Monday 10 December 2018

பருப்பொருள் (Matter)


இயக்கவியல் பொருள்முதல்வாதம்

இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒருதலைபட்சம் இல்லாத
        வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்,
நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக்
காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.
 லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

பருப்பொருள்
(Matter)

"இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டே
இருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக
இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது"
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter)ஆதாரமாகக் கொண்டு ஆராய்கிறது.  இந்தப் பருப்பொருள் என்ற கருத்தாக்கம் காலந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.  பழங்கால பொருள்முதல்வாதிகளின் பருப்பொருள் பற்றிய கருத்தை முதலில் பார்ப்போம்.

        பழங்கால பொருள்முதல்வாத சிந்தனையாளர்கள், பருப்பொருள் என்பதை பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாக, அதாவது தொடக்க கட்டுமானப் பொருள் என்பது போல் புரிந்து கொண்டனர். அதனால் இந்தத் தொடக்கத்தை தனிப் பொருளில் கண்டனர். எடுத்துக்காட்டாக, தண்ணீர், காற்று, நெருப்பு போன்றவற்றில் இருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கருதினர்.

        அடுத்த காலகட்டத்திய பொருள்முதல்வாதிகள், பருப்பொருள் என்பதை அணுக்களில் கண்டனர். இந்த அணுக்கள் மிகச்சிறிய துகள்களால் ஆனவை, அதனை பிரிக்கவோ  பிளக்கவோ முடியாது, அவை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கருதினர். விஞ்ஞான வளர்ச்சியில் அணுக்கள் பகுபடக் கூடியது என்று அறியப்பட்டது. அணுவைக்காட்டிலும் சிறியதான எலெக்ட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது.

        பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையை சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருப்பதாக நவீனப் பொருள்முதல்வாதமான மார்க்சிய தத்துவம் குறிப்பிடுகிறது.

        பருப்பொருள் என்பதை எந்தவித அடிப்படை தனிமங்களாக மட்டும் சுருக்க இயலாது. பருப்பொருள் என்பது மனிதனுடைய புலனுறுப்பு, புலனறிவு வழியாக புறநிலை எதார்த்தத்தைக் குறிக்கின்ற வகையினம். அந்த எதார்த்தம் மனிதனைச் சாராது புறநிலையில் இருக்கிறது என்று லெனின் கூறுவார். இந்த  விளக்கத்தை நாம் அறிந்திருக்கின்ற பருப்பொருட்களைப் பற்றி மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக்கூடிய பருப்பொருட்களையும் உள்ளடக்கியே லெனின் கூறியிருக்கிறார். இதனையே பருப்பொருளைப் பற்றிய போதுமான கருத்தாக்கமாகக் கொள்ளலாம்.

        பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையை பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தை கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது. எந்தவித புதிய பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவை நமது உணர்வுநிலையிலிருந்து தனித்து புறநிலையில் இருப்பதே பருப்பொருள்.

        இந்த புறநிலையான இயக்கம், நமது புலன் உறுப்புக்களின் மீதான தாக்கத்தின் விளைவாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பில் இவற்றின் பொருளாயதத் தன்மை அடங்கியுள்ளது. அதே நேரத்தில் முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களைப் போலன்றி இயக்கவியல் பொருள்முதல்வாதம் பருப்பொருளை தொட்டு உணரத்தக்க வடிவங்கள், புலன்உறுப்புகளின் மூலம் அறிதல் என்பதாகக் குறுக்கிக் கொள்வதில்லை.

        புலன் உறுப்புகளின் தாக்கம் என்று சொன்னவுடன் தொட்டு உணரத்தக்கது, அதன் வாசனைகளை நுகரக் கூடியது என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட ஒலியின் அளவில் குறைவானதையும் அதே போல் அதிகமானதையும் செவுப்புலனால் அறிய முடியாது. இருந்தும் இவை நமது சிந்தனையிலிருந்து புறநிலையில் இருப்பதையும், அதனை அறிகின்ற விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு நமது உணர்வுகளில் அவை வெளிப்படுத்த முடிகிறது என்பதையும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் தெரிவிக்கிறது.

பருப்பொருள் எல்லையற்றது, முடிவற்றது, எனவே இன்னமும் நாம் அறியாதவை இருக்கும், ஆனால் அறியப்படமுடியாதவை என்பது கிடையாது


No comments:

Post a Comment