Saturday 16 May 2015

எந்திரவகை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கோட்பாட்டை திரித்துரைக்கும் போக்கை எதிர்த்து

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்றகிற கருத்தாக்கத்தை சிதைக்கும் போக்கு தமிழகத்தில் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறதுஅடித்தளம் மேற்கட்டுமானம் என்ற எதிர்வுகளுக்கு மார்க்சிய முதலாசிரியர்கள் கூட இவ்வளவு இறுக்கத்தை வழங்கினார்களா என்பது சந்தேகமே. இயங்கியல் எதிர்வுகளை நெகிழ்வாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு ஒன்றிலிருந்து மற்றதை வருவிக்கும் முறையியலை அவர்கள் ஏற்கவில்லை. ஹெகலிய இயங்கியலில் கூட இத்தனை இறுக்கம் கிடையாது என்று மார்க்சின் கருத்தை புரட்டி, சிதைக்கும் போக்கு அதிகமாகவே நடத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, மார்க்சியம் எதை எதிர்த்து தோன்றியதோ, அந்த பழைய நிலைக்கு மார்க்சியத்தை எடுத்துச்செல்லும் வேலையைச் செய்கிறது இந்தப் போக்கு.

மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் கூறினார்:-
“.. ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.”

இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாதுஎன்று எங்கெல்ஸ் குறிப்பிட்டதற்கு மாறாக பழையபடி மீண்டும் மறுதலையாக, அதாவது மனிதர்களின் உணர்வுநிலையைக் கொண்டு சமூகவாழ்நிலையை விளக்க முற்படுகின்றனர்.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாகவும், இதன் மூலம் பொருளாதார காரணங்கள் சமூக அடிப்படை என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் தவறாக புரிந்து கொண்டு, பண்பாட்டு மார்க்சியம் என்ற சிந்தனைப் போக்கைத் தொடங்கினர்.

எங்கெல்ஸ் போர்சியுசுக்கு எழுதிய கடிதத்தில்(ஜனவரி 25, 1894) கூறுகிறர்:-
வரலாற்றில் மற்ற எல்லா தற்செயல்களும் தோற்ற அளவிலான தற்செயல்களும் இப்படியே. நாம் ஆராரய்கின்ற குறிப்பிட்ட துறை பொருளாதாரத் துறையிலிருந்து எவ்வளவு தள்ளி நின்று கலப்பற்ற சூக்கும சித்தாந்தத்தை நெருங்குகிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக அதன் வளர்ச்சியில் தற்செயல்கள் காணப்படும், அதன் வளைவு மிகவும் குறுக்கு நெடுக்காகச் செல்லும். ஆனால் நீங்கள் வளைவின் சராசரி நடுக்கோட்டை வரைந்தால், எடுத்துக் கொண்ட காலப் பகுதி அதிகமாக இருப்பதற்கும் ஆராயப்படுகின்ற அரங்கம் விரிவாக இருப்பதற்கும் ஏற்ப அந்தக் கோடு பொருளாதார வளர்ச்சியின் நடுக்கோட்டிற்கு மேன்மேலும் இணைகரமாகச் செல்வதைப் பார்க்க முடியும்
    
இதனை தொடர்ந்து தீடீர்புரட்சியாளரான நெப்போலியனைப் பற்றி மார்க்ஸ் எழுதிய  லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்   என்ற நூலிலும், எங்கெல்ஸ் தாம் எழுதிய  டூரிங்கு மறுப்புலுத்விக் ஃபாயர்பாக்  என்ற நூலிகளிலும் ஏற்கெனவே இதனைப் பற்றி எழுதியிருப்பதாக தெரிவிக்கிறார்.

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல் மார்க்சியத்தின் அடிப்படைக்கு எதிரான பண்பாட்டு மார்க்சியம், மண்ணிற்கேள்ள மார்க்சியம் என்று மார்க்சின் பெயரைத் தாங்கிக்கொண்டே, மார்க்சியத்தின் அடிப்படையை மறுக்கின்றனர். இதற்கெல்லாம் லூக்காஸ், கிராம்சி போன்றோர்கள் பெரும் காரணமாவார்கள்.

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேற்கட்டமைப்பு என்பது, - குறிப்பாக பண்பாடு - அடித்தளத்தின் பிரதிபலிப்பல்ல, மேற்கட்டமைப்பிற்கு தனியான சுதந்திரம் உண்டு என்று பண்பாட்டு மார்க்சியர்கள் கூறுகின்றனர்.

கிராம்சியின் கண்ணோட்டதைப் பார்ப்போம்.

கிராம்சியின் கருத்துக்கள் குழப்பம் நிறைந்தாக காட்சியளிக்கிறது, இந்தக் குழப்பம் அவரது முடிவுகளையும் பாதிக்கிறது.
பொருளாதார சக்திகள் உள்ளடக்கமாவும் கருத்துநிலைகள் வடிவமாகவும் அமைகின்றன. ஆனால் உள்ளடக்கம் என்றும் வடிவம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் பாகுபாடே அன்றி வேறல்ல.”
        (கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை .கீதா பக். 466)

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை, வெறும் புரிந்து கொள்வதற்கு வகுத்துக்கொண்ட பாகுபாடாக மட்டுமே பார்க்கிறார். பொருளாதார கட்டமைப்பு மேற்கட்டமைப்பை  தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கிராம்சி இல்லை.

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்குரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.”                                                
டூரிங்குக்கு மறுப்பு  (பக்கம் 48   49)

மனிதனது வாழ்நிலை தான் அவனுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை, உள்ளடக்கம் என்றும் வடிவம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் பாகுபாடே அன்றி வேறல்ல என்று கொச்சைப்படுத்துவதை சதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. இதன் அடிப்படையில் தான் மார்க்சியத்தின் தத்துவயியல், அரசியல் பொருளாதாரம், அறிவியல் கம்யூனிசம் என்ற இம்முன்று துறைகளிலும் திருத்தல் போக்கு நடைபெற்றுவருகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பது வெறும் புரிந்து கொள்வதற்கான வழிமுறையல்ல. அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் நிர்ணயிக்கிறது என்பது மார்க்சியத்தின் அடிப்படையான முடிபாகும்.

வரலாற்று ரீதியாக, பொருளாயதச் சக்திகளை அவற்றுக்குள்ள வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்.” 
      (கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை .கீதா பக். 466)

இதில், பொருளாதார சக்திகளை அதிற்குரிய வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, என்றும் பொருளாதார சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களை பிரித்துப் பார்த்தால் அது தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே இருக்கும் என்று கூறும் கிராம்சியின் கூற்றில் பொருளாதார சக்திகள் வடிவத்தை (மேற்கட்டமைப்பை) தீர்மானிக்கிறது என்ற மார்க்ஸ் கண்டுபிடிப்பை பற்றி புரிதல் இல்லை. அடித்தளம் மேற்கட்டமைபு என்ற இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்க்கிறார். இந்த மார்க்சியத்திற்கு மாறான கருத்தாக்கத்தில் நிலைகொண்டிருப்பதால், அவரது முடிவுகள் மார்க்சியத்திற்கு எதிராக செல்கிறது.

கிராம்சி கூறுகிறார்:
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே பாட்டாளி வர்க்கம் தனது மேலாண்மையை வளர்த்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உருவாக்கும் எதிர்கால சோசலிச அரசின் கூறுகளை இப்போதே உருவாக்கத் தொடங்குவதும் அவசியம். இங்குதான் அறிவாளிகளின் பங்கு முக்கியமாகிறது
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை .கீதா பக். 470)

கிராம்சி மேலே கூறிய  பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்  என்பதற்கு மாறாக, இங்கே அவரே  எதிர்கால சோஷலிச அரசிற்கு தேவைப்படும் வடிவத்தை, இப்போதே உருவாக்க தொடங்கவும், அதற்கான அறிவாளிகளின் பங்கையும் முதன்மைப்படுத்துகிறார். இதுபோன்ற முரண்பாடுகளுடன் தான் மார்க்சியத்தின் அடிப்படைகளை திருத்த முனைபவர்கள் செய்துவருகின்றனர். அதாவது தம்முடைய கருத்துகளுடன் முரண்படுவது, அடுத்து மார்க்சிய ஆசான்களின் படைப்பிலுள்ள கருத்துக்களை புரட்டி திரித்து அவர்களுக்குள்ளேயே முரண்பாடு இருப்பது போல் காட்டுவது, இந்த சித்தாந்த புரட்டல்வாதிகளின் தொடர்நடவடிக்கையாகும். அறிவாளிகளை முதுன்மைப்படுத்தி, தொழிலாளிகளை கீழ்நிலைக்கு உள்ளாக்குவதே இவர்களது குறிக்கோள்.

லெனின் கூறுகிறார்:-
“.. நாம் கற்கனாவாதிகள் அல்ல.
.. புரட்சிக்குப் பிறகு சில காலத்துக்கு பழைய அறநெறியின் சாயல்கள் புதியதன் இளங் குருத்துக்களை விஞ்சி ஆதிக்கம் புரியவே செய்யும் என்பதையும் அறிவோம். குறிப்பிட்ட சிறிது காலத்துக்கு பழையது அதைக் காட்டிலும் பலம் கொண்டதாகவே இருக்கும். இயற்கையிலும் சமூக வாழ்விலும் எப்பொழுதும் இப்படித்தான்”                      
(மாபெரும் தொடக்கம்)

இங்கு அறநெறிக்கு கூறியது, பொதுவாக எல்லா கருத்துநிலைகளுக்கும் பொருந்தும்.

கிராம்சியின் மார்க்சியத்திற்கு முரணான சிந்தனை, அவரது கீழ் காணும் முடிவில் அடங்கியிருக்கிறது.
பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் அமைப்புக்கும் இடையில் எளிமையான, நேரடியான உறவுகள் இல்லை. மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை. அரசியல் அமைப்புக்கான காரணகாரியங்களைக் கண்டிறிவது சிக்கலானது கடினமானதுமாகும். இக்காரண காரியங்களைப் பிரித்துப் பார்ப்பதற்குப் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் ஆழமாகவும் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து அறிவது இன்றியமையாதது.. வரலாறு என்பது கணிதம் அல்ல
 (கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை .கீதா பக். 13)

எளிமையான உறவு இருப்பதாக எங்கும், யாரும் கூறவில்லை, பல்வேறு கூட்டிணைப்பான உறவாகத்தான் மார்க்சியம் பார்க்கிறது. அடுத்து நேரடியான உறவு இல்லை என்பது, எங்கெல்ஸ் கூறிய  சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான்  .. .. மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறதுஎன்ற வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திற்கு மாறான கூற்றாகும். நேரடியான உறவு இல்லை என்றால் அடித்தளத்திலிருந்து தொடங்கினால் தான், மேற்கட்டமைப்பு அனைத்திற்கும்  முடிவான விளக்கம் காணமுடியும் என்று எங்கல்ஸ் ஏன் கூறவேண்டும். இதில் தான் கிரம்சியின் தத்துவக் கண்ணோட்டம் அடங்கயிருக்கிறது. அதவாது உணர்வுநிலையிலிருந்து சமூக வாழ்நிலையை காண்கிறார். ஆனால்   சமூக வாழ்நிலையிலிருந்து தான்  மனிதனது உணர்வுநிலை உருவாகிறது என்பது தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

அடுத்து  மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லைஎன்கிறார் கிராம்சி. மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893) கடிதத்தில் எங்கல்ஸ் "...நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துக்களையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விவரங்களிலிருந்து பெறுவதற்குக் கொடுத்தோம், அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருந்தோம்." என்று தெளிவாக, பொருளாதார மெய்விவரங்களிலிருந்து தான் தங்களது வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையை அமைத்துக் கொண்டதாக தெரிவிக்கிறார். இதனோடு மார்க்ஸ் மூலதன நூலில் கூறிய கருத்தையும்  சேர்த்துப் பார்ப்போம்.

மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.

வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க உதவுவது தயாரிக்கப்பட்ட பொருட்கள் எவை என்பதன்று, அவை தயாரிக்கப்பட்டது எப்படி என்பதும், எக்கருவிகளால் என்பதுமே. உழைப்புக் கருவிகள் மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கு ஓர் அளவுகோலை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த உழைப்பு நடைபெறுகிற சமூக நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் குறிகளாகவும் உள்ளன. “
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 247   248)

அதாவது மறைந்து போய்விட்ட சமூக கருவிகளின் மீதமிச்சத்தைக் கொண்டு, அன்றைய மனிதனின் உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சியும், அந்த உழைப்பு நடைபெற்ற சமூக நிலைமைகளையும் சுட்டிக்காட்ட முடியும் என்கிறார் மார்க்ஸ்.

வரலாறு என்பது கணிதம் அல்ல  என்கிறார் கிராம்சி. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரமே, வரலாற்றின் வளர்ச்சியை கணித்துக் கண்டறிவதுதானே. இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:-

“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இதில் சக்தியின் உருமாற்றம் எவ்வாறு அறிந்துக் கொள்ள முடிகிறதோ, அதே அளவிற்கு வரலாற்றின் உந்து விசையைக் கணிக்க முடியும் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

மேலைநாடுகளில் நடைபெற்ற இந்த புரட்டல் வேலை, தற்போது தமிழகத்தில் அதிகம் காணப்படுகிறது. பண்பாட்டு மார்க்சியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, மார்க்சால் எதிர்க்கப்பட்ட சித்தாந்தங்களை மார்க்சியத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர்இத்துடன் நில்லாது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையை மறுதலித்து, விளிம்பு நிலை போன்ற மக்கள்களைக் கொண்டு சமூக மாற்றம் செய்திட முடியும் என்று மார்க்சியத்திற்கு தொடர்பில்லா போக்கிற்கு வழிகாட்டுகின்றனர்.

மார்க்சியக் கட்டுரைகள்என்று பெயர்தாங்கி .முத்துமோகன் அவர்களின் முழுப் படைப்புகள் வெளிவந்துள்ளது. இதன் முன்னுரையில் எழுதுகின்றார்:-

ஆல்வின் கோல்ட்னர் விஞ்ஞான மார்க்சியம், விமசர்ன மார்க்சியம் என இரண்டு மார்க்சியங்கள் மார்க்சியத்தின் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வருவதாக கூறுகிறார்.

சமூக எதார்த்தம், சமூக உற்பத்தி முறைகளிலுள்ள புறவய முரண்பாடுகள், சமூகப் புரட்சிக்கான புறவயக் காரணிகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் மார்க்சியம் முதல்வகை மார்க்சியம், சமூக மாற்றத்தை எடுத்துச் செல்லும் வர்க்கம், கட்சி, அவற்றின் நடைமுறை, புரட்சியின் அகவயக் காரணிகள், கருத்தியல் மற்றும் தத்துவார்த்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் மார்க்சியம் இரண்டாம் வகை மார்க்சியம்.

முதலாவதான புறவய மார்க்சியம் இரண்டாவதான விமர்சன மார்க்சியத்தையத்தை அடியோடு மறுக்காது, இரண்டாவதான விமர்சன மார்க்சியம் முதலாவதான புறவய மார்க்சியத்தை அடியோடு மறுக்காது. இருப்பினும், முந்தியது புறவய எதார்தத்திற்கு அதிக அழுத்தமும் பிந்தியது கருத்தியல் மற்றும் செயல்பாட்டுச் சக்திகளுக்கு அதிக அழுத்தமும் வழங்கும். 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து இன்றுவரை மார்க்சியம் இவ்வாறாகத்தான் இருவகைப்பட்டு வளர்ந்து வந்திருப்பதைக் காணலாம்

மார்க்சியம் இருவகைப்பட்டதாக கூறிச்செல்லும் .முத்துமோகன், மார்க்ஸ் தம்  கண்ணோட்டமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது பற்றிய கூற்றில் விளக்கக்குறை இருப்பதாகவும், முழுமையானவையாக இல்லை என்றும் விமர்சிக்கிறார்.

"...அடித்தளம், மேற்கட்டுமானம் என்பவற்றைப் பேசும்போது மார்க்சின் பொருள்முதல்வாதம் வெளிப்பட்டுள்ள அளவுக்கு இயங்கியல் வெளிப்படவில்லை. அடித்தளம் மேற்கட்டுமானத்தை நிர்ணயிக்கிறது, தீர்மானிக்கிறது அல்லது வரையறுக்கிறது என்ற பொருள்முதல்வாதக் கோட்பாட்டைக் கூறும் மார்க்ஸ், அதற்கு மேல் செல்லவில்லை. மேற்கட்டுமான வடிவங்களின் தனித்தன்மைகள் பற்றியோ, அவை தம்மில் படைத்த சமூக மதிப்புகளை அல்லது அழகியல் வடிவங்களை அடித்தள அமைப்புக்கள் எவ்வாறு  செலுத்துகின்றன என்பது குறித்தோ இம்முன்னுரை வாசகங்களில் மார்க்ஸ் எழுதவில்லை. அடித்தளம், மேற்கட்டுமானம் ஆகியவற்றிற்கிடையிலான பரஸ்பரத் தாக்கம், செல்வாக்கு, பரஸ்பர ஊடுருவல், ஒன்று மற்றதாக மாற்றுதல், இன்னும் இவை தொடர்பான பலவிஷயங்கள் பேசாமல் விடப்பட்டுள்ளன.”

அரசியல் பொருளாதார விமர்சனம் குறித்த நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரை எவ்வளவு மேதமை நிறைந்ததாக இருந்த போதிலும், அந்த முன்னுரையில் அடித்தள மேற்கட்டுமான உறவுகள் குறித்த கருத்துக்கள் முழுமையானவை அல்ல என்ற முடிவுக்கு இங்கு நாம் வருகிறோம்."

அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்புஎன்ற நூலின் முன்னுரையில் மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறப்பட்டதை, இவர் குறைகாண்கிறார். இதில் இயக்கவியல் குறைபாடு ஏதுமில்லை, எங்கெல்ஸ் 1890களில் எழுதிய கடிதங்களில், தாங்கள் உள்ளடக்கத்திற்கு கொடுத்த முதன்மை வடிவத்தை விளக்குவதில் கொடுக்கவில்லை என்று கூறியதைத்தான் நா.முத்துமோகன் இயக்கவியல் குறைபாடாக மாற்றி விடுகிறார்இது மார்க்ஸ் மீது தொடுக்கப்படும் பழைய குற்றசாட்டாகும்.

பிளெகானவ் போன்றவர்களால், அக்காலத்திலேயே இந்த புரட்டல்களுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. இருந்தும் மார்க்சிய திருத்தல்வாதிகள் இதனை, மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு கொண்டுவருகின்றனர்.

பிளெகானவ் எழதிய   மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்   (பக்கம் 18) என்ற நூலில்:-
"ஒரு தத்துவஞானி இல்லை எனில் வேறு ஒரு தத்துவஞானியால் மார்க்சியம் "குறைநிறைவு செய்யப்பட" வேண்டியதன் அவசியம், மார்க்சும் எங்கெல்சும் அவர்களுடைய தத்துவஞானக் கருத்துக்களை எந்த இடத்திலும் தெளிவாகக் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுவதன் மூலமாக வழக்கமாக நிரூபிக்கப்படுகிறது. இந்தக் காரணம் நம்பத்தக்கதாக இல்லை, .. .. . மார்க்ஸ் எங்கெல்சின் தத்துவஞானக் கருத்துக்களைப் பற்றிச் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு நம்மிடம் போதுமான இலக்கியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”      
                                                            
மார்க்சியக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாத .முத்துமோகன் அவர்கள் மார்க்ஸ் தமது கருத்தை குறைபாடாக தெரிவித்துள்ளதாக வருத்தப்படுகிறார். .முத்துமோகன் இத்தோடு நின்றுவிடவில்லைஅடித்தள  மேற்கட்டுமான உறவுகளில் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை மட்டும் வலியுறுத்தி, இயங்கியல் அம்சத்தை ஏன் தளரவிட்டார்கள் என்பதற்கான காரணத்தை அல்லது அதன் பின்னணியை ஏங்கெல்ஸ் தெளிவாக விளக்குகிறார்என்று எங்கெல்சின் கடிதத்தை, திரித்து புரட்டிவிடுகிறார்.

அடித்தளத்திற்கு முதன்மைப் பாத்திரத்தை மட்டும் வலியுறுத்துபவர்களுக்கு போதாமல் இருப்பது இயக்கவியல் என்று எங்கெல்சால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை, தங்களது (மார்க்சிய ஆசான்களின்) படைப்புகளுக்கு கொடுக்கப்பட்டதாக மாற்றிவிடுகிறார் .முத்துமோகன்.

எங்கல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதம்:-
".. வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி  அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."

எங்கெல்ஸ் சித்தாந்த துறையின் தனித்த சுயேச்சையைத் தான் மறுக்கிறார். சித்தாந்தம் வரலாற்றின் மீது எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்று மறுப்பதான, முட்டாள் தனமான சித்தாந்திகளின் கூற்றைத் தான் எதிர்க்கிறார். அத்துடன் காரணமும் விளைவும் தவிர்க்க இயலாத எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச் செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும் என்று முட்டாள் தனமான சித்தாந்திகளின்  கருத்தாக எழுதியிருக்கிறார்.

இயக்கவியலை தளரவிட்டவரைப் பற்றி எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம் எழுதுகிறார்:-
இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். .. இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.

இதுபோன்றவர்களிடம் இயக்கவியல் கண்ணோட்டம் கிடையாது, காரணத்தை ஓரிடத்திலும் விளைவை மற்றொருயிடத்திலும் பார்க்கிறார்கள் என்று எங்கெல்ஸ் கூறுகிறார். அதே நேரத்தில் மேற்கட்டமைப்பின் தாக்கம் சார்பானது எதுவுமே தனிமுதலானது அல்ல என்றும் கடிதத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எஸ்..பெருமாள் அவர்கள் "மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்" என்ற நூலை எழுதியுள்ளார். அதில்:-
"அடித்தளம் :- சமூகத்தின் பொருளாதார அமைப்பு. இதுவே உற்பத்தி முறை. பொருளியல் வாழ்வு, சமூகம், அரசியல் சிந்தனைகளை நிர்ணயிக்கிறது."

இதில் மிகச்சுருக்கமாகவும் சரியாகவும் சொல்லிவிட்டார். ஆனால் அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பாமல், கிராம்சியின் பண்பாட்டு சிந்தனையை இங்கே புகுத்திவிடுகிறார்.

"மேற்கட்டுமானம் :- தத்துவம், மதம், கலை இலக்கியம், கலாச்சாரம், இவையும் நிர்ணயமான பாத்திரம் வகிக்கின்றன. தத்துவத்திலும் பண்பாட்டு தளத்திலும் சமகாலச் சொரணை மிகவும் அவசியம்."

எஸ்..பெருமாள் அவர்கள் அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் சமமான முதன்மை கொடுப்பதும், கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை என்று புதுமையான விளக்கம் அளிப்பதும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்கு மாறானதேயாகும்.

“அடித்தளம் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானமும் அடித்தளத்தை தீர்மானிக்கிறது. கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை. சமூக மதிப்புகள், அறிவியல், அரசியல், கலை இலக்கியம், தத்துவம் ஆகிய கருத்தியல் உறவுகள் மனிதர்க்கு உண்டு. கலை இலக்கியம், தத்துவம், மதம், சாதி, பொருள்பண்பு கொண்ட பண்பாட்டு சக்திகளாக மாறும் தன்மை கொண்டவை.

சுரண்டும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்கள் - வெறும் பொருளாதார பலத்தாலோ, அரசியல் பலத்தாலோ மட்டும் நம்மை ஆண்டு வரவில்லை. அவை வலுவான அரசு மற்றும் சமூக பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் கட்டமைப்பு என்ற உச்சாணிக் கேள்விகளில் தொடங்கி மனிதனின் தினசரி நடத்தை வரையில் ஊடுருவி நிற்கும் நிறுவனமாக மதம் திகழ்கிறது - இன்றும் தொடர்கிறது.”

பொருளாதாரத்தைவெறும்என்றும், அரசு, சமூக பண்பாட்டு நிறுவனங்களைவலுவானஎன்றும் அடைமொழி கொடுப்பதிலிருந்தே எஸ்..பெருமாள் அவர்களது கண்ணோட்டம் கிராம்சியின் தாக்கத்தில் உள்ளது என்பது வெளிப்படுகிறது. அந்த வலுவான அரசும், பண்பாட்டு நிறுவனங்களும் அன்றைய பொருளாதார வளர்ச்சி நிலையால் தான் உருவானவை.

அரசு போலவே மதமும் மக்களின் சிந்தனையை அடக்கி ஒடுக்குகிறது. மதம் சமூக ஒப்புதலுடன் அதைச் செய்கிறது. "மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கும் சிலநேரம் அதுவே அடித்தளத்தை உருவாக்கும்" என்கிறார் எங்கல்சு"      -என்று எழுதுகிறார் எஸ்..பெருமாள்

எங்கெல்ஸ்  இந்தப் பொருளில் எங்கும் எழுதியதே கிடையாது என்பதே உண்மை.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி”  என்ற நூலை .சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்:-

ஒரு சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் உற்பத்தி முறை அமைய, அதன் மேற்கட்டுமானமாக, கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஒழுக்கநெறிகள் ஆகியன அமைகின்றன. ஒரு சமூகத்தில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அதன் மேற்கட்டுமான அம்சங்களைப் பாதிக்கிறது. சில நேரங்களில் அதைத் தீர்மானிக்கிறது. ஆயினும் மேற்கட்டுமானம்  பிடித்து வைத்த பிள்ளையார்க என்பது போல் வாளாயிருப்பதில்லை. பல நேரங்களில் அதுவும் தன் பங்கிற்கு அடித்தளமான பொருள் உற்பத்தி முறையைப் பாதிக்கிறது.”

இவ்வாறு அந்நூலில் எழுதியுள்ளார். மார்க்ஸ் கூறிய அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாததால், ,சிவசுப்பிரமணியன் அடித்தளம் மேற்கட்டுமான அம்சத்தை பாதிப்பதாகவும், சில நேரங்களில் அடித்தளம் தீர்மானிக்கிறது என்று, மார்க்ஸ் கூறிய அடித்தளத்தின் நிர்ணயிக்கும் போக்கை மறுக்கிறார்.

.சிவசுப்பிரமணியன் மேலும் எழுதுகிறார்:-
"அடித்தளம் - மேற்கட்டுமானம் குறித்த கிராம்ஸ்கியின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவையாக இன்றும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்க மதம் செல்வாக்குப் பெற்றுள்ள இத்தாலியில் கத்தோலிக்கம் குறித்தும். இத்தாலியப் பண்பாடு குறித்தும் தமது ஆய்வுகளையும் விமர்சனங்களையும் அவர் எழுதியுள்ளார். வரலாற்றுப்பொருள்முதல்வாதம் தொடர்பான அவரது சிந்தனைகள் இந்தியச் சூழலுக்குத் தேவைப்படுவதால் மிகச் சுருக்கமான முறையிலாவது அதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

...நிலவுடைமைச் சமூக அரசானாலும் சரி, முதலாளித்துவச் சமூக அரசானாலும் சரி, அவை தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை என்ற அடக்குமுறை எந்திரங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன. பொருளாதார வலிமை, அரசியல் வலிமை என்பன அரசிற்கு இருந்தாலும் அவற்றின் துணையுடன் மட்டுமே தன் சமூக மேலாண்மையை அது நிறுவவில்லை என்பது கிராம்ஸ்யின் கருத்தாகும்.

இவற்றுடன் கூட, சமூகப் பண்பாட்டு நிறுவனம் ஒன்றையும் அவை உருவாக்கி வைத்திருந்தன. அதன் துணையுடன்தான், சுரண்டுதலுக்கான சமூக ஒப்புதலையும் அவை பெற்றிருந்தன என்பது கிராம்ஸ்கியின் கணிப்பு. கிராம்ஸ்கி பயன்படுத்திய பின்வரும் கலைச் சொற்களை அறிந்து கொள்வதன் வாயிலாக இதைப் புரிந்து கொள்ள முடியும்.

குடிமைச் சமூகம்

அரசியல் மேற்கட்டுமானம் என்பது அரசு, அரசின் ஆட்சிக் கருவிகளான இராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, வருவாய்த்துறை என இன்னபிற அரசு எந்திரங்களை உள்ளடக்கியது.

குடிமைச் சமூக மேற்கட்டுமானம் என்பது, சமயம், கலை, இலக்கியம், பண்பாடு என்ற கூறுகளை உள்ளடக்கியது. இவற்றின் வாயிலாக எவ்வித வன்முறையும் இல்லாமல் தனக்கு (ஆளும் வர்க்கத்திற்கு) ஆதரவான சமூக ஒப்புதலை அரசு உருவாக்கிக் கொள்கிறது.

....இதன் அடிப்படையில் பார்க்கும்போது அரசுக்கு எதிரான போராட்டம் என்பது, அதிகாரத்தை அதனிடமிருந்து கைப்பற்றும் அரசியல் போராட்டமாக மட்டும் அமையாமல், குடிமைச் சமூகத்தின் வாயிலாக அது பெற்றுள்ள பண்பாடு மேலாண்மைக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்"

இதன் மூலம் .சிவசுப்பிரமணியன் அவர்கள் மார்க்சிய போராட்டத்தின் முறையையே திசை திருப்பி, பண்பாட்டு போராட்டமாக மாற்றி விடுகிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் கண்ணோட்டமான பொருளாதார வாழ்வே, பண்பாட்டைப் படைக்கிறது என்பதை மறுத்து, கிராம்சியின் துணையோடு, பண்பாட்டை படைத்தளிக்கும் (பண்பாட்டு மார்க்சியம்) முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார்.

மார்க்சியர்கள் தமது போராட்டத்தை பாட்டாளி வர்ககத்திடமிருந்து தொடங்குவதை தடுக்கவும், பாட்டாளிகளின் விடுதலைக்கு துணை செய்யும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும் இவர்களின் நோக்கமாகும்.

பொதுவாக மார்க்சியத்தின் அடிப்படையை புரட்டி, தவறாக விளக்கம் கொடுப்பவர்கள், பயன்படுத்தும் எங்கெல்சின் கடிதங்களைப் பார்ப்போம்

பிலோஹுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதம் (செப்டெம்பர் 21 (22) 1890 ):-
“...வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள் இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.”

 இதில் எங்கெல்ஸ் தெளிவாகவே கூறியுள்ளார். வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி பொருளாதாரக் கூறு இறுதியாக நிர்ணயிக்கின்ற சக்தியாகும். இதற்கு மேல் மார்க்சோ தானோ ஒருபோதும் சொல்லவில்லை. எனவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று திரித்துக் கூறாதீர்கள் என்றுதான் எங்கெல்ஸ் கூறியிருக்கிறார். அனைத்து இடைச்செயலுக்கு மத்தியில், இறுதியில் பொருளாதார இயக்கம் இன்றியமையததாகத் தன்னை நிறுவுகிறது என்று எங்கெல்ஸ் தெளிவுப்படுத்திவிட்டார். இந்தக் கடிதம் எழுதி சுமார் நூறு ஆண்டுகள் கடந்து விட்டன, இன்னும் இந்தக் கடிதத்திற்கு தவறாகவே விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம்   “.. தன்னளவில் பொருளாதார அடிப்படை மீது எதிர்ச்செயல் புரிகிறது, சில வரையறைகளுக்குள் அதை மாற்றியமைக்கவும் கூடும் என்பது சொல்லாமலேயே அமையும்இந்த கடிதத்தின் இந்த வரியை மட்டும் பிடித்துக் கொண்டு, தன்னளவில் பொருளாதார அடிப்படை மீது எதிர்ச்செயல் புரியும் என்று எங்கெல்ஸ் எழுதியதின் மூலம், இதற்கு முன்புவரை பொருளாதார நிலைமைகள்தாம்் தீர்மானிக்கின்றன என்று கூறிவந்ததை இப்போது மாற்றிக் கொண்டார் என்று, இதற்கு விளக்கம் கொடுத்துவிடுகின்றனர்.

இக்கடிதத்தின் தொடக்கத்தில் எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்மொத்தத்தில் பொருளாதார இயக்கம் முன்னேறும், ஆனால் அது தானே நிறுவி சார்புநிலையான சுதந்திரம் அளித்த அரசியல் இயக்கத்தின்  - ஒரு பக்கத்தில் அரசு ஆட்சியதிகாரத்தின் இயக்கத்திலிருந்தும் மறு பக்கத்தில் அதே சமயத்தில் தோற்றுவிக்கப்படுகின்ற எதிர்ப்பிலிருந்து - எதிர்ச்செயல்களுக்கு உட்படுகிறது  என்று எழுதியிருக்கிறார். பொருளாதார இயக்கத்தால் நிறுவிய அரசியல் இயக்கம் செலுத்தும் இந்த எதிர்செயலின் சார்புநிலையான சுதந்திரத்தை  மெத்த படித்த புரட்டல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியவதில்லை. இந்த சார்புநிலையான சுதந்திரத்தைத் தான் சில வரையறைக்குள் பொருளாதார அடிப்படையின் மீது எதிர்செயல் புரியும் என்று எங்கெல்ஸ் எழுதுகிறார். கடிதத்தின் பின்பகுதியில்  சமூகத்தின் உழைப்புப் பிரிவினைக்குள் ஒரு சுயேச்சையான குழுவாக அவர்கள் அமைகின்ற அளவில் அவர்களுடைய படைப்புகள் (அவர்களுடைய தவறுகளும் கூட) சமூகத்தின் மொத்த வளர்ச்சியின் மீது (அதன் பொருளாதார வளர்ச்சியின் மீது கூட) எதிர்ச்செயல் புரிகின்றன. ஆனால் அதே சமயத்தில் அவர்களுமே தம்மளவில் பொருளாதார வளர்ச்சியின் ஆதிக்கமுள்ள தாக்கத்தின் கீழ் இருக்கிறார்கள்  என்று எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். மேற்கட்டமைப்பின் வரம்பையும், சார்பான சுதந்திரத்தையும் வலியுறுதி எங்கெல்ஸ் எழுதியதை இவர்கள் தங்களுக்கு சார்பாக மாற்றி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர். மார்க்சிய ஆசான்கள் நேர்மை மிக்கவர்கள், அவர்கள் தங்களது வளர்ச்சி படிநிலையை மறைத்தவர்கள் இல்லை.

கூலியுழைப்பும் மூலதனமும்என்ற நூலை பிற்காலத்தில் வெளியிடும்போது எங்கெல்ஸ் தம் முன்னுரையில்

என்னுடைய மாற்றங்கள் ஒரேயொரு விவகாரம் பற்றியவை. மூலத்தின்படி தொழிலாளர் தமது உழைப்பைக் கூலிக்காக முதலாளியிடம் விற்கிறார். ஆனால் இங்குள்ள வாசகத்தின்படி அவர் தமது உழைப்பு சக்தியை விற்கின்றார். இப்படி நான் மாற்றம் செய்திருப்பதற்குரிய விளக்கத்தைக் கூறுவது எனது கடமையாகும். இது வெறும் சொற் சிலம்பமல்ல, மாறாக அரசியல் பொருளாதாரம் அனைத்திலுமே மிக முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும் என்பதைத் தொழிலாளர்கள் கண்டு கொள்ளும் பொருட்டு, நான் அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். படிக்காத தொழிலாளர்கள்  - மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுத்தாய்வுகளையும் சுலபமாக இவர்களுக்குப் புரிய வைத்துவிட முடிகிறது- மண்டைக் கனம் கொண்ட நமது  மெத்தப் படித்தவர்களைக்  காட்டிலும்- இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் இந்த மெத்தப் படித்தவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராப் புதிர்களாகவே இருக்கின்றன  ..”

- என்று எழுதினார். மார்க்ஸ் கூலியுழைப்பும் மூலதனமும் என்ற நூலில் உழைப்பு என்று முன்பு எழுதியிருப்பதை, பிற்கால மார்க்சின் ஆய்வுவளர்ச்சியின் அடிப்படையில் வெளிப்படுத்தின உழைப்புச் சக்தி என்ற சொல்லை, எங்கெல்ஸ் புதிய பதிப்பில் மாற்றியிருப்பதை, நேர்மையோடு தெரிவித்து மாற்றியிருக்கிறார். அதே போல் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றியதிலும் மாற்றம் அடைந்திருந்தால் தெரிவித்து, மேற்கூறிய கடிதங்களில் எழுதியிருப்பார். ஆனால் இந்த மெத்தப் படித்தவர்களுக்கு, சிக்கலான பிரச்சினை வாழ்நாள் முழுவதும் தீராப் புதிர்களாகவே இருந்துவருகிறது. இந்தபடியே பலபேர்களின் வாழ்வு முடிந்துவிட்டது. தற்போது பலபேர்களின் வாழ்வு நடைபெற்றுவருகிறது. இப்படிப்பட்டவர்களின் உண்மை நிலைப்பாட்டை லெனின் கூறுகிறார்:-

"மார்க்சிய போதனை - - அதன் வாழ்வு முழுவதும் ஒவ்வொரு அடியும் போராடியே முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.

..மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசம் நொறுக்கப்பட்டுவிட்டது. முன்பு போல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது."

(மார்க்சியமும் திருத்தல்வாதமும்லெனின்)

No comments:

Post a Comment