Friday, 28 December 2018

சுவாமி விவேகானந்தரின் செயல்முறை வேதாந்தம்

 (Swami vivekananda's Practical Vedanta)

சுவாமி விவேகானந்தரின் செயல்முறை வேதாந்தம்
 (Swami vivekananda's Practical Vedanta)

நாம், புலப்படும் உண்மையைக் காணும் பொழுது புலப்பாடு மட்டுமே நம்மைச் சூழ்ந்துள்ளது, அறுதிவுண்மை மறைந்து விடுகிறது. ஆனால் மாறாத அறுதிவுண்மை காணும் பொழுது இயல்பாகவே அதைத்தொடர்ந்து புலப்பாடு மறைந்துவிடுகிறது.” (பக்கம்-68)

“When we see phenomenon, and phenomenon only, around us, the noumenon has vanished, but when we see the noumenon, the unchangeable, it naturally follows that the phenomenon has vanished.”
(Swami Vivekananda)

சுவாமி விவேகானந்தரிடம் வேதாந்தத்தின் நடைமுறை தன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க லண்டனில் 1896 ஆண்டு நவம்பர் மாதம் (10,12,17,18) நான்கு நாட்களில் அவர் சொற்பொழிவாற்றினார்.  இந்த நான்கும் புகழ் பெற்ற சொற்பொழிவுகளாகும். வேதாந்தத்தைப் பற்றிய அவருடைய கருத்தின் சாரத்தை இதில் கொடுத்துள்ளார்.

செயல்முறை (நடைமுறை) (Practical) என்று கூறப்பட்டுள்ளதால் புதியதாகப் படிப்பவர்களுக்கு வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வத்தைத் தூண்டவே செய்யும். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பேசுவதில் அவர் சிறந்தவர் என்பது அவரது படைப்புகளைப் படித்தவர்கள் அறிந்த ஒன்று. முதல் நாள் சொற்பொழிவின் தொடக்கத்திலேயே, “செயல்முறையில் பயன்படுத்த முடியாத கோட்பாடுகள் வெறும் அறிவு வளர்ச்சிக்கான பயிற்சியாக இருக்குமே தவிர, வேறு வகையான மதிப்பு அதற்கு இருக்காது.” என்று கூறியுள்ளதால், வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் வேதாந்த நோக்கில் நடைமுறை வழிகாட்டுதலாக என்ன சொல்லப்போகிறார் என்றே வாசகர் எதிர்பார்ப்பர்.

“மதத்தின் லட்சயங்கள் நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தழுவுவதாக இருக்க வேண்டும், நமது எண்ணங்களை எல்லாம் ஊடுருவி நிற்க வேண்டும். செயல்முறையில் அவை மிக அதிகமாக இருந்தாக வேண்டும்.” ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலேயே தொடர்ந்து பேசுகிறார்.

இந்த வேதாந்தக் கோட்பாட்டை ஆராய்வோம் என்று அழைத்து அவர் கூறுகிறார், இந்தக் கோட்பாட்டுக் கருத்துக்கள் வனத்தில் ஏகாந்தமாக வாழும் போது தோன்றியவையல்ல, மிகவும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் மன்னர்களே இதனை முதலில் படைத்தனர்.

மரணத்திற்குப் பின்பான நிலையைப் பற்றி அறிந்திடாத ஆருணி என்ற முனிவரும் அவர் மகனும், பாஞ்சால மன்னன் பிரவாஹண ஜைவலியிடம் சென்றனர். அரசனும் அந்த ரகசியங்களை இதுவரை அரசர்கள் மட்டுமே அறிந்துள்ளனர், மதக்குருமார்களுக்கு இவைபற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்.

வேதாந்தக் கருத்துக்கள் காடுகளில் தியானம் செய்ததால் மட்டும் உணரப்பட்டதல்ல, அதிகாரமான வேலைகளைக் கொண்ட அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுபவர்களான மன்னர்களால் வெளிப்படுத்தப்பட்டவை என்பதை உபநிடதங்கள் வாயிலாக அறியலாம். அதனால் வேதாந்தத்தின் செயல்முறை மிகவும் ஏற்புடையதாக இருக்கும். இதனை மேலும் உறுதிப்படுத்த போர்களத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதையைச் சுட்டிக்காட்டுகிறார்.

கீதையைக் கொண்டு வேதாந்தத்தின் செயற்முறையை முதலில் நமக்குச் எடுத்துக்காட்டுகிறார். “தீவிரமான செயல்பாடு, அதன் நடுவில் எல்லையற்ற அமைதி – இதுதான் கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிவீசித் திளைக்கும் செய்தியாகும். இதுவே செயல்புரிவதன் ரகசியம். இதை அடைவதே வேதாந்தத்தின் லட்சியம்.” (பக்கம் 4)

இங்குச் செயலற்ற நிலை என்றால் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிற மந்தநிலை அல்ல என்று எச்சரித்து, வேதாந்தத்தின் லட்சியம் இதுவல்ல என்று வலியுறுத்துகிறார். என்ன நடந்தாலும் சமநிலை குலையாத, கலங்காத, நிரந்தரமான அமைதியுடன் இணைந்து இருப்பதே, வேதாந்தத்தின் லட்சியம்.

செயல்புரிவதற்குகூட ஆசை படக்கூடாது என்றால் எப்படிச் செயல்புரிய முடியும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறார். “ஆசை குறைகின்ற அளவிற்கு நாம் நன்றாகச் செயல்புரிவோம். அமைதி நம்மிடம் மிகுந்தோறும் நமக்கு நன்மை பெருகுகிறது, நம்மால் அதிகம் செயல்புரிய முடிகிறது. உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடுமளவிற்கு நாம் ஆற்றலை இழக்கிறோம், நமது நரம்புகள் தளர்வுறுகின்றன, மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகிறது, மிகக் குறைந்த அளவே வேலை செய்ய முடிகிறது. வேலை செய்யச் செலவிட்டிருக்க வேண்டிய ஆற்றலை, ஒன்றுக்கும் பயன்படாத வெறும் உணர்ச்சிப் பெருக்கில் வீணாக்குகிறோம். மனம் ஒருமுகப்பட்டு, அமைதியாக இருக்கும் போதுதான் அதன் ஆற்றல் முழுவதும் நற்செயல் புரியப் பயன்படுகிறது.”(பக்கம் 4-5)

இதனைப் படித்த வாசகருக்கு சுமாமி விவேகானந்தர் வாழ்க்கைக்கான சரியான வழியைக்காட்டப் போகிறார் என்ற நம்பிக்கை மேலோங்கும். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுகிறராரா என்பதைப் பார்ப்போம். தொடர்ந்து வேதாந்த லட்சியத்தைக் கூறுகிறார்.

“வேதாந்தம் லட்சியத்தை உபதேசிக்கிறது. இந்த லட்சியம் என்பது, நாம் கண்கூடாகக் காண்பதற்கும் செயல்முறை என்று நாம் கூறுவதற்கும் எவ்வளவோ அப்பால் இருக்கிறது.”(பக்-5) இதனைப் படித்தவுடன் வாசகனின் நம்பிக்கை கேள்விக் குறியாகிப் போகிறது.

மனித இயல்புகளில் இரு போக்குகள் காணப்படுகிறது ஒன்று லட்சியத்தை வாழ்க்கையுடன் சமரசப்படுத்திக் கொள்வது, மற்றொன்று வாழ்க்கையை லட்சியத்தை நோக்கி உயர்த்திக் கொள்வது. இதில் இரண்டாவதே வேதாந்தத்தின் லட்சியமாக  அவர் கூறுகிறார்.

இதற்குக் காரணமாக அவர் கூறுகிறார், “எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியாத ஒன்றை வேதாந்தம் லட்சியமாகக் கூறுவதில்லை. ஒரு லட்சியமாக இருப்பதற்கு ஏற்றவாறு அது விளங்கவும் செய்கிறது. சுருங்கச் சொன்னால் நீ தெய்வீகமானவன், “நீயே அது” என்பதே வேதாந்தத்தின் லட்சியம். இதுவே வேதாந்தத்தின் சாரம்.”(பக்-6-7)

“நீயே அது” (தத்துவமசி) என்கிற இந்த உபநிடத வாக்கியத்தையே வேதாந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் துன்பமயமான வாழ்க்கைக்கு எந்த வகையில் வேதாந்தம் வழிகாட்டுகிறது என்பதைப் பார்ப்போம்.

“வேதாந்தம் உணர்த்துவது மனித ஆன்மா தூய்மையானது, எல்லாம் அறிந்தது என்பதையே. ஆன்மா பிறப்பதாகவும் இறப்பதாகவும் நாம் கொண்டிருக்கும் மூடக் கருத்துக்கள் எல்லாம் பொருளற்ற பிதற்றல்கள். ஆன்மா பிறந்ததும் இல்லை, இறப்பதும் இல்லை. நாம் சாகப் போவதாகப் பயப்படுவது எல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள். என்னால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்று கூறுவதும்கூடப் பொருளற்றவைகளே. நம்மால் எதையும் செய்ய முடியும்.” (பக்-7)

ஏற்றத்தாழ்வான, துன்பமயமான உலகில் உடலால் அடைய முடியாததை ஆத்மாவால் அடைய முடியும் என்று கூறுகிறார். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன். நம்பிக்கையோடு வேதாந்த லட்சியத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம். ஆண், பெண், சிறுவர்கள், இனம், பால்வேற்றுமை போன்ற எதுவும் தடையாக இருக்க முடியாது. ஏனெனில் இது ஏற்கெனவே அறியப்பட்டது, ஏற்கெனவே இருப்பது என்று வேதாந்தம் கூறுகிறது. அதாவது புதியதாக ஒன்றை அடையப் போவதில்லை ஏற்கெனவே இருக்கும் நிலையை உணர்தலையே குறிப்பிடுகிறார்.

ஆக, மனிதர்களாகிய நாம் எதையும் இழக்கவில்லை, ஏற்கெனவே நம்மிடம் இருப்பது தான். இதனை மேலும் விளக்குகிறார்.

“இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஏற்கனவே நம்முடையவைதாம். நமது கண்களை நாமே கைகளால் மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம். நம்மைச் சுற்றி இருள் என்பது இல்லவே இல்லை என்பதை உணருங்கள். கைகளை அகற்றுங்கள், எப்போதும் நிலவிக் கொண்டிருக்கின்ற அந்த ஒளியைக் காணலாம். இருள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை, பலவீனம் என்பது இருந்ததில்லை. “நாம் பலவீனர்கள்” என்று அழுகின்ற நாம் முட்டாள்களே. “நாம் தூய்மையற்றவர்கள்” என்று கதறுகின்ற நாம் முட்டாள்களே. எனவே லட்சியம் செயல்முறைக்கு ஏற்றது மட்டுமல்ல, அது எப்போதும் அப்படியேதான் இருந்து வந்திருக்கிறது என்பதையே வேதாந்தம் வலியுறுத்துகிறது.”(பக்-8)

      இது சாதாரண வாழ்க்கையைப் பற்றிப் பேசவில்லை என்பதைச் சாதாரண வாசகனும் எளிதில் அறிந்து கொள்வான். அப்படி என்றால் எதைப் பற்றி அது பேசுகிறது என்பதைத் தொடர்ந்து கவனிப்போம்.

“இந்த லட்சியம், இந்த உண்மை – இதுவே நமது இயல்பு, மற்றவை அனைத்தும் பொய், உண்மையற்றது. “நான் அழியக்கூடிய சாதாரண மனிதன்” என்று கூறும்போது உண்மைக்கு மாறுபட்ட ஒன்றை நீங்கள் கூறுகிறீர்கள். நீங்களே உங்களைப் பொய்யர்களாக்கிக் கொள்கிறீர்கள். ஏதோகொடிய, வலுவற்ற, இழிவான ஒன்றினுள் உங்களை நீங்களே சுயமயக்கத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறீர்கள்” (பக்-8)

      மனிதன் அழியக்கூடியவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அந்த அழிவுவரையே தனி மனிதனின் வாழ்க்கைப் போராட்டம் நடைபெறுகிறது. இங்கே சுவாமி விவேகானந்தர் இந்த அழிவுவரையான உண்மையான வாழ்க்கையைப் பற்றிப் பேசாது இதற்கு மாறுபட்ட அழியா உண்மையைப் பற்றிப் பேசுகிறார் என்பதை வாசகன் அறியத் தொடங்குகிறான்.

      இதனை நேரடியாகக் கூறுகிறார்.

“நமது தற்போதைய வாழ்க்கையை, சுயமயக்கத்திற்கு உள்ளான இந்த வாழ்க்கையை, நாம் தவறுதலாகக் கொண்டுள்ள வாழ்க்கையை லட்சியத்துடன் சமரசப்படுத்தும் முயற்சி வேதாந்தத்தில் இல்லை. இந்தப் பொய்யான வாழ்க்கை ஒழிய வேண்டும், என்றும் நிலையாக இருந்துவரும் உண்மையான வாழ்க்கை வெளிவர வேண்டும், ஒளிவிட வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது.”(பக்-9)

இங்கே சுவாமி விவேகானந்தர் இகவுலக வாழ்க்கையைப் பொய்யானது என்று கூறி, அதனை ஒழிக்க வேண்டும் என்கிறார், என்றும் நிலையாக இருக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். அந்த ஆன்மீக வாழ்க்கையில் உள்ளதை அடுத்துக் கூறுகிறார், “எல்லையற்ற தூய்மை, சுதந்திரம், அன்பு, ஆற்றல் அனைத்தும் ஏற்கனவே நமக்குரியவை.”

இந்தச் சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தினால், இருநூறு லட்சியங்களை நிறைவேற்ற முடியும், ஆனால் லட்சியத்தை நடைமுறை வாழ்க்கையின் மட்டத்திற்குக் கொண்டுவந்து அதன் மதிப்பைக் குறைத்துவிடக் கூடாது என்கிறார்.

இந்த வேதாந்தக் கண்ணோட்டம் இகலோக வாழ்க்கையைப் பற்றியதல்ல, பிறந்த மனிதன் இறந்து போகிற இந்த உலக வாழ்க்கைப் பற்றியதல்ல, ஆன்மீக உலக வாழ்க்கையைப் பற்றியது. அந்த ஆன்மீக வாழ்க்கை என்றும் நிரந்தரமானது, அதில் அனைத்தும் ஒரே இருப்பைக் கொண்டுள்ளது, எல்லாமே ஒன்று தான் வேறுபாடு எல்லாம் அளவில் தான், தன்மையில் அல்ல.

அந்த ஆன்மீக வாழ்க்கையில் இருந்தே இந்த இகலோக வாழ்க்கையை அணுகுகிறார் சுவாமி விவேகானந்தர்.

“நாம் மற்றவர்களை வெறுக்கக் கூடாது. நாம் எல்லோரும் ஒரே லட்சியத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம். பலவீனத்திற்கும் பலத்திற்கும் உள்ள வேறுபாடு, அளவில் மட்டுமே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் உள்ள வேறுபாடு, அளவில் மட்டுமே, சொர்கத்திற்கும் நரகத்திற்கும் உள்ள வேறுபாடு அளவில் மட்டுமே, வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள வேறுபாடும் அளவில் மட்டுமே. ஆக, இந்த உலகத்திலுள்ள வேறுபாடுகள் எல்லாம் அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. அடிப்படையில் எல்லாம் ஒன்றே அல்லவா! எல்லாம் ஒன்றே. எண்ணமாக, வாழ்க்கையாக உடலாக, ஆன்மாவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது அதுவே.

வேறுபாடுகள் எல்லாம் அளவில் மட்டுமே. எனவே நமது அளவிற்கு வளராதவர்களை வெறுக்க நமக்கு உரிமையில்லை. யாரையும் வெறுக்காதீர்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, நம் சகோதரர்களாகிய அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் தங்கள் வழியிலேயே முன்னேறிப் போகட்டும்.”(பக்.14-15)

      இங்கே உதவுங்கள் என்று கூறப்படுவது ஆன்மீக உதவியேயாகும். உதவவில்லையாயின், அவர்கள் தங்கள் வழியில் முன்னேறி போக வாழ்த்துங்கள் என்று கூறியுள்ளார். இது தான் அத்வைத வேதாந்தம் இகலோக வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்குக் கூறும் வழிகாட்டுதலாகும்.

இகலோக வாழ்க்கைப் பிரச்சினைக்கு வாழ்த்தி, அவைகளைத் தொடர்ந்து செயல்படுவதற்கு வழிவிடுவதே வேதாந்தத்தின் வழிமுறையாகும். ஆன்ம ஒருமையை வலியுறுத்தி, இகலோக வேறுபாடுகளை அனுமதிப்பதே இந்த ஒருமைக் கண்ணோட்டத்தின் செயல்முறையாகும். இது, இந்தச் சுரண்டல் சமூகத்தில் சுரண்டல்வாதிகளுக்குச் சார்பாக இருக்கிறது, சுரண்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருக்கிறது. பொதீக உலகிற்கு முதன்மை தருவது என்பது கடவுளை மனித நிலைக்கு இறக்குவதாகும், அதுவே அழிவாகும் என்கிறார்.

இந்த உலகில் காணப்படும் பிரச்சினைகளுக்கு சுவாமி விவேகானந்தர் தீர்வுகாட்டுவார் என்று இனிமேல் வாசகன் எதிர்பார்க்க முடியாது. அவரது வேதாந்த அத்வைதம் சுரண்டும் வர்க்கத்தை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்.

      நாள் முழுதும் உழைத்தும் மக்கள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், அந்தத் துன்பத்தையே அவர்கள் நினைத்திருந்தால் பலவீனப்பட்டுப் போவார்கள், பலம் பெற வேண்டுமானால், பலத்தையே நினைக்க வேண்டும்.

“நமது பலவீனங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். பலவீனங்களை எண்ணிக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றுமில்லை, பலத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் பலவீனத்தை எண்ணிக் கொண்டிருப்பது பலத்தை வளர்க்கும் வழியல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை நினைப்பதே தவிர, பலவீனத்தை நினைப்பதல்ல.

ஏற்கெனவே தங்கள் உள்ளிருக்கும் ஆற்றலை மனிதர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். மனிதர்களைப் “பாவிகள்” என்று கூறுவதை விட்டுவிட்டு, அதற்கு மறுபக்கத்தை எடுத்துக் கொள்கிறது வேதாந்தம், “நீ தூய்மையானன், பூரணமானவன், நீ நினைக்கும் பாவம் என்பது உனக்கு உரியது அல்ல” என்று கூறுகிறது அது. ஆன்ம வெளிப்பாட்டின் மிகத் தாழ்ந்த நிலைகளே பாவங்கள். நீங்கள் ஆன்மாவின் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துங்கள். அதுவே நினைவில் கொள்ளப்பட வேண்டுவது. நாம் அனைவரும் அதைச் செய்ய முடியும்.”(பக்-16)

      அத்வைத ஒருமை அனைவரிடத்தும் அன்பை போதிக்கிறது. அந்த அன்பை தன்னிடத்திலும், விலங்கிடத்திலும், அனைவரிடத்திலும் செலுத்த வேண்டும். (பக்-18) சுரண்டலுக்கு ஆளானவர்களிடையே மட்டும் அன்பு செலுத்தினால் போதாது, சுரண்டுபவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று அத்வைதம் எதிர்பார்க்கிறது. ஏன் என்றால் அனைவரிடத்திலும் இருக்கும் ஆன்மா ஒன்றே தானே.

“முதலில் அத்வைதத்தின் நிலையைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வோம். நாம் பலவாகத் தோன்றுகிறோம், ஆனால் நமது உண்மை ஒன்றே. அந்த ஒன்றிலிருந்து வேறுபட்டவர்களாக நம்மை நாம் எவ்வளவு குறைவாக நினைக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. அந்த முழுப் பொருளில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வளவு அதிகமாக நினைக்கிறோமோ, அவ்வளவுக்கு நமது துயரமும் அதிகமாகும்”(பக்-70)

      வேதாந்தத்தை அறிந்து கொள்ள இந்த ஆத்மாவையும் அதன் ஒருமையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

“முதலில் இந்த ஆன்மாவைப் பற்றிக் கேட்க வேண்டும். நீங்கள் அந்த ஆன்மாவே என்பதை அல்லும் பகலும் கேட்டு வாருங்கள். அந்த எண்ணம் உங்கள் நாடிநரம்புகளில் புகும்வரை, உங்கள் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலந்து துடிக்கும்வரை, உங்கள் தசையிலும் எலும்பிலும் ஊறும்வரை, அதை இரவுபகலாக உங்களுக்குள்ளேயே கூறுங்கள், “நான் பிறப்பற்றவன, இறப்பற்றவன், பேரின்பமயமானவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்றும் மகத்தான் ஆன்மா” என்ற இந்த லட்சியத்தால் உங்கள் உடம்பு நிறைந்திருக்கட்டும். இரவுபகலாக அதையே எண்ணுங்கள், அது உங்கள் வாழ்க்கையுடன் கலந்து ஒன்றும்வரை அதையே சிந்தியுங்கள், அதையே தியானியுங்கள், அதிலிருந்து செயலாற்றல் வெளிப்படும்”(பக்-19)

      சுவாமி விவேகானந்தரின் அத்வைத வேதாந்தம், துவைத வேதாந்தத்தை மறுக்கிறது. இந்த மறுப்பு என்பது முற்ற மறுதலிப்பாக இல்லாமல், அத்வைத வேதாந்தத்திற்கு வருகின்ற படிமுறையாகக் குறுக்குகிறது. அதாவது நவீன சீர்திருத்தங்களைப் போல் எதிர்மறையாக அணுகாமல் நேர்மறையாக அணுகப்படுகிறது.(37)

      துவைதத்திற்கும் அத்வைதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்போம்.
     
உலகைப் படைத்து காக்கும் கடவுள், இந்த உலகிற்கு அப்பால் இருக்கிறார். அந்தக் கடவுளான பரமாத்மாவும் (பிரம்மாவும்), மனிதனிடம் உள்ள ஆத்மாவும் வேறுவேறு என்பது துவைதம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்று இரண்டாகப் பிரித்துப் பார்ப்பார்ப்பது துவைதம். துவைதம் என்றால் இரண்டு. இந்தப் படைக்கும் கடவுள் சகுண பிரம்மமாகும். அதாவது குணங்களுடன் கூடிய பிரம்மம். பிரம்மத்தை இகவுலகுக்குப் புறத்தில் வைப்பதனால் இந்தத் தத்துவப் பிரிவுக்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

பரமாத்மாதான் ஜீவாத்மா, ஜீவாத்மாவிற்குத் தனித்த இருப்பில்லை. பாரமாத்மாவின் மாயைத் தோற்றமே ஜீவாத்மா. இவ்விரண்டையும் தனித்தனியாகக் காணாது ஒன்றாக இணைத்துக் காட்டுகிறது. அத்வைதம் என்றால் இரண்டல்லாதது.  “நீயே அது” (தத்துவமசி) - நீயே பரமாத்மா என்கிறது. மாறாத பிரம்மத்தை அத்வைதம் நிர்குண பிரம்மம் என்கிறது. அதாவது குணங்களற்ற பிரம்மம். அகத்தில் பிரம்மத்தை காண்பதனால் இந்தத் தத்துவப் பிரிவுக்கு அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

கடவுளிடத்தில் மனிதனின் வேண்டுதல் என்கிற துவைத நிலையை, அத்வைத வேதாந்தம் கேள்விக்குள்ளாக்குகிறது.

“உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது, கற்பனை தெய்வங்களை நோக்கிப் பிரார்த்திப்பது என்று உங்கள் குறுகிய எண்ணங்களுள் பலவும் மூடநம்பிக்கைகளே என்பது உங்கள் உள்ளத்திற்கே தெரியும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியது என்று ஒரு சம்பவத்தை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம்.”(பக்-20)

      துவைதத்தின் கடவுள் மீதானப் பிரார்த்தனை, அத்வைதப் பார்வையில் மூடநம்பிக்கையே. படைக்கும் கடவுள் இயற்கைக்குத் தொடர்பில்லாமல் வெளியில் (புறத்தில்) இருக்கிறார் என்பது விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்து. இக்குறைபாடு படைக்கும் சகுணக் கடவுளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து மதங்களுக்கும் உரியது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

 “அந்த (சகுணக்) கடவுள் இயற்கைக்கு வெளியே இருப்பவர், இயற்கையுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர். இயற்கை அந்தக் கடவுளின் உத்தரவால் சூன்யத்திலிருந்து உண்டாக்கப்பட்டது என்று சொன்னால் அது விஞ்ஞானரீதியான கொள்கையாகாது. இதுவே சகுணக் கடவுள் கருத்து சார்ந்த மதங்களின் காலங்காலமாக உள்ள குறைபாடாக இருந்து வருகிறது.
..
சகுணக் கடவுள் கருத்து, படைப்புக் கருத்துகள் – இவையெல்லாம் இனியும் செல்லுபடியாகாது.”(பக்-64 & 66)

      நிலையற்ற இந்த உலகை துவைதிகள் ஏற்றுக் கொள்கின்றனர், அத்வைதிகள் உலகை மாயைத் தோற்றம் என்று மறுதலிக்கின்றனர்.

யதார்த்தவாதிகள் (Realists) உள்பொருளையே ஏற்றுக் கொள்கிறார்கள். லட்சியவாதிகள் (Idealists) அறுதிவுண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். அத்வைத லட்சியவாதி உலகை மாயை என்று கூறி மாறுகிற அனைத்தையும் மறுதலிக்கிறார்.

“மாற்றங்கள் பற்றிய கருத்துக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு நின்று உலகைப் பார்க்கவல்ல ஆற்றல் பெற்ற லட்சியவாதிக்கு, அதாவது உண்மையான லட்சியவாதிக்கு மாறுபடும் இந்த உலகம் மறைந்தே விடுகிறது. அவனுக்கே உலகம் மாயை, மாற்றம் என்பதே இல்லை என்று சொல்ல உரிமை உண்டு. ஆனால் யதார்த்தவாதிகள் மாறுபடுபவற்றையே பார்க்கிறார்கள். அவர்களுக்கு, மாறுபாடற்றது மறைந்துவிடுகிறது. அவர்களுக்கு உலகம் உண்மை என்று கூறத்தான் உரிமை உண்டு” (பக்-68)

யதார்த்தவாதிக்கு மாறுபாடற்ற பிரம்மம் மறைந்துவிடுகிறது, உண்மையான உலகமே அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறது.

சுவாமி விவேகானந்தரின் இந்தச் செயற்முறை வேதாந்தத்தைப் படிக்கும் வாசகன், தான் லட்சியவாதத்தை ஏற்றுக் கொண்டு உலகப் பிரச்சினையில் இருந்து ஓடி ஒளியும் அத்வைதியாக வேண்டுமா? அப்பாலைத் தத்துவத்தை மறுக்கும் யதார்த்தவாதியாக இருந்து உலகப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் உள்ள தத்துவத்தைத் தேட வேண்டுமா? என்பதை இந்த நூல் படித்து முடிக்கும் போது முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு வாசகர் வந்தாக வேண்டியுள்ளது.

      அத்வைத தத்துவத்தைத் தொடர்வோம்.

      சுவாமி விவேகானந்தர் பொருளாயத உண்மையை ஏற்பது போல் கூறிவிட்டு, தனிப் பொருட்களின் மாறும் தன்மையை மறுதலித்து, உலகில் காணப்படும் பன்மைகளைப் பரம்பொருளின் மாயைத் தோற்றம் என்கிறார். அன்பை ஒருமைக்கும், வெறுப்பைப் பன்மைக்கும் காரணமாக்குகிறார். உலகில் காணப்படும் பன்மையை, ஒருமைக் கண்ணோட்டத்தில் அளவு மாறுபாடாக மட்டுமே காண்கிறார்.(பக்.22-23) பன்மையைச் செயற்கையாக இணைத்து, பொருளாய ஒருமைக்கு மாறாக, பிரம்ம ஒருமையை முன்வைத்துச் சமூகத் துயரங்களின் உண்மைத் தன்மையை மறைக்கிறார்.

துன்ப துயரங்களுக்குக் காரணத்தைத் தேடுகிற சமூக “அறிவை” சுவாமி விவேகானந்தர் குருடு என்று கூறி மறுத்து, உணர்ச்சியை (இதயத்தை) முதன்மைப்படுத்துகிறார். ஆதிசங்கரரை துணைக்கழைத்து ஆன்ம முக்திக்கு வழிகாட்டுகிறார்.

“இதயம்தான் மிக முக்கியமானது. ஏனெனில் இதயத்தால் தான் இறைவனைப் பார்க்கிறோம். அறிவால் அல்ல. அறிவு என்பது ஒரு துப்புரவுப் பணியாளன் மட்டுமே. அது நமது பாதையைச் சுத்தமாக்கித் தருகிறது. அது போலீசைப் போன்ற ஒரு இரண்டாம்நிலைப் பணியாளன். சமூகம் செயல்படுவதற்குப் போலீஸ் இருந்தேயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலகங்களைத் தடுப்பதும் தவறுகளை விலக்குவதும்தான் போலீசின் வேலை. அறிவு அதைத்தான் செய்கிறது.

அறிவுநூல்களைப் படிக்கிறோம், முடித்தபின்னரோ “இறையருளால் தொல்லை ஒழிந்தது” என்று எண்ணுகிறோம். எனெனில் அறிவு என்பது குருடு, அதனால் இயங்க முடியாது, அதற்குக் கைகளோ கால்களோ இல்லை. இதயமே, உணர்ச்சியே செயல்படுகிறது, இது மின்சக்தியைவிடப் பிற எந்தச் சக்திகளையும்விட எல்லையற்ற மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது. நீ இதயம் உள்ளவனா?, உணர்ச்சி நிறைந்தவனா?- இதுதான் கேள்வி. அப்படியானால் நீ கடவுளைக் காண்பாய். இப்போது உங்களிடமுள்ள  உணர்ச்சியே ஆழமாகி, தெய்வீகமாகி, மிகவுயர்ந்த நிலைக்குச் சென்று இறுதியில் எல்லாவற்றையும் உணர்கின்ற, எல்லாவற்றிலும் உள்ள ஒருமையை உணர்கின்ற, தன்னிலும் பிறரிலும் கடவுளை உணர்கின்ற நிலையை அடைகிறது. புத்தியால் அது முடியாது. “விதவிதமாகப் பேசுவது, நூல்களை விதவிதமாக விளக்குவது- இவையெல்லாம் பண்டிதர்களின் இன்பத்திற்கே உதவும். ஆன்ம முக்திக்கு உதவாது”(ஆதிசங்கரர்-வி.சூ-58)”(பக்-26)

      இங்கே “அறிவை” குருடு என்று கூறிய சுவாமி விவேகானந்தர், மூன்றாவது சொற்பொழிவில் தடுமாறுகிறார். அறிவை முற்றப் புறக்கணிக்க முடியாமல், தேவைப்படும் போது சமூக அறிவை நாடுகிறார். “அவர்கள் (மதக்குருமார்கள்) கூறுவதை என்னால் ஏற்க முடியாது, அறிவு வழியில்தான் நான் போவேன் என்றே கூறுவேன். ஏனெனில் அறிவு பலவீனமானதாக இருந்தாலும், அதன்மூலம் உண்மையை அடையும் வாய்ப்பு என்றாவது கிடைக்கலாம். மற்ற வழிகளில் அந்த நம்பிக்கைக்கூட இல்லை. எனவே நாம் அறிவுவழியைப் பின்பற்ற வேண்டும்.”(பக்-72-73)

      யதார்த்தவாதி, அறிவு மீது முழு நம்பிக்கை வைத்துச் செயல்படுவானாகில் அவனுக்குச் சமூகப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான வழிகிடைக்கும். இதனை இறுதியில் பார்க்கலாம்.

      முதல் சொற்பொழிவின் இறுதியில், “நீங்கள் கடவுள் அல்ல என்றால், வேறு எந்தக் கடவுளும் இருந்ததுமில்லை, இருக்கப் போவதும் இல்லை. இதுவே பின்பற்ற வேண்டிய லட்சியம் என்று வேதாந்தம் கூறுகிறது. … ஆன்மாவால் முடியாத எதாவது உண்டென்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.”(பக்-28)

      இரண்டாம் சொற்பொழிவில் ஆன்மாவை முன்வைத்து அத்வைத வேதாந்தத்தை எவ்வாறு விளக்குகிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

      நன்மை, தீமை போன்ற இருமைகள் என்பது உண்மையில் இல்லை என்றும், இருப்பது பிரம்மம் மட்டுமே. இந்த விளக்கத்தின் மூலம் சுவாமி விவேகானந்தர், சமூகத்தில் காணப்படும் இருமைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறார். சுதந்திரமற்ற, துன்பமயமான இந்த உலகை மறுதலித்து, அனைவரையும் ஆன்மநிலையில் சுதந்திரப்படுத்தி முக்திக்கு வழிகாட்டுகிறது.

“உண்மையை அனுபவிப்பது என்பது எதுவென உபநிடதங்கள் கூறுகின்றன- நன்மை, தீமை இவற்றை ஒத்துக் கொள்ளாமல் இருப்பது……, …அனைத்திலும் இறைவனே, பிரம்மமே நிறைந்திருப்பதை ஆன்மா அறிந்துவிட்டால் அது சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ வேறெங்குமோ போவதைப் பற்றிக் கவலைப்படாது, இந்தப் பூமியிலோ சொர்க்கத்திலோ மீண்டும் பிறப்பதைப் பற்றியும் அது கவலைப்படாது. ஆன்மாவைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் பொருளற்றவை. ஏனெனில் எல்லா இடமும் ஒன்றுதான்…….
நன்மை தீமை, வாழ்வு, சாவு இவை ஒன்றுமே இல்லை. இருப்பது எல்லையற்ற ஒன்றான பிரம்மமே. இந்த நிலையை அடைபவன் அப்போதே சுதந்திரன் ஆகிறான் என்று வேதாந்தம் கூறுகிறது”(44)

இந்த ஆன்மநிலை சுதந்திரத்தையே தத்துவமசி என்கிற கோட்பாடு வலியுறுத்துகிறது. “தத்துவமசி” என்றால் “நீயே அது” அதாவது பரமாத்மாவே (பிரம்மமே)  ஆத்மா (ஜீவன்). இரண்டும் ஒன்றே, பிரிந்ததாகக் கருதுவது மாயையின் காரணமாகும், முழுமை, எப்போதும் பிரியாது அதனால் தான் அதற்கு முழுமை என்று பெயர். அனைவரிடமும் உள்ள ஆன்மா ஒன்றே என்ற புரிதல் ஏற்பட்டவுடன் சமூகத் தளைகளில் இருந்து விடுபட்டு, ஆன்ம நிலையில் சுதந்திரமானவர்களாக ஆகிவிடுகின்றனர்.

“இருப்பவை எல்லாம் நீயே, அற்புதமான, வாழும் கடவுளாகிய நீயே இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே உண்மைப் பொருள்… . ஒவ்வொரு மனித உடல் என்னும் கோயிலிலும் உள்ள கடவுளை நான் உணர்கின்ற கணமே, ஒவ்வொரு மனிதனிலும் கடவுளைக் கண்டு அவன்முன் நான் வணங்கி நிற்கின்ற அந்தக் கணமே, நான் தளையில் இருந்து விடுபடுகிறேன். என்னைக் கட்டியுள்ள பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. நான் சுதந்திரனாக ஆகிறேன்.”(பக்-47-48)

      இதற்கு ஆதாரமாக சுவாமி விவேகானந்தர், பிருஹதாரண்யம் மற்றும் சாந்தோக்கியம் ஆகிய உபநிடதங்களில் உள்ளதை சுட்டிக்காட்டுகிறார். ““ஒருவன் மற்றொருவனைப் பார்ப்பது, ஒருவன் மற்றொருவனுக்குத் துன்பம் செய்வது இவை அனைத்தும் மாயை, வேறு ஒருவர் இருப்பதைக் காணாமல், வேறு ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் எல்லாமே ஆன்மாவாகிவிடும்போது யார் யாரைக் காண்பது? யாரை யார் உணர்வது” எல்லாம் அவரே, அதே வேளையில் எல்லாம் நானே. ஆன்மா புனிதம் அடைந்துவிட்டது.”(பக்-50-51)

      ஆன்ம நிலையில் சுதந்திரம் பெற்றவன், தனது வறுமை உண்மையல்ல என்பதையும், ஆன்ம சுதந்திரம் பெறாத கட்டுண்டவன் இயற்கை சக்திகளுக்கு முன் அலைக்கழிககப்பட்டு, இயற்கை முன் அடிமையாக இருக்கிறான். வறுமைக்கு விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கையில் காத்திருந்து வாழ்க்கையை வீணடிப்பதாகக் கட்டுண்டவனைப் பார்த்து சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

“ஒருவன் சுதந்திரன், மற்றவன் கட்டுண்டவன். தன் வறுமை உண்மையல்ல, தான் நாடகத்திற்காகத் தரித்துள்ள வேடம் அது என்பதை நடிகன் உணர்ந்திருக்கிறான்.  உண்மைப் பிச்சைக்காரனோ தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிச்சையெடுப்பதே தனது நிலை, தான் பிச்சையெடுத்தே தீர வேண்டும் என்று எண்ணுகிறான். இதுதான் நியதி.

நமது உண்மை இயல்பை அறியாதவரை, இயற்கை சக்திகள் ஒவ்வொன்றாலும் முன்னும்பின்னும் அலைக்கழிக்கப்பட்டு இயற்கையிலுள்ள எல்லாவற்றிற்கும் அடிமைகளாக இருக்கும் பிச்சைக்காரர்களே நாம். உதவி வேண்டி நாம் உலகம் முழுவதும் கதறுகிறோம், உதவி கிடைப்பதில்லை. கற்பனைக் கடவுள்களை நோக்கி அழுகிறோம். உதவிகிட்டுவதில்லை. ஆனாலும் உதவி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். இப்படிக் கதறி அழுவதும் நம்பிக்காத்திருப்பதுமாக ஒரு வாழ்க்கை முழுவதும் வீணாகிறது. இதே நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.”(பக்-53)

      இரண்டாம் சொற்பொழிவின் இறுதியில், உண்மை நமக்குள்ளே தான் இருக்கிறது, அதனை வெளிப்படுத்துவதே, செய்ய வேண்டியது என்று முடிக்கிறார்.

      மூன்றாம் நான்காம் சொற்பொழிவுகளில் இதுவரை கூறியதே கூறப்படுகிறது, சற்று கூடுதல் விளக்கத்தையும் துல்லிய தன்மையுடனும் காணப்படுகிறது. பிரம்மமே பலவாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அனைத்தும் ஒன்றே, அந்த ஒன்றில் இருந்து வேறுபட்டவர்களாக நம்மை நாம் எவ்வளவு குறைவாக நினைக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. அந்த முழுப் பொருளில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வளவு அதிகமாக நினைக்கிறோமோ அவ்வளவுக்கு நமது துயரமும் அதிகமாகும் என்கிறார்.

இந்தச் சொற்பொழிவில் சுவாமி விவேகானந்தர், பொருளாயத ஒருமையையும் பிரம்ம ஒருமையையும் இணைத்து முன்பு விளக்கியதைப் போலவே விளக்குகிறார். பிரபஞ்சத்தை முழுமையானது அதில் மாறுபாடு, இயக்கம் என்பதெல்லாம சார்புடையவை. இயக்கத்தை அறிய இரண்டு பொருட்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்பிரபஞ்சம் முழுமையான தனிப்பொருளாக உள்ளது என்கிறார். (பக்கம்-76-77)   ஆனால் பிரபஞ்சம் விரிவுவது சுருங்குவது பற்றியே விஞ்ஞானம் பேசுகிறது. சுவாமி விவேகானந்தர் கூறுகின்ற மாற்றத்திற்கு உள்ளாகாத, பிரபஞ்ச முழுமை என்பது விஞ்ஞான அடிப்படையில் தவறானதாகும்.

      நான்காம் சொற்பொழிவில், அத்வைத வேதாந்தக் கருத்தை துல்லிய தன்மையோடு எடுத்துரைக்கிறார். அவ்வாறு எடுத்துரைக்கும் போது தீமைகளுக்குக் தனிமனிதனையே காரணமாக்கப்படுகிறது.

நல்வினை, தீவினை இரண்டிற்கும் பிறர் காரணமல்ல என்று கூறி, துன்பத்தை அனுபவிக்கும் தனிநபர்களையே காரணமாக்கப்படுகிறது. அந்தத் தனிநபர் பிரம்மத்தில் இருந்து பிரிந்ததாகக் கருத்தும் பன்மையின் மயக்கமே தீமைகளுக்குக் காரணமாக அத்வைதம் கருதுகிறது.

“எல்லாத் தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே என்கிறான் வேதாந்தி. அன்பு, எல்லைக்கு உட்பட்டு சிறிய பாதைகள் மூலம் செல்லும்போது தீமையாகத் தெரிகிறது. இறுதியில் பாதையின் மறுகோடியை எட்டும்போது அதுவே கடவுளாகத் திகழ்கிறது.

தீமைபோல் தோன்றும் அனைத்தின் காரணமும் நம்மிடமே உள்ளது என்கிறது வேதாந்தம். இயற்கையைக் கடந்த யாரையும் இதற்காகக் குற்றம் சாட்டாதீர்கள். நம்பிக்கை அற்றவர்களாக மனம் ஒடிந்து போகாதீர்கள். யாரைவது வந்து கைகொடுக்காவிட்டால் தப்பிப்போக முடியாத இடத்தில் சிறைப்பட்டுள்ளோம் என்று நினைத்து மனம் தளரவும் வேண்டாம்.
இந்தக் கர்ம வலையை நாமே நம்மைச் சுற்றிப் பின்னி இருக்கிறோம். அறியாமை (அவித்தை) காரணமாகப் பந்தப்பட்டவர்களைப் போல் நம்மைக் கருதிக் கொண்டு உதவிக்காகக் கதறி அழுகிறோம். ஆனால் உதவி வெளியில் இருந்து வருவதில்லை, நமக்கு உள்ளிருந்தே வருகிறது.
கடந்த நல்வினை, தீவினை இரண்டின் விளைவே நான்.”(பக்-101-102)

      ஆகச் சமூகம் என்பதை அத்வைத வேதாந்தம் மறுத்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, துன்பம் அனைத்திற்கும் அந்தத் தனிநபர்களே காரணம் என்று கூறியுள்ளது.

உலகம் துன்மயமானதற்குப் பன்மைத் தன்மையே காரணம் என்று கூறி, சமூகப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு வழிகாட்ட முடியாத அத்வைதம், ஆன்மா மட்டுமே நிலையானது, பன்மைத் தன்மை மாயையானது. “நீயே அது” என்ற உண்மையை உணர்ந்து ஆன்ம விடுதலையாக முக்திக்கு வழிகாட்டி, சமூகப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறது.

      ஆக, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வை அத்வைத வேதாந்தத்தில் எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்தபின், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள் அதற்கான தத்துவத்தைத் தேட வேண்டும்.

      மார்க்சியம் அப்பாலைத் தத்துவத்தை மறுப்பதால், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வை உலகத்திற்கு அப்பால் தேடுவதில்லை. பிரச்சினை எங்கே தோன்றியதோ அங்கேயே தீர்வையும் கண்டது. சமூகத்தில் இருப்பவன் இல்லாதவன், பணக்காரன் ஏழை என்ற இந்த வேறுபாடு இல்லாத நிலை எப்போவாது இந்தப் பூமியில் நிலவியதா? நிலவியது என்கிறது மார்க்சியம்.

      மனிதயினம் பழங்குடிகளாக வாழ்ந்த போது அவ்வாறு தான் இருந்தது. அந்த மனிதக் கூட்டத்தில் வேறுபாடுள்ளவர்கள் இல்லை, அனைவரும் ஒத்த தன்மையுடையவர்களாகவே இருந்தனர். அப்போது அந்தச் சமூகம் உணவைச் சேகரிக்கும் கட்டத்தில் இருந்தது. வேட்டையாடியோ, கிடைத்ததையோ கொண்டு வாழ்ந்தனர். அக்கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட உணவுகள் அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டது.

அவர்கள் பயன்படுத்திய கருவிகள் மிகவும் எளிமையானதாக இருந்தது. அதனைக் கொண்டு திரட்டும் உணவு அவர்களுக்குப் போதுமானதாக இல்லை, அப்போது அவர்கள் சிறு கூட்டத்தவர்களாக இருந்ததால், ஒவ்வொரு தனிநபரும் அந்தக் கூட்டத்திற்கு அவசியமானராக இருந்தனர். எவரையும் இழக்க அந்தக்கூட்டம் தயராக இல்லை. ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்தில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். அனைவரும் சமமாக உழைத்தனர், கிடைத்ததைச் சமமாகப் பங்கிட்டனர்.

      உழைப்பவர் உழைப்பை பெறுபவர் என்கிற வேறுபாடு தோன்றாத அந்தச் சமூகத்தை மார்க்சியம் ஆதி கம்யூனிச சமுகம் என்று அழைக்கிறது. அச் சமூகத்தில் மக்களின் தேவைக்கும் அப்போது கையாளப்பட்ட எளிய கருவிக்கும் உள்ள வேறுபாடே சமூக முரணாக இருந்தது.

படிப்படியாகத் தோன்றிய கருவிகளின் வளர்ச்சி உற்பத்திப் பெருக்கத்திற்குக் காரணமாகியது. அந்தப் பெருக்கம், அச்சமூகத்தினுடைய தேவையை நிறைவு செய்தபின்பு உள்ள மீதமல்ல. வழக்கமாகக் கிடைப்பதின் அளவில் ஏற்பட்ட சிறிய அதிகரிப்பேயாகும். இதனைத் தொடர்ந்து வேலைப்பிரிவினை ஏற்பட்டது.

முதலில் ஆண் பெண் ஆகியோர்களுக்கு இடையே வேலைப் பிரிவினை ஏற்பட்டது, அடுத்து பயிர் சாகுபடி, விலங்குகளை வளர்த்தல் போன்ற வேலைப் பிரிவினை ஏற்பட்டது. கூட்டுயுழைப்பு சிதைந்து உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. உழைப்புப் பிரிவினையின் காரணமாகச் சமூகத்தின் விளைபொருட்கள் அதிகரித்தது. அந்தச் சமூகத்தின் குறைந்தபட்சத் தேவைக்குத் கூடுதலாக உற்பத்தி விளைந்தது.

      அந்த மிகை உற்பத்தியை, கூட்டத்தலைவர்களும், பொறுப்பாளர்களும், சடங்குகளைச் செய்தவர்களும் தமதாக்கிக் கொண்டனர். உடல் உழைப்பு மூளை உழைப்பு என்ற பிரிவு ஏற்பட்டது. கூட்டுழைப்புச் சிதைந்தது தனியுழைப்பு தோன்றியது. செல்வம் ஓரிடத்தல் சேர்ந்தது, பணக்காரன் ஏழை என்ற பிரிவு தோன்றியது. பணம் அதிகமாகச் சேர்ந்தர்வகளிடம் சொத்துச் சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்க என இரண்டாகப் பிரிந்து வர்க்கச் சமூகம் தோன்றியது.

      இன்பம், துன்பம், வறுமை, செழுப்பு, பணக்காரன், ஏழை போன்ற சமூக இருமையுடன் கூட வெட்பம், குளிர்ச்சி போன்ற இயற்கை இருமைகளையும் அத்வைதம் மறுதலிக்கிறது.

வர்க்க சமூகத்தில் காணப்படும் இந்த வேறுபாடுகளைத் தீர்க்க முடியாமல் தான் அத்வைத வேதாந்தம் பன்மையையும் இருமையையும் மறுதலித்து, ஆன்ம ஒருமையில் ஒன்றிப்போகின்ற, ஆன்ம முக்திக்கு வழிகாட்டுகிறது.

இந்த வர்க்க சமுத்தின் தோற்றத்தை மார்க்சியம் அறிந்து கொண்டதால், இதற்கான தீர்வை சொத்துடைமையின் அழிவில் தான், வர்க்க சமூகம் மறையும் என்ற தெளிவோடு, அதற்கான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகிய பிரிவுகளில் தமது தீர்வை முன்வைத்துள்ளது.

      தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகும். இயற்கையின் இருப்பு மாற்றம் பற்றிப் பேசுவது இயக்கவியல் பொருள்முதல்வாதம், சமூகத்தில் வர்க்கத்தின் தோற்றம், அதன் இருப்பிற்கான காரணம், அதன் மறைவுக்கான புறநிலை வளர்ச்சி ஆகியவற்றைப் பேசுவது வரலாற்றியல் பொருளமுதல்வாதம்.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது. இந்த விதிகளே வர்க்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

விஞ்ஞானச் சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவச் சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக வர்க்கம் மறைவதையும் அதற்கான சமூகப் புரட்சியின் நியதிகளையும் சுட்டிக்காட்டுகிறது. சமூகப் பிரச்சினைகளுக்குப் பொருளாத காரணங்களைக் கண்டு, அதன் வழியில் மார்க்சியம் அதற்குத் தீர்வை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பொருளாயத நிலைமைகளையே மார்க்சியம் உண்மை என்கிறது.

உண்மையல்லாத மாயை என்று அத்வைதம் உலகை மறுக்கிறது. இதற்கு மாறாக மார்க்சியம் புறநிலையினை உணர்தலே “உண்மை” என்கிறது. உலகின் எதார்த்த நிலையினை மார்க்சியம் புறநிலை என்கிறது.

இந்தப் புறநிலையைக் கருத்தாக்கமாக மீண்டும் உணர்வில் கொண்டுவருவதே உண்மை ஆகும். எதார்த்தத்துடன் பொருந்துகின்ற அறிவே உண்மை. அதாவது புறநிலைநிலையில் இருக்கும் எதார்த்தத்தை உணர்வில் கருத்தாக்கமாகப் பிரதிபலிப்பதே உண்மை.

இந்தப் புறநிலை மாறிக் கொண்டிருக்கிறது, இந்த மாற்றமே அகநிலையில் பிரதிபலிக்கிறது. அதனால் தான் இந்த உண்மையை அறுதி உண்மை என்று கூறப்படுவதில்லை. மாறிக் கொண்டிருப்பதற்கும் உண்மைக்கு ஏற்ப மனிதனின் அறிவும் மாறுகிறது. அகநிலை மாற்றத்தை புறநிலையில் கண்டது தான் மார்க்சிய உண்மையின் உறுதித் தன்மை அடங்கியிருக்கிறது.

இந்த மாற்றத்தை புரிந்து கொள்ளமுடியாமையினால் தான் அத்வைதம் உலகை மாயை என்று கூறி அதனை விட்டு விலகி ஆத்ம நிலையில் ஒன்றிவிடுகிறது. பிரம்மம் என்கிற அறுதிவுண்மையை ஏற்று மாறும் உண்மையான உலகை மறுக்கிறது. மார்க்சியம் அப்பாலைத் தத்துவமான அறுதி உண்மையை மறுத்து, மாறும் உலகின் புறநிலை உண்மையை ஏற்கிறது.

புறநிலை உண்மையை ஏற்றுக் கொள்ளாததால் சமூகப் பிரச்சினைகளுக்குத் தனிநபரையே காரணமாக்கிய அத்வைதம், அந்தத் தனிநபரின் இருப்பை உலகில் காணாது பிரம்மத்தில் சுட்டிக்காட்டி பிரம்மத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. புறநிலை உண்மையின் மாற்றத்தை மார்க்சியம் ஏற்றுக் கொண்டதால் சமூகப் பிரச்சினைகளுக்குப் புறநிலை மாற்றத்தின் அடிப்படையில் தீர்வை முன்வைக்கிறது.

சமூகத்தில் இருந்து விலகி தனிமைப்பட்டு, அத்வைதம் காட்டும் வழிகாட்டுதலின்படி பிம்மத்தில் ஐக்கியமாக வேண்டுமா? சமூகப் பிரச்சினையின் தோற்றக் காரணங்களை அறிந்து புறநிலை மாற்றத்தின் மூலம் தீர்வு காண போராடும் இயக்கத்தோடு இணைய வேண்டுமா? என்பதை வாசகன் முடிவெடுக்க வேண்டும்.

அத்வைதத்தின் முழுமையான போக்கை ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி போன்றோகளின் படைப்புகளிலும், மார்க்சியத்தை இடதுசாரி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களிலும் படித்துத் தெளிவடையலாம்.

“எல்லாத் தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே என்கிறான் வேதாந்தி. அன்பு, எல்லைக்கு உட்பட்டு சிறிய பாதைகள் மூலம் செல்லும்போது தீமையாகத் தெரிகிறது.
..
தீமைபோல் தோன்றும் அனைத்தின் காரணமும் நம்மிடமே உள்ளது என்கிறது வேதாந்தம். இயற்கையைக் கடந்த யாரையும் இதற்காகக் குற்றம் சாட்டாதீர்கள்.” (பக்கம்-101)

Monday, 10 December 2018

விசும்பும் காலமும் (Space and Time)


"எல்லா வாழ்நிலையின் அடிப்படை வடிவங்களும் விசும்பும்
காலமும் ஆகும். காலத்துக்குப் புறம்பாக வாழ்நிலை என்பது,
விசும்புக்குப் புறம்பான வாழ்நிலை என்பதன் அளவுக்குப்
படுமோசமான அபத்தமாகும்.."
         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 79)

பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் (Space and Time) நடைபெறுகிறது. விசும்பு என்பது  பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது.

        பொதுவாக பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆக பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை  நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்றப் பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பென்பது விசும்பில் தான் நிகழ்கிறது.

        பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள் யாவும்  தம்முள்ளும் பிற பொருட்களோடும் இயக்கத்திலும், மாற்றத்திலும், வளர்ச்சியை பெறுகிறது. இந்த இயக்கங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொடர் வரிசையில் நிகழ்கிறது. இந்த தொடர் நிகழ்வுகளினுடைய அளவுகளின் கணக்கீடு காலத்தில் நிகழ்கிறது.

        நிகழ்வுகள் காலத்திலும் விசும்பிலும் நடைபெறுவதால், விசும்பும், காலமும் பருப்பொருள் இருத்தலின் ஒருவகையினதாக வரையறுக்கப்படுகிறது.

        விசும்பின்றி காலமில்லை, காலமின்றி விசும்பில்லை என்ற வகையில் விசும்பும் காலமும் பிரிக்க முடியாத பிணைப்பில் உள்ளது.  விசும்பும் காலமும் பருப்பொருளுடன் தொடர்பும் இணைப்பும் மட்டும் கொண்டிருக்கவில்லை, அவையிரண்டும் பருப்பொருளைச் சார்ந்தும் இருக்கின்றது. அவைகள் பருப்பொருளின் இயக்கத்தாலும் அது மேற்கொள்ளும் வடிவத்தாலும்  நிர்ணயம் செய்யப்படுகின்றன.

        விசும்பும் காலமும் வரம்பற்றது என்பது இதன் அடிப்படைப் பண்பாகும். வெளிப் பார்வைக்கு இவையிரண்டும் வரம்பிற்குட்பட்டதாக தெரிகிறது. விசும்பும் காலமும் வரம்பிற்குட்பட்ட வடிவமாக தென்பட்டாலும், வரம்பற்றவையே ஆகும்.

        ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது.

        இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்கு பின்பும் தொடர்கிறது. ஆக இந்த தொடர் நிகழ்வுக்கு தொடக்கமும் இறுதியும் இல்லை. காலம் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

        விசும்பிலும் காலத்திலும்  நிகழ்கின்ற மாற்றங்களில் இருந்தே இயற்கை பற்றி மிகவும் நம்பகமான விஞ்ஞான ஆராய்சி நடைபெற்று வருகிறது. பருப்பொருளின் செயற்பாடு அனைத்தும் விசும்பு காலம் என்ற இரண்டிலும் பிணைந்த வடிவில்தான் நடைபெறுகிறது. அதாவது விசும்புக்கும் காலத்துக்கும் இடையேயான உறவு பிரிக்க முடியாத தன்மையினதாகும். அதே போது விசும்பையும் காலத்தையும் பருப்பொருளிலிருந்து பிரிக்க முடியாது. பருப்பொருள் காலத்தில் நிலையானது என்பதோடு விசும்பில் எல்லையில்லாதது. பொருளாயத உலகிற்கு எல்லை என்பதில்லை.

        பருப்பொருள் காலத்தால் நிரந்திரமானது என்று ஏன் செல்லப்படுகிறது என்றால், அது சிதைந்து, ஒன்றுமில் மறைந்து போவதில்லை. அது மற்றொரு பொருளாக மாற்றம் பெறுகிறது. அதாவது பருப்பொருள் ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றுவதும் இல்லை, ஒன்றுமில்லாமல் மறைந்து போவதும் இல்லை. மாற்றம் என்பது மூலக்கூறுகளின்  சிதைவும் மற்ற புதிய பொருட்களுக்கான மூலக்கூறுகளின் சேர்ப்பையும் குறிக்கிறது.

        இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை இயற்கை விஞ்ஞானத்தின் புதுப்புது கண்டிபிடிப்புகள் மெய்ப்பித்து வருகின்றன.