மிஹயீல்
அலெக்சாந்தவிச் பக்கூனின் பத்திரிகையாளர், அராஜகவாதத்தின் சித்தாந்தவாதி, ரஷ்யப்
புரட்சியாளர், நரோத்னிக்காகவும் இருந்தார். அகிலத்தில்
பக்கூனினுடைய கருத்துக்களும், நடவடிக்கைகளும் அகிலத்தின் சட்டவிதிக்கு எதிராகவும், மார்க்சியத்துக்கு
விரோதமாகவும் மாறிவந்தது.
அவர்
தீவிர இடதுபோக்கை கடைப்பிடித்தார். அரசின் வர்க்கத் தன்மையைப் பற்றிய
மார்க்சியக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளாமல், அனைத்து
சமூக பிரச்சினைகளுக்கும் அரசையே காரணமாக்கினார். பொதுமக்களின்
தன்னிச்சையான எழுச்சியே அரசை அகற்றுவதற்கு போதுமானதாக்க் கருதினார். தொழிலாளர்களின்
அரசியல் நடவடிக்கையை எதிர்த்தார்.
தனிநபர்
எழுச்சி, ரகசிய சதித்திட்டங்கள் மூலம் முதலாளித்துவ
அரசமைப்பை தூக்கி எறிவது போன்ற அராஜகவாதமாக இவரது சித்தாந்தம் காணப்பட்டது. புறநிலையிலான
காரணங்களின் அடிப்படையில் செயல்தந்திரத்தை (Tactics)
வகுத்துக்கொள்ளாமல், சாகசவாதத்திலும் - பாட்டாளி
வாக்கத்தின் முன்னணிப் படையான கட்சியை மறுதலித்து,
குறுங்குழுவாதத்திலும் - சமூக
வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையற்று, தனிநபரின்
முழுமையான வளாச்சியைப் பற்றிய கற்பனையான கருத்துகளிலும் பக்கூனின் சித்தாந்தம்
நிலைபெற்றிருந்தது.
பக்கூனின், இத்தாலியில்
1865-1867 ஆண்டுகளில் தங்கியிருந்த போது அவரிடம்
அராஜகக் கருத்துக்கள் உருவாகியது. அவர் ரஷ்யாவின் பின்தங்கியப் பொருளாதார
நிலைமையினைப் பிரதிபலித்தார். இந்த அராஜகவாதம் ஒடுக்கப்பட்ட விவசாயி
மக்களின் விரக்தியை வெளிப்படுத்தும் குட்டி முதலாளித்துவ சோஷலிசமாகும்.
மார்க்சும்
எங்கெல்சும் இந்தப் போக்கைக் கடுமையாக எதிர்த்தனர்.
பக்கூனினுடைய
செயல்திட்டம் மூன்று கருத்துக்களைக் கொண்ட
"கோட்பாடாக" உள்ளதை மார்க்ஸ் கூறுகிறார்.
1) சமூகப் புரட்சியின் முதல் தேவை பரம்பரைச்
சொத்தை ஒழிப்பதே.
2) வெவ்வேறு வர்க்கங்களின் சமத்துவம்.
3) தொழிலாளி வர்க்கத்தினர் அரசியலில் ஈடுபடக்
கூடாது.
(போ.லஃபார்க்கக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்திலிருந்து- 09-04-1870)
இந்த
மூன்று கோட்பாட்டையும் மார்க்சும், எங்கெல்சும் வரலாற்றியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டம் என்கிற மார்க்சிய
விஞ்ஞானத்தின் வழியில் விமர்சித்தார்கள்.
"சமூகப் புரட்சியின் முதல் தேவை பரம்பரைச்
சொத்தை ஒழிப்பதே"
இது போன்று ஒரே
நாளில் சமூகப் புரட்சியை நிறைவேற்றும் சக்தி பக்கூனிடம் இருந்தால், நில
உடைமையையும், மூலதனத்தையும் ஒழித்துவிடலாம். அப்படிப்பட்ட
சக்தி இல்லை என்றால் (அப்படிப்பட்ட சக்தி இருக்க முடியும் என்று
எதிர்பார்ப்பது முட்டாள் தனமே என்று மார்க்ஸ் கூறுகிறார்.) பரம்பரைச் சொத்தை ஒழித்திடும் முழக்கம்
கருத்தூன்றிய நடவடிக்கையாக இருக்காது. நாட்டின் சட்ட இயலின் தோற்றுவாய்க்கு
நாட்டின் பொருளாதாரமே அடிப்படை என்பதை அறியாமல்,
நடைமுறையிலுள்ள
சட்ட இயலே நாட்டினுடைய பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படை என்று வரலாற்றியல்
பொருள்முதல்வாதத்துக்கு எதிராக காலாவதியான கருத்துமுதல்வாதத்தை நம்புகிறார் பக்கூனின்.
தொழிலாளி
வர்க்கம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது, இன்றைக்கு இருக்கும் அரசை
அங்கீகரிப்பதாகும் என்கிற பக்கூனின் கூற்றை எங்கெல்ஸ் மறுக்கிறார். பக்கூனின்
கோட்பாடு ஏறக்குறைய கம்யூனிசம் மற்றும் புரூதோனிசத்தின் கலவையாகும். இந்த
இரண்டையும் இணைப்பதிலிருந்து பக்கூனுக்கு அரசியல் பொருளாதாரம் முற்றிலும் தெரியாது
என்பதைக் காட்டிவிடுகிறது. பரம்பரை சொத்துரிமை எவ்வளவு அர்த்தமற்றது என்பதை
மார்க்சியமும் அறிந்திருக்கிறது. ஆனால் அதை ஒழித்துவிட்டால் எல்லாத்
தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம் என்கிற அராஜகவாதத்தை மார்க்சியம்
மறுக்கிறது. (பர்லேத்தாவிலிருந்த க.கயேரோவுக்கு எங்கெல்ஸ் எழுதிய
கடிதத்திலிருந்து - ஜூலை 1 -
1872)
"தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்
நடிவடிக்கையைப் பற்றி" என்கிற குறிப்புகளில் எங்கெல்ஸ், அரசியலில்
முற்றிலும் ஒதுங்கியிருப்பது என்பது முடியாது, அப்படி சொல்வதும் உண்மையில் அரசியலே என்று
கூறினார். தொழிலாளர் கட்சியானது பெரும்பான்மையான
நாடுகளில் ஏற்கெனவே ஒர் அரசியல் கட்சியாக செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்:-
"அரசியல் விஷயங்களில் முற்றிலும் ஒதுங்கி இருப்பதென்பது முடியாது, எனவே
ஒதுங்கி இருக்கும் பத்திரிகைகள் அனைத்துமே உண்மையில் அரசியலில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றன. இது எப்படிச் செய்யப்பட வேண்டும், எந்தக்
கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒன்றே பிரச்சினை. அதைத்
தவிர, நாம் தலையிடாதிருப்பதும் முடியாது.
தொழிலாளர் கட்சியானது பெரும்பான்மையான
நாடுகளில் ஏற்கெனவே ஓர் அரசியல் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. நாம்
தலையிடாமையைப் போதித்து இதை அழிக்கக் கூடாது. யதார்த்தமான வாழ்க்கையின் அனுபவம், அரசியல்
அல்லது சமூகக் காரணங்களுக்காக இன்றைக்கு இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது
திணிக்கும் அரசியல் ஒடுக்குமுறை- அவர்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்- தொழிலாளர்கள் அரசியலில் ஈடுபடும்படி
நிர்பந்திக்கின்றன. அவர்களிடம் ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது
முதலாளித்துவவர்க்க அரசியலின் கரங்களுக்குள் அவர்களை விரட்டுவதைப் போன்றதாகும்"
(லண்டன் மாநாட்டுக் கூட்டத்தின் போது
நிகழ்த்திய சொற்பொழிவின் குறிப்புகள். செப்டெம்பர் 21, 1971)
ஆக, "தொழிலாளி வர்க்கத்தினர் அரசியலில் ஈடுபடக்கூடாது" என்பது முதலாளித்துவவர்க்க அரசியலின் கரங்களுக்குள் தொழிலாளர்களை
விரட்டுவதைப் போன்றது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அகிலத்தின்
இந்த லண்டன் மாநாட்டில் தான், பக்கூனிஸ்டுகளை எதிர்க்கும் போராட்டத்தில் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் அவசியம் பற்றியும், ஒவ்வொரு நாட்டிலும் தனித்தன்மையான தொழிலாளிவர்க்கக் கட்சி நிறுவப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மார்க்சும் எங்கெல்சும் தீர்மானங்களை நிறைவேற்றினர்.
பாட்டாளி
வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் மூலமே வர்க்கங்களை ஒழிக்க முடியும். அரசியலில்
தலையிட வேண்டாம் என்று கூறுகிற
அராஜவாதிகள் தங்களைப் புரட்சியாளர்கள் என்றும், ஏன் எல்லாவற்றுக்கும் மேலான
புரட்சியாளர்கள் என்றும் கூடச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால்
புரட்சி என்பது தலைமையான அரசியல் நடவடிக்கை என்பது,
அவர்களுக்குத்
தெரியவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் எப்படிப்பட்டதாக
இருக்க வேண்டும் என்பதையும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார். நமது
அரசியல் என்பது தொழிலாளர்களின் அரசியல். அதனால் தொழிலாளர்களின் கட்சி
முதலாளித்துவவர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது. சொந்த
குறிக்கோளையும் அதற்கான கொள்கைகளையும் கொண்ட முற்றிலும் தனித்தன்மையான கட்சியாக
இருக்க வேண்டும்.
கூட்டம்
நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், பத்திரிகை
நடத்தும் சுதந்திரம் போன்ற அரசியல் சுதந்திரங்களே,
பாட்டாளி
வர்க்கத்தின் ஆயுதங்கள். அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இன்றைக்கு
இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கி இருப்பதாகக் கூறுகின்றனர் அராஜவாதிகள். ஆனால், அதனை
எதிர்ப்பதற்குரிய சாதனங்களையும் நமக்குக் கொடுக்கும் பொழுது அதனை பயன்படுத்த
தெரியாதவர்களே, இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதாகக்
கூறுகின்றனர். "தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம்
இந்த வர்க்கத்துக்கு அரசியல் அதிகாரத்தை
வென்றெடுப்பதை தன்னுடைய இறுதிக் குறிக்கோளாகக்
கொண்டிருக்கிறது,." (பி.போல்ட்டேக்கு கா.மார்க்ஸ் எழுதிய கடிதத்திலிருந்து- 23-11-1871) என்கிறார் மார்க்ஸ்.
மேலும்
மார்க்ஸ் இதில் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் ஒரு
நாளில் வேலை செய்கின்ற நேரத்தைக் குறைப்பதற்காகத் தனிப்பட்ட முதலாளிகள் மீது வேலை
நிறுத்தங்கள் போன்றவற்றின் மூலம் நிர்ப்பந்தம் செய்கிற
முயற்சி முற்றிலும் பொருளாதாரப் போராட்டமே. இதன் மறுபக்கத்தில், எட்டு
மணி நேர வேலை நாள் போன்ற சட்டத்தைக் கொண்டு வருமாறு
நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துக்கின்ற போராட்டம் அரசியல் போராட்டமாகும். இப்படி
சட்டத்தைக் கொண்டுவருகிற நாடாளுமன்றத்தை அராஜவாதிகள் முற்றிலும்
புறக்கணிக்கின்றனர்.
எங்கெல்ஸ் கூறுகிறார்:- "பக்கூனின்வாத்தின் "அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பது" என்னும் நிலைப்பாடு
இங்குதான் இட்டுச் செல்கிறது. அமைதியான காலங்களில்,
எவ்வளவு சிறப்பான
முறையில் பாடுபட்டாலும் நாடாளுமன்றத்துக்கு ஒரு சில பிரதிநிதிகளை மட்டுமே
அனுப்பிவைக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
பெறுவதற்குச் சிறிது கூட சந்தர்ப்பமில்லை என்பது தொழிலாளர்களுக்கு முன்பே
தெரிந்திருக்கும் பொழுது, தேர்தல் நடக்கும் பொழுது வீட்டில்
உட்கார்ந்திருப்பது மற்றும் தாங்கள் வாழ்கின்ற அரசை,
தங்களை
ஒடுக்குகின்ற அரசைத் தாக்காமல் எங்குமே இல்லாத-அதன் காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள
முடியாத-அரசைத் தாக்குவது ஒரு மாபெரும்
புரட்சிகரமான நடவடிக்கை என்று சில சமயங்களில் தொழிலாளர்களை நம்ப வைக்க முடியும். புரட்சிகரமான
முறையில் நடந்து கொள்வதற்கு-குறிப்பாக,
எளிதில் மனமுடைந்து
போகக் கூடியவர்களுக்கு- இதுமிக அற்புதமான வழியாகும்."
(பக்கூனின்வாதிகளின் வேலை 1871-1875)
இதற்கு
மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தங்களை ஒடுக்குகின்ற அரசை எதிர்க்காமல், தேர்தலில் பங்கெடுக்காமல், எங்குமே இல்லாத அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்பது. மனமுடைந்து
போகக் கூடியவருக்குத்தான் அற்புதமான வழியாகும். மேலும் சம்பவங்கள்
பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த உடனே ஒதுங்கியிருப்பதென்பது
வெளிப்படையான முட்டாள்தனமாகி விடுகிறது, தொழிலாளி வர்க்கத்தின் சுறுசுறுப்பான
அரசியல் தலையீடு தவிர்க்க முடியாத அவசியமாகி
விடுகிறது என்கிறார் எங்கெல்ஸ். இல்லாத அரசுடன் போராடுகிற அராஜவாதிகளின் போக்கைப் பற்றி இங்கே எங்கெல்ஸ் கூறுகிறார்.
லெனின், நாடாளுமன்றம்
போன்ற சட்டபூர்வ போராட்டத்தை அற்பப் பணியாக
அராஜகவாதிகள் கருதி
நிராகரிக்கின்றனர். "மகத்தான நாட்கள்" வரும் என்று கைக்கட்டி காத்திருப்பதும்,
மாபெரும்
நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளை திரட்டும் திறனற்று இருப்பதும் அராஜகவாதிகளின்
போர்த்தந்திரத்தின் நடைமுறை விளைவு என்கிறார்.
""பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய போர்த்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும்.
இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வைப் படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்படுவதற்குத் - தடையாகி விடுகின்றனர்"
(ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும்
கருத்து வேறுபாடுகள்)
இவ்வாறு, மார்க்சும்
எங்கெல்சும் பக்கூனினுடைய கருத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாட்டாளி
வாக்கத்துக்கு அராஜகப்போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். அராஜவாதப்போக்கை எதிர்ப்பதோடு மட்டுமின்றி பாட்டாளிவர்க்க
புரட்சிகரப் போராட்டத்திற்கான செயல்தந்திரத்தையும் (Tactics) அவர்கள்
வகுத்தளித்தனர்.
No comments:
Post a Comment