Wednesday 31 May 2017

உலகாயதப் பார்வையில் இந்தியத் தத்துவங்கள் ஒரு சுருக்கமானப் பார்வை- முனைவர் இரா.இராமன்


மணிமேகலையில் சயமமும் மெய்யியலும்
பதிப்பாசிரியர்கள்: இரா.சீனிவாசன், க.காமராசன்

வெளியீடு- தமிழ்நாடு பௌத்த சங்கம் &  மெத்தா பதிப்பகம்
விலை = 260/-


உலகாயதமும் மணிமேகலை புனைவும் உலகாயதமும் (பகுதி)
முனைவர் இரா.இராமன்

இந்த உலகமும் இங்குள்ள மானுடவாழ்வும் ஆகப்பெரும் துன்பமானவை என்றும், இவற்றிலிருந்து விடுதலை அடைந்து பிறவாமையைப் பெறுவதுதான் பெரும்பேறு என்றும் பெரிதும் வற்புறுத்தும் இந்தியத் தத்துவங்களுக்கு எதிர்மறையாக உலகமும் வாழ்வும் கொண்டாடப்பட வேண்டியவை, இவற்றுக்கு வெளியே அடைவதற்கென்று வேறு எதுவுமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திய “இவ்வுலக வாழ்க்கை நேசம்தான்” உலகாயதரின் தத்துவப் பங்களிப்பாகும்.

உலகாயதர் உடலும் உலகமும் மட்டுமே உள்பொருள்கள் என்றும், உலகத்துப் பொருள்கள் யாவும் தத்தம் இயல்புகேற்பத் தாமாகவே இயங்குகின்றன என்றும், நால்வகைப் பூதக்கூட்டால் இயக்கமும் அவற்றின் பிரிவால் இயக்கமின்மையும் தற்செயலாக நேர்கின்றன என்றும், இயக்குவோன் மட்டுமல்ல ஊழ்வட்டமும் இல்லை என்றும், ‘தேகவாதம் அல்லது சுபாவவாதம்’ என்பதைக் கொண்டாடினர். தேகவாதத்தின் தர்க்கப்பூர்வமான நீட்சியாகத் தொடர்ந்து உருமாறும் பிருகிருதியையும், பிருகிருதியுடனல்லாத துனித்தியங்க இயலா புருடனையும் இணைத்துப் ‘பிருகிருதிவாதம் அல்லது பிரதானவாதம்’ எனும் பூரண அறிவுவாதத்தைச் சாங்கியர் முதுன்மைப்படுத்தினர். இவற்றுக்குக் கடும் எதிர்நிலை எடுத்துக் கணமும் அழியாத உள்பொருளாக ஆன்மாவைத் தூக்கிப்பிடித்துப் ‘பூரண ஆன்மவாதம் அல்லது பரமான்மவாதம்’ பேசினர் வைதிகர்.

இந்தநித்தியான்ம ஒருமைவாதத்துடன் மற்றிலுமாக முரண்பட்டுப் பரமான்மவாதத்திற்குப் பதிலாக அழியாத அணுவாதத்துடன் கூடிய விளைக்கோட்பாடாகிய விதிவாதத்தைப் பெரிதும் வலியுறுத்தி, ‘அநேகான்மவாதம் அல்லது அநகோந்தவாதம்’ பேசினர் சமணர். அழியாத அணுக்களின் சேர்க்கையால் உருவாகும் உலகத்தையும் உயிர்களையும் இயக்குவிப்பது கர்மவிதியென்ற சமணரின் அணு மற்றும் வினைவாதத்துடன் பெரிதும் உடன்பட்டு, ‘உருமாறும் பொருள்கள்’ அப்பொருள்களுக்குரிய நிலையாமை நியதிப்படியே அவ்வாறு உருமாறுகின்றன எனக் கூடுதல் அழுத்தத்துடன் ‘ஊழ்வாதம் அல்லது நியதிவாதம்’ பேசினர் ஆசீவகர்.

இவ்வாறு சமணமும் ஆசீவகமும் வலியுறுத்தும் ஊழ்வினை, விதி அல்லது நியதிக் கோட்பாட்டிலிருந்து விலகிக் கடவுள் அல்லது தற்பேற்றால் நால்வகை அணுக்களும் கூட்டப்படுவதாகக் கூறிக் கண்ணுக்குப் புலனாகாத பகுதியற்ற பன்மைப்பொருள்களைக் கண்டு காட்டும் அணுப்பன்மையைச் சிறப்பிக்கும் ‘பரமாணுவாதம் அல்லது விசேட அனந்தவாதம்’ பேசினர் வைசேடிகர். வைசேடிகருடன் பேரளவிற்குக் கருத்துடன்பட்டுப் பொருளோடு நேரடியாய்த் தொடர்புற்றுப் பொருளை அல்லது அதன் இன்மையைப் புலன்களால் அறியும் பிரத்தியட்சத்தைப் பிரதானப்படுத்தி ஆனால் உலகாயதர்கள் போல் காட்சியளவை மட்டுமே அனைத்தையும் அறியப் போதுமென நின்றுவிடாமல், ‘அனுமானம், சப்தம் அல்லது உரை, உபமானம்’ ஆகிய பிற அளவைகளையும் சேர்த்துக்கொண்டு, மேலும் மேலும் அறிவுசார் ஆய்வின் தோய்ந்து ஈடுபட்டு, நுணுகி நுணுகி வாதிட்டுத் தர்க்கபூர்வமாய் உலகமும் புறப்பொருள்களும் சுயேச்சையான உண்மைகள் என்பதை நிலைநாட்டும் ‘பிரமாணவாதம் அல்லது மெய்ம்மைவாதம்’ பேசினர் நையாயிகர்.

சமணர்களுக்கு மாறாக வேதத்தை ஏற்று ஆனால் அவர்களைப் போல் இறைவனை மறுத்து, ஆசீவர் போல் கண்ணுக்குப் புலனாகும் அணுக்கள் ஏற்று ஆனால் வைசேடிகருக்கு முரணாகக் கண்ணுக்குப் புலனாகாத அணுக்களை ஏற்காது, நையாயிகர் கூறும் பொருளும் குணமும் வேறு என்னும் பேதநிலையையும் வேதாந்திகள் கூறும் பொருளும் குணமும் ஒன்று என்றும் அபேதநிலையையும் இணைத்துப் பேதாபேதமாக அதாவது ஒன்றும் அல்ல, வேறும் அல்ல, ஒன்றும் வேறும் எனத் தனிநிலையெடுத்து ஆனால் சமணர் போல் கர்மமே யாவும் என்று அறுதியிடும் ‘கன்மவாதம் அல்லது ஞானக் கன்மச் சமுச்சயவாதம்’ பேசினர் பூர்வ மீமாம்சகர்.

இக்கருத்துகளுள் எந்த ஒன்றையும் ஏற்காமல், இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டுப பொருளென்றும் மாறாத உடலென்றும் ஏதும் இல்லை என்றும், வைதிகர்கள் கூறும் பொருளில் கடவுளும் ஆன்மாவும் முற்றிலும் இல்லை என்றும் ‘அனாத்மவாதம் அல்லது நிரீச்வரவாதம்’ பேசினர் பௌத்தர். கடவுளும் ஆன்மாவும் இல்லை என்ற இந்த நிலைப்பாட்டால், ‘இருப்பது என்பது ஒன்றும் இல்லை என்பதுதான்’ (அதாவது, ‘இன்மை என்பது, வேறெங்கோ உள்ள (presence) இங்கில்லை (absence) என்பது தான்’) எனத் தொனிக்கும் பௌத்தக் கோட்பாட்டைப் பிற்காலத்தில் ‘சூனயவாதம்’ என்ற பெயரில் பிரும்மாண்டமாகக் கட்டியெழுப்பினார் நாகார்ச்சுனர். சூனியத்தின் அல்லது வெறுமையின் இடத்தில் பிரும்மத்தைப் பொருத்திப் ‘பிரும்மம்’ என்ற உள்பொருளாயுள்ள ஒருமையைத் தவிரப் பன்மையாய்த் தோற்றமளிக்கும் இல்பொருள்களான பிற யாவும் மாயை என்ற விவர்த்தவாத முடிவைப் ‘பிரும்மவாதம் அல்லது அத்வைத மாயாவாதம்’ என்ற ஏகான்மவாதமாகப் புனைந்தார் ஆதிசங்கரர். இக்கருத்துக்கு நேரெர்நிலையில் நின்று, ‘உலகம் உயிர் இறைவன் என்று அமையும் முப்பொருள்களும் உண்மைகளே’ எனப் ‘பிபத்தி எனப்படும் சரணாகதிவாதம் அல்லது சரீர-சரீரி சம்பந்தத்தை மையப்படுத்தும் விசிட்டாத்வைதம்’ கண்டார் இராமாநுசர்.

இராமாநுசரைப் போன்று திருமாலை முழுமுதற்கடவுளாகக் கட்டமைத்து, முப்பொருள் இருப்பை ஏற்றுக்கொண்டாலும், ‘கடவுள் ஆனமா என்ற இரண்டும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாத வேற்றுமையுள்ளவை’ என்ற நுண்பொருளில், ‘நித்திய ஐவகை பேதத் தத்துவம் அல்லது துவைதம்’ எனப்படும் ‘முப்பொருள் ஒருமைக்கு மாற்றாக இருபொருள் வேற்றுமையை’ வலியுறுத்தும் வேதாந்தமுடிவைப் பரப்பினர் மத்வர். வைணவம் போல் வேதங்களை மட்டும் பிரமாணமாகக் கொள்ளாமல், சிவ ஆகமங்களையும் பிரமாணமாகக் கொண்டதால், வைணவ சமயக் கருத்துநிலையிலிருந்து சிறிது வேறுபட்டுப் ‘பசு, பதி, பாசம்’ என்னும் முபபொருள்களின் உண்மையைத் தமக்கேயுரிய தனித்தவிதத்தில், சகசமாகிய ஆணவம் என்னும் மூலமலத்தாலும், கன்மம் மற்றும் மாயையாகிய பிற மலங்களாலும் அநாதியாய்ப் பற்றப்பட்டு நித்தியமாயுள்ள பலவாகிய ‘சத், அசத்’ ஆன்மாக்களின் இருபபைச் சிவனுடன் சேர்ந்து உறுதிப்படுத்தும் ‘அநேகான்மா ஈச்வரவாதம் அல்லது இன்பமும் சக்திச் ஆனந்தத் தத்துவமாகிய சுத்தாத்வைதம்’ பேசினர் சைவ சித்தாந்திகள். இந்தியத் தத்துவக் கருத்துமோதல்கள் பற்றிய மேலோட்டமான ஒரு மொழிப்பதிலை, இவ்வாறாகத் தொகுத்துக்கொள்ளலாம்.

உலகாயதர்களின் தத்துவ நோக்கிலிருந்து, மேற்குறிப்பிட்ட மொழிப்பதிவைக் கூர்ந்து ஆராய்வோருக்கு, உலகமும் உடல்களும் மட்டுமே உள்ளன என்ற ஓர் மிக எளிய பொருள்முதல்வாத உண்மையைக் கருத்துமுதல்வாதச் சுரண்டல் நலன்களுக்காகச் சித்தாந்திகளும் வேதாந்திகளும் எவ்வளவு தூரத்திற்குப் பகுத்தும் தொகுத்தும் விரித்தும் விளக்கியும் நுணுக்கியும் புதுக்கியும் ஒளிந்தும் திரிந்தும் பழித்தும் பசப்பியும் உருத்தெரியாமல் சிதைத்துவிட்டுள்ளனர் என்ற ‘வர்க்கப் போராட்டத்தின் வரலாறு’ விளங்காமலிராது. கடவுளை ஏற்காமல் ஆனால் விளையுடன் கூடிய பல்பிறவிப் புண்ணியபாவப் புனைவுகளை மட்டும் ஏற்றுக்கொண்ட சமணம், ஊழை வலியுறுத்திய ஆசீவகம், துக்க நிவர்த்திக்குப் பாடுபட்ட பௌத்தம் போன்ற அவைதிகச் சமயங்களுக்கு இவ்வரலாற்று மோசடியில் ஓரளவுக்குப் பங்குண்டு என்பதையும், இத்தருணத்தில் நாம், ‘நினைவு மறந்து’ மயங்கிவிடக்கூடாது. இவை அனைத்துக்கும் எதிராய் அன்றும் இன்றும் அறைகூவல் விடுத்தபடி, இப்போதும் நிறுவனமயமாகிவிடாமல், தொடாந்து உலகாயதம் அமுக்கப்பட்டவர்களின் கலகக்குரலாய் கனன்றுகொண்டுள்ளது.


இதுதான் முதல்நிலைப் பொருள்முதல்வாதமான பூதவாதம் அல்லது உலகாயதத்திற்கும், கருத்துமுதல்வாதத்தின் பல்வேறுவகைப் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற இந்தியத் தத்துவ தரிசனங்களுக்குமிடையில் காலந்தோறும்  நிகழ்ந்துவரும் கருத்துப்போரின் குழிகளும் வலைகளுமாய் விரியும் மிகச்சுருக்கமான வரலாறாகும்.