“நியதிக்கொள்கை. தன்னிச்சைக்கு அப்பாற்பட்ட
ஆற்றல்களால் செயல் தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தில் ஆசீவகர் நியதிக்கொள்கையினைப்
பின்பற்றினர். இந்தியாவில் தோன்றிய உலோகாயதம் தவிர எல்லாச் சமயங்களும் ஒருவனின் இன்ப
துன்பங்களை அவன் முற்பிறப்பிலோ இப்பிறப்பிலோ புரிந்த நல்வினை தீவினைகள் முடிவுகட்டுகின்றன
என வினைக் கொள்கையினை (Doctrine of Karma) விளம்புகின்றன. ஆனால், ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி கோசாலர் வினைகள்
மனிதனின் இன்பதுன்பத்தை ஆக்கவில்லை என்றும், ஒத்த ஆற்றலுடைய இருவர் புரியும் ஒரேவினை
ஒருவர்க்கு இன்பமும் இன்னொருவர்க்குத் துன்பமும் தருதலின் வினைகள் பயன் தரவில்லை என்றும்,
நியதிப்படிதான் இவை விளைகின்றன என்றும், உலகநிகழ்ச்சிகள் அனைத்தும் நியதியின் ஆற்றலால்
நடைபெறு கின்றன என்றும் கருதினர்.
எவ்வளவு
முயன்றாலும் உருவாதலைப் போக்கவோ, இலவாதலை ஆக்கவோ இயலாது; எந்தச் செயலும் வினைகளால்
தீர்மானிக்கப்படவில்லை; நியதியால்தான் முடிவுகட்டப்படுகின்றது; ஆதலின் மனித பயனற்றவை.
வலியார், மெலியார் அனைவருமே நியதிக்கும் முயற்சிகள் அதன் வெளிப்பாடாகிய எதேச்சை
(chance), சுபாவங்களுக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள்.
நியதி வெளிப்படுமிடத்து
எதேச்சையாகவும், சுபாவமாகவும் தோன்றும், இக்கொள்கையினைப் பிடக நூலின் பகுதியாகிய சாமஞ்ஞபல
சுத்தத்தில் காணலாம். பிற்காலத்து ஆசீவகர் உருவாக்கிய சுபாவக் கொள்கைக்கு இங்குத் தான்
அடிப்படையினைக் காண்கிறோம். ஆசீவகத்தின் நெறிப்படி எண்பத்துநான்கு இலட்சம் கற்பங்களுக்குரிய
பல்வகைப் பிறப்புக்களும் நன்மை, தீமை ஆகிய பிறவிகளில் பலமுறைகள் சுழன்று, இக்கால அளவின்
முடிவில்தான் விடுதலை பெறும். திரண்டுள்ள நூல்பந்தினை விசிறி எறிந்தால் முடக்கம் நீங்கி
முழுதுமாய் நீண்ட முனைவிடுபடுதல்போல, பேதையர், மேதையர் என்ற பேதம் இன்றி மேற்குறித்த
கால முடிவில் துக்கத்தினின்றும் கட்டாயம் விடுதலை பெற்றேயாதல் வேண்டும். ஆதலின், ஆசீவகம்
எல்லா உயிர்களும் ஒருகால எல்லை வரையில் நன்மை,
தீமைகளைக் கட்டாயம் அனுபவித்துப் பின்னர் வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட காலமுடிவில்
விடுதலை அடையும் என்ற பரந்த நியதிக் கொள்கையினைத் தெளிவுறுத்துகின்றது என்க. நீலகேசியில்
இடம்பெறும் ஆசீவக வாதத்தில் இக்கொள்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.
நியதிக்கொள்கையும், வினைக்கொள்கையும்
வேறு வேறு என்று அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்விரண்டு கொள்கைகளுமே வேதங்களில் காணப்படவில்லை. ஆதலின், இவை ஆரியர் வருகைக்கு
முன்னர் இந்தியாவில் வாழ்ந்த திராவிடப் பெருமக்களுக்கு உரியன என்று மேலைநாட்டு இந்தியச்
சிந்தனையாளர்கள் (Indologists) ஆய்ந்துரைத்துள்ளனர். ஆசீவகரின் நியதிக்கொள்கையின் நிழல்
கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலில் பொலிதல் காணலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. -புறம். 192
இப்பாடலில்,
ஓடும் வெள்ளத்துடன் ஒத்தோடும் மிதவையினை நியதிப்படி செயலாற்றும் உயிர்க்கு உவமையாகச்
சொல்லப்பட்டிருத்தல் காணத்தக்கது. நியதியை,
'முறை' என்ற அழகு தமிழால் சுட்டுதல் காண்க. மனிதச் செயல்கள் நியதியால் முடிவு கட்டப்
படுபவை என்பதும், நியதியை மீறியோ எதிர்த்தோ செல்லுதல் இயலாது என்பதும் இவ்வுவமையால்
கவிச்சுவை பெருகக் கணியன் பூங்குன்றனார் தெளிவுறுத்துதல் அறிக.
நியதிக் கொள்கை ஆரியர் வருகைக்கு முற்பட்டுத் திராவிடர்களால் பின்பற்றப்பட்டதென்று அறிஞர்கள் கருதுவதால் இத்தமிழ்க் கொள்கை அக்காலத்து ஆசீவகர்களால் கைக்கொள்ளப்பட்டது எனக் கருதுவது ஆய்வுநெறிக்கு ஒத்ததாக உள்ளது.”
(இந்தியத் தத்துவக் களஞ்சியம் தொகுதி-1
பக்கம்: 110-112)
No comments:
Post a Comment