Wednesday, 8 October 2025

தோழர் பழனி சின்னசாமியின் ஆதாரமற்ற விமர்சனத்துக்கு மறுப்பு:-

 


 
 
 
 

2025 ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ம.ஜ.இ.க அமைப்பு, லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்கிற தலைப்பில் இணையவழியில் பேசுதவற்கு ஏற்பாடு செய்தது. அதில் பல தோழர்களுடன் நானும் பேசினேன். அன்று பேசிய எனது பேச்சு செந்தளம் இணைதளத்தில் (https://senthalam.com/1357) ஏப்ரல் 23ஆம் தேதி வெளிவந்தது. அதனைப் படித்த தோழர் பழனி சின்னசாமி // மார்க்சிய ஆசான் லெனின் நூலையையே திருத்தியுள்ளதை கண்டு வருத்தப்பட்டேன். / என்று முகநூலில் பதிவிட்டுள்ளார். 

செந்தளம் இணையதத்தில் இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு”, என்று தெளிவாக இறுதியில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் எதேனும் தவறை தோழர் பழனி சின்னசாமி கண்டிருந்தால், அதனை எழுதிய அ.கா.ஈஸ்வரன் ஆகிய என்னை நோக்கி விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து. நேரடியாக, செந்தளம் இணைய தளத்தைக் குற்றம் சாட்டியிள்ளார். 

பழனி சின்னசாமி:-“மார்க்சிய லெனினிய அமைப்பின் இணைய தளமான செந்தளம் இன்று நான் வாசிக்கும் பொழுது அதில் மார்க்சிய ஆசான் லெனின் நூலையையே திருத்தியுள்ளதை கண்டு வருத்தப்பட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் சரிபார்க்க மூல நூலின் பக்கங்களை உங்கள் முன் வைத்துள்ளேன்... தேவைப்பட்டால் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயார். நீங்களே செய்தால் சிறப்பாக இருக்கும் தோழர்களே. ” 

எனது கூற்று தவறாக தோழர் பழனி சின்னசாமிக்கும் தோன்றி இருந்தால் அதனை திருத்த உதவி இருக்கலாம். ஆனால் அவரது தொனி அவ்வாறில்லை. செந்தளம் இணையதளத்தை மிரட்டும் தொனியில் இருக்கிறது. 

இதற்கு உடனடியாக பதிலளிக்கும் சூழ்நிலையில் அப்போது நான் இல்லை, அதனால் பிறகு பதிலளிப்போம் என்று இருந்துவிட்டேன். ஆனால் இது கட்டுரை ஆசிரியர்தான் பதிலளிக்க வேண்டும் என்று செந்தளம் காத்துக் கொண்டிருக்கவில்லை. தோழர் பழனி சின்னசாமி, லெனின் கருத்தையும் செந்தளத்தையும் இணைத்து பேசியதால், செந்தளம் நேரடியாக இதற்கு முகநூலில் பதிலளித்துவிட்டது (https://www.facebook.com/story.php?story_fbid=1499076654553738&id=100033542524221&rdid=OAn5OQfRpxMUSpIF#).

 

லெனின் கருத்தாக நான் கூறியதற்கு ஆதாரமாக அரசும் புரட்சியும் என்கிற நூலில் காணப்படும் இடத்தை செந்தளம் சரியாகச் சுட்டிக்காட்டிவிட்டது. அதனால் எனது விளக்கம் இங்கு தேவைப்படவில்லை. இருந்தாலும் லெனின் கருத்தை விளக்கமாக சொல்ல வேண்டிய பொறுப்பை உணர்ந்து விளக்கம் கொடுக்கிறேன்.

 

தோழர் பழனி சின்னசாமி சுட்டிக்காட்டுகிற பகுதி அரசும் புரட்சியும் என்கிற நூலின் மூன்றாம் அத்தியாயத்தில் உள்ளது. நான் குறிப்பிடுகிறப் பகுதி ஆறாம் அத்தியாயத்தில் உள்ளது. இதனை செந்தளம் சரியாக எடுத்துக் காட்டிவிட்டது. இங்கு எனது பணி அதனை விளக்குவது மட்டுமே.

 

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசே காரணம் என்று அராஜகவாதிகள் கருதிக் கொண்டனர். அதனால் அரசைப் பயன்படுத்துவதைப் பற்றி அராஜகவாதிகள் சிந்திக்கவில்லை.

 

லெனின் மார்க்சியவாதிகளுக்கும் அரஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடாக மூன்றைக் குறிப்பிடுகிறார். அதில் மூன்றாவது பற்றியதே பழனி சின்னசாமி புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்.

 

"முன்னவர்கள் (மாக்சியவாதிகள்) தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வாக்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்"

 

லெனின் கூறியதை ஒருங்கிணைந்து புரிந்து கொள்ளாமல் தமக்கு ஏற்புடையதை மட்டுமே மனதில் பதியவைத்துக் கொண்டு, தோழர் பழனி சின்னசாமி இப்படி செந்தளத்தில் வந்த கட்டுரையை தவறாக விமர்சித்துள்ளார். இது விமர்சனம் அல்ல அவதூறாகும். லெனின், செந்தளம் இணைய ஆசிரியர், அ.கா.ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர்களையும் தோழர் பழனி சின்னசாமி அவதூறு செய்துள்ளார்.

 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், செந்தளம் இணைய தளத்தையும் என்னையும் அம்பலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர் அம்பலமாகியுள்ளார்.

 

அரசும் புரட்சி என்கிற நூலில் நேரடியாகக் கூறியதை, லெனின் அரசு என்கிற சொற்பொழிவில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

 

லெனின் கருத்தை தமக்கு ஏற்றதை முன்வைத்து லெனினைப் பயன்படுத்தக்கூடாது. லெனின் கூறிய அனைத்தையும் ஒருங்கிணைந்து புரிந்து கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

 

லெனினது அரசு சொற்பொழிப் பற்றி நான் எடுத்த வகுப்பில்  கூறியதையே கீழே பதிவிடுகிறேன். 

ஆதி பொதுவுடைமை சமூகத்தில் அதாவது மக்கள் பழங்குடிகளாக வாழ்ந்திருந்த காலத்தில் வர்க்கங்கள் தோன்றவில்லை, அப்போது அரசு தோன்றவில்லை. பழங்குடி சமூகத்தில் எப்போது உபரி உற்பத்தி சிறிதளவு அதிகரித்ததோ, அப்போது அங்கே உழைப்பவர் உழைப்பைப்பெறுபவர் என்கிற பிரிவு தோன்றியது. அந்த வர்க்க சமூகம் உருவாகும் போது அரசு தோன்றியது. இதனை காரண காரியங்களோடு இணைத்து லெனின் கூறுவதை பார்ப்போம்.

 

“எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிற, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு அப்போது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.” 

இங்கே லெனின் மக்களை நிர்பந்திக்கிற விசேஷமான இயந்திரமாக அரசு தோன்றியதைப் பற்றி கூறியுள்ளார். 

மற்றோர் இடத்தில் அரசு தோன்றுவதற்கு முன்பான நிலையினையும் தோன்றுவதற்கான சூழ்நிலையினையும் விவரிக்கிறார். 

முதலில் அரசு தோன்றாத, தேவைப்படாத நிலைமையைப் பார்ப்போம்.

 

அரசென்பது, ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம். சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாத போது, அடிமை முறையின் கால கட்டத்திற்கு முன்பு மக்கள் அதிக சமத்துவமுடைய ஆதிகால நிலையிலேயே உழைத்த நாளில், உழைப்பின் உற்பத்தித் திறன் மிகமிகக் கீழ்ப்படியில் தொடர்ந்து இருந்து வந்த சூழ்நிலையில், முற்றிலும் பண்படாத, மிகமிக எளிய வாழ்வுக்கான சாதனங்களைப் பெறுவதே ஆதி கால மனிதனுக்கு அரிதாக இருந்த அந்நாளில், மக்களின் தனித்த ஒரு பிரிவு-சமுதாயத்தின் மற்றப் பகுதியின் மேல் ஆளுகையும் ஆதிக்கமும் புரிய வேண்டித் தனியாக ஒதுங்கிப் பிரிந்த ஒன்று—இன்னும் தோன்றவில்லை; தோன்றியிருக்கவும் முடியாது.” 

அரசு தோன்றுவதற்கு முன்பான நிலைமையினைக் கூறிவிட்டு லெனின் அடுத்து தோன்றியதற்கான புறநிலைமைகளை கூறுகிறார்.

 

“சமூகம் வர்க்கங்களாகப் பிரிவதின் முதல் வடிவம் தோன்றிய போதுதான், அடிமை முறை தோன்றிய போதுதான், மக்களின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் உழவுத் தொழிலின் சற்றும் பண்படாத முறைகளில் முனைந்து ஈடுபட்டு, அதன் மூலம் தேவைக்கு மேல் ஓரளவு உபரிப் பொருளை உற்பத்தி செய்ய முடிந்த போதுதான், இந்த உபரிப் பொருள் அடிமையின் மிகமிகக் கடைகெட்ட வாழ்வுக்கு இன்றியமையாததாக இல்லாமல், அது ஆண்டையின் கைகளில் சேர்ந்து விட்ட போதுதான், இவ்வாறாக ஆண்டைகள் என்ற இவ்வர்க்கத்தின் நிலை உறுதியான போது அது மேலும் உறுதியாக வேண்டி, அரசு தோன்ற வேண்டியது அவசியமாயிற்று.” 

இதற்கு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஒன்றுக்கு இரண்டு முறைப் படித்தாலேயே லெனின் எழுத்துக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

அடுத்து அரசின் தோற்றம் மற்றும் அதன் வடிவங்களைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம். 

அரசென்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தால் ஒடுக்கப் பெறுவதற்கான ஓர் இயந்திரம். ஒரு வர்க்கத்திற்கு மற்ற வர்க்கங்களைக் கீழ்ப்படிந்து இருக்கச் செய்யும் ஓர் இயந்திரம். இந்த இயந்திரத்திற்கு வேறு வேறான வடிவங்கள் உண்டு. அடிமை முறை அரசில் முடியரசும், உயர் குடி மக்களின் குடியரசும், ஜனநாயகக் குடியரசுங்கூட இருந்ததைக் கண்டோம். உண்மையில் ஆட்சி முறையின் வடிவங்கள் மிகமிக வேறுபட்டன, ஆயினும் அவற்றின் சாரம் எப்போதும் ஒன்றேதான்: அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை; அவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே அமைந்தனர், அவர்கள் மனிதப் பிறவிகளாக மதிக்கப்படவில்லை. பண்ணையடிமை முறை அரசிலும் இதே நிலையைத்தான் நாம் காண்கிறோம்” 

அரசு எத்தகைய வடிவமாக வளர்ச்சி அடைந்தாலும் அதன் சாரம்சம் ஒன்றுதான், ஆனால் அதன் வடிவ மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாது போனால், அதனைப் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டை அறியாது போவோம். 

அடிமை சமூகத்திலும் உழைப்பாளியான அடிமை சுரண்டப்படுகிறான், நிலப்பிரபுத்துவத்தில் விவசாயி சுரண்டப்படுகிறான், முதலாளித்துவத்திலும் உழைப்பாளியான பாட்டாளி சுரண்டப்படுகிறான், சுரண்டலை மட்டும் முன்வைத்து அனைத்தையும் ஒரே நிலைமையானது என்று கூறிட முடியாது. அனைத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அரசியலில் ஈடுபடமுடியாது. நுட்பமான வேறுபாட்டை அறியாது அனைத்தையும் பொதுமைப்படுத்துவோமானால் வேறுபட்ட சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியலை செய்ய முடியாது. 

லெனின் பண்ணையடிமை முறையுடன் ஜனநாயகக் குடியரசை ஒப்பிட்டு வேறுபாட்டையும் அதனால் உழைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பலனைப் பற்றியும் கூறியுள்ளார். இதனை அராஜகவாதிகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

“பண்ணையடிமை முறையுடன் ஒப்பிடும் போது, ஜனநாயகக் குடியரசும் அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையும் பிரம்மாண்டமான முன்னேற்றமாகத் திகழ்ந்தன. பாட்டாளி வர்க்கம் இன்று பெற்றுள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதற்கும், மூலதனத்தை எதிர்த்து முறையாகப் போராடுகின்ற, உறுதியும் கட்டுப்பாடும் பெற்ற அணிகளை வகுப்பதற்கும் அவை வாய்ப்பு அளித்துள்ளன.

 

பண்ணையடிமை குடியானவர்களிடம் கிட்டத்தட்ட இது போன்றதுகூட எதுவும் இருந்ததில்லை என்றால், அடிமைகளைப் பற்றிக் கூறத் தேவையேயில்லை. அடிமைகள் கிளர்ந்து எழுந்தனர், கலகம் புரிந்தனர், உள்நாட்டுப் போர்களைத் தொடங்கினர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் வர்க்க உணர்வுள்ள பெரும்பாலானோரையோ, போராட்டத்தை நடத்து வதற்கு வேண்டிய கட்சிகளையோ அவர்கள் ஒருபோதும் தோற்றுவிக்க முடியவில்லை.

 

தாங்கள் எந்தக் குறிக்கோளுக்காகப் போராடுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வரலாற்றின் மிகப் பெரும் புரட்சிகரமான கால கட்டங்களில்கூட ஆளும் வர்க்கங்களின் கைப்பாவைகளாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர்.

 

சமூகத்தின் உலக வளர்ச்சி நிலையிலிருந்து பார்க்கும் போது முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை ஆகிய அனைத்தும் மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

 

மனிதயினம் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றது. முதலாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே உணரும்படியாகச் செய்யவும் உலகத் தொழிலாளி இயக்கத்தை உண்டாக்கவும் வாய்ப்பு அளித்தது; உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கட்சிகளாக, திரளான மக்களின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திச் செல்லும் சோஷலிசக் கட்சிகளாக அமையும்படிச் செய்தது.

 

நாடாளுமன்ற முறை இல்லையேல், தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிலாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சியை அதிகரிக்க முடியாத காரியமாகவே இருந்திருக்கும். அதனால் தான், பெருந்திரளான மக்களின் பார்வையில், இவையெல்லாம் அத்தனை பெரும் முக்கியத்துவமுடையன ஆகியிருக்கின்றன.” 

முதலாளித்துவ குடியரசில் ஏற்பட்ட வடிவமாற்றத்தைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளமுடியாமல் அராஜகவாதிகள் மார்க்சியர்களிடம் இருந்துவேறுபடுகின்றனர். இந்த வேறுபாட்டை லெனின் அரசும் புரட்சியும் என்கிற நூலில் தெளிவாக நேரடியாக கூறியிருக்கிறார்.” 

இந்த விளக்கங்கள் தோழர் பழனி சின்னசாமிக்குப் போதுமானது என்று நினைக்கிறேன். எங்களை அம்பலப்படுததுவதாக நினைத்துக் கொண்டு, அவரின் தவறானப் புரிதலால் அவர் அம்பலமாகிவிட்டார்.

 

 

 


No comments:

Post a Comment