Monday 29 June 2020

மனிதனுடைய அறிதல் கட்டம் புலனுணர்ச்சியுடன் நின்று விடுகிறதா? – வி.கிரபிவின்


“மனிதன் புலனுணர்ச்சி அறிதல் கட்டத்துடன் நின்று விடுவதில்லை. அவன் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் செல்கிறான்; பொருட்களின் சர்வப்பொதுவான, இன்றியமையாத, முக்கியமான இயல்புகளையும் உறவு களையும், புலனுணர்ச்சி அறிதலுக்கு உட்படாத அவற்றின் முறைப்படியான தொடர்புகளையும் அறிகிறான். இது சிந்தனையின் உதவியினால் பகுத்தறிவு அல்லது தர்க்க ரீதியான அறிதல் கட்டத்தில் நடைபெறுகிறது. ஒரு தருணத்தில் பார்க்க முடியாததை அல்லது முற்றிலும் நேரடியாகப் பார்க்க முடியாததை அறியக் கூடிய ஆற்றல் மனித சிந்தனைக்கு இருக்கிறது. உதாரணமாக, நம்முடைய புலனுணர்ச்சி உறுப்புக்களால் பூமியில் உயிர்களின் தோற்றத்தை அல்லது ஒளிக்கதிரின் வேகத்தைத் தெரிந்து கொள்ள முடியாது; ஆனால் மனிதன் இத்தகைய நிகழ்வுப் போக்குகளையும் புலப்பாடுகளையும் சிந்தனையின் மூலம் அறிதல் சாத்தியம்.

சிந்தனை பொருட்களின் உள்ளார்ந்த, சர்வப்பொதுவான தொடர்புகளை எடுத்துக் காட்டுவதற்கும், இயற்கை, சமூகம், அறிதல் ஆகியவற்றின் மாறுதல்களுக்கும் வளர்ச்சிக்கும் உரிய விதிகளைக் கண்டுபிடிப்பதற்கும், சுற்றியுள்ள உலகத்தின் மிகவும் ஆழமான மர்மங்களை உட்புகுந்து காண்பதற்கும் உதவுகிறது.
… … …
புலனுணர்ச்சி அறிதலைப் போல சிந்தனையும் திட்ட வட்டமான வடிவங்களில் நடைபெறுகிறது. கருதுகோள்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் ஆகியவை இந்த வடிவங்களாகும்.

கருதுகோள் என்பது பொருட்கள், நிகழ்வுகளின் பொதுவான, முக்கியமான அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற சிந்தனை வடிவம் ஆகும். இத்தகைய பொது அம்சங்களின் மொத்தம் கருதுகோளின் உள்ளடக்கமாக இருக்கிறது. கருதுகோள்கள் மொழியில் தனிச் சொல்லினால் அல்லது சொற்களின் தொடரினால் (உதாரணமாக, "பருப்பொருள்", "அங்கஜீவி'', "சமூக பொருளாதார அமைப்பு", இதரவை) எடுத்துரைக்கப்படுகின்றன.

எந்த விஞ்ஞானத்துக்கும் அதற்குரிய கருதுகோள்களின் அமைப்பு இருக்கிறது; அவற்றின் மூலம் அந்த விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்ற விதிகளை வெளியிட்டு அதன் தொடக்கக் கோட்பாடுகளை வகுத்துரைக்கிறது. உதாரணமாக, பருப்பொருள், உணர்வு, இயக்கம், காரண காரியத் தன்மை, இதரவை தத்துவஞானத்தின் அடிப் படையான கருதுகோள்கள். மதிப்பு, பண்டம், இதரவை அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான கருதுகோள்கள்.
… … …
அறிதலின் புலனுணர்ச்சிக் கட்டமும் பகுத்தறிவுக் கட்டமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன. பொருள் அல்லது நிகழ்வின் தனித்தனியான அம்சங்களையும் தொடர்புகளையும் பற்றிய நேரடியான புலனறிவிலிருந்தே விஞ்ஞான ரீதியான அறிதல் தொடங்குகிறது. பின்னர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை பொதுவானதைத் தனியே பிரித்து அறிவதற்குரிய ஆதாரங் களைத் தருகின்றன. அதன் பிறகு பாகுபடுத்தலும் (பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் சில இயல்புகள், உறவுகளைப் பிரித்தெடுத்தல்) பொதுமைப்படுத்தலும் (பிரதானமான, நிர்ணயகரமான இயல்புகளையும் உறவுகளையும் இனங்காணுதல்) நடைபெறுகின்றன. அதன் பிறகு விஞ்ஞான அறிதல் பொருட்கள் மற்றும் நிகழ்வுப் போக்குகளின் உள்தொடர்புகளையும், அவற்றின் பரஸ்பர பாதிப்பையும் மாற்றங்களையும், அவற்றின் வளர்ச்சியில் உள்ள தீர்மானமான நியதிகளையும் வெளிப்படுத்தும்.

நம்முடைய அறிவு ஆழமடைகின்ற பொழுது இத் தொடர்புகள், உறவுகள் - அந்தப் பொருள் கூட-ஆகிய வற்றின் பிரதிபலிப்பு அதனுடைய புலனுணர்ச்சி பிம் பத்தை இழப்பதற்கு முற்படுகிறது; ஆனால் அறிதல் நிகழ்வுப் போக்கு தொடர்ந்து முன்னேறுகிறது, ஏனென்றால் விஞ்ஞானப் பாகுபடுத்தல் நேரடியாகப் பார்க்க முடியாதவற்றைப் புரிந்து கொள்வதை சாத்தியமாக்குகிறது. புலனுணர்ச்சி அறிதலைப் போல சிந்தனை நடை முறையால், செய்முறையான மனித தேவைகளால் தகவமைக்கப்படுகிறது, அவற்றோடு இணைக்கப்பட்டிருக் கிறது, செய்முறையிலிருந்து பெறப்பட்ட விவரங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே நினை விலிறுத்துவது அவசியம்.

மனித அறிதலைப் பற்றிய விதி தோற்றத்திலிருந்து சாராம்சத்துக்கு, வெளிப்புறத்திலிருந்து உட்புறத்துக்கு முன்னேறிச் செல்வது தான். விஞ்ஞானத்தின் மொத்த வரலாற்றிலும் இது நன்கு புலப்படும். உதாரணமாக, மார்க்சுக்கு முந்திய பொருளியலாளர்கள் பலர் பண்டங்களின் வெளிப்புற இயல்புகளை, அதாவது அவற்றின் உபயோகம் (பயன் மதிப்பு), பரிவர்த்த னைத் தகுதி (பரிவர்த்தனை மதிப்பு) ஆகியவற்றைக் கண்டார்கள். ஆனால் பண்டங்களின் இயல்புகளின் வெளித் தோற்றங் களான இவை ஆழமான உள் தொடர்புகளை மூடிமறைக்கின்றன. மார்க்ஸ் இத்தொடர்புகளைக் கண்டுபிடித்தார்; எல்லாப் பண்டங்களிலும் அவற்றின் உற்பத்திக்கு அவசியமான சமூக உழைப்பு என்பது பொதுக் கூறாக இருப்பதை நிறுவினார்.

பண்டம் இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறது; அது பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பின் ஒற்றுமை. ஆகவே பண்டத்தில் அடங்கியுள்ள உழைப்பும் இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். மார்க்ஸ் அதைக் கண்டுபிடித்த பிறகு பண்டத்தின் மதிப்பு உழைப்பின் சமூக இயல்பை, மனிதர்களுக்கு இடையில் சமூக உறவுகளை வெளியிடுகிறது என்பதை எடுத்துக் காட்டினார்.

விஞ்ஞான தத்துவார்த்தச் சிந்தனை உலகத்தை அறிதலிலும் உண்மையைப் புரிந்து கொள்வதிலும் வலிமையான ஆயுதமாக இருப்பதில் அதன் மாபெரும் முக்கியத் வம் அடங்கியிருக்கிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றார் என்ன?-
 பக்கம்- 260-266, முன்னேற்றப் பதிப்பகம் - 1987)