Wednesday 30 November 2022

சிலப்பதிகாரத்தில் சமண வினைக் கோட்பாடே பேசப்படுகிறது ஆசீவகத்தின் ஊழ் கோட்பாடு பேசப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் முனைவர் ர.விஜயலட்சுமி நிறுவியுள்ளார்:-

 


“இன்றைய நிலையில் ஆசீவகர்களைப் பற்றிய நேரடிக் குறிப்புச் சிலப்பதிகாரத்திற்றான் காணப்படுகின்றது. இங்கு ஆசீவகர்கள் தமிழ் நாட்டில் இருந்தமைக்கான குறிப்பு உண்டேயொழிய அவர்கள் கோட்பாடுகள் விளக்கப்படவில்லை. ஆனால் சிலப்பதிகார காலத்தில் (கி. பி. 400-கி. பி. 500) வினைக் கோட்பாடு தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தது என்பது சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட நூற்பொருளிலிருந்து புலனாகின்றது.

அரசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோரேத்தலும்

ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதும்

என்ற அடிகளிலுள்ள நூற்பொருள் மூன்றனுள், மூன்றாவதான ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பது முதிர்ந்த வினை அதற்கான பலனை அளிக்கும் என்பதைச் சுட்டுகின்றது. இங்கு ஊழ் என்ற சொல் நியதி என்ற பொருளிலன்றி, முதிர்ச்சி பெற்ற என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.

கோவலன் முற்பிறப்பிற் செய்த செயல்களினாற் சேர்த்துக் கொண்ட வினையே முதிர்ந்து வந்தபோது இப்பிறப்பிற் பாண்டியனாற் கொலையுறுகின்றான். இதைக் கோவலன் கொலையுண்டு இறந்தது கண்டு சினங்கொண்ட கண்ணகி மதுரையை எரியூட்டிய நேரத்தில் மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் கூறும் கூற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. மதுராபதித் தெய்வம் கண்ணகி யிடம் பின் வருமாறு உரைக்கின்றது. 

 

“யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவற்றைச் சொல்ல வந்தேன். அவற்றை நீ கேட்பாயாக. இந்நகரத்து முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மையுடையவர்களல்ல. இந்நெடுஞ்செழியனும் அத்தன்மையனே; ஆயினும் இது வந்த வரலாற்றைச் சொல்லுவேன். அவற்றை நீ கேட்பாயாக; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தரசனாகிய வசுவென்பவனும் கபிலபுரத்தரசனாகிய குமரனென்பவனும் தம்முட் பகை கொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தார்கள். அப்பொழுது சிங்கபுரத்துக் கடை வீதியில் சென்று இயல்பாகப் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை அந்நகரத்தரசனிடம் தொழில் செய்து கொண்டிருக்கும் பரதனென்பவன் அவன் பகைவனுடைய ஒற்றனென்று பிடித்து, அரசனுக்குக் காட்டிக், கொலை செய்துவிட்டான். அப்பொழுது அச்சங்கமன் மனைவியாகிய நீலியென்பவள் மிகுந்த துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து பின்பு ஒரு மலையின் மேல் ஏறிக் கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன்னுடைய உயிரை விடுவதற்கு நினைத்தவள், 'எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக என்று சாபமிட்டு இறந்தாள். அப்பரதன் இக்கோவலனாகப் பிறந்தான்; ஆதலால் நீங்கள் இத்துன்ப மடைந்தீர்கள்! நீ இன்றைக்குப் பதினான்கு தினத்தின் பகல் சென்ற பின்பு உன்னுடைய கணவனைக் கண்டு சேர்வை”

மேற்கூறிய பகுதியில் முற்பிறப்பில் செய்த வினையினாலேயே, கோவலன் இப்பிறப்பில் கொலையுண்டான் என்பது விளக்கப் பட்டுள்ளது. “உம்மை வினை வந்துருத்த காலை” என்ற அடி வினை முதிர்ந்து வந்ததைச் சுட்டுகின்றது. இதுவே சிலப்பதிகாரப் பதிகத்திலும், ‘ஊழ்வினை25 (முதிர்ந்த வினை) என்ற சொற்றொடரால் உணர்த்தப் பட்டுள்ளது. கோவலனின் இச்சாப வரலாறு, சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியைக் கதைப் பொருளாகக் கொண்ட மணிமேகலையிலும் வஞ்சி மாநகர் புக்க காதையில், கண்ணகி, மாதவி மகள் மணிமேகலைக்குக் கூறியதாக உரைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்ணகி,

உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்

மெய்மைக் கிளவி விளம்பிய பின்னும்

சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்

என்ற கூற்று வாயிலாக முற்செய்த வினை பின்வந்து உருக்காட்டிப் பலனளிக்கும் என்பது எனக்குக் கூறப்பட்டபோதும் நான் வளமிக்க மதுரையை அழித்தேன் என்கிறாள். அதே போல்,

“மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேன்” என்ற அடி வாயிலாகவும் நல்வினைப் பயனால் விண்ணுலகெய்தினாள் என்பதையும் தெரிவிக்கின்றாள். இந்த அடிகளும் முன்னர். சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட பகுதிகளும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்களிலும் வினைக் கொள்கை வலியுறுத்தப்பட்டிருப்பதை எடுத்துணர்த்துகின்றன.

மணிமேகலையில் வினைக் கொள்கையுடன் ஊழ்க் கொள்கையும் விளக்கப்பட்டிருப்பினும் சிலப்பதிகாரத்தில் ஊழ்க் கொள்கை கோட்பாட்டுருவில் வெளிப்படுத்தப்படவில்லை.

முதிர்தல் என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஊழ்' என்ற சொல்லை ஆசீவகர்களின் ஊழ்க் கொள்கையுடன் ஒருமைப்படுத்துதல் ஒவ்வாதது. ஒரு சில தமிழறிஞர்கள் சிலப்பதிகாரத்தில் ஆசீவகக் கொள்கையே எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறினும், மேற்காட்டிய செய்திகள் இக்கருத்து ஒவ்வாதது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

“ஆசீவகர்கள் கர்மத்தை மறுக்கவில்ல”' என்ற கருத்து அச்சமயிகளின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது. ஏனெனில், கர்மம் என்ற வினைக் கோட்பாட்டை மறுத்து, ஊழ் என்ற ஆற்றலுக்கு முதன்மை கொடுப்பதே ஆசீவகர்களின் தலையாய கருத்து. இங்குதான் அவர்கள் ஏனைய வினைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் சமயிகளான சமணர், பௌத்தர், இந்துக்கள் ஆகியோரிலும் பார்க்க வேறுபடுகின்றனர். கர்மா எனப்படும் வினை நுகர்வு - செய்யும் செயல் அடிப்படையில் இன்பம் துன்பம் ஆகியவற்றை மனிதன் துய்ப்பது இவையனைத்தையும் ஆசீவகர்கள் ஏற்றுக்கொள்ளாதபடியினால்தான் அவர்களைக் “காரணமில்லாக் கடவுட் குழாம்” (ahetuvādin) என்றும், “அகிரியைவாதிகள்” (akriyāvādin) என்றும் ஏனையோர் அழைத்தனர். மனிதனின் வீரமோ, ஆற்றலோ, செயலோ அவனுக்கு விளையப்போகும் நிகழ்வுகளை வரையறுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.

எனவே, மேற்கூறியவாறு, சிலப்பதிகாரத்தில் வினைக் கொள்கையே அடிப்படையாக விளங்குவதாலும், அங்கு ஊழ் என்ற சொல் ஆசீவகர்கள் கோட்பாடன்றி 'முதிர்ந்த' என்ற பொருளிலேயே கையாளப்படுவதாலும், மேற்காட்டிய தமிழறிஞர்களுடைய கருத்து ஏற்புடைத்தாகாது.”

(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம் – 57-60)

 

Tuesday 29 November 2022

ஆசீவகர்களின் தமிழ் நாட்டு வருகை - முனைவர் ர.விஜயலட்சுமி:-

 


“ஆசீவகர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இவர்களால் எங்கும் குறித்து வைக்கப்படவில்லை. இவர்களைப்பற்றி இன்று நாம் அறிந்து கொள்வதெல்லாம், பிறசமயத்தினர் இவர்களைக் கண்டித்துக்கூறும் பகுதிகள் வாயிலாகவே தெரியவருகின்றன.

இவர்கள் தமிழ் நாட்டிற்கு முதலில் எப்பொழுது வந்தனர் என்பது பற்றித் தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர்கள் மௌரியர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைத் தேவநம்பியதீசனின் பாட்டனாரான பந்துகாபயன் “ஆசீவ கர்களுக்கு உறைவிடம்" (ajivikanam geham) ஒன்றை அநுராத புரத்தில் அமைத்திருந்தான் என்று மகாவமிசம் கூறுவதிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. அசோகன் காலத்தில் (கி.மு 270.) ஆசீவகர்கள் இந்திய நாட்டில் செல்வாக்குடையோராய் விளங்கியதை அவன் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. அசோகனின் தந்தையான பிந்துசாரன் காலத்திலேயே ஆசீவகர்கள் அரசனின் ஆதரவு பெற்றிருந்தனர்.

ஆசீவக சங்கங்கள் பௌத்தர்கள், சைனர்கள் போல் ஆங்காங்கு வேரூன்றியிருந்தனர். அசோகன் காலத்தில்,' கயாவிற்குப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள பாராபர் மலையில்27 (Barādar Hill) ஆசீவகர்களுக்கு நன்கொடை அளித்த செய்தி நான்கு குகைகளிற் குறிக்கப்பட்டுள்ளது.

வடநாட்டிற் செல்வாக்குற்றிருந்த ஆசீவகர்கள் குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு எப்போது வந்தனர் என்பது பற்றித் திடமாகக்கூற முடியவில்லை, சந்திர குப்தமன்னனுட்பட பத்திரபாகுமுனி தலைமையில் சைனர்கள் சிரவணபெல்கோலாவிற்கு வந்தது போலவும், அசோக தூதர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிற்கு வந்தது போன்றும், ஆசீவகத்துறவிகள் தமிழ்நாட்டிற்குக் குழுவாக வந்தமைபற்றி எங்கும் அறிய முடியவில்லை. ஆனால் இந்திய இலக்கியங்கள் கூறும் செய்திகளின்படி ஆசீவகர்கள் வரலாற்றை நோக்கின் அவர்கள் வடநாட்டை விடத் தென்னாட்டில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந் திருக்கின்றார்கள் என்பது தெரியவருகின்றது.”

(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம்:30)

“ஊகத்தால் எழும் முடிவுகளை அடித்துக்கூறி விட்டால் மட்டும் போதாது. அவை குறுகிய காலத்துள் ஆட்டம் கண்டுவிடும். அப்போது உண்மைநிலை, ஊகம் எனும் போர்வையினின்றும் வெளிக் கொணரப்பட்டுவிடும்.”

(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம்:16)

Monday 28 November 2022

(ஆசீவக ஊழைப் பற்றி) நியதிவாதம் - தர்மானந்த கோஸம்பி

“மக்கலி கோஸாலன் சம்சாரசுத்திவாதி, அதாவது நியதிவாதி.' அவன் சொல்கிறான்:-




"உயிர் தூய்மையற்று இருப்பதற்கு ஏதும் ஏது இல்லை, காரணம் இல்லை. ஏது இல்லாமலே, காரணம் இல்லாமலே உயிர்கள் தூய்மையற்றவை ஆகின்றன. உயிர்களின் தூய்மைக்கு ஏதும் ஏது இல்லை, காரணம் இல்லை. ஏது இல்லாமலே, காரணம் இல்லாமலே உயிர்கள் தூயவை ஆகின்றன.


தன் அறிவுத் திறமையால் ஒன்றும் உண்டாவதில்லை. பிறனுடைய அறிவுத்திறமையால் ஒன்றும் உண்டாவதில்லை. மனிதனுடைய அறிவாற்றலால் ஒன்றும் உண்டாவதில்லை. (எவனிடமும்) வல்லமை இல்லை. வீரியம் இல்லை, மனித ஆற்றல் இல்லை, மனிதப் பராக்கிரமம் இல்லை. எல்லாப் பொருள்களும், எல்லாப் பிராணிகளும், எல்லா பூதங்களும், எல்லா உயிர்களும் வசமற்று வலிமையற்று வீரியமற்று இருக்கின்றன. அவை நியதி (ஊழ்), சேர்க்கை, இயல்பு ஆகியவற்றினால் நிலைமாறி, ஆறினுள் ஏதாவது ஒரு சாதியில் (கூட்டத்தில்) இருந்து இன்ப துன்பங்களை நுகர்கின்றன.


அறிவாளிகளும் சரி, அறிவிலிகளும் சரி, இருவருமே எண்பத்து நான்கு லட்சம் மகாகற்பங்களாகிய வளையத்தில் சுற்றிச் சுழன்று செல்லத்தான் வேண்டும்; அதன் பிறகுதான் அவர்களின் துன்பம் அழியும். இன்ன சீலத்தினாலே, இன்ன விரதத்தினாலே, இன்ன தவத்தினாலே அல்லது பிரம்மசரியத்தினாலே நான் முதிராத கருமங்களை முதிரச் செய்துவிடுவேன், அல்லது முதிர்ந்த கருமல்களின் பயனை நுகர்ந்து அவற்றை அழித்துவிடுவேன் என்று ஒருவன் பேசினால், அது அவனால் ஆகும் செயலன்று.

இந்தச் சம்சாரத்தில் (உலகில்) இன்பதுன்பங்கள், படிகொண்டு அளக்கும் படியாக இவ்வளவு என்று நிச்சயமாக விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறைக்கவோ ஏற்றவோ முற்றும் தள்ளுபடி செய்யவோ முடியாது நூற்கண்டை எறிந்தால் நூல் முழுவதும் பிரியும் வரைக்கும் அது உருளுவதுபோல், அறிவாளிகளும் அறிவிலிகளும் சம்சாரச் சக்கரம் முழுவதையும் சுழன்று முடித்தால் தான் அவர்களின் துன்பம் அழியும்."


(பகவான் புத்தர்)
 

 

ஆசீவகம் (சுருக்கமான அறிமுகம்)

 

பவுத்தம், சமணம், ஆசீவகம். மூன்றும் துறவறத்தை முன்னிறுத்துகிறது. மூன்றும் சமகாலத்தவை. ஆசீவகம் வினை கோட்பாட்டுக்கு மாறாக ஊழை கூறுகிறது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது வினைக் கோட்பாடு. அதாவது ஒருவன் செய்ததற்கே பலனை அனுபவிக்கிறான். அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி அது அவனால் உருவானது. ஊழானது அப்படி அல்ல.

ஊழை நியதிக் கோட்பாடு என்பார்கள். விதிப்படி தான் நடக்கும் என்கிற நியதிக் கோட்பாட்டை தமிழில் ஊழ் என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு ஏற்படுகிற நன்மையோ தீமையோ அவனால் உருவானது அல்ல, அது அவனுக்கு விதிக்கப்பட்டது என்பதே ஊழாகும்.

கடவுள் மறுப்புக் கோட்பாடான ஆசீவகம் ஊழை கடவுளை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறது. கடவுளை ஏற்பவர்களின் வினைக் கோட்பாட்டை நிர்வகிப்பவர் கடவுள். ஆசீவகத்தில் இத்தகைய கடவுள் மறுக்கப்பட்டு ஊழானது எவர் துணையும் இன்றி தானாகவே செயல்படுகிறது. ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் கூறுவதைக் கொண்டு ஊழை அறிந்து கொள்ளலாம். ஊழோடு தற்செயல் (வாய்ப்பு) சுபாவம் (இயல்பு) ஆகியவற்றையும் இணைத்து ஆசீவகம் பேசுகிறது.

ஏ.எல்.பாசம், ர.விஜயலட்சுமி போன்றோர்கள் ஆசீவகத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி பேசுகின்றனர். இவர்களின் ஆய்வு அருமையாக இருக்கிறது. ஆசீவகத்தை க.நெடுஞ்செழியன் தமிழர் தத்துவம் என்றே கூறுகிறார்.

முருகன், மற்றும் கொற்றவை போன்ற தாய் தெய்வ வழிபாடும் தமிழர்களிடம் பழங் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

முருகனை முன்வைத்து வெறியாடல் போன்றவையும் உள்ள தமிழகத்தில் ஊழை முனைவைக்கும் ஆசிவகம் எந்த வகையில் தமிழர் தத்துவம் என்று கூறிடமுடியும். அப்படி தமிழர்கள் தான் படைத்தார்கள் என்றால், சிறப்பாக வாழ்வது பற்றி அதிகம் பேசுகிற ஆதித் தமிழர்கள் துறவறத்தை முன்னுறுத்துகிற ஆசீவகத்தை ஏன் தோற்றுவித்தார்கள் இவை அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

மதம் தோன்றுவதற்கு முன்பான் நிலைமைகள் தமிழகத்தில் இருக்கிறது, ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்த மதம் தோன்றவில்லை. மதம் தேவைப்படுகிற காலத்தில் புத்தம், சமணம், ஆசீவகம் போன்ற துறவற மதங்கள் தமிழகத்திற்கு வந்தடைந்தது. பவுத்தம், சமணம், ஆசீவகம் என்கிற மூன்று மதங்களே தொடக்க கால தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்த மூன்று மதங்களின் ஆதிக்கத்தைவிட குறைவாகவே வைதீக மதத் தாக்கம் தமிழத்தில் காணப்படுகிறது.பக்தி இலக்கியத்துக்குப் பிறகே சைவ, வைணவ மதங்கள் மேலோங்குகிறது. பக்தி இலக்கியம் புத்த, சமண, ஆசீவக மதங்களை மறுதலித்தே தன்னை நிறுவ வேண்டி இருந்தது. தொடக்கத்தில் வைதீகத்தைவிட புத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய மூன்று மதங்களே மேலோகி இருந்ததைக் காண முடிகிறது. தொடர்ந்து நடத்துகிற ஆய்வுகள் நமக்கு தெளிவை ஏற்படுத்தும்.

க.நெடுஞ்செழியன்:-

“ஆசீவகத்தின் பிறப்பு - இறப்பு, இன்பம்-துன்பம், ஊதியம் - இழப்பு எனும் வாழ்வியல் உண்மைகளை ஊழின் ஆற்றலோடு இணைத்துக் காட்டியது சிலப்பதிகாரம். ஆசீவகத்தின் அறிவியல் கூறுகளை முற்றாக விலக்கி விட்டு அதன் வாழ்வியல் கூறுகளுக்கு ஒரு காப்பிய வடிவத்தை நல்கியது சிலம்பு. ஊழ்வினையின் ஆற்றலை, இன்னா தம்ம இவ்வுலகம் எனும் துன்பம் நிறைந்த உலக வாழ்வை, அவலச் சுவையோடு விளக்கி, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என மணியாரமாய் விளங்கினாலும், ஆசீவகக் கோட்பாட்டின் வெற்றியாகச் சிலப்பதிகாரத்தைக் காண முடியவில்லை. மாறாக ஆசீவகத்தின் அறிவியல் கூறுகள் புறக்கணிக்கப்பட்டு, ஊழின் ஆற்றல் மிகுவிக்கப்பட்ட நிலையில் பொருள் முதல் கோட்பாட்டிற்குரியதாக இருந்த ஆசீவகத்தைக் கருத்து என முதல் கோட்பாட்டிற்கு உரியதாக மாற்றி விட்டதோ சிலப்பதிகாரம் என எண்ணத் தோன்றுகிறது.”

                                 (ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்)

ஆசீவகம் பேசுகிற ஊழை இன்றைய நிலையில் இருந்து பார்க்கும் போது கடும் விமர்சனத்துக்கு உரியதாக தோன்றும், ஆனால் அது அன்றைய நிலையில் இயல்புக்கு (சுபாவத்துக்கு) இணையாகவே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

*********************************

(எனது முகநூலில் பதிவிட்டதை கீழே பதிவிடுகிறேன்)

முனைவர் ர.விஜயலட்சுமி எழுதிய “தமிழகத்தில் ஆசீவகர்கள்” என்ற நூலை இரண்டு முறை படித்துவிட்டேன். தன்னுடைய முடிவுகளை ஆதாரத்தோடு நிறுவுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவரின் முடிவை மறுத்திட முடியாத அளவுக்கு ஆதாரத்தை அள்ளித் தந்துள்ளார். அனைத்தும் பொருத்தமான ஆதாரமாக இருக்கிறது.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் நூலை ஒரு முறை படித்துள்ளன். இன்று இரண்டாம் முறையாக ஆழ்ந்து படிக்கப் போகிறேன்.  நான் எழுதும் “இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I I” நூலுக்கான தாயரிப்பே இத்தகைய படிப்பு. நான் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதாரத்தைத் தான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம்

தொகுதி – I I

 

பொருளடக்கம்

1) மதங்களும் தத்துவங்களும்

2) கடவுள் மதம் ஆகியவற்றின் தோற்றத்துக்கு முன்பான நிலமைகள் (மாயவித்தை, தாந்தரீகம்)

3)   உலகாயதம்

4)   சாங்கியம்

5)   யோகம்

6)   வைசேஷிகம்

7)   நியாயம்

8,   மீமாம்சை (பூர்வ மீமாம்சை)

9)  வேதாந்தம்- உத்திர மீமாம்சை-வைதீகத் தத்துவம்

10)  துவைதம் (மத்துவர் வைணவம்)

11)  விசிட்டாத்வைதம் (ராமானுஜர் வைணவம்)

12)  அத்வைதம் (ஆதிசங்கரர் வைதீகம்)

13) ஆசீவகம்

14)  பவுத்தம்

15)  சமணம்

16)  சைவசித்தாந்தம்

17) இந்தியாவில் பிற மதங்கள்

   (வீர சைவம், காஷ்மீரிய சைவம், சீக்கியம்)

முதல் தொகுதி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்தது, இரண்டாம் தொகுதி அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளிவந்துவிடும்.

இரண்டாம் தொகுதிக்கான ஐந்து தரிசனங்களின் முதல் வரைவு முடிந்துவிட்டது, அடுத்த ஆசீவகத்துக்குத் தாவி விட்டேன். பத்து நாட்களுக்குள் ஆசீவகத்தை எழுதி முடித்துவிடுவேன்.

இரண்டாம் தொகுதி பொதுப்பட எழுதினாலும் ஆசீவகத்தைப் பொருத்தளவில் தமிழகத்தை குறிப்பாக சுட்ட வேண்டிவருகிறது. மூன்றால் தொகுதியில் தமிழகத்தின் தத்துவ நிலைமைகளைப் பற்றி எழுத இருக்கிறேன். தமிழகத்தில் ஆசீவகம், தமிழகத்தில் சமணம், தமிழகத்தில் பவுத்தம், தமிழகத்தில் வைதீகம் + சைவம், வைணவம் இவைகள் மூன்றாம் தொகுதியில் இடம் பெறும். வீண் விவாதத்தைப் பற்றி கவலைப்படாமல் எனது முடிவுகளை தைரியமாக எடுத்து வைப்பேன்.