Tuesday 20 June 2023

இந்திய தத்துவங்கள் அறிமுகம்

("மார்க்சியச் சிந்தனை மையம்" நடத்தும் இணையம்வழிச் சொற்பொழிவில் (19-06-2023) நிகழ்த்தியது)

 

முகநூலில் வீடியோ காண:

யூடியூப்பில்  காண
https://www.youtube.com/watch?v=MnBnBUR8U4w

https://www.facebook.com/100018542332482/videos/1212049022790420

 

மார்க்சிய சிந்தனை மையம் எனக்கு கொடுத்த தலைப்பு “இந்தியத் தத்துவங்கள்”. பன்மையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது மிகவும் சரியான ஒன்றாகும். ஏன் என்றால் இந்தியத் தத்துவங்கள் பரந்துபட்டது. அதை சில தத்துவங்களுக்குள் அடக்கிவிட முடியாது.

இன்றைய இந்தியா என்பது கிழக்கில் இருந்து மேற்காகவும் தெற்கில் இருந்து வடக்காகவும் விரிந்து பரந்து கிடைக்கிறது. 28 மாநிலங்களையும் 8 யூனியன் பகுதிகளையும் கொண்டதுதான் இந்தியா. பிரபலமான தத்துவங்களை மட்டும் கூறிவிட்டு அதை இந்திய தத்துவங்கள் என்று சுருக்கிக் கொள்ள முடியாது.

அனைத்துப் பகுதிகளில் பேசப்படும் தத்துவங்களை உள்ளடக்கியதுதான் இந்தியத் தத்துவங்கள். இன்று அனைத்தையும் பார்த்துவிட முடியாது. சுருக்கமான இந்தியத் தத்துவங்களின் பட்டியலையும் அதில் சில தத்துவங்களையும் இன்று பார்ப்போம்

 இந்தியாவில் தத்துவம் பேச வேண்டும் என்றால் ஒன்றை கட்டாயம் சேர்த்தே பேச வேண்டி இருக்கிறது. அதுதான் மதம். தத்துவம் பேசுகிற இடத்தில் மதம் ஏன் இடம் பெற வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.

 இந்தியாவைத் தவிர்த்து தத்துவம் என்று சொன்னால் நமக்கு சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் நினைவுக்கு வருவர்கள். மதம் என்று சொன்னால்  நினைவுக்கு வருவது ஏசுநாதர், கர்த்தர், நபிகள், அல்லா.

இந்தியாவில் இருந்து சென்ற பவுத்தம் வெளிநாடுகளில் இன்று பரவலாக காணப்படுகிறது. அது தொடக்கத்தில் தத்துவப் போக்கு உடையதாகதான் இருந்தது. பிறகு அதனிடத்திலும் மதம் சார்ந்த வழிபாட்டு முறைகள் நுழைந்துவிட்டது. தற்போது வெளிநாட்டில் பவுத்தம் செழுப்பாக இருந்தாலும் அதில் இந்தியப் போக்கான மதமும் தத்துவமும் கலந்ததாகவே காணப்படுகிறது.

ஆம், இந்தியாவில் தத்துவமும் மதமும் இணைந்தே காணப்படுகிறது. இணைந்து காணப்பட்டாலும் விளக்குவதில் தனித்தப் போக்கு உடையதாக இருக்கிறது. அத்வைதம் என்றாலும் சனாதனம் அல்லது வைதீக மதம் என்றாலும் அதற்கு தலைமை ஆச்சாரியார் ஆதி சங்கரர். அதே போல வைணவ மதத்துக்கும் விசிட்டாத்வைதத் தத்துவத்துக்கும் தலைவர் ராமானூர். மற்றொரு வைணவமான மதத்துக்கும் தத்துவமான துவைதத்துக்கும் தலைவர் மத்துவர்.

தமிழகத்து சைவத்தை எடுத்துக் கொண்டால் சைவ மதத்துக்கும் அதன் தத்துவமான சைவசித்தாந்தத்துக்கும் மெய்கண்டாரே தலைவர் ஆவார். துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம், சைவம் ஆகியவற்குக்கு நவீனத் தலைவர்களே இவர்கள், இவர்களுக்கு முன்பே இந்த தத்துவமும் மதமும் இருந்திருக்கிறது. அதை நவீனப்படுத்தியவர்கள் இவர்கள்.

 ஆக, ஒன்று நன்றாகத் தெரிந்துவிட்டது, இந்தியாவில் மதமும் தத்துவமும் இணைந்தும் பிணைந்தும் காணப்படுகிறது. இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை மறந்துவிடுக்கூடாது.

 இந்தியத் தத்துவத்தின் அறிமுகம் என்று சொன்னால் பொதுவாக இரண்டு தொகுப்பை குறிப்பிடுவார்கள். ஒன்று வைதீகத் தத்துவங்கள் மற்றொன்று அவைதீகத் தத்துவங்கள்.

 முதலில் அவைதீகத்தைப் பார்ப்போம். 1) உலகாயதம், 2) சமணம், 3) பவுத்தம் ஆகிய மூன்றும் அவைதீகத் தத்துவம் என்று அழைக்கிறார்கள்.

 அடுத்து வைதீகத் தத்துவங்கள் என்பதின் பட்டியலை பார்ப்போம். இதனை ஐந்து தரிசனங்கள் அல்லது ஆறு தரிசனங்கள் என்று கூறுவர்.

 1) சாங்கியம், 2) யோகம், 3) வைசேசிகம், 4) நியாயம், 5) மீமாம்சம் இவைகள் ஐந்தும் வைதீக தரினங்கள் என்று கூறுவர். இதில் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவைகளை அடிப்படையாகக் கொண்ட வேதாந்தம் இடம் பெறவில்லை. அதாவது வைதீகத் தத்துவம் இடம் பெறவில்லை. இறுதியில் இருக்கிற மீமாம்சத்தை அதாவது ஜைமினியின் மீமாம்சத்தை பூர்வ மீமாம்சம் என்றும் வேதாந்தம் தன்னை உத்திர மீமாம்சை என்றும் கூறிக் கொண்டது. அதாவது மீமாம்சத்தை இரண்டு பெயர்களாகப் பிரித்தது. அவ்வாறு பிரித்து தரிசனத்தை ஆறாக வகுத்துக் கொண்டது வைதீகம்.

 வேதாந்தத்தைப் பொறுத்தளவில் மீமாம்சமும் வேதாந்தமும் ஒன்று. ஆனால் இதை மீமாம்சை ஏற்றுக் கொள்ளாது.

 வைதீகம் அவைதீகம் என்று பிரித்தது வைதீகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் வைதீகமான வேதாந்தம், இதில் ஆறாது தரிதனமாக ஒட்டிக் கொண்டுள்ளது. ஒட்டிக் கொண்ட வைதீகம் இந்தியத் தத்துவங்களை வைதீகம் அவைதீகம் என்று பிரித்தது எப்படி சரியானதாக இருக்க முடியும். கண்டிப்பாக சரியானதாக இருக்க முடியாது. உபநிடங்களின் விளக்கமான பிரம்ம சூத்திரத்தின் அடிப்படையிலேயே துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்கிற வேதாதாந்தத் தத்துவங்கள் தோன்றியது.

 ஆதிசங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்துவரின் துவைதம் ஆகிய மூன்றையும்தான் வேதாந்தம் என்று கூறப்படுகிறது. இந்த வேதாந்தத்தையே வைதீகம் என்றும் கூறப்படுகிறது

 வைதீகம் என்ற சொல்லை இந்த இடத்தில் என்ன பொருளில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம். வேதத்தை ஏற்றுக் கொண்டது வைதீகம். வேதத்தை ஏற்றுக் கொள்ளாதது அவைதீகம்.

 மூன்று வேதாந்தங்களுக்கும் பிரம்ம சூத்திரமே அடிப்படை என்று பார்த்தோம். இபோது ஒரு பெரிய பிரச்சினை எழுகிறது. மேலே கொடுக்கப்பட்ட வைதீகப் பட்டியலில் சாங்கியமும் வைசேசிகமும் இடம் பெற்றுள்ளது ஆனால் வைதீக தத்துவத்தின் அடிப்படையான பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம் ஆகியவை மறுக்கப்பட்டுள்ளது. அதுவும் எங்கே வைத்து மறுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

 வேதத்தை எதிர்க்கின்ற சமணம், பவுத்தம் ஆகியவற்றை மறுக்கின்ற இரண்டாம் அத்தியாத்தில் வைத்து மறுக்கப்பட்டுள்ளது. ஆதாவது பட்டியலில் அவைதீகம் என்று கூறப்பட்ட சமணம் பவுத்தம் ஆகியவற்றை மறுக்குகின்ற இடத்தில், வைதீகம் என்று கூறப்பட்ட சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம் ஆகியவை மறுக்கப்பட்டுள்ளது.

 ஆக ஒன்று நன்றாகத் தெரிகிறது இந்தியத் தத்துவங்களை வைதீகம் அவைதீகம் என்று பிரிப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படி என்றால் என்ன வழிமுறையை கையாள்வது. இன்று வெளிநாட்டில் கையாளும் முறையான கருத்துமுதல்வாதம் - பொருள்முதல்வாதம் (Idealism - Materialism) என்கிற பிரிவையே இந்தியாவில் தற்போது சிலர் கையாள்கின்றனர். இது பெரும் வழக்காக இல்லை என்றாலும் இதுவே சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டால் அதனடிப்படையில் இந்தியத் தத்துவங்களை பிரித்து புரிந்து கொள்வது எளிதாகும்.

 இதற்கு நாம் எங்கெல்சிடமே செல்ல வேண்டும். எங்கெல்ஸ் “லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்கிற நூலில் இதைப் பற்றி சிறப்பாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். அதைப் பார்ப்போம்.

 எது முதன்மையானது, ஆத்மா முதன்மையானதா? இயற்கையா முதன்மையானதா?

 ஆத்மாவா? இயற்கையா? ( Spirit or Nature ) இந்தக் கேள்வியை இன்னும் எளிமையாகக் கேட்க முடியும். கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

 தத்துவமும் மதமும் எவ்வளவு விசயங்கள் பேசினாலும் அடிப்படைக் கேள்வி என்பது இதுதான்.

 கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

 இதற்கு பதிலளிக்கும் போது தத்துவங்கள் இரண்டு மாபெரும் பிரிவாக பிரிகிறது. அந்தப் பிரிவுக்கான பதில்களைப் பார்ப்போம்.

 உலகத்தை கடவுள் படைத்தார் என்று கூறுபவர்கள் கருத்துமுதல்வாதத் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பதில்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆத்மாதான் அதாவது கடவுள்தான் முதன்மையானது என்று கூறுபவர்கள் எதோ ஒரு வகையில் உலகம் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் பதிலளிக்கின்றனர்.

 இந்த உலகின் படைக்கும் சக்தியை, மதம் உருவம் உள்ள கடவுளாகப் பார்க்கிறது இஸ்லாம் மதம் மட்டும் அல்லாவை உருவாகப் பார்ப்பதில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். கிறித்துவத்தின் சில பிரிவுகளில் உருவம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து மதங்களும் கடவுளை உருவத்துடனேயே பார்க்கிறது.

 தத்துவம் இந்த படைக்கும் சக்தியை, உருவம் அற்ற சக்தியாக பார்க்கிறது. அதற்கு வேதாந்தத் தத்துவம் பிரம்மம் என்று பெயர் கூறுகிறது. தமிழகத்தில் உள்ள சைவசித்தாந்தம் பதி என்கிற சக்தியை கூறுகிறது.

 உலகை ஆத்மா படைக்கவில்லை. இயற்கைதான் முதன்மையானது என்று பதில் கூறுபவர்கள் பொருள்முதல்வாதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உலகில் மாற்றம் மட்டுமே நிகழ்கிறது. அதனால் உலகம் நிலையானது, நிரந்தரமானது. இங்கே உலகம் என்பது பிரபஞ்சத்தையே குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல படைப்புப் பற்றி பேசுகிற இடத்தில் எல்லாம் உலகம் என்றால் அது பிரபஞ்சமே.

 கருத்துமுதல்வாதம் பொருளமுதல்வாதம் என்று இரண்டாகப் பிரித்தாலும் கருத்துமுதல்வாதத்தில் பல போக்குகள் இருக்கின்றது. அதே போல பொருள்முதல்வாதத்திலும் பல போக்குகள் இருக்கின்றது.

 ஆகத் தத்துவத்தை கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று பிரிப்பதே சரியானதாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

 இந்த வகையில் இந்தியத் தத்துவங்களை பிரித்துப் பார்த்தால் முதன்மையானத் தத்துவங்கள் பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்டதாகவே இருக்கின்றன. முதலில் கூறப்பட்ட அறு தரினங்கள் மற்றும் அவைதீகத் தத்துவமான மூன்றையும் ஒரே பட்டியல் இட்டுப் பார்ப்போம்.

 1) உலகாயதம், 2) சமணம், 3) பவுத்தம், 4) சாங்கியம், 5) யோகம், 6) வைசேசிகம், 7) நியாயம், 8) மீமாம்சம் 9) வேதாந்தம்.

 இந்த ஒன்பது தத்துவங்களில் எட்டு பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது. வேதாந்தம் மட்டுமே கருத்துமுதல்வாதத் தத்துவமாக இருக்கிறது. வேதத்தை முன்வைத்து பேசுகிற ஜைமினியின் மீமாம்சை கடவுளை கடுமையாக மறுக்கிறது. வேதாந்தம் கடவுளையும் பிரம்மத்தையும் ஏற்கிறது.

 வைதீகர்கள் பட்டியலிட்ட பட்டியலை மட்டுமே இதுவரை பார்த்தோம். இதற்கு அடுத்து உடனடியாகப் பேச வேண்டியது சைவம், இதனுடன் வைணவத்தையும் சேர்த்து கூறவேண்டும். இவை இரண்டும் ஒரே போக்குடையதாக இல்லை பல போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது.

 இங்கே ஒன்றை சேர்த்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அது என்ன வென்றால், பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட காலத்தில் உள்ள பாசுபத சைவ தத்துவத்தையும் பாஞ்சராத்ர தத்துவம் என்ற அன்றைய வைணவத்தையும் பிரம்ம சூத்திரம் மறுத்துள்ளது. மறுப்புக்கு என்றே எழுதப்பட்ட இரண்டாம் அத்தியாத்தில் தான் சைவமும் வைணமும்கூட வேதாந்தத்தால் அதாவது வைதீகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

 தமிழ் இலக்கியத்தில் மத-தத்தவக் கருத்துக்களை தனித்துக் கூறிய முதல் நூல் என்றால் அது மணிமேகலை காப்பியமே ஆகும். அதில், “சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை” என்கிற அத்தியாயத்தில் காண்படும் பட்டியலைப் பார்தாலும் வைதீகமும் சைவமும் வைணவமும் வெவ்வேறாக தனித்துக் காணப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. மணிமேகலையில் காண்படும் பட்டியலைப் பார்ப்போம்

  1) வைதீகவாதி, 2) சைவவாதி 3) பிரம்மவாதி, 4) வைணவவாதி, 5) வேதவாதி, 6) ஆசீவகவாதி 7) நிகண்டவாதி, 8) சாங்கியவாதி, 9) வைசேடிகவாதி, 10) பூதவாதி. இங்கே மணிமேகலை ஏற்றுக் கொண்ட பவுத்தம் பட்டியலில் சுட்டிக்காட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆக,மணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 11 தத்துவங்கள் பேசப்பட்டுள்ளது.

      இதில் பூதவாதி என்பது உலகாயதப் பிரிவைச் சேர்ந்தது, நிகண்டவாதி என்பது சமணம். இந்தப் பட்டியலில் வைதீகக் கருத்துக்கள் முன்று பிரிவாகப் பேசப்படுகிறது  1) வைதீகவாதி, 2) பிரம்மவாதி, 3) வேதவாதி. இதற்கான விளக்கங்கள் இதில் விரிவாக இல்லை இருந்தாலும் இந்தப் பட்டியல் மிகவும் முக்கியமானதாகும்.

       எந்த வகையில் பார்த்தாலும் இந்தியத் தத்துவங்களை வைதீகம் அவைதீகம் என்று பிரிப்பது சரியானதாகப்படவில்லை. இதைக் கடந்து, வெளிவந்தால்தான் இந்திய தத்துவங்களின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

 இன்றைய நிலையில் சீக்கியம், மதமாகவும் தத்துவக் கருத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. வைணவம் பெரும் பிரிவிலேயே இரண்டு காணப்படுகிறது. ராமானுஜரின் வைணவம் மத்துவரின் வைணவம் இதை முன்பே பார்த்தோம். தமிழகத்தில் சைவசித்தாந்தம், கர்நாடகாவில் வீர சைவம், காஷ்மிரில் காஷ்மிரிய சைவம் போன்ற பெரும் பிரிவுகள் சைவத்தில் இருக்கிறது. இங்கே மட்டுமல்லாது இந்தியாவில் பல இடங்களில் வைணவம் காணப்படகிறது. அதே போல சைவமும் காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சைவ மதம் நிறைய சைவப் பிரிவுகளை சுட்டிக்காட்டி உள்ளது.

 தமிழக சைவசித்தாந்தம் பிற சைவ தத்துவங்களை தமக்கு நெருக்க மானதை வைத்து அகப்புறச் சமயங்கள் என்றும் அகச்சமயங்கள் என்றும் பிரித்து ஒரு பட்டியலையே தருகிறது. அவைகளைப் பார்ப்போம். 1) பாசுபதம், 2) மாவிரதம், 3) காளாமுகம், 4) வாமம், 5) வைரவம், 6) ஐக்கியவாதம், 7) பாடாணவாத சைவம், 8) பேதவாத சைவம், 9) சிவசமவாத சைவம், 9) சிவசங்கிராந்தவாத சைவம், 10) ஈசுவர அவிகாரவாத சைவம், 11) சிவாத்துவித சைவம். சைவசித்தாத்தையும் சேர்த்துக் கொண்டால் 12 சைவ தத்துவங்கள் தமிழகத்தில் பேசப்பட்டுள்ளது.

 வைணவமும் பல போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது வட இந்தியாவில் வைணவமே அதிகம் காணப்படுகிறது, அதன் பட்டியல் எனக்குக் கிடைக்கவில்லை. முயற்சித்தால் கிடைக்கும். தென்னகத்தில் சைவமே அதிகம் காணப்படுகிறது.

 அசீவகம் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியாவின் தத்துவமாகும். பல நேரங்களில் இதை சமணத்துடன் இணைது பேசி மறந்துவிடுகின்றனர். ஆனால் இரண்டுக்கும், அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. ஆசீவகம் தனித்து பேச வேண்டிய ஒரு தத்துவமாகும்.

 பாஸ்கரின் பேதாபேதம், யாதவ பிரகாசரின் பேதாபேதம், ஸ்ரீகண்டரின் சைவ-விசிட்டாத்வைதம், வல்லபரின் சுத்தாத்வைதம், நிம்பார்க்கரின் துவைதாத்வைதம், சைதன்யரின் அசிந்திய பேதாபேதம் இவையும் இந்தியத் தத்துவங்களில் அடங்குபவை. இவைகள் பிரம்மசூத்திரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

 தத்துவத்துக்கு நேரடி தொடர்பில்லாவிட்டாலும் மதத்துக்குத் தொடர்புடைய நிறைய தெய்வங்கள் வழிபாட்டுக்கு உரியதாக இந்தியாவில் நிறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பிரதேசங்களுக்கு தனித்த தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கிறது, அனைத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

 மதக் கருத்துகளில் காணப்படும் தத்துவக் கூறுகள் என்ற அடிப்படையில் கணபதியை முழுமுதல்கடவுளாகக் கொள்ளும் காணாபத்தியம், குரமக் கடவுளை வழிபடும் கௌமாரம், சக்தியை வழிபடும் சாக்தேயம், சூரியனை வழிபடும் சௌமாரம் ஆகியவையும் இதில் அடக்கலாம். ஆனால் இதில் தத்துவக் கருத்துக்கள் நேரடியாக இருக்காது. முழுமுதல்கடவுள் என்கிற நோக்கில் பிரம்மத்துடன் இவைகளை இணைத்துப் பேசப்படுகிறது.

 கபீர் 1440 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் வட இந்தியாவின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர். இவரது கருத்துக்களைப் பின்பற்றியவர்கள் கபீர் பந்த் என்ற பெயரில் இயங்கினர்.

 இன்றைய நிலையில் இந்திய மதங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ள கிறித்துவம் இஸ்லாம் ஆகியவையும் இந்திய மத-தத்துவங்களில் சேர்க்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் ஏகக் கடவுள் என்று கூறப்படுகிற தவ்ஹீத் என்பதை விளக்கும் போது, இணைவைக்காத வகையில் இதன் சிறப்பைக் கூறும் பகுதிகள் பிரம்ம விளக்கத்துக்கு இணையாக இருக்கிறது.

 இராசாராம் மோகன் ராய் 1828ஆம் ஆண்டில் பிரம்ம சமாஜம் என்கிற அமைப்பை நிறுவினார். அதே போல சுவாமி தயானந்த சரஸ்வதி 1875ஆம் ஆண்டில் ஆரிய சமாஜம் அமைத்தார். இவை இரண்டும் பழைய சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்யப்படுவதற்கு தோன்றியதாகும்.

 அண்மைய நூற்றாண்டுகளின் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், இராமலிங்க அடிகள், ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றோர்களையும் சேர்த்துப் பேச வேண்டும்.

 உலகாயதம் என்பதும் ஒரு தனித்த தத்துவம் கிடையாது, இதே போக்குடையவர்கள் சார்வாகம், பூதவாதம் என்பது போன்ற பலப் பெயர்களில் காணப்படுகின்றனர். சமணர்கள் அதாவது ஜெயின் தத்துவத்தில் சுவேதம்பரர், திகம்பரர், ஸ்தானகவாசி என்கிற மூன்று பெரும் பிரிவு இருக்கிறது. பவுத்தத்தில் பல பிரிவுகள் இருக்கிறது. அதில் இருபெரும் பிரிவு தேராவாதம், மகாயானம். தேராவாதம் என்கிற பரிவை ஈனயானம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

 தேராவாத்தில் சௌத்ராந்தியகம், வைகாஷிகம் என்ற இரு பிரிவும், மகாயானத்தில் யோகாசாரம், மாத்யமிகம் என்ற இரு பிரிவும் இருக்கிறது. இவைகள் முதன்மையானப் பிரிவுகள் இன்னும் பல பிரிவுகள் பவுத்தத்தில் இருக்கின்றது.

 ஒரு விஷயத்திற்கு இங்கே பதிலளிதே ஆக வேண்டும். அது என்ன கேள்வி என்றால் தமிழர்களுக்கு தனித்த மதம் தத்துவம் இல்லையா? இந்தக் கேள்வி இன்று அதிகமாகக் கேட்கப்படுகிறது. இங்கே ஆதாரத்துடன் விரிவான பதில் தர நேரமில்லை என்றாலும் சுருக்கமான பதிலைப் பார்க்கலாம். தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மதமோ தனித்த தத்துவமோ இல்லை. ஆனால் மதம் தோன்றுவதற்கான முன்தயாரிப்புகள் நிறைய இங்கே இருந்தன. அவைகள் மதமாக தத்துவமாக உருபெறுவதற்கு முன்பே, தயார் நிலையில் வட இந்தியாவில் இருந்து மதங்களும் தத்துவங்களும் தமிழத்துக்குள் நுழைந்தன. அதனால் தனக்கான மதத்தையும் தத்துவத்தையும் வந்தவற்றில் இருந்து விரிவாக்கிக் கொண்டுவிட்டது. அதனால் தமிழகத்தில் தனித்த போக்கு ஏற்படாமல் போய்விட்டது.

 சங்க இலக்கியத்தில் கொற்றவை வழிபாடு முருகன் வழிபாடு போன்றவை இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. தாய் தெய்வ வழிபாடு நடைபெற்றதற்கான தொல்லியல் சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் அவைகள் ஒரு தனி மதம் தோன்றுவதற்கான அடித்தளத்தில்தான் இருந்தது. முன்பே கூறியது போல தனித்த மதம் உருவாவதற்குள் இங்கே வட இந்தியாவில் இருந்த மதங்கள் நுழைந்தது. அப்படி நுழைந்ததில் முதலிண்டு இடத்தைப் பிடிப்பது சமணமும் பவுத்தமும்தான். வைதீகம் மூன்றாவது இடமாகவும் குறைவாகப் பரவியதாகவும் காணப்படுகிறது.

 எப்படி இந்தியாவில் தனித்த முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்பே ஏகாபத்தியம் நுழைந்து உற்பத்தியை முதலாளித்துவத்தை நோக்கி இழுத்து வந்ததோ அதே போல தமிழகத்தில் மதமும் தத்துவமும் தோன்றுவதற்கு முன்பாக, தயார் வடிவில் மதங்களும் தத்துவங்களும் நுழைந்தன. அதன் போக்கிலேயே இங்கே மதம் தத்துவம் வளர்ச்சி அடைந்தன்.

 சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட முருகன் வேறு, வட இந்தியாவில் பேசப்பட்ட ஸ்கந்தன் வேறு. ஆனால் இவை இரண்டும் இணைக்கப்பட்டன. அந்த இணைப்பு முழுமையாக நிறைவடையாமல் இருக்கிறது. முருகனுக்கு உரிய வழிபாடான வெறியாடுதல், காவடி எடுத்தல் போன்றவை வைதீகக் கடவுளான ஸ்கந்தனுக்குக் கிடையாது. அதே போல தீமித்தல் போன்ற முறைகள் வைதீகத்தில் கிடையாது, இது தமிழகத்திற்கே உரிய தனித்தப் போக்காகும்.

       அனைத்துப் பெரிய மதங்களும் பல்வேறு வழிபாட்டு முறைகளை உள் வாங்கியே உருவாகியிருக்கிறது. கிறித்துவமும் இஸ்லாமும் அப்படியே. ஆனால் அங்கே அது முழுமையாக நிறைவேறி இருக்கிறது. இங்கே முழுமை அடையாமல் தனித்துத் தொங்குகிறது. முருகன் ஸ்கந்தன் இணைப்புப் பற்றி நா.வானமாமலை எழுதியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முருகன் ஸ்ந்தன் இணைப்பைப் போல மற்ற இணைப்புக்கான அதாரத்தைத் திரட்டுவது சிரமம். ஆனால் முருகன் ஸ்கந்தன் இணைப்பைப் பற்றி ஆதாரத்துடன் நா.வானமாமலை எழுதியிருகிறார்.

       ஆக இந்தியத் தத்துவங்கள் என்பது ஒரு பெரும் கடல், இன்று நாம் அனைத்து கடலிலும் குளித்து அதில் உள்ள முத்தையோ சொத்தையையே பிரித்து எடுத்துக் காட்ட முடியாது.

       மதமும் தத்துவமும் எந்த சூழ்நிலையில் சமூகத்தில் தோன்றியது என்பதைப் பார்த்துவிட்டு, இந்தியத் தத்துவங்களில் சிலவற்றை இன்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

       மதத்தின் தோற்றம் பற்றி விளக்கியதில் மார்க்சியம் போல எதுவும் விஞ்ஞான வழியில் விளக்கவில்லை. அதனால் அதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

       பழங்குடி சமூகத்தினுடைய சிதைவின் போதுதான் மதம் தோன்றியது. பழங்குடி சமூகத்தில் வேலைபிரிவினை ஏற்படாத தொடக்க காலத்தில் மாயவித்தை (Magic) என்கிற முறை இருந்தது. மாயவித்தை என்பது மதமோ வழிபாட்டு முறையோ கிடையாது.

 பழங்குடிகள் வேட்டையாடி தங்களது உணவுத் தேவையை நிறைவு செய்தனர். அனைத்து நாட்களிலும் வேட்டையில் உணவு கிடைத்துவிடும் என்று கூறிட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் பழங்குடிகள், எந்த சக்தியிடமும் உணவுக்காக வேண்டிக் கொள்ளாமல், அந்த விலங்கை பிடிப்பதுபோல நடனமாடுவார்கள். இதையே மாயவித்தை என்று கூறப்படுகிறது.

இந்த மாயவித்தை என்பது அன்றைய உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி அடையாத நிலையின் வெளிப்பாடோ ஆகும். மேலும் இப்படி நடனமாடுவதின் போது வேட்டையாடுவதின் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்வார்கள், நடனத்தின் மூலம் சோர்வை போக்கிக் கொள்வார்கள். இந்த மாயவித்தையை பழங்குடி கூட்டத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து செய்தனர்.

      பழங்குடிகள் சிறுகசிறுக கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர், அதன் வளர்ச்சியினால் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. உழைப்புப் பிரிவினை காரணமாக முன்பு விளைவிக்கப்பட்டதைவிட சற்று கூடுதலாகக் கிடைத்து. இந்த உபரி முன்பு போல் அனைவரும் பங்கிட்டுக் கொள்ளாது சிலர் மட்டும் தமதாக்கிக் கொண்டனர்.

வேலைப் பிரிவினைக் காரணமாக, ஏற்பட்ட வளர்ச்சியின் போது உடலுழைப்பு சதாரணமாகவும் உழைப்பை மேற்பார்வைப் பார்ப்பவர் மேலானவராக கருதப்பட்டது. இந்த மேற்பார்வை பார்ப்பவர்கள் உபரியை தமதாக்கிக் கொண்டனர்.

கூட்டாகச் செய்த மாயவித்தை என்பது மறைந்து, அது மாறிய நிலையில் அதை செய்வதற்கு என்றே தனிப் பிரிவு ஏற்பட்டது. இந்த தனிப்பிரிவே புரோகி வர்க்கமாக வளர்ந்தது.

உபரியை கையகப்படுத்தியது போலவே பயன்படுத்திய கருவிகளும் தனிச் சொத்தாகப்பட்டது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக் காரணமாக சமூகத்தில் பணக்கார வர்க்கம், ஏழை வர்க்கம் தோன்றியது. உழைப்பவர்கள் ஏழைகளாகவும் உழைப்பைப் பெறுபவர்கள் பணக்காரர்களாகவும் ஆனார்கள். சமூகம் வர்க்கமாக மாறியது. முன்பு மாயவித்தை கூட்டு மனவுணர்வை ஏற்படுத்தியது, தற்போதைய வழிபாட்டு முறை சலுகை பெற்ற வர்க்கத்திற்காக நடத்தப்படும் சடங்காக மாறிவிடுகிறது. இந்த வழிபாட்டு முறைகளை நிறுவனப்படுத்தும் போது மதம் உருபெற்றது. இவ்வாறு மதம் வர்க்கச் சார்புடன் தோற்றம் பெற்றது.

      இது மதத்தின் தொடக்கநிலை. மதம் வளர்ச்சி அடைகிற போது மத இருப்புக்கு இரு காரணங்கள் அடிப்படையாக இருக்கிறது. இதனை லெனின் மிகவும் எளிமையாகக் கூறியுள்ளார்.

 

மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளை நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்

(உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை)

       கல்லாமை என்பது இயற்கை சக்தியை அறியாதினால் ஏற்பட்ட மத நம்பிக்கை ஆகும், இல்லாமை என்பது இயற்கை சக்திக்கு இணையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணத்தை அறியாததால் ஏற்பட்டது ஆகும். அதாவது, இயற்கைச் சக்தியை அறியாதது போலவே அன்று சமூகத்தில் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இயற்கையைப் பற்றிய அறியாமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணத்தை பற்றிய புரியாமையும் மதம் இருப்பிற்கான இரண்டு அடித்தளமாகும். எளிமைக்காக லெனின் இடம் சென்றோம். கோட்பாட்டுக்காக எங்கெல்சிடம் செல்வோம். எளிமையாகச் சொன்ன லெனினின் கருத்துக்கான கோட்பாட்டைப் பார்ப்போம்.

 

“ .. மனிதர்கள் புறம்பான, இயற்கை மற்றும் சமுதாய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரையில், அவர்கள் மீதுஆதிக்கம் செலுத்தும் இந்தச் சக்திகளுடனான மனிதர்களுடைய உறவின் நேரடியான அதாவது உணர்ச்சிபூர்வமான வடிவில் சமயம் தொடர்ந்து நிலவ முடியும். எனினும், நிலவும் முதலாளித்துவ சமுதாயத்தில் மனிதர்கள் தம்மாலேயே உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளால், அவர்களே உண்டாக்கியுள்ள உற்பத்திச் சாதனங்களால் புறம்பான ஒரு சக்தியின் மூலம் போன்று ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். எனவே, சமயத்தைத் தோற்றுவிக்கும் பிரதிபலிக்கிற செயல்பாட்டின் உண்மையான அடிப்படை தொடர்ந்து நிலவுகிறது, அதோடு சேர்ந்து அதன் சமயப் பிரதிபலிப்பும் நிலவுகிறது.

(டூரிங்குக்கு மறுப்பு)

இதை எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்கிற நூலில் சற்று விரிவாக எழுதியுள்ளார்.

 மதம் தோன்றியதற்கும் நிலைபெற்று இருப்பதற்குமான காரணத்தைப் பார்த்தோம். அதன் வர்க்க சார்பை பார்த்துவிட்டு இந்திய தத்துவங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

 மதம் உழைக்கும் மக்களுக்கு போதிப்பது என்ன? அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, பணிந்து செல்லும்படி கூறியது. உலகில் காணப்படும் அனைத்துத் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளும்படி அறிவுறுதியது.

 முற்பிறவி, போன ஜென்ம வினை என்பது ஐரோப்பாவிலும் ருஷ்யாவிலும் கிடையாது இந்தியாவில் மட்டுமே இது காண்படுகிறது.

 நமக்கு கூடுதலாக இந்திய மதங்கள் - தத்துவங்கள் என்ன கூறுகிறது. இன்ப-துன்பங்கள் என்பது ஒருவர் போன பிறவியில் செய்த பாவத்தின் விளைவு ஆகும். அதனால் தமக்கு, சமூகம் இட்ட கடமைகளை பலன் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு செய்தால், அடுத்தப் பிறவியில் நல்வாழ்வுக்கு வாய்ப்பிருக்கிறது.

 இதுமட்டுமல்லாது மற்றொன்றையும் கூறுகிறது அது என்னவென்றால் இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் இந்த உலத்தினால் கிடைக்கும் இன்பம் நிரந்தரமானது அல்ல. பிரம்மம் தான் நிலையானது மாறாதது, இயல்பிலேயே ஆனந்தமயமானது. பிரம்மத்தை அறியாது உலகத்தில் மூழ்கிக்கிடப்பதினால்தான் துன்பங்கள் ஏற்படுகிறது. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான, பிறவைவிடுத்து முக்தியை அதாவது பிறவாத நிலையை அடைய வேண்டும். இதுவே மனிதர்களின் இறுதி குறிக்கோளாக பெரும்பான்மையான  இந்தியத் தத்துவங்கள் கூறுகிறது.

       உலகம் இறைவனால் படைக்கப்படவில்லை என்று கூறுகிற சமணத்திலும் வினைக் கோட்பாடு இருக்கிறது. இதற்குக் காரணம் இயற்கைப் பற்றியதில் இருந்தப் புரிதல், சமணத்துக்கு சமூகம் பற்றியதில் இல்லை. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை அதனால் கண்டிபிடிக்க முடியவில்லை. அதனால் சமணம் போன்ற பொருள்முதல்வாதச் சிந்தனை கொண்ட தத்துவமும் உலகத்தை வெறுத்து, முக்தி அடைய வழிகாட்டுகிறது. பவுத்தமும் இறுதியில் நிப்பாணத்துக்கே வழிகாட்டுகிறது.

    இந்தியாவில் உள்ள மத-தத்துவங்களில் பெரும்பான்மையானவை முக்திக்கே வழிகாட்டுகிறது.

      இப்போது வேதாந்தத் தத்துவங்களான துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்றையும் பார்ப்போம். இன்றைய உரையில் இதற்குத்தான் நேரம் கிடைக்கும். நேரம் இருப்பின் தமிழகத்தின் சைவசித்தாந்தத்தையும் பார்க்கலாம்.

       துவைதத்தை மத்துவர் தோற்றுவிக்கவில்லை, விசிட்டாத்வைதத்தை ராமானுஜர் தோற்றுவிக்கவில்லை அதே போல அத்வைதத்தை ஆதி சங்கரர் தோற்றுவிக்கவில்லை. அதை அவர்கள் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப நிலைநிறுத்தினார்கள். முழுமையாக நிறுவனப்படுதினார்கள். இவர்களுக்கு முன்பே இத்தகையப் போக்குகள் இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது.

 கால வரிசையில் ஆதி சங்கரரே மூத்தவர், அதற்கு அடுத்தவர் ராமானுஜர், அவருக்கு அடுத்தவர்தான் மத்துவர். நாம் உருவாக்கியவர்களின் காலவரிசைப்படி தொடராமல், தத்துவ வளர்ச்சியின் கால வரிசைப்படி பார்ப்போம். அப்போதுதான் தத்துவத்தைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

 துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்கிற வரிசையில் பார்ப்போம்.

 அனைத்துக்கும் தொடக்கம் துவைதமே. உலகில் உள்ள அனைத்து மதங்களும், அனைத்து தத்துவங்களின் தொடக்கமும் துவைதமே. ஐரோப்பாவில் அத்வைதம் தத்துவக் கணோட்டம் மிகமிகக் குறைவு. இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி போன்றவர்கள் மட்டுமே அகநிலைக் கருத்துமுதல்வாதிகளாவர். அதாவது அத்வைதிகள்.

       இதுவரை கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்றுதான் பார்த்துவந்தோம் இது என்ன அகநிலை கருத்துமுதல்வாதம் என்று தத்துவத்துக்குப் புதியவர்கள் கேட்ப்பார்கள். அதனால் அதற்கு சிறிது விளக்கம் கொடுப்போம்.

 உலகம், ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்பது கருத்துமுதல்வாதம் என்று ஏற்கெனவே பார்த்தோம். இந்த சக்தியை இரண்டு விதமாக வேறுபடுத்தி பார்ப்பதினால் இதனுள் இரண்டு உட்பிரிவு காணப்படுகிறது. ஒரு பிரிவுக்கு புறநிலை கருத்துமுதல்வாதம் (Objective Idealism) மற்றொரு பிரிவுக்கு அகநிலை கருத்துமுதல்வாதம் (Subjective Idealism) என்று பெயர்.

 புறநிலை கருத்துமுதல்வாதம், உலகம் படைக்கும் சக்தியை உலகுக்கு அப்பால் அதாவது உலகக்குப் புறத்தில் இருக்கிறது என்று கருதுகிறது. அந்த சக்தியை புறத்தில் காண்பதால் இதற்கு புறநிலை கருத்துமுதல்வாதம் என்று பெயர். உலகைப் படைக்கும் சக்தியை புறத்தில் காணாது அகத்தில் அதாவது மனிதனின் மனதில் காண்பதால் மற்றதற்கு அகநிலை கருத்துமுதல்வாதம் என்று பெயர்.

       முதலில் நாம் பார்க்கப் போவது துவைதம்.

       துவைதத் தத்துவத்தை மத்துவர் நிறுவனப்படுத்தினார். கர்னாடகா மாநிலத்தில் உடுப்பிக்கருகில் உள்ள சிற்றூரான பாஜகசேத்திரம் என்ற இடத்தில் 1238ஆம் ஆண்டில் அவர் பிறந்தார்.

       துவைதம் என்றால் இரண்டு என்று பொருள். ஆத்மா, பிரம்மம் என்கிற இரண்டையும் அது குறிக்கிறது. ஆத்மா என்பது மனிதன் பிறப்புக்கு முன்பு இருப்பது இறந்த பிறகும் தொடர்வது.

 பிரம்மம் என்பது, சக்தி வாய்ந்தது சர்வ வல்லமைப் படைத்து, பிரம்மத்துக்கு முன் ஆத்மா அதாவது மனிதன் சக்தி அற்றவனே ஆவான். இதுவே துவைதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

 உலகை படைக்கும் சக்தியையை துவைதம் பிரம்மம் என்று கூறுகிறது. ஆத்மாவை ஜீவாத்மா என்றும் பிரம்மத்தை பரமாத்மா என்றும் கூறுவர். ஜீவாத்மா பரமாத்மாவுக்குக் கட்டுப்பட்டது, பரமாத்மா எதற்கும் கட்டுப்பட்டது கிடையாது, தனித்த சக்தி படைத்தது. ஆத்மாவைக் கொண்ட மனிதனிடம் இருக்கும். விருப்பு வெறுப்பு என்பதை பரமாத்மாவிடம் கிடையாது.

       விருப்பு வெறுப்பு கிடையாது என்றால் பரமாத்மா உலகை ஏன் படைத்தார்.

       படைப்பு என்பது பரமாத்மாவின் லீலை, அதாவது விளையாட்டு. பரமாத்மாவின் விளையாட்டுதான் உலகப் படைப்பு. விளையாட்டு என்றால் மனிதன் விளையாடுவது போன்றதல்ல அது. மனிதன் விளையாடுகிறான் என்றால் அதில் வெற்றி இருக்கிறது தோல்வி இருக்கிறது. அதனால் மகிழ்ச்சி-துன்பம் ஏற்படுகிறது. பரமாத்மாவுக்கு மனிதனின் குணங்கள் கிடையாது.

 பரமாத்மா உலகத்தைப் படைத்து விளையாடுவது, மகிழ்ச்சிக்கு கிடையாது. இதற்கு துவைதைகள் மனித உதாரணங்களை பல காலமாக தொடர்ந்து கூறிவருகின்றனர். நாம் ஒர் உதாரணத்ப் பார்ப்போம்.

 
பள்ளி மாணவர்கள் தன்னிடம் உள்ள புத்தகத்தை ஒரு விரலில் பிடித்து சுற்றி சுற்றி விளையாடுவார்கள். எதற்கு இப்படி புத்தகத்தை வைத்து சுற்றுகிறாய் என்று கேட்டால். “சும்மா விளையாட்டுக்கு” என்பார்கள். அது போல காரணமற்ற விளையாட்டே பிரம்மனின் உலகப் படைப்பு என்கின்றனர் துவைதிகள்.

       பிரம்மனின் விளையாட்டு இந்த உலகம் என்றால் இதில் ஏன் இந்தனை துன்பங்கள், துயரங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

 இத்தகைய துன்பங்களைத் தருகிற இந்த உலகத்தால் என்ன பயன் என்று கேட்டால். ஆம் உலகத்தில் சிறப்பாக வாழ்வது மனிதனின் குறிக்கோள் அல்ல என்கிறது துவைதம்.

 இந்த உலகில் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் நிலைத்த இன்பம் என்பது கிடையாது. அதனால் பிறப்பு இறப்பு என்கிற இந்த சம்சார உலகில் இருந்து விடுபட வேண்டும். அதாவது முக்தி அடை வேண்டும். முக்தியே அனைத்து வேதாந்தத்தின் இறுதிக் குறிக்கோளாக இருக்கிறது.

 இந்தப் பிறப்பில் நல்லவனாக இருந்தும், துன்பம் அடைய வேண்டி இருக்கிறது. என்றால், அதற்கு போன பிறவியில் செய்த தீமையே காரணம் என்கிறது வேதாந்தம். துன்பம் வேண்டாம் என்றால், வினைகள் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும். வினை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.

 பலனை எதிர்பார்த்து எதையும் செய்யக்கூடாது. எதற்கும் ஆசைப் படக்கூடாது. ஆசையே பிறவிக்குக் காரணம் என்கிறது துவைதம்.

 இந்த பிறவியில் விதிக்கப்பட்ட கடமைகளை அதாவது தர்மத்தை மனம் கோணாமல் செய்ய வேண்டும். இங்கே தர்மம் என்றால் சுய-தர்மமே, வர்ணாஸ்ரம தர்மே. அதாவது சாதிய தர்மமே ஆகும். சாதிய தர்மத்தை ஒழுங்காகக் கடைபிடித்தால் புதிய வினைகள் ஏற்படாது.

 சாதியம் என்பது சமூகத்தின் விளைவு அல்ல, மனிதனின் செயல்களால் ஏற்பட்டது என்று துவைதம் கருதுகிறது. துவைதம் மட்டும் அல்ல வினைக் கோட்பாட்டை பேசுகிற அனைத்தும் இதையே கூறுகிறது.

 சாதிய துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் விதிக்கப்பட்ட சாதிய கடமையை மனம் கோணாமல், பலனையும் எதிர்பார்க்காமல், தியாக உணர்வோடு செய்யதால், பிறவி தொடராமல் முக்தி கிடைக்கும். முக்தி என்பது ஆத்ம விடுதலை. இது சமூக விடுதலை அல்ல. சமூக விடுதலைக்கு அதாவது சமூக சமத்துவத்துக்கு இந்த முக்தி தத்துவங்கள் பயன்படுவதில்லை. பயனில்லை என்பது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் இருக்கிறது.

 துவைதம் முக்தியைப் பற்றி பேசினாலும் உலகம் பொய் என்றோ, உலகம் மாயை என்றோ மறுக்கவில்லை. துவைதம் மூன்று உண்மைகளை ஏற்றுக் கொள்கிறது. ஆத்மா அதாவது மனிதன், உலகம், பரமாத்மா ஆகிய மூன்றையும் உண்மைப் பொருளாக ஏற்றுக் கொள்கிறது. உலகத்தை அத்வைதம் மாயை என்கிறது. துவைதிகள் இதை கடுமையாக எதிர்கின்றனர்.

 துவைதத்தை இந்தியாவில் ஒரு சாதாரணத் தத்துவமாக, எளிமையான தத்துவமாக பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இருந்தாலும் அத் தத்துவம் அத்வைதக் கருத்தான உலகம் மாயை என்பதை கடுமையாக எதிர்க்கிறது. இன்றுகூட புதிய வழிமுறைகளில் எதிர்க்கவே செய்கிறது.

 மூன்று வேதாந்தத்தை சேர்த்துப் பேசும் இடத்திலும் துவைதம் குறைவாகவே விளக்கப்படுகிறது. உலகம் உண்மை என்பதை கருத்துமுதல்வாதத் தத்துவமான துவைதம் கூறுவது கவனத்தில் கொள்ள வேண்டியவையே ஆகும். அதனால் துவைதத்தை அவ்வளவு எளிதாகத் தள்ளிவிட முடியாது.

 துவைதத்தை ஐரோப்பிய வழியில் அதாவது ஆங்கில தத்துவ வழியில் கூறவேண்டுமானால் புறநிலை கருத்துமுதல்வாதம் (objective Idealism) ஆகும். அதாவது உலகைப் படைக்கும் சக்தி உலகுக்கு அப்பால் இருக்கிறது.

 அடுத்து விசிட்டாத்வைதத்துக்குச் செல்வோம்.

 விட்டாத்வைதத்தை ராமானுஜர் நிறுவனப்படுத்தினார். சென்னைக்கு உருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1017ஆம் ஆண்டில் பிறந்தார்.

 துவைதம் போன்றே விசிட்டாத்வைதமும் ஆத்மா, உலகம், பரமாத்மா ஆகிய மூன்றையும் ஏற்றுக் கொள்கிறது. துவைதம் பக்தி செலுத்துகிறது விசிட்டாத்வைதம் பக்தியைவிட பிரபக்தியை செலுத்துகிறது. பக்தி என்றால் இறைவனிடம் “எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்று கேட்பது. பிரபத்தி என்றால் இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைவது. பக்தியை போல் தனக்கு இது வேண்டும் என்று கேட்காமல், “எனக்கு எது வேண்டும் என்று தீர்மானிக்க முடியவில்லை, உன்னிடம் சரணடைகிறேன், எனக்கு எது தகுமோ அதை நீயே அளிப்பாயாக” என்று கேட்பது பிரபக்தி.

       பரமாத்மா அனைத்தினுள்ளும் அந்தராமியாய் ஊடுருவி இருக்கிறார் என்பது விசிட்டாத்வைதத்தின் முக்கியமான கருத்தாகும். உலகப் பொருட்களிலும் அனைத்து உயிரிகளிடத்தும் பரமாத்மா ஊடுருவி இருக்கிறார். அவர் அனைத்தையும் பார்க்கிறார் ஆனால் அதை தடுக்கவோ உதவிடவோ மாட்டார், சாட்சியாகவே இருப்பார். அந்தர்யாமி என்றால் சாட்சியாக இருப்பவர் என்பதே பொருளாகும்.

 விசிட்டாத்வைதம் என்றால் சிறப்பான அத்வைதம் என்று கூறப்படுகிறது. துவைதத்தில் இருந்து அத்வைதத்துக்கு மாறுவதற்கு இடைநிலையாக விசிட்டாத்வைதம் கருதப்படுகிறது. மாறும் கட்டம் ஒரு தனி தத்துவமாக கூறிட முடியுமா?

 அதனால் இது துவைதமாக இருக்க வேண்டும் அல்லது அத்வைதமாக இருக்க வேண்டும்.

       அத்வைதம் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் தனித்து இருப்பதாக ஏற்பதில்லை. இரண்டும் ஒன்றே என்பதே அதன் தத்துவம்.

 விசிட்டாத்வைதம் அந்தர்யாமி என்கிறதால் பரமாத்மா அனைத்தினுள்ளும் ஊடுருவி இருப்பதினால் இதை சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று கூறிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்பதே எனது பதிலாகும். ஆனால் சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்றே அனைவரும் கூறுகின்றனர்.

       துவைதத்தில் பரமாத்மாவுக்கு முன் ஜீவாத்மா சக்தி அற்றது. ஆனால் தனக்கு இது வேண்டும் அது வேண்டாம் என்று கேட்க முடிகிறது. சரணாகதியில் எதையும் கேட்காமல் பரமாத்மாவையே முழுமையாக நம்புகிறது. இதில் ஜீவாத்மாவைவிட பரமாத்மா அதிக சக்தி உடையதாக காட்டப்படுகிறது. துவைதத்தில் கூறியதைவிட விசிட்டாத்வைதத்தில், பரமாத்மா ஜீவாத்மாவைவிட அதிக வல்லமை உடையதாக கருதுகிறது. அதனால் விசிட்டாத்வைதத்தை சிறப்புப் பொருந்திய துவைதம் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

       துவைதத்தைப் போலவே விசிட்டாத்வைதமும் முக்தியே இறுதி குறிக்கோளாகக் கூறுகிறது. துவைதமும் விசிட்டாத்வைதமும் ஒரே கருத்துடையவை. விசிட்டாத்வைதத்தில் அந்தர்யாமி, பிரபக்தி என்பது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

       அடுத்து அத்வைதம்.

       அத்வைதத்தை ஆதி சங்கரர் நிறுவனப்படுத்தினார். கேரளாவில் உள்ள காலடி என்னும் சிற்றூரில் 788ஆம் ஆண்டில் பிறந்தார்.

       அத்வைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள். அதாவது ஒருமை. ஒருமை மட்டுமே அத்வைதம் ஏற்கிறது. பன்மையை மறுக்கிறது. துவைதம் ஜீவர்தமாவையும் பரமாத்மாவையும் ஏற்கிறது. அத்வைதம் இந்த இரண்டில் பரமாத்மாவை மட்டுமே ஏற்கிறது.

 ஆதி சங்கரர் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அனைத்தையும் அனைவராலும் படிப்பத்திட முடியாது. முடிந்தவர்கள் முயற்சிப்பவர்கள் படித்து முடிக்கலாம். ஆதி சங்கரர் எழுதிய “விவேக சூடாமணி” என்கிற ஒரு நூலை மட்டும் படித்தால் அத்வைதத்தை முழுமையாக படித்து அறியலாம்.

       நான் இங்கே அத்வைதத்தை “விவேக சூடாமணி” என்கிற நூலில் இருந்தே விளக்குகிறேன்.

 அத்வைதம் உலகை மறுக்கிறது அல்லது உலகை மாயை என்று கூறுகிறது என்ற அடிப்படையில் பலர் அத்வைதத் தத்துவத்தை படிக்காமல் ஒதுக்குகின்றனர். ஒரு தத்துவத்தை ஒதுக்குவதால் அதை அழித்திட முடியாது. அதன் உள்பொருளை உணர்ந்து அதை விமர்சித்து விழ்த்த வேண்டும். இன்று பல வடிவங்களில் அத்வைதமே நம் நாட்டில் கோலோச்சுகிறது. இந்தியத் தத்துவம் என்றால் அத்வைதமாகவே உலகம் அனைத்திலும் கருதப்படுகிறது. அப்படி இருக்க அத்வைதத்தை நன்றாக தெரிந்து அதை விமர்சிக்க வேண்டும்.

       தத்துவ வழியில் அத்வைதம், உலகை மாயை என்று கூறிவிடுகிறது, ஆனால் வியவகார உலகம் என்று எதார்த்த உலகில் காணப்படும் சாதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. அதனால் உலக மறுப்பை முன்வைத்து அத்வைதத்தை எளிதாகத் தள்ளிவிட முடியாது. அதை ஆழமாகக் கற்று விமர்சிக்க வேண்டும்.

       அத்வைதம் வியவகார உலகம், பரமார்த்த உலகம் என்று இரண்டைப் பற்றி பேசுகிறது. பரமார்த்த உலகம்தான் உண்மையானது அதில் வேறுபாடுகள் எதுவும் கிடையாது, அனைத்தும் ஒன்றே அதுவே பரமநிலை ஆகும்.

 பிரம்மத்தில் இருந்து பிரிந்ததாக கருதுவதே இந்த உலகம். இந்த உலகத்தையே வியவகார உலகம் என்கின்றனர். வியவகார உலத்தை, அத்வைதம் மாயை என்று கூறுகிறது. இங்கே மாயை என்றால் ஒன்றும் இல்லாதது என்று பொருள் அல்ல.

 இருக்கிறது என்றும் சொல்ல முடியாதது, இல்லை என்றும் சொல்ல முடியாதது. இதற்கு அத்வைதகள் கனவை உதாரணமாகக் காட்டுகின்றனர். கனவு என்பது உணமை கிடையாதுதான், ஆனால் கனவில் ஒரு சிங்கம் துரத்துகிறது என்றால் நனவில் மூச்சு முட்டுகிறது, வேர்கிறது. அதனால் கனவை உண்மை இல்லை என்றும் கூறிட முடியாது, அதே நேரத்தில் உண்மையானது என்றும் கூறிட முடியாது. அதே போலதான் இந்த உலகம் மாயைதான் ஆனால் மாயையாக இருக்கிறது. அதனால் இதை இல்லை என்று கூறிட முடியாது, அதே நேரத்தில் இருக்கிறது என்றும் கூறிட முடியாது. இந்த உலகம் நீண்ட கனவாக இருக்கிறது.

       மாயை என்றாலும் பார்க்கின்ற உலகத்தை ஆதிசங்கரர் ஏன் மறுக்கிறார்.

 இந்த உலகத்தில் காணும் பொருட்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை நிலைத்த தன்மையற்றவை. நிலையற்ற இந்த உலகப் பொருட்களால் கிடைக்கும் இன்பமும் நிலையற்றவை. விருப்பும், வெறுப்பும் நிறைந்துள்ள இந்த உலகம், கனவு போன்றதே.

 கனவில் காணும் உலகம் பொய்யானதே, அதேபோல் நனவில் காணும் இந்த உலகமும் மாயையானதே.

 இந்த உலகில் காணும் நிலையற்ற பன்மை தன்மையினால் தான் அச்சமும் துன்பமும் நேர்கிறது.

 இன்பம்-துன்பம், வெப்பம்-குளிர்ச்சி, விருப்பு-வெறுப்பு. நல்லது-கெட்டது, ஏழை-பணக்காரன் போன்ற பன்மைத் தன்மைகள் இந்த உலகில் இருக்கின்றன. இவை அனைத்தும் நிலையற்றவை.

 ஒருமை எனும் போது அங்கே மற்றொன்றுக்கு இடம் இல்லை. மற்றொன்று இல்லை என்றால் அங்கே அச்சப்படுத்தப் போவது எது? பன்மையே அச்சம் தருபவை, ஒருமை அச்சத்தை விலக்குபவை என்று அத்வைதம் கருதுகிறது.

 நிலையற்றப் பொருட்களால் மக்களுக்கு அமைதி கிடைக்காது. அதனால் நிலையான பொருளை நாடிச் செல்ல வேண்டும். நிலையான பொருள் ஆத்மா. மனிதன் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் உண்மையானது என்ற தவறான நினைப்பில் வாழ்கிறான். இது மாயையானது. இந்த மாயையின் அடிப்படையில் தோன்றியதே உலகம். பிரம்மம் சத்தியம் உலகம் அசத்தியம் (பிரம்மம் சத்தியம் உலகம் மித்).

 தன்னை உடலாகக் கருதுவதைவிடுத்து, ஆத்மா என்ற நிலையான தன்மைப் பெற்றவனே மனிதன்- என்று உணர வேண்டும். அந்த அத்மா தனித்த ஆத்மா கிடையாது, அது பரமாத்மாவின் விலகலாகத் தோன்றுகிறது. உண்மையில் பரமாத்மா மட்டுமே உண்மையானது. மனிதன் தன்னை தனித்த ஆத்மாவாகக் கருதக்ககூடாது. அனைத்தும் பரமாத்மாவாக உணரவேண்டும்.

 “தத்துவமசி” அதாவது “நீயே அது” என்கிற உபநிடத மகாவாக்கியத்தை உணர்ந்து நானே பிரம்மம் என்பதை அறிய வேண்டும். இதுவே துன்ப மயமான. இந்தப் பன்மை உலகத்தில் இருந்து விடுபடுவதற்கான வழியாகும்

 வியவகார உலகில் தான் வேறுபாடுகள், பரமார்த்த உலகில் அனைத்தும் ஒன்றே, என்கிற இந்த ஞானம் பெற்றால் துன்பத்துக்கு வழியில்லை என்கிறது அத்வைதம்.

 ஞானம் பெறுவதற்கு செயல் துணைபுரிகிறது. அந்த செயல் பற்றில்லாமல் அதாவது பலன் கருதாமல் செய்தால், அந்தச் செயல் கர்மவினையை ஏற்படுத்தாது. பிறவி தொடராது. பிறகு, துன்பமயமான பன்மைத்தன்மை உடைய உலகத்தில் இருந்து விடுபட்டு இயல்பிலேயே என்றும் ஆனந்தமயமானவன் (சத்சித் ஆனந்தன்) என்பதை அறிந்தவன் இன்பத்தில் திழைக்கிறான்.

 பிரம்மத்தில் இருந்து பிரிந்தாகக் கருதுவதை விடுத்து பிரம்மமாய் இருப்பதை (ஒருமை) உணர்வதே ஞானமாகும். இந்த ஞானமே சம்சாரத்தில் இருந்து முக்தி பெற்றுத் தரும். முக்தி. என்றால் விடுதலை. அத்வைதம் ஆத்ம விடுதலைக்கு வழிகாட்டுகிறது.

 அடுத்துப் பார்க்கப் போவது தமிழகத்தில் காணப்படும் சைவசித்தாந்தம் ஆகும். இந்த சைவசித்தாந்தமும் முக்தியைப் பற்றியே பேசுகிறது.

       இந்த சைவசித்தாந்தம், காஷ்மீரிய சைவம், கர்நாடாகவில் காணப்படும் வீர சைவம் ஆகியவற்றில் இருந்தும் வேறுபடுகிறது.

 இந்தியத் தத்துவங்களிலேயே குழப்பம் இல்லாது வெளிப்படுத்தக்கூடிய தத்துவம் என்றால் அது சைவசித்தாந்தமே ஆகும். இங்கே மெய்கண்டார் தொகுத்தளித்த சைவசித்தாந்தத்தையே குறிப்பிடப்படுகிறது. இந்த மெய்கண்டார் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவெண்ணெய்நல்லூர் என்கிற ஊரில் பிறந்தார்.

 சைவசித்தாந்தத்தின் இந்தத் தெளிவுக்கு பிற்காலத்தில் தோன்றியது ஒரு காரணமாக இருக்கலாம். சைவத் திருமுறைகளில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் தொடங்கிவிட்டது என்றாலும் மெய்கண்டாரே அதை நிறைவு செய்கிறார், நிறுவனப்படுத்துகிறார்.

 அவர் எழுதிய நூலுக்குப் பெயர் “சிவஞான போதம்” என்று பெயர். இதில் பதி, பசு, பாசம் என்கிற மூன்று சைவசித்தாந்த தத்துவத்தின் அடிப்படைகள் அனைத்தையும் 12 பாடல்களில் சூத்திர வடிவில் சுருக்கமாகக் காணப்படுகிறது. இதற்கு விளக்கங்கள் வெண்பாவில் எழுதியிருந்தாலும் விளக்கத்தைத் தவிர்த்துப் பார்க்கும் போது 12 பாடல்களிலும் முழுமையாக சைவசித்தாந்தம் விளக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின் வந்த அனைத்து சைவசித்தாந்த நூல்களும் இதனடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது.

       இறைவன், ஆத்மா, உலகம் என்கிற மூன்று உண்மையை துவைதம், விசிட்டாத்வைதம் போல் சைவசித்தாந்தம் ஏற்கிறது. ஆனால் விளக்குவதில் வேறுபடுகிறது. இந்த மூன்று உண்மையை சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்கிற சொற்களால் குறிப்பிடுகிறது.

 வேதாந்தம் என்று கூறப்படுகிற வைதீகத் தத்துவத்துக்கும் சைவசித்தாந்தத்துக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. வேதாந்தம் தமக்கான ஆதார நூல்களாக உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய மூன்று சமஸ்கிருத நூலை அடிப்படையாகக் கொண்டுள்ளது, ஆனால் சைவசித்தாந்தம் எந்த வடமொழி நூலையும் அடிப்படையாகக் கொள்ளவில்லை. அது ஒரு தனித்தப் போக்குடைய முதல் நூலே ஆகும். சிவஞான போதத்தை மொழியாக்க நூல் என்று கூறுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் அது தவறானது என்று நிறைய அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

 வேதாந்த தத்துவத்தை சைவசித்தாந்தம் மறுக்கிறது ஆனால் வேதத்தை மறுக்கவில்லை. திருமுறை (தோத்திரம்), சித்தாந்தம் (சாத்திரம்) ஆகிய இரண்டிலும் வேதம் மறுக்கப்படவில்லை.

 திருஞானசம்பந்தரின் முதல் திருமுறையில் நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சிவபெருமானின் பெயர் வேதத்தின் அடிப்படையிலேயே விளக்கப்பட்டுள்ளது.

 

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே.   1

       தோத்திரப்பாடல்களில் மட்டுமல்லாது சாத்திரப் பாடல்களிலும் வேதத்தை சிறப்பித்தே கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம்.

 சிவப்பிரகாசம் என்கிற சித்தாந்த நூலில், “..சிறப்புடன் விளங்கும் வேதாந்தத் தெளிவாகிய சைவசித்தாந்தத்தை இங்குத் தெரிவிக்கிறேன்.” என்று காணப்படுகிறது. அதாவது வேதத்தின் தெளிவாகவே சைவசித்தாந்தம் கூறப்படுகிறது.

 

“.. சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ

சித்தாநத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம்” (7)      

      ஆகமத்தை முதல் நிலையினதாகவும் வேதத்தை இரண்டாம் நிலையினதாகவும் சைவம் ஏற்கிறது.

       அடுத்து பதி, பசு, பாசம் ஆகியவற்றின் விளக்கத்துக்குப் போவோம்.

 பதி என்பது சிவனின் சக்தியைக் குறிக்கும், பசு என்பது பாசத்தால் கட்டப்பட்ட உயிரைக் குறிக்கும், இங்கே உயிர் என்றல் ஆத்மா. பாசம் என்றால் கயிறு என்றே பொருள்படும். தளை என்றும் கூறுவர், தளை என்றால் விலங்கு. பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. இந்த மூன்றை மும்மலம் என்றும் கூறுவர்.

 ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றால் ஆத்மா கட்டுபட்டு அதாவது தளைபட்டு இருப்பதையே பாசபந்தம் என்று கூறப்படுகிறது,

 ஆணவம் என்றால் “நான்” என்கிற அகந்தை கிடையாது. ஆணவம் என்றால் அறியாமை என்பதே பொருள். உண்மையை அறியாமல் தடுப்பது ஆணவம். உண்மை என்றால் பதி உண்மை. பதி உண்மையை அறியாது தடுப்பது ஆணவம்.

 ஆணவத்துக்கு அடுத்து பாசத்தில் வருவது கன்மம். கன்மம் என்றால் வினை, இதை செயல், தொழில் என்றும் கூறலாம்.  இந்த உலகில் செயல்படுவதினால் ஏற்படுகிற நன்மை தீமை ஆகியவற்றால் உருவாகிற வினைகளை கழிப்பதற்கு பிறவி ஏற்படுகிறது. பிறவித் தொடர்ச்சிக்கு, செய்கின்ற கன்மமே காரணமாகும்.

 பாசத்தில் இறுதியாக வருவது மாயை. சைவசித்தாந்தத்தின் மாயை என்பது அத்வைதத்தின் மாயை போன்று இல்லாத பொருளல்ல. சைவசித்தாந்தத்தில் மாயை என்பது சூக்குமப் பொருள். அதாவது உள்பொருள் ஆகும்.

 குயவன் கழிமண்ணில் இருந்தே குடத்தை உருவாக்கிறான், இறைவனும் அதாவது பதியும் இந்த சூக்கும மாயை என்கிற உள்பொருளில் இருந்தே உலகத்தைப் படைக்கிறார் என்பதே சைவசித்தாந்தத்தின் கருத்தாகும்.

       பதி, பசு, பாசம் ஆகியவற்றை மூப்பொருள் உண்மை என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. பதி மட்டும் அநாதி அல்ல, பசு என்கிற ஆத்மாவும், பாசமும் அநாதியே ஆகும்.

 “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல்பசு பாசம் அனாதி

                               (திருமந்திரம் 115)

       பதி, பசு, பாசம் ஆகிய மூன்றினில் பதி அநாதி, அதே போல பசு, பாசம் ஆகியவையும் அநாதி ஆகும். அநாதி என்றால் பிறப்பற்றது. பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் பிறப்பற்றது. பிறப்பற்றது என்றால் தொடக்கம் இல்லாதது, என்றும் இருக்கக்கூடியது.

 பசுவாகிய ஆத்மா ஏன் பிறப்பெடுத்தது? என்பதை அடுத்துப் பார்ப்போம்.

     அநாதியான ஆத்மாவானது இறைவனை அதாவது பதியை நெருங்க முடியாது. ஆனால் பசுவான ஆத்மா பாசத்தில் உள்ள கன்மத்தை அண்ட முடியும், ஆம் பசுவானது கன்பதைத் தொட்டது அதனால் ஆத்மாவுக்கு கன்ம வினை ஏற்பட்டது. இந்த கன்மத்தை மூலகன்மம் என்று சைவசித்தாந்தம் அழைக்கிறது.

 ஆத்மாவால் பற்றப்பட்ட கன்மத்தை நீக்கும் பொருட்டு இறைவனான பதி ஆத்மாவின் மீது இரக்கப்பட்டு, அதன் கன்மம் நீக்கும் பொட்டு ஆத்மாவுக்கு உடல், கருவி கரணங்கள், உலகம், நுகர்ச்சிப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்தது. இதனை வடமொழியில் தனு, கரணம், புவனம், போகங்கள் என்று கூறுவர்.

       மூலகன்மத்தால் பிறப்பெடுத்த ஆத்மா, உலகில் மனித உடலோடு செயல்படும்போது ஆணவ மலத்தால் அறியாமையில் அகப்பட்டது.

 இந்த மனிதப் பிறவியையும் எடுத்தவுடன் கிடைக்கவில்லை. புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பறவையாய் என பல பிறவிகளை எடுத்தப் பின்பே மனிதனாகப் பிறப்பெடுத்து.

 இதைப் பற்றி மாணிக்கவாசகர் தமது சிவபுராணத்தில் கூறியுள்ளார்.

 " புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்."

 பல்வாறு பிறவிகளை எடுத்த ஆத்மா சோர்வுற்றது. இதையே மாணிக்கவாசகம்  “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.” ஆக சைவசித்தாந்தமும் உலகை விடுத்து வீடுபேறு என்கிற முக்தி அடைவதற்கே வழிகாட்டுகிறது.

       ஆத்மா படிகம் போன்றது, படிகத்துக்கு என்று ஒரு நிறம் கிடையாது, அது சார்ந்ததன் நிறத்தை எடுத்துக் கொள்ளும். ஆத்மா ஆணவம் என்கிற அறியாமையினால் உலகில் தன்னிலை மறந்து உழன்றுக் கொண்டிருக்கிறது.

 மனிதன் பல பிறவிகள் எடுக்கும் போது அறியாமையில் இருந்து படிப்படியாக விலகுகிறான். அவ்வாறு தெளிவு பெறும் போது ஆத்மா போதத்தைப் பெற ஆசிரியரை நாடுகிறான்.

 ஆசிரியரிடம் ஆத்ம போதம் என்கிற ஞானத்தைப் பெறுகிறான். அந்த போதம் என்ன செல்கிறது என்று பார்ப்போம்.

 இந்த மனிதப் பிறவி துன்பமயானது இதில் ஆத்மா அகப்பட்டுள்ளது. ஆத்மாவை இந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

       அதற்கு “இருநிலையொப்பு” என்கிற நிலையினை அடைய வேண்டும் இருநிலைஒப்பு என்றால் சமநிலை அதாவது பக்குவநிலை. அனைத்தையும் சமமாக நினைக்கிற பக்குவம் பெற வேண்டும். இன்பத்தில் விருப்பமும் துன்பத்தில் வெறுப்பும் ஏற்படாமல் இரண்டையும் ஒன்றுபோல கருதுகிற பக்குவமே இருநிலையொப்பு. அதே போல உயர்வு-தாழ்வு, பணக்காரன்-ஏழை ஆகிய அனைத்து இருமைகளையும் சமமாக மதித்து பக்குவத்துடன் செயல்பட்டால், அடுத்தப் பிறவியைத் தோற்றுவிக்கிற கன்மங்கள் மனிதனிடம் சேராது. கன்மங்கள் தீர்ந்த நிலையில் ஆத்மா பதியினை அடையும். இங்கே அத்வைதத்தைப் போல இரண்டும் ஒன்று என்று பேசவில்லை. துவைதம், விசிட்டாத்வைதம் போன்று சைவசித்தாந்தமும் ஆத்மா-பரமாத்மா, அதாவது பசு-பதி என்கிற இருமையை ஏற்கிறது. அதனால் பதியின் காலடியை ஆத்மா அடைவதே முக்தி.

       இதுவரை சிதரலாகப் பார்த்த சைவசித்தாந்தத்தை சுருக்கமாகப் பார்ப்போம்

       தொடக்கத்தில் ஆத்மாவுக்கு ஏற்பட்ட மூலகன்மத்தை போக்குவதற்கு பதியானவர் இரக்கப்பட்டு, பிறவி கொடுத்து, உலகை முற்றும் அனுபவித்தது. பலப் பிறவுகளுகுக்குப் பிறகு தெளிவு பெற்றுது. அதாவது உலகைச் சார்ந்த வண்ணமாய் இருந்த ஆத்மா அறியாமையை உணர்ந்து, பிறவித் தொடரைக் வெறுத்து,  இருநிலைஒப்பின் மூலம் உலகில் இருந்து விடுபட்டு பதியின் அருளை ஆத்மா அடைந்தது.

       ஆக, சைவசித்தாந்தமும் வீடுவேறு அதாவது முக்தி அடையதையே வலியுறுத்துகிறது.

       இவ்வாறு அனைத்து வினைக் கோட்பாடுகளும் ஆத்ம விடுதலைக்கே வழி காட்டுகிறது. சமூக விடுதலைக்கு கருத்துமுதல்வாதம் தீர்வுசொல்லவில்லை. “சமூகத்தில் நீ அனுபவிப்பது உனது முன்வினைப் பயன்” என்று கூறிவிடுகிறது. இதில்தான் இதன் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது. சமூகச் சிக்கலை எதிர்த்து போராடச் சொல்லாமல், உலகில் காணும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு விடுவேறு அடையச் சொல்கிறது.

 கருத்துமுதல்வாதம் பணம்படைத்த சுரண்டல் வர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கிறது. உழைக்கும் மக்களின் நலனை பொருள்முதல்வாதம் பிரதிபலிக்கிறது.

 தொடக்கநிலை பொருள்முதல்வாதத் தத்துவங்கள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன, அவைகளை இணைத்துப் புரிந்து மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வதத்தை நாம் அடைய வேண்டும்.

 இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில்தான் உழைப்பாளர்களின் விடுதலை இருக்கிறது என்றுகூறி இன்றைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

 

No comments:

Post a Comment