“இன்றைய நிலையில் ஆசீவகர்களைப் பற்றிய நேரடிக் குறிப்புச்
சிலப்பதிகாரத்திற்றான் காணப்படுகின்றது. இங்கு ஆசீவகர்கள் தமிழ் நாட்டில் இருந்தமைக்கான
குறிப்பு உண்டேயொழிய அவர்கள் கோட்பாடுகள் விளக்கப்படவில்லை. ஆனால் சிலப்பதிகார காலத்தில்
(கி. பி. 400-கி. பி. 500) வினைக் கோட்பாடு தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தது என்பது
சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட நூற்பொருளிலிருந்து புலனாகின்றது.
அரசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோரேத்தலும்
ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதும்
என்ற அடிகளிலுள்ள நூற்பொருள் மூன்றனுள், மூன்றாவதான ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பது முதிர்ந்த வினை அதற்கான பலனை அளிக்கும் என்பதைச் சுட்டுகின்றது. இங்கு ஊழ் என்ற சொல் நியதி என்ற பொருளிலன்றி, முதிர்ச்சி பெற்ற என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.
கோவலன் முற்பிறப்பிற் செய்த செயல்களினாற் சேர்த்துக் கொண்ட வினையே முதிர்ந்து வந்தபோது இப்பிறப்பிற் பாண்டியனாற் கொலையுறுகின்றான். இதைக் கோவலன் கொலையுண்டு இறந்தது கண்டு சினங்கொண்ட கண்ணகி மதுரையை எரியூட்டிய நேரத்தில் மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் கூறும் கூற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. மதுராபதித் தெய்வம் கண்ணகி யிடம் பின் வருமாறு உரைக்கின்றது.
“யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவற்றைச் சொல்ல வந்தேன். அவற்றை நீ கேட்பாயாக. இந்நகரத்து முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மையுடையவர்களல்ல. இந்நெடுஞ்செழியனும் அத்தன்மையனே; ஆயினும் இது வந்த வரலாற்றைச் சொல்லுவேன். அவற்றை நீ கேட்பாயாக; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தரசனாகிய வசுவென்பவனும் கபிலபுரத்தரசனாகிய குமரனென்பவனும் தம்முட் பகை கொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தார்கள். அப்பொழுது சிங்கபுரத்துக் கடை வீதியில் சென்று இயல்பாகப் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை அந்நகரத்தரசனிடம் தொழில் செய்து கொண்டிருக்கும் பரதனென்பவன் அவன் பகைவனுடைய ஒற்றனென்று பிடித்து, அரசனுக்குக் காட்டிக், கொலை செய்துவிட்டான். அப்பொழுது அச்சங்கமன் மனைவியாகிய நீலியென்பவள் மிகுந்த துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து பின்பு ஒரு மலையின் மேல் ஏறிக் கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன்னுடைய உயிரை விடுவதற்கு நினைத்தவள், 'எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக’ என்று சாபமிட்டு இறந்தாள். அப்பரதன் இக்கோவலனாகப் பிறந்தான்; ஆதலால் நீங்கள் இத்துன்ப மடைந்தீர்கள்! நீ இன்றைக்குப் பதினான்கு தினத்தின் பகல் சென்ற பின்பு உன்னுடைய கணவனைக் கண்டு சேர்வை”
மேற்கூறிய பகுதியில் முற்பிறப்பில் செய்த வினையினாலேயே, கோவலன் இப்பிறப்பில் கொலையுண்டான் என்பது விளக்கப் பட்டுள்ளது. “உம்மை வினை வந்துருத்த காலை” என்ற அடி வினை முதிர்ந்து வந்ததைச் சுட்டுகின்றது. இதுவே சிலப்பதிகாரப் பதிகத்திலும், ‘ஊழ்வினை’25 (முதிர்ந்த வினை) என்ற சொற்றொடரால் உணர்த்தப் பட்டுள்ளது. கோவலனின் இச்சாப வரலாறு, சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியைக் கதைப் பொருளாகக் கொண்ட மணிமேகலையிலும் வஞ்சி மாநகர் புக்க காதையில், கண்ணகி, மாதவி மகள் மணிமேகலைக்குக் கூறியதாக உரைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்ணகி,
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
என்ற கூற்று வாயிலாக முற்செய்த வினை பின்வந்து உருக்காட்டிப் பலனளிக்கும் என்பது எனக்குக் கூறப்பட்டபோதும் நான் வளமிக்க மதுரையை அழித்தேன் என்கிறாள். அதே போல்,
“மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேன்” என்ற அடி வாயிலாகவும் நல்வினைப் பயனால் விண்ணுலகெய்தினாள் என்பதையும் தெரிவிக்கின்றாள். இந்த அடிகளும் முன்னர். சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட பகுதிகளும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்களிலும் வினைக் கொள்கை வலியுறுத்தப்பட்டிருப்பதை எடுத்துணர்த்துகின்றன.
மணிமேகலையில் வினைக் கொள்கையுடன் ஊழ்க் கொள்கையும் விளக்கப்பட்டிருப்பினும் சிலப்பதிகாரத்தில் ஊழ்க் கொள்கை கோட்பாட்டுருவில் வெளிப்படுத்தப்படவில்லை.
முதிர்தல் என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஊழ்' என்ற சொல்லை ஆசீவகர்களின் ஊழ்க் கொள்கையுடன் ஒருமைப்படுத்துதல் ஒவ்வாதது. ஒரு சில தமிழறிஞர்கள் சிலப்பதிகாரத்தில் ஆசீவகக் கொள்கையே எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறினும், மேற்காட்டிய செய்திகள் இக்கருத்து ஒவ்வாதது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
“ஆசீவகர்கள் கர்மத்தை மறுக்கவில்ல”' என்ற கருத்து அச்சமயிகளின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது. ஏனெனில், கர்மம் என்ற வினைக் கோட்பாட்டை மறுத்து, ஊழ் என்ற ஆற்றலுக்கு முதன்மை கொடுப்பதே ஆசீவகர்களின் தலையாய கருத்து. இங்குதான் அவர்கள் ஏனைய வினைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் சமயிகளான சமணர், பௌத்தர், இந்துக்கள் ஆகியோரிலும் பார்க்க வேறுபடுகின்றனர். கர்மா எனப்படும் வினை நுகர்வு - செய்யும் செயல் அடிப்படையில் இன்பம் துன்பம் ஆகியவற்றை மனிதன் துய்ப்பது இவையனைத்தையும் ஆசீவகர்கள் ஏற்றுக்கொள்ளாதபடியினால்தான் அவர்களைக் “காரணமில்லாக் கடவுட் குழாம்” (ahetuvādin) என்றும், “அகிரியைவாதிகள்” (akriyāvādin) என்றும் ஏனையோர் அழைத்தனர். மனிதனின் வீரமோ, ஆற்றலோ, செயலோ அவனுக்கு விளையப்போகும் நிகழ்வுகளை வரையறுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
எனவே, மேற்கூறியவாறு, சிலப்பதிகாரத்தில் வினைக் கொள்கையே அடிப்படையாக விளங்குவதாலும், அங்கு ஊழ் என்ற சொல் ஆசீவகர்கள் கோட்பாடன்றி 'முதிர்ந்த' என்ற பொருளிலேயே கையாளப்படுவதாலும், மேற்காட்டிய தமிழறிஞர்களுடைய கருத்து ஏற்புடைத்தாகாது.”
(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம் – 57-60)
No comments:
Post a Comment