Friday 9 December 2022

ஆசீவக மதம் - மயிலை, சீனி. வேங்கடசாமி

     “பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

'மக்கலி' என்பது வடநாட்டில் பண்டைக் காலத்திலிருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயரென்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இவருக்கு 'மக்கலிபுத்திரர்' என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். 'மக்கலி' என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு 'மக்கலிபுத்திரர்' என்னும் பெயர் வழங்கியதென்று வேறுசிலர் உரைப்பர்.

 மக்கலி, அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தை யுண்டாக்கிய மகா வீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்துவந்த காலத்தில், அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் 'ஆசீவகமதம்', அல்லது 'ஆஜீவகமதம்' என்பது. ஆருகதமதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

 சற்றேறத்தாழ கி. மு. 500-இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடு பெற்றார் என்பர். மகாவீரர் வீடு பெற்ற சில ஆண்டுக்குப் பின்னர், கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

    ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

    ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவ கதிர்' என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

 நவகதிரையன்றி, 'ஆதித்தியம்' என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, 'ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்' என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும்.

 மற்கலிக்குப் 'பூரணர்' என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க் கண்டவாறு 'நீல கேசி' என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

          ' உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

          திரையா னரையான் றெரிவில் லுருவம்

          வரையா வகை வானிடுவில் லனையன்

          புரையா வறிவிற் புகழ் பூரணனே '

                             (ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்.)

     'வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவு முடையனல்லானாகி ஆகாச தலத்து இந்திர தனுசுப்போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றம்படாத வறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு' (மேற்படி உரை.)

 ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

          ' தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

          பாழியிற் பிணங்குளுந் துளப்பெழப் படுத்தியே '

    என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர், 'தாழி - முதுமக்கட் சாடி * * * தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப் பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகின்றது. அதாவது, ஆசீவகமதம் ஆருகத மதமாகிய ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவகமதம் வேறு என்று தௌ¤வாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இந்தத் தவறுதலைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப் பரணியுரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம் ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

          ' சாவகர் அருகர் சமணர் ஆகும் ;

           ஆசீ வகரும் அத்தவத் தோரே ' - சேந்தன் திவாகரம்.

         ' சாவகர் அருகர் சமணர் அமணர் ;

           ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே ' - பிங்கல நிகண்டு.

'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றான திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப்போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீல கேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிர, பிற்காலத்து நூல்களாகிய 'சிவஞான சித்தியார்', 'தக்கயாகப் பரணி', 'திவாகரம்', 'பிங்கல நிகண்டு' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவக மதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டுவந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி இருத்தலும், குளியாமல் அழுக்குடம்போடு இருத்தலும், இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவக மதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிற்காலத்தில் தவறாகக் கருதப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டுவந்தனர்.

இந்த மதத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. 'மணிமேகலை' என்னும் பௌத்த நூலிலும் (சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை), 'நீலகேசி' என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), 'சிவஞானசித்தியார்' என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவகமதம்) இந்த மதக்கொள்ளைகளை எடுத்துக்கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும், Encylopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவிபுரியும்.

இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது, தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக 'நீலகேசி' என்னும் நூல் கூறுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு, உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

     ' கண்ணகி தாதை கடவுளர் கோலத்

     தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்

     புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் ' - (நீர்ப்படைகாதை.)

எனவரும் அடிகளால் இதனை அறியலாம்.

இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலா சாசனங்களில் 'ஆசுவ கடமை' என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள 'ஆசுவ கடமை' என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒருவரியைக் குறியாது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள 'நீலகேசி'யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.”

(பௌத்தமும் தமிழும்)

 

 

Sunday 4 December 2022

ஆசீவகத்தின் நியதிக் கொள்கை (ஊழ்) பற்றி டாக்டர் சோ.ந.கந்தசாமி:-



நியதிக்கொள்கை. தன்னிச்சைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களால் செயல் தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தில் ஆசீவகர் நியதிக்கொள்கையினைப் பின்பற்றினர். இந்தியாவில் தோன்றிய உலோகாயதம் தவிர எல்லாச் சமயங்களும் ஒருவனின் இன்ப துன்பங்களை அவன் முற்பிறப்பிலோ இப்பிறப்பிலோ புரிந்த நல்வினை தீவினைகள் முடிவுகட்டுகின்றன என வினைக் கொள்கையினை (Doctrine of Karma) விளம்புகின்றன. ஆனால், ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி கோசாலர் வினைகள் மனிதனின் இன்பதுன்பத்தை ஆக்கவில்லை என்றும், ஒத்த ஆற்றலுடைய இருவர் புரியும் ஒரேவினை ஒருவர்க்கு இன்பமும் இன்னொருவர்க்குத் துன்பமும் தருதலின் வினைகள் பயன் தரவில்லை என்றும், நியதிப்படிதான் இவை விளைகின்றன என்றும், உலகநிகழ்ச்சிகள் அனைத்தும் நியதியின் ஆற்றலால் நடைபெறு கின்றன என்றும் கருதினர்.

எவ்வளவு முயன்றாலும் உருவாதலைப் போக்கவோ, இலவாதலை ஆக்கவோ இயலாது; எந்தச் செயலும் வினைகளால் தீர்மானிக்கப்படவில்லை; நியதியால்தான் முடிவுகட்டப்படுகின்றது; ஆதலின் மனித பயனற்றவை. வலியார், மெலியார் அனைவருமே நியதிக்கும் முயற்சிகள் அதன் வெளிப்பாடாகிய எதேச்சை (chance), சுபாவங்களுக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள்.

நியதி வெளிப்படுமிடத்து எதேச்சையாகவும், சுபாவமாகவும் தோன்றும், இக்கொள்கையினைப் பிடக நூலின் பகுதியாகிய சாமஞ்ஞபல சுத்தத்தில் காணலாம். பிற்காலத்து ஆசீவகர் உருவாக்கிய சுபாவக் கொள்கைக்கு இங்குத் தான் அடிப்படையினைக் காண்கிறோம். ஆசீவகத்தின் நெறிப்படி எண்பத்துநான்கு இலட்சம் கற்பங்களுக்குரிய பல்வகைப் பிறப்புக்களும் நன்மை, தீமை ஆகிய பிறவிகளில் பலமுறைகள் சுழன்று, இக்கால அளவின் முடிவில்தான் விடுதலை பெறும். திரண்டுள்ள நூல்பந்தினை விசிறி எறிந்தால் முடக்கம் நீங்கி முழுதுமாய் நீண்ட முனைவிடுபடுதல்போல, பேதையர், மேதையர் என்ற பேதம் இன்றி மேற்குறித்த கால முடிவில் துக்கத்தினின்றும் கட்டாயம் விடுதலை பெற்றேயாதல் வேண்டும். ஆதலின், ஆசீவகம் எல்லா உயிர்களும் ஒருகால எல்லை வரையில் நன்மை, தீமைகளைக் கட்டாயம் அனுபவித்துப் பின்னர் வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட காலமுடிவில் விடுதலை அடையும் என்ற பரந்த நியதிக் கொள்கையினைத் தெளிவுறுத்துகின்றது என்க. நீலகேசியில் இடம்பெறும் ஆசீவக வாதத்தில் இக்கொள்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.

நியதிக்கொள்கையும், வினைக்கொள்கையும் வேறு வேறு என்று அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்விரண்டு கொள்கைகளுமே வேதங்களில் காணப்படவில்லை. ஆதலின், இவை ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த திராவிடப் பெருமக்களுக்கு உரியன என்று மேலைநாட்டு இந்தியச் சிந்தனையாளர்கள் (Indologists) ஆய்ந்துரைத்துள்ளனர். ஆசீவகரின் நியதிக்கொள்கையின் நிழல் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலில் பொலிதல் காணலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்

இன்னா தென்றலும் இலமே; மின்னொடு

வானம் தண்டுளி தலைஇ யானாது

கல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. -புறம். 192

இப்பாடலில், ஓடும் வெள்ளத்துடன் ஒத்தோடும் மிதவையினை நியதிப்படி செயலாற்றும் உயிர்க்கு உவமையாகச் சொல்லப்பட்டிருத்தல் காணத்தக்கது. நியதியை, 'முறை' என்ற அழகு தமிழால் சுட்டுதல் காண்க. மனிதச் செயல்கள் நியதியால் முடிவு கட்டப் படுபவை என்பதும், நியதியை மீறியோ எதிர்த்தோ செல்லுதல் இயலாது என்பதும் இவ்வுவமையால் கவிச்சுவை பெருகக் கணியன் பூங்குன்றனார் தெளிவுறுத்துதல் அறிக.

நியதிக் கொள்கை ஆரியர் வருகைக்கு முற்பட்டுத் திராவிடர்களால் பின்பற்றப்பட்டதென்று அறிஞர்கள் கருதுவதால் இத்தமிழ்க் கொள்கை அக்காலத்து ஆசீவகர்களால் கைக்கொள்ளப்பட்டது எனக் கருதுவது ஆய்வுநெறிக்கு ஒத்ததாக உள்ளது.”

(இந்தியத் தத்துவக் களஞ்சியம் தொகுதி-1

பக்கம்: 110-112)

 ஆசீவகம் பற்றி உமா சக்கரவர்த்தி:-



“கி.மு. 6வது நூற்றாண்டில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய கோட்பாடாக ஆசீவகர்களின் கோட்பாடு இருந்தது. மேலே குறிப்பிட்ட ஆறு தத்துவவாதிகளில் மூவரின் எண்ணங்களில் குறிப்பிடப்பட்ட ஆசீவக கோட்பாட்டின் மையக் கருத்தாக நியதி அல்லது விதி என்ற கொள்கை மீதான நம்பிக்கை இருக்கிறது. ஆசீவகத்தின் முழக்கமான 'ந- அத்தி புரிஸ்சாகரே' என்ற முழக்கத்தில் இதனைத் தொகுத்துக் கூறலாம்; மனித முயற்சிகள் பயனற்றவை என்று இதற்கு அர்த்தம்.

ஆழ்ந்த வெறுப்புணர்வு, ஒருவரின் விதியை கட்டுப்படுத்துவது அல்லது உருவமைப்பது என்பதில் மனிதனின் பயனற்ற தன்மை ஆகியவற்றை இந்தத் தத்துவத்தின் மேலாதிக்க குரல் பிரதிபலிக்கிறது. புதிய அடுக்கமைப்பு சமூகத்தில் உள்ள சில பகுதி மக்கள் மற்றும் தனிமனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே மனிதனின் தலைவிதி உருவமைக்கப்படுகிறது என்று கருதப்பட்டது; புதிய அடுக்கமைப்பு சமூகத்தில், சமூகமோ, அரசரோ அல்லது வேறு எந்த நிறுவனமோ, அநீதி, ஒடுக்குமுறை, அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பை வழங்க முடியாது. எனவே, ஆசீவக தத்துவத்தின் தன்மையாக உள்ள, பயனற்ற தன்மை தொடர்பான ஆழமான உணர்வு ஆச்சரியம் அளிக்கவில்லை.

மக்காளி கோசலாவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளோடு பயனற்ற தன்மை தொடர்பான ஆழமான உணர்வு

தொடர்புடையதாக இருக்கலாம்; மக்காளி கோசலாவின் பெயர் ஆசீவகக் கோட்பாடுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஓர் ஆதாரத்தின்படி, மக்காளி ஓர் ஓடுகாலி அடிமை: சிறிது எண்ணெயை கைத்தவறி சிந்தியதால், எஜமானரின் கோபத்திற்குப் பயந்து, எஜமானரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்தவர்.  எல்லாவித சாகச முயற்சிகளிலும் தொடர் தோல்வி அடைந்த பிறகு, எருது ஜோடிகளை வாங்குவதில் வெற்றி பெற்றது தொடர்பான மற்றொரு நிகழ்வு மக்காளியோடு தொடர்புடையது (தனது சொந்தப் பண்ணையை அமைப்பதற்கான முன்நிபந்தனையாக எருது வாங்குவது இருந்தது; மற்றவர்களுக்காக உழைப்பது என்ற தளையிலிருந்து வெளிவர விரும்பும் ஒவ்வொருவரின் கனவாக இது இருந்தது) ஒரு நாள் எருதுகள் அறுத்துக்கொண்டு சென்றதில், அவை விபத்தில் கொல்லப்பட்டன. தலைவிதியின் சக்தி, விருப்பமின்மையின் அவசியம், நடவடிக்கையின்மையின் நன்மை ஆகியவற்றின்மீது நீண்ட உபதேசங்களை பிறகு மக்காளி கூறினார்.

இந்தக் கதையை ஆசீவக இனத்தின் தலைவரோடு பாஷாம் தொடர்புபடுத்தி, தனது பயிர்கள் அல்லது மந்தையின் இழப்பினால் வறுமையாக்கப்பட்ட விவசாயியின் கதறலை ஒத்ததாய் இதை இணைக்கிறார். இது போன்றே, புத்தரின் மற்றொரு சமகாலத்தவரான புராணா காஸாபாவும் தப்பி ஓடி வந்த அடிமை என்று விவரிக்கப்படுகிறார்; அவரது ஆசிரியத் தொழில் அவமானத்தில் முடிந்ததாகக் கூறப்படுகிறது; அதற்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

பொருளியல் சூழ்நிலைகளின் நிச்சயமின்மையும், ஒரு தனி மனிதனின் இருப்பில் அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் உள்ள அதன் போதாக்குறையும் இந்தக் கதைகளின் பொதுவான அம்சமாகும்.

நல்லவற்றிற்கும், தீங்கானவற்றிற்கும் இடையேயும், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோருக்கும். பிச்சை இடுபவர்கள், இதர நற்காரியங்களை செய்வோர் ஆகியோருக்கும் இடையேயும் எந்த வேறுபடுத்தல்களும் புத்தரின் சமகாலத்தவர்களான இந்த மூவரின் போதனைகளில் இருக்க வில்லை என்பது கூடுதலான முக்கியத்துவம் உடையது.

மக்காளி கோசலா கூறுவதாவது:

"வாழும் மனிதர்களின் பாவங்களுக்கு காரணங் களோ, அடிப்படையோ கிடையாது; காரணம் அல்லது அடிப்படை இல்லாமல் அவை தூய்மையாக மாறுகின்றன... ஒருவரின் எதிர்காலப் பிறப்புகளைப் பாதிக்கும் ஒருவராலோ, இதரர்களாலோ செய்யப்படும் செயல்கள் எதுவுமில்லை, இந்த வாழ்வில் ஒருவரது தலைவிதியைப் பாதிக்கும் மனித நடவடிக்கை, வலிமை, வீரம், மனித சகிப்புத்தன்மை அல்லது மனித சக்தி எதுவும் இல்லை. சுவாசம் பெற்றுள்ள எல்லா மனித உயிர்களுக்கும், பிறந்த எல்லாவற்றிற்கும், உயிர் உள்ள எல்லாவற்றிற்கும் சக்தி எதுவும் கிடையாது; தலைவிதியால் அவை வளர்க்கப்படுகின்றன... முதிராத கர்மாவை பழுக்க வைப்பது என்பதே கிடையாது; ஒழுக்கமான நடத்தையால், விரதங்களால், தவங்களால் அல்லது கற்பால் ஏற்கெனவே பழுக்க வைக்கப்பட்ட கர்மாவை காலிசெய்ய முடியாது; வீசியெறி யப்பட்ட நூல் பந்து போலவே, அதன் முழு நீளத்திற்கு விரியும்; எனவே முட்டாளும், புத்திசாலியும் தங்களது போக்கில் சென்று, துயரின் முடிவிற்கு வருவர்"

 கீழ்க்காணும்படி கூறும்போது, புராணா காஸணாபா மேலும் நேரடியாகக் கூறுகிறார்.

"ஒரு செயலைச் செய்பவரோ, செய்ய வைப்பவரோ, வாழ்க்கையை அழிப்பவரோ, திருடரோ, கன்னக்கோல் வைப்பவரோ, கொள்ளையரோ, நெடுஞ்சாலைக் கொள்ளையரோ, கலப்படக்காரரோ, பொய்யுரைப்பவரோ எந்தப் பாவமும் செய்யவில்லை. படுகொலை செய்தோ, முடமாக்கியோ, சித்திரவதை செய்தோ, படுகொலை செய்ய வைத்தோ, முடமாக்க வைத்தோ, சித்திரவதை செய்ய வைத்தோ, கங்கையின் தெற்குக் கரையில் இறங்குபவர், எந்தப் பாவமும் செய்யவில்லை; பாவம் அவரை அணுகுவதில்லை. அதே போன்றே, கங்கையின் வடக்கு கரையில் சென்றால், பிச்சை இட்டாலோ, யாகம் செய்தாலோ, அவருக்கு எந்தப் புண்ணியமும் வராது; புண்ணியம் அவரை அணுகாது'

 

பாகுதா காச்சாயனா ஒருபடி மேலே செல்கிறார்:

 

"எந்த மனிதரும் கொல்வதில்லை; கொல்ல வைப்ப தில்லை; கேட்பதில்லை; கேட்க வைப்பதில்லை; அறிவு தில்லை; அறிய வைப்பதில்லை. ஒரு மனிதன் மற்றவரின் தலையை கூர்மையான சுத்தி மூலம் வெட்டினாலும், அவரது உயிரைப் போக்கவில்லை; கத்தி வெட்டு ஏழு மூலகங்களுக்கு இடையே கடப்பதால் அவ்வாறு இருக்கிறது”

கூட்டாக, இந்த மூன்று தத்துவவாதிகளும் பிற்காலத்திய ஆசீவகத்தோடு தொடர்பு கொண்டுள்ளனர்; நீதிநெறி நடவடிக்கையின் பயனற்ற தன்மை என்ற ஆசீவக கோட்பாட்டின் முக்கியமான அம்சத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

ஒடுக்கு முறையும், மனிதர்கள் மீதான கொடுங்கோன்மையான கட்டுப்பாடும் அதிகமாக நிலவும் ஒரு சமூகத்தில், நீதிநெறியானது என்றும், அதர்மமானது என்றும் நடவடிக்கைகளை வகைப்படுத்துவது அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. பலவிதமானவர்களுக்கும், வலிமையற்றவர்களுக்கும், மாற்ற திறனற்றதாக சூழ்நிலை தோன்றும்; அவர்களது நிலையை ஏற்கும் இந்த நிலைக்கு கொடுங்கோன்மையான அரசரும், நீதியின் தடுமாற்றங்களும் இருப்பது முக்கியமானது. பாவமும், குற்ற உணர்வும் மனித முயற்சி மீது நம்பிக்கை இருப்பவர்களிடம்தான் பதிவுகளை ஏற்படுத்தும்; ஒருவரின் தலை விதிக்கு உருக்கொடுக்க உண்மையான திறன் பெற்றவர்களிடம் தான் அத்தகைய பதிவு இருக்கும். ஒருவரது ஆக்கபூர்வ சூழ்நிலைகளை மாற்றுவதற்கான சாத்தியம் இல்லாத போது, தனிமனிதருக்கு வெளியே உள்ள கட்டுப்பாட்டு சக்திகளிடம் முழுமையாக அடிபணிவதன் மூலம் சமூக யதார்த்தத்தின் துயரத்தை தணிக்கும் வழியாக நியதியின் தப்ப முடியாத சக்தி உருவாக்கப்பட்டது.”

(பௌத்தத்தின் சமூக ததத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சினையும்
அலைகள் வெளியீட்டகம்
-பக்கம் 23-26)