Monday 19 November 2018

2. குடும்பம்


(எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் அடிப்படையில் சுருக்கப்பட்டது)

மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இரோகுவாய் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்களில் செனீகா என்ற ஒர் இனக்குழுவினர் அவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள் அநாகரிக நிலையின் இடைக்கட்டத்தில் இருந்தனர். அதனால் அங்கே நிலவிய மணமுறை இணை குடும்ப நிலை ஆகும். இணைக் குடும்பம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஆணுக்குப் பல மனைவியர் இருப்பர், இருந்தாலும அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக இருந்தாள். அதேபோல் அவளுடைய பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருப்பான்.

திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கு இடையே நடைபெற்றது. இருவரும் திருமண உறவை எளிதாக விலக்கிக் கொள்ளலாம்.

இத்திருமண ஜோடியின் குழந்தைகளை அனைவரும் அறிந்திருந்தனர். தகப்பனார், தயார், மகன், மகள், சகோதரன், சகோதரி என்று தெளிவாகப் பிரித்து அறிந்திருந்தனர். ஆனால் எதார்த்தத்தில் இச்சொற்கள் வேறுவிதமாக பயன்படுத்தப்பட்டது.

தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைத்துக்கொள்ளவில்லை. அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகன், மகள் எனறே அழைத்தனர். அவர்களும் அவரை அப்பா என்றே அக்கிறார்கள். மறுபக்கத்தில் அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார், அவர்கள் அவரை மாமா என்று அழைக்கிறார்கள்.

இதற்கு எதிரிடையாக பெண் தனது சகோதரிகளின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்து மகன், மகள் என்றே அழைகிறாள், அவர்களும் அவளை அம்மா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவள் தன்னுடைய சகோதரர்களின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறாள், அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதே போல் சகோதரர்களின் குழந்தைகளையும் அழைக்கிறார்கள்.

“இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல, ஆனால் இரத்த உறவுமுறையின் நெருங்கிய தன்மை மற்றும் விலகிய தன்மை, சமத்துவம் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி நடைமுறையில் அமுலில் இருக்கின்ற கருத்துகளைக் குறிக்கின்ற சொற்களாகும்.” (பக்கம் - 33)

செவ்விந்தியர்களின் இரத்த உறவுமுறை நூற்றுக்கணக்கில் வேறுபட்ட ஒரு தனிநபரது உறவுகளால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அமெரிக்க செவ்விந்தியர்களிடையே காணப்படும் இந்த இரத்த உறவுகள் இந்திய ஆதிகுடிகளிடமும், திராவிட இனக்குழுக்கள், கௌரா இனக்குழக்கள் ஆகியோர் இடையிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது

தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இரோகுவாய்கள் மத்தியிலும் இரத்த உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவு முறைகளில் இன்றும் கூட ஒன்றாகவே இருக்கின்றன. எல்லா அமெரிக்கச் செவ்விந்தியர்கள் இடையிலும் இருப்பதைப் போல, இந்தியாவிலுள்ள இந்த இனக்குழுக்கள் இடையில் இருக்கின்ற குடும்ப வடிவத்திலிருந்து தோன்றும் இரத்த உறவுமுறைக்கு முரண் பட்டிருக்கின்றன.

இந்தப் பட்டியலை மார்கன் எழுதிய “பண்டைய சமூகம்” என்ற நூலில் காணலாம்.

ஒரு தார மணமுறை என்பது ஆதியிலிருந்து இன்றுவரை நிலைபெற்றிருந்தது கிடையாது, அது பல மணமுறைகளைக் கடந்து இறுதியில் தோன்றியது. குடும்பத்தின் வரலாற்றை பின்னோக்கி காணும் போது ஆதிக் கட்டமான வரையறையற் பாலுறவு நிலவியதை காணமுடிகிறது.

வரையறையற்ற பாலுறவு என்றார் என்ன?

ஒவ்வொரு பெண்ணும் சம அளவில் ஒவ்வொரு ஆணுக்கும் சொந்தமாக இருந்ததையும். அதே போல் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியவனாக இருந்ததையும் குறிப்பதே வரையறையற்ற பாலுறவு.

மனித குலத்தின் பாலியல் வாழ்க்கையில் இந்த ஆதிக் கட்டம் இருந்ததை மறுப்பது அண்மைய காலத்தில் வழக்கமாகிவிட்டது. மனித குலத்தின் இந்த “அவமானத்திலிருந்து” பாதுகாப்பதே  இதற்கு நோக்காகும். அவர்கள் இதற்குக் கூறும் காரணங்கள், இந்த உறவுமுறை நிலவியதற்கு நேரடி சாட்சிகள் இல்லை. விலங்கினத்திலும்கூட முழுமையான வரையறையற்ற புணர்ச்சி என்பது அதன் கீழ்நிலைக்கட்டத்துக்கு உரியது. மேலும் பறவைகளில் பெண் பறவைக்கு அடை காக்கும் காலத்தில் துணை தேவைப்படுவதை, முன்வைத்து அவர்கள் ஒரு தார மணத்திற்கு வலுசேர்க்க முயன்றனர். எங்கெல்ஸ் இதனை முற்ற மறுதலிக்கிறார்.

மனிதர்கள் பறவை இனத்தில் இருநது தோன்றவில்லை. மாறாத ஒருதார மணம்தான் நற்பண்பின் உச்சியைக் குறிக்கிறது என்று கருதினால் நாடாப்புழுவுகுதான் முதல் பரிசு கொடுக்க வேண்டும். அந்த நாடாபுழுவின் உடம்பு முழுவதும் ஐம்பது முதல் இருநூறு வரை தனிப்பகுதிகளாக அமைந்திருக்கிறது. அந்த ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியே ஆண் பிறப்புறுப்பும் பெண் பிறப்புறுப்பும் ஜோடியாக இருக்கின்றன.

அடுத்து எங்கெல்ஸ் இரு நூலாசிரியாகளை மேற்கோள்காட்டி குடும்பம் மந்தை ஆகியவற்றை விளக்குகிறார். குடும்பம் வளர்ச்சி அடைந்திருந்தால் அங்கே மந்தை சுருங்குகிறது. மந்தை வளர்ச்சியடைந்த இடங்களில் குடும்பம் சுருங்கியதாகவே இருக்கிறது.

எங்கே குடும்பம் நெருக்கமாகப் பிணைக்கப் பட்டிருக்கிறதோ, அங்கே அபூர்வமாகவும் விதிவிலக்காவும் இருக்கிறது. எங்கே சுயேச்சையான புணர்ச்சி அல்லது பல தார மணம் இருக்கிறதோ அங்கே மந்தை சேர்ந்திருக்கிறது.

மிகவும் ஆதியான குடும்ப வடிவமாக நாம் பார்ப்பது, குழு மணமே. அதற்கு அடுத்து பல கணவர் மண முறையைக் காணலாம்.

குழு மண வடிவங்களைத் தொடர்ந்து அதற்கே உரிய சிக்கலான நிலைமைகள் வருவதால் அவை அதற்கு முந்திய, இன்னும் எளிமையான பாலியல் உறவுகள் தொடர்புடைய வடிவங்களைக் கட்டாயமாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே இறுதியில் பார்க்கும் போது விலங்கு நிலையில் இருந்து மனித நிலைக்கு மாறிய கட்டத்துக்குப் பொருத்தமான வரையறைகள் இல்லாத பாலுறவு நிலை நிலவிய காலட்டத்தை அது சுட்டிக்காட்டுகின்றன.

அந்த ஆதிக் கட்டத்தில் சகோதரனும் சகோதரியும் கணவன் மனைவியாக வாழ்ந்தது மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் உறவுகள் இருந்ததை அறியமுடிகிறது. ரிக் வேதத்தில் ஒரு சூக்தம் எமன் எமி உரையாடலாக அமைந்துள்ளது. அது இந்த சகோதரன் சகோதரி பாலியல் உறவின் நினைவுகளைப் பேசுகிறது.

ஆதிகால நிலைமைகளை விபசாரம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்ட பார்க்கும்வரை குடும்ப வரலாற்றின் படிநிலை வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மேலே வந்து கொண்டிருந்த ஆதிகால மனிதனுக்கு குடும்பம் என்பதே தெரியாது. வரையறையற்ற பாலுறவு என்ற ஆதிநிலையில் இருந்து ஒரு தார மணம் வரை வளர்ந்ததை மார்கன் நான்கு மணங்களின் வடிவங்களில் அடக்குகிறார். 1) இரத்த உறவுக் குடும்பம் 2) புனுலுவா குடும்பம் 3) இணை குடும்பம் 4) ஒரு தார மணக் குடும்பம்.


No comments:

Post a Comment