Saturday 26 October 2019

சமூக மாற்றத்தினை முட்டை உதாரணத்தின் மூலம் மாசேதுங் விளக்குதல் பற்றி


சமூக மாற்றத்தினை முட்டை உதாரணத்தின் மூலம் மாவோ விளக்கியிருக்கிறார். ஆனால் இதனைப் புரிந்து கொள்வதில் பலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் “அகம்” “புறம்” என்பதின் சார்ப்புத் தன்மையை விளங்கிக் கொள்ளாமையே ஆகும். அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதில் அடித்தளத்தைப் புறம் என்றும் மேற்கட்டமைப்பை அகம் என்று கூறுகிறோம். இதில் எந்தச் சார்புத் தன்மையும் கிடையாது. அதனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற அடிப்படையிலேயே அகம் புறம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சார்புத் தன்மையான அகம் புறம் என்பதில் இருந்து முதலில் விலகி நின்று பார்த்தால், அதாவது அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற அடிப்படையில் இருநதுப் பார்த்தால் சிக்கலைத் தவிர்க்கலாம்.

முதலாளித்துவம் அவ்வப்போது பொருளாதாரச் சிக்கலில் அகப்படுகிறது. இதற்கான மாற்றத்தை புறத்தில் இருக்கிற மக்களின் அல்லது சிந்தனையாளர்களின் சிந்தனையைக் கொண்டு தீர்க்க முடியாது, இதற்கான தீர்வு அகத்திலேயே இருக்கிறது அதாவது முதலாளித்துவ வளர்ச்சியே அதற்குத் தடையாகி போகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை சமூகமயமானதாக இருக்கிறது, ஆனால் அதன் வினியோக முறை தனிச்சொத்தினடிப்படையிலானதாக இருக்கிறது. இந்த முரணை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்தால் திர்க்கமுடியாததால் அதன் பழைய உற்பத்தி உறவுகள் உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது. இதற்குப் பாட்டாளி வர்க்க முன்னணிப்படையான கட்சி தலைமை தாங்குகிறது.

இங்கே அகம் என்பது புரட்சியை நடத்திய மக்கள், தலைமை தாங்கிய கட்சி, பழைய அரசு, குறிப்பாகப் பழைய உற்பத்தி உறவுகள், முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளே காணப்பட்ட முரண் முற்றிய நிலையே புரட்சிகரப் புறநிலை (சூழ்நிலை) என்பதையே புறம் என்று அழைக்கப்படுகிறது. புரட்சிக்கான சூழல் மக்களிடமே கட்சிகளிடமோ தோன்றவில்லை. அது உற்பத்தி முறையின் உள்னே தோன்றுகிறது, அதனை உணர்ந்த கட்சியும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களும் புரட்சியை நடத்து முடிக்கின்றனர்.

இந்தப் புரட்சி புறநிலையால் தீர்மானிக்கப்பட்டது, மக்களால் தீர்மானிக்கப்பட்டதல்ல, ஆனால் மக்களே இதனை நடத்திக் காட்டுகின்றனர். மக்களே அல்லது கட்சியே இந்தப் புரட்சிகரச் சூழ்நிலையைத் தோற்றிவித்தது என்று கூறப்படுவதில்லை. முதலாளித்துவத்தின் அக முரண்பாட புரட்சிகரச் சூழலைத் தோற்றுவத்தது. அக முரண்பாடு என்று கூறியவுடன் மக்கள், கட்சி, அரசு, கோட்பாடு என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. மேற்கட்டமைப்பை அகம் என்று கூறப்படுவதுடன் இதனை இணைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணம் எளிமையாக இருக்கலாம், அதே எளிமையோடு கோட்பாட்டைப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்த உதாரணத்தை வைத்து முன்பும் பின்பும் கூறப்பட்டதைத் தெளிவாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

“ஒரு முட்டையைக் குஞ்சாக்க முடிகிறது, ஏன் ஒரு கல்லைக் குஞ்சாக்க முடிவதில்லை? ஏன் போருக்கும் – அமைதிக்கும் இடையில் ஒத்த இயல்பு இருக்கிறது. போருக்கும் – கல்லுக்கும் இடையில் எதுவுமேயில்லையா? ஏன் ஒரு மனித உயிர், பிரிதொரு மனித உயிருக்குத் தோற்றங் கொடுக்கிறதேயொழிய வேறொன்றுக்குத் தோற்றமளிப்பதில்லை? தேவையான குறிப்பிட்டச் சூழ்நிலைமைகளில் மட்டுமே எதிரானவைகளின் ஒத்த இயல்பு இருக்கிறது எனப்தே இதற்கான ஒரே காரணம். இத்தேவையான குறிப்பிட்ட சூழ்நிலைமைகள் இல்லாவிடில், எந்தவிதமான ஒத்த இயல்பும் இருக்காது” (முரண்பாடு பற்றி)

இங்கே மாவோ கூறப்பட்டதை மட்டும் படித்துவிட்டு பலர் குழம்பியுள்ளனர். இதற்கு முன்பே இதே நூலில் கூறப்பட்டதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால், இதைப் படிக்கும் போது சிக்கல் ஏற்படாது.

மாவோவின் எளிமையான உதாரணம் மட்டும் சிக்கலை ஏற்படுத்தவில்லை, அவரின் வார்த்தை பிரயோகமும் பலருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

“இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே எனப் பொருள்முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண் பாடுகளின் வளர்ச்சியாகும். அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்குமிடையே உள்ள முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியேயாகும். இம்முரண் பாடுகளின் வளர்ச்சியே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள்முதல்வாத இயங்கியல் புறக்காரணங்களைப் புறக்கணிக்கின்றதா? ஒருபோதும் இல்லை. புறக்காரணங்கள் மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணங்களோ மாறுதல்களுக்கான அடிப்படை. புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது. பொருத்தமான வெப்பநிலையில் ஒரு முட்டை குஞ்சாக மாறுகிறது. ஆனால், எந்த வெப்ப நிலையிலும் ஒரு கல் குஞ்சாக மாறுவதில்லை . ஏனெனில், இரண்டுமே வெவ்வேறான அடிப்படை கொண்டவை.” (முரண்பாடு பற்றி)

“புறக்காரணங்கள் மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணங்களோ மாறுதல்களுக்கான அடிப்படை.” இங்கே மாவோ அகக்காரணங்களோ “அடிப்படை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அடிப்படை என்றவுடன் இது “அடித்தளம்” என்பதாக, படிப்பவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, இந்த அடித்தளமே (அகமே) தீர்மானகரமா சக்தி என்று கருதிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாவோ கூறுகிறார், “புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது” இதைப் படிக்கும் போது, புறக்காரணங்கள் தீர்மானிக்கிறது, அது அகக் காரணங்களின் வழியாவே செயல்படுகின்றது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

இந்த மேற்கோளில் இயற்கையைப் பற்றிக் கூறியதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு படித்தால், சிக்கலைத் தவிர்க்கலாம். “இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே எனப் பொருள்முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண் பாடுகளின் வளர்ச்சியாகும்.”

இயற்கையின் உள்முரண்பாடே வளர்ச்சிக்குக் காரணம், அதே போல் சமூக மாற்றத்திற்குச் சமூகத்தில் உள்ள உள்முரண்பாடே காரணம் என்கிறார் மாவோ. சமூக முரண்பாட்டை மாவோ, “உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாடு” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல், மாவோ, இந்த முரண்பாடு எப்படி வர்க்கமாக வெளிப்படுகிறது என்பதையும், அடித்தளத்தற்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள முரண்பாடாகவும் சேர்த்துக் கூறியுள்ளார். இது பலருக்கு குழப்பதை விளைத்தது. இயற்கையில் ஏற்படும் மாறுதலுக்கு அதன் உள்முரண்பாடே என்று கூறினாரோ அதே போல் தான் சமூகத்திற்கும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அடித்தளத்தற்கு மேற்கட்டமைப்புக்கும் உள்ள முரண்பாடு என்பது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிபாடு என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அடித்தளமாகும் இந்த உறவுகளின் பிரதிபலிப்பே மேற்கட்டமைப்பில் வர்க்க உறவுகளாக உருபெறுகிறது. இதனை இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவோ:- "வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முனனேறி வளரும் நடைமுறை அனுபவத்தின் வளாச்சியுடன் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து மாறாக நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால் தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ விறைப்பான ஒன்றாகக் கருதுவதும் வறட்டுவாதம் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மைமையை நிராகரித்தால் அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துககும் முதலாளித்துவத்துக்கும் இடையிள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்துககும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளைத் திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமரிசனத்தை மலரச்செய்வதாகும்."
("சீனக் கம்யூனிஸ்டுக் கடசியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை" (12 மார்ச், 1957))

இதில் மாவோ மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது என்பதைத் தெளிபடுத்தியுள்ளார். அந்த அடிப்படைக் கோட்பாடுகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

முதலில் மார்க்ஸ்:-
“மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமத மாகவோ மாற்றியமைக்கின்றன.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)

எங்கெல்ஸ்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

லெனின்:-
“இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது- மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருததுக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும்.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

ஸ்டாலின்:-
“சமூக வாழ்வில்கூட, முதலில் புறச்சூழ்நிலைகள் மாறுகின்றன, முதலில் பொருளாயத நிலைமைகள் மாறுகின்றன, அதன் பின்னர் இந்த மாறிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மக்களுடைய உலகக் கண்ணோட்டம் ஆகியவையும் மாறுகின்றன.

இதனால் தான், பின்வருமாறு கூறுகிறார் மார்கஸ்:-
“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. ஆனால், இதற்க மாறாக, அவர்களது சமூக வாழ்க்கையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது,”

பொருளாயத நிலைமையை, புறச் சூழ்நிலைகளை வாழ்க்கையை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, நாம் “உள்ளடக்கம்” என்று சொல்வோமானால், கருத்தியல் ரீதியானதை, உணர்வை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, “வடிவம்” என்றுதான் நாம் சொல்ல முடியும். எனவே, வளர்ச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கில், உள்ளடக்கமானது வடிவத்தை முந்திக் கொண்டு செல்கிறது, வடிவமானது உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி நிற்கிறது. இந்த உண்மையில் இருந்துதான், பிரபலமான பொருள்முதல்வாத கருத்துரைப்புத் தோன்றுகிறது.

மார்க்சின் கருத்துப்படி பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்வின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில், சட்ட-    அரசியல் மற்றும் மதவியல்-தத்துவவியல் வளர்ச்சியானது, இந்த உள்ளடக்கத்தின் “சித்தாந்த வடிவமாக”, அந்த உள்ளடக்கத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது. இதிலிருந்து பின்வரும் முடிவை மார்க்ஸ் வந்தடைகிறார். “பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்துடன் முழுப் பிரமாண்டமான மேற்கட்டுமானமும் அதிகமான அல்லது குறைவான வேகத்தில் (more or less rapidly) மாறுதலடைகிறது.
பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதாரச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.” (அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம்- 34 & 37-38)

இயற்கையில் ஏற்படுகிற மாற்றத்திற்கு அதன் உள்முரண்பாடே காரணம் ஆகும், அதே போலச் சமூக மாற்றத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடே காரணமாகும். இயற்கைக்குள் ஏற்படுவதைப் போலவும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் ஏற்படுவது போலவும். முட்டையில் இருந்து கோழி வெளிவதற்கு அதன் உள்முரண்பாடே காரணமாகும். இந்த முட்டை உதாரணத்தில் அடித்தளம் என்பது வளர்ச்சிபெற்றுவரும் முட்டைக்குள் உள்ள கருவேயாகும், மேற்கட்டமைப்பு என்பது பொருத்தமான வெப்பநிலையாகும்.

ஒன்றை அகமாகக் கொண்டால் மற்றது புறம், மற்றதை அகமாகக் கொண்டால் அந்த ஒன்று புறம். ஆக அகம் – புறம் என்கிற சார்பான வழியில் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தும்.

No comments:

Post a Comment