Sunday, 24 May 2015

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாடும் எங்கெல்சின் இறுதிகால கடிதங்களும்


எங்கெல்ஸ் தமது இறுதிகாலக் கடிதங்களில் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை விளக்குகின்ற கருத்தாக்கமான அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய விஷயத்தில் கருத்தை மாற்றிக் கொண்டார். அதாவது அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் என்ற கருத்தைத் திருத்திக் கொண்டார் என்பதாக பலபேர் பலகாலமாக கூறிவருகின்றனர். இந்த தவறான போக்கை தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்றாகும்.

எங்கெல்ஸ் பிலோகுக்கு எழுதிய கடிதத்தில் (21(22) செப்டம்பர் 1890) “இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவுக்குப் பொறுப்பாகும். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது..” என்று எழுதியிருக்கிறார்.

இந்த கடிதம் பொருளாதாரத் தரப்பு என்பதே தவறானது என்று கூறவரவில்லை, உரியதைக் காட்டிலும் அதிகாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தையே குறிப்பிடப்படுகிறது. மற்றொரு கடிதத்தில் எங்கெல்ஸ், மேற்கட்டமைப்பின் நடவடிக்கைகள் பொருளாதார மெய்விவரங்களில் இருந்து பெறுவதை அழுத்தம் கொடுத்தோம் அப்படிக் கொடுப்பதற்கு கடமைப்பட்டிருந்தோம் என்று கூறுகிறார். அவ்வாறு செய்யும் போது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சினையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை புறக்கணித்தோம் என்றும் அவ்வாறு புறக்கணித்ததானது எதிரிகள் எங்களை தவறாப் புரிந்து கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் வாய்ப்பளித்து விட்டோம் என்று தான் இங்கே கூறியிருக்கிறார். உள்ளடக்கத்துக்காக வடிவத்தை விளக்குவதை புறக்கணித்தோம் என்று தான் கூறியிருக்கிறார். உள்ளடக்கத்தை தவறாக விளக்கிவிட்டோம் என்று கூறவில்லை.

எங்கெல்ஸ கூறுவதைப் பார்ப்போம்:-
மற்றபடி ஒரே ஒரு விஷயம் மட்டுமே இடம் பெறவில்லை, ஆனால் மார்க்சும் நானும் எங்களுடைய எழுத்துக்களில் அதைப் போதுமான அளவுக்கு வலியுறுத்தத் தவறினோம், அதைப் பொறுத்தமட்டில் நாங்கள் சம அளவுக்குத் தவறு செய்தவர்களே, அதாவது, நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துக்களையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விவரங்களில் இருந்து பெறுவதற்குக் கொடுத்தோம், அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருந்தோம்ஆனால் நாங்கள் அப்படிச் செய்கின்ற பொழுது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சினையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை, இதரவற்றைப் புறக்கணித்தோம். அது நமது எதிரிகள் எங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் விரும்பத்தக்க சந்தர்ப்பத்தை அளித்தது
(மேரிங்குக்கு எழுதிய கடிதம். ஜீலை 14, 1893)

இதனைத் தொடர்ந்து எழுதும் போது எங்கெல்ஸ் கூறுகிறார், சிந்தாந்தம் என்ற நிகழ்ச்சிப் போக்கில் சிந்தனையாளர் தம்மை உந்தித் தள்ளுகின்ற உண்மையான இயக்குச் சக்திகளை அறியாமல் சிந்தனையே சிந்தனையின் அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்.

சித்தாந்தம் என்பது ஒரு நிகழ்வுப்போக்கு, சிந்தனையாளர் என்று சொல்லப்படுகிறவர் அதை உணர்வுடன் நிறைவேற்றுகிறார் என்பது மெய்யே, ஆனால் போலி உணர்வுடன்  அதைச் செய்கிறார். அவரை உந்தித் தள்ளுகின்ற உண்மையான இயக்குச் சக்திகளை அவர் அறியார், இல்லையென்றால் அது சித்தாந்த நிகழ்வுப்போக்கா இருக்காது. ஆகவே அவர் போலியான அல்லது இயக்குச் சக்திகளாகத் தோன்றும் சக்திகளைக் கற்பனை செய்கிறார்.

அது சிந்தனையின் நிகழ்வுப்போக்கு என்பதால், அவர் அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கலப்பற்ற சிந்தனையில் இருந்துதன்னுடைய சொந்தச் சிந்தனை அல்லது தன்னுடைய மூதாதையர்களின் சிந்தனையில் இருந்து- பெறுகிறார்.

அவர் வெறும் சிந்தனைப் பொருளுடன் வேலை செய்கிறார், அது சிந்தனையின் உற்பத்திப் பொருள் என்று சிந்திக்காமலே ஏற்றுக்கொள்கிறார், சிந்தனையைச் சாராத, அதிகத் தொலைவான தோற்றுவாயை ஆராய்வதில் அவர் ஈடுபடவில்லை. அவர் இதை சகஜமாகக் கருதுகிறார், ஏனென்றால் எல்லா நடவடிக்கையும் சிந்தனையினால் நயப்படுத்தப்படுகின்றபடியால், அது முடிவில் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருப்பரதாக அவருக்குத் தோன்றுகிறது.

ஆக, எங்கெல்ஸ் இங்கே சிந்தனையே சிந்தித்துக் கொள்ளவில்லை, உந்தித் தள்ளுகின்ற உண்மையான இயக்குச் சக்தியான பொருளாதாரத் தரப்பினையே குறிப்பிடுகின்றார் என்பது தெளிவுபடுகிறது.

எல்லாவற்றையும் காட்டிலும் அரசு வடிவங்கள், சட்ட அமைப்புகள், ஒவ்வொரு தனித்துறையிலும் சித்தாந்தக் கருதுகோள்களைப் பற்றிய சுயேச்சையான வரலாற்றின் இந்தத் தோற்றம் மிகவும் பெரும்பான்மையிரின் கண்களைக் குருடாக்கிறதுஎன்றும் அந்தக் கடித்தில் பொருளாதார உண்மைகளின் மாற்றமே சிந்தனையில் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறியாமல் இருப்பதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கெல்ஸ் தமது இறுதிகாலத்தில் எழுதிய இந்த கடிதங்கள் வெளிவந்து 125 ஆண்டுகள் ஆகின்றன. இதனை இன்றளவும் புரிந்து கொள்ளாமல் இருப்பதை முறியடிக்க வேண்டும்

இந்தக் கடிதங்களில் எங்கெல்ஸ் அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான இடைத்தொடர்பைப் பற்றி பேசுகிறார். இந்த இடைத்தொடர்பில் அடித்தளம் தீர்மானகரமான பாத்திரத்தையும், மேற்கட்டமைப்பு தாக்கம் செலுத்துவதையும் கூறுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு தீர்மானிக்கும் என்பதை அவர்கள் எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளவில்லை. அவ்வாறு மாற்றிக் கொண்டால் அது சமூகம் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாகிவிடும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்றால் அது பொருள்முதல்வாதம்.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்றால் அது கருத்துமுதல்வாதம்.

அதனால் எங்கெல்ஸ் எந்தக் காலத்திலும் அடித்தளத்தின் தீர்மானரகமான பாத்திரத்தை மறுத்திட முடியாது.

மேரிங்குக்கு எழுதிய கடிதத்தில், உள்ளடக்கத்துக்காக முதலில் வடிவம்  எப்பொழுதும் புறக்கணிக்கப்படுகிறது ஆனால் இது பழையகதை என்றும் எதிர்காலத்தை முன்னிட்டு இதனை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டுத் தான் தொடர்கிறார். எங்கெல்ஸ் காலத்திலேயே முடித்துவிடப்பட்ட விஷயத்தை மீண்டும் விவாதித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலையே. அதனால் அன்றைய கடிதங்களில் கூறப்பட்டதை தொகுத்துப் பார்ப்போம்.

சித்தாந்தத்துறைகள் சுயேச்சையாக வளர்ச்சி அடைவதை மறுப்பதால், அதன் வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் மறுக்கின்ற முட்டாள் தனமான கருத்தைத்தான் எங்கெல்ஸ் மறுக்கிறார். இந்த மறுப்போடு முடிவில் பார்க்கும் போது பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதேநேரத்தில் மேற்கட்டமைப்பு தோற்றுவித்த காரணங்களின் மீதுகூட  அதனால் எதிர்செயல் புரிய முடியும் என்று கூறியிருக்கிறார்.

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."
(மேரிங்குக்கு எழுதிய கடிதம். ஜீலை 14, 1893)

அப்படி என்றால் எங்கெல்ஸ் இந்தக் கடிதங்களில் எதனை மறுத்து எழுதினார் என்று இப்போது பார்ப்போம். “..சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல், பொருளாதார நிலைமை தானகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை” (போர்கியுசுக்கு எழுதிய கடிதம் 25-01-1894)


மேலும் கூறுகிறார்:-
மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்- ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்- அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்- எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடி இருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளாச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்கின்றன.”

ஆக சமூக வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு அடித்தளம் தீர்மானிக்கின்றன என்கிற பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துக்கு எதிராக அல்லது மீறியதாக எங்கெல்சை எவராலும் விளக்கப்படுத்த முடியாது. இந்தக் குறிப்பிட்ட கடிதம் எங்கெல்ஸ் தாம் மறைவதற்கு ஒராண்டிற்கு முன் எழுதியது.

இடைசெயலை, பரஸ்பர வினைபுரிதல் என்று சமமான இடைவினையாக எங்கெல்ஸ் குறிப்பிடவில்லை. இடைசெயலில் அடித்தளமே தீர்மானகரமானது என்கிறார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ்:-
இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே அறுதியானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.” (ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம் 27-10-1890)

இடைசெயலில் பொருளாதார இயக்கம் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது என்று இக்கடிதத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இடைச்செயல் எந்த வகையில் பார்த்தாலும் அடித்தளத்தின் தீர்மானகரமான போக்கை மறுக்கவும் இல்லை மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீதான தாக்கத்தை குறைத்து மதிப்பிடவும் இல்லைஇந்த இடைசெயல் சமமில்லாதவை என்றும் பொருளாதார இயக்கம் மிக வலிமையான, ஆதிமூலமான, தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தோன்றிய புதிதில் பலருக்கு அந்த தத்துவத்தை அறிந்து கொண்டால், அனைத்தையும் அறிந்து கொண்டுவிட்டதாக நினைத்துக்கொண்டனர். அறுதியான உண்மையை அறிந்து கொண்டதாகவும், தமக்கு எந்த புதியதும் தேவையல்ல என்ற வறட்டுத் தனத்துக்கு சென்றதை மறுத்து இதில் காணப்படும் சார்புத் தன்மையை குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். மேலும் எதார்த்த நிலைமைகளோடுபொருள்முதல்வாதஎன்னும் சொல்லை ஒவ்வொரு பொருளின் மீது ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்று அன்றைய இளைஞர்கள் நினைத்திருந்ததை இக்கடிதத்தில் மறுக்கிறார். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது ஒரு வழிகாட்டியே, இதனைக் கொண்டு, சமூக இருத்தல் நிலைமைகளை விவரமாக ஆராயப்பட வேண்டும்இதற்கு ஏராளமானவர்களுடைய உதவி தேவை, இதில் தீவிரமாக உழைப்பர்களே சாதிக்க முடியும் என்று ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதத்தில்
 (ஆகஸ்ட் 5, 1890) எங்கெல்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

சித்தாந்தத் துறை இரண்டாம் நிலையான விளைவை ஏற்படுத்தினாலும் அதன் எதிர்செயல் புரிவதை எங்கெல்ஸ் சுட்டுகிறார்:-
பொருளாதார வாழ்க்கைமுறை பிரதான காரணமாக இருந்தாலும் சிந்ததாந்தத் துறைகள் தம்மளவில்இரண்டாம் நிலையான விளைவுடன் என்றாலும் கூட- எதிர்ச்செயல் புரிவதை இது தடுக்கவில்லை என்பதை இந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர் எதைப் பற்றி எழுதுகிறாரோ, அந்தப் பொருளைப் புரிந்து கொண்டிருப்பது சாத்தியமல்ல.

வறட்டுத்தனமாக புரிந்து கொள்வதை எதிர்ப்பதற்காக மார்க்ஸ் தம்மைநான் மார்க்சியவாதி அல்லஎன்று கேலியாகச் சொல்வதை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்:-
வரலாற்றுப் பொருள்முதல்வ்தம் இன்று ஏராளமானவர்களுக்கு வரலாற்றைப் படிக்காமல் இருப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுகிறது. எழுபதுகளின் கடைசியில் இருந்த பிரெஞ்சுமார்க்சியவாதிகளைப்பற்றி மார்க்ஸ் சொன்னதைப் போலவே (“நான் மார்க்சியவாதி அல்ல என்பதுதான் எனக்குத் தெரியும்”) இன்றைய நிலைமைகள் உள்ளன.

வினியோகிப்பதற்கு எவ்வளவு இருக்கிறது என்பது வினியோக முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எங்கெல்ஸ் இங்கே சுட்டுகிறார்:-
வினியோகமுறை சாராம்சத்தில் வினியோகம் செய்வதற்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது, இந்த அளவு உற்பத்தியின் வளர்ச்சியையும் சமூக ஒழுங்கமைப்பையும் பொறுத்து நிச்சயம் மாறும், ஆகவே வினியோகமுறையும் மாற்றம் அடையும் என்பது எவருக்கும் தோன்றாதது விசித்திரமே.

பொருள்முதல்வாதம் என்பது நிகழ்வோடு ஒட்டும் லேபிள் அல்ல, வரலாற்றை அணுகுவதற்கு வழிகாட்டியே, இதற்கு ஏராளமானவர்களின் உதவியும், தீவிரமான உழைப்பும் தேவைப்படுவதை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்”:-
பொதுவாக, “பொருள்முதல்வாதஎன்னும் சொல் ஜெர்மனியின் இளம் எழுத்தாளர்கள் பலருக்கு அதிகமாக ஆராய்சி செய்யாமல் எந்த ஒரு பொருள் மீதும், ஒவ்வொரு பொருள் மீதும் ஒட்டுகின்ற வெறும் சொற்றொடராகத்தான் பயன்படுத்துகிறது, அவர்கள் அந்த லேபிளை ஒட்டி விடுகிறார்கள், பிரச்சினை முடிந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் வரலாற்றைப் பற்றி நம்முடைய கருதுகோள் அது ஆராய்ச்சிக்கு வழிகாட்டி, ஹெகலியவாத மாதிரியில் கட்டுமானம் செய்வதற்கு நெம்புகோல் அல்ல என்பதே.

வரலாறு அனைத்தும், மீண்டும் அராயப்பட வேண்டும், வெவ்வேறு சமூக அமைப்புகளில் இருந்து அவற்றுடன் பொருந்துகின்ற அரசியல் சிவில் சட்ட, அழகியல், தத்துவ, சமய இதர கருத்துக்களை வருவிக்க முயல்வதற்கு முன்பாக அந்த சமூக அமைப்புகளின் இருத்தல் நிபந்தனைகள் விவரமாக ஆராயப்பட வேண்டும். இதுவரை இங்கே செய்யப்பட்டிருப்பது மிகவும் குறைவு, ஏனென்றால் அதில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் மிகவும் சிலரே. இந்தத் துறையில் ஏராளமானவர்களுடைய உதவி நமக்குத் தேவை. அது மிகவும் பெரிய துறை, தீவிரமாக உழைக்கின்ற எவரும் அதிகமாகச் சாதிக்க முடியும்.

இக்கடிதத்தின் இறுதியில், கட்சியை சார்ந்திருக்கின்ற இளம் எழுத்தாளர்களில் மிகக்குறைவானவர்களே அரசியல் பொருளாதாரத்தை, அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றை, வணிகம், தொழில்துறை மற்றும் விவசாயத்தின் வரலாற்றை கற்கின்ற சிரமத்தை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் எழுதியிருக்கிறார். அரசியல் பொருளாதாரத்தை அறிந்திடாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாததை சிறந்த முறையில் கையாள முடியாது.

       மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் மரபுகள் தீர்மானகரமானது இல்லை என்றாலும் ஒரு பாத்திரம் வகிக்கின்றன என்று பிலோகுக்கு எழுதிய கடிதத்தில் (செப்டெம்பர் 21 (22) 1890) எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில்

இறுதியில் நிர்ணயிக்கும் சக்தியாக பொருளாதார காணரங்களே என்று, தானும் மார்க்சும் கூறியதாகவும், அதனால் பொருளாதாரக் காரணங்கள் ஒன்றுதான் நீர்ணயிக்கின்ற ஒரேகூறு என்று திரித்து கூறாதீர்கள் என்றும், மேற்கட்டுமானத்தின் தாக்கம் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன என்றும் பிலோகுக்கு எழுதிய கடிதத்தில் (செப்டெம்பர் 21 (22) 1890) எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். மேலும் மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் மரபுகள் தீர்மானகரமானது இல்லை என்றாலும் ஒரு பாத்திரம் வகிக்கின்றன  என்று கூறுகிறார்.

கீழே கொடுக்கப்படுகின்ற பகுதி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை குற்றகுறையின்றி புரிந்து கொள்வதற்கு தோவைப்படுகிற முழுமையும் இடம் பெற்றுள்ளது. அதனால் தான் எங்கெல்ஸ் இங்கே தம்மோடு மார்க்சையும் இணைத்து எழுதியிருக்கிறார்.

“… வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை இறுதியில் நிர்ணயிக்கின்ற சக்தியாகும். (the ultimately determining element in history) மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரேகூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருத்தாக்கதைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றி விடுகிறார்.

பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள்- வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைவுகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாம் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், மதக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும்வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாய் இருக்கின்றன. இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்ளிடைத் தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. (the economic movement finally asserts itself as necessary.)

இங்கே எங்கெல்ஸ். வரலாற்று நிகழ்வுப் போக்குகளின் தாக்கம் பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரியளவாய் இருக்கிறது என்றும் இடைசெயலின் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது என்று எழுதியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக கூறுகிறார், மரபுகளும் வரலாற்றில் தீர்மானகரமானதல்ல என்றாலும் ஒரு பாத்திரம் வகிப்பதை குறிப்பிட்டுள்ளார்.

நமது வரலாற்றை நாமே உருவாக்குகிறோம், ஆனால் முதலாவதாக, மிகவும் திட்டவட்டமான அனுமானங்கள் மற்றும் நிலைமைகளின் கீழ் உருவாக்குகிறோம். இவற்றில் பொருளாதார ரீதியானவை முடிவில் தீர்மானகரமானவை. ஆனால் அரசியல் நிலைமைகள், இதரவை, மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற மரபுகளும் கூட ஒரு பாத்திரத்தை- அது தீர்மானரகமானதல்ல என்றாலும்வகிக்கின்றன.

வடிவத்தை நிர்ணயிப்பதில் மேற்கட்டமைப்பு தீர்மானரமான பாத்திரததை ஆற்ற முடியும் அதனை மறுப்பது பண்டிதபுலமைத்தனமே என்று எங்கெல்ஸ் கூறுகிறார்:-
எல்லாவற்றுக்கும் மேலாக பிரஷ்யாவை உடைமையாகக் கொண்டிருந்ததனால் பிரான்டென்பர்க் போலந்து விவகாரங்களினுள், ஆகவே சர்வதேச அரசியல் உறவுகளினுள் இழுக்கப்பட்டது, இவை ஆஸ்திரிய மரபின் சொத்துடைமையின் உருவாக்கத்திலும் தீர்மானகரமாக இருந்தன என்பது மெய்யே” -என்பதை மறுப்பது பண்டிதபுலமைத்தனமையாகும்.

எங்கெல்சின் கருத்தை திரிப்பவர்கள் இதனை மட்டும் படித்துவிட்டு அல்லது இதனோடு கூறியதை பார்க்க மறுத்துவிட்டு இந்தப் பகுதியை மட்டும் எங்கெல்சின் கருத்தாக வெளிப்படுத்துகின்றனர். இங்கு எங்கெல்ஸ் கூறியதை முழுமையாக ஒருங்கிணைந்து படித்து புரிந்து கொள்வதே அவரின் முடிவான கருத்தாக இருக்க முடியும்.

உற்பத்தி முறையால் தீர்மானிக்கப்பட்ட வணிகம், உற்பத்தியின் சார்புநிலையில் செயல்படுகிறது. அவ்வாறு செயற்படும்போது சார்புநிலையிக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய சொந்த விதிகளைப் பின்பற்றுகிறது. இவை உற்பத்தி முறையில் எதிர்ச்செயல் புரிகிறது என்று எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய கடித்தில் (அக்டோபர் 27, 1890) கூறியுள்ளார்.

கடைசியாகப் பார்க்கும் பொழுது, உற்பத்தி தீர்மானரகமான காரணியாக இருக்கிறது. உற்பத்திப் பொருள்களின் வணிகம், முறையான உற்பத்தியில் இருந்து சுதந்திரம் பெற்றவுடனே, அது தனக்கென்று தனியான இயக்கத்தைப் பின்பற்றுகிறது, அந்த இயக்கம் மொத்தத்தில் உற்பத்தயினால் ஆளப்பட்ட போதிலும், விவரங்களில் மற்றும் இந்தப் பொதுவான சார்புநிலைக்கு உள்ளே மறுபடியும் இந்தப் புதிய காரணியின் இயல்பில் உள்ளுறையான தன்னுடைய சொந்த விதிகளைப் பின்பற்றுகிறது. இந்த இயக்கம் தன்னுடைய சொந்தக் கட்டங்களைக் கொண்டிருக்கிறது, தன்னளவில் உற்பத்தியின் இயக்கத்தின் மீது எதிர்ச்செயல் புரிகிறது.

எவ்வகையிலும் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீதான் இடையீடு எதிர்ச்செயலே தவிர, தீர்மானகரமாது அல்ல. மேலும் கூறுகிறார்.

“..புதிய, சுயேச்சையான சக்தி பிரதானமாக உற்பத்தியின் இயக்கத்தைப் பின்பற்றுகின்ற பொழுதே, தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது.

இது இரண்டு சமத்துவமில்லாத சக்திகளின் இடைச்செயல், ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறு பக்கத்தில் புதய அரசியல் சக்தி, இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்கிறது, அந்த அரசியல் சக்தி ஒர தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்த்தைப் பெற்று விடுகிறது. மொத்தத்தில் பொருளாதார இயக்கம் முன்னேறும், ஆனால் அது தானே நிறுவி சார்புநிலையான சுதந்திரம் அளித்த அரசியல் இயக்கத்தின்ஒரு பக்கத்தில் அரசு ஆட்சியதிகாரத்தின் இயக்கத்தில் இருந்து மறு பக்கத்தில் அதே சமயத்தில் தோற்றுவிக்கப்படுகின்ற எதிர்ப்பில்எதிர்ச்செயல்களுக்கு உட்படுகிறது.

இந்த எதிர்ச்செயலை இன்னும் விரிவாக தொடர்கிறார் எங்கெல்ஸ்:- “..தன்னளவில் பொருளாதார அடிப்படை மீது எதிர்ச்செயல் புரிகிறது. சில  வரையறைகளுக்குள் அதை மாற்றியமைக்கவும் கூடும் என்பது சொல்லாமலேயே அமையும்”- என்று கூறி உதாரணத்தையும் கொடுத்துள்ளார்.

உயில் எழுதுவதற்கு இங்கிலாந்தில் கிடைக்கின்ற சுதந்திரத்திற்கும், பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை, பொருளாதாரக் காரணங்களில் தேடிக் கொண்டிருக்க முடியாது.

“இறுதி உயில் எழுதுபவருக்கு இங்கிலாந்தில் அளிக்கப்பட்டிருக்கின்ற முற்றான சுதந்திரமும், பிரான்சில் அவருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் ஒவ்வொரு விஷயத்திலும் பொருளாதாரக் காரணங்களினால் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன என்று நிரூபிப்பது கடினமாகும்.”

மேற்கட்டுமானத்தின் செயற்பாட்டையும் அதன் தாக்கத்தையும் என்றுமே தாங்கள் விளக்கவில்லை என்று எங்கெல்ஸ் கூறவில்லை. அது பற்றி எழுதிய தங்களது நூல்களையே கற்று தெளிவுபெற வலியுறுத்தியுள்ளார். அதற்கான நூல் பட்டியலையும், அத்தியாயங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

“அத்துடன் நீங்கள் இத்தத்துவத்தை மூலத் தோற்றுவாய்களிலிருந்து கற்க வேண்டும், இரண்டாம் நிலையானவற்றிலிருந்து அல்ல என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்வேன். உண்மையில் அப்படிக் கற்பது அதிகச் சுலபமாகும். அதுபாத்திரம் வகிக்காத எதையுமே மார்க்ஸ் அநேகமாக எழுத வில்லை. குறிப்பாக, “லுயீபோனப்பார்டின் பதினெட்டாம் புரூமேர்” அதைக் கையாளுவதற்கு மிகவும் சிறந்த உதாரணமாகும். அதே போல, மூ த் தி ல் அது பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. பிறகு நான் எழுதிய சில நூல்களையும் - திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி மற்றும் லூத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் *-இங்கே குறிப்பிட முடியும்; நானறிந்த மட்டில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் பற்றி இன்றுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் நுணுக்கமான வர்ணனையை அவற்றில் எழுதி யிருக்கிறேன்.”
(பிலோகுக்கு எங்கல்ஸ் எழுதிய கடிதம், செப்டெம்பர் 21(22), 1890)

“….மார்க்ஸ் எழுதிய பதினெட்டாம் புரூமேர் உங்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்கும்; அது செய்முறையான உதாரணம் என்பதால் உங் களுடைய கேள்விகளுக்கு அதிகமான பதில்களைத் தரும் என்று நான் கருதுகிறேன். நானும் பெரும்பான்மையான விஷயங்களை டூரிங்குக்கு மறுப்பு, 1, அத்தியாயங்கள் 9-11, 11, அத்தியாயங்கள் 2-4 மற்றும் II, அத்தியாயம் 1 அல்லது அறிமுகத்தில், அத்துடன் ஃபாயர்பாகின் கடைசிப் பகுதியில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.”
(போர்கியுக்கு எழுதிய கடிதம் 25-1-1894)


            அடித்தளத்தின் மீதான புறத்தாக்கங்களை மார்க்ஸ் கணக்கில் கொள்ளாமல் இல்லை, அதனையும் பகுத்தாராயந்து தான் அடித்தளம் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

“ஊதியமிலா உபரி-உழைப்பு நேரடி உற்பத்தியாளர்களிடம் இருந்து கறக்கப்படுவதற்கு பயன்படும் பிரத்தியேகமான பொருளாதார வடிவம்தான், ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்குமான உறவு முறையைத் தீர்மானிக்கிறது, ஏனென்றால் இந்த உறவு முறை நேரடியாக பொருளுற்பத்தியில் இருந்தே விளைவதும் அதனை நிர்ணயிக்கும் கூறுகளில் ஒன்றாகி அதன் மீது எதிர்வினை புரிவதுமாகும். உள்ளபடியான உற்பத்தி உறவுகளில் இருந்து எழுகிற பொருளாதாரச் சமூகத்தின் அமைப்பு முறை அனைத்தும், பிரத்தியேகமான அரசியல் வடிவமும் கூட இந்த உறவு முறையையே அடித்தளமாய் கொண்டுள்ளது. எப்போதுமே உற்பத்திச் சாதன உடைமையாளர்களுக்கும் நேரடி உற்பத்தியாளர்களுக்குமான நேரடி உறவு முறைதான்- இயல்பாகவே எப்போதும் உழைப்பு முறையின் வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்துக்கும், எனவே அதன் சமூக உற்பத்தித் திறனுக்கும் ஏற்ப அமைகிற இந்த உறவுமுறைதான் சமூகக்கட்டமைப்பு அனைத்தின் உள் இரகசியத்தை அதில் மறைந்து இருக்கும் அடிப்படையை வெளிப்படுத்துகிறது, அதோடு இறைமைக்கும் சார்பு நிலைக்குமான உறவின் அரசியல் வடிவத்தை, சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் உரிய பிரத்தியேகமான அரசு வடிவத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரே பொருளாதார அடிப்படை – முக்கிய நிலைமைகளின் கண்ணோட்டத்தில் ஒரே பொருளாதார அடிப்படையாக இருப்பது எண்ணற்ற வெவ்வேறு அனுபவச் சூழல்களின் விளைவாக, இயற்கை நிலைமைகள், மரபினஉறவுகள், புறத்திருந்தான வரலாற்றுத் தாக்கங்கள் (external historical influences) முதலானவற்றின் விளைவாக தோற்றத்தில் எல்லையற்ற பல மாற்றங்களையும் படிநிலைமைகளையும் வெளிப்படுத்துவதற்கு இது தடையாவதில்லை, இந்தப் பல்வேறுபட்ட மாற்றங்களையும் பகுத்தாராய்வதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும்.”
(மூலதனம் பாகம் -3 -பக்கம்- 1124-1125)

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் கருத்துக்கள் பொருளாதார நிலைமையோடு ஒன்றுகலந்தவை, பூர்வகால பிதற்றல்களுக்கு எல்லாம் பொருளாதாரக் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பது வெறும் பண்டியதபுலமைத் தனமே ஆகும். சமூகத்தில் காணப்படும் அனைத்தையும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டிற்குள் அடக்க முயற்சிக்கக் கூடாது என்றும் எங்கெல்ஸ் கூறியுள்ளார். மொழியை மேற்கட்டமைப்புக்குரியது என்று கூறிவருகிற போது ஸ்டாலின் இதனை மறுத்தார். மொழி வர்க்க சார்பானது கிடையாது அதனால் இதனை மேற்கட்டமைப்பு என்று கூறிடமுடியாது என்று விளக்கம் கொடுத்தார். இந்த விளக்கம் மொழியைப் பற்றியது தானே தவிர இந்தக் கோட்பாட்டைக் குறித்தல்ல. சிலபேர் இந்த மொழியை பற்றி ஸ்டாலின் கூறியதை முன்வைத்து, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடே தவறானது என்று முடிவெடுக்கின்றனர். ஸ்டாலின் மொழியைத் தொடர்ந்து இத்தகைய முடிவை எடுக்கவில்லை.

“..இயற்கையைப் பற்றிய போலியான கருத்துக்கள் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தின் கீழான பொருளாதார வளர்ச்சியுடன் ஒன்றுகலந்ததை, சில நேரங்களில் அதன் நிபந்தனைகள், ஏன் அதன் காரணங்களுமாக விளங்குகின்றன. இயற்கையைப் பற்றி அறிவின் முனனேற்றத்துக்குப் பிரதான இயக்குச் சக்தியாக பொருளாதார அவசியம் இருந்தாலும்- அது மேன்மேலும் அப்படி ஆகியிருந்தாலும்- இந்தப் பூர்விக காலப் பிதற்றல்கள் எல்லாவற்றுக்கும் பொருளாதார காணரங்களைத் தேடுவதும் கண்டுபிடிப்பதும் வெறும் பண்டிதபுலமைதனம் என்பது உறுதி.

சமூகத்தில் காணப்படும் அனைத்தையும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்ததுக்குள் நுழைப்பது தேவையற்றதாகும். அதே நேரத்தில் உற்பத்தியும் மறுவுற்பத்தியும் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும், மேற்கட்டமைப்பு தன்னளவில் அடித்தளத்தில் சில வரையறைக்குள் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மார்க்சியவாதிகளின் செயற்பாடு விஞ்ஞான வழிப்பட்டதாக இருக்கும்


4 comments:

  1. “இதைப் பற்றிப் பேச வேண்டிய அளவிற்கு பேசத் தவறியிருக்கிறோம்” என்று பேச வேண்டிய அளவிற்கு பேசாத தவறை ஒப்புக் கொள்ளும் மாண்பு இது.

    பேசாததற்கும் தவறாகப் பேசுவதற்கும் வேறுபாடு நம்மை விடவும் அவர்களுக்குத் தெரியும் தோழர்.

    அவர்கள் பேசிக் கொண்டுதானிருப்பார்கள். நாமும் விளக்கிக் கொண்டே இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. விளக்குவோம் தோழர்

      Delete
  2. அருமை தோழா
    இங்கு நீங்கள் பொருளாதாரவாதம் என்று குறுக்கிப் பார்க்கும் பார்வையை
    இங்கே ஏங்கெல்ஸ்சின் மேற்கோள் மறுத்துரைக்கின்றது. மேற்கட்டுமானம் பற்றிய பிரச்சனை
    ஒவ்வொருவரும் தமது நலனுக்காக திரித்து விடுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவரவர் தத்துவத்துக்கு ஏற்பா திரிக்கின்றனர்

      Delete