பவுத்தம், சமணம், ஆசீவகம். மூன்றும் துறவறத்தை
முன்னிறுத்துகிறது. மூன்றும் சமகாலத்தவை. ஆசீவகம் வினை கோட்பாட்டுக்கு மாறாக ஊழை
கூறுகிறது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது வினைக் கோட்பாடு. அதாவது
ஒருவன் செய்ததற்கே பலனை அனுபவிக்கிறான். அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக
இருந்தாலும் சரி அது அவனால் உருவானது. ஊழானது அப்படி அல்ல.
ஊழை நியதிக் கோட்பாடு என்பார்கள். விதிப்படி
தான் நடக்கும் என்கிற நியதிக் கோட்பாட்டை தமிழில் ஊழ் என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு
ஏற்படுகிற நன்மையோ தீமையோ அவனால் உருவானது அல்ல, அது அவனுக்கு விதிக்கப்பட்டது
என்பதே ஊழாகும்.
கடவுள் மறுப்புக் கோட்பாடான ஆசீவகம் ஊழை கடவுளை
விட உயர்ந்த இடத்தில் வைக்கிறது. கடவுளை ஏற்பவர்களின் வினைக் கோட்பாட்டை
நிர்வகிப்பவர் கடவுள். ஆசீவகத்தில் இத்தகைய கடவுள் மறுக்கப்பட்டு ஊழானது எவர்
துணையும் இன்றி தானாகவே செயல்படுகிறது. ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்று
சிலப்பதிகாரம் கூறுவதைக் கொண்டு ஊழை அறிந்து கொள்ளலாம். ஊழோடு தற்செயல் (வாய்ப்பு)
சுபாவம் (இயல்பு) ஆகியவற்றையும் இணைத்து ஆசீவகம் பேசுகிறது.
ஏ.எல்.பாசம், ர.விஜயலட்சுமி போன்றோர்கள்
ஆசீவகத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி பேசுகின்றனர்.
இவர்களின் ஆய்வு அருமையாக இருக்கிறது. ஆசீவகத்தை க.நெடுஞ்செழியன் தமிழர் தத்துவம்
என்றே கூறுகிறார்.
முருகன், மற்றும் கொற்றவை போன்ற தாய் தெய்வ
வழிபாடும் தமிழர்களிடம் பழங் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.
முருகனை முன்வைத்து வெறியாடல் போன்றவையும் உள்ள
தமிழகத்தில் ஊழை முனைவைக்கும் ஆசிவகம் எந்த வகையில் தமிழர் தத்துவம் என்று
கூறிடமுடியும். அப்படி தமிழர்கள் தான் படைத்தார்கள் என்றால், சிறப்பாக வாழ்வது
பற்றி அதிகம் பேசுகிற ஆதித் தமிழர்கள் துறவறத்தை முன்னுறுத்துகிற ஆசீவகத்தை ஏன்
தோற்றுவித்தார்கள் இவை அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
மதம் தோன்றுவதற்கு முன்பான் நிலைமைகள்
தமிழகத்தில் இருக்கிறது, ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்த மதம் தோன்றவில்லை. மதம்
தேவைப்படுகிற காலத்தில் புத்தம், சமணம், ஆசீவகம் போன்ற துறவற மதங்கள்
தமிழகத்திற்கு வந்தடைந்தது. பவுத்தம், சமணம், ஆசீவகம் என்கிற மூன்று மதங்களே
தொடக்க கால தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்த மூன்று மதங்களின்
ஆதிக்கத்தைவிட குறைவாகவே வைதீக மதத் தாக்கம் தமிழத்தில் காணப்படுகிறது.பக்தி இலக்கியத்துக்குப் பிறகே சைவ, வைணவ மதங்கள் மேலோங்குகிறது.
பக்தி இலக்கியம் புத்த, சமண, ஆசீவக மதங்களை மறுதலித்தே தன்னை நிறுவ வேண்டி
இருந்தது. தொடக்கத்தில் வைதீகத்தைவிட புத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய மூன்று மதங்களே
மேலோகி இருந்ததைக் காண முடிகிறது. தொடர்ந்து நடத்துகிற ஆய்வுகள் நமக்கு தெளிவை
ஏற்படுத்தும்.
க.நெடுஞ்செழியன்:-
“ஆசீவகத்தின் பிறப்பு - இறப்பு, இன்பம்-துன்பம், ஊதியம் - இழப்பு எனும் வாழ்வியல் உண்மைகளை ஊழின் ஆற்றலோடு இணைத்துக் காட்டியது சிலப்பதிகாரம். ஆசீவகத்தின் அறிவியல் கூறுகளை முற்றாக விலக்கி விட்டு அதன் வாழ்வியல் கூறுகளுக்கு ஒரு காப்பிய வடிவத்தை நல்கியது சிலம்பு. ஊழ்வினையின் ஆற்றலை, இன்னா தம்ம இவ்வுலகம் எனும் துன்பம் நிறைந்த உலக வாழ்வை, அவலச் சுவையோடு விளக்கி, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என மணியாரமாய் விளங்கினாலும், ஆசீவகக் கோட்பாட்டின் வெற்றியாகச் சிலப்பதிகாரத்தைக் காண முடியவில்லை. மாறாக ஆசீவகத்தின் அறிவியல் கூறுகள் புறக்கணிக்கப்பட்டு, ஊழின் ஆற்றல் மிகுவிக்கப்பட்ட நிலையில் பொருள் முதல் கோட்பாட்டிற்குரியதாக இருந்த ஆசீவகத்தைக் கருத்து என முதல் கோட்பாட்டிற்கு உரியதாக மாற்றி விட்டதோ சிலப்பதிகாரம் என எண்ணத் தோன்றுகிறது.”
(ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்)
ஆசீவகம் பேசுகிற ஊழை இன்றைய நிலையில் இருந்து பார்க்கும்
போது கடும் விமர்சனத்துக்கு உரியதாக தோன்றும், ஆனால் அது அன்றைய நிலையில் இயல்புக்கு
(சுபாவத்துக்கு) இணையாகவே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
*********************************
(எனது முகநூலில் பதிவிட்டதை கீழே பதிவிடுகிறேன்)
முனைவர் ர.விஜயலட்சுமி எழுதிய “தமிழகத்தில் ஆசீவகர்கள்” என்ற நூலை இரண்டு முறை படித்துவிட்டேன். தன்னுடைய முடிவுகளை ஆதாரத்தோடு நிறுவுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவரின் முடிவை மறுத்திட முடியாத அளவுக்கு ஆதாரத்தை அள்ளித் தந்துள்ளார். அனைத்தும் பொருத்தமான ஆதாரமாக இருக்கிறது.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் நூலை ஒரு முறை படித்துள்ளன். இன்று இரண்டாம் முறையாக ஆழ்ந்து படிக்கப் போகிறேன். நான் எழுதும் “இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I I” நூலுக்கான தாயரிப்பே இத்தகைய படிப்பு. நான் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதாரத்தைத் தான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம்
தொகுதி – I I
பொருளடக்கம்
1) மதங்களும் தத்துவங்களும்
2) கடவுள் மதம் ஆகியவற்றின் தோற்றத்துக்கு முன்பான நிலமைகள் (மாயவித்தை, தாந்தரீகம்)
3) உலகாயதம்
4) சாங்கியம்
5) யோகம்
6) வைசேஷிகம்
7) நியாயம்
8, மீமாம்சை (பூர்வ மீமாம்சை)
9) வேதாந்தம்- உத்திர மீமாம்சை-வைதீகத் தத்துவம்
10) துவைதம் (மத்துவர் வைணவம்)
11) விசிட்டாத்வைதம் (ராமானுஜர் வைணவம்)
12) அத்வைதம் (ஆதிசங்கரர் வைதீகம்)
13) ஆசீவகம்
14) பவுத்தம்
15) சமணம்
16) சைவசித்தாந்தம்
17) இந்தியாவில் பிற மதங்கள்
(வீர சைவம், காஷ்மீரிய சைவம், சீக்கியம்)
முதல் தொகுதி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்தது, இரண்டாம் தொகுதி அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளிவந்துவிடும்.
இரண்டாம் தொகுதிக்கான ஐந்து தரிசனங்களின் முதல் வரைவு முடிந்துவிட்டது, அடுத்த ஆசீவகத்துக்குத் தாவி விட்டேன். பத்து நாட்களுக்குள் ஆசீவகத்தை எழுதி முடித்துவிடுவேன்.
இரண்டாம் தொகுதி பொதுப்பட எழுதினாலும் ஆசீவகத்தைப் பொருத்தளவில் தமிழகத்தை குறிப்பாக சுட்ட வேண்டிவருகிறது. மூன்றால் தொகுதியில் தமிழகத்தின் தத்துவ நிலைமைகளைப் பற்றி எழுத இருக்கிறேன். தமிழகத்தில் ஆசீவகம், தமிழகத்தில் சமணம், தமிழகத்தில் பவுத்தம், தமிழகத்தில் வைதீகம் + சைவம், வைணவம் இவைகள் மூன்றாம் தொகுதியில் இடம் பெறும். வீண் விவாதத்தைப் பற்றி கவலைப்படாமல் எனது முடிவுகளை தைரியமாக எடுத்து வைப்பேன்.
No comments:
Post a Comment