Monday, 22 July 2019

8) சமூக உளவியலும் சித்தாந்தமும்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக உளவியலும் சித்தாந்தமும். சமூக உணர்வு இரண்டு துறைகளிலும் இரண்டு மட்டங்களிலும் இருக்கிறது. சமூக உளவியல் மற்றும் சித்தாந்தம் அத்துறைகளாகும்.

சமூக உளவியல் என்பது அன்றாட வாழ்க்கையின் தாக்கத்தில் சமூகப் பிரிவுகளிலும் வர்க்கங்களிலும் (தேசிய இனங்களில் கூட) தோன்றுகின்ற உணர்ச்சிகள், எண்ணங் கள், விருப்பார்வங்கள், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், மனோநிலைகள் ஆகியவற்றின் மொத்தமாகும். சித்தாந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குரிய அரசியல், சட்டவியல், தார்மிக, தத்துவஞான, சமய மற்றும் அழகியல் கருத்துகளின் மொத்தம் ஆகும்.

சமூக உளவியல் என்பது மக்கள் தம்முடைய சமூக வாழ்நிலையைப் புரிந்து கொள்வதன் ஆரம்பக் கட்டமாகும். அதற்கு மாறுபட்ட முறையில் சித்தாந்தம் சமூக உணர்வின் உயர்ந்த மட்டமாக, வாழ்க்கையின் பொருளாயத நிலைமை களை மக்கள் இன்னும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்வதாக இருக்கிறது. சித்தாந்தம் வர்க்கங்கள், தேசிய இனங்கள், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான உறவுகளின் சாராம் சத்தை வெளிப்படுத்த வேண்டும், இந்த உறவுகளைத் தொடர வேண்டிய அல்லது மாற்ற வேண்டிய அவசியத்தை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நிலையிலிருந்து நிறுவ வேண்டும். தன்னியல்பாகத் தோன்றுகின்ற உளவியலைப் போலன்றி சித்தாந்தம், சித்தாந்திகள் என்றழைக்கப்படும் ஒரு சிறப்புக் குழுவினருடைய பணியின் விளைவாகும்.

வர்க்க சமூகத்தில் சமூக உளவியலும் சித்தாந்தமும் தனிவகையான வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு வர்க்கமும் அதற்குரிய உளவியலையும் சித் தாந்தத்தையும் கொண்டிருக்கிறது; அவை சமூக உற்பத்தி அமைப்பில் அதன் இடத்தைப் பிரதிபலித்து அதன் தேவைகளையும் நலன் களையும் வெளியிடுகின்றன. இதைப் பற்றி லெனின் பின்வருமாறு எழுதினார்: "நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவ தொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போ தும் இருப்பார்கள். (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 109. 110)

தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் மார்க்சிய-லெனினி யம் ஆகும். அதன் வர்க்கம் உள்ளடக்கமும் இலட்சியங்களும் முந்திய எல்லா சித்தாந்தங்களிலிருந்தும் முழுமையாக வேறுபட்டிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டுகின்ற வர்க்கத்தின் நலன்களுக்குப் பாடுபடவில்லை, அது தொழிலாளி வர்க்கத்தின், எல்லா உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் பாடுபடுகிறது. இரண்டாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டலை ஒழித்துப் புதிய சமூகத் தை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தைத் தத்துவ ரீதியில் நிறுவியிருக்கிறது. மூன்றாவதாக, மார்க்சிய-லெனினியம் பெருந்திரளான மக்களின் மிகச் சிறந்த நலன்களுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற முறையில் உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதில், நீதி, சுதந்திரம், மக்கள் மற்றும் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்துவதில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment