Saturday 19 September 2015

மதத்தைப் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை

(“மதத்தைப் பற்றி மார்கசியம்என்ற எனது நூலில் இருந்து)

மதம் தனிநபரின் சொந்த விவகாரமாய்ப் பிரகடனம் செய்யப்பட வேண்டும், அதாவது அரசைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் எவ்விதத்திலும் மதத்தைத் தனிநபரின் சொந்த விவகாரமாக்கக் கூடாது. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் இந்தக் கருத்தை லெனின் எந்தவித குழப்பமும் நேர்ந்திடக்கூடாது என்பதற்காக மிகத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

மதத்தின் இருளை முற்றிலும் சித்தாந்த ஆயுதங்களைக் கொண்டு, சித்தாந்த ஆயுதங்களை மட்டுமே கொண்டு, நம்முடைய எழுத்தும் பேச்சுமாகிய பிரச்சாரத்தைக் கொண்டு போராடும் பொருட்டு, மதச்சபையானது அரசால் நிறுவப்பட்டதாய் இருக்கும் நிலை அறவே நீக்கப்பட வேண்டுமெனக் கோருகிறோம். மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது கழகத்தை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும்.
சோஷலிசமும் மதமும்

தொழிலாளர்கள் தங்களது பொருளாதார விடுதலைக்காக அதிகமாக அல்லது குறைவாக அரசியல் சுதந்திரம் பெற்றுவிடலாம், ஆனால் மூலதனத்தின் அதிகாரம் வீழ்த்தப்படாதவரை, எந்த அளவிலான சுதந்திரத்தினாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டிவிட முடியாது என்கிறார் லெனின்.

இதனைத் தொடர்ந்து கூறுகிறார்:-
மிகப் பெருந்திரள்களான மக்களை, ஏனையோருக்காகத் தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
..
மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது. மதம் ஒரு வகையான ஆன்மீக பெரும் போதை கொண்டது. அதில் மூலதனத்தின் அடிமைகள் மூழ்கி அவர்களுடைய மனித உருவத்தையும், மனிதப் பிறப்புக்குகந்த முறையிலான வாழ்க்கை நடத்துவதற்கான உணர்வையும் கோரிக்கைகளையும் மழுங்கடித்து மூழ்கடித்து வருகிறார்கள்.
-சோஷலிசமும் மதமும்

பொதுவாகக் கம்யூனிஸ்டுகள் மதத்தைப் பற்றி தங்களது கருத்தை  மக்களது அபினியே மதம்  என்றே அறிவிக்கின்றனர். ஆனால் இதனை விளக்குகையில், அவரவரது புரிதலுக்கு ஏற்ப விளக்கம் அளிக்கும் போது மார்க்ஸ் எந்த பொருளில் இதனை கூறினாரோ அதற்கு எதிராக  சென்றுவிடுகின்றனர்.

மதம் மக்களுக்கு அபினி என்றவுடன், சுரண்டப்படும் மக்கள் தங்களது வேதனையைக் குறைப்பதற்கான மருந்தாக சிலர் மதத்தை விளக்கப்படுத்துகின்றனர். அதாவது மதம் என்பது கம்யூனிச சமூகத்தில்தான் முழுமையாக மறைந்து போவதற்கான புறநிலை வளர்ச்சி காணப்படும், அதுவரை மதம் சுரண்டப்படுபவர்களுக்குத் தற்காலிக நிவாரணமாக செயல்படும் என்று மதத்தைப் பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்திற்கு முரணாக  மதத்திற்கு ஒரு நல்ல அம்சமுண்டு.  அது தற்காலிக நிவாரணம்க என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

இவ்வழியில் மார்க்சியக் கண்ணோட்டத்திற்கு எதிராகவும் முரணாகவும் மதத்தைப் பற்றிய கருத்து முன்வைக்கப்படுகிறது. மதத்தின் தோற்றத்தையும் அதன் வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்ளாமையே இவ்வகையான முடிவெடுப்பதற்குக் காரணமாகும்.

மக்கள் தங்களது சித்தத்தை சாராத புறநிலையான சூழலிலே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அந்தப் பொருளாதார வாழ்வே, சமூகத்தின் அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்திற்கு ஏற்பவே சட்டம், அரசியல், மதம், கலை, தத்துவவியல் போன்ற அறிவுத்துறைகள் அனைத்தும் மேற்கட்டமைப்பாகச் செயல்படுகின்றன.

சமூக உணர்வுநிலை என்பது சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்று பொருள்கொள்ளக் கூடாது. அது மனிதர்களின் நடத்தைக்கு வடிவம் கொடுத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் செயலாற்றுகிறது. இவ்வகையில் மதம் என்பது பொருளியல் வாழ்வின் திரிந்த, பொய்யான வகையில் பிரதிபலிக்கிறது. இதனால்தான் மார்க்ஸ் கூறுகிறார்:-
மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு அபினியாக இருக்கிறது.
- ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு- முன்னுரை
                                               
மக்களின் உண்மையான மகிழ்ச்சிக்காக, மாயையான மகிழ்ச்சியாகத் திகழும் மதத்தை அழிப்பது இன்றியமையாததாகும் என்கிறார் மார்க்ஸ். மாயையான மகிழ்விலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்வை அடைவதற்கான போராட்டத்தைப் பற்றி மார்க்ஸ் கூறியிருக்கிறார். எனவே மதத்திற்கு எதிரானப் போராட்டம் என்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகிறது.

இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள், மதம் என்பது மக்களுக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது என்று கூறிவிட்டு, அந்தக் குழப்பத்தின் ஊடே மதம் தனிநபர்களின் சொந்த விவகாரம் என்று மார்க்சியம் கூறுவதை, பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் மதம் என்பது சொந்த விவகாரம் என்று தவறாக விளக்குகின்றனர்.

அன்று காணப்பட்ட இத்தகைய போக்கை எதிர்த்து லெனின் கூறுகிறார்:-
ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகள் சீரழிந்து மேலும் மேலும் சந்தர்ப்பவாதிகளாகிய போதுமதம் தனிநபரின் விவகாரமென்று அறிவிக்கப்படுகிறது  என்னும் புகழ்பெற்ற சூத்திரத்துக்கு அற்பத்தனமான முறையில் பொய்யான வியாக்கியானம் தரும் நிலைக்கு மேன்மேலும் சரிந்து சென்றது தெரிந்ததே. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குங்கூட மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய்ப் பொருள்படும்படி இந்தச் சூத்திரம் திரித்துக் கூறப்பட்டுவிட்டது!! பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான துரோகத்தை எங்கெல்ஸ் வன்மையாய்க் கண்டித்தார். 1891ல் அவர் தமது கட்சியில் சந்தர்ப்பவாதத்தின் மிக பலவீனமான துவக்கம் மட்டுமே தலைதூக்கக் கண்டார். ஆகவே அவர் தமது கருத்தை மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துரைத்தார்:

.. முற்றிலும் கோழைத்தனம் காரணமாய்க் குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் முன்பு செய்யத் தவறிவிட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இன்றியமையாத அடித்தளத்தை அமைத்திடும் சீர்திருத்தங்கள் -அரசைப் பொறுத்தமட்டில் மதம் முற்றிலும் தனிநபரின் விவகாரமாகும் என்ற கோட்பாடு செயல்ப்படுத்தப்படுவது போன்றவை- செயல்படுத்தப்பட கம்யூனின் தீர்மானங்கள் ஆணையிட்டன..

வேண்டுமென்றேதான் எங்கெல்ஸ்  அரசைப் பொறுத்தமட்டில்  என்னும் சொற்களுக்கு அழுத்தமிட்டுக் காட்டினார், கட்சியைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய்ப் பிரகடனம் செய்துவிட்ட ஜெர்மன் சந்தர்ப்பவாதம் இவ்வாறு புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியைச் சமயச் சார்பற்ற நிலைக்கு இடமளிக்கத் தயாராயிருக்கும், ஆனால் மக்களை மதிமயங்கச் செய்யும் மதமெனும் அபினியை எதிர்த்துக் கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தைக் கைவிட்டுவிடும் மிகக் கொச்சையான  கட்டற்ற சிந்தனைக்குரிய  குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழிநிலைக்குச் சீரழியும்படிச் செய்துவிட்டது
-அரசும் புரட்சியும்
               
                மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம், இது பதினெட்டாம் நூற்றாண்டுக் கலைக்களஞ்சியவாதிகளின் பொருள்முதல்வாதம் அல்லது ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தைப்போல மதத்துக்குக் கடுமையான எதிரியாகும். இதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் மார்க்ஸ் ஏங்கெல்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இவர்களின் பொருள்முதல்வாதத்தைக்காட்டிலும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தை வரலாறு மற்றும் சமூக அறிவியல்களின் துறைக்கும் கையாள்கிறது என்று லெனின் கூறித் தொடர்கிறார்:-
நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது.

“மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம் இணைக்கப்பட வேண்டும். நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினரிடமும் அரைப் பாட்டாளி வர்க்கத்தின் விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான விவசாயிகளிடமும் மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்குக் காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளி வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே, மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடை கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை. அவற்றைப் பொருள்முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை.
மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை - லெனின்

லெனின் கூற்று மிகத் தெளிவாக இருக்கிறது. இதில் கூறியவற்றை தொகுத்துக் கொள்வோம்.

முதலிலேயே கூறிவிட்டார் லெனின், நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அடுத்து மார்க்சியம் மதத்தை எதிர்க்க வேண்டும் என்ற அரிச்சுவடிப் பாடத்திற்கு அப்பால் செல்கிறது.  அதாவது மதத்தை எப்படி எதிர்க்க வேண்டும் என்பதை வரையறுத்து அதன்படி செயல்படுகிறது. மத எதிர்ப்பென்பது சூக்குமமான சித்தாந்த அளவில் சுருக்கிக் கொள்ளக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மத இருப்பிற்கான சமூக வேர்களை அகற்றும் நோக்கத்துடன் அதாவது வர்க்க போராட்டத்துடன் இணைத்து நடத்தப்பட வேண்டும்.

பாட்டாளிகளில் பின்தங்கிய பகுதியினரிடமும் பெருந்திரளான விவசாயிகளிடமும் மதம் தம் பிடிப்பை வைத்திருப்பதற்குக் காரணம் அறியாமை என்று முதலாளி வர்க்க முற்போக்காளர், முதலாளித்துவ பொருள்முதல்வாதிகள் பதிலளிக்கின்றனர். இதன் அடிப்படையில் மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை, என்ற முடிவிற்கு வருகின்றனர். மார்க்சிய பார்வையில் இது சரியல்ல. இவர்கள் மதத்தின் சமூக வேர்களை விளங்கிக் கொள்ளவில்லை. அதனால் மதத்தை பொருள்முதல்வாத முறையில் அல்லாது கருத்துமுதல்வாத முறையில் அணுகுகின்றனர் என்று லெனின் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கட்டுரையில் கூறியிருக்கிறார்.

பெருந்திரளான உழைக்கும் மக்களிடம் சமூக முறையில் அழுத்தமும், முதலாளித்துவ குருட்டுச் சத்தியினால் உருவான அச்சமும் தற்கால மதத்தின் வேர்களாக இருக்கின்றன. "அச்சம் கடவுள்களைப் படைத்தது." மூலதனத்தின் குருட்டுச் சக்தியை (பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது) பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் "திடீரென்ற", "எதிர்பாராதவிதமான", "தற்செயலான" அழிவை, நாசத்தை, ஏழையாகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதாகவும், பட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகவும் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகிறது - இதுதான் நவீன மதத்தின் வேர்.

முதலாளித்து அமைப்பில் கடும் உழைப்பினால் நசுக்கப்படுகின்ற பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதன ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வு  பூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்றவரை எந்தக் கல்வி புகட்டலும், புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது. என்பதை மனதிலிருத்திக் கொண்டே மார்க்சியவாதிகள் மதத்தைப் பற்றிய தமது அணுகுமுறையை அமைத்துக் கொள்கின்றனர்.

இதற்கு மதத்துக்கு எதிரான கல்வி புகட்டும் நூல்கள் தீங்கானவை என்றோ அவசிமற்றவை என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. கம்யூனிஸ்ட்டின் நாத்திகப் பிரச்சாரம் என்பது தமது கடமையான, சுரண்டல்காரர்களுக்கு எதிராகச் சுரண்டப்படுகின்ற பெருந்திரளான மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு, கீழ்பட்டதாக பொருள்கொள்கிறது. ஏன் இவ்வாறு கூறுகிறது என்றால் உண்மையான வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருக்கும் மதத்தைப் பலாத்காரமான முறையில் பிரிக்க முயற்சிப்பது இயக்கவியலுக்கு முரணானதாகும் என்கிறார் லெனின்.

ஒர் உதாரணம் மூலம் லெனின் இதனை விளக்குகிறார். வட்டாரப் பொருளாதாரப் போராட்டம் நடைபெறும்போது இப்போராட்டம் வெற்றியடைவதற்குத்தான் முதன்மை கொடுக்க வேண்டும். இங்கே பாட்டாளிகளை நாத்திகர் என்றும் மத நம்பிக்கையுள்ளவர் என்றும் பிரிப்பது வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கு சமமாகும். மொட்டையான நாத்திக பிரச்சாரம் என்பது, மதகுருமார்களின்  தொழிலார்கள் போராட்டத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்க என்ற மதநம்பிக்கை கொண்ட பாட்டாளிகளிடம் பரப்பும் திட்டத்துக்கே உதவும். வர்க்கப் போராட்டத்தின் உண்மையான முன்னேற்றத்தை மனதில் கொண்டு இவற்றைக் கூறியதாக லெனின் தெரிவித்துள்ளார். 

லெனின் கூறுகிறார்:-
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் உள்ள பாட்டாளிகள் இரண்டு பிரிவாகக் கீழ்க்கண்டவாறு பிரிந்து நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிரிவு முன்னேற்றமான, நல்ல வர்க்க உணர்வு பெற்றுள்ள சமூக ஜனநாயகாவாதிகள், அவர்கள் நாத்திகர்கள் என்று வைத்துக் கொள்வோம். முற்றொரு பகுதி பின் தங்கிய தொழிலாளர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், மாதா கோவிலுக்குச் செல்பவர்கள் அல்லது ஸ்தல மதகுருவின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் கூட [அவர் ஒரு கிறிஸ்தவத் தொழிலாளர்களின் சங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்] இருப்பவர்கள் - என்று பிரிந்திருப்பதாகக் கருதுவோம். இந்த ஸ்தலத்தின் பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் கருதுவோம். மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியத்துவமளிப்பது, இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை நாத்திகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பதை உறுதியாக மட்டுப்படுத்துவது, அத்தகைய பிரிவினையைச் சுறுசுறுப்பாக எதிர்ப்பது ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும். இத்தகைய சூழ்நிலையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதாகவும் தீமையளிப்பதாகவும் இருக்க முடியும். பின்தங்கிய பகுதியினரை விரட்டி விடலாம், தேர்தல்களில் ஒரு மாண்டேட்டை இழந்து விடலாம் என்ற ஃபிலிஸ்டீனிய அச்சம், இதரவை காரணமாக இப்படிக் கூறவில்லை, மொட்டையான நாத்திகப் பிரச்சாரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறப்பான முறையில் கிறிஸ்தவத் தொழிலாளர்களைச் சமூக - ஜனநாகத்துக்கும் நாத்திகத்துக்கும் மாற்றக் கூடிய நவீன முதலாளித்துவச் சமூகத்தின் நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான முன்னேற்றத்தை மனதில் கொண்டு இதைக் கூறுகிறோம்.
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

ஒரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கலாமா, கூடாதா, என்பதற்கு நிபந்தனையற்ற முறையில் ஆம் என்று பதிலளிப்பது சரியாக இருக்காது. கட்சியின் திட்டத்தை எதிர்க்காமல் இருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியில் அவரை அனுமதிக்கலாம். கட்சித் திட்டத்தினுடைய உணர்விற்கும் கோட்பாட்டிற்கும் மறுபக்கம் மதகுருவின் உணர்விற்கும் இடையே முரண்பாடு உள்ளது. அது அவரது சொந்தத் தனிப்பட்ட முரண்பாடாகப் பார்க்கவேண்டும். ஆனால் கட்சியில் சேர்ந்த பின் கட்சிக்குள் மதக்கருத்துக்களைச் செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்தால், அதுவே அவரது வேலையாக இருந்தால், அவரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

லெனின் கூறுகிறார்:-
“..அடிக்கடி ஒரு பிரச்சினை எழுப்பப்படுகிறது. ஒரு மதகுரு சமூக-ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக இருக்கலாமா, கூடாதா என்பது. இந்தக் கேள்விக்குப் பொதுவாகவே ஒரு நிபந்தனையற்ற முறையில் ஆம் என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
..
..எனவே, எந்தவித நிபந்தனையுமற்ற முறையில்  ஆம் என்னும் விடை, இந்த இடத்தில் சரியாக இருக்காது.  சமூக-ஜனநாயகக் கட்சியில் பாதிரிமார்கள் எப்போதுமே உறுப்பினர்களாக வர முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்கு எதிரிடையான விதியையும் கடைப்பிடிக்க முடியாது. ஒரு மதகுரு நம்மிடம் வந்து நமது பொதுவான அரசியல் வேலையில் பங்குகொண்டு, கட்சியின் திட்டத்தையும் எதிர்க்காமல் இருந்தால் அவர் சமூக-ஜனநாயகவாதிகளின் அணியில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால் நமது கட்சியின் வேலைத் திட்டத்தின் உணர்வுக்கும் கோட்பாடுகளுக்கும் மறுபக்கம் அந்த மதகுருவின் மத உணர்வுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. அது அந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையில் அந்த மதகுருவை மட்டும் பொருத்த விஷயமாகவும் அது அவருடைய சொந்தத் தனிப்பட்ட முரண்பாடாகவும் இருக்கும்.
..
.. ஆனால், அவ்வாறு ஒரு மதகுரு, உதாரணத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவ்வாறு சேர்ந்து கட்சிக்குள் மதக் கருத்துக்களைச் செயலூக்கமாகப் பிரச்சாரம் செய்வதை தனது பிரதான வேலையாக, அநேகமாக அது ஒன்றே வேலையாக எடுத்துக் கொண்டால், பின்னர் கேள்விக்கிடமில்லாமல் அவரைக் கட்சியின் அணியிலிருந்து நீக்கித்தானாக வேண்டும். கடவுள்மீது நம்பிக்கை கொண்டிக்கக் கூடிய தொழிலாளர்களைச் சமூக ஜனநாயகக் கட்சியில் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் திட்டமிட்டு அத்தகைய தொழிலாளர்களைக் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அவர்களுடைய மத உணர்வுகளைக் கொஞ்சங்கூட புண்படுத்தக் கூடாது. அவர்களை நாம் நமது கட்சிக்குள் சேர்ப்பது அவர்களை நமது கட்சியின் வேலைத் திட்டத்தினது உணர்வின் அடிப்படையில் கல்வி புகட்டிப் பயில்விப்பதாகும். அதற்கு எதிரான போராட்டத்தை நடத்த அனுமதிப்பதற்காகவன்று, கட்சிக்குள் நாம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கிறோம். ஆனால், அதற்கு ஓர் எல்லையுண்டு. அது குழுசேரும் சுதந்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. கட்சியில் பெரும்பான்மையோரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களைத் தொடர்ச்சியாக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களுடன் நாம் சேர்ந்தே செல்லவேண்டிய அவசியமில்லை.
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

லெனினது கூற்று மிகத்தெளிவாகவே இருக்கிறது.

“கடவுள்மீது நம்பிக்கை கொண்ட தொழிலாளர்களைக் கண்டிப்பாகக் கட்சியின் அணிகளுக்குள் கொண்டுவரவேண்டும். அவரது கடவுள் நம்பிக்கையைப் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவரைக் கட்சியில் சேர்ப்பதென்பது கட்சித் திட்டத்தின் அடிப்படையில் அவருக்குக் கல்வி புகட்டுவதற்கேயாகும். கட்சியில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பது என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. கட்சியின் பெரும்பான்மையோர் நிராகரிக்கும் கருத்தைச் செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவருடன் சேர்ந்து செல்லவேண்டிய தேவையில்லை என்று லெனின் விளக்கியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தளவில் மதத்தை தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை என்பது பற்றி லெனினின் கூற்றை நேரடியாகப் பார்ப்போம்:-
மதம் தனிப்பட்ட விவகாரம் என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கோருகிறது. ஆனால் மக்களுடைய அபினுக்கு எதிரான போராட்டம், மதச் சார்பான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம், இதரவற்றைத் "தனிப்பட்ட விவகாரம்" என்று அது கருதுவதில்லை. சமூக - ஜனநாயகக் கட்சி மதத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறது என்று அர்த்தப்படும்படியாக இந்தப் பிரச்சினையைச் சந்தர்ப்பவாதிகளே திரித்துக் கூறுகிறார்கள்!    
                                                    -மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

மதம் தனிநபரின் சொந்த விவகாரமாய்ப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் - இச்சொற்களின் வாயிலாய், சோஷலிஸ்டுகள் மதத்தின்பால் தமக்குள்ள போக்கை வழக்கமாய்ப் பிரகடனம் செய்கின்றனர். ஆனால் எவ்விதமான தப்பு அபிப்பிராயமும் ஏற்படாமல் தடுப்பதற்காக, இச்சொற்களின் பொருளைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக்கப்பட வேண்டுமென நாம் கோருகிறோம். ஆனால் நமது கட்சியைப் பொறுத்தமட்டில் எவ்விததிலும் நாம் மதத்தைத் தனிநபரின் சொந்த விவகாரமாய்க் கருத முடியாது. மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது, மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோஷலிஸ்டும் இருந்து வருவதுபோல, நாத்திகராய் இருக்கவும் - முழுமையான உரிமை பெற்றிருக்க வேண்டும். குடிமக்களின் மத நம்பிக்கைகைள் காரணமாய் அவர்களிடையே எவ்விதமான பாகுபாட்டுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கப் பத்திரங்களில் குடிமகனுடைய மதத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதுங்கூட நிச்சயமாய் விட்டொழிக்கப்பட வேண்டும். அரசாங்க மதச்சபைக்கு மான்யங்கள் வழங்கப்படலாகாது, மதச்சபை, சமயக் கழகங்களுக்கு அரசாங்க உதவித் தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவை யாவும் அரசைச் சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்த மனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் பூரணமாய் நிறைவேற்றப்படும் போதுதான், அவமானகரமான, கேடுகெட்ட அந்தக் கடந்த காலத்துக்கு முடிவு கட்ட முடியும்
-சோஷலிசமும் மதமும் 

லெனினின் இந்தக் கருத்தில் மற்றொன்றும் அடங்கியிருக்கிறது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகுவதையும், குடிமக்களின் மத நம்பிக்கைகைள் காரணமாய் அவர்களிடையே எவ்விதமான பாகுபாட்டிற்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது என்பதையும் தெளிவாக்கியுள்ளது. நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட தமிழக கம்யூனிஸ்டுகள் ஏன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று இங்கு பலரால் கேட்கப்படும் கேள்வியாகும். அதற்கு லெனின் இங்குக் கூறிய கருத்தின் அடிப்படையில்தான் இப்படிப்பட்ட போராட்டம் நடைபெறுகிறது என்பதே பதிலாகும்.

                அடுத்து இரண்டு கேள்விகளை எழுப்பி லெனின் பதிலளிப்பதைப் பார்ப்போம்,
               
நாம் நாத்திகர்கள் என்று நமது வேலைத்திட்டத்தில் நாம் ஏன் அறிவிக்கவில்லை? கிறிஸ்தவர்களும் தெய்வ நம்பிக்கையுடைய ஏனையோரும் நமது கட்சியில் சேரக்கூடாதென்று நாம் ஏன் தடை போடவில்லை?”
-சோஷலிசமும் மதமும் 

இதற்கான பதிலை மதத்தைப் பற்றிய பிரச்சினையில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டின்மூலம் விளக்குகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டம் முற்றிலும் விஞ்ஞான வழிப்பட்டதாகவும், பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் கொண்டது. எனவேதான் கட்சியினுடைய வேலைத்திட்டத்தின் விளக்கத்தில் மதத்தாலான இருளின் மெய்யான வரலாற்று, பொருளாதார வேர்களைப்பற்றிய விளக்கமும் இன்றியமையாதவாறு உள்ளடங்கியிருக்கிறது. கட்சியின் பிரச்சாரத்தில் நாத்திகப் பிரசாரமும் இன்றியமையாதவாறு உள்ளடங்கியிருக்கிறது என்பதை லெனின் வலியுறுத்துகிறார்.

இதனோடு மற்றொன்றையும் லெனின் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ தீவிர ஜனநாயகவாதிகள் செய்வதுபோல், மதத்தை ஒரு கருத்தியலான, கருத்துமுதல்வாதப் பாணியில், வர்க்கப் போராட்டத்திற்குத் தொடர்பில்லாத அறிவுத்துறைப் பிரச்சினையாய் பார்க்கும் தவற்றை செய்யக் கூடாது என்கிறார். மேலும் கூறுகிறார்:-
தொழிலாளி வெகுஜனங்கள் முடிவின்றித் தொடர்ந்து ஒடுக்கப்படுவதையும் நயம் கெடுக்கப்படுவதையும் அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், மத மூடநம்பிக்கைகளை வெறும் நுகத்தடியின்கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன் மூலம் அது அறிவொளி பெறாத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. மண்ணுலகில் ஒரு சுவர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுடைய மெய்யான இந்தப் புரட்சிப் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது, விண்ணுலகச் சுவர்க்கம் குறித்துப் பாட்டாளி வர்க்கத்தோரிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்கியமானது.

எனவேதான்  நாத்திகத்தை நமது வேலைத்திட்டத்தில் நாம் அறிவிக்கவில்லை, அறிவிக்கவும் கூடாது, எனவேதான் தமது பழைய தப்பெண்ணங்களில் இன்னமும் மீதமிச்சங்கள் சிலவற்றை விட்டொழிக்காது வைத்திருக்கும் பாட்டாளிகள் நமது கட்சியுடன் வந்து இணைவதற்கு நாம் தடைபோடவில்லை, போடவும் கூடாது. எப்பொழுதும் நாம் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தையே பிரசாரம் செய்வோம். பல்வேறு "கிறிஸ்தவப் பிரிவினரது" முரணான கருத்துக்களை நாம் எதிர்த்துப் போராடுவது அவசியமே. ஆனால் மதப் பிரச்சினையை அதற்குச் சிறிதும் உரித்தாய் இராத முதல் நிலைக்கு முன்கொண்டுவர வேண்டுமென்று ஒருபோதும் இதற்கு அர்த்தமல்ல. மூன்றாம் தர அபிப்பிராயங்கள் அல்லது மூடக் கருத்துக்களை முன்னிட்டு, வேகமாய் அரசியல் முக்கியத்துவத்தை அறவே இழந்து, பொருளாதார வளர்ச்சியின் போக்கினாலேயே வேகமாய்க் குப்பை குழியிலே ஒதுக்கித் தள்ளப்பட்டு வரும் இவற்றை முன்னிட்டு, மெய்யாகவே புரட்சிகரமான பொருளாதார, அரசியல் போராட்டத்தின் சக்திகள் பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டுமென்றும் இதற்கு அர்த்தமல்ல.

பிற்போக்குவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் மதப்  பூசலைத் தூண்டிவிடுவதில் எங்குமே கருத்துச் செலுத்தி வந்துள்ளனர் ..
-சோஷலிசமும் மதமும் 

கம்யூனிஸ்ட் கட்சி வேலைத்திட்டத்தில் நாத்திகர்கள் என்று குறிப்பிடாமல் இருப்பதற்கான விளக்கமாக இவற்றை லெனின் கூறுகிறார். மதப் பூசலைத் தூண்டி தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தத் துணியும் முதலாளிகளின் எண்ணம் நிறைவேறாமல் தடுப்பதற்கே இந்த அணுகுமுறையை லெனின் முன்வைக்கிறார்.

மதத்திற்கு எதிரான போராட்டத்தை முதல்நிலைக்கு கொண்டு வருவதைத்தான் லெனின் மறுக்கிறார்.

வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்ட வகையில் மதத்தை எதிர்ப்பது பற்றி இந்தச் சிறுகட்டுரையின் முடிவில் வலியுறுத்துகிறார்:-
அரசு சம்பந்தப்பட்ட மட்டில் மதத்தை மெய்யாகவே தனிநபரது சொந்த விவகாரமாக்குவதில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் வெற்றி வாகை சூடும். மத்திய காலத்தியப்  பூசணம் துடைத்து அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பில், பாட்டாளி வர்க்கமானது மதத்தின் மாய்மாலத்தால் மனிதகுலம் ஏய்க்கப்படுவதற்கு மெய்யான மூல காரணமாகிய பொருளாதார அடிமை நிலையை ஒழிப்பதற்காக விரிவான, பகிரங்கமான போராட்டம் நடத்தும்.
-சோஷலிசமும் மதமும் 

மதத்திற்கான எதிர்ப்பை இரண்டாம் நிலையில் வைக்கவேண்டும் என்றவுடன்சிலர் மதத்தில் உள்ள தீய அம்சங்களை நீக்கி, நல்ல அம்சங்களை மேலோங்கச் செய்து, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அணுகுமுறையாக அதனை முன்வைக்கின்றனர்.

இருக்கும் மதங்களை சீர்திருத்துவதும், புதிய தூய்மையான மதங்களை உருவாக்குவதும் பெரும் தீங்கானவை என்றே மார்க்சிய முதலாசிரியர்கள் கருதிவந்துள்ளனர்.

புகழ்பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆர்தர் டிரூஸ் தமது  கிறிஸ்துவ கட்டுக் கதைகள்  என்ற நூலின் இறுதியில் மதத்திற்குச் சாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளதை லெனின் கடுமையாகச் சாடுகிறார். புதுப்பிக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்ட, சூட்சுமமான மதம் ஒன்றை  நாளுக்குநாள் பெருகிவரும் பொருள்முதல்வாதப் பெரு வெள்ளப்பெருக்கை த் தாங்கித் தப்பிநிற்கும் திறன்வாய்ந்த  ஒரு மதம் படைத்தளிக்கும் அவரது முயற்சியை எதிர்த்து லெனின் கூறுகிறார்:-
“இங்கு வெளிப்படையாகவும், வேண்டுமென்றும்  பேசுகின்ற ஒரு பிற்போக்காளனைக் காண்கின்றோம். அவர் பழைய சீரழிந்து போன மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிய மேலான அதிக அருவறுப்பான இழிவான மூடநம்பிக்கைகளை முன் வைப்பதற்குச் சுரண்டல் கும்பலுக்கு வெளிப்படையாக  உதவி செய்கிறார்“
-போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து    

இங்கே பொருள்முதல்வாதத்திற்கு எதிராக வைக்கும் தூய்மையான புதிய மதத்தை உருவாக்கும் போக்கை லெனின் மிகவும் வன்மையாக கண்டிக்கிறார்.

                மதத்துறையின் மாற்றங்கள் மூலமாக மட்டுமே மனிதயினத்தின் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன என்று கூறும் ஃபாயர்பாக்கைக் கடுமையாக டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் எங்கெல்ஸ் விமர்சித்து, அது திண்ணமான பொய்யாகும் என்று எழுதியுள்ளார். ஃபாயர்பாகின் அன்புவழிப்பட்ட தமது புதிய மதத்தைப் போற்றிய அவரது  மிகச் சிறந்த நூற்பகுதிகள்  இன்று முற்றிலும் படிக்கவொண்ணாதனவாக ஆகிவிட்டன என்கிறார் எங்கெல்ஸ்.

இதனை மேலும் லெனின் விளக்குகிறார்:-
ஃபாயர்பாக்கைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், அவர் ஃபாயர்பாக்கை இடித்துக் கூறுகிறார். காரணம் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது அதை ஒழிப்பதற்காக அல்ல? ஆனால் மதத்தைப் புதுப்பிக்கவும், ஒரு புதிய  மேன்மையான  மதத்தைக் கண்டுபிடிக்கவும் போன்றவற்றுக்கே. மதம் மக்களுக்கு அபின்   என்ற காரல் மார்க்சின் இந்த ஆணை மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதற்கும் அடித்தளமாகும். எல்லா நவீன கால மதங்களையும் சர்ச்சுகளையும், அனைத்து மதநிறுவனங்களையும் பூர்ஷ்சுவாப் பிற்போக்கின் கைக்கருவிகளாக, சுரண்டலைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகவே மார்க்சியம் எப்போதும் கருதியது 
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை

மதம் என்பதை, தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்கான பிற்போக்கின் கருவியாகவே மார்க்சியம் எப்போதும் கருதுகிறது என்று தெளிவான முடிவான முடிவாக லெனின் கூறியிருக்கிறார்.

மாக்சிம் கார்க்கியினுடைய கடவுளை நிர்மாணித்தல் என்ற கருத்திற்குப் பதிலாக லெனின்  கடவுள் என்பது சிக்கல் நிறைந்த கருத்து என்பதும் அதுதான் சமூக உணர்வுகளை விழிப்படையச்செய்து உருவாக்குகின்றது என்பது உண்மையல்ல. அது போக்தனோவின் கருத்துமுதல்வாதம். அது எண்ணங்களின் பௌதிக மூலாதாரத்தை ஒடுக்குகிறது  என்று அவருக்குக் பதில் கடிதம் எழுதுகிறார்.

லெனின் கார்க்கிக்குகடவுள் கருத்தை அழகுபடுத்துவதன் மூலம் படிப்பு வாசனை இல்லாத தொழிலாளிகளையும் விவசாயிகளையும் அடிமைத் தளைகளில் பிணைத்து வைத்துள்ள சங்கிலிகளை அழகுபடுத்தியுள்ளீர்கள்  என்று  எழுதியிருக்கிறார்.

மேலும் கூறுகிறார், எந்தவித மதக்கருத்தும், கடவுள் கருத்தும் (நோய்) தொற்றை (infection)  விட ஆபத்தான அருவறுக்கத் தக்கதாகும் என்று எழுதியிருக்கிறார்:-
எந்த மதக்கருத்தும், எந்தவிதக் கடவுள் பற்றிய எந்த விதமான கருத்தும், கடவுளைப் பற்றிய லேசான கண் சிமிட்டலும்கூட ஒரு சொல்ல முடியாத அளவிலான அருவறுக்கத் தக்க பொருளாகும். குறிப்பிட்ட வகையில் பொறுத்துக் கொள்ளக் கூடிய வகையில் (சில சமயங்களில் சாதகமான முறையில்) ஜனநாயக பூர்சுவாக்களால் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. அந்த ஒரு காரணத்திற்காகவே இது மிகவும் ஆபத்தான ஓர் அருவறுக்கத்தக்க பொருளாக, மிகவும் வெட்கக்கேடான ஒரு (நோய்)  தொற்று  (infection) இருக்கின்றது. ஒரு கோடி நேரடியான பாவங்கள், அசிங்கமான சூழ்ச்சிகள், வன்முறைச் செயல்கள், (நோய்) தொற்று (infections) மக்களால் ஓரளவு சுலபமாகக் கண்டு பிடிக்கப்படுகின்றன. எனவே அவை மிகவும் கவர்ச்சிகரமான  சித்தாந்த  ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளைப் பற்றிய சூட்சுமமான ஆன்மீகக் கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் குறைவான ஆபத்துகளைக் கொண்டதேயாகும்.
1913  நவம்பர் (கடிதம்)

எந்த மதக் கருத்தும், கடவுள் பற்றிய லேசான கண் சிமிட்டலும்கூட, அளவிலாத அருவருக்கத் தக்கதாகும் என்கிறார் லெனின். கடவுள் பற்றிய சிறு கருத்தும் ஜனநாயக பூர்சுவாக்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காகவே இது  மிகவும் ஆபத்தானதாகி விடுகிறது. அத்தோடு வெட்கக்கேடான (நோய்)  தொத்து இருக்கிறது. (நோய்) தொற்று மக்களால் சுலபத்தில் கண்டுகொள்ள முடிகிறது. மிகவும் கவர்ச்சிகரமான சித்தாந்த ஆடையணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட மதம், கடவுள் பற்றிய கருத்துகளைவிட (நோய்) தொற்று  குறைந்த ஆபத்தைக் கொண்டதாக இருக்கிறது.

மதத்தில் உள்ள நல்ல தன்மைகள்  ஏதுமில்லையா? எதுவும் கண்ணில் படவில்லையா? என்று கேட்பவர்களின் கருத்து, உண்மையில் மதத்தைக் கண்டு பயந்து சாகிறவர்களின் கூற்றாகவே இருக்கிறது.

லெனின் கூறுகிறார்:-
அராஜகவாதிகள் வறட்டுத் தனமான, அருவமான, பேச்சளவிலான, ஆனால் உண்மையில் வெத்துவேட்டுப்  புரட்சிக் கூச்சல்களுக்கோ, குட்டி பூர்ஷ்வாக்கள் அல்லது மிதவாதப் படிப்பாளிகள் மதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கண்டு பயந்து சாகிறார்கள். இது தன்னுடைய கடமை என்பதை மறந்து விடுகிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தின் நலவுரிமைகளை வழிகாட்டியாகக் கொள்ளவில்லை. ஆனால் யார் மனதும் புண்பட்டுவிடக் கூடாது, யாரையும் வெறுத்து ஒதுக்கக் கூடாது, யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது  வாழு, வாழவிடு  என்னும் சாமியார்களின் மந்திரத்தைக் கூறுவது போன்ற மிகக் குறுகிய மனப் போக்குடன் நடந்துகொள்ளும் இந்த நபர்களுக்கு மார்க்சிய வாதிகள் இடமளித்துவிடக் கூடாது
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை

இவ்வாறு மார்க்சிய முதலாசிரியர்கள் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்திய கம்யூனிஸ்டுகளும், இந்தியப் பாட்டாளிகளும் அவ்வழியைப் பின்பற்றி ஆதரித்துப் பாதுகாத்துச் செயல்பட வேண்டும்.


சமூகத்திலுள்ள வர்க்கத்தின் மறைவோடு மதத்தின் இருப்பிற்கான தேவையும் மறைந்து, மதம் உலர்ந்துவிடும். அதுவரை மதம் வர்க்கத் தன்மையோடே செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டத்துக்கு உள்ளடங்கிய வகையில் மததைத் எதிர்த்துப் போராடி, மத மாய்மாலத்திலிருந்து மக்களை விடுக்கும்.