Monday 14 September 2020

தத்துவம் - ஓர் அறிமுகம்

 

(கருத்துமுதல்வாதமும் - பொருள்முதல்வாதமும்)

 

(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்  “சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.) 


இந்த உலகம் எப்படித் தோன்றியது, மக்களிடையே ஏன் இன்பங்கள் - துன்பங்கள் காணப்படுகின்றன, - என்பது போன்ற கேள்விகள், எழும் போதே தத்துவ சிந்தனை தொடங்கிவிட்டது என்று கூறலாம். 

இந்த சிந்தனையை விரிவு படுத்தினால், தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 

தத்துவம் என்பதை ஒரு பெரிய விஷயமாக, சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கத் தேவையில்லை. தத்துவ  சிந்தனை அனைவருக்கும் பொதுவானது - அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது. தத்துவம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல. 

தத்துவத்தை மக்கள் மொழியிலும், மக்கள் சிந்தனை வழியிலும் தொடரும் போது, தத்துவம் எளிதாக புரிந்துத் கொள்ள முடியும். 

தத்துவத்தை ரகசியமாகவும், உள்பொருள் கொண்டதாகவும். எப்படி வைத்திருந்தாலும், அதனை உடைத்து வெளியில் கொண்டு வந்துவிட்டால், அனைவருக்கும்  அது புரிந்துவிடும் 

தத்துவக் கலைச்சொற்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதனை புரிந்து கொண்டால், தத்துவத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். கலைச்சொற்களை, புரிந்து கொள்ளாத வரையில், தத்துவம் புரிந்து கொள்வது சற்று சிரமம் தான். கலைச் சொற்களைப் புரிந்து கொள்ள, புரிந்து கொள்ள, தத்துவத்தை புரிந்து கொள்ளவது எளிதாகும். 

எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத்துறையின் கலைச்சொற்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

தத்துவம் பல போக்குகளைக் கொண்டது, முடிவுகள் பலவாக இருப்பதால், அதன் போக்குகள் பலவாக இருக்கிறது. அதனால் தான், தத்துவங்களை school of thought என்று கூறப்படுகிறது. அதாவது “சிந்தனைப் பள்ளி”. 

இந்த அனைத்து தத்துவப் போக்குகளையும், இருபெரும் தத்துவப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். எவ்வளவு தத்துவப் போக்குகள் இருந்தாலும், அதனை இருபெரும் பிரிவுக்குள் தான் அடங்கும். 

ஒன்று கருத்துமுதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம். 

தத்துவத்தின் அடிப்படைக் கேள்விக்கு - பதில் அளிக்கும் போது தத்துவம் இரண்டு பிரிவாகப் பிரிகிறது. 

அது என்ன கேள்வி? 

இந்த உலகம் படைக்கப்பட்டதா? அல்லது, என்றும் இருந்து வருகிறதா? 

இந்த தத்துவ அடிப்படைக் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தத்துவம் இரண்டு பெரும் பிரிவாகப் பிரிகிறது. ஒன்று கருத்துமுதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம். 

பதிலைப் பார்ப்போம். 

உலகம் படைக்கப்பட்டது, பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று சொல்கிற அனைத்தும், எதோ ஒரு சக்தியினால் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக கருதுகிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்டதாகக் கருதுகிற, அனைத்து தத்துவப் போக்குகளும் கருத்துமுதல்வாதம் என்கிற பிரிவைச் சேர்ந்தது. 

உலகம் படைக்கப்படவில்லை, என்று உள்ளது, அது மாறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிற தத்துவங்கள் அனைத்தும் பொருள்முதல்வாதம் என்கிற பிரிவைச் சேர்ந்தது. 

இல்லாததில் இருந்து ஒன்றும் உருவாகாது, ஒன்றை முழுமையாக இல்லாமல் செய்திட முடியாது, இது தான் பொருள்முதல்வாதம்.    

ஒரு பொருள், அழிகிறது, மறைகிறது என்றால், அது மற்றொரு பொருளாக மாறுகிறது, அல்லது பிரிகிறது என்று தான் பொருள். 

இந்தியத் தத்துவங்களில் எவை கருத்துமுதல்வாதம், எவை பொருள்முதல்வாதம் என்று பார்க்கலாம். 

வைதீக தத்துவமான அத்வைதம், வைணவ மதத் தத்துவமான விசிட்டாத்வைதம், தமிழகத்தில் உள்ள சைவ சித்தாந்தம் போன்றவை கருத்துமுதல்வாதப் பிரிவைச் சேர்ந்தது. 

உலகைப் படைக்கிற சக்திக்கு ஆங்கிலத்தில் absolute என்று பெயர். 

இந்த சக்தியை அத்வைதமும், வைணவ தத்துவமான விசிட்டாத்வைதமும் பிரம்மம் என்று சொல்கிறது. 

பிரம்மனும் - பிரம்மமும் ஒன்றல்ல, பிரம்மன் முக்கடவுளில் ஒருவர், சிவன், விஷ்ணு, பிரம்மன் என்கிற முன்று கடவுளில் ஒருவர். இவருக்கும் பிரம்மத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

பிரம்மனுக்கு ஆக்கும் தொழிலும், விஷ்ணுக்கு காக்கும் தொழிலும், சிவனுக்கு அழிக்கும் தொழிலும் செய்கின்றனர். ஆனால் அனைத்தையும் படைத்தது பிரம்மம். பிரம்மத்தில் இருந்து தான் அனைத்தும் தோன்றுகிறது. 

சைவ சித்தாந்தம், இந்த படைக்கும் சக்தியை “பதி” என்ற பெயரால், அழைக்கின்றது. பதி என்ற சொல்லின் நேர் பொருள் “தலைவர்”.  பிரஜாபதி என்றால் பிரஜைகளுக்குத் தலைவர், அதாவது மக்களுக்குத் தலைவர். இங்கே தலைவர் என்று பொருள் கொண்டாலும், அனைத்தையும் படைக்கும் தலைமை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

வைதீகத்தில் பிரம்மம் என்று செல்லப்படுவதற்கு இணையாக “பதி”யைப் புரிந்து கொள்ள வேண்டும். 

கருத்துமுதல்வாதம் தம்முள் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம், புறநிலைக் கருத்துமுதல்வாதம். 

கருத்துமுதல்வாதம் என்றால் என்னவென்று, முதலில் பார்த்தோம், இந்த உலகை படைக்கும் சக்தி ஒன்று இருக்கிறது என்று கூறுவது கருத்துமுதல்வாதம். 

அந்தச் சக்தி - உலகிற்கு அப்பால் இருக்கிறது என்று கூறுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். அதாவது இந்த பௌதீக உலகத்திற்கு அப்பால், அந்த சக்தி உள்ளது. சக்தி புறத்தில் உள்ளது என்று கூறுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். 

அந்த சக்தி அகத்தில் இருக்கிறது, அகத்தில் என்ன நினைக்கப்படுகிறதோ அதுவே புறத்தில் காணப்படுகிறது என்று கூற தத்துவம், அகநிலைக் கருத்துமுதல்வாதம். புறத்தில் இருப்பது அனைத்தும், மனதின் வெளிப்பாடு என்று இந்த தத்துவம் கூறுகிறது. 

ஆதிசங்கரர் கூறுகிற அத்வைதத்தை, அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும். 

வைணவம், சைவம் கூறுகிற தத்துவம் புறநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும். 

இந்தியாவில் காணப்படும், உலகாயதம், சார்வாகம், சாங்கியம் போன்ற தத்துவங்களை பொருள்முதல்வாதத் தத்துவம் என்று கூறலாம். 

கடவுளை மறுத்தல், உலகப் படைப்பை மறுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் சமணத்தையும் பொருள்முதல்வாததக் கூறுகளைக் கொண்ட தத்துவப் போக்காகக் கூறலாம். அதே போல ஆதி புத்தமும் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொண்டது. 

இந்தியாவை ஒரு ஆன்மீக பூமி என்று கூறுவது, பொதுவான வழக்கம். ஆனால் உண்மையில் இந்தியத் தத்துவங்களில் ஆன்மீகத்திற்கு எதிரான பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்ட தத்துவங்களே அதிகம் காணப்படுகிறது. 

இந்த உண்மையை நல்ல புரிந்து கொள்ள வேண்டும். 

தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறப்படுகிற பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்ட தத்துவங்களே பண்டைய இந்தியாவில் அதிகம். அதனை பின்பற்றுபவர்கள் குறைவாக இருக்கலாம், ஆனால் தத்துவப் போக்கில் பொருள்முதல்வாதமே அதிகம் காணப்படுகிறது. 

மார்க்சியம் பேசுகிற, பொருள்முதல்வாதம் என்பது வெளி நாட்டில் இருந்து இறக்கப்பட்டதல்ல, நம் நாட்டிலும் தொடக்கநிலையான பொருள்முதல்வாதத் தத்துவம் இருந்துள்ளது. 

மார்க்சிய பொருள்முதல்வாதத்தை, வளர்ச்சி அடைந்த, நவீன பொருள்முதல்வாதம் என்று கூறலாம். இந்த நவீன பொருள்முதல்வாதமான மார்க்சிய தத்துவத்தை, இந்த நாட்டில் காணப்படும் பொருள்முதல்வாத தத்துவத்தின் தொடர்ச்சியாக, வளர்ச்சியாப் புரிந்து கொள்ள முடியும். 

தத்துவங்களை கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று ஏன் இரண்டாகப் பிரிக்க வேண்டும். 

இயற்கையைப் பற்றிய கருத்திலும், சமூகம் பற்றிய கருத்திலும், இந்த இரு தத்துவப் பிரிவுகளும், அடிப்படையிலேயே, வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. 

அனைவரும் ஒரு “குறிக்கோளை” அமைத்துக் கொண்டு தான் செயல்படுகிறோம். அந்தக் குறிக்கோள் எப்படி உருவாக்கிக் கொள்கிறோம், என்பதில் இரண்டு தத்துவப் போக்குகளும் வேறுபடுகின்றன. 

சிந்தனையில் இருந்து குறிக்கோள் தோன்றுவதாகக் கருதுவது கருத்துமுதல்வாதம். அதாவது ஒரு ஞானியின் மூளையில் குறிக்கோள்கள் தோன்றுகிறது. தோன்றிய அந்த கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது என்பதாக கருத்துமுதல்வாதம் கருதுகிறது. 

சிறந்த மனிதர்களின் மூளையில் இருந்து “சிந்தனை” தோன்றுகிறது என்பதே கருத்துமுதல்வாதம். 

பொருள்முதல்வாதமும் சிந்தனை மூளையில் இருந்து தோன்றுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் மூளையில் அந்தக் கருத்து எவ்வாறு தோன்றுகிறது என்பதையும் சேர்த்து, ஆராய்ந்து கூறுகிறது பொருள்முதல்வாதம். 

கருத்துக்கள் தோன்றுவதற்கு மூளை மட்டும் காரணமல்ல, அன்றைய சமூகப் பொருளாதார நிலைமைகளே, மூளையில் கருத்துக்காளாகப் பிரிதிபலிக்கிறது. 

இது ஒரு முக்கியமான வேறுபாடாகும். 

ஒரு ஞானியின்  சிந்தனையில் தோன்றியபடி, இன்றைய சமூகம் செயல்படுகிறது என்று கூறினால், இந்த சமூகத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான மாற்றத்தை, இந்த ஞானி அல்லது மற்றொரு ஞானியிடம் இருந்து பெற வேண்டும். 

ஆனால் பொருள்முதல்வாதம் சமூகத்தின் தோற்றத்தையும், அதன் இன்றைய இருப்பையும், நாளைய மாற்றத்தையும், எந்த சிறந்த மனிதனின் மூளையில் காணாமல், சமூக வளர்ச்சியிலும், அந்த சமூகம் கையாள்கிற உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியலும் காண்கிறது. 

எந்த சமூகம் எந்தக் கருவிகளை கொண்டுள்ளதோ, அந்த கருவிகளைக் கொண்டு தான் அன்றைய உற்பத்தி நடைபெறும். அத்தகைய உற்பத்தி உறவுகளின் போது தான், அந்தப் பொருளாதார உறவுகளின் முரண்களில் இருந்து தான் கருத்துக்கள் தோன்றுகிறது. 

இதனை சுருக்கமாக மார்க்சியம் “வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை”. 

இதனை முதலில். கேட்பவர்களுக்கு, எதோ புரியாத சூத்திரம் போல் இருக்கலாம். ஆனால் புரிந்து கொண்ட பிறகு, மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். 

வாழ்நிலை என்பது என்ன? என்பதை முதலில் பார்ப்போம். 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதாரங்களை திரட்டுவதற்காக உழைக்கிறார். அதாவது தான் வாழ்வதற்கும்,  தமது குடும்பம் பிழைப்பதற்கும் உழைக்கிறார். 

அப்படி உழைக்கும் போது ஏற்படுகிற உறவுகளில், பொருளாதார உறவுகளில் இருந்துதான் சிந்தனைகள் தோன்றுகிறது. இந்த உற்பத்தி உறவுகளில் இருந்து வருகிற தரவுகளைக் கொண்டு, மூளை கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது. 

மூளை தானே எதையும் சுயமாகப் படைத்துக் கொள்ளவில்லை, சமூகத்தில் இருக்கின்ற நிலைமைகளை கணக்கிட்டு கருத்துக்களை தோற்றுவிக்கிறது, கருத்து அதாவது, சிந்தனை உற்பத்தி உறவுகளில் இருந்து தான் தோன்றுகிறது. இந்த உற்பத்தி உறவுகளையே சமூக வாழ்நிலை என்று கூறப்படுகிறது. 

ஒரு, தனி மனித, கருத்தாக இருந்தாலும் சரி, ஒரு சமூகக் கருத்தாக இருந்தாலும் சரி, அது அன்றைய உற்பத்தி உறவுகளில் இருந்துதான் பெற்றது.

அதனால், இந்த சமூகத்தில் காணப்படும் பிரச்சினைக்கான காரணத்தை இந்த சமூகத்தில் தான், பொருள்முதல்வாதம் காண்கிறது. ஆனால் கருத்துமுதல்வாதம் இந்த சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, போன ஜென்மத்தில் காரணத்தைத் தேடுகிறது.  பிரச்சினை எங்கே தோன்றியதோ, அந்த இடத்தில் தீர்வை காணாமல், வெளியே சென்று தேடுகிறது கருத்துமுதல்வாதம். 

ஒருவன் இந்த சமூகத்தில் நிறைந்த பணத்துடனும், செல்வத்துடனும், சந்தோஷமாக வாழ்கிறான் என்றால், அவன் போன ஜென்மத்தில் புன்னியம் செய்திருக்கிறான். 

நாள் முழுதும் உழைத்தும், ஏழைகளாக இருப்பதற்கும், அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத, நடுத்தர வர்க்கமாக இருப்பதற்கும் காரணம், போன ஜென்மத்தில், செய்தப் பாவம் என்று கருத்துமுதல்வாதம் கூறுகிறது.     

ஆனால் பொருள்முதல்வாதம் இந்த எழை, பணக்காரன் என்கிற வேறுபாடு சமூகத்தில் சொத்துடைமையினால், இரண்டு வர்க்கமாகப் பிரித்தினால் உருவானது என்கிறது. 

இதை விரிவாக “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்கிற தலைப்பில் பிறகு அறிந்து கொள்ளலாம். 

இன்றைக்கு நாம் பார்ப்பது அறிமுகமே. 

மேலே கூறப்பட்டதை மீண்டும் பார்ப்போம். 

“வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை”. 

இன்றைக்கு இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இதற்கு மாறாக கருத்துமுதல்வாதம், சிந்தனையில் இருந்து தான் வாழ்நிலை, அதாவது மூளை சிந்திப்பதில் இருந்து தான், இந்த சமூக நிலைமைகள் தோன்றுகிறது என்று கருதுகிறது. 

இது போல், கருதுகின்ற போக்குக்கு. மாறாக பொருள்முதல்வாதம் சமூகத்தின் கருத்துகள், சமூக பொருளாதார நிலைமைகளில் இருந்துதான் உருவாகிறது என்பதை நிறுபிக்கிறது. 

உலகம் படைக்கப்பட்டதா? இல்லை, என்றும் உள்ளதா? என்ற தத்துவக் கேள்வியைப் பற்றி இதுவரைப் பார்த்தோம். அதே போல் இன்னொரு கேள்வியும் தத்துவத்தில் இருக்கிறது. 

இது தத்துவத்தின் இரண்டாவது அடிப்படைக் கேள்வியாகும்.     

இந்த உலகை நம்மால் அறிய முடியுமா? அறிய முடியாதா? 

அறிய முடியும் என்று சொன்னால், இந்த சமூகப் பிரச்சினைகளுக்கான காரணத்தை அறிய முடியும் என்றாகிறது. இதற்கான தீர்வை இந்த சமூகத்தின் போக்கிலேயே காண்கிறது. அதாவது பிரச்சினைக்கான தீர்வை சமூகத்திலேயே காண முடியும் என்கிறது. 

அறிய முடியாது என்று சொன்னால், இந்த சமூகப் பிரச்சினைகளுக்கான காரணத்தையும் அறிய முடியாது என்றாகிறது. அதனால் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் அறிய முடியாது என்றாகிறது. 

இந்த உலகை நம்மால் அறிய முடியுமா? அறிய முடியாதா? 

இந்தக் கேள்விக்கு, கருத்துமுதல்வாதப் போக்கில் உள்ள சில தத்துவங்கள் முடியாது என்றே பதில் அளிக்கிறது. 

பொருள்முதல்வாதம் - முடியும் என்கிறது. இந்த உலகை நம்மால் அறிய முடியும். 

அதாவது இந்த உலகத்தின் உண்மை நிலைமைகளை நம்மால், உணர முடியாது என்பது கருத்துமுதல்வாதம். இந்த உலகத்தின் உண்மை நிலைமைகளை அறிய முடியும் என்பது பொருள்முதல்வாதம். 

அறிய முடியாது என்று கூறுகிற வாதத்தை அறிவொண்ணாவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

பொருள்முதல்வாதம் என்று கூறப்படுகிற தத்துவம்,  தம்முள் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

1) இயக்கவியல் பொருள்முதல்வாதம்

 

2) வரலாற்றியல் பொருள்முதல்வாதம் 

இதனை தனித்தனி வாகுப்பாக பார்க்க வேண்டும். இருந்தாலும் இன்று சுருக்கமாக பார்ப்போம். 

இயற்கையை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம். 

வரலாறு, சமூகம் பற்றி, ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

இன்று இந்த இரு பிரிவுகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.    

இயற்கையின் இருப்பையும், அதன் போக்கையும் ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம். 

சமூகத்தின் தோற்றம், இருப்பு, மாற்றம், வர்க்கத்தின் தோற்றம், இருப்பு, மறைவு, அரசின் தோற்றம், இருப்பு, மறைவு ஆகியவைகளைப் பற்றி ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

இயற்கையையும், சமூகத்தையும் மார்க்சியம் இயக்கவியல் பார்வையில் அணுகுகிறது. 

இயக்கவியலையும் அதன் வகையினங்களையும் ஒரு தனி வகுப்பாக எடுக்க வேண்டும். 

இந்த அறிமுக வகுப்பில், இயக்கவியல் பொருள்முதல்வாதம், எதைப்  பற்றி எல்லாம் பேசுகிறது என்பதை மட்டும் பார்ப்போம். 

பருப்பொருள், இதனை ஆங்கிலத்தில், Matter என்று அழைக்கப்படுகிறது, பருப்பொருளும் இயக்கமும், விசும்பும் காலமும் ஆங்கிலத்தில் இதனை Space and Time என்று அழைக்கப்படுகிறது, உணர்வுநிலை, அறிவுத்தோற்றவியல், உண்மை இவைகளை இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. 

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் எதை ஆராய்கிறது என்று பார்ப்போம். 

உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு, சமூகம், வர்க்கம், அரசு, சமூகத்தில் தனிநபரின் பாத்திரம், சமூக மாற்றம் ஆகியவைகளைப் பற்றி வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. 

இந்த வார்த்தைகள் முதலில் கேட்கும் போது, நம்மை மிரள வைக்கலாம், திகைக்க வைக்கலாம், இதனை ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும் போது, படிப்படியாக அனைத்தையும் புரிந்து கொள்ளலாம். கவலைப்பட வேண்டாம், கண்டிப்பாக புரியும்.  

தத்துவப் புரிதலை, வகுப்புகளோடு நிறுத்திக் கொள்ளலாமல், சிறுசிறு நூல்களையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். காதில் கேட்டது, நூல்களில் படிக்கும் போது கண்டிப்பாக புரியத் தொடங்கும். 

ஒரு விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டு இந்தப் பேச்சை முடித்துக் கொள்கிறேன். தத்துவத்தில் இரு பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். 

ஒன்று கருத்துமுதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம். 

கருத்துமுதல்வாதம் ஏன் ஆளும் வர்க்கத்திற்கு உரியது, பொருள்முதல்வாதம் ஏன் தொழிலாளி வர்க்கத்திறகு உரியது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

தத்துவத்திற்கு என்று ஒரு நோக்கம் இருக்கிறது, அதனை வலியுறுத்துவற்கே அவை பாடுபடுகிறது. 

கருத்துமுதல்வாதம் சமூக சிக்கல்களுக்கான, காரணத்தை சமூகத்தில் காணாது, போன ஜென்மம் - போன்று சமூகத்திற்கு வெளியே தேடுகிறது என்று முன்பே பார்த்தோம். 

பொருள்முதல்வாதமோ சமூக சிக்கல்களுக்கான காரணத்தை சமூகத்திற்கு உள்ளேயே காண்கிறது. சமூக மாற்றத்தையும், சமூகப் பிரச்சினைக்கான தீர்வை, சமூக வளர்ச்சியில் காண்கிறது என்பதை முன்பே பார்த்தோம். 

இப்போ கூடுதலா என்ன பார்க்கப் போகிறோம் என்றால், தத்துவத்தின் சார்புத் தன்மை. ஒரு குறிப்பிட்ட தத்துவம் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது, யாருக்கு எதிராக செயல்படுகிறது என்று பார்த்தால் தத்துவத்தின் சார்பு தெரியும். 

இன்றைய சமூகத்தை கருத்துமுதல்வாதம் தக்க வைப்பதற்கே போராடுகிறது. அதாவது இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வை சொல்லாமல், அதனை விளக்க மட்டுமே செய்கிறது. 

பொருள்முதல்வாதம், சமூகப் பிரச்சினைகளுக்கான காரணத்தை அறிந்து, அந்தக் காரணத்தை அழிப்பதற்கான, மறைவதற்கான வழிமுறைகளைக் கூறி, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு துணை நிற்கிறது. 

பொருள்முதல்வாதம் சமூக மாற்றத்தைக் கோருகிறது. 

கருத்துமுதல்வாதம் இன்றைய சமூகத்தை தக்க வைக்கப் போராடுகிறது. 

இந்த சமூகத்தைத் தக்கவைப்பது, ஆளும் வர்க்கத்திற்கு நன்மைப் பயக்குகிறது. இந்த சமூகத்தை மாற்றுவதில், தொழிலாளி வர்க்கத்திற்கு நன்மை இருக்கிறது. 

இதுதான் தத்துவத்தின் வர்க்க சார்பு. 

இந்த இரண்டு தத்துவத்திற்கும் உள்ள வர்க்க சார்பை விரிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இரு தத்துவங்களையும் விரிவாக அறிய வேண்டும். இன்றைய அறிமுகம் விரிவாகப் புரிந்தலுக்கு துணைபுரியும். 

இன்றைக்கு நாம் தத்துவம் பற்றி என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம். 

தத்துவம் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஒன்று கருத்துமுதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம். 

இந்த கருத்துமுதல்வாதமும் தம்முள் இரண்டு பிரிவாக இருக்கிறது, ஒன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம், மற்றொன்று புறநிலைக் கருத்துமுதல்வாதம். 

மார்க்சியப் பொருள்முதல்வாதத் தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

இன்றைக்கு சுருக்கமாப் பேசிய தத்துவத்தை விரிவாக, தொடர்ந்து பேசுவதற்கு, வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, இந்த உரையை முடித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment