(ஸ்டாலினால் அளிக்கப்பட்ட
பேட்டிகள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது)
மொழியை, மார்க்சியம் வெறும் ஊடகமாக மட்டும் பார்க்கிறது
என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவருகிறது. அதே போல் மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியதா?
என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுவருகிறது. இதற்கான பதில்களை ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதலில் மொழி மேற்கட்டமைப்பைச் சார்ந்ததா என்பதை
பார்ப்போம். ஸ்டாலின் இதற்கு இல்லை என்று நேரடியாக பதிலளிகிறார். இதனை காரணங்களுடன்
விளக்குகிறார். மேற்கட்டமைப்பானது ஒரு குறிப்பிட்ட அடித்தளத்திற்கு ஏற்ப தோற்றம் பெற்று,
பொருளாதார அடிப்படைகள் வளர்ச்சியோடு மேற்கட்டமைப்பு தூக்கி எறியப்படுகிறது. இதுபோன்ற
மாற்றங்களில் மொழியின் அடிப்படை எந்தவகையிலும் மாற்றம் பெறுவதிலை.
அதனால், மொழியானது மேற்கட்டமைப்பிலிருந்து முற்றிலும்
மாறுபடுகின்றது. ரஷ்யாவில் நவம்பர் (அக்டோபர்) புரட்சியினைத் தொடர்ந்து அந்நாட்டில்
மேற்கட்டமைப்பு சோஷசத்துக்கு எற்றார் போல் மாற்றம் பெற்றது. அப்போது மொழி இதன் அடிப்படையில்
மாற்றம் பெற்றதா என்றால் இல்லை. புரட்சிக்கு முன்பு எழுதிய நூல்கள் அதே மொழியில், அதே
பொருளில் தான் படிக்கப்பட்டன. புஷ்கின், டால்ஸ்டாய், அந்தோன் செகாவ், மக்சிம் கோர்கி
ஆகியோரின் நூல்கள் அதே மொழியிலும், அதே பொருளிலும் தான் படிக்கப்படுகிறது. எந்த மாற்றமும்
பெறவில்லை.
மேற்கட்டமைப்பு மாறும் போது மொழியும் மாறிப் போய்யிருந்தால்,
இந்நூல்களை வாசிப்பதிலும் மாற்றம் பெற்றாக வேண்டும். அப்படி ஒன்றும் ஏற்படவில்லை என்பதே
உண்மை. ஆனால் ரஷ்ய மொழியினுடைய சொற்கொகுதியில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் நிகழ்ந்தன.
பல சொற்களின் பொருள் மாறிபோயின, தேவையற்ற சொற்கள் தொகுதியில் இருந்து மறைந்துபோயின.
புதிய சொற்கள் தொகுதியில் சேர்க்கப்பட்டன.
புதிய சோஷலிச உற்பத்தி முறையின் எழுச்சி, புதிய
அரசின் தோற்றம், புதிய சோஷலிச பண்பாடு, புதிய சமூக உறவுகள், நீதிகள் போன்றவைகளில் பயன்படுத்தும்
சொற்கள் குறிப்பிடத்தக்க மாற்றம் பெற்று மொழித்தொகுதியில் சேர்க்கப்பட்டன.
முதலாளித்துவ சமூகத்தில் பயன்படுத்திய மொழியின்
அடித்தளமாக அமைகின்ற அடிப்படை சொற் தொகுதியும் இலக்கண அமைப்பும், முதலாளித்தும் தூக்கி
எறியப்படும் போது தூக்கி எறியப்படவில்லை. கடுமையான மாற்றங்களுக்கு ஆட்பாடாமல் பேணப்பட்டே
வந்தது. மொழி என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் படைப்பு அல்ல, பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவருகிறது.
வர்க்கங்கள் தோற்றம் பெறாத பழங்காலத்திலேயே மொழி
உருவாகிவிட்டது. இதன் தோற்றத்துக்கு வர்க்கம் அடிப்படை கிடையாது, இதன்படி மொழி வர்க்க
சார்பானது கிடையாது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். மொழி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தால்
உருவாக்கப்பட்டதல்ல, சமூகம் முழுமையும் அதன் வளர்ச்சிக்கு உதவின. அதே போல் மொழி ஒரு
குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக தோற்றுவிக்கப்படவில்லை, சமூகத்தில்
காணப்படும் அனைத்து வர்க்கத்தினரின் தேவைகளையும் மொழி நிறைவு செய்கிறது.
லாபம் என்பதையும் உபரிமதிப்பு என்பதையும் முதலாளித்துவ
வர்ககமும் தொழிலாளி வர்க்கமும் ஒரே நேர் பொருளில் பயன்படுத்துவதில்லை என்பது உண்மையே.
இதுபோன்று குறிப்பிட்ட சொற்களின் பொருள் வேறுபடினும், மொழி சமூகத்தில் உள்ள எல்லோருக்கும்
பொதுவானதாகும்.
இதன் அடிப்படையில் பழைய சமூகத்துக்கும் புதிய சமூகத்துக்கும்,
சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும் சமமாகவே பணிசெய்கிறது. அனைத்து வர்க்த்துக்கும்
பணி செய்வதற்கு மொழி உருவாக்கப்பட்டுள்ளது. வர்க்க சார்பற்ற முறையில், வேறுபாடுகளுக்கு
அப்பால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமாகவே மொழி பணியாற்றுகிறது.
முதலாளித்துவ சமூகத்திற்கு சேவை செய்த மொழி புரட்சிக்குப்பிறகு
சோஷலிச சமூகத்துக்கு சேவை செய்யும். வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் மொழி சமூகத்துக்கு
சேவை செய்கிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் மேற்கட்டமைப்பில் உடனடியாக மாற்றம்
பெறுவதில்லை பல்வேறு நிலைகளின் ஊடாகவே மாற்றம் நிகழ்கிறது. இந்த வகையிலும் மொழி இதனோடு
வேறுபடுகிறது. அடித்தளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் உடனடியாகவும் நேரடியாகவும் மொழியில்
வெளிப்படுகிறது. மொழி என்னதான் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் ஆட்பட்டாலும், அந்த
மாற்றங்கள் மேற்கட்டுமானங்களில் ஏற்படும் மாற்றங்களைப் போன்றது கிடையாது.
அடித்தளத்தில் ஏறப்பட்ட முழுமையான மாற்றத்துக்கு
ஏற்ப மேற்கட்டமைப்பில் பழையதை அழித்து புதியது இடம் பெறுகிறது. ஆனால் மொழியானது உற்பத்தி,
பண்பாடு, அறிவியல் போன்ற துறைகளில் ஏற்படும் வளர்ச்சியின் போதே புதிய சொற்கள் சொற்றொகுதியைப்
புதுப்பித்துக் கொள்கிறது.
பண்பாடு வர்க்கச் சார்போடு இருப்பதைப் போல் மொழியும்
வர்க்கச் சார்பானதாக சிலர் பார்க்கின்றனர். இந்த தோழர்கள் செய்கின்ற தவறு, பண்பாட்டிற்கும்
மொழிக்கும் இடையேயான வேறுபாட்டைப் பார்க்க தவறியதில் அடங்கியிருக்கிறது. சமூக வளர்ச்சியின் போது புதிய படிநிலைக்கு ஏற்ப
பண்பாட்டின் உள்ளடக்க மாறுகிறது. ஆனால் மொழியானது பல்வேறு காலகட்டங்களின் அடிப்படையில்
எந்தவிதமான மாற்றமும் இன்றி பழைய பண்பாட்டை போலவே புதிய பண்பாட்டிற்கும் சேவை செய்கிறது
என்பதை இந்தத் தோழர்கள் காணத் தவறிவிட்டனர்.
மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியது என்று கூறுகிறவர்கள்
இரண்டு தவற்றை செய்கின்றனர். மொழியை மேற்கட்டமைப்பில் இணைத்துக் குழப்பிக் கொள்கின்றனர்,
மேற்கட்டமைப்பு வர்க்கத்தை பிரதிபலிப்பபதால், மொழியும் வர்க்கத் தன்மை பெற்றதாகும்.
அதனால் அனைவருக்கும் பொதுமொழி என ஏதும் இருக்க முடியாது என்ற முடிவு இவர்களின் முதல்
தவறு. உண்மையில் மொழி மேற்கட்டமைப்புக்கு உரியது அல்ல.
இந்தச் சமூகத்தில் முதலாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும்
இடையேயான நலன்களில் காணப்படும் முரண்பாடு, தீவிரமான வர்க்கப் போராட்டமாகக் காணப்படுவதால்,
எல்லாவற்றிலும் பிரித்தே, பிளவுபடுத்தியே புரிந்து வைத்துள்ளனர். இந்தப் பிளவின் அடிப்படையில்
மொழியையும் பிளவுப்படத்தி சமூகம் அனைத்துக்கும் பொதுமொழியோ, ஒரு தேசிய மொழியோ தேவையற்றது
என்பதில் இவர்களின் இரண்டாவது தவறு அடங்கியிருக்கிறது.
சமூகம் பிளவினால் அனைத்து மக்களுக்கும் பொதுவான
மொழி, ஒரு தேசிய மொழி இல்லை என்று இவர்கள் கருதுவதினால், வர்க்கங்களுக்கு “வர்க்க மொழி”
எனத்தனித்தனியானது என்றாகிறது. காலப் போக்கில் முதலாளிக்கு தனியான மொழி இலக்கணம், தொழிலாளர்களுக்கு
தனியான மொழி இலக்கணம் தோன்றும் என்று நம்புகின்றனர். இது தவறானதாகும்.
முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையே நலன்களின் முரண்
இருப்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை மறுக்கமுடியாது.
இதனை ஸ்டாலின் கூறுகிறார்:-
“..முதலாளித்துவம் நீடித்து
நிற்கும் வரையில், ஒரு முதலாளித்துவ சமூகத்தில் அதன் பொருளாதார இணைப்பில் உள்ள உறுப்பாக
முதலாளிகளும் பாட்டாளிகளும் ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்தே இருப்பார்கள். கூலிக்காக
உழைப்பை நல்கும் பாட்டாளிகளைத் தம் கட்டுபபாட்டின்கீழ் வைத்திருக்காமல் பூர்ஷ்வாக்களால்
வாழவோ, மேலும் வசதியைப் பெருக்கவோ முடியாது, அதே போன்று பாட்டாளிகளும் தாங்கள் உழைப்புச்
சக்தியை முதலாளிகளுக்கு விற்காமல் உயிர் வாழவே முடியாது” (மொழியில் பற்றி மார்க்சியம் – பக்கம்
46)
அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உரியதல்லாத
இந்த மொழியை இவ்விரண்டிற்கும் இடையில் இடைநிலையினதாக கருதாலாமா? என்ற கேள்விக்கு ஸ்டாலின்
அவ்வாறு கருதமுடியாது என்றும், இடைநிலை என்ற ஒன்று கிடையாது என்றும் கூறுகிறார்.
மார்க்சியத்தை வறட்டுவாதமாக புரிந்து கொண்டவர்களும்,
விஞ்ஞானமாக ஏற்றுக் கொள்ளாதவர்களும் பெரும் தவறு செய்கின்றனர். மார்க்சியத்தின் உயிரோட்டம்
எதில் அடங்கியிருக்கிறது என்பது இவ்விருவர்களுக்கும் தெரிவதில்லை.
பருண்மையான நிலைமைகளுக்கு எடுக்கப்பட்ட தனிப்பட்ட
முடிவுகள் என்றும் மாறாத ஒன்றாக மார்க்சியத்தை பாராயணம் செய்திருக்கின்ற வறட்டுவாதிகள்
கருதுகின்றனர். இந்த பாராயண மனப்படவாதிகள், மேற்கோள்களில் காணப்படும் முடிவுகளையும்,
சொற்களையும் பொருள் அறியாது மனப்பாடம் செய்துவிட்டு, அந்த மேற்கோளில் காணப்படும் மார்க்சியத்தின்
சாராம்சத்தை புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். மார்க்சியத்தை விஞ்ஞானமாகப் பார்க்காததின்
விளைவே இவ்விருவர்களின் தவறாகும். மார்க்சியத்தின் உயிரோட்டம் அதன் விஞ்ஞானத்தில் அடங்கியிருக்கிறது.
சோஷலிசப் புரட்சியைப் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ்
எடுத்த முடிவுக்கும், லெனினது முடிவுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையான நிலைமைகளில் எடுக்கப்பட்டதே
ஆகும். ஆனால் அவர்களது கண்ணோட்டம் மார்க்சியமேயாகும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் தனித்து சோஷலிசப்
புரட்சி வெற்றி பெறமுடியாது. வளர்ச்சி அடைந்த சில நாடுகள் அல்லது முன்னேறிய நாடுகளில்
பெரும்பான்மையானவை ஒன்றிணைந்த வகையில் புரட்சி நடைபெறும் என்று அன்று மார்க்சும் எங்கெல்சும்
கருதினர். இவர்களின் முடிவு. அன்றைய முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியிலும்,
வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் இருந்தது. மார்க்ஸ் எங்கெல்ஸ் எடுத்த முடிவுகள்
இந்தப் பருண்மையான நிலைமைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
லெனின் காலத்தில், முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக
வளர்ச்சியடைந்த நிலையிலும், வளரும் முதலாளித்துவமாக இருந்தது அழிந்து போகும் முதலாளித்துவமாக
ஏகாதிபத்தியமாகவும் மாறியிருந்தது. உலக ஏகாதிபத்திய அணிகளிடையே சீர்படுத்த முடியாத
பலவீனதை அடைந்திருந்தது. இந்த பலவீனம் போராக வெடித்தது. வளர்ச்சியின் பருண்மையான நிலைமையே
ஒரு குறிப்பிட்ட தனிநாட்டில் சோஷலிசப் புரட்சி வெற்றி பெறமுடியும் என்ற முடிவுக்கு
லெனினைக் கொண்டு சென்றது. மாறுபட்டமுடிவுகள் மார்க்ஸ் - எங்கெல்ஸ் மற்றும் லெனினுக்கு
இடையே ஏற்பட்டிருந்தாலும் இந்த முடிவுகள் பருண்மையான மாற்ற நிலைமையினால் எடுக்கப்பட்டது.
இந்த வேறுபட்ட முடிவெடுக்க அவர்களுக்கு மார்க்சிய கண்ணோட்டமே அடிப்படையானது. ஆக மார்க்சும்
லெனினும் முடிவுகளில் தான் மாறுபட்டார்கள், அவர்களது கண்ணோட்டம் மார்க்சியமே.
மார்க்சியம் மொழியை வெறும் ஊடக சாதனமாக மட்டும்
கருகின்றது என்ற குற்றசாட்டு பலகாலமாக கூறப்பட்டுவருகிறது. மார்க்சியம் மொழியை ஊடகமாக
கருதுகிறது என்பது உண்மையே. ஆனால் வெறும் ஊடக சாதனமாக மட்டும் பார்க்கிறது என்பது தவறானதாகும்.
ஸ்டாலின் கூறுவதைப் பார்த்தாலே இந்தக் கூற்றின் தவறை அறிந்து கொள்ளலாம்.
“மொழியானது ஒரு ஊடகமாக,
ஒரு கருவியாக விளங்குகிறது. அதன் உதவியுடன் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள்,
எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.
மொழியானது எண்ணங்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதால் அது சொற்களில் தங்கியுள்ளது.
சொற்கள் இணைந்து வாக்கியங்களாகின்றன. மனிதனின் அறிவுபூர்வமான செயல்களின் வெற்றியாகவும்,
சிந்தனைப் போக்கின் விளைவாகவும் மாறி, மனித சமூகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்ய
வழி செய்கிறது.
கருத்துப் பரிமாற்றம் என்பது
நிலையானதும், முக்கியத்துவம் நிறைந்ததும் ஆகும். அதில்லாமல் இயற்கை சக்திகளுக்கு எதிரான
மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் அவசியமான பண்டப் பெறுமானங்களை உற்பத்தி செய்யும்
போராட்டத்தில் அவர்களை ஒன்றிணைப்பது இயலாது. அதில்லாமல், சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கையின்
வெற்றியை உறுதி செய்ய முடியாது. எனவே சமூக உற்பத்தி என்ற ஒன்றே இயலாத ஒன்றாகிவிடும்.
எனவே, அனைவருக்கும் பொதுவான, எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய மொழி என்ற ஒன்றில்லாமல்
சமூகம் உற்பத்தி செய்ய முடியாது, ஒருங்கிணைப்பின்றி, தொடர்பறுந்து, சமூகமாக விளங்குவதினின்றும்
விலகிவிடுகிறது. அதாவது, மொழியான, கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வழியாக விளங்குவதோடு,
சமூகத்தின் போராட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் ஒரு கருவியாகவும் விளங்குகிறது.” (மொழியில்
பற்றி மார்க்சியம்- பக்கம் 51-51)
ஆக மொழி ஊடக சாதனமாக இருக்கும் நிலையில், சமூகப்
போராட்டத்திற்கும் ஒரு கருவியாக இருப்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஸ்டாலின்
கூறுகிறார்:-
“மனித குல வரலாற்றில்,
மனிதர்கள் விலங்கு உலகத்தில் இருந்து தோன்றுவதற்கும், சமூகங்களாக இணைவதற்கும், அவர்கள்
சிந்தனையை வளர்ப்பதற்கும், சமூக உற்பத்தியை ஒழுங்கமைப்பதற்கும், இயற்கைச் சக்திகளை
எதிர்த்து ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கும், நாம் இப்போதுள்ள முன்னேற்றத்தை
அடைவதற்கும் உதவி செய்த சக்திகளுள் பேசும் மொழியும் ஒன்றாகும்.” (டி.பெல்சின்,
எஸ்.ஃப்யூரருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்- பக்கம் 78-79)
இவைகளைப் படிக்கின்ற போது மார்க்சியவாதிகள் மொழியை
வெறும் ஊடக சாதனமாகப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொருளற்றது என்பது உறுதியாகிறது.
அதேநேரத்தில் இனவாதிகள் தாய்மொழியை கருதுவதுபோல் மொழியின் தனித்துவத்தை மார்க்சியர்கள்
பேசுவதில்லை. மார்க்சியர்கள் சர்வதேசியவாதிகள், நாளைய சமூகம் சர்வதேச ஒற்றுமையில் இருப்பதனால்
மொழியின் சர்வதேசத் தன்மையைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அந்த வகையில் மொழியைப்
பற்றி ஸ்டாலின் பிற்காலத்தில் மண்டல மொழியாகவும். சர்வதேச மொழியாகவும் மாறுகின்ற போக்கைப்
பற்றி விளக்குகிறார். இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது நாளைய உண்மையாகும்.
“16வது கட்சிக் காரங்கிரசில்
ஸ்டாலின் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள, மொழிகள் அனைத்தும்
இணைந்து ஒரு புதுமொழி உருவாகும் என்ற கருத்து. மற்றொரு காலப்பகுதியை முன்னிறுத்தியே,
உலக அளவில் சோசலிசம் உருவானதற்குப் பின்பு உள்ள காலப் பகுதியை முன்னிறுத்தியே கூறப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில்
உலக ஏகாதிபத்தியம் என்பது இருக்காது, சுரண்டும் வர்க்கங்கள் தூக்கியெறியப்படுவதோடு,
தேசிய காலனி அடக்குமுறைகள் தூக்கிவெறியப்படும். தேசங்களுக்கு இடையே உள்ள தேசிய தனிமைக்கும்
பரஸ்பர நம்பிக்கையின்மைக்கும் பதிலாக தேசங்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும், நல்லுறவும்
உருவாக்கப்படும், மொழிகளை நசுக்கும், விழுங்கும் கொள்கைகள் துடைத்தெறியப்படும், தேசங்களின்
கூட்டுறவு உருக்கப்படும்போது அவைகளின் கூட்டுறவின் மூலம் தேசிய மொழிகள் ஒன்றையொன்று
வளப்படுத்திக் கொள்ளும், இந்தச் சூழ்நிலைகளில் சில மொழிகள் நசுக்கி, சில மொழிகள் வெற்றிக்
கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என்பது தெளிவு.
இங்கே தோல்வியடைந்த மொழிகள்,
அதை வெற்றி கொண்ட மொழிகள் என்று எதவுமில்லை, நூற்றுக்கணக்கான தேசிய மொழிகளே இருக்கும்
தேசங்களுக்கிடையே நீண்ட பொருளாதார, அரசியல், பண்பாட்டு கூட்டுறவின் மூலம் இந்நூற்றுக்கணக்கான
தேசிய மொழிகளில் இருந்து வளம்மிக்க, ஒன்றுபட்ட மண்டல மொழிகள் முதலில் உருவாகும். அதன்
பிறகு மண்டல மொழிகள் (zonal languages) அனைத்தும் ஒரு சர்வதேச
மொழியாக இணைந்துவிடும். ஆனால் இந்த சர்வதேச மொழி ருஷ்ய மொழியாகவோ, ஜெர்மன் மொழியாகவோ,
ஆங்கில மொழியாகவோ இருக்காது. மாறாக, இந்தப் புதுமொழியானது. தேசிய, மண்டல மொழிகளின்
சிறப்பான கூறுகள் அனைத்தையும் கொண்ட ஒரு புதுமொழியாக விளங்கும்”
(ஏ.கொலோபோவிற்கு
ஸ்டாலின் எழுதிய கடிதம்)
மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியது என்று கூறுகின்றவர்கள்.
ருஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்பு நாட்டில் இதுவரை உள்ள ரயில்வேக்கள் முதலாளிகளின்
ரயில்வேக்கள், அதை அழித்துவிட்டு பாட்டாளிகளின் ரயில்வேக்களை தோற்றுவிக்க வேண்டும்
என்று கூறினர். சமூகத்தைப் பற்றிய, வர்க்கங்களைப் பற்றிய, மொழியைப் பற்றிய புரதான-அராஜகத்தனமான
இதுபோன்றோர்களின் கருத்துக்களுக்கும் மார்க்சியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் கருத்துக்களை முன்வைத்து
மொழி என்பது மேற்கட்டமைப்பு உரியது என்று சிலர் நிறுவ முயற்சித்தனர். இதனையும் ஸ்டாலின்
மறுத்து பதிலளித்தார்.
எங்கெல்ஸ் தாம் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை
என்ற நூலில், பிரிட்டனில் ஆங்கிலேய முதலாளிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனி
இனமாக பாட்டாளி வர்க்கம் மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது தொழிலாளர்கள், முதலாளி வர்க்கத்தவர்களைவிட
மாறுபட்ட கிளைமொழிகளைப் பேசுகிறார்கள் என்கிற வரிகளை முன்வைக்கின்றனர். இங்கே எங்கெல்ஸ்
பொதுவான ஒரு தேசிய மொழியின் அவசியத்தை மறுத்து, வர்க்கத் தன்மைகொண்ட மொழியை பற்றி பேசுகிறார்
என்று இவர்கள் கூறுகின்றனர்.
இங்கே எங்கெல்ஸ் கிளை மொழியைப் பற்றியே பேசியுள்ளார்.
கிளை மொழிக்கும் தேசிய மொழிக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். காலப்போக்கில் தேசியஇனங்கள்
உருவாகும் போது, சில பிரதேசக் கிளைமொழிகள் தேசிய மொழிகளின் அடிப்படையாக அமைவதோடு தனித்துவம்
பெற்ற தேசிய மொழிகளாகவும் வளர்ச்சி பெற்றவதை ஸ்டாலின் குறிப்பிடுகிறார். குர்ஸ்க்-ஓரல்
என்ற கிளைமொழி ருஷ்ய மொழியின் அடிப்படையாக அமைந்தது. அதே போல் போல்டாவஎகீவ் என்ற கிளை
மொழி உக்ரேனிய தேசிய மொழியின் அடிப்படையாக அமைந்தது என்று உதாரணத்தையும் காட்டுகிறார்.
முதலாளி வர்க்கப் பண்பாடு, பாட்டாளி வர்க்கப் பண்பாடு
என்று பண்பாடு இரண்டாக பிரிந்திருப்பதையும், தேசிய பண்பாடு என்ற முழுக்கம் தேசியவாத
முழுக்கமாகும் என்று லெனின் கூறியதையும் முன்வைத்து மொழிக்கும் வர்க்கத் தன்மை உண்டு
என்று சிலர் கூறுகின்றனர். இதனை ஸ்டாலின் மறுத்தார்.
பண்பாடு என்பது, முதலாளித்துவ பண்படாகவும் பாட்டாளி
வாக்கப் பண்பாடாகவும் இருக்கிறது. ஆனால் மொழியானது மக்களிடையே உள்ள தொடர்பு சாதனமாகும்,
இந்த வகையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான மொழியாக இருப்பதோடு, முதலாளித்துவ பண்பாட்டிற்கும்,
பாட்டாளி வர்க்கப் பண்பாட்டிற்கும் சேர்த்தே சேவை செய்கிறது. அதனால் இவர்களின் இருவேறுபட்ட
பண்பாட்டிற்கு இருவேறுபட்ட மொழிகளின் தோற்றத்துக்கு இட்டுச் செல்லும் என்ற பெரும் தவறைச்
செய்கின்றனர்.
இதனை ஒட்டி வேறுரோர் தவறையும் சிலர் செய்கின்றனர்.
ஸ்டாலின் மொழியை அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உரியதாகாது என்று கூறியதை
முன்வைத்து அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாடு எல்லாவற்றிக்கு உரியது கிடையாது.
அதனால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது விஞ்ஞானமாகாது என்ற பெரும் தவறை செய்கின்றனர்.
மொழியை முன்வைத்து ஸ்டாலின் இது போன்ற முடிவை எடுக்கவில்லை.
மொழி என்பது அடித்தளத்தை சார்ந்த மேற்கட்டமைப்பு
என்பது உண்மையா? என்ற கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்:-
“இல்லை. இது உண்மையல்ல.” என்று கூறிவிட்டு அடித்தளம்
மேற்கட்டமைப்பு என்று எதனைக் குறிப்பிடுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறார்.
“அடித்தளம் என்பது சமுக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட
கட்டத்தில் நிலவுகின்ற பொருளாதார அமைப்பாகும். மேற்கட்டமைப்பு என்பது அரசியல், நீதி,
மதம், கலை, தத்துவம் ஆகியவை பற்றிய சமூகத்தின் நோக்குகளும் அதன் தொடர்பான அரசியல்,
நீதி முதலிய நிறுவனங்களும் ஆகும்” என்று எழுதியிருக்கிறார்.
ஆக, மொழி மேற்கட்டமைக்கு உரியத கிடையாது என்பதையும்,
அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பது எதனை பேசுகிறது என்பதையும் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment