Friday 15 December 2017

சமூகம் பற்றிய கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் வாயிலாக விளக்கப்படுகிறது.

மார்க்சும் எங்கெல்சும் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி கூறிய கருத்தாக்கத்தை மூன்று வகையில் தொகுத்துப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும். இரண்டாவதில், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மற்றும் வடிவத்தை அமைப்பதில் பெரிதளவாயிருப்பதையும், மூன்றாவதில், மேற்கட்டமைப்பின் இடைச்செயலை மறுத்திடவில்லை என்பதோடு, இறுதியில் பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதையும் குறிப்பிடுகிறது.

     அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்குப் பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறதுஇவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகளை அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

அடித்தளத்தில் மேற்கட்டமைப்பின் தாக்கம்

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்பொருளாதார இயக்கம் முடிவில் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது

      அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான இடைச்செயல்

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கதை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

பரஸ்பவர  வினைபுரிதல் என்பது உற்பத்திச் சக்திகள், கம்யூனிச சமூகமாய் செயல்படும் அளவுக்கு வளர்ந்திட்ட நிலையில் காணக்கூடியதாகும்.

எங்கெல்ஸ் "இறுதியில் தீர்மானிக்கிறது" என்று தமது கருத்தை இறுதி நாட்களில் மாற்றிக் கொண்டார் என்று புரட்டுகின்றனர். இறுதியில்  தீர்மானிக்கிறது என்பதை இறுதி தீர்ப்பு நாள்போன்று எல்லாம் நடந்து முடிந்த பிறகான கடைசியில் என்று பொருள் மாற்றி விளக்குகின்றனர். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி முடிவெடுக்கும் போது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் எதிர்வினைபுரியும் இவற்றில் இறுதியில் முடிவெடுப்பது அடித்தளம் தான் என்று எங்கெல்ஸ் கூறியதை திரித்துப் பொருள் விளக்கம் கொடுக்கின்றனர்.

இல்லாத நாளை இறுதி தீர்ப்புநாளாக வைத்தது போல், பொருளாதாரக் காரணங்கள் தீர்மானிக்கும் என்பதை இல்லாததாக்கும் முயற்சியாக இறுதிஎன்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதை எல்லாம் நடந்து முடிந்த பிறகான இறுதிஎன்று மார்க்சிய மாமேதைகள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர் கூறிவருகின்றனர். எல்லாம் நடந்து முடிந்தவுடன் இறுதியில்தான் பொருளாதார காரணங்கள் தன் எதிர்வினையைப் புரிகிறது என்றும், இந்தப் பொருளாதாரக் காரணங்கள் சமூக மாற்றத்துக்கு துணைச் சக்திதான் என்றும் தவறாகவும் மார்க்சியத்துக்கு புறம்பாகவும் விளக்குகின்றனர்.


      சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையை தோற்றுவிக்கிறது என்பதை இவ்வகையில் மறுதலிக்கின்றவை வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரானவையாகும்.

      சோவியத் யூனியன் தமது இறுதிகட்டத்தில் இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற கோட்பாட்டையே முன்வைத்து. சோவியத் யூனியனில் ஆதிக்க வர்க்கம் காணப்படவில்லை, உற்பத்தியில் சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிசக் கட்டத்தை அடைந்துவிட்டோம், அதனால் தங்களது நாட்டில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்ற தவறான முடிவின் விளைவாய்தான்  அழிந்து போனார்கள். சோஷலிசக் கட்டத்திலேயே இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற தவறான கண்ணோட்டம் பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் இதுபற்றிய கேள்விக்கு இடமேது.

      மார்க்சியத்தை சில வாக்கியங்களுக்குள் புரிந்தவர்கள் செய்யும் குளறுபடியே இவைகள் யாவும். அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள இயக்கவியல் தொடர்வை அறியாமலும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் என்பதில் உள்ள பொருள்முதல்வாத விளக்கத்தை புரியாமலும் மார்க்சியம் என்பதை சிலவார்த்தைக்குள் அடக்கப் பார்க்கின்றனர்.


அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். இதனை ஏற்று புரிந்து கொள்ளாமல், ‘அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தை தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது, அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் தான் தீர்மானிக்கிறதுஎன்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்ட வயப்பட்டதேயாகும்.