Thursday 22 November 2018

கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிடாதவருக்கே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தெளிவாகப் புரியும்


இன்றைய சாதி பற்றிய விவாதத்தில் மார்க்சிய அடிப்படை என்ற பொருளில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேசிவருகின்றனர். மார்க்சியம் “கருத்து” என்பதை எவ்வாறு பார்க்கிறது என்பதில் தெளிவிருந்தால் இந்த விவாதம் இந்தவழியில் செல்லாது.

மார்க்சின் மாபெரும் கண்டபிடிப்பு, என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிற இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பது வேதனைக்கு உரியதே. மார்க்சும் எங்கெல்சும் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்று தனியாக “மூலதனம்” நூல் போல் எழுதவில்லை என்பது உண்மையே. ஆனால் அதனைப் போதுமான அளவுக்கு விளக்கத்தைத் தமது நூல்களிலும் கடிதங்களிலும் விளக்கியிருக்கின்றனர்.

மூலதனம் நூலின் முன்னுரையில் ஹெகலின் இயக்கவியலைப் பற்றிப் பேசும் போது தெளிவாகவே பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை மார்க்ஸ் முன்வைத்துள்ளார்.

“எனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையிலிருந்து வேறுபட்டது மட்டுமன்று, அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு, மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது -இதனை அவர் ''கருத்து' என்ற பெயரில் சுயேச்சையான கர்த்தாவாகவே மாற்றி விடுகிறார் - எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும்; எதார்த்த உலகம் "கருத்தின்" புற வடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை. மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப் படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.”

தத்துவ உலகம் இரண்டாகத் தான் பிரிந்திருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். இதனைக் கடந்து மூன்றாவதாகவோ, இரண்டையும் ஒன்றிணைந்ததாகவோ கருதுவதெல்லாம் கருத்துமுதல்வாதத்திற்கே நம்மைக் இட்டுச் செல்லும்.

“பருப்பொருள், மனதின் உற்பத்திப் பொருள் அன்று. ஆனால் மனம் என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே ஆகும். இது தூய பொருள்முதல்வாதம் என்பது உண்மையே.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள
ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

எங்கெல்ஸ் கூறுகிறபடி பருப்பொருளின் விளைபொருளே மனம், இந்தத் தூய பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ள முடிவில்லை என்றால், சிந்தனையின் போக்கை மார்க்சிய வழியில் அறிந்து செயல்பட முடியாது.

கருத்துகள், கண்ணோட்டங்கள் ஆகிவற்றின் மாற்றம் பொருளாயத வாழ்நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா என்ன? என்று “கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை” நம்மைப் பார்த்துக் கேட்கிறது. மேலும், பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றமே அறிவுத்துறையிலும் மாற்றத்தை ஏற்படுகிறது என்பதையே வரலாறு நிரூபிக்கிறது என்கிறது.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா? என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது – கருத்துக்களின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?” (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

வர்க்கப் போராட்டம் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டிருந்தால் போதாது, அதனை மார்க்சியம் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் மூலம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

“அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து – வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக்கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன, ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போன காலம் முதலாள்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே , சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துககும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்க்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது, ..”
(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, எங்கெல்ஸ் முன்னுரை 1883)


      அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் பற்றிய வார்த்தை விவரிப்பதிலேயே காலம்கடத்தியது போல், மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்பதையும் வார்த்தை விளையாட்டாகப் புரிந்து கொள்ளக்கூடாது.  க்கோட்பாட்டில் காணப்படும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகியற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்திடல் வேண்டும்.

மார்க்ஸ்:- “உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

      மனிதர்களின் உணர்வுநிலையே அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம். மனிர்களுடைய வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்.

      அதே போல் அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்றால் கருத்துமுதல்வாதம். இதல்லாது மூன்றாவது உணர்வுநிலையோ, மூன்றாவது தளமோ கிடையாது.

      மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர், மனிதனது சிந்தனையை மதிக்காது, புறநிலையே சமூகத்தைச் செயற்படுத்துகிறது என்று மார்க்சியம் கருதுவதாகக் கூறுகின்றனர்.

இதற்கு எங்கெல்ஸ் நேரடியாகவே பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை என்று பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அதனை மக்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதையும் கூறியுள்ளார்.

சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்”
(வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

      மார்க்சுக்கு முன்பாக மனிதனது உணர்வுநிலையைக் கொண்டு  அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் தரப்பட்டது. இப்போது மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுநிலைக்கு விளக்கம் கூறுவதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டது.

எங்கெல்ஸ்:- சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது."
                                          (டூரிங்குக்கு மறுப்பு)

      பொருள்முதல்வாதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களே, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்தும் என்றும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குக் கட்டுப்பட்டு அடிபணிந்து கிடக்கும் என்று கருதினர். இதற்கு எங்கெல்ஸ் தமது இறுதிக்காலத்தில் கடிதங்களில் பதிலளித்தார்.

இந்தக் கடிதங்களைத் திருத்தல்வாதிகள் எங்கெல்ஸ் அடித்தளம் தீர்மானிக்கும் என்ற கருத்தை மாற்றிக் கொண்டார் என்று விளக்கப்படுத்தினர். உண்மை அவ்வாரில்லை. அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இடைச்செயலில் அடித்தளத் மேற்கட்டமைப்பன் மீது தீர்மானகரமான பாத்திரத்தையும், மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தமது தாக்கத்தையும் செலுத்துகிறது என்றே எங்கெல்ஸ் விளக்கம் கொடுக்கிறார். மேற்கட்டமைப்பின் பாத்திரத்தைத் தான் விவரிக்கிறார். இடைச்செயலின் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது என்று தான் கூறியிருக்கிறார்.

...வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
(பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890)

      இவ்வளவுத் தெளிவாக எங்கெல்ஸ் வெளிப்படுத்திய பின்பும், மேற்கட்டமைப்பின் சுதத்திரத் தன்மையை எங்கெல்ஸ் அங்கிகரித்தார் என்றே கூறிவருகின்றனர். அடித்தளமும் மேற்கட்டமைப்பும் சமஅளவுக்குப் பரஸ்பர வினைபுரிகிறதை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவரது கடிதங்களில் இவர்கள் கூறுவதைப் போல் எங்கும் காணப்படவில்லை. சில சொற்களுக்கு இவர்கள் புதிய விளத்தைக் கொடுத்துவிட்டு, எங்கெல்ஸ் இறுதியில் முடிபாகக் கூறியதை மறைத்துவிடுகின்றனர்.

      மேற்கட்டமைப்பில் காணப்படும் சுதந்திரம் சார்புநிலையானதே என்றுதான் எங்கெல்ஸ் கூறியுள்ளார். இந்த எதிர்செயல் சமதத்துவமற்றது அதனால் தான் அடித்தளத்தின் பாத்திரம் தீர்மானகரமானது, மேற்கட்டமைப்பின் பாத்திரம் தாக்கம் செலுத்துதல் என்கிறார். இடைச் செயல் என்பது பரஸ்பரமானது கிடையாது. அதாவது சமஅளவினது கிடையாது.

மேற்கட்டமைப்பு இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்வதைத் திருத்தல்வாதிகள் பெரிதுபடுத்துகின்றனர். இந்த முயற்சியின் இறுதியில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுகிறது என்று எங்கெல்ஸ் கூறியுள்ளதை மறைக்கின்றனர்.

“புதிய, சுயேச்சையான சக்தி பிரதானமாக உற்பத்தியின் இயக்கத்தைப் பின்பற்றுகின்ற பொழுதே, தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம், அதாவது ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட சார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது. இது இரண்டு சமத்துவமில்லாத சக்திகளின் இடைச்செயல்: ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறு பக்கத்தில் புதிய அரசியல் சக்தி; இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்கிறது; அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது. மொத்தத்தில் பொருளாதார இயக்கம் முன்னேறும்; ஆனால் அது தானே நிறுவி சார்புநிலையான சுதந்திரம் அளித்த அரசியல் இயக்கத்தின் ஒரு பக்கத்தில் அரசு ஆட்சியதிகாரத்தின் இயக்கத்திலிருந்தும் மறு பக்கத்தில் அதே சமயத்தில் தோற்று விக்கப்படுகின்ற எதிர்ப்பிலிருந்தும் - எதிர்ச்செயல்களுக்கு உட்படுகிறது.”
(ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம்)

பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
(பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890)

கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிடாதவர்களுக்கே இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

 எங்கெல்ஸ்:- “”பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்ககையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது” (மார்க்ஸ்) எல்லாவிதமான சமூக அரசியல் உறவுகளும், மத, சட்ட அமைப்புகளும் வரலாற்றுப் போக்கில் உருவாகின்ற அனைத்துத் தத்துவக் கருதுகோள்களும் அந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தில் நிலவிய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே பின்னோக்கிச் சென்று இந்தப் பொருளாயத நிலைமைகளின் தடத்தை முன்னவற்றில் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது அரசியல் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்று விஞ்ஞானங்களுக்கும் கூட (இயற்கை விஞ்ஞானங்களில் சேராத மற்ற துறைகள் அனைத்துமே வரலாற்று விஞ்ஞானங்களே) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும்.

“மனிதர்களுடைய உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.” இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது தத்துவத்துறையில் மட்டுமல்லாது செய்முறை துறையிலும்கூட மிக அதிகப் புரட்சிகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு
பங்களிப்பு என்ற நூலைப் பற்றி)

No comments:

Post a Comment