Wednesday 21 November 2018

வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் சமூகப் புரட்சியும்

(மாசேதுங் கருத்தை முன்வைத்து)


மாசேதுங் மார்க்சிய அடிப்படைகளுக்கு முதன்மைக் கொடுத்து பல இடங்களில் விளக்கியிருக்கிறார்.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை:-

"வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முனனேறி வளரும் நடைமுறை அனுபவத்தின் வளாச்சியுடன் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து மாறாக நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால் தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ  விறைப்பான ஒன்றாக கருதுவதும் வறட்டுவாதம் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை  நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மைமையை நிராகரித்தால் அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துககும் முதலாளித்துவத்துக்கும் இடையிள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்துககும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமரிசனத்தை மலரச்செய்வதாகும்."

("சீனக் கம்யூனிஸ்டுக் கடசியின் பிரச்சார வேலை

பற்றிய தேசிய மாநாட்டுரை" (12 மார்ச், 1957))

இதில் மாவோ மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது என்பதை தெளிபடுத்தியுள்ளார்.

சமூக வளர்ச்சிப் பற்றிய வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்வதற்கு, மார்க்ஸ் நமக்களித்துள்ள கருத்தாக்கமான அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறதுஇவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிகிறது. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான உறவு ஒன்று தீர்மனகரமானது, மற்றொன்று தாக்கம் செலுத்துகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது - நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மேல் தாக்கம் செலுத்துகிறது

இந்த அடிப்படையோடு மாசேதுங் எழுதியுள்ள "முரண்பாடு பற்றி" என்ற கட்டுரையில் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.

மாசேதுங்:-

உற்பத்தி சக்திகளும், நடைமுறையும், பொருளாதார அடித்தளமும், உண்மையில் முதன்மையான நிச்சயமான பங்கையே வகிக்கிறது. இதை மறுக்கக் கூடியவர்கள் பொருள்முதல்வாதிகளாக இருக்கமுடியாது. ஆனால், குறிப்பிட்ட நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் போன்ற கூறுகள் முதன்மையான தீர்மானகரமான பாத்திரமாக மாறி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன என்பது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (.. theory and the superstructure in turn manifest themselves in the principal and decisive role. )

உற்பத்தி உறவுகளில் மாற்றமேதும் இல்லாமல், உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியுற முடியாமல் இருக்கும்போது, உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம் முதன்மையான, தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது. "புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட் சிகரமான இயக்கம் இருக்க முடியாதுஎன லெனின் கூறிய காலத்தில், புரட்சிகர கோட்பாடு உருவாக்கமும், அதற்காக வாதாடுவதுமே முதன்மையான தீர்மானகரமான பங்கை வகித்தன. ஒரு கடமை (எத்தகையதொன்றானாலும் கூட) நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கைகளோ உருவாக்கப்படுவதுதான் முதன்மையான தீர்மானகரமான கூறாகும்.

அதேபோன்று, அரசியல்-பண்பாடு முதலிய மேல்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையானவையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இப்படிச் சொல்லும் போது நாம் பொருள் முதல்வாதத்திற்கு முரணாகச் செல்கிறோமா? இல்லை. ஏனெனில், வரலாற்றின் பொது வளர்ச்சியில் சடப் பொருட்களே சிந்தனையைத் தீர்மானிக்கிறது; சமூக வாழ்வு - சமூக உணர்வை நிச்சயிக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில், சிந்தனை என்பது சடப் பொருளின் மீதும்; சமுதாய உணர்வு என்பது சமுதாய வாழ்வின்மீதும்; மேல்கட்டுமானம் என்பது பொருளாதார அடித்தளத்தின் மீதும் பிரதிபலிப்பதை நாம் ஏற்று கொள்கிறோம். உண்மையில் அதை நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இது, பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, எந்திரவியல் பொருள் முதல்வாதத்தைத் தவிர்த்து, இயங்கியல் பொருள் முதல்வாதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.”

(முரண்பாடு பற்றி

-          முதன்மை முரண்பாடும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறும

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1- 467-468)

அரசியல், பண்பாடு போன்றவை மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பொழுது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாறுதல்கள் முதன்மையானதாகவும் தீர்மானகரமானதாகவும் ஆகின்றன என்கிறார் மாவோ. இங்கே மாவோ பொருளாதார அடித்தளம் மேற்கட்டமைப்பின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, கூடுதலாக குறிப்பிட்ட நிலைமைகளில் கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் தீர்மானகரமான பாத்திரமாக வெளிப்படுத்துவதாகவும் கூறிவிடுகிறார்.

இந்த விளக்கம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானகர பாத்திரம் வகிப்பதாக பொருள்கொள்ள வைத்திடுகிறது. பல மார்க்சிய எழுத்தாளர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படைகளில் இருந்து விலகுகின்றனர்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்  ஓர் அரிச்சுவடி என்ற நூலில் .சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

ஒரு சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் உற்பத்தி முறை அமைய, அதன் மேற்கட்டுமானமாக, கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஒழுக்கநெறிகள் ஆகியன அமைகின்றன. ஒரு சமூகத்தில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அதன் மேற்கட்டுமான அம்சங்களைப் பாதிக்கிறது. சில நேரங்களில் அதைத் தீர்மானிக்கிறது. ஆயினும் மேற்கட்டுமானம்  பிடித்து வைத்த பிள்ளையார்க என்பது போல் வாளாயிருப்பதில்லை. பல நேரங்களில் அதுவும் தன் பங்கிற்கு அடித்தளமான பொருள் உற்பத்தி முறையைப் பாதிக்கிறது 

,சிவசுப்பிரமணியன் அடித்தளம் மேற்கட்டுமான அம்சத்தை பாதிப்பதாகவும், சில நேரங்களில் அடித்தளம் தீர்மானிக்கிறது என்று, மார்க்ஸ் கூறிய அடித்தளத்தின் நிர்ணயிக்கும் போக்கை மறுக்கிறார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் (தீர்மானிக்கும், பிரதிபலிக்கும்) - மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செல்வாக்கு செலுத்தும். இந்த வார்த்தைகளை இதற்கு மாறாக பயன்படுத்துவது மார்க்ஸ், எங்கெல்ஸ். லெனின் ஆகியோரின் தத்துவக் கண்ணோட்டத்துக்கு மாறானதே.

எஸ்..பெருமாள் அவர்கள் "மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்" என்ற நூலை எழுதியுள்ளார். அதில்:-

"அடித்தளம் :- சமூகத்தின் பொருளாதார அமைப்பு. இதுவே உற்பத்தி முறை. பொருளியல் வாழ்வு, சமூகம், அரசியல் சிந்தனைகளை நிர்ணயிக்கிறது."

இதில் மிகச்சுருக்கமாகவும் சரியாகவும் சொல்லிவிட்டார். ஆனால் அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பாமல், கிராம்சியின் பண்பாட்டு சிந்தனையை இங்கே புகுத்திவிடுகிறார்.

"மேற்கட்டுமானம் :- தத்துவம், மதம், கலை இலக்கியம், கலாச்சாரம், இவையும் நிர்ணயமான பாத்திரம் வகிக்கின்றன. தத்துவத்திலும் பண்பாட்டு தளத்திலும் சமகாலச் சொரணை மிகவும் அவசியம்."

எஸ்..பெருமாள் அவர்கள் அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் சமமான முதன்மை கொடுப்பதும், கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை என்று புதுமையான விளக்கம் அளிப்பதும் விந்தையாக இருக்கிறது.

அடித்தளம் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானமும் அடித்தளத்தை தீர்மானிக்கிறது. கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை. சமூக மதிப்புகள், அறிவியல், அரசியல், கலை இலக்கியம், தத்துவம் ஆகிய கருத்தியல் உறவுகள் மனிதர்க்கு உண்டு. கலை இலக்கியம், தத்துவம், மதம், சாதி, பொருள்பண்பு கொண்ட பண்பாட்டு சக்திகளாக மாறும் தன்மை கொண்டவை.

சுரண்டும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்கள் - வெறும் பொருளாதார பலத்தாலோ, அரசியல் பலத்தாலோ மட்டும் நம்மை ஆண்டு வரவில்லை. அவை வலுவான அரசு மற்றும் சமூக பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் கட்டமைப்பு என்ற உச்சாணிக் கேள்விகளில் தொடங்கி மனிதனின் தினசரி நடத்தை வரையில் ஊடுருவி நிற்கும் நிறுவனமாக மதம் திகழ்கிறது - இன்றும் தொடர்கிறது.

பொருளாதாரத்தை வெறும் என்றும், அரசு, சமூக பண்பாட்டு நிறுவனங்களை வலுவான என்றும் அடைமொழி கொடுப்பதிலிருந்தே எஸ்..பெருமாள் அவர்களது கண்ணோட்டம் சித்தாந்தை முதன்மைப்படுத்துவது வெளிப்படுகிறது. அந்த வலுவான அரசும், பண்பாட்டு நிறுவனங்களும் அன்றைய பொருளாதார வளர்ச்சி நிலையால் தான் நிர்ணயிக்கப்பட்டவை என்கிற மார்க்சியக் கண்ணோட்டம் இங்கே மறுக்கப்படுகிறது.

"மார்க்சியத்தின் எதிர்காலம் அரசியல் சிக்கல் " என்ற கட்டுரையில் தியாகு எழுதுகிறார்.

"அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்குமான உறவுகள் பொருளாதாரத்துக்கு நேர் பொருத்தமாக அரசியல், கலை இலக்கியம் என்றெல்லாம் வருவது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் சுயேச்சையான தனி வரலாறு உண்டு. இவற்றிடையே செயற்கையாக முடிச்சுப் போடும் முயற்சிகள் உண்டு. அதேபோல இவை ஒன்றின் மீதொன்று செலுத்துகிற தாக்கத்தைக் காணாதிருப்பதும் தவறு"

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் இயக்கவியல் தொடர்வை அறுத்துவிடுகிறார் தியாகு.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற தமது நூலில் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார்:-

சில மேற்கட்டுமானமும் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அடிக்கட்டுமானம் தான் மேல்கட்டுமானத்தின் மீது தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

இதில்  ஆனால்  என்று சந்தேகத்தை கிளப்பி விடுகிறார். அது மட்டுமல்லாது இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற விவரிப்பில் முரண்தொனி காணப்படுகிறது. மேற்கட்டமைப்பை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவிற்கு, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்றால் எந்த வகையில் என்பது இங்கு தெளிவாக்கப்படவில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முழுமையாக புரிந்து கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயாஆனால் இவ்வளவு குழப்பமாக எழுதியிருப்பதைப் பார்க்கும் போது புரிந்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருப்பது போல் தோன்றுகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பில் தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது.  இதில் செல்வாக்கை செலுத்துவது என்ற சொல்லை, மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செலுத்துவதைக் குறிக்க வேண்டும், தீர்மானகரமான என்பதை, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்று தெரிவிக்க வேண்டும். இதை மாற்றியோ, அல்லது குறிப்பிடாமலோ இருந்தால் குழப்பமும், புரியாமையும் தான் ஏற்படும்.

கோவை ஞானி மார்க்சியத்திற்கு அழிவில்லைஎன்று கட்டுரைக்கு தலைப்பைக் கொடுத்துவிட்டு, மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதனை புரட்டுகிறார்.

"மார்க்சியத்தின் அடிப்படைகள் என்று அறியப்பட்டனவற்றினுள்ளும் கேள்விகள் எழுந்துளளன.

..

அடித்தளம், மேல்கட்டுமானம் என்பனவற்றில் எப்பொழுதும் அடித்தளத்திற்கே அழுத்தம் என்பது தொடக்கம் முதலே கேள்விக்குள்ளாகியிருக்கிறது"

இதன் மூலம் கோவை ஞானி மாறிவரும் காலகட்டத்தில் மட்டும் அல்ல, மார்க்சியம் தோன்றியதிலிருந்தே, அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் மார்க்ஸ் பிறந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்திருக்கமாட்டார் என்பதே உண்மை, அதனால் தான் கட்டுரையின் மற்றொரு பகுதியில் "பொருளா? கருததா? எது முதல் என்ற ஆய்வில் பொருள்முதல்வாதம் அடங்குவதில்லை. பொருளும் கருத்தும ஒன்றையொன்று ஊடுடுருக் கூடியவை" என்று எழுதுகிறார். ஆக இவரால் மார்க்சியத்தை மட்டுமல்ல, தத்துவயியலை பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு போக்குகளாகப் பிரிக்கப்படுவதையே விரும்பவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

பொன்னீலன் மார்க்சியத்தின் எதிர்காலம் பண்பாட்டுச் சிக்கல்என்ற கட்டுரையை எழுதியுள்ளார். “மார்க்சியத்தில் மிக அடிப்படையான ஒரு கூறு அடித்தளத்துக்கும் மேற்கோப்புக்கும் இடையிலான உறவு. அடித்தளமும் மேற்கோப்பும் ஒன்றை ஒன்று பாதிப்பது. ஒன்றோடொன்று முரண்படுவது.” இதில் பொன்னீலன் அடித்தளத்திற்கும் மேற்கோப்புக்கும் இடைத்தொடர்பை மட்டும் தெரிவிக்கிறார், ஆனால் அடித்தளத்தின் தீர்மானகரப் போக்கை கூறாமலேயே விட்டுவிடுகிறார். அடுத்து கூறுகிறார். “.. சமகாலத்தில் மனிதனைப் பற்றியோ, மனிதகுலம் பற்றியோ பார்க்கும் பொழுது இந்தப் பார்வை மட்டும் போதாது என்று தோன்றுகிறது”. ஆக இவரும் மார்க்சியத்தின் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை வெளிப்படுத்திவிட்டார்.

மார்க்ஸ் கூறுகிறார்:-

"இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

.......

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்."

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை )

மேற்கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஆராய்ந்தால் உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களை- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் ஏற்படுகின்றன என்று தான் மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் மாவோ "உற்பத்தி உறவுகளில் மாறுதல் எதுவும் இன்றி, வளர்வதற்கு உற்பத்தி சக்திகளுக்கு சாத்தியமாகாத பொழுது அப்பொழுது, உற்பத்தி உறவுகளில் மாறுதல் என்பது முதன்மையான, தீமானகரமான பாத்திரத்தை ஆற்றுகிறது. புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்குதிலும் அதைக் கடைப்பிடிப்பது அக்காலங்களில் முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றுகின்றன" என்கிறார். அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் தீர்மானித்தப்படி மேற்கட்டமைப்பு தீவிரமாக செயற்படுகின்றன என்று சொல்வது தான் மார்க்சியம். சமூகத்தை மாற்றும் படியான மேற்கட்டமைப்பின் தீவிரமான செயற்பாட்டை அடித்தளத்தின் முரண்பாடே தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் தெளிவாகவே கூறியிருக்கிறது.

இதனையே அறிக்கையில் மார்க்சும், எங்கெல்சும் கூறுகிறார்கள்:-

கம்யூனிஸ்டுகளுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்தமைத்ததோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துக்களை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்கக் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிர் நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்தலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்வதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.

வரலாற்று  நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன

அறிக்கை தெளிவாக்குவது என்வென்றால் சோஷலிசப் புரட்சியை நிகழ்த்துவது இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர்களின் கருத்துக்கள் அல்லது கோட்பாடுகள் அல்ல. நடைபெற்றுவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தே அவை பொதுப்பட எடுத்துரைக்கப்படுகின்றன. அதனால் சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது இந்த சீர்திருத்தாளர்களின் கோட்பாட்பாட்டினாலோ அல்லது புனைந்தமைந்ததோ கிடையாது.

இதனை லெனின் தெளிவுபடுத்துகிறார்.

"..மார்க்சியப் பார்வைநிலையில் புரட்சி என்பது என்ன?  காலாவதியாகிவிட்ட அரசியல் மேற்கட்டுமானத்தை பலத்தைக் கொண்டு இடித்துத் தள்ளுவது, அதற்கும் புதிய உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதை இற்று விழும்படி செய்தது.

..

மேற்கட்டுமானம் ஒவ்வாரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது, அழுத்தம் தாங்க முடியாமல் பலவீனப்பட்டு வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி."

(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

எங்கெல்ஸ் காலமானபோது லெனின் எழுதியனார்:-

"தொழிலாளி வாக்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனித குலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்க வல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ண மிக்க  முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோஷலிசம் என்பது எதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்."

(பிரெடெரிக் எங்கெல்ஸ்)

இதில் லெனின் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும் தனிநபர்களின் நல்லெண்ண மிக்க முயற்சிகளால் தோன்றியவை அல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் வலியுறுத்துவதை எடுத்துக்காட்டியுள்ளார். அதே போல் சோஷலிசம் என்பது கனவின் கற்பனை பொருளல்ல, நவீன சமூக வளர்ச்சியின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் இறுதிக் குறிக்கோளும் தவிர்க்க முடியாத விளைவாகும் என்று மார்க்சும் எங்கெல்சும் தங்களது விஞ்ஞான நூல்களில் எழுதியதை லெனின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இறுதிக் குறிக்கோளையும், விளைவையும் அறிந்து உணர்ந்து சித்தாந்தமாக்கி புரட்சியை முடிப்பவர்களே பாட்டாளி மக்களும், விவசாயிகளும் இவர்களை தலைமைத் தாங்கும் முன்னணிப் படையும், பொதுவாக அனைத்து மக்களோடு இணைந்து புரட்சியை நிகழ்த்தி காட்டுகின்றனர்.

குறிப்பிட்ட நிலைமைகளில் மேற்கட்டமைப்பு தீர்மானகரமான பாத்திரம் ஆற்றுகிறது என்று மாவோ கூறுகிறார். இது அடித்தளத்துக்கும் மேற்கட்டப்புக்கும் உள்ள இடைத் தொடர்பை பரஸ்வர வினையாற்றுதலாக புரிந்து கொள்வதற்கு முழுமையான இடம் கொடுக்கிறார்.

இன்று பரஸ்பரவினைபுரிதல் என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள், தோழர் மாவோவின் இந்தக் கருத்தைத் தான் முன்நிறுத்துகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அமைப்புகளோ இதனை விவாதித்து எந்த முடிவையும் இதுவரை நிலைநிறுத்தவில்லை. கம்யூனிச நடைமுறைச் சிக்கலுக்கு, இந்த பரஸ்பர வினைபுரிதல் காரணமானதை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. இதனை ஆழமாக விவாதிப்பது அவசியமானதாகும்.

லெனின்:-

"மேற்கட்டுமானம் ஒவ்வொரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி, இதை வரையறுக்காவிட்டால் புரட்சிக் கோஷம் தற்சமயம் பொருளற்ற வெற்றிச் சொல்லாகும்"

(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

புரட்சிகர கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்து புரட்சியை ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். அப்போது எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும் எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுக்கிற தீவிரபாத்திரத்தை தீர்மானிக்கும் பாத்திரமாக மாசேதுங் கூறிவிடுகிறார்மேற்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்பொழுது அடித்தளம் திறனற்றுபோய்விட்டதாகவும் மேற்கட்டுமானத்தால் அடித்தளத்தை காப்பாற் வேண்டிய சூழல் ஏற்பட்டது போல் மாவோ பேசுகிறார்.

ஆனால் இந்தச் சூழலை மார்க்ஸ்:-

"மூலதனத்தின் ஏக போகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது."

(மூலதனம்I (தமிழ் என்.சி.பி.எச்)பக்கம் 1026-1027)

இங்கு மார்க்ஸ் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து சென்றமையால், முதலாளித்துவ மேற்கட்டுமான மேலோடுகள் அடித்தளத்துக்கு ஒவ்வாததாகிவிடுவதைக் குறிப்பிட்டு, மேலோடு உடைத்தெறியப்படும் என்று கூறுகிறார். அடித்தளத்தின் வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகிப் போனதால் உடைத்தெறியப்படுவதைக் குறிப்பிடுகிறார். அடித்தளம் பலவினப்பட்டு போனதால் மேற்கட்டமைப்பு தீர்மானகரபாத்திரம் எடுக்க வேண்டிய நிலைவந்தது என்று மாசேதுங் கூறுவது போல் மார்க்ஸ் பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடித்தளத்தின் வளர்ச்சி நிலைக்கு, மேற்கட்டமைப்பு பின்தங்கிப் போனதால் மேற்கட்டமைப்பு உடைத்தெறியப்படுகிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்குமான இயக்கவியல் தொடர்பை மறுப்பதின் விளைவே மாசேதுங்கின் கூற்றுக்குக் காரணம்.

மார்க்ஸ் கூறுகிறார்:-

சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.

 (தத்துவவியலின் வறுமை)

எங்கெல்ஸ் போர்கியுக்கு எழுதிய கடித்தில் சமூகத்துக்குத் தொழில்நுட்பத் தேவை ஏற்பட்டால், அத்தேவை பத்து பல்கலைகழகங்களைக் காட்டிலும் அதிகமாக விஞ்ஞானத்தை முன்னுக்குத் தள்ளும் என்று பொருளாதார தேவையின் அடிப்படையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நடைபெறுவதாக கூறுகிறார். ஆனால் இர்பான் அபீப் போன்றோர்கள் கருத்துநிலைகளிலிருந்து தொழில்நுட்பம் கண்டுபிடிக்க படுவதாக தெரிவிக்கின்றனர்.

மார்க்சிய வழியில் வரலாற்றியல் பொருள்முதுல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாத்தால்    இர்பான் அபீப்  சமூக மாற்றத்தில் பொருளாதார காரணங்களின் இன்றியமையாததை புரிந்த கொள்ளாமல் கூறுகிறார், முதலாளித்துவமும், பிற சுரண்டல் அமைப்புகளும் சொந்தச் சுமை காரணமாக அல்லது முதலாளித்துவப் பொது நெருக்கடி காரணமாக தாமாகவே வீழ்ந்துவிடாது. கருத்துப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்று இல்லை. பொருளாதாரச் செயல்பாடு ஒரு உதவிதான். ஆனால் அது வர்க்க உணர்வுக்கு மாற்றாகாது.

இங்கே, இர்பான் அபீப்  கருத்துக்களை தோற்றுவிக்கிற தீர்மானகரமான சக்தி பொருளாதாரத்தில் இருப்பதை மறுக்கிறார். தீர்மானகரமான சக்தியை ஒரு உதவி என்று சிறுமைப்படுத்துகிறார். இது பொருள்முதல்வாதப் பார்வைக்கு மறான கருத்தாகும்.

வர்க்கப் போராட்டத்தின் சாரம் பொருளாதார செயற்பாட்டில் அடங்கியிருக்கிறது. வர்க்க உணர்வென்பது பொருளாதார செயற்பாட்டிலிருந்து விலக்கி பார்ப்பதென்பது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாகும். வர்க்கப் பேராட்டத்தின் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் விளக்கப்படுத்துவதே பொருள்முதல்வாதமாகும். பொருளாயதக் காரணங்களின் விளைவுகளின் அடிப்படையில் இதனை விளக்கப்படுத்துவதால் தான் மார்க்சியத்தை விஞ்ஞானம் என்றழைக்கப்படுகிறது.

சமூக வாழ்க்கை நிலையே மனிதர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது என்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாதவர்களுக்கே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எங்கெல்ஸ் கூறுவது சரியாகத்தான் இருக்கிறது.

“”பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்ககையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது” (மார்க்ஸ்) எல்லாவிதமான சமூக அரசியல் உறவுகளும், மத, சட்ட அமைப்புகளும் வரலாற்றுப் போக்கில் உருவாகின்ற அனைத்துத் தத்துவக் கருதுகோள்களும் அந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தில் நிலவிய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே பின்னோக்கிச் சென்று இந்தப் பொருளாயத நிலைமைகளின் தடத்தை முன்னவற்றில் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது அரசியல் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்று விஞ்ஞானங்களுக்கும் கூட (இயற்கை விஞ்ஞானங்களில் சேராத மற்ற துறைகள் அனைத்துமே வரலாற்று விஞ்ஞானங்களே) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும்.

மனிதர்களுடைய உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.” இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது தத்துவத்துறையில் மட்டுமல்லாது செய்முறைத் துறையிலும்கூட மிக அதிகப் புரட்சிகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலைப் பற்றி)

       மார்க்சின், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு அதிகப் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிய இரண்டின் இடைச்செயலில் அடித்தளம் தீர்மானகரமானப் பாத்திரம் வகிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது, தாக்கம் என்பது வளர்ச்சியை விரைவுபடுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இதற்கு மேல் ஒன்றும் செய்திட முடியாது. சமூகப் பற்றிய இந்த புரட்சிகர விஞ்ஞான கண்டுபிடிப்பை, அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிவற்றுக்கு இடையேயான இடைத்தொடர்பை பரஸ்பர வினைபுரில் என்கிற விளக்கத்தின் மூலம் சிதைக்கப்படுகிறது. இந்த பரஸ்பர வினைபுரிதல் என்பது வளர்ச்சி அடைந்த வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்திற்கு உரியது. மார்க்ஸ் கூறுகிற அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பது வர்க்க சமூகத்திற்கு உரியது.

மாவோவின் இந்த பரஸ்பர வினைபுரிதல் பற்றி கோ.கேசவன் மிகத் தெளிவாக முன்வைக்கிறார்.

கோ.கேசவன்:-

சமூக அமைப்பு அடித்தளம், மேற்கட்டுமானம் என இரண்டாக உள்ளது. அடித்தளமாகச் சமூகத்தின் உற்பத்தி முறை அமைகின்றது. அரசியல், சட்டம், கலாச்சாரம் என்பன போன்ற அம்சங்கள் மேற்கட்டுமானமாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தை இறுதியில் நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் பெற்றதாக அடித்தளமான உற்பத்திமுறை அமைகின்றது. இவ்வாறு மார்க்சியம் குறிப்பிடுகிறது, மேற்கட்டுமான அம்சங்களுக்கு ஒப்பீட்டு அளவிலான சுயேச்சை இயங்குதிறம் உள்ளதென்றும் மார்க்சியம் விளக்குகின்றது. அதே நேரத்தில் மேற்கட்டுமானம், அடித்தள உற்பத்திமுறையின் மீது தன் இயல்பான செல்வாக்கையும் பயன்படுத்துகிறது என்றும் அது விளக்குகின்றது. மேற்கட்டுமானத்தின் ஓர் அம்சம் அதன் இன்னொரு அம்சத்தையும் பாதிக்கலாம். இப்படி மேற்கட்டுமான அம்சங்களுக்கு இடையிலான பரஸ்பரம் பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும், மேற்கட்டுமானத்தின் அம்சங்கள் அடித்தள உற்பத்தி முறைமீது பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும் மேற்கட்டுமான அம்சத்தை இறுதியில் நிர்ணயம் செய்யும் ஆற்றலை உற்பத்திமுறையே பெற்றிருக்கிறது. இது இறுதி நிர்ணயவாதம் எனப்படும்.

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியத்தைத் தம் வர்க்கப் போராட்ட அனுபவங்களைக் கொண்டு செழுமைப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த தோழர் மாசேதுங் மார்க்சியத்தின் இந்தக் கூற்றை விளக்கினார். இயங்கியல் அடிப்படையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கண்டறிந்த மாசேதுங், அடித்தள உற்பத்திமுறை, மேற்கட்டுமான அம்சங்களை நிர்ணயிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார். இருப்பினும் மேற்கட்டுமான அம்சங்களை செயலூக்கம் அற்றதாகவோ அடித்தளத்தால் நிர்ணயிக்கப்படுவதாகவோ மட்டும் கண்டறியாமல் சில குறிப்பிட்ட நேர்வுகளில் மேற்கட்டுமான அம்சங்களும் அடித்தள உற்பத்தி முறையை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன எனக் குறிப்பிடுகின்றார். (முரண்பாடு பற்றி) இது மார்க்சிய வரம்புகுட்பட்டே மார்க்சியக் கருத்தாக்கத்தைச் செழுமைப் படுத்துவதாக இருப்பினும் அடித்தள இறுதி நிர்ணயவாதம் என்பதை இயங்கியல் மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் மேல்தள நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தை மாவோ சிந்தனை முன்மொழிவதன் மூலம் அடித்தளம் - மேல்தளம் - பரஸ்பர நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தையும் தொட்டுவிடுகிறது.”

(சாதியம்- பக்-73-74)

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் என்று கூறினால், வாழ்நிலையே உணர்வுநிலையை தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு பொருள்முதல்வாதமாக விளங்குகிறது.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானிக்கும் என்று கூறினார், உணர்வுநிலையே வாழ்நிலையை தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு கருத்துமுதல்வாதமாக விளங்குகிறது.

பரஸ்பர நிர்ணயம் என்பது பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்ற பிரிவுக்கு மாறாக, இடைக் கண்ணோட்டமாக காட்சித் தந்து, இறுதியில் கருத்துமுதல்வாதத்தில் கரைகிறது. மார்க்சியத்தின் வளர்ச்சி என்ற பெயரால் கூறுகிற இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற கோட்பாடு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் விஞ்ஞானத் தன்மையை மறுத்துவிடுகிறது

பரஸ்பர வினைபுரிதல் என்கிற வர்க்கமற்றப் பார்வை தொழிலாளர்களுக்கு வீழ்ச்சியைத் தரும், விஞ்ஞானத் தன்மையுடன் கூடிய மார்க்சின் கோட்பாடு வழிகாட்டியாக அமைந்தால் தொழிலாளர்களுக்கு விடிவைத் தரும்.

 



No comments:

Post a Comment