Thursday 11 July 2019

தத்துவஞானத்தின் சார்புநிலை– வி.கிரபிவின்

புராதன காலம் தொட்டு உலகில் எத்தனை எத்தனையோ தத்துவஞானக் கொள்கைகள் இருந்து வந்துள்ளன, தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் கொள்கைகள் ஒவ் வொன்றும் சாரத்திலும் உள்ளடக்கத்திலும் பொருள்முதல்வாதம் அல்லது கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒரு குறிப் பிட்ட வர்க்கம் அல்லது சமூகக் குழுவினது நலன்களோடு தொடர்பு கொண்டவையாகும். இங்கு தான் அவற்றின் சார்புநிலை, வர்க்க இயல்பு உள்ளது.

     தத்துவஞானக் கோட்பாடுகளின் மூலம் பல்வேறு வர்க்கங்களும் சமூகக் குழுக்களும் சமுதாயத்தில் தமது அந்தஸ்தையும், சுற்றியுள்ள யதார்த்தத்திற்கும் அதனுள்ளேயான நிகழ்வுப் போக்குகளுக்கும் அவற்றின் அணுகுமுறையையும் தத்துவ ரீதியான வழியில் உறுதிப்படுத்த முயல்கின்றன. இந்த அல்லது அந்த வர்க்கத்தினது உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையான தத்துவஞானம் அந்த வர்க்கத்தின் மனோபாவம், நடத்தை மற்றும் இலட்சியங்களை வகுத்தளிக்கிறது.

எப்பொழுதுமே பொருள்முதல்வாதம் முற்போக்கு வர்க்கங்களின், கருத்துமுதல்வாதம் பிற்போக்கு வர்க்கங்களின் உலகக் கண்ணோட்டமாக இருந்து வருகின்றன, சமுதாயத்தில் முற்போக்கு மற்றும் பிற்போக்கு வர்க்கங்கள், சக்திகள் ஆகியவற்றிற்கிடையேயான போராட்டம் எப்பொழுதுமே தத்துவஞானத்தில் பொருள்முதல்வாதம் மற்றும் கருத்துமுதல்வாதம், இயக்கவியல் மற்றும் இயக்க மறுப்பியல் ஆகியவற்றுக்கு இடையில் போராட்டத்தின் மூலம் பிரதிபலிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தைப் போலவே இப்பொழுதும் பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் தத்துவஞானத்தில் இரண்டு ஆதாரமான, எதிரெதிரான கட்சிகளாக இருக்கின்றன. “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தத்துவஞானம் இருந்ததைப் போலவே அண்மைக் காலத் தத்துவஞானம் சார்புநிலையானதாக இருக்கிறது என்று லெனின் எழுதினார். (V, 1, Lenin, Collected Works, Vol. 14, p 358.)

இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தின் மூலவர்கள் தத்துவஞானத்தில் சார்புநிலைக் கோட்பாட்டை நியாயப்படுத்தியது இன்றைய விஞ்ஞானச் சிந்தனையின் தலை சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். ஏனென்றால் அந்தக் கோட்பாடுதான் சமூக வாழ்க்கையில் பல்வேறு தத்துவஞானக் கொள்கைகளின் இடத்தையும் வரலாற்றுப் பாத்திரத்தையும் தீர்மானிப்பதைச் சாத்தியமாக்கியிருக்கிறது: கருத்துமுதல்வாதத்தின் பல வீனத்தையும் பிற்போக்குச் சாரத்தையும் அம்பலப்படுத்தி வரலாற்று ரீதியாக அழிந்து வருகின்றவர்க்கங்கள், மற்றும் சமூக சக்திகளின் தேவைகளையும் நலன்களையுமே கருத்துமுதல்வாதம் தாங்கிப் பிடிக்கிறது என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது,

இன்றைய பூர்ஷ்வா தத்துவஞானம் அதன் சார்பு நிலை இயல்பை மறுக்கிறது. மார்க்சிய-லெனினியத்தை மறுப்பதற்காக அது ''சார்பு நிலையற்றது'', "எந்த வர்க்கத்தையும் சாராதது'', ''சித்தாந்தச் சார்பற்றது” என்ற ஆய்வுரையை முன்வைக்கிறது. சார்புநிலைக் கோட்பாடு விஞ்ஞான ரீதியான நேர்மைக்கு விரோதமானது என்று அதன் பிரதிநிதிகள் வாதிடுகிறார்கள்.

முதலாளித்துவ சமுதாயத்திலிருக்கும் சார்புநிலையற்ற அணுகுமுறை என்ற கருத்து பொய்யானது, போலித் தனமானது, பூர்ஷ்வா சார்புநிலையை மூடிமறைப்பதற்காக ஏற்பட்டது என்பதை லெனின் ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார். இந்தத் திரை மறைவில் பூர்ஷ்வா சித்தாந்தம் - மக்களிடையே பரப்பப்படுகிறது, இதன் நோக்கம் மக்களை ஏமாற்றுவது, சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் வலுப்படுத்தி நிலை நிறுத்துவதே.

ஏகாதிபத்தியம், காலனி ஆதிக்கம் மற்றும் இனவெறிக்குத் தொண்டாற்றும் பூர்ஷ்வா சித்தாந்திகள் அவர்களது தத்துவஞானக் கருதுகோள்களின் சார்பு நிலை இயல்பை மூடிமறைக்கக் கடமைப்பட்டுள்ளனர், அவர் களது சார்புநிலைக்கு உண்மையை மறைக்கும் அவசியம் நேரிடுகிறது. முதலாளித்துவம், நவீன காலனி ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்பிய சுரண்டும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலிக்கின்ற பூர்ஷ்வா சார்புநிலை விஞ்ஞான நேர்மையை நிராகரிக்கிறது. பூர்ஷ்வா சார்புநிலை, உலகத்தையும் சமூக வளர்ச்சியையும் சுரண்டல் கூட்டத்தினருக்கு ஒத்தவகையில் முன்வைப்பதை நோக்கி விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. எனவே தான் பூர்ஷ்வா சித்தாந்திகள், சார்புநிலைக் கோட்பாடு அல்லது விஞ்ஞான நேர்மை என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒரு புறம், சுரண்டுகிற, ஒடுக்குமுறைகளை மேற்கொள்கிற ஒரு அமைப்போடு தங்களுக்குரிய பிணைப்பை அவர்களால் பகிரங்கமாக ஒத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது அனைத்து உழைக்கும் மக்கள், நாட்டு விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் போராடுகின்ற மக்களினங்களிடமிருந்து இவர்களைத் தனித்தொதுக்கிவிடும். மறுபுறம், தங்களது தத்துவங்கள் எல்லாம் விஞ்ஞான ரீதியாக இல்லாதவை என்றும் அவர்களால் கூற முடியாது. ஏனென்றால் இத்தகைய அணுகுமுறையின் மூலம் அவர்கள் தங்கள் பக்கத்திற்கு யாரையும் வென் றெடுக்க முடியாது.

மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தில் சார்பு நிலைக் கோட்பாடு முற்றிலும் மாறுபட்ட முறையில் பார்க்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கம் தனது நிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியத்தில் இல்லை. அனைத்து வகைச் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அகற்றி சோஷலிசத்தைக் கட்டுவதே அதன் இலட்சியம். இந்த இலட்சியம் மனித குலத்தின் சமூக வளர்ச்சிப் போக்கை ஒத்ததாகும். தொழிலாளி வர்க்கம், உழைக்கும் விவசாயிகள், புரட்சிகர அறிவுஜீவிகள் ஆகியோர் முன்பாக உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு, யதார்த்தத்தைப் பற்றிய அவர்களது விஞ்ஞான அறிவின் ஆழம், யதார்த்தத்தின் விதிகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தும் திறமை ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. எனவே தான் தொழிலாளி வர்க்க சித்தாந்தத்தின் தத்துவார்த்த அடிப்படையான மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தில் சார்புநிலைக் கோட்பாடும் விஞ்ஞான நேர்மையும் ஒத்துப்போகின்றன, ஒன்றையொன்று தகவமைத்துக் கொள்கின்றன.

முதலாளித்துவத்தை மாற்றி சோஷலிச சமுதாயத்தை அமைப்பதின் அவசியத்தை மார்க்சிய-லெனினியம் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தியிருப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கிடையே பீதியையும் வெறுப்படையும் தோற்று வித்துள்ளது. மாறாக, தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், புரட்சிகர அறிவு ஜீவிகள், இதர உழைக்கும் மக்களுக்குமோ எனில் இந்த அவசியம் அவர்களிடையே எதிர் காலம் பற்றிய ஒரு நம்பிக்கையையும் உலகத்தைப் புரட்சி கரமான முறையில் மாற்றுவதற்குப் பாடுபடுவதற்கான ஒரு உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே தான் மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் ஆழ்ந்த விஞ்ஞான ரீதியிலானதாயுள்ளது, பகிரங்கமாகவே சார்புநிலையைக் கொண்டுள்ளது. பூர்ஷ்வா சித்தாந்தம் மற்றும் மதவழி, கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டம், பழமையின் எச்சங்கள் போன்றவற்றோடு ஒத்துப் போக முடியாததாயுள்ளது.
(இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றார் என்ன?- பக்கம்- 34-38
முன்னேற்றப் பதிப்பகம் - 1987)

No comments:

Post a Comment