Saturday 20 June 2015

மதத்தின் தோற்றம் பற்றி மார்க்சியம்

ஆதியிலே மக்கள் இயற்கையின் தோற்றத்தையும், மாற்றத்தையும் அறிந்து கொள்வதில் திறமற்றவர்களாக இருந்தார்கள். இவ்வுலகில் இயங்கும் ஒவ்வொன்றின் பின்பும், ஒரு சக்தியிருப்பதாக நினைத்தனர். தொடர் மழை, பெருவெள்ளம், சூறாவளியால் புழுதிகளும் சருகுகளும் சுழன்றடிக்கப்படுவதைக் கண்ட மக்கள் இதற்கெல்லாம் இவற்றில் உள்ள கண்ணிற்குப் புலப்படாத ஆவிகளே காரணம் எனக் கற்பித்துக் கொண்டனர்.

அதேபோல் கொள்ளை நோய், திடீர் பெரும் உயிரிழப்பு போன்றவை நிகழும்போது மருட்சியடைந்தனர். இயற்கைப் பொருட்களின் இயக்கத்தை அறிய முடியாத அன்றைய மக்கள், இயற்கைப் பொருட்களுக்குள் ஒருவித சக்தியை உருவகப்படுத்தியும் அதனை வழிபடவும் செய்தனர்.

மனிதயினம் தோன்றுவதற்கு முன்பு மதம் இருக்கவில்லை, மனிதயினம் தோன்றியபோது மதம் காணப்படவில்லை. மனிதயினம் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தபோது மதவுணர்வு ஏற்படவில்லை, இயற்கையை வெல்வதென்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையை உணர்ந்தவுடன் (அச்சவுணர்வு) மதவுணர்வு உருவாகியது.

இது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள நிலைமையினால் உண்டான மதத்தின் தோற்றத்திற்கான பண்டைய மற்றும் தொடக்க காரணமாகும்.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட சமூக உறவுகள், சுரண்டல் தன்மையினதானபோது காணப்பட்ட சமுதாய அழிவாற்றலின் முன் மக்களின் வலுவின்மை மத இருப்பிற்கு இரண்டாம் காரணமாகிறது. இயற்கையின் அழிவாற்றலைப் போலவே இந்தச் சமூக சக்திகளும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

இயற்கை செயற்படுவது, இப்பூவுலகிற்கு அப்பாற்பட்ட சக்தியின் சங்கல்பத்தால் என்று கருதிய மக்கள், இயற்கையை கட்டுப்படுத்தும் அந்த சக்தியே, தங்களையும், சமூகத்தையும் ஒழுங்கு படுத்துவதாக நினைத்தனர். அதனால் அதன்மீது அச்ச உணர்வும், கீழப்்படிதலும் உண்டாயிற்று. இதன் அடிப்படையில், அந்த அதீத சக்திகளை வணங்கவும், அதனைச் சார்ந்து இருக்கவும் வேண்டும் என்று கருதிக் கொண்டனர்.

இயற்கை மற்றும் சமூகத்தின் முன்பான மக்களின் இயலாத் தன்மையே மதத்தின் தோற்றதுக்கு முதன்மையான இரு காரணங்களாகும்.

மதம் நிறுவனமாக உருவெடுக்கும்போது இவற்றை எல்லாம் தன்வயமாக்கிக் கொண்டது.

இயற்கை மற்றும் சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்பே மதம். அதாவது மதம் இவ்வுலக வாழ்வின் பிரதிபலிப்பாகும். ஆனால் மதம் தம்மைஉலகிற்கப்பால் உள்ள சக்தியின் (இறை) வெளிப்பாடாகக் காட்டிக் கொள்கிறது.

இயற்கையின் தோற்றங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஆன காரணங்களை அறிந்துகொள்ள முடியாத நிலையில், தமக்குச் சாதகமாக நடப்பவற்றிற்கு இறைவனே காரணம் என்றும், சாதகமற்ற சூழ்நிலைகளுக்கு இறைவனது கோபம் அல்லது துர்தேவதைகளின் தூண்டுதல் காரணம் என்றும் ஆதி மனிதன் நினைத்துக் கொண்டான். சமூகத்தில் சுரண்டல் அமைப்பு தோன்றியபோது, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் மனிதன் தமது இயலாமையின் அடிப்படையில், தமக்கு இம்மையில் கிடைக்காமல் போன, அல்லது மறுக்கப்பட்ட சிறந்த வாழ்வு மறுமையில் கிட்டும் என்ற நம்பிக்கைக்கு ஆட்பட்டான்.

இதனை லெனின் கூறுகிறார்:-
காட்டு மிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான தனது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும் சைத்தான்களிலும் அற்புதங்களிலும் பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறதோ அதே போல, சுரண்டப்படும் வர்க்கங்கள் சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவையாய் இருக்கும் அவல நிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறது."
-சோஷலிசமும் மதமும்

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன...

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன.
-டூரிங்குக்கு மறுப்பு

-இவ்வாறு இயற்கை, சமூகம் ஆகிய இரண்டும் மனிதயினத்திற்கு முன் பேரழிவாற்றல் பெற்றதாக இருப்பது மதயிருப்பிற்கான காரணமாகும். இதனை விளங்கிக்கொள்வதன் வழியிலேயே மார்ச்சியத்தினுடைய மதத்தின் மீதான அணுகுமுறையை அறிந்துகொள்ள முடியும்.

இன்றைய வடிவிலான மனிதயினம் கிட்டத்தட்ட எழுபதாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட காலத்திற்குள்தான் வாழ்ந்து வருகிறது. இதில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் இருக்கும். அதன் பின்பே மதம் தோற்றம் பெறுகிறது. அதனால் மதம் என்பது காலவரிசையில் அண்மைக் காலத்தவையாகவும், இடையில் தோன்றியதாகவும் இருக்கிறது.


No comments:

Post a Comment