Saturday 26 October 2019

சமூக மாற்றத்தினை முட்டை உதாரணத்தின் மூலம் மாசேதுங் விளக்குதல் பற்றி


சமூக மாற்றத்தினை முட்டை உதாரணத்தின் மூலம் மாவோ விளக்கியிருக்கிறார். ஆனால் இதனைப் புரிந்து கொள்வதில் பலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் “அகம்” “புறம்” என்பதின் சார்ப்புத் தன்மையை விளங்கிக் கொள்ளாமையே ஆகும். அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதில் அடித்தளத்தைப் புறம் என்றும் மேற்கட்டமைப்பை அகம் என்று கூறுகிறோம். இதில் எந்தச் சார்புத் தன்மையும் கிடையாது. அதனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற அடிப்படையிலேயே அகம் புறம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சார்புத் தன்மையான அகம் புறம் என்பதில் இருந்து முதலில் விலகி நின்று பார்த்தால், அதாவது அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற அடிப்படையில் இருநதுப் பார்த்தால் சிக்கலைத் தவிர்க்கலாம்.

முதலாளித்துவம் அவ்வப்போது பொருளாதாரச் சிக்கலில் அகப்படுகிறது. இதற்கான மாற்றத்தை புறத்தில் இருக்கிற மக்களின் அல்லது சிந்தனையாளர்களின் சிந்தனையைக் கொண்டு தீர்க்க முடியாது, இதற்கான தீர்வு அகத்திலேயே இருக்கிறது அதாவது முதலாளித்துவ வளர்ச்சியே அதற்குத் தடையாகி போகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை சமூகமயமானதாக இருக்கிறது, ஆனால் அதன் வினியோக முறை தனிச்சொத்தினடிப்படையிலானதாக இருக்கிறது. இந்த முரணை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்தால் திர்க்கமுடியாததால் அதன் பழைய உற்பத்தி உறவுகள் உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது. இதற்குப் பாட்டாளி வர்க்க முன்னணிப்படையான கட்சி தலைமை தாங்குகிறது.

இங்கே அகம் என்பது புரட்சியை நடத்திய மக்கள், தலைமை தாங்கிய கட்சி, பழைய அரசு, குறிப்பாகப் பழைய உற்பத்தி உறவுகள், முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளே காணப்பட்ட முரண் முற்றிய நிலையே புரட்சிகரப் புறநிலை (சூழ்நிலை) என்பதையே புறம் என்று அழைக்கப்படுகிறது. புரட்சிக்கான சூழல் மக்களிடமே கட்சிகளிடமோ தோன்றவில்லை. அது உற்பத்தி முறையின் உள்னே தோன்றுகிறது, அதனை உணர்ந்த கட்சியும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களும் புரட்சியை நடத்து முடிக்கின்றனர்.

இந்தப் புரட்சி புறநிலையால் தீர்மானிக்கப்பட்டது, மக்களால் தீர்மானிக்கப்பட்டதல்ல, ஆனால் மக்களே இதனை நடத்திக் காட்டுகின்றனர். மக்களே அல்லது கட்சியே இந்தப் புரட்சிகரச் சூழ்நிலையைத் தோற்றிவித்தது என்று கூறப்படுவதில்லை. முதலாளித்துவத்தின் அக முரண்பாட புரட்சிகரச் சூழலைத் தோற்றுவத்தது. அக முரண்பாடு என்று கூறியவுடன் மக்கள், கட்சி, அரசு, கோட்பாடு என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. மேற்கட்டமைப்பை அகம் என்று கூறப்படுவதுடன் இதனை இணைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணம் எளிமையாக இருக்கலாம், அதே எளிமையோடு கோட்பாட்டைப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்த உதாரணத்தை வைத்து முன்பும் பின்பும் கூறப்பட்டதைத் தெளிவாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

“ஒரு முட்டையைக் குஞ்சாக்க முடிகிறது, ஏன் ஒரு கல்லைக் குஞ்சாக்க முடிவதில்லை? ஏன் போருக்கும் – அமைதிக்கும் இடையில் ஒத்த இயல்பு இருக்கிறது. போருக்கும் – கல்லுக்கும் இடையில் எதுவுமேயில்லையா? ஏன் ஒரு மனித உயிர், பிரிதொரு மனித உயிருக்குத் தோற்றங் கொடுக்கிறதேயொழிய வேறொன்றுக்குத் தோற்றமளிப்பதில்லை? தேவையான குறிப்பிட்டச் சூழ்நிலைமைகளில் மட்டுமே எதிரானவைகளின் ஒத்த இயல்பு இருக்கிறது எனப்தே இதற்கான ஒரே காரணம். இத்தேவையான குறிப்பிட்ட சூழ்நிலைமைகள் இல்லாவிடில், எந்தவிதமான ஒத்த இயல்பும் இருக்காது” (முரண்பாடு பற்றி)

இங்கே மாவோ கூறப்பட்டதை மட்டும் படித்துவிட்டு பலர் குழம்பியுள்ளனர். இதற்கு முன்பே இதே நூலில் கூறப்பட்டதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால், இதைப் படிக்கும் போது சிக்கல் ஏற்படாது.

மாவோவின் எளிமையான உதாரணம் மட்டும் சிக்கலை ஏற்படுத்தவில்லை, அவரின் வார்த்தை பிரயோகமும் பலருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

“இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே எனப் பொருள்முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண் பாடுகளின் வளர்ச்சியாகும். அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்குமிடையே உள்ள முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியேயாகும். இம்முரண் பாடுகளின் வளர்ச்சியே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள்முதல்வாத இயங்கியல் புறக்காரணங்களைப் புறக்கணிக்கின்றதா? ஒருபோதும் இல்லை. புறக்காரணங்கள் மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணங்களோ மாறுதல்களுக்கான அடிப்படை. புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது. பொருத்தமான வெப்பநிலையில் ஒரு முட்டை குஞ்சாக மாறுகிறது. ஆனால், எந்த வெப்ப நிலையிலும் ஒரு கல் குஞ்சாக மாறுவதில்லை . ஏனெனில், இரண்டுமே வெவ்வேறான அடிப்படை கொண்டவை.” (முரண்பாடு பற்றி)

“புறக்காரணங்கள் மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணங்களோ மாறுதல்களுக்கான அடிப்படை.” இங்கே மாவோ அகக்காரணங்களோ “அடிப்படை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அடிப்படை என்றவுடன் இது “அடித்தளம்” என்பதாக, படிப்பவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, இந்த அடித்தளமே (அகமே) தீர்மானகரமா சக்தி என்று கருதிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாவோ கூறுகிறார், “புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது” இதைப் படிக்கும் போது, புறக்காரணங்கள் தீர்மானிக்கிறது, அது அகக் காரணங்களின் வழியாவே செயல்படுகின்றது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

இந்த மேற்கோளில் இயற்கையைப் பற்றிக் கூறியதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு படித்தால், சிக்கலைத் தவிர்க்கலாம். “இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே எனப் பொருள்முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண் பாடுகளின் வளர்ச்சியாகும்.”

இயற்கையின் உள்முரண்பாடே வளர்ச்சிக்குக் காரணம், அதே போல் சமூக மாற்றத்திற்குச் சமூகத்தில் உள்ள உள்முரண்பாடே காரணம் என்கிறார் மாவோ. சமூக முரண்பாட்டை மாவோ, “உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாடு” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல், மாவோ, இந்த முரண்பாடு எப்படி வர்க்கமாக வெளிப்படுகிறது என்பதையும், அடித்தளத்தற்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள முரண்பாடாகவும் சேர்த்துக் கூறியுள்ளார். இது பலருக்கு குழப்பதை விளைத்தது. இயற்கையில் ஏற்படும் மாறுதலுக்கு அதன் உள்முரண்பாடே என்று கூறினாரோ அதே போல் தான் சமூகத்திற்கும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அடித்தளத்தற்கு மேற்கட்டமைப்புக்கும் உள்ள முரண்பாடு என்பது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிபாடு என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அடித்தளமாகும் இந்த உறவுகளின் பிரதிபலிப்பே மேற்கட்டமைப்பில் வர்க்க உறவுகளாக உருபெறுகிறது. இதனை இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவோ:- "வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முனனேறி வளரும் நடைமுறை அனுபவத்தின் வளாச்சியுடன் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து மாறாக நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால் தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ விறைப்பான ஒன்றாகக் கருதுவதும் வறட்டுவாதம் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மைமையை நிராகரித்தால் அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துககும் முதலாளித்துவத்துக்கும் இடையிள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்துககும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளைத் திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமரிசனத்தை மலரச்செய்வதாகும்."
("சீனக் கம்யூனிஸ்டுக் கடசியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை" (12 மார்ச், 1957))

இதில் மாவோ மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது என்பதைத் தெளிபடுத்தியுள்ளார். அந்த அடிப்படைக் கோட்பாடுகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

முதலில் மார்க்ஸ்:-
“மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமத மாகவோ மாற்றியமைக்கின்றன.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)

எங்கெல்ஸ்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

லெனின்:-
“இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது- மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருததுக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும்.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

ஸ்டாலின்:-
“சமூக வாழ்வில்கூட, முதலில் புறச்சூழ்நிலைகள் மாறுகின்றன, முதலில் பொருளாயத நிலைமைகள் மாறுகின்றன, அதன் பின்னர் இந்த மாறிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மக்களுடைய உலகக் கண்ணோட்டம் ஆகியவையும் மாறுகின்றன.

இதனால் தான், பின்வருமாறு கூறுகிறார் மார்கஸ்:-
“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. ஆனால், இதற்க மாறாக, அவர்களது சமூக வாழ்க்கையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது,”

பொருளாயத நிலைமையை, புறச் சூழ்நிலைகளை வாழ்க்கையை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, நாம் “உள்ளடக்கம்” என்று சொல்வோமானால், கருத்தியல் ரீதியானதை, உணர்வை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, “வடிவம்” என்றுதான் நாம் சொல்ல முடியும். எனவே, வளர்ச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கில், உள்ளடக்கமானது வடிவத்தை முந்திக் கொண்டு செல்கிறது, வடிவமானது உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி நிற்கிறது. இந்த உண்மையில் இருந்துதான், பிரபலமான பொருள்முதல்வாத கருத்துரைப்புத் தோன்றுகிறது.

மார்க்சின் கருத்துப்படி பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்வின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில், சட்ட-    அரசியல் மற்றும் மதவியல்-தத்துவவியல் வளர்ச்சியானது, இந்த உள்ளடக்கத்தின் “சித்தாந்த வடிவமாக”, அந்த உள்ளடக்கத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது. இதிலிருந்து பின்வரும் முடிவை மார்க்ஸ் வந்தடைகிறார். “பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்துடன் முழுப் பிரமாண்டமான மேற்கட்டுமானமும் அதிகமான அல்லது குறைவான வேகத்தில் (more or less rapidly) மாறுதலடைகிறது.
பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதாரச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.” (அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம்- 34 & 37-38)

இயற்கையில் ஏற்படுகிற மாற்றத்திற்கு அதன் உள்முரண்பாடே காரணம் ஆகும், அதே போலச் சமூக மாற்றத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடே காரணமாகும். இயற்கைக்குள் ஏற்படுவதைப் போலவும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் ஏற்படுவது போலவும். முட்டையில் இருந்து கோழி வெளிவதற்கு அதன் உள்முரண்பாடே காரணமாகும். இந்த முட்டை உதாரணத்தில் அடித்தளம் என்பது வளர்ச்சிபெற்றுவரும் முட்டைக்குள் உள்ள கருவேயாகும், மேற்கட்டமைப்பு என்பது பொருத்தமான வெப்பநிலையாகும்.

ஒன்றை அகமாகக் கொண்டால் மற்றது புறம், மற்றதை அகமாகக் கொண்டால் அந்த ஒன்று புறம். ஆக அகம் – புறம் என்கிற சார்பான வழியில் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தும்.

Thursday 3 October 2019

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானிக்கிறதா? (மாசேதுங் கருதுத்து - ஒரு பார்வை)


மாசேதுங்:-
“உற்பத்தி சக்திகளும், நடைமுறையும், பொருளாதார அடித்தளமும், உண்மையில் முதன்மையான நிச்சயமான பங்கையே வகிக்கிறது. இதை மறுக்கக் கூடியவர்கள் பொருள்முதல்வாதிகளாக இருக்கமுடியாது. ஆனால், குறிப்பிட்ட நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் போன்ற கூறுகள் முதன்மையான தீர்மானகரமான பாத்திரமாக மாறி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன என்பது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (.. theory and the superstructure in turn manifest themselves in the principal and decisive role. )

உற்பத்தி உறவுகளில் மாற்றமேதும் இல்லாமல், உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியுற முடியாமல் இருக்கும்போது, உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம் முதன்மையான, தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது. "புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட் சிகரமான இயக்கம் இருக்க முடியாது” என லெனின் கூறிய காலத்தில், புரட்சிகர கோட்பாடு உருவாக்கமும், அதற்காக வாதாடுவதுமே முதன்மையான தீர்மானகரமான பங்கை வகித்தன. ஒரு கடமை (எத்தகையதொன்றானாலும் கூட) நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கைகளோ உருவாக்கப்படுவதுதான் முதன்மையான தீர்மானகரமான கூறாகும்.

அதேபோன்று, அரசியல்-பண்பாடு முதலிய மேல்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையானவையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இப்படிச் சொல்லும் போது நாம் பொருள் முதல்வாதத்திற்கு முரணாகச் செல்கிறோமா? இல்லை. ஏனெனில், வரலாற்றின் பொது வளர்ச்சியில் சடப் பொருட்களே சிந்தனையைத் தீர்மானிக்கிறது; சமூக வாழ்வு - சமூக உணர்வை நிச்சயிக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில், சிந்தனை என்பது சடப் பொருளின் மீதும்; சமுதாய உணர்வு என்பது சமுதாய வாழ்வின்மீதும்; மேல்கட்டுமானம் என்பது பொருளாதார அடித்தளத்தின் மீதும் பிரதிபலிப்பதை நாம் ஏற்று கொள்கிறோம். உண்மையில் அதை நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இது, பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, எந்திரவியல் பொருள் முதல்வாதத்தைத் தவிர்த்து, இயங்கியல் பொருள் முதல்வாதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.”
(முரண்பாடு பற்றி- 4 முதன்மை முரண்பாடும் ஒரு முரண்பாட்டின்
முதன்மைக் கூறும்
மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1- 467-468)


அரசியல், பண்பாடு போன்றவை மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பொழுது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாறுதல்கள் முதன்மையானதாகவும் தீர்மானகரமானதாகவும் ஆகின்றன என்கிறார் மாவோ. இங்கே மாவோ பொருளாதார அடித்தளம் மேற்கட்டமைப்பின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, கூடுதலாக குறிப்பிட்ட நிலைமைகளில் கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் தீர்மானகரமான பாத்திரமாக வெளிப்படுத்துவதாகவும் கூறிவிடுகிறார்.

இந்த விளக்கம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானகர பாத்திரம் வகிப்பதாக பொருள்கொள்ள வைத்திடுகிறது. பல மார்க்சிய எழுத்தாளர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படைகளில் இருந்து விலகுகின்றனர்.

குறிப்பிட்ட நிலைமைகளில் மேற்கட்டமைப்பு தீர்மானகரமான பாத்திரம் ஆற்றுகிறது என்று மாவோ கூறுகிறார். இது அடித்தளத்துக்கும் மேற்கட்டப்புக்கும் உள்ள இடைத் தொடர்பை பரஸ்வர வினையாற்றுதலாக புரிந்து கொள்வதற்கு முழுமையான இடம் கொடுக்கிறார்.

இன்று பரஸ்பரவினைபுரிதல் என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள், தோழர் மாவோவின் இந்தக் கருத்தைத் தான் முன்நிறுத்துகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அமைப்புகளோ இதனை விவாதித்து எந்த முடிவையும் இதுவரை நிலைநிறுத்தவில்லை. கம்யூனிச நடைமுறைச் சிக்கலுக்கு, இந்த பரஸ்பர வினைபுரிதல் காரணமானதை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. இதனை ஆழமாக விவாதிப்பது அவசியமானதாகும்.

லெனின்:-
"மேற்கட்டுமானம் ஒவ்வொரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி, இதை வரையறுக்காவிட்டால் புரட்சிக் கோஷம் தற்சமயம் பொருளற்ற வெற்றிச் சொல்லாகும்"
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

புரட்சிகர கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்து புரட்சியை ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். அப்போது எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும் எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுக்கிற தீவிரபாத்திரத்தை தீர்மானிக்கும் பாத்திரமாக மாசேதுங் கூறிவிடுகிறார்.  மேற்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்பொழுது அடித்தளம் திறனற்றுபோய்விட்டதாகவும் மேற்கட்டுமானத்தால் அடித்தளத்தை காப்பாற் வேண்டிய சூழல் ஏற்பட்டது போல் மாவோ பேசுகிறார்.

ஆனால் இந்தச் சூழலை மார்க்ஸ்:-
"மூலதனத்தின் ஏக போகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது."
(மூலதனம்I (தமிழ் என்.சி.பி.எச்)பக்கம் 1026-1027)

இங்கு மார்க்ஸ் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து சென்றமையால், முதலாளித்துவ மேற்கட்டுமான மேலோடுகள் அடித்தளத்துக்கு ஒவ்வாததாகிவிடுவதைக் குறிப்பிட்டு, மேலோடு உடைத்தெறியப்படும் என்று கூறுகிறார். அடித்தளத்தின் வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகிப் போனதால் உடைத்தெறியப்படுவதைக் குறிப்பிடுகிறார். அடித்தளம் பலவினப்பட்டு போனதால் மேற்கட்டமைப்பு தீர்மானகரபாத்திரம் எடுக்க வேண்டிய நிலைவந்தது என்று மாசேதுங் கூறுவது போல் மார்க்ஸ் பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடித்தளத்தின் வளர்ச்சி நிலைக்கு, மேற்கட்டமைப்பு பின்தங்கிப் போனதால் மேற்கட்டமைப்பு உடைத்தெறியப்படுகிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்குமான இயக்கவியல் தொடர்பை மறுப்பதின் விளைவே மாசேதுங்கின் கூற்றுக்குக் காரணம்.

மார்க்ஸ் கூறுகிறார்:-
“சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
 (தத்துவவியலின் வறுமை)

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவிற்கும் இயக்கவியல் தொடர்பு இருக்கிறது. இதனை தனித்தனியே பிரிக்க முடியாது.

(இது பற்றி விரிவான ஆய்வுக்கு


Monday 22 July 2019

10) மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் முக்கியத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


மார்க்சிய-லெனினியம் தத்துவஞானத்தில் மெய்யான புரட்சியை நிறைவேற்றியிருக்கிறது. அது முற்றிலும் புதிய உலகக் கண்ணோட்டத்தை, பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தை, மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தைப் படைத்திருக்கிறது.

உலகம் பொருளாயதமான இயல்பைக் கொண்டது, அதில் எல்லாமே மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கின்றன, கீழ்நிலையானவற்றிலிருந்து உயர் நிலையானவற்றுக்கு, பழமையிலிருந்து புதுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்று நிரூபிக்க முனைந்த ஒரே விஞ்ஞானத் தத்துவம் மார்க்சிய-லெனினியத் தத் துவஞானமே. அது மற்ற எல்லா விஞ்ஞானங்களின் முடிவுகளையும் தொகுப்பதுடன் அவற்றுக்கு அறிதலைப் பற்றிய இயக்கவியல் முறையை, நிகழ்வுகளை ஆராய்வதற்குச் சரி யான அணுகுமுறையைத் தருகிறது.

மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் உலகத்தைப் பற்றிய சரியான சித்திரத்தைத் தருவதன் மூலம், இயற்கை மற்றும் சமூகத்தின் வளர்ச்சியின் அதிகப் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் புரட்சிகரமான நடவடிக்கைக்கு சக்தி வாய்ந்த கருவியாக, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ் வின் எல்லாவிதமான வடிவங்களையும் எதிர்த்துப் போராடி நியாயமான, புதிய சமூகத்தை நிர்மாணிக்கின்ற கோடிக் கணக்கான மக்களின் உலகக் கண்ணோட்டமாக இருக்கிறது. மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் மார்க்சியக் கட்சிகளின் போர்த்திட்டம் மற்றும் செயல்தந்திரத்தின் தத்துவ அடிப்படையாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

9) வரலாற்றில் பெருந்திரளான மக்களின் பாத்திரமும் தனிநபருடைய பாத்திரமும் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உழைக்கும் மக்கள் பொருளாய்தச் செல்வத்தைப் படைப்பதில் தலைமையான பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவர்கள் உழைப்புக் கருவிகளைச் செய்கிறார்கள், அவற்றை அபிவிருத்தி செய்கிறார்கள், தம்முடைய அனுபவத்தையும் அறிவையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள். உழைக்கும் மக்கள் உலக மக்களுக்கு உணவளிக்கிறார்கள், உடையளிக்கிறார்கள், வாழ்க்கையிலுள்ள சிறந்த பொருட்கள் அனைத்தையும் படைக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி வரலாற்றையும் படைக்கிறார்கள்; ஏனென்றால் அவர்கள்தான் முன்னேற்றத்தின் பிரதான இயக்கு சக்தி. அடிமை உடைமை முறையும் நிலப்பிரபுத் துவமும், தாமாகவே அழிந்து விடவில்லை, ஒடுக்குபவர்களை எதிர்த்து உழைக்கின்ற ஆண்களும் பெண்களும் நடத்திய கடுமையான புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக அவை அழிந்தன. பெருந்திரளான மக்களின் படைப்பாற்றல் ருஷ்யாவில் முதலாளித்துவத்தை ஒழித்து மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சியின் போது குறிப்பிடத்தக்க வேகத்துடன் வெளிப்பட்டது.

மக்கள் பொருளாயதச் செல்வத்தை மட்டுமன்றி பொரு ளாய்தம் இல்லாத, ஆன்மிக, அறிவு மதிப்புகளையும் படைக் கிறார்கள். அறிவியல், இலக்கியம், கலைகள் பெருந்திரளான மக்களுடைய முயற்சிகளினால்தான் வளர்ச்சியடைந்திருக் கின்றன.

வரலாற்றில் தனிமனிதன் வகிக்கின்ற பாத்திரம் என்ன? பெரும்பான்மையினரை ஒடுக்குவதற்கு சிறுபான்மையினரது உரிமையை நியாயப்படுத்துவதற்காக முதலாளித்துவ சித்தாந்திகள் மக்களுடைய உணர்வில் கட்டுப்பாடற்ற கும்பல் மற்றும் ''தலைவர்' என்னும் பிற்போக்கான தத்துவத்தை விதைப்பதற்கு முயல்கிறார்கள். அரசர்கள், ராணுவத் தலைவர்கள், சட்ட கர்த்தாக்கள் ஆகியோரைப் போன்ற தலைசிறந்த மனிதர்களே வரலாற்றைப் படைக் கிறார்கள்; அவர்கள் தம்முடைய விருப்பத்துக்கேற்ப வரலாற்றுப் போக்கைத் திருப்ப முடியும் என்னும் அனு மானத்தை இத்தத்துவம் அடிப்படையாகக் கொண்டிருக் கிறது. உழைக்கும் மக்கள் திரளினர் செயலற்றவர்கள், வரலாற்று ரீதியில் சக்தியற்றவர்கள், கட்டுப்பாடற்ற கும்பல் என்று இத்தத்துவம் காட்டுகிறது.

மனித சமூகத்திலிருக்கின்ற எல்லாமே ஒரு சிலரால் உருவாக்கப்பட்டவை என்ற தத்துவத்தை மார்க்சிய (லெனினியம் தகர்த்து விட்டது. எனினும் வரலாற்றில் தனிநபர் வகிக்கின்ற பாத்திரத்தை மார்க்சிய-லெனினியம் முற்றிலும் புறக்கணிக்கிறது என்பது இதன் பொருளல்ல. மனித சமூக வரலாற்றில் எந்த வர்க்கமும் அதன் மாபெரும் அரசியல் தலைவர்களை உருவாக்காமல், அரசியல் இயக்கத்தை அமைத்து அதற்குத் தலைமை தாங்குகின்ற தகுதியுடைய பிரதிநிதிகள் இல்லாமல் தலைமையான நிலையை ஒருபோதும் அடைந்ததில்லை. மக்களுடைய தேவைகளையும் முன்னுரிமைகளையும் புரிந்துகொண்ட முற் போக்கான தலைவர்கள் சமூகத்திற்கு முன்புள்ள பிரச்சினை களுக்கு மிகச் சிறந்த தீர்வைக் கண்டுபிடித்து அதன் மூலம் வரலாற்று நிகழ்வுப் போக்குகளை விரைவுபடுத்துகிறார்கள். அதற்கு எதிர்மாறாகப் பிற்போக்காளர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளின் வேகத்தைக் குறைக்கிறார்கள், சமூக வளர்ச்சி யைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

தலைசிறந்த மனிதர்கள் பெருந்திரளான மக்களுக்கு, சமூக வர்க்கங்களுக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த வர்க்கங்களும் சமூகப் பிரிவுகளும் தருகின்ற ஆதர வினால் அவர் கள் வலிமை அடைகிறார்கள். இத்தலைவர் கள் எவ்வளவுதான் அறிவாளிகளாக, உண்மையாகவே எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும் இந்த ஆதரவு மட்டும் இல்லையென்றால் அவர்கள் வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சக்தியற்றவர்களாக இருப் பார்கள். பெருந்திரளான மக்களுடைய நடவடிக்கைகளி லிருந்தே தலைவர்கள் தம்முடைய பலத்தைப் பெறுகிறார்கள்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

8) சமூக உளவியலும் சித்தாந்தமும்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக உளவியலும் சித்தாந்தமும். சமூக உணர்வு இரண்டு துறைகளிலும் இரண்டு மட்டங்களிலும் இருக்கிறது. சமூக உளவியல் மற்றும் சித்தாந்தம் அத்துறைகளாகும்.

சமூக உளவியல் என்பது அன்றாட வாழ்க்கையின் தாக்கத்தில் சமூகப் பிரிவுகளிலும் வர்க்கங்களிலும் (தேசிய இனங்களில் கூட) தோன்றுகின்ற உணர்ச்சிகள், எண்ணங் கள், விருப்பார்வங்கள், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், மனோநிலைகள் ஆகியவற்றின் மொத்தமாகும். சித்தாந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குரிய அரசியல், சட்டவியல், தார்மிக, தத்துவஞான, சமய மற்றும் அழகியல் கருத்துகளின் மொத்தம் ஆகும்.

சமூக உளவியல் என்பது மக்கள் தம்முடைய சமூக வாழ்நிலையைப் புரிந்து கொள்வதன் ஆரம்பக் கட்டமாகும். அதற்கு மாறுபட்ட முறையில் சித்தாந்தம் சமூக உணர்வின் உயர்ந்த மட்டமாக, வாழ்க்கையின் பொருளாயத நிலைமை களை மக்கள் இன்னும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்வதாக இருக்கிறது. சித்தாந்தம் வர்க்கங்கள், தேசிய இனங்கள், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான உறவுகளின் சாராம் சத்தை வெளிப்படுத்த வேண்டும், இந்த உறவுகளைத் தொடர வேண்டிய அல்லது மாற்ற வேண்டிய அவசியத்தை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நிலையிலிருந்து நிறுவ வேண்டும். தன்னியல்பாகத் தோன்றுகின்ற உளவியலைப் போலன்றி சித்தாந்தம், சித்தாந்திகள் என்றழைக்கப்படும் ஒரு சிறப்புக் குழுவினருடைய பணியின் விளைவாகும்.

வர்க்க சமூகத்தில் சமூக உளவியலும் சித்தாந்தமும் தனிவகையான வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு வர்க்கமும் அதற்குரிய உளவியலையும் சித் தாந்தத்தையும் கொண்டிருக்கிறது; அவை சமூக உற்பத்தி அமைப்பில் அதன் இடத்தைப் பிரதிபலித்து அதன் தேவைகளையும் நலன் களையும் வெளியிடுகின்றன. இதைப் பற்றி லெனின் பின்வருமாறு எழுதினார்: "நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவ தொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போ தும் இருப்பார்கள். (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 109. 110)

தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் மார்க்சிய-லெனினி யம் ஆகும். அதன் வர்க்கம் உள்ளடக்கமும் இலட்சியங்களும் முந்திய எல்லா சித்தாந்தங்களிலிருந்தும் முழுமையாக வேறுபட்டிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டுகின்ற வர்க்கத்தின் நலன்களுக்குப் பாடுபடவில்லை, அது தொழிலாளி வர்க்கத்தின், எல்லா உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் பாடுபடுகிறது. இரண்டாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டலை ஒழித்துப் புதிய சமூகத் தை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தைத் தத்துவ ரீதியில் நிறுவியிருக்கிறது. மூன்றாவதாக, மார்க்சிய-லெனினியம் பெருந்திரளான மக்களின் மிகச் சிறந்த நலன்களுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற முறையில் உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதில், நீதி, சுதந்திரம், மக்கள் மற்றும் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்துவதில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

7) சமூக உணர்வு மற்றும் சித்தாந்தம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக உணர்வின் பாத்திரம். சமூக உணர்வு என்பது சமூகத்தில் இருக்கின்ற, மக்களுடைய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற கருத்துகள், தத்துவங்கள், எண்ணங்கள், கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளின் மொத்தம் என்று மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் வரையறுக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சமூக உணர்வு சமூக வாழ்நிலையை அல்லது மக்களுக்கு இடையிலுள்ள பொருளாயத உறவுகளைப் பிரதிபலிக்கிறது. சமூக வாழ் நிலை என்பது மக்களுடைய பொருளாயத வாழ்க்கையையும் பொருளாய்தச் செல்வத்தின் உற்பத்தி நிலைமைகளை யும் குறிக்கிறது என்றால் "சமூக உணர்வு”' என்னும் கருத்தமைப்பை அவர்களுடைய அறிவு சார்ந்த நடவடிக் கைக்கும் கையாள முடியும்.

சமூக வாழ்நிலை சமூக உணர்வின் உள்ளடக்கத்தையும் அதன் வர்க்க சாராம்சத்தையும் நிர்ணயிக்கிறது. அதே சமயத்தில் சமூக உணர்வு செயலற்றதல்ல, அதற்கு முதலில் உயிர் கொடுத்த சமூக வாழ்நிலையின் மீது தாக்கம் செலுத்துகிறது.

இத்தாக்கம் சமூக உணர்வின் தன்மையை, அதாவது அதிலடங்கியிருக்கின்ற கருத்துகள், தத்துவங்கள், கண்ணோட்டங்களைப் பொறுத்திருக்கிறது. இந்த சமூகத் தத் துவங்களும் கருத்துகளும் உள்ளடக்கத்தில் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவை. ஒரு பக்கத்தில் பழமையானவை, பிற்போக்கானவை; மறு பக்கத்தில் புதியவை, முற்போக்கானவை, பழைய கருத்துகளும் தத்துவங்களும் மறைந்து கொண்டிருக்கின்ற வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலித்து வெளியிடுகின்றன, ஆகவே அவை சமூக வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சியின் மீது பாதகமான தாக்கத்தைக் கொண் டிருக்கின்றன, ஏனென்றால் அவை இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன. இதிலிருந்து மாறுபட்ட முறையில் புதிய, முற்போக்கான கருத்துகளும் தத்துவங்களும் முற்போக்கான வர்க்கங்கள், சமூகப் பிரிவுகளின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன; அதன் விளைவாக அவை சமூக முன் னேற்றத்தைத் தூண்டுகின்றன.

உணர்வு சமூக உணர்வு, தனிமனித உணர்வு என்னும் இரண்டு ரகங்களைக் கொண்டிருக்கிறது. தனிமனித உணர்வு என்பது ஒரு தனி நபருடைய ஆன்மிக உலகமாகும்; அவருடைய சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பார்வங்கள். அது ஒரு குறிப்பிட்ட மனித ருடைய வாழ்க்கையில், அவருடைய செய்முறை நடவடிக்கையின் நிகழ்வுப் போக்கில் உருவாகி அவருடைய இருத்த லின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது. தனி மனித உணர்வு என்பது ஒரு தனி நபருடைய செய்முறை அனுபவம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் வெளி யீடாகும்.

மக்களுடைய பொது நலன்களை வெளியிடுகின்ற கருத்து கள், கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், விருப்பார்வங்கள் சமூக உணர்வாக இருக்கின்றன. ஒரு வர்க்க சமூகத்தில் இவை ஒரு வர்க்கம், சமூகப் பிரிவின் அல்லது ஒரு மக்கள் கூட்டின் பொது நலன்களாக இருக்கின்றன.

உணர்வின் இந்த இரண்டு ரகங்களும் பின்னிப் பிணைந் திருக்கின்றன; அவை இயக்கவியல் ஒற்றுமையில் இருக்கின்றன. சமூக உணர்வு தனிமனித உணர்வின் மூலமாகவே வெளிப்படுகிறது; ஏனென்றால் எந்த ஒரு நபரும் சமூகத்தில் வாழ்கிறார், உழைக்கிறார், ஒரு குறிப்பிட்ட வர்க்கம், தேசிய இனம் மற்றும் சமூகக் கூட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

6) அரசு என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


அரசு. அரசு என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? அரசின் தோற்றமும் அதன் இருத்தலும் வர்க்கங்கள் இருத்தலுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பூர்விகக் கூட்டு வாழ்க்கைச் சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை, அங்கே அரசும் இல்லை. ஆனால் சமூகத்தில் தனியுடைமை தோன்றிய பொழுது, சமூகம் பகைமையான வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்ட பொழுது அரசு உருவாகியது.

பகையியல் சமூகங்கள் எல்லாவற்றிலும் ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற் குரிய பொறியமைவாக அரசு இருக்கிறது. சுரண்டல்காரர் கள் உழைக்கும் மக்களைத் தமக்கு அடிபணியச் செய்வதற் குரிய கருவியாகவும் அது இருக்கிறது. இது சுரண்டல் அரசின் வர்க்க சாராம்சம் ஆகும். சுரண்டல்காரர்கள் தம்முடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ராணுவம், நீதிமன்றங்கள், சிறைகள், தண்டிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றை உபயோகிக்கிறார்கள். அவர்கள் நேரடியான ஒடுக்குமுறை அமைப்புகளை உபயோகிப்பதுடன் எல்லா சித்தாந்த ஒடுக்குமுறைச் சாதனங்களையும் (கல்வி நிலையங்கள், பத்திரிகைகள், வானொலி, திரைப்படங்கள், இதர தகவல் தொடர்புச் சாதனங்களை) உபயோகிக்கிறார்கள்.

சோஷலிசப் புரட்சி சுரண்டல் அரசை அகற்றி விட்டு சோஷலிச அரசைக் கொண்டு வருகிறது. அது கீழே தள்ளப்பட்ட சுரண்டல்காரர்கள் மீது தொழிலாளி வர்க்கத் தின், சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினருடைய ஆதிக்கத்தின் அரசியல் ஸ்தாபனமாக இருக்கிறது. சோஷலிச அரசின் முக்கியமான கடமை ஒடுக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பை, உழைக்கும் மக்கள் மத்தியில் சமத் துவமான சமூக அமைப்பை நிர்மாணிப்பதாகும்.

அரசுக்குப் பல வடிவங்களும் ரகங்களும் உள்ளன. அரசு எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறது என்பதைப் பொறுத்து அதன் ரகம் நிர்ணயிக்கப்படுகிறது, அது அடிமை உடைமையாளர்களுக்குச் சேவை செய்தால் அது அடிமை உடைமை அரசு ஆகும், நிலப்பிரபுத்துவ நிலக்கிழார்கள் அதிகாரத்தை வகித்தால் அது நிலப்பிரபுத்துவ அரசு ஆகும். முதலாளிகள் முதலாளித்துவ அரசை நடத்துகிறார் கள். அரசின் இம்மூன்று ரகங்களிலும் சுரண்டல்காரர் சுளின் ஆட்சி குணாம்சமாகும்; அவர்களது வர்க்க சாராம் சத்தை இவை வெளிப்படுத்துகின்றன்.

சோஷலிசத்தின் நிர்மாணமும் அமைப்பு என்ற முறையில் அதைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் அரசின் புதிய ரகத்தினால், சோஷலிச அரசினால் நிறைவேற்றப்படு இன்றன. புதிய சமூகம் முதலாளித்துவத்திலிருந்து உடனடியாக, நேரடியாக வெளிவருவதில்லை. "... முதலாளித்துவ சமுதாயத்துக்கும் சோஷலிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது; இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது'' என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். (மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் சமூகம், மாஸ்கோ , முன்னேற்றுப் பதிப்பகம், 198.7, பக்கங்கள் 56-57.)

சோஷலிசம் நிர்மாணிக்கப்பட்ட பிறகு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு பொது மக்களுடைய அரசாக, தொழிலாளி வர்க்கம் தலைமையான பாத்திரத்தை வகிக் கின்ற அனைத்து மக்களின் அரசியல் ஸ்தாபனமாக மாற்றமடைகிறது.

அரசின் ரகம் அதன் வர்க்க சாராம்சத்தை எடுத்துக் காட்டுகிறது; அதன் வடிவம் அது எந்த அரசாங்க ரகம் (முடியாட்சி, குடியரசு, இதரவை) என்பதையும் அதன் அரசியல் ஆட்சி முறையையும் (மிதவாத ஜன நாயகம், ராணுவ-பாசிச சர்வாதிகாரம்) அதன் நிர்வாகக் கட்டமைப்பையும் (ஒற்றையாட்சி, கூட்டாட்சி) எடுத்துக் காட்டுகிறது.

முதலாளித்துவ அரசுகள் பல வடிவங்களைக் கொண் டிருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒரே மாதிரி யானதே. அவை அனைத்துமே மூலதன ஆதிக்கத்தின் கருவிகளே. முதலாளித்துவ அரசின் வடிவம் எப்படியிருந் தாலும், அதன் பெயர் எப்படியிருந்தாலும் அதன் சுரண்டு கின்ற சாராம்சத்தை, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற கருவி என்னும் பாத்திரத்தை அதனால் மாற்ற முடியாது. ''முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பல்வேறாக இருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒன்றே. இந்த அரசுகள் எல்லாமே, அவற்றின் வடிவங்கள் எப்படியிருந்தாலும், கடைசிப் பகுப்பாய்வில் தவிர்க்க இயலாதபடி முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகார மாகவே இருக்கின்றன'' என்று லெனின் எழுதினார். (# வி. இ. லெனின், நூல்: திரட்டு, இரண்டாம் பாகம், பக்கம் 2.55,) முதலாளித்துவ அரசு உழைப்பின் மீது மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற கருவியாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

5) வர்க்கப் போராட்டம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


வர்க்கப் போராட்டம் - சமூக வளர்ச்சியின் தோற்றுவாய். வர்க் கங்கள் என்றால் என்ன, அவை எப்படித் தோன்றின் என்னும் கேள்விகளை மக்கள் நெடுங்காலமாகவே சிந்தித்து வந்திருக்கிறார்கள். வர்க்க ஏற்றத்தாழ்வு நெடுங்காலத் திலிருந்தே இருந்து வந்திருக்கிறது, அது ஒருபோதும் மறையாது, கடவுள் செல்வர்களையும் ஏழைகளையும் நிரந் தரமாகப் படைத்திருக்கிறார் என்று சுரண்டுபவர்கள் போதிக்கிறார்கள்.

சமூகத்தில் ஏழைகள், செல்வர்கள், சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் பிரிவினை வர்க்கப் பிரிவினை ஆகும். சமூகத்தில் ஒரு பகுதியினர் நிலத்தை உடைமையாக வைத்திருக்கிறார்கள், மறு பகுதியினர் அந்த நிலத்தில் பாடுபடுகிறார்கள் என்றால் அங்கே இரண்டு பகை வர்க்கங் கள் - நிலக்கிழார்கள் மற்றும் விவசாயிகள் - இருக்கின்றன என்று அர்த்தமாகும். மக்களில் ஒரு பிரிவினர் பாக்டரிகளை யும் தொழிற்சாலைகளையும் உடைமையாகக் கொண்டிருக் கின்ற பொழுது, மறு பிரிவினர் அவற்றில் பாடுபடுகின்ற பொழுது நாம் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு வர்க்கங்களைப் பார்க்கிறோம். முதலாளிகள் தொ ழிலாளர்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியை சுவீகரிக்கிறார்கள். உற்பத்திச் சாதனங்களின் பால் தமக்கு இருக்கின்ற வேறுவிதமான உறவை ஆதாரமாகக் கொண்டு மக்களில் ஒரு பிரிவினர் மற்றவர்களுடைய உழைப்பை சுவீகரித்துக் கொள்கின்ற பொழுது அந்த மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் எனப்படும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் உற்பத்திச் சாதனங்கள் பாலான தம்முடைய உறவினால், உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் தாங்கள் வகிக்கின்ற பாத்திரத்தினால், பொதுச் செல்வத்தை சுவீகரிக்கின்ற முறையினால், அதன் அளவினால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற மக்கட் குழுக்கள் வர்க்கங்கள் ஆகும்.

வர்க்கங்கள் எப்பொழுதும் இருந்திருக்கின்றனவா, அவை எப்பொழுதும் இருக்குமா? வர்க்கங்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. பூர்விக சமூக அமைப்பில் மக்கள் சமத்துவ உரிமைகளைக் கொண்டு சிறு சமூகங்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் கூட்டாக உழைத்தார்கள், தங்களிடமிருந்த எல்லா வற்றையும் பொதுவாக வைத்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தாலும் அது எல்லோருடைய உடைமையாக வும் இருந்தது. எல்லோரும் அதைச் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் பொருளாதார வளர்ச்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தபடியால் மனிதனுக்கு மிகக் குறைவான உணவே கிடைத்தது; அது அவன் உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இத்தகைய நிலைமை களில் ஒரு நபர் மற்றொருவரைச் சுரண்டி அவருடைய உழைப்பில் வாழ்க்கை நடத்த முடியாது.

கம்யூனிசத்தின் கீழ் வர்க்கப் பிரிவினைகள் மறைந்துவிடும். ஒரு சமயத்தில் லெனின் சொற்பொழிவாற்றச் சென்ற அரங்கத்தில் “தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி நிரந்தரமாக இருக்கும்'' என்று எழுதப்பட்ட சுவரொட் டியைப் பார்த்தார். இந்தக் கோஷம் தவறானது என்பதை லெனின் அக்கூட்டத்தில் விளக்கினார். தொழிலாளர்களது இலட்சியம் வர்க்கம் என்ற முறையில் தங்களை நிரந் தரமாக்கிக் கொள்வது அல்ல, வர்க்க வேறுபாடுகளை ஒழித்து, வர்க்கமற்ற சமூகத்தை, கம்யூனிசத்தை நிர் மாணிப்பதே அவர்களுடைய இலட்சியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

வர்க்கங்கள் முதலில் எப்பொழுது, எப்படித் தோன்றின? வர்க்கமற்ற பூர்விக சமூகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது; அக்காலத்தில் மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைந்து பூர்விக சமூகத்தின் வாழ்க்கை முறை மாறியது. காலப் போக்கில் பூர்விக சமூகத்தில் படி.வரிசை நிலை ஏற்பட்டது. சிலர் செல்வர்களானார்கள்; நிலத்தை, கால் நடைகளை, உற்பத்திக் கருவிகளைக் கைப்பற்றித் தம்முடையதாக்கிக் கொண்டார்கள். உடைமை இல்லாத மற்றவர்கள் செல்வர் களுக்குப் பணிந்து உழைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது; அவர்கள் படிப்படியாக செல்வர்களுடைய அடிமைகளாக மாறினார்கள்.

நிலம், காடுகள், நீர், உழைப்புக் கருவிகளில் தனியுடைமை இப்படி உருவாயிற்று. பிரெஞ்சுத் தத்துவஞானியும் எழுத்தாளரும் அறிவியக்கவாதியுமான ழான் மாக் ரூஸேT (1712-1778) முதன்முதலாக நிலத்தில் வேலியமைத்து "இது என்னுடைய நிலம்!'' என்று கூறியவர் களைப் பற்றிக் கடுஞ்சீற்றத்துடன் பேசினார். தனியுடைமையும் அதன் விளைவாகிய ஆபத்துகளும் துன்பங்களும் சில தனி நபர்களது தீய எண்ணங்களால் தோன்றின என்று அவர் கருதியது ஓரளவுக்கு வெகுளித்தனமே. எனினும் அதில் சிறிதளவு உண்மை உண்டு. தனியுடைமை வர்க்கங் களைத் தோற்றுவித்தது; சமூகத்தை ஆண்டாலும், அடிமை யும், ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் என்ற பகைமை யான இரண்டு வர்க்கங்களாகப் பிரித்தது.

ஒவ்வொரு பகையியல் சமூகத்திலும் அடிப்படையில் எதிரெதிரான இரண்டு வர்க்கங்கள் இருப்பதும் அவை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுவதும் குணாம்சங் களாகும். உதாரணமாக, அடிமை உடைமைச் சமூகத்தில் அடிமைகளும் அடிமை உடைமையாளர்களும் இருந்தார்கள்; நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலக்கிழார்களும் விவசாயிகளும் இருந்தார்கள்; முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு எதிர்நிலையான வர்க்கங்கள் இருக்கின்றன. மனித சமூகம் பகைமையான வர்க் கங்கள் தோன்றிப் பிளவுற்ற கால் முதலாகவே மனித சமூக வரலாறு என்பது ஒடுக்குபவர்களை எதிர்த்து ஒடுக்கப் பட்டவர்களின் தீவிரமான போராட்டத்தின் வரலாறாக இருந்தது. சோஷலிசம் வெற்றியடைகின்ற வரை இந்த நிலை நீடித்தது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்கள் தம்முடைய விடுதலைக்குப் போராடுகின்றன. சுரண்டுபவர்கள் தம் முடைய செல்வத்தையும் அதிகாரத்தையும் இழக்க விரும்புவது இல்லை. அவர்கள் மெய்யாகவே என்ன செய்கிறார்கள் என்றால் உழைக்கும் மக்களை இன்னும் அதிகமாக அடிமைப்படுத்தி அதன் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கே பாடுபடுகிறார்கள்.

''சுதந்திரம் உடை யோனும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலேபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணை யடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண் டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங் கமாகவும் இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்கள் து பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று" என்று மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 191.)

சுரண்டல் அமைப்பின் கீழ் வர்க்கங்களுக்கு இடையில் போராட்டம் சமூக வளர்ச்சியின் விதியாக, சமூக முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த இயக்கு சக்தியாக இருக்கிறது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்களின் புரட்சிகரமான போராட்டம் பழைய, காலாவதியான எல்லாவற்றையும் அகற்று கிறது, அதே சமயத்தில் புதியனவற்றுக்கு, முற்போக் கானவற்றுக்குக் களத்தைச் சுத்தமாக்குகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் அடிமை முறை நிலவிய பொழுது ஸ்டார்ட்ட கஸ்) தலைமையில் அடிமைகள் கலகம் செய்தது அத்தகைய போராட்டங்களில் ஒன்றாகும். 16ஆம் நூற்றாண்டில் ஜெர் மனியில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர், 14-15ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் நடைபெற்ற ஜாக் கெரி, 18ஆம் நூற்றாண்டில் ருஷ்யாவில் (நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்) புகச்சோவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போர், பிரான்சில் முதலாளித்துவ அமைப்பை நிறுவிய, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சி, உலகத்தில் சோஷலிச சகாப்தத்தைத் தொடக்கிய ருஷ்யாவின் மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சி ஆகியவை மற்ற உதாரணங் களாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

4) சமூக-பொருளாதார உருவாக்கம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக-பொருளாதார உருவாக்கம். சமூக-பொருளாதார உரு வாக்கம் என்பது சமூகத்தின் ஒரு ரகம்; ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பிரத்யேகமான விதிகளைக் கொண்டு இயங்குகின்ற, வளர்ச்சி படைகின்ற ஒருங்கிணைந்த சமூக அமைப்பு அது.

உற்பத்தி முறையின் முக்கியமான அம்சம் அது எல்லாக் காலத்திலும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கிறது என்பதாகும். உற்பத்தியில் மாற்றுங்களும் வளர்ச்சியும் உற்பத்திச் சக்திகளின் மாற்றங்களுடன் தொடங்குகின்றன என்பது முக்கியமாகும். இம்மாற்றங் களைத் தொடர்ந்து உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பின்னர் அவை மொத்த சமூக அமைப்பின், சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கின்ற சமூகக் கருத்துகளின், அரசியல் கண்ணோட்டங்களின் மாற்றத்துக்கு இட்டுச் செல்கின்றன.

மேற்கட்டுமானம் பொருளாதார அடிப்படையிலிருந்து (உற்பத்தி, பரிவர்த்தனை மற்றும் வினியோகச் செயல்முறையில் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளின் மொத்தம்) சுயேச்சையாக இருப்பது மட்டுமின்றி, அடிப்படையின் மீதும் தாக்கம் செலுத்துகிறது என்று மார்க்சியத்தின் மூலவர்கள் வலியுறுத்தினார்கள், "அரசியல், சட்டவியல், தத்துவஞானம், சமயம், இலக்கியம், கலை, இதரவற்றின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் ஒன்றின் மீதொன்றும் பொருளாதார அடிப்படை மீதும் தாக்கம் செலுத்துகின்றன. பொருளாதார நிலைமைதான் காரணம் மற்றும் சுறுசுறுப்பான ஒரே சக்தி, மற்றவை அனைத்தும் செயலற்ற தாக்கத்தையே கொண்டிருக்கின்றன. என்று ஒருவர் கருத முடியும். இல்லை, அதற்கு மாறாக, இடைச்செயல் பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - முடிவில் அது எப்பொழுதும் தன்னை நிறுவிக் கொள்கிறது - நடைபெறுகிறது” என்று எங்கெல்ஸ் எழுதினார். (Marx, F, Engels, Selected Correspondence, pp. 441-442.)

மார்க்சிய-லெனினியம் சமூக வாழ்க்கையில் எல்லா அம் சங்களின் இடைச்செயலைப் பகுப்பாய்வு செய்வதிலிருந்து முன்னேறுகிறது; இந்த இடைச்செயலில் பொருளாய்தச் செல்வத்தின் உற்பத்தி முறையை முக்கியமான, நிர்ணயகரமான, தலைமையான சக்தி என்று கருதுகிறது.

ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்தை மற்றொரு சமூக-பொருளாதார உருவாக்கம் ஏன் அகற்றுகிறது. எப்படி அகற்றுகிறது?

உற்பத்தி முறையில் மிகவும் சுறுசுறுப்பான அம்சம் உற்பத்திச் சக்திகளே. அவை தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கின்றன, உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன, உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளிலிருந்து பின் தங்கி விடுகின்றன, அவற்றுடன் மோது கின்றன, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பழைய உற்பத்தி உறவுகளுக்கு பதிலாகப் புதிய உற்பத்தி உறவுகள் ஏற்படுவதன் மூலம் இம்மோதல் தீர்க்கப்படுகிறது.

உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் இயல்பு, வளர்ச்சி நிலையுடன் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் மார்க்சிய விதியின் சாரம் இதுவே. இந்த விதி பொருளாயத் உற்பத்தியின் முன்னேற்றத்துக்கும் அதனுடன் சேர்ந்து மொத்தமாக சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அடிப்படையான இயக்குச் சக்தியாக இருக்கிறது. மனித சமூகத்தின் வரலாறு முழுவதிலும் இயங்கியுள்ள, மிகவும் சர்வப்பொதுவான விதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதல் பழைய சமூக-பொருளாதார உருவாக்கம் அழிக்கப்பட்டு அதனிடத்தில் புதியது ஒன்று ஏற்படுவதை அவசியமாக்குகிறது. அதனால்தான் வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் பாதையில் சமூகம் முன்னேறி வருகின்ற பொழுது பழைய சமூக-பொருளாதார உருவாக்கங்கள் அழிந்து அவற்றுக்குப் பதிலாகப் புதியவை ஏற்படுகின்றன. வரலாற்றில் ஐந்து சமூக-பொருளாதார உருவாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன: பூர்விகக் கூட்டு வாழ்க்கை, அடிமை உடைமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் (அதன் முதல் கட்டம் சோஷலிசம் எனப்படும்).

ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்திலிருந்து அடுத்த தற்கு மாற்றம் ஆழமான சமூகக் கொந்தளிப்பைக் குறிக் கிறது; அது புரட்சி என்ற வடிவத்தை மேற்கொள்கிறது. அடிமை உடைமைச் சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயத் துக்கும் அது முதலாளித்துவ சமூகத்துக்கும் வழிவிட்டதைப் போல் அந்த சமூகம் கம்யூனிசத்துக்கு இடம் கொடுக்கப் போவது உறுதி. இது மனித சமூகத்தின் வளர்ச்சியில் சமூக வரலாற்று மற்றும் விதிவழிப்பட்ட நிகழ்வுப் போக்கு ஆகும்.

சமூக வளர்ச்சியின் முற்போக்கான இயல்பை அறிதல் மாபெரும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக் கிறது; ஏனென்றால் அது உழைக்கும் மக்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் தங்களுடைய வெற்றியைப் பற்றி உறுதியையும் கொடுக்கிறது. தங்களுடைய இலட்சியம் வெற்றியடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்; ஏனென்றால் வரலாற்று வளர்ச்சி விதிகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன,
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

3) பொருளாயத உற்பத்தி - வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சி பின் அடிப்படை– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பொருளாயத உற்பத்தி - வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சி பின் அடிப்படை. பொருளாயத உற்பத்தியில் ஏராளமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக, மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை உருவாக்குவதற்கு அவசியமான முதல் பொருட்கள் - இவற்றில் பூமி, அதன் உட்பகுதி, தாவர உலகம், பிராணி உலகம் அடங்கும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மனிதன் தனது உழைப்பில் பயன்படுத்துகின்ற பொருட்கள் அல்லது உழைப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன, பொருளாயத உற்பத்தியில் ஈடுபடுவதற்கு உழைப்புச்சாதனங்கள் அல்லது மக்கள் தமக்கும் உழைப்புப் பொருட்களுக்கும் இடையில் வைக்கின்ற, அதா வது உழைப்புப் பொருட்களின் மீது செயல்படுகின்ற பொருட்கள் அவசியமாக இருக்கின்றன. இந்த ரகத்தில் முதலாவதாக, உழைப்புக் கருவிகள் (கோடரி, ரம்பம், கடைசல் கருவி, பலவிதமான இயந்திரங்கள், இதரவை) அடங்கும். இக்கருவிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உழைப்புப் பொருட்களும் உழைப்புக் கருவிகளும் உற்பத்திச் சாதனங்கள் ஆகும்.

உற்பத்திச் சாதனங்கள் தாமாகவே செயல்பட முடியாது. பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற நிகழ்வுப் போக்கில் உழைக்கும் மக்கள், (அவர்களுடைய அறிவு, ஆற்றல்) தலைமையான பாத்திரத்தை வகிக்கின்றனர். மக் கள் உடைப்புச் சாதனங்களைப் படைத்து அவற்றை இயக்கு கிறார்கள். உழைப்புச் சாதனங்களும் பொருளாயுதச் செல்வத்தைப் படைக்கின்ற மக்களும் சமூகத்தின் உற்பத்திச் சக்திகளாக இருக்கிறார்கள். உற்பத்திச் சக்திகள் சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயத உறவுகளைக் குணாம்சப்படுத்துகின்றன. அவற்றின் வளர்ச்சி மட்டம் இயற்கையின் மேல் மனிதனுடைய ஆதிக்கத்தின் அளவை எடுத்துக் காட்டுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டம் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியின் அளவினால், உற்பத்தியில் மனித சக்தியின் விகிதாசாரத் தினால், மக்களுடைய தொழில் தேர்ச்சியினால், அவர்களுடைய தொழில் நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

மக்கள் பழங்காலத்திலிருந்தே உயிர் வாழ்வதற்காக, தம்மைச் சுற்றியுள்ள பகைமையான சூழலிலிருந்து ஜீவனத்தைப் பெறுவதற்காக, காட்டு விலங்குகளையும் பாதகமான பருவ நிலைமைகளையும் எதிர்த்துப் போராடுவதற்காக ஒன்றுசேர்ந்து வாழ வேண்டியிருந்தது. சில மனிதர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கின்ற இந்த நிலை உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியுடன் சேர்ந்து அதிகரித்தது. உழைப்புச் சாதனங்கள், உற்பத்தி அனுபவம் மற்றும் உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் மக்களுடைய கூட்டு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்டன.

மக்கள் பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற செயல்முறையில் அவசியமாகவே தமக்குள் உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் உற்பத்திச் சாதனங்கள் மீதான உடைமையை அடிப்படையாகக் கொண் டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், உற்பத்திச் செயல்முறையின் போது மக்களுக்கு இடை யிலான உறவுகள் பிரதானமாக உற்பத்திச் சாதனங் களுக்கு யார் உடைமையாளர் என்பதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன.

உற்பத்திச் சாதனங்கள் பொது உடைமையாக இருக்கின்ற அமைப்பில் மக்களுக்கு இடையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி என்னும் உறவுகள் ஏற்படுகின்றன; அவர்களுடைய உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன. தனியுடைமை சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய உறவுகளைத் தோற்றுவிக்கின்றது. சுரண்டல்காரர்கள் சுரண்டப்படுகின்ற வர்க்கங் களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளாய்தச் செல்வத்தில் மாபெரும் பகுதியைச் சுவீகரிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் மொத்தமாக உற்பத்தி முறை எனப்படும். உற்பத்தி முறையும் அதன் உட்பகுதிகளும் -உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் - மக்களுடைய விருப்பம், சித்தம், உணர்விலிருந்து சுயேச்சையான முறையில் புறநிலை எதார்த்தமாக இருக் கின்றன. லெனின் உற்பத்தி முறையை சமூகத்தின் 'எலும் புக்கூடு'', "தசை, ரத்தத்தினால்"', அதாவது மற்ற எல்லா சமூக நிகழ்வுகள், உறவுகள் மற்றும் நிறுவனங்களினாலும் மூடப்பட்ட எலும்புக்கூடு என்று வர்ணித்தார். (* V.I. Lenin, Collected Works, vol. 1, p. 317.)அவை ஒன்று சேர்ந்து ஒரு வாழ்கின்ற மொத்தமாக, ஒரு குறிப் பிட்ட சமூக அமைப்பாக, குறிப்பிட்ட சமூக-பொருளாதார உருவாக்கமாக இருக்கின்றன.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

2) சமூகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம். மனிதன் தோன்றியதிலிருந்து மனித சமூகம் தொடங்கியது. பூமியில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் இன்றைய வடிவத்தில் தோன்றினான்; ஆனால் உயிரின் தோற்றம், மிகப் பூர்விகமான, எளிமையான வடிவங்களிலிருந்து மனிதனைப் படைத்த உயிருலகத்தின் பரிணாமம் அதற்குப் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

மனிதன் விலங்குலகத்திலிருந்து தோன்றினான், இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் மிகவும் வளர்ச்சியடைந்த மனிதக் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதை சார்லஸ் டார்வின் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார். ஆனால் அது எப்படி ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்க முடியவில்லை. மனிதனுடைய தோற்றத்தில் உழைப்பு கேந்திரமான பாத்திரத்தை வகித்தது என்பதை எங்கெல்சே நிரூபித்தார்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனுடைய மிகப் பழங்காலத்து முன்னோர்கள் தம்முடைய உறுப்புகளின் முனைப் பகுதிகளை எளிமையான காரியங்களுக்கு, ஒரு பொருளைப் பற்றிப் பிடிக்கின்ற செயல்களுக்குப் பயன்படுத்துவதற்குக் கற்றுக் கொண்டார்கள். மனிதனு டைய கரத்தின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றம், அவன் நிமிர்ந்து நின்றது ஆகியவை மொத்த மனித உடலின் வளர்ச்சியையும் பாதித்தன. இதன் விளைவாக மக்கள் ஒன்றுசேருதல் ஆரம்பமாயிற்று; அவர்கள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டார்கள், கூட்டு நடவடிக்கைகள் தொடங்கின. உழைப்பு நிகழ்வுப் போக்கிலிருந்து, உழைப்புடன் சேர்ந்து மனித உறவுக்கு அவசியமான மொழியும் திருத்த மான பேச்சும் தோன்றின.

உழைப்பும் திருத்தமான பேச்சும் மனிதக் குரங்கின் மூளை மனித மூளையாகப் படிப்படியாகப் பரிணமிப் பதற்கு முக்கியமான தூண்டுவிப்பிகளாக இருந்தன. "... கையின் வளர்ச்சியுடன் படிப்படியாக மூளையும் வளர்ச்சி பெற்றுச் சென்றது. ஆரம்பத்தில், நடைமுறையில் பயனுள்ள தனித்தனி செய்கைகளுக்கு அவசியமான சூழ்நிலைகளைப்பற்றிய உணர்வும், பின்னர், அதிக சாதக நிலையிலுள்ள மக்களிடையே, அந்த உணர்விலிருந்து, அந்தச் சூழ்நிலைகளை ஆளும் இயற்கை நியதிகளைப் பற்றிய உட்பார்வையும் வந்தன. இயற்கையின் நியதிகளைப் பற்றிய அறிவு விரைவாகப் பெருகப்பெருக இயற்கையின் மீது எதிரியக்க மாகச் செயல்படுவதற்கான சாதனங்களும் வளர்ந்தன...'' என்று எங்கெல்ஸ் எழுதினார். (பி. எங்கெல்ஸ், இயற்கையின் இயக்கவியல், மாஸ்கோ பதிப்பகம், 1973, பக்கம் 61.)
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)