Friday 2 June 2017

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) உணர்வுநிலையைக் (consciousness) கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?
கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.

2) சமூகம் பற்றி மார்க்சியத் தத்துவம் என்ன கூறுகிறது?
சமூகம் பற்றிய மார்க்சியத் தத்துவம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை பெற்றதாகும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மார்க்சுக்கு முன்பான கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டுமே கருத்துமுதல்வாத தன்மையினதாகவே இருந்தது.

3) சமூகத்தைக் கருத்துமுதல்வாத கண்ணோட்டம் எப்படிப் பார்த்தது?
சமூகப் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் குறைபாடாக இரண்டை மார்க்ஸ் குறிப்பிடுகிறது. முதல்குறை என்னவென்றால், அது மனிதர்களின் சித்தாந்தத்தின் நோக்கங்களை மட்டுமே ஆராய்கிறது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாவதாக மக்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவேயில்லை. மக்களின் செயற்பாடுகளை நிர்ணயிப்பது எது? சமூகத்தில் கருத்துகளும் விருப்பங்களும் மோதுவதற்கான அடிப்படைக் காரணங்கள் எது? என்பதைப் பழைய வரலாற்றுக் கண்ணோட்டங்கள் அறிந்திருக்கவில்லை.

4) சமூகத்தை மார்க்சிய பொருள்முதல்வாதம் எப்படிப் பார்க்கிறது.
இயற்கையின் விதிகளைப் போன்றே சமூகமும் விதிகளின்படி செயல்படுகிறது, இந்த விதி மனிதனுடைய உணர்வுகளைச் சார்ந்திராமல் புறநிலையாக இருக்கிறது. அந்தப் புறநிலை உற்பத்தி முறையில் தோன்றுகிற உற்பத்தி உறவுகளில் அடங்கியிருக்கிறது. புறநிலை விதி மனித நடவடிக்கை மூலம் நடைபெறுகிறது. இதனை மார்க்சியம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்ற கோட்பாட்டால் விவரிக்கிறது.

5) அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்றால் என்ன?
குறிப்பிட்ட சமூகம் ஒர் உற்பத்தி முறையைக் கொண்டுள்ளது. அந்த உற்பத்தி முறையில் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியன அடங்கியிருக்கிறது. இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத்தோன்றும் மேற்கட்டமைப்பாகும். அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடன் ஒன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்தத் தாக்கம் என்பது சமூக வளர்ச்சியை விரைவுடுத்தும் அல்லது தாமதப்படுத்தும். இதனையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை என்று கூறுகிறது.

6) சமூக வாழ்நிலை என்றால் என்ன?
உற்பத்தி நடிவடிக்கையின் போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளே சமூக வாழ்நிலை ஆகும். மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும்போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பொருளாயத உறவுகளே உற்பத்தி உறவுகள் எனப்படும். இந்த உறவுகளே சமூக வாழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. இந்த வாழ்நிலை மனிதர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்துப் புறநிலையாக இருக்கிறது.

7) சமூக உணர்வுநிலை என்றால் என்ன?
மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற உறவுகள், சமூக வாழ்நிலையாகும். இந்தச் சமூக வாழ்நிலைதான் அவர்களது சமூக உணர்வுநிலையைத் தோற்றுவிக்கிறது. சமூக உணர்வுநிலை என்பது நம்பிக்கைகள், கருத்துக்கள், சிந்தனைகள், தத்துவங்கள் போன்றவை ஆகும். இவை வாழ்நிலையைச் சார்ந்து நிற்கிறது.

8) அடித்தளம் என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?
சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது. இந்த உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

9) உற்பத்தி சக்திகள் (Productive Forces) என்றால் என்ன?
உற்பத்தி நிகழ்விற்குத் தேவைப்படுகிற உழைப்பின் குறிப்பொருள் (Objects of Labour), உழைப்புக் கருவிகள் (Instruments of Labour), உழைப்பு (Labour) ஆகிய மூன்றையும் உற்பத்தி சக்திகள் என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாகிறது.

10) உழைப்பின் குறிப்பொருள் என்றால் என்ன?
உற்பத்தியைத் தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருள் உழைப்பின் குறிப்பொருள் ஆகும். அதாவது எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள். உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாகக் கிடைப்பது, அவை பூமியிலிருந்து எடுக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு ஏற்ற நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும். மற்றது, கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, இரும்பாலான பொருளுற்பத்திக்கு இரும்பு கச்சாப்பொருள் ஆகும்.

11) உழைப்புக் கருவிகள் என்றால் என்ன?
உற்பத்தியின் போது மனிதன் பயன்படுத்தும் கருவிகளே உழைப்புக் கருவிகள். ஆதிகாலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில், அம்பு போன்றவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், தொழில்நுட்பம் போன்றவையும் ஆகும். இத்தகைய உழைப்புக் கருவிகளோடு, தொழிற்சாலை, மின்சாரம், ரயில்வே, கால்வாய், கிடங்கு போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகள் ஆகின்றன.

12) உழைப்பு என்றால் என்ன?
உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

13) உற்பத்தி உறவுகள் (Relations of Production) என்றால் என்ன?
      பொருளாயத நலன்களின் அடிப்படையில் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மனிதர்களுக்கு இடையே தோன்றுகிற பொருளாதா உறவுகளே உற்பத்தி உறவாகும்.

14) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான தொடர்பு எப்படிப்பட்டது?
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவைகளை உள்ளடக்கியவை உற்பத்தி முறையாகும். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்திட முடியாது. அதே நேரத்தில் இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்விரண்டில் உற்பத்தி சக்திகள் முதலில் வளர்ச்சி அடைகிறது, அதன்பிறகு உற்பத்தி உறவில் மாற்றம் பெறுகிறது. உற்பத்தி சக்திகளின் இயல்புக்குப் பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். ஆனால் இந்தப் பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி ஏற்பட்டு முதிரும்போது முரணும் முற்றுகிறது.

15) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண் பெருகுகிறது. உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சியடைகிறது, புதியதாக வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்தியோடு பழைய உற்பத்தி உறவுகள் பொருந்தாமல் முரண்படுகிறது. பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்தி சக்தியை தடுக்க முற்படுகிறது. புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாறுகிறது. புதிய உற்பத்தி சக்திகளுக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகள், பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்தி முறையிலிருந்து, மற்றொரு உற்பத்தி முறைக்கு மாற்றம் அடைவதில் அடங்கியிருக்கிறது. அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையில் இருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் செல்வதாகும். சமூக மாற்றம் என்கிற சமூகப் புரட்சி இதில் தான் அடங்கியிருப்பதாக மார்க்சியம் கூறுகிறது.

16) மேற்கட்டமைப்பு என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?
அடித்தளத்தளமே மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது. ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் ஏற்கிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கிறது. இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும். மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குக் கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தச் சார்பான தாக்கத்தை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதை இறுதியில் நிருபிக்கிறது.

17) அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பை பரஸ்பர வினையாகக் கொள்ளலாமா?
அது பெரும் தவறாகும். அப்படிப் பரஸ்பர வினைபுரிந்தால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தி இருக்க மாட்டார். அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது பொருள்முதல்வாதம், சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பது கருததுமுதல்வாதம். இதனை ஏற்றுப் புரிந்து கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தைத் தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்ட வயப்பட்டதேயாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது-நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது இதற்கு மேலே செல்வது மார்க்சியமாகாது.

18) மேற்கட்டமைப்பில் எவைகள் அடங்குகின்றன?
அடித்தளமும் மேற்கட்டமைப்பும் தம்முள் நெருக்கமான இணைப்பைப் பெற்றவை. அடித்தளமே நிர்ணயகரமான தன்மை பெற்றது, அது மேற்கட்டமைப்புக்குக் காரணமாகிறது. மொத்தத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. பொருத்தமாக என்று சொன்னவுடன் மேற்கட்டமைப்பில் ஒரேவித சிந்தனை ஏற்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. வர்க்க சார்பாகவே சிந்தனை எழுகிறது. அடித்தளத்தில் காணப்படும் முரண் வர்க்க பிரிவுகளின் சிந்தனையாக வெளிப்படுகிறது. அரசியல், மதம், பண்பாடு, கலைகள் போன்ற கருத்துநிலைகள் மேற்கட்டமைப்பில் அமைகிறது.

19) அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரம் சமூக மாற்றத்தை நிகழ்த்தாதா? இதற்கு ஒரு கட்சி தேவையா?
இயற்கை மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. பொதுவான இயற்கை மாற்றம் மக்களைச் சார்ந்தது கிடையாது, ஆனால் சமூக மாற்றம் மக்களின் வழியிலேயே நடைபெறுகிறது. அதாவது சமூகம் பற்றிய விதி மக்களின் வழியேதான் செயற்படுகிறது. அதனால் உழைக்கும் மக்களும், மக்களுக்கான கட்சியும் தேவையாகிறது.

20) கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாகக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாகக் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும். இக்கட்சி உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் அடிப்படையாகிறது.

புறநிலை விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகும். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.


பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்பதை லெனின் வலியுறுத்திக் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு, அதன் உள்முரண்பாட்டிற்குத் தீர்வாய், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும். 

Thursday 1 June 2017

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) தத்துவம் என்றால் என்ன?
இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.

2) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?
முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.  

3) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா?
இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும். கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

4) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?
தொடக்கக் காலத்தில், இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது

5) இந்த இரண்டு பிரிவு எது?
ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்

6) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

7) அது என்ன கேள்வி-பதில்?
கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

8) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

9) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?
ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.

10) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

11) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

12) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.

13) இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
       இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.

14) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?
மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

 மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தன் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.


15) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?
தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.

16) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?
இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.

17) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?
ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.

18) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?
ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.

19) இயக்கவியலுக்கும் இயக்கமறுப்பிலுக்கும் என்ன வேறுபாடு?
இயற்கையிலோ, சமூகத்திலோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் காரியம் காரணத்தின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணக் காரிய இயக்கத்தை அறிவியல்படி விளக்குவது இயக்கவியல் விதியாகும். காரணக் காரியத்தை மறுப்பது இயக்கமறுப்பியல்.

20) இயக்கவியல் விதி எவை?
இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.
1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)
2. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)
3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

21) இந்த மூன்றையும் அறிந்தால் இயக்கவியலை அறிந்து கொள்ளமுடியுமா?
எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடியும்.

22) இயக்கவியலின் வகையினங்கள் எவை?
1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)
2. காரணமும் விளைவும் (Cause and Effect)
3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)
4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)
5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)
6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

23) இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்தை காரணக் காரியத்துடன் அதாவது அதன் இயக்கப் போக்குடன் விளக்குவது இயக்கவியல். இன்றைய இருப்பிற்கான காரணத்தையும், நாளை ஏற்படப் போகும் மாற்றத்தையும், அதன் இயக்க விதியின் அடிப்படையில் கூறப்படுவதால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.

மார்க்சிய பொருள்முதல்வாத தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையின் இருப்பைப் பற்றிப் பேசுகிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மற்றொன்று சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

24) மார்க்சியப் பொருள்முதல்வாத்துடன் இணைந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவை?
நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொணடு தம்மை நிலைநிறுத்தியது. 1.ஆற்றலின் உருமாற்றம், 2.உயிரணு, 3.பரிணாமக் கொள்கை ஆகியவை, விஞ்ஞானத்தின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளாகும்.

25) இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் என்ன முடிவுகளைத் தருகின்றன?
பொருளும் அதன் இயக்கமும் நிரந்திரமானவை, தோற்றுவிக்கவும் அழிக்கவும் முடியாதவை என்பதை ஆற்றலின் உருமாற்றம் பற்றிக் கோட்பாடு அறிவித்தது.

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உயிரிகளும் ஒரேவித உயிரணுக் கட்ட்டமைப்பைப் பெற்றுள்ளதை உயிரணு பற்றிய கோட்பாடு கண்டறிந்தது.

எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன. இன்றைய உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும் என்பதைப் பரிணாமக் கோட்பாடு வெளிக்கொண்ர்ந்தது.

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் வழியாக, இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை எவ்வித அயலான கலப்பின்றி, உள்ளதை உள்ளவாறு நவீன பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டது. கருத்துமுதல்வாதத்தால் இதுவரை முன்வைக்கப்பட்ட மேலுலகத்தின் அப்பாற்பட்ட தொடர்பு தேவையற்றது என விஞ்ஞான வழியில் மறுக்கப்பட்டது.

26) இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவற்றை எல்லாம் விளக்குகிறது?
குறிப்பாகப் பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பும் காலமும், உணர்வுநிலை என்பது பற்றிப் பேசுகிறது.

27) பருப்பொருள் என்றால் என்ன?
பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது.

28) பருப்பொருளும் இயக்கமும் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் எதுவும் இல்லை. பருப்பொருளின் இருப்பு என்பது இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் தவிர்த்து வேறு நிலையில் செயற்படுவதில்லை.

29) விசும்பும் காலமும் (Space and Time) என்றால் என்ன?
பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது. விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆகப் பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்ற பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பு என்பது விசும்பில் தான் நிகழ்கிறது. கண்ணில் படும் பருப்பொருளுக்குத் தான் நீளம் அகலம் உண்டு அதனால் தான் பொதுவாகப் பருப்பொருளுக்கு என்று கூறப்பட்டது. கண்ணில் படாத ஆனால் அதனைக் கருவிகள் மூலமோ மற்றவற்றின் உதவியோடு அறிந்திடும் பருப்பொருட்கள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்குப் பின்பும் தொடர்கிறது. ஆக இந்தத் தொடர் நிகழ்வுக்குத் தொடக்கமும் இறுதியும் இல்லை. விசும்புமும் காலமும் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

30) உணர்வுநிலை (Consciousness) பற்றிக் கூறுங்கள்?
உணர்வுநிலையைக் கொண்டே மனிதன் தமது செயல்களை அமைத்துக் கொள்கிறான். அதனால் தான் தத்துவ விவாதங்களில் உணர்வுநிலை முதன்மை இடம் பெறுகிறது.

31) உணர்வுநிலையைக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?
கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.