கொண்டிருந்தனர்.

               புறநிலை கருத்துமுதல்வாதிகள்  சமூக வளர்ச்சி என்பது  புறத்திலிருந்து வருவதாக கருதினர். இவர்களின் புறம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது, கருத்துவகைப்பட்டது. கடவுள், பிரம்மம் போன்ற புற சக்திகளிடம் சமூக மாற்றத்துக்கான தொடர்பை இணைத்துக் கொண்டனர். அதாவது மனிதர்களின் நடவடிக்கையும், சமூக செயற்பாடும் தம்மளவில் சார்பற்ற புறஉலகில் தான் தீர்மானிக்கப்படுகின்றது என்று முடிவெடுத்தனர்.

இதன்படி தமது செய்பாடுகளுக்கான எல்லாப் பொருப்புகளையும் புறசக்தியிடம் ஒப்படைத்தனர், தமது பொருப்புகளை புரிந்து கொள்ளாது, தத்தமது செய்பாடுகளுக்கு புறசக்தியை காரணமாக்கினர். புறசக்தியிடம் அடிபணிவதே தமக்குரிய விடிவாக எண்ணினர்.

இதனால் சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உள்ள விதிகளை அறியமுடியாமல், தமது வாழ்வை விதிவழி பட்டதாக கருதிக் கொண்டனர். இது நிர்ணயவாதமாக விதிவாதமாக திகழ்கிறது.

அகநிலை கருத்துமுதல்வாதிகள் மனிதர்களுடைய செயற்பாடுகள் மனித சிந்தனைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அதே போல சமூக நடவடிக்கைகளும் தலைசிறந்த மனிதர்களின்  சிந்தனையால் உருவாகிறது என்றும் முடிவெடுத்தனர். இதன் அடிப்படையில் மனிதர்கள் தமது விருப்படியே செய்படுவதாகவும் அதற்கு அவர்களே பொருப்பாவர் என்றும் உரைத்தனர்.

புகழ்பெற்ற கற்பனாவாத சோஷலிசவாதிகளான சான்சிமோன், பூரியே, ஓவன் போன்றோர், முதலாளித்துவ சமூகத்தை கடுமையாக கண்டித்தனர், சபித்தனர், சுரண்டலற்ற சோஷலிச சமூகம் தோன்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டனர்.  ஆனால், இதற்கான வழிமுறைகளை அவர்களால் காண முடியவில்லை. முதலாளித்துவம் நிலவுவதற்கான காரணத்தையும், அது மறைவதற்கான சூழ்நிலைமைகளையும் அறியாது, விடிவை முதலாளியிடமே தேடினர்.

இன்றை சமூகம் அநியாயம் நிறைந்தது, இதனை இன்றை சமூகத்தை அட்சி செலுத்தும் வர்க்கத்திடமும் ஆட்சி செய்பவர்களிடமும் புரிய வைத்தால் போதும் பிறகு மண்ணுலகில் அமைதி கண்டுவிடும், நல்வாழ்வு அமைந்துவிடும் என்று எளிமையாக புரிந்து கொண்டனர்.

சமூகம் பற்றி மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வதிகளின் கருத்தும் விஞ்ஞான வழிபபட்டதாக இல்லை. கல்லீரல் பித்த நிரைச் சுரப்பதைப் போலவே மூளை சிந்தனையைச் சுரக்கிறது என்றே கருதினர். இவர்களது பொருள்முதல்வாதம் கொச்சைத் தன்மையினதாக காணப்பட்டது. கருத்துமுதல்வாதிகள் மட்டுமல்லாது மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதிகளின் சமூகம் பற்றிய கருத்து கருத்துமுதல்வாதவயப் பட்டதாகவே இருந்தது.

இந்த பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாட்டுத் தன்மையையும், இதன் முழுமையற்ற குறையையும் உணர்ந்து மார்க்ஸ் இயற்கை பற்றிய பொருள்முதல் கண்ணோட்டத்தை வரலாற்றுத் துறைக்கு விரிவுபடுத்தினார்.

மார்க்ஸ், பழைய வரலாறு பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தின் குறையாக இரண்டைக் கண்டார். முதல்குறை என்னவென்றால், அது மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகளின் சித்தாந்த நோக்கங்களை மட்டுமே ஆராய்ந்தது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூக பொருளாதார நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  சமூக வளர்ச்சியை  நிர்ணியிக்கின்ற புறநிலையினைப் பற்றிய புரிதல் அவற்றில் இல்லை.

இரண்டாவதாக மக்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவேயில்லை. மக்கள் கூட்டத்தின் செயற்பாடுகளை நிர்ணயிப்பது எது? சமூகத்தில் மக்களுக்கு கருத்துகளுக்கும் விருப்பங்களுக்கும் மோதுவதற்கான அடிப்படை காரணங்கள் எது? என்பதை பழைய வரலாற்றுக் கண்ணோட்டங்கள் அறிந்திருக்கவில்லை.

மார்க்ஸ் தான் இதனை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று தத்துவத்தில் சமூகம் பற்றிய தனிப்பிரிவாகவும் அதனைப் பொருள்முதல்பார்வையிலும் வளர்த்தெடுத்தார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் பாடப்பொருள்

       மார்க்சுக்கு முன்பானவர்கள், வரலாற்றை செயல்படுத்தும் கருத்துக்களையும், அதன் நோக்கங்களையும் ஆராய்ந்தார்கள். மார்க்ஸ் தான் இந்த கருத்துக்களும் அதன் நோக்கங்களும் தோன்றுவதற்கான காரணங்களை ஆராய்ந்தார்.  சமூகக் கருத்துக்களின் தோற்றத்தை புறநிலையில் மார்க்ஸ் கண்டார். பொருளாயத உற்பத்தி வளர்ச்சியின் தரத்திலும் அதற்கே உரித்தான உற்பத்தி உறவுகளிலும், ஏற்படுகின்ற புறநிலையில் மார்க்ஸ் அதனைக் கண்டார்.

       இயற்கையின் விதிகளைப் போன்றே சமூகமும் விதிகளின்படி செயல்படுகிறது, இந்த விதி மனிதனுடைய உணர்வுகளை சார்ந்திராமல் புறநிலையாக இருக்கிறது. அதாவது சமூகத்தின் இயக்க விதிகளை மனிதர்கள் படைத்திட முடியாது, ஆனால் இந்த  விதிகளை அறிந்திடவும், அதன் அடிப்படையில் தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவும் அதனோடு சென்று மாற்றத்தை விரைவுபடுத்தவும் முடியும்.

       சுதந்திரம் என்பது அவசியத்தை அறிந்து செயல்படுவதில் தான் இருக்கிறது. இன்றைய அவசியமான தேவையை அறிந்து செயல்படுவதே சுதந்திரமாகும். அதாவது குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு, தன்னிச்சையாகத் தேர்வு செய்தால் அது அகநிலைப்பட்டதாகவும், தீர்வை அடையமுடியாமை என்ற நிலையையும் ஏற்படுத்துகிறது. இயல்பான தேவை பற்றிய அறிவின் மீது கட்டுப்பட்டது அவசியம் பற்றிய அறிதலாகும். எனவே இது வரலாற்று வளர்ச்சி வகைப்பட்டதாகிறது. இந்த சமூக வளர்ச்சியின் போக்கை மார்க்ஸ் கண்டறிந்தார்.

சமூகம் பற்றிய வரலாற்றை ஒரு விஞ்ஞானத்தின் அடிப்படையில் மார்க்ஸ் வலியுறுத்துகிறார், சமூகப் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சி தான் வரலாற்றின் இயற்கையான நிகழ்ச்சியாக  நிறுவுகிறார்

       அதாவது, சமூக நடவடிக்கை அனைத்துக்குமான அடிப்படையாய் அமைவது பொருட்களின் உற்பத்தி நடவடிக்கையும் அப்போது ஏற்படுகின்ற உறவுகளுமே, சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைகிறது. அந்த உறவுகளுக்கு ஏற்ப தோன்றும் தத்துவம், மதம், அரசியல் போன்ற அறிவுத்துறைகள் அனைத்தும் மேற்கட்டமைப்பாய் அமைகிறது.

       அடித்தளம் என்றழைக்கப்படுகின்ற உற்பத்தி நடிவடிக்கையின் போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவே சமூக வாழ்நிலையை உருவாக்குகிறது. இந்த வாழ்நிலையே மேற்கட்டமைப்பு என்றழைக்கப்படுகின்ற சமூக உணர்வுநிலையை தோற்றுவிக்கிறது.

சமூக வாழ்நிலை எப்படி தோன்றுகிறது என்பதைப் பார்ப்போம்.

       மனிதர்கள் முதலில் உணவுக்காகவும், உடுப்பிற்காகவும், உறைவிடத்துக்காவும் உழைக்கிறார்கள், அதன் பிறகே அரசியல், கலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதாவது மனிதர்கள் தமது வாழ்வாதாரங்களுக்கே, முதலில் போராடுகின்றனர், அவ்வாறு போராடும் போது அவர்களின் நலன்களுக்கு ஏற்பவே கலை, அரசியல், மதம் போன்றவை தோன்றுகிறது.

       மனிதனின் உழைப்பு நடிவடிக்கையே அதாவது அவனது வாழ்வாதார உற்பத்தி நடிவடிக்கை தான் சமூக வளர்ச்சியின் அடிப்படைச் சக்தியாகும்.

       மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுநிலை அல்ல, அதற்குமாறாக சமூக வாழ்நிலையே அவர்களது சமூக உணர்வுநிலையை தீர்மானிக்கிறது.

       எங்கெல்ஸ் கூறுகிறார், மனிதர்களின் உணர்வுநிலை அவர்களின் வாழ்க்கையினால் நிர்ணயிக்கப்படுகிறது, இதற்கு எதிர்முறையில் அல்ல, என்பது சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கருதுகோள். ஆனால் இதன் முதல் விளைவுகள் கருத்துமுதல்வாதத்தின் எல்லா வடிவங்களையும், மறைவாக இருக்கின்ற வடிவங்களையும் கூட ஒதுக்குகின்றன, வரலாற்று விவகாரங்களில் மரபுவழியான,  வழக்கத்தை ஒட்டிய எல்லாக் கருத்துக்களையும் நிராகரிக்கின்றன என்பது நுணுக்கமாக ஆராய்கின்ற பொழுது உடனே தெளிவாகிறது. மரபுவழிப்பட்ட அரசியல் வாதங்களின் மொத்த முறையுமே அங்கே கவிழ்ந்து போகிறது. இத்தகைய கொள்கையற்ற பொருள்விளக்கத்தை தேசபக்தப் பொருந்தன்மை ஆத்திரத்தோடு எதிர்க்கிறது. எனவே இந்தப் புதிய கருத்தோட்டம் முதலாளி வர்க்கத்தை ஆதரித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மந்திரசக்தியின் மூலமாக உலகத்தைப் புரட்சிகரமாக்க விரும்பிய பிரெஞ்சு சோஷலிஸ்டுகளில் பெரும்பான்மையினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது தவிர்க்க முடியாததே. ஆனால் ஓயாது பேசிக் கொண்டிருக்கும் ஜெர்மன் கொச்சையான ஜனநாயகவாதிகளிடம் கூட அது தீவிரமான கோபத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்தப் புதிய கருத்துக்களை அவர்கள் சிறிது கூடப் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, தங்களுடைய சொந்த நலனுக்காக இவற்றைக் காப்பியடிக்கும் முயற்சியில் தனியான ஆர்வம் காட்டுகிறார்கள்.

       எங்கெல்ஸ் அன்று குறிப்பிட்டதைப் போன்றே இன்றைய காலகட்டத்திலும், கருத்துமுதல்வாதத்தால் பீடிக்கப்பட்டவர்கள், மரபுவழியான அரசியல் வாதங்கள் கவிழ்ந்து போகவிரும்பாமல், கொச்சையான கம்யூனிஸ்டுகளிடம்  தீவிர கோபத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் இந்த புதிய கருத்துக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய சொந்த பிழைப்புக்காக இவற்றை பின்பற்றுவதாக காட்டுவதில் தனியான ஆர்வம் காட்டிவருகின்றனர்.

உணர்வுநிலை என்பது பொருளாயத நிகழ்வின் பிரதிபலிப்பு என்றும், சமூக வாழ்நிலையே  சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் எவ்வாறு விளக்குகிறார் என்பதை பார்ப்போம்.

மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை நேரடியாக மறுதலிக்க முடியாமையால், அதனை ஏற்றுக் கொண்டது போல் கூறிவிட்டு, மார்க்ஸ் கூறிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரத்தை சிலர் சிதைக்க முயற்சிக்கின்றனர்.  சமூக வளர்ச்சிக்கு உற்பத்திச் சக்தியே தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் கூறவில்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் மார்க்சும், எங்கெல்சும், லெனினும் சமூக வளர்ச்சிக்கு உற்பத்திச் சக்தியே காரணம் என்று எவ்வாறு விளக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

       இதனை மறுதலிப்பவர்களின் நோக்கம் என்னவென்றால், முதலாளித்துவ உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியில், அதன் முரண் அடங்கியிருப்பதையும், அந்த முரணில் இந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிவதற்கான காரணங்கள் அடங்கிருப்பதையும் மறைக்கின்ற முயற்சியேயாகும்.

       வரலாற்றுப் பொருள்முதல்வாதம், சமூக வளர்ச்சியின் இயங்கு சக்தியை கண்டறிந்து உணர்த்துகிறது.

       சமூக விஞ்ஞானத்தின் அறிதல் கோட்பாட்டு பற்றிய, சமூக வாழ்நிலைக்கும் சமூக உணர்வுநிலைக்கும் இடையேயான உறவுபற்றிய கேள்விக்கு பொருள்முதல்வாத அடிப்படையில்  மார்க்சியம் பதிலளிக்கிறது.

       மார்க்ஸ் கூறுகிறார், மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும். இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை )

       மார்க்ஸ் இப்படி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அடிப்படையில் சமூக வளர்ச்சியையும், அதன் மாற்றத்தையும்  விளக்கியிருக்கிறார். ஆனால் இன்றைய நவீன மார்க்சிய பேரறிஞர்கள்,என்றழைக்கப் படுபவர்கள் சமூக வளர்ச்சிக்கு உற்பத்திச் சக்திகள் தான் காரணம் என மார்க்ஸ் கூறினார் என்று தவறாக கூறப்பட்டுவருவதாக சாதிக்கின்றனர். உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு காரணம் என மார்க்ஸ் கூறவேயில்லை என்றும் சாதிக்கின்றனர்.

       மார்க்சும் எங்கெல்சும், முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவதை கூறினார்கள். மேலும் மார்க்ஸ், உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக விரிவாக்கத்தின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது என்று கூறினார்கள். (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

       மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும் என்றும் மார்க்ஸ் (மூலதனம் முதல் தொகுதி ஐ ) கூறுகிறார்.

       இவற்றை நோக்கும் போது கருவிகளும், உற்பத்திச் சக்திகளும் சமூக மாற்றத்துக்கு காரணமாவதை புரிந்து கொள்ளலாம். எந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கொண்டு அந்த சமூகம் எந்தவகையான உற்பத்தி முறையில் இருக்கிறது என்பதை சுட்ட முடியும் என்கிறார் மார்க்ஸ். இதனை, கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் நமக்கு நிலப்பிரபுத்துவச் சமூகத்தையும்,  நீராவியால் ஓடுகின்ற இயந்திரம் தொழிற்துறை முதலாளித்துவ சமூக உற்பத்தியும் முறையை கொடுத்திருக்கிறது (தத்துவத்தின் வறுமை) என்று எளியவிளக்கத்தின் மூலம் நமக்கு புரியவைத்திடுகிறார் மார்க்ஸ்.

       இதனை லெனின் மேலும் தெளிவாக்குவதை பார்ப்போம்.

       மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். இயற்கையின் நிகழ்வுகளின் அடிப்படைகள் எப்படி பொருளாயதக் காரணங்களால் அமைந்துள்ளதோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று மார்க்சும் எங்கெல்சும் அறிந்து கொண்டனர் என லெனின் எழுதுகிறார்.  (பிரெடெரிக் எங்கெல்ஸ்)

       மேலும்  வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? ஏன்ற கேள்வியை  எழுப்பி லெனின் பதிலளிக்கிறார், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமூக அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்வான இன்னொரு சமூக அமைப்பு முறை எப்படி வளர்கிறது. இதற்கு உதாரணமாக நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு  முறையிலிருந்து முதலாளித்துவச் சமூக அமைப்பு முறைக்கு எப்படி வளர்கிறது என்பதைக் கொண்டு விளக்குகிறார்.

       எங்கெல்ஸ் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஏற்படுகின்ற மோதலின் பிரதிபலிப்பே பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞான கம்யூனிசம் என்றுரைக்கிறார். (டூரிங்குக்கு மறுப்பு பக்கம்466-467)

       முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலும், சந்தையை நோக்கி திட்டமிடாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டதாலும் உற்பத்தியில்  உபரி ஏற்பட்டு விடுகிறது. இந்த உபரி உற்பத்தி முதலாளித்துவ சமூகத்தில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு பொது நெருக்கடியாய் மாற்றம் அடைவதை குறிப்பிடும் போது உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்த நிலையையும் அதனைத் தொடர்ந்து நிகழப்போகும் சோஷலிசப் புரட்சியையும்  விவரிக்கிறார் எங்கெல்ஸ்.

       ஒவ்வொரு தரமும் நெருக்கடியின் போது சமூகம் அதனுடைய உற்பத்திச் சக்திகள் உற்பத்திப் பொருட்களது சுமையின் கீழ் திணறித்திக்குமுக்காடுகிறது. இந்த உற்பத்தி சக்திகளையும் உற்பத்திப் பொருட்களையும் முதலாளித்துவ சமூகத்தால் பயன்படத்திக் கொள்ள முடியாமல் போகிறது (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 494)

       முதலாளித்துவம், நவீன உற்பத்தி சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கான ஆற்றலை இழந்து விட்டதை இந்தப் பொருளாதார நெருக்கடிகள் எடுத்துக் காட்டுகின்றன. (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 487) முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் சமூக சொத்தாக்கி சோஷலிச சமூகத்தை அமைக்கிறது.

       மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார், உலகளாவிய இந்த விடுதலைப் பணியைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தக் கடமையை செய்வதற்கான வரலாற்று நிலைமைகளையும் அதனோடு இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த  நிலைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரமான இந்த சிறப்புடைய பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப்படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்துக்கு கோட்பாட்டுரீதியான வெளியீடாகிய  விஞ்ஞான சோஷலிசத்தின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான கண்ணோட்டத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பாட்டாளி வர்க்கத்துக்கு நல்குகிறது. (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 500-501)

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்

சமூக உற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் தனிப் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்புநிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட மேற்கட்டமைப்பு, அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. தோன்றிய அடித்தளத்தை வலுபடுத்த முடியுமே தவிர அடித்தளத்தில் எந்த மாற்றத்தையும், மேல்கட்டமைப்பால் உருவாக்க முடியாது.

மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது. 

இதன் அடிப்படையில் ஏட்டிலேறிய வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே என்றுரைக்கிறது மார்க்சியம். இதனை லெனின் குறிப்பிடும் போது, திகைப்பூட்டும் புதிர் போல், குழப்படிபோல் தோன்றும் இதை ஆளும்விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியை, அதாவத வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாட்டை தருகிறது என்றுரைக்கிறார்.

சமூக வளர்ச்சியை உணர்த்துகின்ற அதன் ஆளும் விதி என்று லெனின் கூறுவதை இன்று பல மார்க்சிய பேரறிஞர்கள் மார்க்ஸ் காலத்து மார்க்சியத்தை இன்றைய கட்டதுக்கு தாம் வளர்த்துவிட்டதாக கூறி, வரலாறு என்பது விதிக்குட்பட்டதல்ல, சமூக வளர்ச்சியை விதியின் வழியில் செல்கிறது, என்றெல்லாம் கூறுவது  தலைவிதி போன்ற விதிவாதம் என்கின்றனர். 

       மார்க்ஸ் வகுத்தளித்திருக்கின்ற அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய கருத்தாக்கத்தை எந்தளவுக்க குழப்ப முடியுமோ அந்தளவுக்கு குழப்பி வருகின்றனர். மார்க்சின் இந்த கருத்தாக்கத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அல்லது அதனை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்சியத்தை சிதைத்து வருகின்றனர்.

அடித்தளத்தில் காணப்படும் சமூக வளர்ச்சியின் புறநிலைத் தன்மையையும், மேற்கட்டமைப்பில்  காணப்படும் சமூக மாற்றத்துக்கான அகநிலைத் தன்மையும் மார்க்ஸ்  விளக்குகின்ற வழிமுறையில் விளக்கிடாமல், மார்க்ஸ் எதனை எதிர்த்து தம் கருத்தாக்கத்தை அமைத்துள்ளாரோ அதற்கு மாற்றாக பழைய போக்கை புதிய வார்த்தைகளில் மார்க்சியத்தின் வளர்ச்சியாக காட்ட முயற்சிக்கின்றனர் இந்த பேரறிவாளர்கள்.

வளர்ச்சி என்று காட்டுகின்ற இந்தப் போக்குகள், மார்க்சின் கண்டுபிடிப்பான அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தை கொச்சைப்படுத்துவதாகவே காட்சிதருகிறது.

மார்க்ஸ்சும் எங்கெல்சும் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி கூறிய கருத்தாக்கத்தை மூன்று வகையில் பிரிர்த்து பார்ப்போம்.

முதலில், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும். இரண்டாவதில், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மற்றும் வடிவத்தை அமைப்பதில் பெரியதளவாயிருப்பதையும், முன்றாவதில், மேற்கட்டமைப்பின் இடைச்செயலை மறுத்திடவில்லை என்பதோடு, இறுதியில் பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதையும் குறிப்பிடுகிறது.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்.  இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.  இவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்,  முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன. 

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

       அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். இதனை ஏற்றுக் கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தை தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது, அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் தான் தீர்மானிக்கிறது. என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டவயப்பட்டதேயாகும்.

       இதில் பரஸ்பவர  வினைபுரிதல் என்பது உற்பத்திச் சக்திகள், கம்யூனிச சமூகமாய் செயல்படும் அளவுக்கு வளர்ந்திட்ட நிலையில் காணக்கூடியதாகும். எங்கெல்ஸ் கஇறுதியில் தீர்மானிக்கிறதுக என்று தமது கருத்தை இறுதி நாட்களில் மாற்றிக் கொண்டார் என்று புரட்டுகின்றனர். இறுதியில்  தீர்மானிக்கிறது என்பதை கஇறுதி தீர்ப்பு நாள்க போன்று எல்லாம் நடந்து முடிந்த பிறகான கடைசியில் என்று பொருள்மாற்றி விளக்குகின்றனர். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி முடிவெடுக்கும் போது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் எதிர்வினைபுரியும் இவற்றில் இறுதியில் முடிவெடுக்கப்படுவது அடித்தளத்தினால் தான் என்று எங்கெல்ஸ் கூறியதை திரித்திப் பொருள் விளக்கம் கொடுக்கின்றனர்.

       இல்லாத நாளில் கஇறுதி தீர்ப்பு நாள்க வைத்தது போல், பொருளாதாரக் காணரங்களின் தீர்மானிக்கும் என்பதை இல்லததாக்கும் முயற்சியாக கஇறுதிக என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதை எல்லாம் நடந்து முடிந்த பிறகான கஇறுதிக என்று சில மாமேதைகள் கூறிவருகின்றனர். எல்லாம் நடந்து முடிந்தவுடன் இறுதியில் தான் பொருளாதார காரணங்கள் தன் எதிர்வினைபுரிகிறது என்றும், இந்த பொருளாதாரக் காரணங்கள் சமூக மாற்றத்துக்கு துணை சக்தி தான் என்றும் தவறாகவும் மார்க்சியத்துக்கு எதிராகவும்  விளக்குகின்றனர்.

       சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையை தோற்றுவிக்கிறது என்பதை மறுதலிக்கின்ற அனைத்தும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரானதாகும்.

       இயக்கவியல் பொருள்முதல்வாதம் அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கின்றது என்கிற நிர்ணயிப்பை ஏற்றுக் கொள்கிறது. புறநிலைத் தன்மையை ஏற்றுக் கொள்ளாத போக்கினர், அடித்தளத்தால் தீர்மானிக்கும் என்கிற நிர்ணயிப்பை மறுத்து, அடிப்படையில் ஏற்படுவதற்கு முன்பே, அதாவது புறநிலையின் அனுபவத்துக்கு முன்பே, புறநிலைத் தொடர்பின்றி அவனுக்கு வாய்த்த ஒன்றாக கருதுகின்றனர். இது அப்பட்டமான அகநிலைக் கருத்துமுதல்வாதத் தன்மைப் பெற்றதேயகும்.

       சோவியத் யூனியன் தமது இறுதிகட்டத்தில் இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற கோட்பாட்டையே பின்பற்றியது. சோவியத் யூனியனில் ஆதிக்க வர்க்கம் காணப்படவில்லை, உற்பத்தியில் கம்யூனிச கட்டத்தை அடைந்துவிட்டோம், அதனால் எங்களது நாட்டில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரவினைபுரிகிறது என்ற முடிவின் விளைவாய் தான்  அழிந்து போனார்கள். சோஷலிசக்கட்டத்திலேயே இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற தவறான கண்ணோட்டம் பெரும் விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

       மார்க்சியத்தை சில வாக்கியங்களுக்குள் புரிந்தவர்கள் செய்யும் குளறுபடியே இவைகள் யாவும். அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள இயக்கவியல் தொடர்வை அறியாமலும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் என்பதில் உள்ள பொருள்முதல்வாத விளக்கத்தை புரியாமலும் மார்க்சியம் என்பதை சிலவார்த்தைக்குள்அடக்கப் பார்க்கின்றனர்.

       இங்கு ஒன்றை மட்டும் பார்வையிடுவோம்.

       மார்க்ஸ், ஒரு கோட்பாடு (Theory) மக்களைப் பற்றிப் பிடித்தவுடன் ஒரு பொருளாயத சக்தியாகிவிடுகிறது என்கிறார்.

       ஒரு கோட்பாடு மக்களுக்கானது என்பதை அது வெளிப்படுத்தும் போது அது மக்களைப் பற்றி பிடித்திடுகிறது. அது தீவிரமானதாக மாறும்போது, அது மனிதர்களுக்கானது என்பதை அது வெளிப்படுத்துகிறது. தீவிரமானது என்பதற்கு விஷயத்தின் வேரைப் புரிந்துகொள்வது என்பது பொருளாகும். மேலும் கூறுகிறார், எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே அக்கோட்பாடு பொருளாயத சக்தியாகும்.

       இதனை பலபேர் பலவாறு புரிந்துவைத்துள்ளனர். ஒரு கருத்தை மக்கள் பற்றிக் கொண்டால் அது பொருளாயாத சக்தியாகிறது. எந்த கருத்தானாலும் அதனை மக்கள் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது. ஒரு கருத்து நல்லதோ கெட்டதோ அது மக்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது என்று பலவாறு விரித்துக் கொண்டே செல்கின்றனர்.

       மார்க்ஸ் எதனைக்குறிப்பிடுகின்றார் என்பதை அறியாமல், மார்க்சின் சில வாக்கியங்களை மட்டும் படித்துவிட்டு இதுபோன்ற அபத்த முடிவிற்கு பலர்வருகின்றனர்.

       முதலில் இங்கு மார்க்ஸ் கருத்து என்று பொத்தாம்பொதுவாக கூறவில்லை குறிப்பிட்ட கோட்பாட்டையே குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோட்பாடு பொருளாயத சக்தியாக வேண்டுமானால், முதலில் அது மக்களுக்கானது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும், மக்களை தீவிரமாக பற்றிப்பிடிக்க வேண்டுமானால் மக்களின் தேவைகளை நிறைவு செய்திடுவதாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்திடும்போது அது மக்களை பற்றிபிடித்து பொருளாயத சக்தியாக உறுவெடுத்து செயற்படுகிறது.

       இவைகளைக் குறிப்பிடுகின்ற முன்னுரையில், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது என்று எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

       தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் - மூலதனத்துடன் நடத்தும் வாழ்வியலில் - காண்கிறது, பாட்டாளி வர்க்கம் தமக்குத் தேவையான அறிவார்ந்த ஆயுதத்தை தத்துத்தில் காண்கிறது. இதில் தத்துவத்துக்குத் தேவையான பொருளாயத சூழல் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. பாட்டாளி வாக்கத்தின் நலனை இத்தத்துவம் நிறைவேற்றப்படுவதால் மார்க்சிய தத்துவம் பாட்டாளி வார்க்கத்தை பற்றிப்பிடித்து பொருளாயத சக்தியாகிறது. பாட்டாளி வர்க்கத் தத்துவத்தை, முதலாளிகளிடம் பற்றிபிடிக்க வேண்டும் என்று என்ன முயற்சித்தாலும் முடியாது. ஏன் என்றால், அது முதலாளித்துவ நலன்களை  நிறைவேற்றாது, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையே நிறைவேறுகிறது, இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதம் என்பதில் சந்தேகிப்பவர்கள் பாட்டாளி வர்க்கச் சிந்தனையுடையவர்கள் இல்லை.

       பாட்டாளி வர்க்கத்திடமிருந்து பொருள்முதல்வாதத்தை பிரிக்கின்ற முயற்சி, பாட்டாளி வார்க்கத்தின் விடிவுக்கு எதிரானதாகும்.

பொருளாயத உற்பத்தியே சமூக வளர்ச்சியின் அடிப்படை

சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் தனிப் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்புநிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட மேற்கட்டமைப்பு, அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. தோன்றிய அடித்தளத்தை வலுபடுத்த முடியுமே தவிர அடித்தளத்தில் எந்த மாற்றத்தையும், மேல்கட்டமைப்பால் உருவாக்க முடியாது.

மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது. 

சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது.  இந்த பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது.

உற்பத்திச் சக்திகள்  (Productive Forces)

பொருள் உற்பத்தியே சமூகத்தின் அடிப்படையாகும். மக்கள், வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவையான பொருளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. வாழ்விற்கான பொருட்களை  தோற்றுவிக்கும்,  மக்களின் செயற்பாடுதான் உற்பத்தி என்றழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி நிகழ்த்துவதற்கு, உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.

உழைப்பின் குறிப்பொருள் (Objects of labour)

                உற்பத்தியை தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருளை உழைப்பின் குறிப்பொருள் என்றழைக்கப்படும். அதாவது  எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள்.

உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாக கிடைப்பவை, அவை பபூமியிலிருந்து கிடைக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு உகந்த நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும்.

மற்றது, ஏற்கெனவே உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டதான கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, ஏற்கெனவே உருக்கி ஆயத்தமான நிலையிலுள்ள  இரும்பு, அதாவது இரும்பைக் கொண்டு உருவாக்கப்படும் பொருளுக்கு, இரும்பு கச்சாப்பொருளாகும், இது போன்றவை இவ்வகையினைச் சேர்ந்ததாகும்.

உழைப்புக் கருவிகள் (Instruments of labour)

கருவிகளைப் பயன்படுத்தாமல், உழைப்பை உற்பத்தியில் செலுத்த முடியாது. மனிதன், உழைப்புக் கருவிகளை, உழைப்பின் குறிப்பொருளின் மீது செயல்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்கிறான். தொடக்க காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு ஆகியவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள்,  தொழில்நுட்பம் போன்றவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைப்புக் கருவிகளோடு சேர்ந்து இந்த தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, கால்வாய், மின்சாரம் போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகளாகிறது.

உழைப்பு

இயந்திரமோ, கச்சாப்பொருளோ தானாகவே எதையும் உற்பத்தி செய்திட முடியாது. அதில், மனிதனது உழைப்பு நடவடிக்கை செலுத்தும் போதுதான் உற்பத்தி நடைபெறுகிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

மனிதயினம் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சானதங்களை உற்பத்திச் செய்துகொள்கிறது, இதுவே விலங்கினத்திடமிருந்து மனிதயினத்தைப் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

உழைப்பு ஒருவகையில் மனிதனையே படைத்தது எனலாம். மனிதன் உழைப்பில் ஈடுபடும்போது திறமையும் தேர்ச்சியும் பெறுகிறான். உழைப்பு செற்பாட்டில் புதுப்புது மேம்பாட்டை புகுத்துகிறான்.

உற்பத்திச் சக்திகள்   

உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள்  (Means of Production) என்றழைக்கப்படும். இவைகள் கடந்த கால உழைப்பின் விளைபொருளாகும். இவை இரண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்திட முடியாது. உழைப்பைப் பயன்படுத்தாத உற்பத்திச் சாதனங்கள் உயிரற்ற பொருட் குவியலாக, பயனற்று வீணாய்க்கிடக்கும். மக்களின் உழைப்புச்சக்தி இதனோடு இணைந்து செற்பட்டால் தான் உற்பத்தியை நிகழ்த்த முடியும்.

உற்பத்தி அனுபவமும்,  திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தியும், உற்பத்திச் சாதனங்களும்  சேர்ந்து உற்பத்திச் சக்திகள் (Productive Forces) என அழைக்கப்படும்.  மக்கள் தான் சமூகத்தின்  முதன்மையான உற்பத்திச் சக்தியாகும். உற்பத்திச் சக்திகள் எப்போதும் சமூகத் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

உற்பத்தி உறவுகள் (Relation of Production)  

உற்பத்தியை நிகழ்த்தும் போது இயற்கையை மாற்றுகிற அதே நேரத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுகின்றனர், அப்போது  உறவுகள் ஏற்படுகிறது. அத்தகைய உற்பத்தி தொடர்பாக நடைபெறும் உறவுகள் தான் உற்பத்தி உறவுகளாகும். சமூகத்தில் நிகழும் உறவுகளில் இதுவே முதன்மை பெற்றவையாக இருக்கிறது. மற்ற உறவுகளை  இதுவே தீர்மானிக்கிறது.

உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான ஒற்றுமையே குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பாக  நிலவுகிறது. உழைப்பு கருவிகளிலும், உழைப்பு திறமைகளிலும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை பெருக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களை ஒட்டி, உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், ஆனால் உற்பத்திச் சக்திகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சொத்துடைமை வர்க்கம் பழைய உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தடையாய் நிற்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல், சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. இதனைத் தொடர்ந்து பழைய சமூகப் பொருளாதார அமைப்பு மறுதலிக்கப்பட்டு, புதிய சமூக பொருளாதார அமைப்பாக உருவெடுக்கிறது.

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பு

உற்பத்திமுறையில் இரண்டு இன்றியமையாத தன்மை உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஆகும்.  இவற்றில் ஒன்றை தனியே பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் இயல்புக்கு பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு, இன்றியமையாதவையாகும். ஆனால் இந்த பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி முதிரும் போது முரணும் பெருகுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குறிப்பிட்ட கட்டம் வரை, உற்பத்தி உறவுகளை பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் கட்டுப்பட்டே காணப்படுகிறது. ஆனால் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக மேம்பாடடைகிறது, பழைய உற்பத்தி உறவுகளோ, அந்த புதிய வளாச்சியடைந்த உற்பத்திச் சக்தியுடன் முரண்படுகிறது.

பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்திச் சக்தியை மந்தப்படுத்த முயற்சிக்கிறது, புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாற்றுகிறது.  புதிய உற்பத்தி சக்திகளுக்கு, பொருத்தமான உற்பத்தி உறவுகள,் பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்திமுறையிலிருந்து, மற்றொரு உற்பத்திமுறைக்கு மாற்றம் அடைவதாகும். அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையிலிருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் சென்றடைவதாகும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் கம்யூனிஸ்ட் இயக்கமும்

       இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

       உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யுனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் இல்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

       கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

        முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்ககத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சியம் உதவிடுகிறது.

       உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகிறது. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகிறது.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. சமரசப்படுத்த முடியாத இசைவின்மை வாக்கப் போராட்ட நிகழ்வில் உச்சத்தை அடைகிறது. இந்த சமூகப் பிணக்கு சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

        இந்த சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

       இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளாச்சி நடந்தேறுவதை மார்க்சியம்  நிறுவுகிறது. ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிதிருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் எந்த செயற்பாட்டையும் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதே அவசியத்தை அறிந்து செயற்படுவதாக கூறுகிறது மார்க்சியம். புறிநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தமது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற இயக்கம், சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு, பாட்டாளி வாக்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும்.  

       இதனைக் காட்டிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அளித்திடும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முதன்மையிடம் பெறுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுகிறார். இந்த மார்கசிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால் தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தையும், அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு சோஷலிச சமூகத்தை அமைக்கவும் முடியும்.

அதற்கு மார்க்சியம் ஒன்றே வழிகாட்டும்.