Saturday 20 June 2015

மதத்தின் மறைவு பற்றி மார்க்சியம்

மதம் சமூக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் தோன்றியது.

தோன்றியவை தோற்றத்திற்கான காரணங்கள் இருக்கும்வரை நிலைத்திருக்கும், அந்தக் காரணங்களின் மறைவை ஒட்டிக் காரியமும் மறைந்து போகும். மதத்தின் தோற்றத்திற்குக் காரணங்களான இயற்கையைப் பற்றிய அறியாமை, சுரண்டல் உற்பத்தியின் போது காணும் நெருக்கடிகள் சமூகத்தின் மீறிய சக்தியாக உருவெடுத்து, மக்களின் கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் மாறாகவும் செயற்படுவதின் மறைவோடு மதமும் மறைந்து உலர்ந்து போகும். அதனால் தான் லெனின் மதத் தோற்றத்திற்கான சமூக (புற) சூழலை மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னிறுத்தி, மதக் கேடுகளிலிருந்து விடுபடும்படி கூறுகிறார்:-
மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளைத்தாம் நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்
(உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை)

இல்லாமை என்பதின் மூலம் சமூகத்தில் சுரண்டலும் அதற்குக் காரணமான வர்க்க வேறுபாடு இருப்பதையும், கல்லாமை என்பதின்மூலம் இயற்கையைப் பற்றிய அறியாமையையும் லெனின் குறிப்பிடுகிறார். இயற்கையை அறிதலுக்கான கல்வியும் அதன் தொடர்ச்சியான விஞ்ஞான வளர்ச்சியும், வர்க்கம் மறைவதற்கான சமூக பொருளாதார வளர்ச்சியும் இங்கு வலியுறுத்தப்படுகின்றன.

இயற்கையை அறிதலுக்கான விஞ்ஞான வளர்ச்சியாக எங்கெல்ஸ் மூன்று பெரும் கண்டு பிடிப்புகளைக் குறிப்பிடுகிறார். இயற்கை நிகழ்வுப் போக்குகளின் இடைத்தொடர்பைப் பற்றிய நம்முடைய அறிவு விரைந்து முன்னேறுவதற்கு அந்த மாபெரும் மூன்று கண்டு பிடிப்புகள் உதவுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

1, ஆற்றலின் உருமாற்றம் 2, உயிரணு 3, பரிணாமக் கொள்கை ஆகியவை அன்றைய நூற்றாண்டின் மாபெரும் மூன்று கண்டுபிடிப்புகளாகும்.

ஆற்றலின் உருமாற்றம்:- உயிரற்ற இயற்கையில் உள்ளவற்றின் செயற்பாடுகள் எண்ணற்ற  காரணங்கள் அனைத்தும் இதுவரை சக்திகள் என்ற பெயரால் விளக்க இயலாத, மர்மம் சூழ்ந்த வாழ்வியலையைக் கொண்டிருந்தன. ஆற்றலின் உருமாற்றம் என்ற கண்டிபிடிப்பு இயற்கையில் இயங்குகின்ற சக்திகள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் இயக்கத்தினுடைய வெளிப்பாட்டின் வெவ்வேறு வடிவங்களே என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு மறைகிறது என்றால் அந்த மறைந்தவை மற்றொன்றில் குறிப்பிட்ட அளவு தோன்றுகின்றன என்பது புரிந்து கொள்ளப்பட்டது.  ஆகவே இயற்கையின் மொத்த இயக்கமுமே ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாற்றமடைகின்ற இடைவிடாத நிகழ்வுப்போக்காக, இந்த ஆற்றலின் உருமாற்றம் பற்றிய கண்டுபிடிப்புகள் நிரூபித்தது. இதனை ராபர்ட் மாயர், ஜீல், கோல்டிங் ஆகியோர் கண்டுபிடித்தனர்.

மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"பத்தாண்டுகளுக்கு முன்னால் மட்டுமே அப்பொழுது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இயக்கம் பற்றிய மாபெரும் அடிப்படை விதி வெறும் ஆற்றலின் அழியாநிலை விதியாக மட்டுமே, இயக்கத்தின் அழியாத் தன்மை மற்றும் படைக்கவியலாத் தன்மையின் வெளியீடாகவுமே, அதாவது அதன் அளவு அம்சத்தில் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டு வந்தது. இந்தக் குறுகிய எதிர்மறைக் கருத்தோட்டம் மேலும் மேலும் ஆற்றலின் மாற்றத்தைப் பற்றிய நேர்நிலைக் கருத்திற்கு இடமளிக்க நேர்ந்தது, இந்த இயக்கப் போக்கின் குணாம்ச உள்ளடக்கம் முதன் முதலாகத் தன்நிலைக்கு வருகிறது. உலகியலுக்கு அப்பாற்பட்ட படைப்பாளரின் கடைசி எச்சம் ஒழிக்கப்படுகிறது. இயக்கத்தின் அளவு (ஆற்றல் எனப்படுவது) இயக்கம் சார்ந்த ஆற்றலிலிருந்து (யாந்திரிக இயக்கம்) மின்சக்தி  வெப்பம், ஒடுக்க நிலை ஆற்றலாகவும் அது மறுபுறமும் மாற்றப்படும் பொழுது அது ஏதோ புதியது என்று இனிமேல் பிரசாரம் செய்ய வேண்டுவதில்லை. மாற்றமடைதலின் உண்மை நிகழ்ச்சிப் போக்கு பற்றியதான மிகவும் கருத்து நிறைந்த ஆராய்ச்சிக்குரிய இயற்கை பற்றிய சகல அறிவையும் உள்ளடக்கிய அறிவைக் கொண்ட அந்த மாபெரும் அடிப்படை நடைமுறையின் ஏற்கெனவே பெறப்பட்ட அடித்தளமாகச் செயல்படுகிறது.
-டூரிங்குக்கு மறுப்பு

பொருளின் இயக்கம் தனித்தனியாவை அல்ல, அனைத்துடனும் உட்தொடர்பு  கொண்டவையாகும். ஆற்றல் இழப்பின்றி ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடைகிறது. ஆற்றலுக்கு மூலமும் கிடையாது, அழிவும் கிடையாது, ஆற்றலின் வடிவ மாற்றமே தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

ஆற்றலின் அழியாமையும், மாற்றமும் பற்றிய இந்த விதி, பொருளும், அதன் இயக்கமும் நிரந்தரமானவை, தோற்றுவிக்கவும் அழித்திடவும் முடியாதவை என்பதை உறுதிப்படுத்துகிறது.

உயிரணு:- எல்லா உயர்நிலை உயிரினங்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஒரு பொது விதிக்கு ஏற்ப நடைபெறுவதை அங்கீகரிப்பதோடு, உயிரணுவுக்கு மாற்றமடைகின்ற தகுதி இருப்பதால் உயிரினங்கள் மாற்றமடையக் கூடிய, அதன்மூலம் தனிப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் சற்று மேலான வளர்ச்சியடைகின்ற முறை சுட்டிக்காட்டப்பட்டது. அங்கஜீவிகளின் பிறப்பு, வளர்ச்சி, அமைப்பு ஆகியவற்றைப் பற்றி இதுவரை இருந்த புரியாது இருந்த மர்மமான தன்மை களையப்பட்டது. இதுவரை அறிந்திட முடியாதிருந்த அற்புத வித்தை எல்லாப் பல ஜீவ அணுக்களால் அமைந்த அங்கஜீவிகளுக்கும் சாராம்சத்தில் ஒரே ஒரு விதியின்படி நிகழ்கிற மாற்றப்போக்குடன் இரண்டற ஒன்றிவிட்டது. இதனைக் கண்டுபிடித்தவர்கள் ஷ்வான், ஷ்லைடென் ஆகியோராவர்.

பரிணாமக் கொள்கை:- டார்வினால் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை. இவ்வுலகில் நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒரு சில ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும். எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. மனிதன் விலங்கினத்தின் நெடிய பரிணாமத்தின் விளைவே, என்று டார்வின் அறிவியல் முறையில் நிரூபித்தார்.

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் மூலம் இயற்கையின் முதன்மையான மாற்றப் போக்குகளுக்கு விளக்கம் கிடைத்தன, இதன்மூலம் இயற்கையின் தோற்றம், நிலையிருப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கான காரணங்களை அறிந்திட முடிகிறது. இதனை அடுத்துப் பொருளாயத உலகிற்கு அப்பாலுள்ளவற்றிடம் வைத்திருந்த நம்பிகை என்பது தேவையற்றதாக்கியது. இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை, எவ்வித அயலான கலப்பின்றி உள்ளதை உள்ளவாறு இன்றைய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் அறிய முடிகிறது.

இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“ .. இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இன்று, சென்ற நூற்றாண்டில் இருந்ததைவிட, மிக உறுதியானதோர் அடித்தளத்தின் மீது நிற்கிறது. அந்தச் சமயத்தில் வான்கோள்களுடையவும், புவி ஈர்ப்பின் ஆளுகைக்குட்பட்ட நிலவுலகத்துத் திடப் பொருட்களுடையவும் இயக்கம் மட்டுமே முழுமையாக அறியப்பட்டு இருந்தது, ஏறக்குறைய இரசாயனவியலின் துறைமுழுவதும், உயிர்ப்புள்ள இயற்கை முழுவதும் மர்மமாகவும், புரியப் படாமலும் இருந்தன. இன்று இயற்கை முழுவதுமே, இடைத் தொடர்புகளினுடைய மாற்றப் போக்குகளின் ஓர் அமைப்பாக நம்முன்னே விரிந்து கிடக்கிறது, அதனுடைய பிரதான லட்சணங்களாவது இன்று குறைந்த பட்சம் விளக்கப்பட்டு புரியப்பட்டுள்ளன. எப்படியிருப்பினும், இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்றால், எவ்வித அயல் கலப்புமின்றி, இயற்கையை உள்ளதை உள்ளவாறு எளிய முறையில் கருதுவது என்பதே பொருள்.
இயற்கையின் இயக்கவியல்

லெனின் கூறியபடி மதக்கேடுகளின் ஆழமான மூலாதாரத்தில் ஒன்றான கல்லாமை என்பது படிப்பறிவைப் பெற்று, அத்துடன் இந்த அறிவியல் வளர்ச்சியை அறிந்தவுடன் மதத்தின் தோற்றத்திற்கான முதல் வேர் (இயற்கையைப் பற்றிய அறியாமை) அகன்றுவிடுகிறது. இருந்தாலும் சமூக வேரான, வர்க்க முரண்பாடு மறையும்வரை மதம் இருந்துவரும், இந்த வேரின் நீக்கம் என்பது சமூக மாற்றத்திற்கான போராட்டத்துடன் இணைந்து காணப்படுகிறது.

வளர்ந்துவரும் முதலாளித்துவ அமைப்பு, தம்மால் உருவான நெருக்கடியைத் தடுக்கவும், தீர்க்கவும் முடியாத நிலையினை அடையும் என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் விளக்கிவந்துள்ளனர். அதன்படி முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் அழிவையும் புரிந்து கொள்வதும், அதற்கான போராட்டத்தை அறிந்து கொள்வதும் இன்றியமையாததாகும்.

வர்க்கத்தின் தோற்றத்தோடு மதத்தின் இருப்பை புரிந்துகொள்வது என்பது மத இருப்பிற்கான புறநிலைத் தன்மையை அறிந்து கொள்வதாகும்.  அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின்மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன.  (வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894) எங்கெல்ஸ் இங்கு வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை விளக்குகிறார்.  அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு உருவாகிறது, அதாவது தனிச்சொத்து அடிப்படையில் அமைந்த சுரண்டல் சக்திகளுக்கு சார்பான அறிவுசார்ந்த செயல்களைச் செய்திட மேற்கட்டமைப்பான அரசியல், சட்டம், தத்துவம், இலக்கியம், கலை போன்று மதமும் சேவை செய்கிறது. அதனால்தான் ஆன்மீக ஒடுக்குமுறைகளில் மதமும் ஒன்று என்று லெனின் கூறியுள்ளார்.

சுரண்டலுக்கு ஆளான வர்க்கம் தமக்கு எதிரான இந்தச் சமூக அமைப்பைத் தூக்கி எறியப் போராடும் போது சுரண்டலாளர்களுக்குத் துணைபோகும் இந்த மேற்கட்டமைப்பில் உள்ள அரசியல், சட்டம், தத்துவம், இலக்கியம், கலை, மதம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறது.

வளர்ச்சியடைந்த உற்பத்தி முறையில், முரண்பாடுகளின் முதிர்ச்சியினால், முதலாளித்துவ உற்பத்திமுறையின் வீழ்ச்சி தடுக்க முடியாமல் போகிறது. முதலாளித்துவத்தில் சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

முதலாளித்துவம் கொண்டுவரும் இந்தப் பொருளாதார நெருக்கடிகள் இதனையே வெளிப்படுத்துகின்றன. இதுவரையான முதலாளித்துவ உற்பத்தி முறையினால் பிறப்பிக்கப்பட்டு மேலும் கடுமையான பகைமையுடன் இடையறாது மறுஉற்பத்தியாக்கப் பெற்றதான இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் வளர்ச்சியடைந்து வருகிறது.

ஒவ்வொரு முதலாளியும் தம்மிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு பண்டப் பரிவர்த்தனைக்காக உற்பத்தியில் ஈடுபடுகிறார். அவ்வாறு ஈடுபடும்போது குறிப்பிட்ட பண்டம் தாம் உற்பத்தி செய்வதைப் போன்று மற்ற முதலாளிகள் எவ்வாறு எவ்வளவு உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புகிறார் என்பதை அறியாமல், சந்தையை நோக்கிப் பண்டம் மிகையாய் சென்று தேங்குகிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாசத்தை விளைவிக்கிறது. அதாவது சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்தியில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. இதனை எங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம்:- 
சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு இப்பொழுது தனிப்பட்ட தொழில் நிலையத்தில் பொருளுற்பத்தியின் ஒழுங்கமைப்புக்கும் பொதுவில் சமுதாயத்திலான பொருளுற்பத்தியின் அராஜகத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது
-டூரிங்குக்கு மறுப்பு

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை இப்போது பரிவர்த்தனை முறையினை எதிர்த்துக் கலகம் புரிகிறது. பொருளுற்பத்திச் சக்திகள் (உற்பத்தி உறவுகள்) எதை மீறி வளர்ந்து விட்டனவோ அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராகக் கலகம் செய்கின்றன. இதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்து, இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்திடத் திறனற்றது என்பது நிரூபிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் தொழிலாளர்களை வெளியே தள்ளியது. இதனைத் தொடர்ந்து இறுதியில் முதலாளிகளையும் வெளியே தள்ளி, தொழிலாளர்களைச் செய்தது போலவே இவர்களையும் உடனடியாகத் தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்தின அணிகளில் சேர்க்கவில்லை என்றாலும், வேண்டாத உபரி மக்கள் தொகையின் அணிகளுக்குத் தாழ்த்தி விடுகிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தி சக்திகளுக்கும் பழைய முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இடையிலுள்ள இந்த முரண்பாட்டை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் புதிய உற்பத்தி முறைக்கு மாற்றீடு செய்கிறது. சமூக மாற்றத்தின் மூலம் முதலாளித்துவத்தில் உற்பத்திச் சாதனங்களை, அவை இதுவரை தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, சமூகத்தின் இயல்பாய் செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது.

உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதும், பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கு முடிவுகட்டப்பட்டு விடுகிறது. இதனுடன் கூடவே உற்பத்தியாளரை உற்பத்திப் பொருள் அடக்கி ஆண்மை செலுத்துவதும் ஒழிந்து விடுகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் ஒழிக்கப்பட்டு திட்டப் பொருத்தமுடைய, உணர்வுபூர்வமான ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனிமனிதனின் பிழைப்புப் போராட்டம் மறைகிறது. இதற்குபிறகு மனிதன் முதன்முதலாய் ஒருவகைப் பொருளில் விலங்கின உலகிலிருந்து முடிவாய்த் துண்டித்துக் கொண்டு மெய்யான மனித வாழ்நிலைமைகளினுள் நுழைகிறான். மனிதனை ஆட்சி செய்துவந்த வாழ்நிலைமைகள் இப்பொழுது மனிதனுடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுகின்றன.

இதுவரை வரலாற்றை ஆளுமை செய்த அயலான புறநிலை சக்திகள் நேரடியாய் மனிதனது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. அது முதல்தான் மனிதன் முழு உணர்வுடன் தனது சொந்த வரலாற்றைத் தானே படைப்பவனாய் ஆகிறான்.

பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை தேவையற்றதாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் உள்ள அராஜகம் எந்தளவுக்கு மறைகிறதோ அதேயளவிற்கு அரசின் அரசியல் அதிகாரமும் மடிந்துபோகிறது.

முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி செய்திடும் எஜமானனாகிவிடுகிறான் மனிதன். இயற்கையின் அதிபதியுமாகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான்.

இதுவரையிலும் எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலின் வழியிலேயே எழுதப்பட்டு வந்தது. அடுத்து அவரது நூலிலிருந்து சமூகத்தில் மதத்தின் பிரதிபலிப்புக்கு என்று ஏதுவும் மீதமாக இல்லா சமூகத்தில் மதம் மறைந்து போவதைப் பற்றிக் கூறுவதை நேரடியாக பார்ப்போம்:-
“ .. மனிதர்கள் புறம்பான, இயற்கை மற்றும் சமுதாய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரையில், அவர்கள் மீதுஆதிக்கம் செலுத்தும் இந்தச் சக்திகளுடனான மனிதர்களுடைய உறவின் நேரடியான அதாவது உணர்ச்சிபூர்வமான வடிவில் சமயம் தொடர்ந்து நிலவ முடியும். எனினும், நிலவும் முதலாளித்துவ சமுதாயத்தில் மனிதர்கள் தம்மாலேயே உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளால், அவர்களே உண்டாக்கியுள்ள உற்பத்திச் சாதனங்களால் புறம்பான ஒரு சக்தியின் மூலம் போன்று ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். எனவே, சமயத்தைத் தோற்றுவிக்கும் பிரதிபலிக்கிற செயல்பாட்டின் உண்மையான அடிப்படை தொடர்ந்து நிலவுகிறது, அதோடு சேர்ந்து அதன் சமயப் பிரதிபலிப்பும் நிலவுகிறது.

இந்தப் புறம்பான ஆதிக்கத்தின் தற்செயலான தொடர்பு குறித்து முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட அளவு நுண்ணறிவினை வழங்கியிருந்த போதிலும் இதனால் முக்கியமான வித்தியாசம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தால் பொதுவாக நெருக்கடிகளைத் தடுக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிகளை நஷ்டம், திரும்பிவராத கடன், வக்கற்ற வகையற்ற நிலை ஆகிறவற்றிலிருந்து பாதுகாக்கவும் முடியாது, தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமைக்கு எதிராகப் பாதுகாக்கவும் முடியாது. மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் (அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அன்னிய ஆதிக்கம்) ஒன்று கட்டளையிடுகிறது என்பது இன்னும் மெய்யாகவே உள்ளது.

முதலாளித்துவப் பொருளாதார விஞ்ஞானத்தைக் காட்டிலும் மேலும் கூடுதலாகவும் அதிக ஆழமாகவும் சென்றதாயினும் சரி, வெறும் அறிவு சமூக சக்திகளை சமூகத்தின் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வருவதற்குப் போதுமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேல் இதற்கு அவசியமாக இருப்பது ஒரு சமூதாயச் செயலே. இந்தச் செயல் நிறைவேற்றப்படும்பொழுது, சமுதாயம் எல்லா உற்பத்தி சாதனங்களின் உடைமைகளையும் மேற்கொண்டு, அவற்றைத் திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவது மூலம் தன்னையும் தனது உறுப்பினர்கள் எல்லோரையும் அவர்களாலேயே உண்டாக்கப்பட்டு அவர்களை (வெல்ல) முடியாத அன்னிய சக்தியாக எதிரிட்டு நிற்கும் இந்த உற்பத்திச் சாதனங்களால் அவர்கள் தளைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் பொழுது.- மனிதன் நினைப்பது மட்டுமின்றி செயல்படவும் செய்கிறான்- அப்பொழுது மட்டுமே சமயத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கடைசி அன்னிய சக்தி மறையும், அதனுடன் சமயப் பிரதிபலிப்பே மறையும். இதற்குக் காரணம் பிறகு பிரதிபலிப்பதற்கென்று எதுவும் மீதமாக இருக்காது
டூரிங்குக்கு மறுப்பு

இயற்கை மற்றும் சமூதாய சக்திகளின் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்வரையில் மனிதர்களுக்குப் புறம்பான இந்தச் சக்திகளுடன் மனித உறவின் நேரடியான உணர்ச்சி பூர்வமான வடிவில் மதம் தொடர்ந்து நிலவிவருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளால், அதாவது அவர்களால் உண்டாக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களால், புறம்பான ஒரு சக்தியைப்போல் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே மதத்தைத் தோற்றுவிக்கும் பிரதிபலிப்புக்கான சக்திகள் தொடர்ந்து இருக்கும்போது மதத்தின் பிரதிபலிப்பும் நிலவுகிறது.

முதலாளித்துவத்தின் முரண்பாட்டால் தனிப்பட்ட  முதலாளிகளின் நட்டத்தைத் தடுக்கவும் மற்றும் பாதுகாக்கவும்  முடியாமல் போகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும் மற்றும் பாதுகாக்கவும் முடியாமல் போகிறது. இந்நிலையில்தான் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று கட்டளையிடுகிறது என்பது போல் தோன்றுகிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அன்னிய ஆதிக்கம் புறநிலை சக்தியாகச் செயல்படுகிறது.

சோஷலிசப் புரட்சியைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த கம்யூனிச சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்களால் மக்களைத் தளைப்படுத்தி வைக்கப்படிருந்த நிலையிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ளும்போது மனிதன் நினைப்பது மட்டுமின்றி செயல்படவும் முடியும். அப்பொழுதுதான், அந்நிலைமையில் மட்டுமே - இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் இறுதியான அந்நிய சக்தியும் மறைந்த நிலையில் -  மதம் என்னும் பிரதிபலிப்பும் மறையும். மதத்தைப் பிரதிபலிப்பதற்கு என்று எதுவும் மீதமாய் இல்லாத காரணத்தால், மதம் தேவையற்று உலர்ந்து மறைந்து  போகும்.

இந்நிலை அடையும்வரை சமூகத்தில்  மதம் வர்க்கத்தன்மையோடே செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சி மதத்தின் மாய்மாலத்தை அம்பலத்தப் போராடும்.


மனித சமூகம் தனது தொடக்க நிலையில் மதத்தைப் பெற்றிருக்கவில்லை. மதமற்ற சமூகமாகவே இருந்தது. வருங்காலத்தில் இவ்வாறு மதம் இல்லாத சமூகம் தோன்றும். இந்தப் புதிய சமூகம் பழையதைக்காட்டிலும் அதிமேலான முன்னேறிய வடிவமாய்த் திகழும்.

மதத்தின் தோற்றம் பற்றி மார்க்சியம்

ஆதியிலே மக்கள் இயற்கையின் தோற்றத்தையும், மாற்றத்தையும் அறிந்து கொள்வதில் திறமற்றவர்களாக இருந்தார்கள். இவ்வுலகில் இயங்கும் ஒவ்வொன்றின் பின்பும், ஒரு சக்தியிருப்பதாக நினைத்தனர். தொடர் மழை, பெருவெள்ளம், சூறாவளியால் புழுதிகளும் சருகுகளும் சுழன்றடிக்கப்படுவதைக் கண்ட மக்கள் இதற்கெல்லாம் இவற்றில் உள்ள கண்ணிற்குப் புலப்படாத ஆவிகளே காரணம் எனக் கற்பித்துக் கொண்டனர்.

அதேபோல் கொள்ளை நோய், திடீர் பெரும் உயிரிழப்பு போன்றவை நிகழும்போது மருட்சியடைந்தனர். இயற்கைப் பொருட்களின் இயக்கத்தை அறிய முடியாத அன்றைய மக்கள், இயற்கைப் பொருட்களுக்குள் ஒருவித சக்தியை உருவகப்படுத்தியும் அதனை வழிபடவும் செய்தனர்.

மனிதயினம் தோன்றுவதற்கு முன்பு மதம் இருக்கவில்லை, மனிதயினம் தோன்றியபோது மதம் காணப்படவில்லை. மனிதயினம் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தபோது மதவுணர்வு ஏற்படவில்லை, இயற்கையை வெல்வதென்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையை உணர்ந்தவுடன் (அச்சவுணர்வு) மதவுணர்வு உருவாகியது.

இது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள நிலைமையினால் உண்டான மதத்தின் தோற்றத்திற்கான பண்டைய மற்றும் தொடக்க காரணமாகும்.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட சமூக உறவுகள், சுரண்டல் தன்மையினதானபோது காணப்பட்ட சமுதாய அழிவாற்றலின் முன் மக்களின் வலுவின்மை மத இருப்பிற்கு இரண்டாம் காரணமாகிறது. இயற்கையின் அழிவாற்றலைப் போலவே இந்தச் சமூக சக்திகளும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

இயற்கை செயற்படுவது, இப்பூவுலகிற்கு அப்பாற்பட்ட சக்தியின் சங்கல்பத்தால் என்று கருதிய மக்கள், இயற்கையை கட்டுப்படுத்தும் அந்த சக்தியே, தங்களையும், சமூகத்தையும் ஒழுங்கு படுத்துவதாக நினைத்தனர். அதனால் அதன்மீது அச்ச உணர்வும், கீழப்்படிதலும் உண்டாயிற்று. இதன் அடிப்படையில், அந்த அதீத சக்திகளை வணங்கவும், அதனைச் சார்ந்து இருக்கவும் வேண்டும் என்று கருதிக் கொண்டனர்.

இயற்கை மற்றும் சமூகத்தின் முன்பான மக்களின் இயலாத் தன்மையே மதத்தின் தோற்றதுக்கு முதன்மையான இரு காரணங்களாகும்.

மதம் நிறுவனமாக உருவெடுக்கும்போது இவற்றை எல்லாம் தன்வயமாக்கிக் கொண்டது.

இயற்கை மற்றும் சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்பே மதம். அதாவது மதம் இவ்வுலக வாழ்வின் பிரதிபலிப்பாகும். ஆனால் மதம் தம்மைஉலகிற்கப்பால் உள்ள சக்தியின் (இறை) வெளிப்பாடாகக் காட்டிக் கொள்கிறது.

இயற்கையின் தோற்றங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஆன காரணங்களை அறிந்துகொள்ள முடியாத நிலையில், தமக்குச் சாதகமாக நடப்பவற்றிற்கு இறைவனே காரணம் என்றும், சாதகமற்ற சூழ்நிலைகளுக்கு இறைவனது கோபம் அல்லது துர்தேவதைகளின் தூண்டுதல் காரணம் என்றும் ஆதி மனிதன் நினைத்துக் கொண்டான். சமூகத்தில் சுரண்டல் அமைப்பு தோன்றியபோது, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் மனிதன் தமது இயலாமையின் அடிப்படையில், தமக்கு இம்மையில் கிடைக்காமல் போன, அல்லது மறுக்கப்பட்ட சிறந்த வாழ்வு மறுமையில் கிட்டும் என்ற நம்பிக்கைக்கு ஆட்பட்டான்.

இதனை லெனின் கூறுகிறார்:-
காட்டு மிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான தனது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும் சைத்தான்களிலும் அற்புதங்களிலும் பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறதோ அதே போல, சுரண்டப்படும் வர்க்கங்கள் சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவையாய் இருக்கும் அவல நிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறது."
-சோஷலிசமும் மதமும்

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன...

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன.
-டூரிங்குக்கு மறுப்பு

-இவ்வாறு இயற்கை, சமூகம் ஆகிய இரண்டும் மனிதயினத்திற்கு முன் பேரழிவாற்றல் பெற்றதாக இருப்பது மதயிருப்பிற்கான காரணமாகும். இதனை விளங்கிக்கொள்வதன் வழியிலேயே மார்ச்சியத்தினுடைய மதத்தின் மீதான அணுகுமுறையை அறிந்துகொள்ள முடியும்.

இன்றைய வடிவிலான மனிதயினம் கிட்டத்தட்ட எழுபதாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட காலத்திற்குள்தான் வாழ்ந்து வருகிறது. இதில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் இருக்கும். அதன் பின்பே மதம் தோற்றம் பெறுகிறது. அதனால் மதம் என்பது காலவரிசையில் அண்மைக் காலத்தவையாகவும், இடையில் தோன்றியதாகவும் இருக்கிறது.