விவேகானந்தர்:-
“அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை. தனி ஆன்மாவைப் படைத்தது மாயை
என்பது அவர்களின் வாதம். உண்மையில் தனி ஆன்மாக்கள் இருக்க முடியாது. இருப்பது உண்மையில்
ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்க
முடியும்? நாம் அனைவரும் ஒன்றே. பன்மையைக் காண்பது தான் தீமைக்கான
காரணம். நான் வேறு, பிரபஞ்சம்
வேறு என்று உணர ஆரம்பித்த உடனே முதலில் பயம் தோன்றுகிறது, தொடர்ந்து
துன்பம் உண்டாகிறது.”- ஞான தீபம் 4, பக்கம் 10
பன்மையில்தான்
தீமைக்கான காரணம் இருக்கிறது. அதனால் பன்மையை மறுத்து ஒருமையை வலியுறுத்துகிறார் சுவாமி
விவேகானந்தர். புறத்தில் காணும் பன்மைகள் தோற்றங்களே. உண்மையில் நாமெல்லாம் ஆத்ம நிலையில்
ஒருமை பெற்றவர்களேயாவோம். நாமே பிரம்மம். தத்துவமசி - அதுநாமே என்கிறது அத்வைதம். இதன்
அடிப்படையில் தான் அத்வைத நன்னெறி அமைந்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். அத்வைத
ஒருமை ஆத்மாவில் (பிரம்மத்தில்) நிலவுகிறது, மார்க்சிய ஒருமை பொருளாயதத்தில்
அடங்கியிருக்கிறது.
தொடக்க
காலத்திலிருந்து உலகத்தின் ஒருமையை அறிவதுபற்றி தத்துவம் முயற்சித்து வருகிறது. உலகத்தின்
மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பின்னணியில் உள்ளவற்றை
ப்பற்றி ஒரு கோட்பாட்டை அமைத்துக்கொள்ள முயன்றனர். அதாவது உலகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட
பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது எது என்று தேடினர்.
கருத்துமுதல்வாதமும், மதமும் உலகத்தின் ஒருமையை ஆன்மீகத்தில் கண்டது. அத்வைதம் அதனை உலக ஆத்மாவில்
அதாவது பிரம்மத்தில் கண்டது.
மார்க்சிய
இயக்கவியல் பொருள்முதல்வாதம், உலக ஒருமையின் உண்மையை அதன் பொருளாயதத்
தன்மையில் கண்டது. அதாவது மனிதனது உணர்வைச் சாராமல் புறநிலையின் இருப்பில் அந்த ஒருமையை
அறிந்துகொண்டது.
அத்வைத ஒருமை
இயற்கைக்கு
அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம் என்று அத்வைதம் கருதுகிறது.
கணக்கில்லா தோற்றங்களாகக் காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது
இந்த ஒன்றே. நாம் காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை
ஏகம் சத் அதாவது அனைத்தும் இந்த ஒன்றே
என்று நிறுவுகிறது அத்வைதம்.
நான் என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மா, நீ என்று சொல்லும்போது அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே.
அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த ஒரே ஆத்மாவான
பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோ கூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும்
இவையனைத்தும் பிரம்மத்தின் மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம்.
“எல்லா தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே
என்கிறான் வேதாந்தி.”- ஞான தீபம் 4, பக்கம் 295
அத்வைதம்
பிரம்மத்தின், அவித்தையினால் (அறியாமையினால்) உண்டான தோற்ற வெளிப்பாடே, பன்மையாகத்
தெரியும் உலகம். இந்த உலகம் பிரம்மத்தைப் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாக இருப்பதால்,
இந்த பிரபஞ்சமும் பிரம்மமும் ஒருமை பெற்றதாக அறிவிக்கிறது.
மார்க்சிய ஒருமை
அளவற்ற
பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால் மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட
உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று அத்துடன் வேறொன்று என பொருட்களிடையே
இணைப்பைப் பெற்றுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.
நிகழ்வுகளின்
தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன் ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது
விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும் ஒருமையாய் நடைபெறுகிறது. விசும்பும்,
காலமும், பருப்பொருளில் இருந்து பிரித்தறிய முடியாத
புறநிலையானதாகும். இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.
ஒருமை
வாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கை, சமூகம் இத்துடன் மனித உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சிடைந்து
வருகின்ற பருப்பொருளின் உற்பத்திகளே என்கிறது.
புதிய
விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகத்தின் பொருளாயத ஒருமையை வலியுறுத்துகின்றன. உலகத்தின்
பொருளாயத ஒருமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்புகளையும் இடைச்
சார்புநிலையையும் உள்ளடங்கிய வகையில் இருக்கிறது. பூமிக்கும் வானத்துக்கும் ஈர்ப்புச்
சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம்,
வேதியல் மூலகங்கள் உருமாற்றம் அடைதல், தாவர உலகத்துக்கும்
விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும்
இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து
கொண்டுள்ளது எனவே, இயற்கை மற்றும் சமூக சக்திகளை அனுசரித்து அவற்றை
மனித சமூகத்திற்குச் சேவை செய்ய வைப்பதைச் சாத்தியமாக்குகிறது.
அத்வைத
ஒருமை பிரம்ம நிலையோடு ஒடுங்கி, இயற்கை மற்றும் சமூகத்தின் புறநிலையான
உண்மையினை மறுத்து, சமூக மாற்றம் என்பதைச் சாத்தியமற்றது என்கிறது.
No comments:
Post a Comment