Sunday 18 December 2016

மூவகை வேதாந்தத்தில் புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம்

(துவைதம், விசிட்டாத்வைதம் = புறநிலை கருத்துமுதல்வாதம்
அத்வைதம்= அகநிலை கருத்துமுதல்வாதம்)

இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும்  தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம்
, விசிட்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்க, இதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போது, வேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று  பேதக (வேறுபட்ட) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும், பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும், அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத, தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.

துவைதமும், விசிட்டாத்வைதமும் புறநிலைக் கருத்துமுதல்வாதமாகும். காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. துவைதம் புறநிலை கருத்துமுதல்வாதம் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விசிட்டாத்வைதத்தை அகநிலை கருத்துமுதல்வாதமா? புறநிலை கருத்துமுதல்வாதமா? என்று வகைப்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அந்தர்யாமியாக பிரம்மம் எங்கும் உடனாய் இருப்பதாக அது கூறுவதால் இந்த சிக்கல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

விசிஷ்டாத்வைதம் என்பதை சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று இவர்கள் பொருள்கொள்கின்றனர். ஆனால் இதனைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும். பரம்பொருளைத் தத்துவமசி என்று அகத்தில் வைத்துப் பார்ப்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருளைத் தமக்கு வேறான புறத்தில் வைத்து பார்ப்பது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருள் புறத்தில்தான் இருக்கிறது என்கிறார் ராமாநுசர், மேலும் அந்தர்யாமியாய் அனைத்திலும் உறைகிறார் என்றும் குறிப்பிடுகிறார். அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் சாட்சியாகத்தான  உள்ளார். எந்தச் செயற்பாட்டிற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் பொறுப்பாக மாட்டார்.

புறநிலைக் கருத்துமுதல்வாதமான துவைதம் புறத்தில் உள்ள பரம்பொருளின் ஆற்றலை அறிந்திட முடியாது. அதன் லீலையைப் புரிந்து கொள்ள முடியாது. நமது சிந்தனை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. பரம்பொருளின் ஆற்றலை அளந்தறிய முடியாது என்கிறது. மேலும் சித்து, அசித்து, ஈஸ்வரன் என்ற மூன்று உண்மைப் பொருளை துவைதம் போன்றே விசிஷ்டாத்வைதமும் ஏற்கிறது.  சித்து உயிர்களின் தொகுதியையும். அசித்து என்பது உயிரற்ற பொருட்தொகுதியையும், ஈஸ்வரன் என்பது பரம்பொருளையும் குறிக்கிறது.

விசிஷ்டாத்வைதம் பரம்பொருள் வேறு, ஆத்மா வேறு முக்தி பெற்ற ஆத்மாவும் வைகுண்டத்தில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்திடுவதே பணியாகும் என்று பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் வேறுபடுத்தியே பார்க்கிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறு என்பது மட்டுமல்லாது, பரமாத்மாவிடம் ஜீவாத்மா சரணடைவதே சிறந்ததாகக் குறிப்பிடுவதால், விசிஷ்டாத்வைதத்தைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்றழைப்பதே பொருத்தமானதாகும்.


உலகம் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன பொருள்? இந்த உலகம் இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன?உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான். என் மனம். உங்கள் மனம் என்று எல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம் இருக்கிறது என்கிறது அத்வைதம். உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. அத்வைதமும் அவ்வாறே கருதுகிறது. அத்வைதம் அகநிலை கருத்துமுதல்வாதமாகும்.

Saturday 18 June 2016

உலகின் பொருளாயத ஒற்றுமை (The material unity of the world)

"உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில்
அமைந்து இருக்கிறது, ஒருசில ஜாலவித்தைச் சொற்றொடர்களால்
இதை நிரூபிப்பிக்கப்படவில்லை, மாறாக தத்துவத்தின் மற்றும் இயற்கை
விஞ்ஞானத்தின் நீண்ட சலிப்பூட்டும் வளர்ச்சியேயாகும்"
                     - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 67-68)

      பருப்பொருளுக்கு இடையேயான இயக்கங்களின் உறவுகள் பற்றிய அறிவு, பிரபஞ்சத்தின் பொருளாயத ஒற்றுமைக்கான தடத்தை நமக்கு வழங்குகிறது.

        ஆனால் கருத்துமுதல்வாதம் மற்றும் மதக் கண்ணோட்டங்கள் உலகின் ஒருமையை கடவுளின் சித்தத்தின்படி உருவானதாக்க் கூறுகின்றது. இக் கருத்தின்படி இந்தப் பிரஞ்சத்தை கடவுள் படைத்தார், அவரே இதன் அனைத்துவிதமான தொடர்பையும் வளர்ச்சியையும் நிர்ணயித்தார். இந்தக் கண்ணோட்டம் புறநிலை எதார்த்தத்தை மறுக்கவில்லை, இந்த எதார்த்தத்தை கடவுள் என்ற மேலான எதார்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பிரபஞ்சம் இரண்டாம் நிலையானதாகக் கருதுகின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தின் சிந்தனைப் பள்ளியை சேர்ந்தவர்கள், இந்தியாவில் துவைதம் மற்றும் விசிட்டாத்வைதம் போன்றவர்கள். மேலை நாட்டில் ஹெகல் போன்றவர் இந்த வகையினைச் சேர்ந்த கருத்துமுதல்வாதியாவர்.

        மற்றொரு ஒருமை பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை இந்தியாவில் அத்வைதிகள் எனப்படுவர். இவர்கள் மேலான பரம்பொருளின் இருப்பே மெய்யான எதார்த்தம். அதன் மாயையான பிரதிபிம்பமே இந்தப் பருப்பொருளாலான பிரபஞ்சம். அந்த பிரம்மமே சத்தியம். இந்தப் பிரபஞ்சம் மித் அதாவது மாயை.

இயற்கைக்கு அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம் என்று அத்வைதம் கருதுகிறது. கணக்கில்லா தோற்றங்களாகக் காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த ஒன்றேநாம் காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை  ஏகம் சத்  அதாவது அனைத்தும் இந்த ஒன்றே என்று விளக்குகிறது அத்வைதம்.

        நான்  என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மாநீ  என்று சொல்லும்போதும் அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே. அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த ஒரே ஆத்மாவான பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோகூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும் இவையனைத்தும் பிரம்மத்தின் மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம். இந்தச் சிந்தனைப் போக்குடைய மேலைய அறிஞர் பெர்கிலி பாதிரியார் ஆவார். இந்தியாவில் ஆதி சங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோராவர்.

        இந்தக் கருத்துமுதல்வாத மற்றும் மதக் கண்ணோட்டங்கள் எதார்த்த உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு உதவிடவில்லை. அறியாத ஒன்றிற்கு அறியாத இன்னொன்றை அதாவது கடவுள் சித்தம், பரம்பொருள் (பிரம்மம்) என்ற அறியாத மற்றொன்றை முன்வைக்கிறது.

        மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் இந்த புறநிலை - அகநிலை கருத்துமுதல்வாதிகளின் சிந்தனைகளை மறுத்து பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளாயத ஒற்றுமையை மட்டுமே உண்மை என்பதை நிறுவுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் பொருளாயத ஒற்றுமை இயற்கை, சமூகம் பற்றிய விஞ்ஞான வகைப்பட்ட ஒருமையை முன்வைக்கிறது.

        ஒரு பருப்பொருள் எப்படிப்பட்ட தனித்தன்மை பெற்றதாயினும், அது அனைத்துப் பருப்பொருளோடு பொருளாயதத் தன்மையில் இணைந்த ஒரு முழுமையான வெளிப்பாடாகவே மார்க்சியம் பார்க்கிறது.

        அப்பொருள் எவ்வித தனித்தன்மை பெற்றதாயினும், பிரபஞ்சத்தில் காணப்படும் பிற பருப்பொருளோடு பல லட்சம் கோடி இழைகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது. இந்தப் பிணைப்பு ஒரே முழுமையானதாகவும், வளர்ச்சியின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புறநிலை தொடர்புகளோடே காணப்படுகிறது.

        உலகத்தினுடைய ஒற்றுமையின் உண்மையை, அதன் பொருளாயதத் தன்மையிலும் உணர்வுநிலையிலிருந்து சுயேச்சையான புறநிலை இருப்பிலும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் காண்கிறது.

        அளவற்ற பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால் மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று, அத்துடன் வேறொன்று எனப் பொருட்களிடையே இணைப்பைப் பெற்றுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.

        நிகழ்வுகளின் தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன் ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது, விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும் ஒற்றுமையாய் நடைபெறுகிறது. விசும்பும், காலமும், பருப்பொருளில் இருந்து பிரித்தறிய முடியாத புறநிலையானது. இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.

        ஒருமைவாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கை, சமூகம் இத்துடன் மனித உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும், வளர்ச்சியடைந்து வருகின்ற பருப்பொருளின் உற்பத்திகளே.


        புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உலகத்தின் பொருளாயத ஒற்றுமையை உறுதிப்படுத்துகின்றன. உலகத்தின் பொருளாயத ஒற்றுமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்பில் இருக்கிறது. பூமிக்கும் வானத்துக்கும் ஈர்ப்புச் சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம், வேதியல் மூலகங்கள் உருமாற்றம் அடைதல், தாவர உலகத்துக்கும் விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டுள்ளது. எனவே, இயற்கை மற்றும் சமூக சக்திகளை அனுசரித்து அவற்றை மனித சமூகத்திற்குச் சேவை புரிவதை சாத்தியமாக்குகிறது.

அறிவுத் தோற்றுவாய் (Origin of knowledge)

"நமக்கு வெளியே பொருட்கள் இருக்கின்றன. நம் புலனறிவுக்
காட்சிகளும் கருத்துக்களும் அவற்றின் பிம்பங்கள். இந்த
பிம்பங்களைச் சரிபார்த்தலை, உண்மையான மற்றும் போலியான
பிம்பங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காண்பதை
நடைமுறை நிறைவேற்றுகிறது."
லெனின் -(பொருள்முதுல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

உலகை அறிந்து கொள்ள முடியுமாமனிதனின் சிந்தனை உண்மையை அறிந்து கொள்ளும் திறமையினை பெற்றுள்ளதா? இவை தத்துவத் தேடலில் முக்கியமான கேள்விகளாகும்.

இக்கேள்விகளுக்கு நேர்மறையான பதிலை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. உலகை அறிந்துகொள்ள முடியும். மனிதனது  அறிவு புறநிலை உண்மையை சரியாக பிரதிபலிக்கிறது என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மனிதனைச் சுற்றியுள்ள உலகமே அவனது அறிதலுக்கான தோற்றுவாயாகும். இந்தப் புறநிலைமைகள் மனிதனிடம் தாக்கம் செலுத்துகிறது. இந்த தாக்கத்தை மனிதன் சோதித்து பார்த்து அறிந்து கொள்கிறான். சோதித்ததில் தவறானவற்றை சரிப்படுத்துகிறான், சரியானவற்றில் தொடர்கிறான்

அறிதல் என்பது எளிமையான பிரதிபலிப்பல்ல. அது ஒரு சிக்கலான நிகழ்வாகும். முழுமையற்றதில் இருந்து துல்லியமானதை நோக்கியும், அறியாமையில் இருந்து அறிவை நோக்கியும் பயணித்து உண்மையை அடைகிறது.

மனித அறிதலின் நோக்கம் நடைமுறையேயாகும். உலகின் வளர்ச்சியின்  விதிகளைப் புரிந்து கொள்வது, தன்னுடைய நடைமுறையில் அந்த அறிதலின் விளைவைப் பயன்படுத்திக் கொள்வதற்கேயாகும்.

அறிதல் என்பது மூளையில், எதார்தத்தினுடைய பருப்பொருட்கள் மற்றும் புலப்பாடுகளின்  பிரதிபலிப்பேயாகும். இவை புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பாகும்.

அறிதல் என்பது மூளையின் தனிப்பட்ட செயல் அல்ல. பொருளாயத உலகுடன் பரஸ்பர வினையினால் உருவான மூளையின் செயற்பாடாகும். மனிதன் சுற்றியுள்ள உலகத்தை எந்தளவுக்கு மாற்றக் கற்றுக் கொண்டானோ அந்தளவுக்கு அவனது அறிவு வளர்ச்சி பெறுகிறது.

மனித அறிதல், சமூக வளர்ச்சியின் விளைவாகவும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றி அமைத்திடும்போது ஏற்படும் பயனுமாகும். உலகம் எல்லையற்றது, அதனால் மனிதனது அறிதலும் முடிவற்றது.

அறிதல் செயற்பாடு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. 1.புலனுணர்ச்சி (Sensation), 2.புலனறிவு (Perception).

பொருளாயத உலகைப் பற்றி, தொட்டறியக் கூடிய உறுப்புகளின் மூலம் தெரிந்து கொள்வதை இந்த புலனுணர்ச்சி குறிக்கிறது. புலனுணர்ச்சியால்  கிடைக்கப்ப பெற்றவைகள், சொந்த அனுபவத்தால் அதாவது நடைமுறையால் பலமுறை சோதித்து சரிபடுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் எதார்த்தத்தை புலனுணர்ச்சிகள் சரியாகப்  பிரதிபலிக்கின்றன என்ற முடிவிற்கு வருகிறது.

அறிதலின் இரண்டாம் நிலை புலனறிவு ஆகும். இது சிக்கல் நிறைந்த அறிதல் முறையாகும். ஒரு பொருளைப் பற்றி, ஒவ்வொரு புலனுறுப்புகளும் தனித்தனியான தன்மைகளை மட்டுமே தருகின்றன. இவற்றை ஒரு முழுமையான ஒன்றாகத் திரட்டுகின்ற செயற்பாடே புலனறிவு எனப்படும்.

புலனறிவு, தனித்தனி புலனுணர்வால் அறிந்தவற்றை திட்டவட்டமான ஒன்றாய் அறிந்திட உதவுகிறது. அதாவது புலன்களால் அறியப்பட்டவைகளை ஒன்றாக்கித் தொகுத்து முழுமையாகப் பிரதிபலித்துக் காட்டுகிறது.


மனிதனின் அறிதல் உணர்வுக் கட்டத்திலேயே நின்றுவிடுவதில்லை. உணரப்பட்டவைகளில் இருந்து எண்ணம், சிந்தனை, கருத்தாக்கங்கள் தோன்றுகிறது.

புலனுறுப்பால் அறியப்பட்டவைகளை மீண்டும் மீண்டும் தோன்றச் செய்கிறது. அவ்வாறு தோற்றம் பெறுவதே எண்ணம் எனப்படுகிறது. அதாவது நினைவில் வைத்துள்ள பொருட்களின் தோற்றங்களை ஒப்பிட்டு, சீர்தூக்கி, பகுத்தாராய்ந்து பொதுமைப்படுத்தப்படுவதே எண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

புலனுறுப்புகளால் அறியப்பட்ட விவரங்கள் பகுத்தாராயப்பெற்ற எண்ணங்களால் சிந்தனை உருவாகிறது.

சமூகத்துக்கும், மொழிக்கும் அப்பால் சிந்தனை தோன்ற முடியாது. புலன்களால் திரட்டப்பட்ட  விவரங்கள் மொழியின் வழியிலேயே பொதுமைப்படுத்தப்பட்டு எண்ணமாக, சிந்தனையாக மாற்றப்படுகிறது. மொழி இல்லாது போனால் பொதுமைப்படுத்துகிற நிகழ்வை நிறைவேற்ற முடியாது. இவ்வகையில் சிந்தனையும் மொழியும் இணைந்திருக்கின்றன.

தொலைக்காட்சிச் செய்தியில் இந்த ஆண்டு மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவதை வீட்டில் இருந்தவாறு ஒருவன் கேட்கிறான். இந்த மழையைப் பற்றி  பிறரிடம் பேசவும் செய்கிறான். ஆனால் மழையோ, மழையினால் உண்டான மண்வாசனையோ, அதன் குளிர்ச்சியோ அவனிடத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்றாலும் எதுபற்றி பேசப்படுகிறது என்பதை அவன் புரிந்து கொள்கிறான். இங்கு குறிப்பிடுகின்ற மழை என்ற சொல் எப்படி அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையை தோற்றுவிக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

மக்கள் பல ஆயிரமாண்டுகளாக வரலாற்றில் தமது நடைமுறையில் மழையைப் பலமுறை பார்த்து இதைப் பற்றி ஒரு கருத்தாக்கத்தை பெற்று இது மழை என்ற சொல்லோடு இணைத்துப் புரிந்துவைத்துள்ளனர். மொழியைக் கற்கும் போது நமக்கு முன்னர் வாழ்ந்த தலைமுறைகளால் சேகரித்து வைக்கப்பட்ட அறிவை மொழியின் வழியில் பெறுகிறோம்.

புலனறிவு, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்தாக்கம் (Concept)  உருவாகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் உள்ளடக்கத்தை துல்லியமான வடிவத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மாமரம் என்பதைக் கற்பனையில் கொண்டுவர முடியும். ஆனால் மரம் என்பதைக் கற்பனையில் பார்க்க முடியாது. ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்க முடியும்.

கருத்தாக்கத்தை, புலனறிவு, எண்ணம், சிந்தனை ஆகியவற்றின் மொத்தம் என்று எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது  சிக்கலான, நீடித்த செயல் முறையின் விளைவாகும். ஏராளமான தனித்தனி நிகழ்ச்சிகள் பொதுவான, முக்கியமான, அவசியமான புறநிலைத் தொடர்புகளால் உருவாகின்றன.

புலனுறுப்புகள் சரியான தகவல்களை அளிக்கின்றனவா? புறநிலையில் இருந்து பெறுகின்ற தகவல்களைக் புரிந்து கொள்ளும்போது திரிபுகள் சாத்தியமா?


அறிதல் நிகழ்முறையின்படி பெறுகின்ற அறிவு நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்ட பிறகுதான் உண்மை என்று முடிவெடுக்கப்படுகிறது. பெற்ற அறிவைக் கொண்டு செயல்படும்போது நடைமுறையில் பொருத்த மற்றது உண்மைக்கு மாறானதாகிறது, பொருத்தமானது உண்மையாகிறது.

உண்மையைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு (The Marxist Theory of Truth)

"பொருள்முதல்வாதிக்கும், கருத்துமுதல்வாதத் தத்துவஞான
ஆதரவாளருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு
பொருள்முதல்வாதி புலனுணர்ச்சி, புலனறிவுக்காட்சி,
கருத்து மற்றும் பொதுவாக மனிதனுடைய உணர்வுநிலை
புறநிலையான எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகிறார்கள்
என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. நம்முடைய
உணர்வுநிலையினால் பிரதிக்கப்படுகின்ற இப்புறநிலை எதார்த்தத்தின்
இயக்கமே உலகம். கருத்துக்கள், புனறிவுக் காட்சிகள்,
இதரவற்றின் இயக்கத்துடன் எனக்கு வெளியே இருக்கின்ற
பருப்பொருளின் இயக்கம் பொருந்துகிறது"
லெனின் - (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

விஞ்ஞான அறிதலின் நோக்கமே உண்மையை புரிந்து செயற்படுவதற்கே ஆகும். இங்கு உண்மை என்பதை முழுமுதலான அதாவது  நிரந்தரமான உண்மை என்று எதையும் குறிப்பிடவில்லை. நிரந்தர, அறுதியான, புனிதமான, மாறாத உண்மை என்ற ஒன்று எங்கும் கிடையாது.

அப்படி என்றால் மார்க்சியம் உண்மை என்று எதைக் குறிப்பிடுகிறது.
               
புறநிலை எதார்த்தத்தை பிழையின்றி சரியாக பிரதிபலித்தல், புறநிலையில் இருக்கின்றபடியே கருத்தாக்கமாக உணர்வில் மீண்டும் உண்டாக்குதல் என்பதே உண்மையாகும். அதாவது எதார்த்தத்துடன் பொருந்துகின்ற புறநிலை உலகத்தைப் பற்றிய அறிவே உண்மை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

இதனை வேறுவிதமாக் கூறினால், புறநிலையாக இருக்கும் எதார்த்தத்தை, உணர்வில் கருத்தாக்கமாக பிரதிபலிப்பதே உண்மை எனப்படுகிறது.

இந்த உண்மை என்பது நமக்கு புறநிலையாக, நம்மைச் சார்ந்திராமல் சுயேச்சையாக இருக்கிறது. அதனால்தான் உண்மையினை புறநிலை உண்மை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

புறநிலை எதார்த்தம் மாறாமல் இருப்பதில்லை, அதனால் புறநிலை உண்மை என்பதும் மாறாதிருப்பதில்லை.

புறநிலை உண்மையை எவ்வாறு மனிதன் அறிந்து கொள்கிறான்? மனிதனின் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்தாக்கங்கள் புறநிலையை முழுமையாக வெளிப்படுத்துகிறதா? அரைகுறையாக வெளிப்படுத்துகிறதா?

இதற்கான விடையை அறுதி உண்மை, ஒப்பீட்டு உண்மை என்ற வகைப்பிரிவு நமக்கு பதில் அளிக்கிறது.

அறிதலின் வளர்ச்சி நிகழ்முறையில் ஏற்கெனவே அறிந்தவற்றுக்கும், இனிமேல் அறியப்போகிறவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் வழியில் அறுதி உண்மை என்பதையும், ஒப்பீட்டு உண்மை என்பதையும் அறிந்து கொள்ளலாம். அறிதலின் மட்டத்தில் சரிப்படுத்த முடியாத அதாவது மாற்ற முடியாத நிலைக்கும், மாற்றம் ஏற்படப் போவதற்கும் அதாவது மாறிக் கொண்டிருப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் உண்மையானது, அறுதியானது மற்றும் ஒப்பீடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

அறுதி உண்மை என்பது எதார்த்தத்தின் முற்றிலும் முழுமையான உள்ளடகத்தின் பிரதிபலிப்பாகும். எதார்த்தத்தின்  சில தன்மைகளையும், அவற்றுக்கிடையே இருக்கின்ற உறவுகளையும் சரியாகப் பிரதிபலிப்பதால் அது அறுதியானது. இந்த அறுதி உண்மையை எதிர்காலத்தில் நிராகரிக்கவும் முடியாது.

                ஓப்பீட்டு உண்மை என்பது நிறைவற்றது,  முழுநிறைவைப் பெற்றிராத அரைகுறையானது, கிட்டத்தட்ட சரியானது. கிட்டத்தட்ட சரியானது என்று கூறுவதின் பொருள், அது இன்னும் நிறைவற்றதாக இருப்பதனாலாகும். மேலும் துல்லியப்படுத்தி திருத்தப்பட்டு நிறைவாக்கப்படுவதற்கு, வரலாற்று வழியிலும், கால வரம்புக்கு உட்பட்ட தன்மையிலும் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.

இப்படிச் சொல்வதால், ஒப்பீட்டு உண்மையை அறுதி உண்மைக்கு எதிராக திருப்பிவிடக் கூடாது. குறையான அறிவிலிருந்தே துல்லியமான அறிவை நோக்கிய முன்னேற்றம் நடைபெறுகிறது. அறுதி உண்மையின் பயணத்தில் ஒரு கட்டமே ஒப்பீட்டு உண்மை.

அறிவு என்பதை எதார்த்தத்தோடு பொருந்துவதையே இயக்கவியல் பொருள்முதல்வாதம் சுட்டுகிறது. எதார்த்தம் மாறுதல் அடைகின்றபோது அதைப் பற்றிய அறிவும் அதற்கு ஏற்ப மாற்றம் அடையும். உண்மை என்பது சூக்குமமானதாக இருப்பதில்லை, எப்போதும் அது தூலமானதே.

சுற்றியுள்ள எதார்த்தம் முடிவற்றது, இடையறாத இயக்கத்திலும் வளர்ச்சியிலும் காணப்படுகிறது. ஒப்பீட்டு உண்மைகளின் மொத்தத்தின் செல்வழியில் அறுதி உண்மையை நோக்கி இடையறாத, முடிவற்ற நெருக்கத்தின் செயல் முறையாக அறிதல் நிகழ்முறை நடைபெறுகிறது.

இந்த அடிப்படையில், தயாரான, நிலையான, முழுமையான, எல்லா நிலைகளிலும் சரியான, இறுதியான முடிவை வழங்க எந்த சித்தாந்தத்தினாலும் முடியாது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம். ஆனால் மனிதனின் அறிதலின் வாய்ப்புகள் வரம்பற்றதும், அறிதல் என்பது முடிவின்றி தொடர்ந்து செல்லும் செயல்முறையாகவும் பார்க்கிறது.

அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள உற்பத்திச் சக்திகளின் அளவே மனிதர்களின் அறிவை தீர்மானிக்கிறது, எதார்த்த உலகம் மாறிக் கொண்டே இருப்பதனால் அறிவை முடிவற்றது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

மனிதர்களின் நடைமுறை என்பது பொருள் உற்பத்தி நிகழ்வுகளைக் குறிக்கிறது. இதனோடே சமூக அரசியல், வர்க்கங்களின் தோற்றம் மாற்றம் ஆகியவை நிகழ்கிறது. மனிதர்களின் சமூக நடைமுறையே அறிதலின் தொடக்கப் புள்ளியாகவும் அடிப்படையாகவும் இருக்கிறது. அதவாது உற்பத்திச் செயற்பாடுகளின் காரணமாகவே அறிதலின் தோற்றமும் மாற்றமும் நிகழ்கிறது.

அறிதல் என்ற நிகழ்ச்சிப் போக்கு சிக்கலும், முரண்பாடும் கொண்டதாகும். அதனால் மனித அறிவு எதார்த்தத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.


நடைமுறையையும், தத்துவத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் தத்துவம் சமூக நடைமுறையில் இருந்து தோன்றுகிறது, வளர்கிறது. பின்பு அதுவே சமூகத்தை மாற்றியமைக்கும் வலுவான சக்தியாக உருப்பெறுகிறது. சமூகத்தில் பலகாலமாக காணப்படும் பின்தங்கிய நிலைமைகளை தூக்கியெறிவதற்கும், புதிய சமூகத்தைத் தோற்றுவிக்கவும் - தேவைப்படும் நடைமுறையையும், செயல்படுத்தும் கருவிகளையும் தத்துவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.