Tuesday, 27 November 2018

நான்கு குடும்ப உறவுகள்


(எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் அடிப்படையில் சுருக்கப்பட்டது)

ஆதிகால உறவுமுறைகளை தற்கால விபசாரம் என்கிற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும்வரை அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அது எந்த சூழ்நிலையில் தோன்றியது என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

1. இரத்த உறவுக் குடும்பம்
2. புனலுவா குடும்பம்
3. இணை குடும்பம்
4. ஒருதார மணக்குடும்பம்

1. இரத்த உறவுக் குடும்பம்

இது குடும்பத்தின முதல் கட்டமாகும். குடும்பம் என்ற வரம்புக்குள் அடங்கிய எல்லாத் தாத்தாக்களும் பாட்டிகளும் பரஸ்பரம் கணவன் மனைவியர் ஆவார்கள். அவர்களின் குழந்தைகளும் – தந்தையர்களும் தாயார்களும்- அதே போல் பரஸ்பரம் கணவன், மனைவியர் ஆவார்கள். இவர்களுடைய குழந்தைகள் ஒருவருக்கொருவர் கணவன், மனைவியராகவுள்ள மூன்றாம் வட்டமாக அமைவார்கள்.

இந்தக் குடும்ப வடிவத்தில், முன்னோர்களும் வழிவந்தோரும், பெற்றோர்களும் குழந்தைகளும் மட்டுமே ஒருவருக்கொருவர் திருமண உரிமைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டத்தில் சகோதரன் சகோதரி ஆகியோர்களுக்கு இடையில் உறவுகொள்வது சகஜமாக இருந்தது.

2. புனலுவா குடும்பம்

பெற்றோர்களும் குழந்தைகளும் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது குடும்ப அமைப்பில் முதல் முன்னேற்றமாகும், சகோதரர், சகோதரிகள் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது இரண்டாவது முன்னேற்றமாகும். முதலில் சொந்த சகோதரர் சகோதரிகளிடையே விலக்கப்பட்ட மணம், பின்பு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதர் சகோதரிகளுக்கு இடையே திருமணம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு இடைய உடலுறவு கொள்வது முறையல்ல என்ற கருத்து தோன்றிய உடன் புதிய குடும்ப உறவுகள் தோன்றுவதற்கு தூண்டிது. சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு குடும்பச் சமூகத்தின் மூலக்கருவாக அமைந்தன. அவர்களின் கூடப்பிறந்த சகோதரர்கள் இன்னொரு குடும்பச் சமூகத்துக்கு மூலக்கருவாக அமைந்தனர். பூனலுவா குடும்பம் என்று அழைக்கப்படுகிற குடும்ப வடிவம் இந்த முறையில் மாற்றம் பெற்றது. இந்தக் கணவன்மார்கள் இனியும் சகோதரர்களாக இல்லாது “புனலுவா” என்ற உறவைப் பெறுகின்றனர். புனுலுவா என்றால் பங்காளியாகும்.

அதே போல் கூடப்பிறந்த சகோதரர்களையோ அல்லது இரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றுப் பிள்ளைகளான சகோதரர்களையோ கொண்ட ஒரு குழுவினர் சில பெண்களைப் பொது மணம் செய்து கொண்டனர். அவர்கள் இவர்களுடைய சகோதரிகள் அல்ல. இநத்ப் பெண்கள் ஒருவரையொருவர் “புனலுவா” என்று அழைத்துக் கொண்டார்கள். பிற்காலத்தில் இதிலிருந்து வரிசையாக சில திரிபுகள் தோன்றின. மிகப் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் குலம் என்னும் அமைப்பு பூனலுவா குடும்பத்தில் இருந்துதான நேரடியாகத் தோன்றியத் தெரிகிறது.

குழுக் குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பனார் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது. ஆனால் அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அந்தக் குடும்பத் தொகுதி முழுவதிலுமுள்ள ’குழந்தைகள் எல்லோரையும் அவள் தன் குழந்தைகள் என்றே அழைத்தாலும், அக்குழந்தைகளின் பால் ஒரு தாய்க்குரிய கடமைகளை அவள் செய்யுமாறு விதிக்கப்பட்டிருந்தாலும் அவள் மற்ற குழந்தைகளிலிருந்து தன்னுடைய சொந்தக் குழந்தைகளை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

குழு மணமுறை இருக்கின்ற இடங்களில் எல்லாம் தாய் வழியாக மட்டுமே மரபுவழியைக் கண்டறிய முடியும் என்றும், ஆகவே பெண்வழி மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும் தெளிவாகிறது. உண்மையாகப் பார்த்தால், காட்டுமிராண்டி நிலையிலுள்ள மக்களினங்கள் அனைத்திலும், அநாகரிக நிலையின் ஆரம்பக்கட்டத்தைச் சேர்ந்த மக்களினங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.

3. இணை குடும்பம்

ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக இருந்தாள். அதேபோல் அவளுடைய பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான்.

காட்டுமிராண்டி நிலைக்கும் அநாகரிக நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டில்தான் இணைக் குடும்பம் எழுந்தது. முக்கியமாகக் காட்டுமிராண்டி நிலையின் வளர்ந்த கட்டத்திலும், சிற்சில இடங்களில் மட்டும் அநாகரிக நிலையின் ஆரம்பக் கட்டத்திலும் அது தோன்றியது.

காட்டுமிராண்டி நிலைக்குக் குறியடையாளமாகக் குழு மணமும், நாகரிக நிலைக்குக் குறியடையாளமாக ஒரு தார மணமும் இருப்பதைப் போல அநாகரிக நிலைக்கு இணைக் குடும்பம் குறியடையாளமாக உள்ளது.

இணை குடும்பத்தில் இணைந்து வாழும் போது பெண் கற்புடன் இருக்க வேண்டும் என்பது கண்டிப்பாக வற்புறுத்தப்படுகிறது. அவள் சோரம் போனால் குரூரமாகத் தண்டிக்கப்படுடிகிறாள். ஆனால் இதனை ஆண் கடைப்பிடிப்பதில்லை. பல தார மணமும் சமயங்களில் சோரம் போவதும் ஆணின் உரிமை என்னும் வகையில் அந்த வாழ்க்கை நடைபெறுகிறது.

இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து கொள்ளலாம், அப்போது குழந்தைகள் முன்போலவே தாய்க்கு மட்டுமே சொந்தமாவார்கள்.

தாயுரிமைப்படி, அதாவது பெண்வழியாக மட்டுமே மரபு வழி கணக்கிடப்பட்டு வந்தவரை, குலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பரம்பரை வாரிசு முறையின்படி இறந்துவிட்ட குலத்தின் உறுப்பினருடைய உடைமைக்குக் குல உறவினர்கள் தான் முதலில் வாரிசுகளாக இருந்தார்கள்.

மந்தைகளின் உடைமையாளன் மரணமடைந்து விட்டால் அந்த மந்தைகள் முதலில் அவனுடைய சகோதரர், சகோதரிகளிடமும் சகோதரிகளின் குழந்தைகளிடமும் அல்லது அவனுடைய தாயின் சகோதரிகளின் சந்ததியாரிடம் போய்ச் சேர்ந்தன. ஆனால் அவனுடைய குழந்தைகளுக்கு வாரிசுரிமை கிடையாது.

இப்படி செல்வம் பெருகிய பொழுது, அது ஒரு பக்கத்தில், குடும்பத்தில் பெண்ணைவிட ஆணுக்கு முக்கியமான அந்தஸ்தைக் கொடுத்தது. மறு பக்கத்தில், தனது குழந்தைகளுக்குச் சாதகமான வழியில் பரம்பரை வாரிசு முறையை மாற்ற இந்த வலுப்பெற்ற நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஆணுக்கு ஒரு தூண்டுதலை அளித்தது. ஆனால் தாயுரிமைப்படி மரபுவழி இருக்கும்வரை இப்படி நடக்க முடியாது. ஆகவே தாயுரிமையைத் தூக்கியெறிய வேண்டியதாயிற்று. அது தூக்கியெறியப்பட்டது.

தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டினுடைய ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்கு படிப்படியாகத் தள்ளப்பட்டாள், அடிமைப்படுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிட்டாள். இது பெண்களின் நிலையைக் கீழே இறக்கி விட்டது.

இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் என்ற நிலையில் இருந்து ஒருதார மணத்துக்கு மாறியது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள். அவளை கொலை செய்தால், அது அவன் தனது உரிமையை பயன்படுத்திக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. தந்தைவழிக் குடும்பத்துடன் நாம் ஏடறிந்த வரலாற்றுக்குள் நுழைகிறோம்.
4. ஒருதார மணக்குடும்பம்

அநாகரிக நிலையின் இடைக் கட்டம் வளர்ந்த கட்டத்துக்கு மாறிச்செல்லும் காலப்பகுதியில் இணைக் குடும்பத்தில் இருந்து  ஒரு தார மணம் தோன்றுகிறது.

ஒரு தார மணத்துக்குப் பக்கத்திலேயே அடிமை முறை இருந்ததனாலும், ஆணுக்கு முற்றிலும் சொந்தமாக அழகிய இளம் பெண்ணடிமைகள் இருந்ததனாலும் ஆரம்பத்திலிருந்தே ஒரு தார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்னும் பிரத்யேகமான தன்மையை முத்திரையாகக் கொண்டிருந்தது, அத்தன்மை இன்றும் கூட அதில் இருக்கிறது.

ஒருதார மணம் தனிநபர் பாலியல் காதலினால் ஏற்படவில்லை, அத்துடன் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லை, ஏனென்றால் முன்போலவே திருமணங்கள் வசதிக்காகச் செய்து கொண்ட திருமணங்களாகவே இருந்தன. இயற்கையான நிலைமைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலைமைகளை -அதாவது, ஆதிகால, இயற்கையாக வளர்ந்த பொதுச் சொத்தின் மீது தனியுடைமை வெற்றி பெற்றிருந்த நிலைமைகளை---அடிப்படையாகக் கொண்டு தோன்றிய முதல் குடும்ப வடிவம் அது.

குடும்பத்தை ஆண் ஆட்சி செய்தல், தன்னுடையது எனக் கூறக்கூடிய குழந்தைகளைப் பெறுதல், தன்னுடைய செல்வத்துக்கு வாரிசுகளைப் பெறுதல் ஆகியவை மட்டுமே ஒரு தார மணத்தின் இலட்சியங்கள்.

ஆக, ஆணுகும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக ஒரு தார மணமுறை வரலாற்றில் தோன்றவில்லை; அத்தகைய சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம். அதற்கு மாறாக, ஒரு பால் மற்றொரு பாலை அடிமைப்படுத்துதலாக அது தோன்றியது, ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அந்திராத இரு பால் சச்சரவைப் பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது.

மார்க்சும் எங்கெல்சும் 1846இல் எழுதி, வெளியிடப்படாத பழைய கையெழுத்துப் பிரதியில் (ஜெர்மன் சித்தாநதம்) பின்வருமாறு எழுதினர்: “குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப்பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும்.” இன்று இத்துடன் நான் பின்வருமாறு சேர்த்துக் கூறுவேண்டும்: வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒரு தார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது, முதல் வர்க்க ஒடுக்குமுறை ஆண்பால் பெண்பாலை ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது.

ஒரு தார மண முறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில், அது அடிமை முறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தாற் போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் தொடங்கியது. அந்த யுகத்தில் ஒவ்வொரு முன்னேற்றமும் அதே போல் சார்புநிலையில் ஒரு பின்னடைவாகவும் இருக்கிறது. அதில் ஒரு குழுவின் துன்பத்தையும் ஒடுக்கப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது மற்றொரு குழு நல்வாழ்க்கையும் வளர்ச்சியும் அடைகிறது.

ஒரு பக்கத்தில் ஒரு தார மண முறை, மறு பக்கத்தில் பொது மகளிர் முறை இதனுள் விபசாரம் என்ற அதன் மிகத் தீவிரமான வடிவமும் அடங்கும். மற்ற எந்த சமுதாய நிறுவனத்தையும்  போல பொதுமகளிர் முறையும் ஒரு சமூக நிறுவனமே. அது பழைய பாலுறவு சுதந்திரத்தின் தொடர்ச்சியே- ஆண்களுக்குச் சாதகமான தொடர்ச்சி. குறிப்பாக ஆளும் வர்க்கத்தினர் எதார்த்தத்தில் இதை சகித்துக் கொள்வது மட்டுமன்றி ஆர்வத்துடன் கடைப்பிடித்தாலும் அதைப் பேச்சளாவில் கண்டிக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் இந்தக் கண்டனம் விபசாரத்தில் ஈடுபடுகின்ற ஆண்களைத் தாக்கவில்லை, பெண்களைத்தான் தாக்குகிறது. பெண்பால் மீது ஆண்பால் செலுத்தும் சர்வ ஆதிக்கம் சமூகத்தின் அடிப்படையான விதி என்று மீண்டும் பிரகடனம் செய்வதற்காகப் பெண்கள் புறக்கணித்து சமூகத்துக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள்.

எனினும் இதனால் ஒரு தார மண முறைக்குள்ளேயே இரண்டாவது முரண்பாடு வளர்கிறது. பொது மகளிர் முறையின் மூலம் சொகுசான வாழ்க்கை நடத்துகின்ற கணவனுக்குப் பக்கத்திலேயே புறக்க கணிக்கப்பட்ட மனைவியும் நிற்கிறாள்.

நாமறிந்தவற்றுள் ஒருதார மண முறை என்ற ஒரே குடும்ப வடிவத்திலிருந்துதான் நவீன காலக் காதல் வளர்ந்திருக்க முடியும் என்ற போதிலும் இந்தக் காதல் அதற்குள் கணவன், மனைவியின் பரஸ்பரக் காதலாக மட்டுமே அல்லது பெரும்பாலும் கணவன், மனைவியின் காதலாக வளர்ந்தது என்று கூற முடியாது. ஆணின் ஆதிக்கத்தின் கீழுள்ள கண்டிப்பான ஒரு தார மணத்தின் தன்மை முழுவதுமே இதை அனுமதிப்பதில்லை, வரலாற்று ரீதியில் சுறுசுறுப்பான எல்லா வர்க்கங்களிடையிலும், அதாவது எல்லா ஆளும் வர்க்கங்களிடையிலும் திருமணம் என்பது இணைமண முறைக் காலத்திலிருந்து பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, செளகரியத்துக்கான திருமணமாகவே இருந்து வந்துள்ளது.

இன்று, மிகப் பெரும் பாலான சமயங்களில் ஆண் குடும்பத்துக்குச் சம்பாதிப்பவனாக, உணவு அளிப்பவனாக இருக்க வேண்டியிருக்கிறது, குறைந்தபட்சம் உடைமை வர்க்கங்களில் இப்படித்தான். இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கு சிறப்பான சட்ட ரீதியான சலுகைககள் அவசியமில்லை , குடும்பத்தில் அவன் தான் முதலாளி; அவன் மனைவி பாட்டாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள். எனினும் தொழில்துறை உலகில் முதலாளி வர்க்கத்தின் விசேஷமான, சட்ட ரீதியான சலுகைகள் எல்லாம் ஒரு புறம் ஒதுக்கப்பட்டு, இரண்டு வர்க்கங்களின் சட்ட ரீதியான சமநிலை நிறுவப்பட்ட பிறகே பாட்டாளி வர்க்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்ற பொருளாதார ஒடுக்குமுறையின் குறிப்பான தன்மை மிகவும் கூர்மையாக வெளித்தெரிகிறது.

இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையை ஜனநாயகக் குடியரசு ஒழிப்பதில்லை. அதற்கு மாறாக, அதைச் சண்டை போட்டு முடிவு காண்பதற்குத்தான் களம் அமைத்துக் கொடுக்கிறது. நவீனக் குடும்பத்தில் பெண் மீது ஆணுக்குள்ள ஆதிக்கத்தின் அலாதித் தன்மையும் அவர்களிடையில் உண்மையான சமுதாய சமத்துவத்தை நிறுவுவதற்குரிய அவசியமும் வழிமுறையும் அதே போன்றதே. அவ்விருவரும் சட்டத்தின் முன்பாக முழுமையான சமநிலையில் இருக்கும் பொழுதே அவை முழு உருவத்தில் வெளிக்காட்டப்படும். பெண்ணினம் முழுவதையும் சமூக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவது தான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை என்பது அப்பொழுது தான் தெளிவாகும்.

குடும்பம் என்கிற இந்த அத்தியாயத்தின் தொகுப்புரை:-

மனிதகுல வளர்ச்சியின் மூன்று முக்கியமான கட்டங்களுடன் பொதுவாகவும் மொத்தமாகவும் பொருந்துகின்ற மூன்று முக்கியமான மண வடிவங்கள் உள்ளன: 1)காட்டு மிராண்டி நிலை-குழு மணம்; 2)அநாகரிக நிலை-இணை மணம்; 3)நாகரிக நிலை- ஒரு தார மணம், இதற்குத் துணையாகக் கள்ளக் காதல் நாயக முறையும் விபசாரமும். அநாகரிக நிலையின் முதிர்ந்தகட்டத்தில் இணை மணத்துக்கும் ஒரு தார மணத்துக்கும் இடையில் பெண்ணடிமைகள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதும், பலதார மண முறையும் உள்ளன.

இந்தத் தொடரில் குறிக்க வேண்டிய முன்னேற்றம், குழு மணத்திலுள்ள பாலுறவுச் சுதந்திரம் பெண்களிடமிருந்து மேன்மேலும் பறிக்கப்படுகிறதே தவிர, ஆண்களிடமிருந்து பறிக்கப்படவில்லை என்ற பிரத்யேகமான உண்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நமது மொத்த விளக்கமும் எடுத்துக்காட்டியிருக்கிறது. எதார்த்தத்தில் ஆண்கள் விஷயத்தில் குழு மணம் இன்றுவரை இருந்து வருகிறது. சட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் பெண்ணுக்குக் கொடிய விளைவுகளை உண்டாக்கத்தக்க அதே குற்றம் ஆணைப் பொறுத்தமட்டில் கௌரவமானதாகக் கருதப்படுகிறது. அதிகமாகப் போனால் அவனுடைய ஒழுக்கத்துக்கு அது அற்பமான கறை: அதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான்.
நாம் ஒரு சமூகப் புரட்சியை (கம்யூனிசப் புரட்சி) நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதில் (கம்யூனிச சமூகத்தல்), இதுவரை இருந்துள்ள ஒருதார மணத்தின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும், ஒரு தார மணத்தின் பிற்சேர்க்கையான விபசாரத்தின் அடிப்படைகளைப் போல மறைந்து விடுவது நிச்சயமாகும். ஒரு நபரிடம், அதாவது ஒரு ஆணிடம் கணிசமான அளவுக்குச் செல்வம் குவிந்ததிலிருந்துதான், இச்செல்வத்தை மற்ற குழந்தைகளுக்கு அல்லாமல் தன்னுடைய சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்ற விருப்பத்திலிருந்து தான் ஒரு தார பணம் தோன்றியது. இந்த நோக்கம் நிறைவேறுவதற்குப் பெண் ஒரு தார மண முறையில் இருக்க வேண்டும், ஆனால் ஆணுக்கு அது அவசியமல்ல, எனவே பெண்ணுக்குரிய இந்த ஒரு தார மணம் ஆணுடைய பகிரங்கமான அல்லது மறைமுகமான பல தார மணத்துக்குத் தடையாக இருக்கவில்லை, எனினும் வரப்போகின்ற சமூகப் புரட்சி, குறைந்தபட்சம் நிரந்தரமான, மரபுவழிச் செல்வத்தின் பெரும்பகுதியை - உற்பத்திச் சாதனங்களை- பொதுச்சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் வாரிசு முறை பற்றிய இந்தக் கவலைகளை எல்லாம் அதிகமாகக் குறைத்து விடும், பொருளாதாரக் காரணங்களிலிருந்து ஒரு தார மணம் தோன்றியதால் இக் காரணங்கள் மறைகின்ற பொழுது அதுவும் மறைந்து விடுமா?

ஒரு தார மணம் மறைவதற்குப் பதிலாக நடைமுறையில் முழுமையாக மெய்மையாகத் தொடங்கும் என்று பதில் கூறினால் அது தவறாகாது. ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களைப் பொது உடைமையாக மாற்றும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாணி வர்க்கமும் மறைந்து விடுகின்றன; அத்துடன் ஒரு குறிப்பிட்ட- புள்ளிவிவரப்படி கணக்கிடத்தக்க-- எண்ணிக்கையிலுள்ள பெண்கள் பணத்திற்காகத் தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது. விபசாரம் மறைகிறது. ஒருதார மணம் நலிந்து போவதற்கு பதிலாக முடிவில்---ஆணுக்கும் சேர்த்து-எதார்த்தமாகிறது.

திருமணத்தில் முழு சுதந்திரம் என்பது முதலாளித்துவ உற்பத்தியையும் அது படைக்கின்ற சொத்து உறவுகளையும் ஒழிப்பதன் மூலம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் இவ்வளவு பலமான தாக்கத்தைச் செலுத்துகின்ற துணைப் பொருளாதாரக் காரணங்கள் எல்லாவற்றையும் அகற்றிய பிறகுதான் பொதுவாகச் செயல்பட முடியும். அப்பொழுதுதான் பரஸ்பர அன்பைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்காது. ஒருவன் பால் அல்லது ஒருத்தியின் பால் அன்பு காட்டுவது காதலின் இயல்பு. எனினும் இன்று பெண் மட்டுமே அதை முழுமையாகக நடைமுறையில் காட்டுகிறாள். எனவே காதல் திருமணம் அதன் இயல்பிலேயே ஒரு தார மணமாகத்தான் இருக்கிறது. குழு மணத்திலிருந்து ஒரு தார மணத்துக்கு முன்னேற்றமடைந்தது முக்கியமாகப் பெண்களினால் ஏற்பட்டது என்று கருதுவது மிகச் சரியானது.

இணை மணத்திலிருந்து ஒரு தார மணத்துக்கு மாறியது மட்டுமே ஆண்களால் ஏற்பட்டது என்று கொள்ள முடியும். மேலும், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதன் விளைவாகப் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது. திருமணமான ஆண்களின் ஒழுக்கக் கேட்டுக்கு வழி கிடைத்தது. ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாகத் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை----மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் மண முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒரு தார மணத்தைக் கடைப் பிடிப்பதற்குப் பேருதவி செய்யும் என்று முந்திய அனுபவத்தின் அடிப்படையில் கூறலாம்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதைப் பற்றி நாம் ஊகமாகச் சொல்லக் கூடியது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடுதவாக என்ன இருக்கும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள், அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டு தம்முடைய காதலனுக்குத் தம்மைக் கொடுப்பதற்குத் தயங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொது மக்கள் அபிப்பிராயத்தையும் நிலை நாட்டுவார்கள், விஷயம் அத்துடன் முடிந்து விடும்.

No comments:

Post a Comment