Saturday 5 May 2018

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வுநூல்களும் ந.முத்துமோகன் அறிமுகவுரைகளும்




மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்களுக்கு ந.முத்துமோகன் எழுதிய முன்னுரைகளைப் படிக்கும் போது அவரின் வாசிப்புத் தளம் எவ்வளவு விரிந்தது என்பதை அறியமுடிகிறது. இதை மட்டும் பாரட்டிவிட்டு செல்ல முடியாது என்பதனால் இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.

நூலுக்கான அறிமுகவுரை என்பது அந்நூலை படிப்பதற்கு உதவிடும் வகையில் எழுதப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறுதான் பல அறிமுகவுரைகளை ந.முத்துமோகன் எழுதியிருக்கிறார். இருந்தாலும் அவருக்கான கண்ணோட்டத்தை இதில் திணிக்காமல் இருக்க முடியவில்லை.

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளாக எங்கெல்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுவார். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்குச் சிக்கல் ஏற்படுத்தினாலே போதும் உபரி மதிப்பும் சிக்கலாகிவிடும். ஏன் என்றால் தொழிலாளர்களின் அரசியல் பொருளாதாரம் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் உருவானது. அதனால் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைச் சிதைக்கவே அனைவரும் முயற்சிக்கின்றனர்.

ந.முத்துமோகன் கூறுகிறார்:-
“மார்க்சிடம் சொல்லைவிட செயல் அதிக ஆற்றல் கொண்டது என்ற முடிவு வலுப்படுகிறது. …இளம் ஹெகலியரிடமிருந்து மார்க்ஸ் விலகிச் செல்லும் இத்தருணம் இப்போதையை மார்க்சிய பின்னை நவீனத்துவ விவாதங்களுக்குக்கூட நமக்கு முக்கியமானது”
(தேர்வுநூல்கள் 18 அறிமுகவுரை பக்கம் xiv)

இத்தோடு நிற்காமல் மேலும் கூறுகிறார்:-
“இருத்தலிய செல்வாக்கு கொண்ட மார்க்சியர்கள் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பொருள் (Matter, Material) என்ற மார்க்சின் கருத்தாகத்தைச் செயல்பாடு என்றே புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு மிகப்பெரிய விவாதத்தைத் துவக்கினார்கள். அந்தோனியோ கிராம்சி மார்க்சின் தத்துவத்தை அவரது  சிறைக்குறிப்புகளில் பல இடங்களில் செயல்பாட்டின் தத்துவம் என்றே குறிப்பிட்டிருந்தார். இதுவும் இருத்தலிய மார்க்சியர்களின் விவாதங்களோடு சேர்ந்து கொண்டது. அந்த விவாதங்களுக்குத் தொடக்கமாக அமைந்த பிரதிகளில் மார்க்சின் ஃபாயர்பாக் பற்றிய கருத்துரை முதன்மையானதாகும்”
(தேர்வுநூல்கள் 18 அறிமுகவுரை பக்கம் xiv- xv)

ஃபார்பர்பாக் பற்றிக் கருத்துரைக்குப் பின்பு வருவோம். அதற்கு முன் இந்த ஆறிமுகவுரையில் ஏன் இவ்வாறு ந.முத்துமோகன் கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஒன்பது சோவியத் அறிஞர்களால் எழுதப்பட்ட “காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு” என்ற நூலுக்கு அறிமுகவுரை எழுதும் போதுதான் ந.முத்துமோகன் இவ்வாறு கூறுகிறார். மேலும் இந்த முன்னுரையின் தொடக்கத்திலேயே கூறுகிறார்.

“பழைய சோவியத் நூல்களின் இறுக்கம் இந்நூலிலும் உள்ளது. நூலின் மொழி, நடை, கோட்பாட்டு ரீதியாக ஓழுங்குபடுத்தப்பட்ட ஒற்றைப்போக்கு ஆகியவற்றில் இந்த இறுக்கத்தைக் காணமுடிகிறது”
(தேர்வுநூல்கள் 18 அறிமுகவுரை பக்கம் ix)

இங்கே “ஒற்றைப் போக்கு” என்று குறிப்பிடுவது ஒருங்கிணைந்தப் பார்வையாகும். ஒருங்கிணைந்து பார்ப்பது ந.முத்துமோகன் அவர்களுக்கு இறுக்கமாகப் படுகிறது. பன்மைவாதிகள் மார்க்சியத்தை ஒருங்கிணைந்த பார்வையில் பார்ப்பதை மறுதலைக்கத்தானே செய்வார்கள். ஒருங்கிணைந்த பார்வையைச் சிதைப்பதற்கு அச்சுக்கு தயார்படுத்தாத மார்க்சின் குறிப்புகளையும், நூல்களையுமே எடுத்துக் கொள்வார்கள். இங்கேயும் அச்சுக்குத் தயாராகாது, விரிவாக எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கருத்துக்குறிப்புரையை முன்வைத்தே ந.முத்துமோகன் பேசுகிறார்.

மார்க்சிய எழுத்துக்களைத் துண்டுதுண்டாக்கி, பிரித்து மார்க்சுக்கு எதிரான கருத்தை “மார்க்சியம்” என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” “ஜெர்மன் சித்தாந்தம்” என்ற நூலில் காணப்படுபவைகளைத் துண்துண்டாக்கி அந்நூலுக்கே எதிராகக்கூடத் திரித்துக் காட்ட முடியும்.

முதலில் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யைப் பார்ப்போம்.

“.வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் பரிவர்த்தனையும் இவற்றைப் பின்தொடர்ந்து தவிர்க்க முடியாதபடி எழும் சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக அமைகின்றன. இந்த அடித்தளத்தைக் கொண்டு மட்டுமே அந்த சகாப்தத்தின் அரசியல் வரலாற்றையும் அறிவுத்துறை வரலாற்றையும் விளக்க முடியும், எனவே (புராதன நிலப் பொதுவுடைமை குலைந்துபோன காலம் தொட்டு) மனிதகுலத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது..”
(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை- எங்கெல்ஸ் முன்னுரை
1888- மா. எங். -தேர்வுநூல்கள் 1 பக்கம் 252)

மார்க்ஸ் மறைந்த பின்பு எழுதிய இந்த முன்னுரையில் எங்கெல்ஸ், அரசியல், அறிவுத்துறை ஆகிவற்றின் வரலாற்றை, பொருளாதார உற்பத்தியும் பரிவர்த்தனையும் கொண்ட அடித்தளத்தைக் கொண்டு தான் விளக்க முடியும் என்கிறார். வர்க்கப் போராட்டமானது பொருளுற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத விளைவு என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதம். வர்க்கப் போராட்டத்தின் தோற்றுவாயை பொருளுற்பத்தி முறையில் கண்டு வெளிப்படுத்தியதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விஞ்ஞானத் தன்மை அடங்கியுள்ளது.

இதனை மறுதலிக்க விரும்புபவர்கள், அறிக்கையின் இந்த மேற்கோளில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தையே அடித்தளமாகக் கூறகிறார் என்று சிதைக்க முடியும். சிதைக்கதான் முடியும், இது உண்மை கிடையாது.

அதே போல்,
“மக்களின் கருத்தாக்கங்கள், கண்ணோட்டங்கள், கருத்துக்கள்- சுருங்கச் சொன்னால் அவர்களின் உணர்வு- அவர்களின் வாழ்க்கை நிலைமைகள், அவர்களின் சமூக உறவுகள், அவர்களின் சமூக வாழ்க்கை ஆகியவற்றோடு சேர்ந்து மாற்றம் அடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள ஆழமான அறிவுக்கூர்மை தேவைப்படுகிறதா?

பொருளாயத உற்பத்தியுடன் சேர்ந்து அறிவுத்துறை உற்பத்தியும் மறு வார்ப்புக்குள்ளாக்கப்படுவதைக் கருத்துக்களின் வரலாறு காட்டவில்லையா?”
(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -தேர்வுநூல்கள் 1 பக்கம் 294)

இந்த மேற்கோளையும், சமூக வாழக்கை ஆகியவற்றோடு சேர்ந்து தான் மாற்றம் அடைகிறது என்று அறிக்கை கூறுகிறது. இங்கே “சமூக வாழ்க்கை என்பது மனிதர்களின் செயற்பாடே” என்று சிதைக்க முடியும். சிதைக்கதான் முடியும், இது உண்மை கிடையாது.

அடுத்து “ஜெர்மன் சித்தாந்தம்” நூலுக்கு வருவோம்.

“..மாறாக இது வரலாற்றின் மெய்யான ஆதாரத்தின் மீது இடையறாது நின்று நிலவுகிறது. இது கருத்தில் இருந்து நடைமுறையை விளக்கவில்லை, மாறாக ஸ்தூலமான நடைமுறையில் இருந்து கருத்துகளின் உருவாக்கத்தை விளக்குகிறது”
(ஜெர்மன் சித்தாந்தம் -தேர்வுநூல்கள் 1 பக்கம் 141)

இதனைத் துண்டாக எடுத்துக் காட்டி, இங்கே மார்க்ஸ், ஸ்தூலமான நடைமுறையில் இருந்து கருத்துகள் உருவாகிறது என்று கூறுகிறார். இங்கே நடைமுறை என்பது “மனிதர்களின் செயற்பாட்டை மட்டுமே குறிப்பிடுவதாக” சிதைக்க முடியும். இது சிதைப்புதான், உண்மை கிடையாது.

மார்க்ஸ் இதற்கு முன்பும் பின்பும் கூறுவதையும் அதன் விளக்கத்தையும் சேர்த்து ஒருங்கிணைந்தே மார்க்சின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். துண்டாக எடுத்து மார்க்சின் கருத்தை துண்டாக்குவது தான், பின்னை நவீனத்துவவாதிகளின் பன்முகப் பார்வையாகும். இந்நூலில் இதற்கு முன்பு மார்க்ஸ் கூறியுள்ளார்:-
“மனிதர்கள், மெய்யான செயலூக்கமுள்ள மனிதர்கள், அவர்களது கருத்தோட்டங்கள், கருத்துகள் இத்யாதிகளின் படைப்பாளிகள் ஆவர். ஏனெனில் அவர்கள் தமது உற்பத்திச் சக்திகளின் திட்டவட்டமான வளர்ச்சியாலும், அதன் ஆக அதிகபட்ச வடிவங்கள் வரையிலான இவற்றுக்கு பொருத்தமான ஒட்டுறவாலும் நெறியாக்கம் செய்யப்படுகிறார்கள்.”
(ஜெர்மன் சித்தாந்தம் -தேர்வுநூல்கள் 1 பக்கம் 113)

மனிதர்களின் செயற்பாட்டை நெறியாக்கம் செய்யும், உற்பத்தி சக்திகளின் திட்டவட்டமான வளர்ச்சியை (புறநிலையை) இந்தப் பின்னை நவீனத்துவப் பன்மைவாத கதம்பவாதிகள் கணக்கில் கொள்வதில்லை.

இவ்வளவு தெளிவாக் கூறியப் பின்பும் இந்த மேற்கோளை எவ்வாறு சிதைக்கலாம் என்று துடிப்பார்கள். ஆனால் “ஜெர்மன் சித்தாந்தம்” நூலின் தமிழில் வெளியிட்ட சிறு பகுதியில், இடம் பெறாத ஒரு மேற்கோளை இந்தப் பன்மைவாதிகளால் எந்த வகையிலும் சிதைக்க முடியாது.

“எதார்த்தத்தில் என்ன நிகழ்கிறதென்றால், ஒவ்வொரு முறையும் நிலவும் உற்பத்தி சக்திகள் வழிகாட்டுகிற மற்றும் அனுமதிக்கும் எல்லைவரைதான் மக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை வென்றெடுக்கிறார்களே அன்றி மனிதர்களின் விருப்பப்படி அல்ல. எப்படிப்பார்த்தாலும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சிகள் அனைத்தும் உற்பத்தி சக்திகள் கட்டுப்படுத்தாத (அனுமதிக்கும்) வரையே.”
 (The German Ideology- MARX & ENGELS COLLECTED WORKS- VOLUME 5
Page 431-published by Lawrence & Wishart)

-இதில் மனிதர்களின் செயற்பாடு உற்பத்தி சக்திகளினுடைய வளர்ச்சியின் கட்டளையினால் அனுமதிக்கப்பட்டது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

பின்னை நவீனத்துவப் பன்மைவாதக் கண்ணோட்டத்தின்படி அடித்தளம் தீர்மானிக்கும் என்று சொன்னால் அது “இயந்திரவியல் பொருள்முதல்வாதமாகும்”, இந்த அடித்தளத்தை மனிதர்களின் செயற்பாடு என்ற கூறினால் அது “இயக்கவியல்” வகைப்பட்டது. அதனால் தான் “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முகவுரையைப் பற்றி ந.முத்துமோகன் கூறுகிறார்:-

“…அடித்தளம், மேற்கட்டுமானம் என்பவற்றைப் பேசும்போது மார்க்சின் பொருள்முதல்வாதம் வெளிப்பட்டுள்ள அளவுக்கு இயங்கியல் வெளிப்படவில்லை. அடித்தளம் மேற்கட்டுமானத்தை நிர்ணயிக்கிறது, தீர்மானிக்கிறது அல்லது வரையறுக்கிறது என்ற பொருள்முதல்வாதக் கோட்பாட்டைக் கூறும் மார்க்ஸ், அதற்கு மேல் செல்லவில்லை. மேற்கட்டுமான வடிவங்களின் தனித்தன்மைகள் பற்றியோ, அவை தம்மில் படைத்த சமூக மதிப்புகளை அல்லது அழகியல் வடிவங்களை அடித்தள அமைப்புக்கள் எவ்வாறு செலுத்துகின்றன என்பது குறித்தோ இம்முன்னுரை வாசகங்களில் மார்க்ஸ் எழுதவில்லை. அடித்தளம், மேற்கட்டுமானம் ஆகியவற்றிற்கிடையிலான பரஸ்பரத் தாக்கம், செல்வாக்கு, பரஸ்பர ஊடுருவல், ஒன்று மற்றதாக மாற்றுதல், இன்னும் இவை தொடர்பான பலவிஷயங்கள் பேசாமல் விடப்பட்டுள்ளன….அரசியல் பொருளாதார விமர்சனம் குறித்த நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரை எவ்வளவு மேதமை நிறைந்ததாக இருந்த போதிலும், அந்த முன்னுரையில் அடித்தள மேற்கட்டுமான உறவுகள் குறித்த கருத்துக்கள் முழுமையானவை அல்ல என்ற முடிவுக்கு இங்கு நாம் வருகிறோம்.”

இறுதிகாலங்களில் எங்கெல்ஸ் எழுதிய கடிதங்களை மனதில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று கருதுகிறேன். ஏன் என்றால் அக்கடிதங்களில் எங்கெல்ஸ் இயக்கவியல் அற்ற நிர்ணயவாதத்தை எதிர்த்து எழுதியுள்ளார். பொருளாதார  நிலைமைகள் தாமாகவே செயல்படும் என்ற கருத்து நிர்ணயவாதமாகும். இதனை எதிர்த்துத்தான் இறுதிகாலக் கடிதங்களில் தெளிவுபடுத்துகிறார். அக் கடிதங்களில் அடித்தளத்தின் தீர்மானகரமான பாத்திரத்தை மறுக்கவில்லை. அடித்தளம் தீர்மானிக்கும் என்பதைத் தவிர மற்ற எதையும் ஏற்காத போக்கைத்தான் கண்டிக்கிறார்.  

எங்கெல்சின் இயக்கவியல் கண்ணோட்டத்தின் படி அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் தாக்கம் செலுத்தும். ஆனால் ந.முத்துமோகனின் “இயக்கவியல்” மேற்கட்டமைப்பு தான் தீர்மானிக்கும், அதிலும் குறிப்பாக மனிதனின் செயற்பாடு தான் தீர்மானிக்கும். அடித்தளத்தின் செயற்பாடு மனிதனின் செயற்பாட்டுன் இணைந்து தீர்மானிக்கும். மொத்தத்தில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் வினைபுரிகிறது என்று முடிகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது - இது பொருள்முதல்வாதம்.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது - இது கருததுமுதல்வாதம்.

இரண்டும் தீர்மானிக்கும் என்கிற மூன்றாவது போக்குக் கிடையாது, அப்படிக் கூறுவதானது, மேற்கட்டமைப்புத் தீர்மானிப்பதாக ஏற்றுக் கொள்கிற கருத்துமுதல்வாதத்தையே இறுதியில், அது வந்தடையும்

வர்க்க சமூகத்தில் அடித்தளம் மேற்கட்டமைப்பும் பரஸ்பரமாகச் செயற்பாடாது, சோஷலிச சமூகத்தைக் கடந்து வளர்ச்சியடைந்த கம்யூனிச சமூகத்தில்தான் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரியும். வர்க்க சமூதாயத்தில் அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும், மேற்கட்டமைப்பின் இடைசெயல் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்கம் என்பது அடித்தளத்தை விரைவுபடுத்தும் அல்லது தாமதப்படுத்தும் அவ்வளவே.

எங்கெல்சின் இறுதிகாலக் கடிதங்களில், வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நூல்களைப் பட்டியல் இடுகிறார். அந்தப் பட்டியலில் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை” (1859) எழுதப்பட்ட ஆண்டுக்கு முன்பு மார்க்ஸ் எழுதிய “லுயீ போனபார்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற நூலைக் குறிப்பிடுகிறார். 1859ஆம் ஆண்டுக்கு பிறகு எழுதிய நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆக அந்த முன்னுரையை இயக்கவியல் பார்வையற்றுச் சூத்திரம் போலப் படித்துப் பார்த்தால் அது குறைபடாகத் தான் தெரியும். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, அது வரலாறு பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகத்தான் தெரியும். அந்த முன்னுரையைப் பார்த்துவிட்டு, ஃபாயர்பாக் கருத்துரைக்குச் செல்வோம்.  

“இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமத மாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது, இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடிகிற உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் மனிதர் தம் உணர்நிலைக்குள் மோதல் உண்டாகி மாற்றியமைக்கப்படுகிற சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞான - சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்து நிலை வடிவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும். ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது, அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், பழைய சமூகத்தின் சுற்று வட்டத்துக்குள் தாம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவு களை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாத படி விதித்துக் கொள்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)

அடித்தளத்திற்குப் பொருந்தி நின்ற மேற்கட்டமைப்பு, எந்த நிலையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாகப் போகிறது என்பதையும், அது எவ்வாறு சமூகப் புரட்சிக்கான புறநிலையாக இருக்கிறது என்பதையும் மார்க்ஸ் இயக்கவியல் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார்..

இயக்கவியல் என்றால், இயக்கத்தைச் சமப்படுத்துதல் என்று ந.முத்துமோகன் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இந்த முன்னுரையில் காணும் இயக்கவியல் அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. இந்தச் சுருக்கமான முன்னுரையில் காணும் இயக்கவியலை அறிந்து கொள்ள முடியாதவர்கள் மூலதன நூலை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்லாம்.

“இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.” என்று கூறப்பட்டதை “மூலதனம்” முதல் தொகுதியின் முப்பத்தி இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம். முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.” (மூலதனம் முதல் தொகுதி- பக்கம் -1026-1027).

இங்கே சமூக மாற்றமானது மனிதர்களின் மனதில் தோன்றியதாகக் காட்டப்படவில்லை, மனிதர்களின் செயலைத் தீர்மானிக்கும் புறநிலைமைகளையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது வளர்ச்சிய அடைந்த அடித்தளத்திற்குப் பழைய மேற்கட்டமைப்பு பொருந்தாமால் போகிறது. இந்தப் புறநிலைமைகளே சமூகப் புரட்சிக்கான புறநிலையாகிறது, அகநிலையான முன்னணிப்படையான கட்சியும், பாட்டாளிகளுடன் சேர்ந்து விவசாயிகளும், பொது மக்களும் இணைந்து புரட்சியைச் சாத்தியப்படுத்துகின்றனர். புரட்சிக்கான புற அக நிலைமைகளாக மார்க்சியத்தை இதனையே குறிப்படுகிறது.

இதனைப் படித்தப்பின்பும் புரியவில்லை என்றால், “மூலதனம்” நூலை முழுமையாகப் படித்தறியவேண்டும். அப்படியும் புரிந்திட முடியவில்லை என்றால் சிக்கல் நூலில் இல்லை என்பது தான் உண்மை.

“இருத்தலிய செல்வாக்கு கொண்ட மார்க்சியர்கள் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பொருள் (Matter, Material) என்ற மார்க்சின் கருத்தாகத்தைச் செயல்பாடு என்றே புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு மிகப்பெரிய விவாதத்தைத் துவக்கினார்கள்.”
(தேர்வுநூல்கள் 18 அறிமுகவுரை பக்கம் xiv)

      -என்று ந.முத்துமோகன் சுட்டிக்காட்டுவதில் புறநிலையும் இல்லை, அகநிலையும் இல்லை

இப்போது ஃபாயர்பாக் பற்றிய கருத்துரைக்கு வருவோம். மார்க்சியத்துக்கு முன்பான பொருள்முதல்வாதத்தில், இயக்கவியல் அற்றதையும் அறிதலில் மனிதனின் செயற்பாட்டைப் புறக்கணிக்கப்பட்டதையும் தான் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். புறநிலையே மனித உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்பது இங்கே மறுதலிக்கப்படவில்லை. மற்ற ஆய்வுரைகளைக் கணக்கில் கொள்ளாது மூன்றாவது ஆய்வுரையை மட்டும் துண்டாக எடுத்துப் பேசினால் இந்த முடிவுக்குத் தான் வரவேண்டிவரும்.

“சூழநிலைமைகள், வளர்ப்பு ஆகியவற்றின் விளைபொருள்களே மனிதர்கள் என்றும், ஆகவே வேறுபட்ட சூழ்நிலைமைகள், மாறுபட்ட வளர்ப்பு ஆகியவற்றின் விளைபொருள்களே மாறுபட்ட மனிதர்கள் என்றும் கூறும் பொருள்முதல்வாதக் கோட்பாடு, மனிதர்கள்தான் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும் கல்வி கற்பிக்கிறவனுக்கே கல்வி கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறது.
சூழ்நிலைமைகள் மாறுதலும், மனிதச் செயல்பாடும் ஒன்றிணைதலை, புரட்சிகரமயமாகிய நடைமுறை என்று மட்டுமே அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளமுடியும்”
 (ஃபாயர்பாக் ஆய்வுரைகள்)

புறநிலை தமது இயக்கத்தை மக்களைக் கொண்டு தான் செயற்படுகிறது என்பதைத் தான் இங்கே வலியுறுத்தப்படுகிறது. புறநிலையின் தீர்மானகரமான பாத்திரம் மறுக்கப்படவில்லை. கல்வி கற்பிக்கிறவனுக்கே கல்வி கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்றால் இங்கு முதலில் கல்வி கற்பித்தது புறநிலைதானே. அந்தப் புறநிலையோடு நின்றுபோகிறவரைத்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது.

ஏழாம் ஆய்வுரையில், குறிப்பிட்ட சமூக வடிவத்தைச் சேர்ந்தவரே தனிமனிதர் என்பதிலும், சமூகத்தின் விளைபொருளே மத உணர்வு என்பதிலும்  புறநிலைமையின் தீர்மான பாத்திரம் தானே வலியுறுத்தப்படுகிறது.

“இதன் விளைவாக, மத உணர்ச்சி என்பதே ஒரு சமூக விளைபொருள் என்பதையும், அவர் ஆராயும் ஆருவமான தனிமனிதர் எதார்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட சமுக வடிவத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஃபாயர்காக் நோக்கவில்லை”
(ஃபாயர்பாக் ஆய்வுரைகள்)

“ஃபாயர்பாக்  பற்றிய ஆய்வுரைகள்” பற்றிக் குறிப்பிடும் போது, முதல் தேர்வு நூலின் அறிமுகவுரையில் ந.முத்துமோகன் கூறுகிறார்:-
“மார்க்சின் காலத்தில் பலவிதமான பொருள்முதல்வாதங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று, மனிதரின் இயல்பை, செயல்பாடுகளை, லட்சியங்களை அவர்களது "சூழல்களைக்” கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் எனப்படும் பொருள்முதல்வாதம். இது ஒன்றும் தவறான கருத்து அல்ல. நல்ல கோட்பாடுதான். இருப்பினும் மார்க்ஸ் இதனைத் தாண்டி நகர்ந்து செல்கிறார். சூழல்களைக் கொண்டு மனிதரைப் புரிந்து கொள்ளலாம் எனில் சூழல்களைப் படைப்பவர் யார்? சூழல்களைச் செய்பவர் யார்? என்று மார்க்ஸ் கேட்கிறார். படித்துக் கொடுக்கும் ஆசிரியரும் படிக்க வேண்டுமல்லவா? மனிதர்கள்தாம் சூழல்களைப் படைக்கிறார்கள் என்பது மார்க்சின் பதில். எனவே சூழல்கள் மனிதரைப் படைக்கின்றன என்ற விளக்கத்தில் சில போதாமைகள் உள்ளன என்று மார்க்ஸ் கருதுகிறார். மேற்குறித்த இரண்டு விளக்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். மனித வாழ்வின் சூழல்களையும் அவற்றைப் படைக்கும் மனித நடை முறையையும் ஒன்றிணைக்க வேண்டும் என்கிறார். அவை இயங்கியல் ரீதியாக உறவு கொண்டவை. சூழல்களும் நடைமுறையும் ஒன்று சேரும் தருணத்தைப் புரட்சிகரமான சந்தர்ப்பம் என அவர் மதிப்பிடுகிறார்.”
(தேர்வுநூல்கள் 1 – அறிமுகவுரை-பக்கம்-xix)

மனிதர்கள்தாம் சூழல்களைப் படைக்கிறார்கள் என்பது மார்க்சின் பதில் என்பதாக ந.முத்துமோகன் அவர்கள் கூறுகிறார். சூழல்கள் மனிதரைப் படைக்கின்றன என்ற விளக்கத்தில் சில போதாமைகள் உள்ளன என்பது மார்க்சின் கருத்தாகக் கூறகிறார். ஆனால் மார்க்சின் படைப்புகள் எதிலும் இவ்வாறு கூறவில்லை. இந்த “ஃபாயர்பாக் பற்றி ஆய்வுரைகள்” 1844-45 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது என்று அறிமுகவுரையிலேயே கூறியுள்ளார். மார்க்ஸ் இதற்கு அடுத்த ஆண்டு புரூதோனைப் பற்றிப் பா..ஆன்னென்கவுக்கு எழுதிய (28-12-1846) கடிதத்தில் கூறியதைப் பார்ப்போம்.

"என்ன வடிவத்தில் இருந்தாலும் சரியே, சமூகம் என்பது என்ன? மக்களின் பரஸ்பர செய்கையின் விளைபயனே. மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமூகத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை
...
தமது வரலாற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளை தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரம் உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே -அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

..மனிதர்கள் தமது உற்பத்திச் சக்திகளை வளர்த்து வருவதற்கேற்ப - அதாவது தாங்கள் வாழ்ந்து வருவதற்கேற்ப- அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட உறவுகளை வளர்க்கிறார்கள் என்பதையும், உற்பத்திச் சக்திகளின் மாற்றத்தோடும் வளர்ச்சியோடும் கூடவே இந்த உறவுகளின் இயல்பும் மாறித் தீர வேண்டும் என்பதையும் திரு.புரூதோன் பார்க்கவில்லை, இதற்கு முக்கியமான காரணம் அவருக்கு வரலாற்று முறையிலான அறிவு கிடையாது.”
(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 17- பக்கம்264-265-271)

பொருளாதார சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரம் பெற்றவர்களாக இல்லை என்று இங்கே மார்க்ஸ் கூறியதின் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் ந.முத்துமோகன் இல்லை. மேலும் இக்கடிதத்தில் மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்தி சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்று சூழ்நிலைமைகளின் (புறநிலைகளின்) நிர்ணயிப்பை மார்க்ஸ் கூறியுள்ளார். மேலும், “அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட உறவுகளை வளர்க்கிறார்கள் என்பதையும், உற்பத்திச் சக்திகளின் மாற்றத்தோடும் வளர்ச்சியோடும் கூடவே இந்த உறவுகளின் இயல்பும் மாறித் தீர வேண்டும்.” என்கிறார். உற்பத்திச் சக்திகளின் மாற்றத்தோடு என்று கூறப்படுகிறதை முற்றப்புறக்கணித்துவிடுகின்றனர்.

எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதத்திலும் (ஜனவரி 25, 1894) மனிதர்கள் குறிப்பிட்ட சூழலின் மெய்யான உறவுகளின் அடிப்படையில் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

“மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்”
 (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 17- பக்கம்-485-486)

மார்க்ஸ் மற்றும் எங்கெல்சைத் தொடர்ந்து லெனினும் அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்கிறார்.

லெனின்:-
"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய  கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த  முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம்  காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான  இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து  முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது.  இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம்,  மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார  அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டமைப்பாகும்."
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவமாக வரலாற்றியல் பொருள்முதல்வாத்தைப் லெனின் பார்க்கிறார். முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒற்றைப்போக்கை முத்துமோகன் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார். வரலாற்றியல் பொருள்முதல்வாததில் உள்ள உள்ளிணக்கமான விஞ்ஞானத் தன்மையினை, அவரது பன்மைவாத தன்மை மறுதலிக்கிறது. விஞ்ஞானத் தன்மையை ஏற்றுக் கொண்டவர்களே மார்க்சிய வழிபட்ட கம்யூனிஸ்டுகளாவர். அவர்களுக்கு இந்த 20 நூல் தொகுதிகளில் உள்ள மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பன்மைவாதிகளுக்கு, மேற்கோளாகப் பார்த்தாலும் முழுமையாகப் பார்த்தாலும் இந்த 20 தேர்வு நூல்கள் எதிராகவே இருக்கும்.

லெனினைத் தொடர்ந்து ஸ்டாலினது இந்தக் கருத்தையும் நினைவில் நிறுத்த வேண்டும்.

“அறிவியல் விதிகள் - அவை இயற்கை அறிவியல் விதிகள் அல்லது அரசியல் பொருளாதார விதிகள் ஆக எதுவாக இருந்தாலும் சரி – மனிதனின் விருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான செயல்முறைகளின் வெளிப்பாடு ஆகும் என்று மார்க்சியம் கருதுகிறது. மனிதர்கள் இந்த விதிகளைக் கண்டுபிடிக்கலாம், அவற்றைத் தெரிந்து கொள்ளலாம், ஆய்வு செய்யலாம், தனது செயல்பாடுகளில் அவற்றைச் சரிபார்க்கலாம், சமூக நலன் கருதி அவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் அவற்றை மாற்றவோ அழிக்கவோ முடியாது. புதிய வரலாற்று விதிகளை உருவாக்குவதோ அல்லது படைப்பதோ இதைவிடச் சாத்தியமற்றது ஆகும்.”
(ஸ்டாலின் -சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின்
 பொருளாதாரப் பிரச்சினைகள்)

      சோஷலிச சமூகத்திலும் புறநிலை விதிகள் செயற்படுகின்றன, லெனின் ஸ்டாலின் போன்றோர்கள் அதன் வழியிலேயே சோஷலிசத்தை நிறுவினர். இவர்களுக்குப் பின்னால் வந்த அதிபர்கள் தங்கள் நாட்டில் வர்க்கங்கள் மறைந்து போயின. புறநிலை விதிகள் செயற்படவில்லை என்று முடிவெடுத்து செயற்பட்டு சோவித்தை அழித்தனர்.

      எங்கெல்சின் இறுதிகாலக் கடிதத்துடன் முடித்துக் கொள்வோம்.

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."
(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 17- பக்கம்475)

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே உள்ளத் தொடர்பு பற்றிய மார்க்சிய இயக்கவியல், அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்றே கூறுகிறது. அண்மையில் சந்தித்து வருகிற முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகள் இதனையே நிரூபித்துவருகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டை எந்த மனித சக்தியினாலும் தடுத்திட முடியாது. அதே போல் முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவதை எந்த மனித சக்தியாலும் தடுத்திட முடியாது. நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே. இதனை ந.முத்துமோகனாலும் மறுக்க முடியாது என்பதை இறுதியில் காண்போம்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்-18க்கு ந.முத்துமோகன் எழுதிய அறிமுகவுரையில்:-

“பொருள் என்பதை மார்க்ஸ் சடப்பொருளாகவோ பௌதீகப் பொருளாகவோ கொள்ளவில்லை என்ற விவாதம் இங்க முதன்மைப்படுகிறது. சமூக வாழ்வில் பொருட்பண்பு கொண்ட அல்லது பொருள்வகைப்பட்ட ஓரடிப்படையை மார்க்ஸ் காண முயன்ற அந்த நாட்களில் அது உழைப்பு என்றும் நடைமுறை என்றும் உற்பத்தி உறவுகள் என்றும் அவர் கண்டறிந்தார் என்ற விவாதம் ஃபாயர்பாக் பற்றிய கருத்துரைகளிலிருந்து கிடைக்கிறது.”
(தேர்வுநூல்கள் 18 அறிமுகவுரை பக்கம் xv)

உற்பத்தி சக்திகள் இல்லாத உற்பத்தி உறவுகளைப் பற்றி எங்கேயேனும் மார்க்ஸ் பேசியிருக்கிறாரா?

ந.முத்துமோகன் (உழைப்பு, நடைமுறை, உற்பத்தி உறவுகள்) உற்பத்தி சக்திகளை முற்றப் புறக்கணிக்கிறார். பருப்பொருளையும், பொருளாயதத்தையும் (Matter, Material) புறக்கணித்தவர், உற்பத்தி சக்திகளையும் புறக்கணிக்கத்தானே செய்வார்.

பொருளாதாரப் புரிதல் இல்லாதவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிந்திட முடியாது என்பதற்கு இப்படிப்பட்டவர்கள் சிறந்த உதாரணமாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களால் அடுத்து வருகிற எந்தப் புரிதலையும் எட்ட முடியாது.

ந.முத்துமோகன் தேர்வு நூல்கள் 4 மற்றும் 8க்கு அறிமுகவுரை எழுதவில்லை. இதற்கு எந்தக் காரணத்தை அவர் கூறுவார் என்பது தெரியாது. ஆனால் இவ்விரண்டும் பொருளாதாரம் தொடர்பானவை. தொகுதி 4 “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு”. தொகுதி 8 மார்க்சின் “மூலதனம்” நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய மதிப்புரைகளும், பொழிப்பும் ஆகும். பொருளாதாரம் பற்றிய இந்த இரு நூலுக்கும் ந.முத்துமோகன் அறிமுகம் எழுதவில்லை. பொருளாதாரப் புரிதல் இல்லாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்சிய வழியில் அறிந்து கொள்ள முடியாது.

உற்பத்தி சக்திகளோடு தான் உற்பத்தி உறவுகள் பிணைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் செயற்பாட்டிற்கான காரணத்தை உற்பத்தி உறவுகளில் தான் காண வேண்டும், உற்பத்தி உறவுகளின் காரணத்தை உற்பத்தி சக்திகளிடம் தான் காண வேண்டும். இந்தப் புரிதல் வராதவரை மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய கோட்பாட்டை அறிந்து கொள்ள முடியாது.

மார்க்ஸ்:-
“சமுதாய உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
(தத்துவத்தின் வறுமை)

மக்களிடம் கருத்துக்கள் உருவாவதற்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள இயக்கவியல் உறவை பற்றி மார்க்ஸ் கூறியதை ஏற்றுக் கொள்ளாதவராக ந.முத்துமோகன் காணப்படுகிறார். வாழ்நிலையே (புறநிலையே) சிந்தனையைத் தீர்மானிக்கின்றன என்கிற மார்க்சிய அடிப்படையை மறுத்து மக்களே (அகநிலையே) தங்கள் செயற்பாட்டைத் தீர்மானிக்கின்றனர் என்ற தவறான முடிவிற்கு ந.முத்துமோகன் வருகிறார். மக்கள் புறநிலைமையோடு தொடர்பு கொள்ளும் போதே கருத்துக்கள் தோற்றம் பெறுகின்றன, புறநிலைமை, மக்களைக் கொண்டே செயற்படுகிறது என்கிற மார்க்சியம் விளக்கத்தை ந.முத்துமோகன் ஏற்றுக் கொள்ளவில்லை.

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனில் சமூகச் சூழல்களைக் கொண்டு ஒரு நிகழ்வினை விளக்குவது என்ற ஓர் எளிதான புரிதல் நம்மில் பலரிடையில் வழக்கில் உள்ளது”

நிர்ணயவாதிகளை எதிர்ப்பதாக முகமுடியை அணிந்து கொண்டு மார்க்சின் கருத்தையே மறுதலிக்கிறார்.

“அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் பிற்சேர்க்கையில் எங்கெல்ஸ் எழுதியதை காணும் போது பொருளாதாரத்திற்கும் வரலாற்றியல் பொருள்முதல்வாததிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளலாம்.

“அந்தக் கட்சியின் (ஜெர்மன் பாட்டாளி வர்க்கக் கட்சியின்) கோட்பாடு ரீதியான அம்சம் (theoretical aspect) அரசியல் பொருளாதார ஆராய்ச்சியையே முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருந்தது, இந்தக் கட்சி தோன்றியதிலிருந்துதான் தனிப்பட்ட விஞ்ஞானம் என்ற முறையில் ஜெர்மன் அரசியல் பொருளாதாரம் தொடங்குகிறது. வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதம் இந்த ஜெர்மன் அரசியல் பொருளாதாரத்தின் அவசியமான அடிப்படையாகும், அதன் முக்கியமான அம்சங்கள் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இந்த முன்னுரையின் முக்கியமான பகுதிகள் Das Volk பத்திரிகையில் முன்பே வெளியிடப்பட்டிருப்பதால் நாம் இங்கே அதை மேற்கோள் காட்டுகிறோம்.

"பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது" எல்லாவிதமான சமூக, அரசியல் உறவுகளும், மத, சட்ட அமைப்புகளும் வரலாற்றுப் போக்கில் உருவாகின்ற அனைத்துத் கோட்பாட்டுக் கருதுகோள்களும் அந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தில் நிலவிய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் (material conditions) புரிந்து கொண்டால் மட்டுமே பின்னோக்கிச் சென்று இந்தப் பொருளாயத நிலைமைகளின் தடத்தை முன்னவற்றில் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது அரசியல் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்று விஞ்ஞானங்களுக்கும் கூட (இயற்கை விஞ்ஞானங்களில் சேராத மற்ற துறைகள் அனைத்துமே வரலாற்று விஞ்ஞானங்களே) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும். "மனிதர்களுடைய உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது." இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.”
(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்- 4 பக்கம்-271-272)

இருத்தலியல், பின்னை நவீனத்துவம் ஆகிய சிந்தனையைப் பற்றி ந.முத்துமோகன் பேசிக் கொண்டு மார்க்சிய அடிப்படைகளை மறுதலித்துக் கொண்டிருக்கிறார்
.
20 நூல் தொகுதிகளில் மாக்சியத்தை முற்ற புறக்கணிக்க முடியாத நிலையில், மார்க்சிய அடிப்படைகளை ஏற்றுக் கொண்ட எழுத்துக்களையும் ந.முத்துமோகன் அறிமுகவுரையில் காண முடிகிறது.

“புரூதோனின் நூலில் அவர் இயங்கியலில் கொண்டுள்ள ஆர்வம் வெளிப்படுகிறது. ஜோடி ஜோடியாக எதிர்வுகளைக் கண்டறிந்துவிட்டால் இயங்கியல் கைவந்துவிடும் என அவர் கருதியிருக்கிறார். எதிர்வுகளின் வடிவில் நாம் கண்டறியும் கருத்தாக்கங்களுக்கு வாழ்வியல் (பொருள்வகை) அடிப்படைகள் நிலவ வேண்டும் என்பதைப் புரூதோன் கவனிக்கத் தவறிவிட்டார்.”
(மா-எ- தேர்வு நூல்கள் 2 பக்கம் xv)

புரூதோனை, மார்க்ஸ் விமர்சிக்கின்றதைக் குறிப்பிடும் போது ந.முத்துமோகன் பொருள்வகை அடிப்படைகளைக் குறிப்பிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.

எங்கெல்ஸ் எழுதிய, “டூரிங்கை மறுப்பு” நூலைக் குறிப்பிடும் போது பொருளாதாரக் காரணிகளைச் சுட்டிக்காட்ட வேண்டிவருகிறது.

“மார்க்சியம் வரலாற்றின் பல்வேறு சமூகக் கட்டங்களை அவற்றின் பொருளாயத உறவுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. ஒவ்வொரு சிறிய பெரிய கட்டங்களிலும் ஏற்படும் மாற்றங்களை அதே பொருளாதாரக் காரணிகளைக் கொண்டு விளக்குகிறது. ஒரு சமூக மாற்றம் அல்லது புரட்சி நிகழ வேண்டுமெனில் அது பொருள்வகை முரண்பாடுகளின் வேர்கொண்டிருக்க வேண்டும், ஒழுக்க உணர்வுகளில் அல்ல. பொருள்வகை ஆற்றல் கொண்ட வர்க்கம் திரள வேண்டும். இவையெல்லாம் டூரிங்கின் பலப்பிரயோகம் பற்றிய கோட்பாடுக்கு எங்கெல்ஸ் முன்வைக்கும் பதில்கள்.”
(மா-எ- தேர்வு நூல்கள் 10 பக்கம் xvii-xviii)

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யைக் குறிப்பிடும் போது சமூகப் புரட்சிக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் மிகை உற்பத்தி போன்ற மார்க்சிய கண்ணோட்டத்தை ந.முத்துமோகன் அவர்களால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர் உணர்ந்து எழுதும் இடங்களில் மார்க்சியத்தை விட்டுவிலகுகிறார். மார்க்சிய நூல்களைப் பற்றிப் பேசும் போது அவரை அறியாமல் மார்க்சியத்தை முன்வைக்கிறார்.

“ஆயின் முதலாளியம் இப்படியே தொடரமுடியாது. சமூக உழைப்பின் கருப்பையில் உறங்கிக் கொண்டிருக்கும் உற்பத்தி சக்திகளைப் பிரும்மாண்டமான உசுப்பிவிடும் இச்சமூகத்தின் உற்பத்தி உறவுகள் பாதாளத்திலிருந்து ஆவேசமாகப் புரண்டெழும் அதே உற்பத்தி சக்திகளுக்கு விரைவில் பலியாகின்றன. தனது சொந்தத் தேவைகளுக்காகப் பூர்ஷ்வா வர்க்கம் உற்பத்தி செய்த பாட்டாளி வர்க்க கோடிக்காலப் பூதமெனத் திரண்டெழுந்து தனது கூட்டு ஆற்றலால் பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்கொள்ளுகிறது. மிகை உற்பத்தியும் அடுத்தடுத்துக் காலம் தவறாது வெடிக்கும் பொருளாதார நெருக்கடிகளும் முதலாளியச் சமூக அமைப்பை சமூகப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றன. வரலாற்றின் நிர்ப்பந்தங்கள் பாட்டாளி வர்க்கத்தை அரசியலில் ஈடுபடச் செய்கின்றன.”
(மா-எ- தேர்வு நூல்கள் 1 பக்கம் xxii - xxiii)

பொருள், பொருளாயதம் ஆகியவற்றை “செயல்பாடு” என்ற இருத்தலியல் கண்ணோட்டத்தின் விவாதத்தை மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் எழுத்தைக் கொண்டு ந.முத்துமோகன் அவர்களே முறியடித்துள்ளார். மார்க்ஸ் எங்கெல்ஸ் (தேர்வு நூல்கள் -20) ஆகியோரின் எழுத்துக்களும் அவர்களது வாழ்க்கை வரலாறும் இதனையே மெய்பிக்கிறது.

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது. நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே. அதற்கு மார்க்சியமே கருவியாய் துணைபுரியும்.