Tuesday, 8 October 2024

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும” என்கிற லெனின் நூலைப் பற்றி

 

(1984ஆம் ஆண்டு முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோவில் இருந்து வெளியிட்ட “மார்க்சிய- லெனினிய அடிப்படைகள்” என்கிற நூலின் பகுதி ஆகும். இந்த நூலை எழுதிய ஆசிரியர்கள் கி.என்.வோல்கவ், கெ.கெ.வதலாசப், வெ.வெ.பஷத்தாயவ், பெ.பெ.பித்ரேன்கோ, கெ.என்.பிரகோவ் ஆகியோர் ஆவர். இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் இரா.பாஸ்கரன்.

 

லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலைப் படிப்பதற்கு இந்தப் பகுதி சிறந்த அறிமுகமாக இருக்கும்.)

“ஆஸ்திரிய விஞ்ஞானியாகிய எர்ன்ஸ்ட் மாஹின் மாஹிசம் அல்லது அனுபவவாத விமரிசனம் எனும் தத்துவஞானப் போக்கைத்தான் அவர்கள் "பழையதாகிப்போன” மார்க்சியத் தத்துவஞானத்தைக் காட்டிலும் மேலான “மிக நவீன தத்துவஞானமாகக்” கருதினார்கள்.

இந்தத் தத்துவஞானத்தின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு கூறலாம்.

மக்களால் உலகத்தை (பொருட்களை, விஷயங்களை), அது “தானாகவே" எப்படியுள்ளதோ அதேபோல் அறிய முடியாது, ஏனெனில் அவர்கள் இந்த அறிதலின் போது பொருட்களையோ விஷயங்களையோ எதிர் கொள்ளவில்லை, மாறாக தங்களது உணர்ச்சிகளைத்தான் எதிர்கொள்கின்றனர். நாம் “பொருள்” என்று கூறுவது “நமது உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தமே” அன்றி வேறில்லை (இதையே மாஹியவாதி “தனிமங்களின் தொகுப்பு" என்று கூறியிருப்பார்). நமது உணர்ச்சிகளின் எல்லைகட்கு அப்பால் ஏதாவது ஒன்று இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது, நம்மால் தெரிந்து கொள்ளவும் முடியாது, ஏனெனில் உலகைப் பற்றிய சகலவித ஞானத்தையும் நாம் எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகளிலிருந்துதான் பெறுகின்றோம். எனவே மாஹிசத்தின்படி புறவய உலகை அறியவோ, உண்மையான ஞானத்தைப் பெறவோ, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் சமுதாயத்தின் விதிகளை அறியவோ நம்மால் முடியாது.

இந்தக் கருத்து நிலைகளில் இருந்து நடைமுறை ரீதியான நடவடிக்கைகளின் பாலான, உதாரணமாக அரசியல் நடவடிக்கைகளின் பாலான அகவய ரீதியான அனுகுமுறை உருவானது. புறவய உண்மை இல்லையெனில், எந்த புறவய விதிகளின் அடிப்படையில் நமது நடவடிக்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமோ அந்த விதிகளை அறிதல் இயலாதது என்றால், இறுதியில் எல்லாமே மனிதர்களின் விருப்பத்தையும் சித்தத்தையும் ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடும் அவர்களது திறமையையும் இது போன்ற பிறவற்றையும் பொறுத்தே அமையும் என்று மாஹிசத்தின் ஆதரவாளர்கள் கருதினார்கள்.

சுற்றியுள்ள உலகம் உண்மையில் "தானாகவே" எப்படியுள்ளதோ அதே மாதிரி அதை மனிதர்களால் சரியாக அறியமுடியும் என்பதையும் எனவே புறவய உண்மையைப் பெறவும் இயற்கை மற்றும் சமுதாயத்தின் புறவய விதிகளை அறியவும் மனிதர்களால் இயலும் என்பதையும் நிருபிப்பதுதான் லெனினுடைய நூலின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆம், உலகைப் பற்றிய ஞானம் உணர்ச்சிகளின் மூலம்தான் மனிதனுக்குக் கிடைக்கிறது. ஆனால் லெனின் காட்டியபடி இந்த உணர்ச்சிகள் மனிதனை உலகத்திடமிருந்து தடுத்துப் பிரிக்கக் கூடிய ஒரு சுவரோ அல்லது கவசமோ அல்ல, மாறாக இவை மனிதனை உலகத்தோடு இணைக்கக் கூடிய பாலமாகும். ஆம், உலகை அறியும் போது எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நமது உணர்ச்சி எதிர்கொள்கின்றோம், ஆனால் இந்த உணர்ச்சிகள் பொருட்களினுடைய புறவய குணங்களின் பிரதிபலிப்பாகும்.

நடைமுறை ரீதியான மனித நடவடிக்கையால் இது நிரூபிக்கப்படுகிறது. பொருட்களின் குணங்களை, அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றிய விதிகளை நாம் தவறாகப் பிரதிபலித்தால் நம்மால் விஷயங்களை -வீடு கட்டுதல், தானியம் விளைவித்தல், பறக்கும் சாதனங்களை விண்ணில் ஏவுதல் போன்றவற்றை— நமது ஆளுகைக்கு உட்படுத்த முடியாது; அப்போது அந்தப் பொருட்களும், விஷயங்களும் நம்மை “கேட்காது' போகும்: கட்டுமானங்கள் தகர்ந்துவிழக்கூடும், நிலத்தில் விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காமல் போகலாம், விண்ணில் பறக்கும் முயற்சிகள் சோகமாக முடியக் கூடும்.

நடைமுறைதான் உண்மையின் அளவுகோலாகும் என்பது மார்க்சிய-லெனினிய தத்துவஞானத்தின் அடிப்படைக் கருத்து நிலைகளில் ஒன்றாகும். மனிதர்களின் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் புறவய உலகிலுள்ள பொருட்கள், விஷயங்கள், புலப்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்புகளாகும் என்றும், மனித அறிதலின் உண்மை நடைமுறையால் (முதலாவதாக மனிதர்களின் பொருளாயத-உற்பத்தி நடவடிக்கை யால்) சரிபார்க்கப்படுகிறது என்றும், மனிதனால் புறவய உண்மையை பெற முடியும் என்றும் கூறக்கூடிய போதனை பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் எனும் நூலில் லெனினால் உருவாக்கப்பட்டது; இந்த லெனினிய போதனை பிரதிபலிப்பின் தத்துவம் எனும் பெயரைப் பெற்றது. இதை உருவாக்கியதன் மூலம் லெனின் மார்க்சிய தத்துவ சிந்தனையின் பொக்கிஷத்திற்கு மகத்தானதொரு காணிக்கை செலுத்தினார்.

பிரதிபலிப்பின் தத்துவம் திருத்தல்வாதிகளின் தத்துவ ஞானக் கருத்துக்களை மட்டுமல்லாது அவர்களுடைய அரசியல் வேலைதிட்டத்தையும் விமர்சனம் செய்ய அனுதித்தது. புறவய உண்மை இருப்பதை ஒத்துக்கொள்ளக் கூடிய தத்துவத்தால் மட்டுமே, எதார்த்தத்தின் புறவய விதிகளிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் வரும் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்திற்கான சித்தாந்த அடிப்படையாக இருக்க முடியும்.

புறவய உண்மையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை மாஹியவாதிகள் இன்னொரு நோக்கிலிருந்தும் தாக்க முற்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் பின்னால் திருத்தப்படாத, சரி செய்யப்படாத, ஏன் சமயங்களில் முற்றிலும் தூக்கி எறியப்பட்ட பொருட்கள் அல்லது புலப்பாடுகளைப் பற்றிய ஞானம் ஒன்று கூட இருக்காதிருக்கையில், புறவய உண்மையைப் பெறும் வாய்ப்பைப் பற்றி எப்படி பேசலாம் என்று அவர்கள் கேட்கின்றனர். திருத்தப்படும் உண்மைகள் எப்படிப்பட்ட உண்மைகள்?

ஆம், நமக்குத் தெரிந்த விஷயங்கள், அவற்றின் முறைகளைப் பற்றிய மனித ஞானம் முழுவதும் மாற்றமின்றி அப்படியே இருக்கவில்லை என்பது சொல்லாமலேயே அமையும். ஆனால் இது எதைக் குறிக்கிறது? விஷயங்களை அப்படியேயும் எனவே புறவய உண்மையையும் அறிதல் இயலாதது என்பதை இது முற்றிலுமாக குறிக்கவேயில்லை. அறிதல், பிரதிபலிப்பு என்பது ஒரு முறை நடைபெறும் செயல் அல்ல. மாறாக இது ஒரு நிகழ்ச்சிப் போக்கு என்பதையும் அறிதல் என்பது விஷயங்களின் சாராம்சத்தினுள் மனித பகுத்தறிவு உட்புகக்கூடிய ஒரு நீண்ட பாதை என்பதையும் மட்டும்தான் இது குறிக்கிறது; இந்த நீண்ட பாதை, பிரதிபலிக்கக் விஷயங்களின் "வெளிப்புறத்தை" மட்டும் கூடிய, அவற்றின் "மேற்பரப்பில் இருக்கும்" குணாம்சங்கள் மற்றும் உறவுகளைப் பிரதிபலிக்கக் கூடிய மேற்போக்கான ஞானத்திலிருந்து துவங்கி பின்னர் ஆழமான, நேரடியான கவனிப்பிலிருந்து மறைக்கப்பட்ட நியதிகளைக் கண்டறிவதற்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறாக, எந்த அளவிற்குப் புறவய உண்மையை அடைய முடியும் என்பதைப் பற்றி மட்டுமே இங்கு பேசப்படுகிறது.

முழுமையற்ற, ஒரு தரப்பான (சூட்சுமமான) ஞானத்திலிருந்து மேலும் அதிக முழுமையான, ஆழமான (திட்ட வட்டமான) ஞானத்திற்கான இயக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுவது பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற லெனினுடைய நூலின் இரண்டாவது முக்கியப் போக்காகும். கடந்த காலத்திய விஞ்ஞானத்திலும் கலாச்சாரத்திலும் இருந்த மதிப்புடைய அனைத்தையும் கிரகித்து அவற்றை மேற்கொண்டு வளர்க்க லெனினால் பாதுகாக்கப்படும் முறை, கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டுகிறது. மாஹிசத்தின் ருஷ்ய ஆதர வாளர்களுடைய தத்துவஞான நிலையோ (அ.பக்தானவ் மற்றும் அவரையொத்த கருத்துக்களை உடையவர்களும்) காலங்களின் இந்த இணைப்பு இழையை அறுத்து, "புதியதன்' பெயரால் “பழையன” எல்லாவற்றையுமே தூக்கி யெறிந்துவிட வேண்டுமெனக் கோரியது (இந்தப் “பழையதில்” பொருள்முதல்வாதமும் அடங்கும் என்பது கவனிக்கத் தக்கது). இந்தக் கோஷங்கள், இதுவரை இருந்ததிலேயே மிக "புரட்சிகரமான” மிக “பாட்டாளித் தனமான ஆடைகளை அணிந்து இருந்தன: "புதிய பாட்டாளி வர்க்க கலாச்சாரம் வாழ்க”, “கடந்த காலத்திய கலாச்சாரம் முழுவதும் ஒழிக, ஏனெனில் அதைச் சுரண்டும் வர்க்கங்கள்தான் வளர்த்தன”, இத்தியாதி. இந்தக் கோஷங்கள் எதில் போய் முடியும் என்பது நமக்கு இப்போது தெரியும் - மாவோயிச “கலாச்சாரப் புரட்சி" இவற்றை நடைமுறையில் நிறைவேற்றியது.

லெனினிய பிரதிபலிப்பின் தத்துவத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் உண்டு. மனிதனின் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் புறவய உலகிலுள்ள பொருட்களின் வடிவங்கள், மாதிரிகள் என்று லெனின் கூறும் போது இயந்திர ரீதியாக, உயிர்ப்பற்று பொருட்களை நமது சுய உணர்வில் "புகைப்படம்" பிடித்து வைப்பதைக் குறிக்கவில்லை. மனித மூளை புகைப்படச் சுருளோ அல்லது கண்ணாடியோ அல்ல. புறவய உலகை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும் திறமை, சமூகப் பயிற்சி மற்றும் கல்வியின் விளைவாகவும் சமூக நடைமுறையின் நிகழ்ச்சிப் போக்கிலும்தான் மனிதனிடம் உருவாகிறது. பொருட்களை மனக்கண் முன் கொணரும் திறமையும் கற்பனைத் திறனும் மனிதனிடம் வளர்ச்சியடையாவிடில் இந்தப் பிரதிபலிப்பு இயலாதது. பொருட்களை ஒப்பிடவும் வேறுபடுத்திப் பார்க்கவும், தனியான ஒன்றில் பொதுவானதையும், ஒரே மாதிரியானவற்றில் வேறுபாட்டையும் பார்க்க மனிதனுக்கு மனக் கண்ணால் பார்க்கும் திறமையும் கற்பனைத் திறனும் அவசியம். வேறுவார்த்தைகளில் சொல்வதெனில் பிரதிபலிப்பு என்பது ஒரே நேரத்தில் சுய உணர்வின் ஆக்கபூர்வ வமான படைப்பாற்றல் மிக்க நட வடிக்கையும் ஆகும்.

லெனினுடைய இந்தத் தத்துவஞானக் கருத்தமைப்புகள் அரசியல் போராட்டத்தில் முதலாவதாக புறவய நியதிகளையும் மற்றும் முரண்பாடுகளையும் சரியானபடி பிரதிபலித்து நிர்ணயித்து வெளிப்படுத்துவதிலும் இரண்டாவதாக வளர்ச்சியின் புறவய ரீதியான போக்குகளையும் சமூக வர்க்கங்களின் புறவயத் தேவைகளையும் தெளிவுபடுத்துவதிலும் மூன்றாவதாக “மாபெரும் ஸ்தாபன அமைப்பாளர்களின்” விருப்பத்திற்கும் சித்தத்திற்கும் ஏற்றவாறு இல்லாமல் புறவய நியதிகள் மற்றும் முற்போக்கு வர்க்கங் களின் நலன்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு எதார்த்தத்தை மாற்றுவதற்கான கடமைகளையும் கோஷங்களையும் உருவாக்கு வதிலும் கட்சிக்கு வழிகாட்டின.

லெனின் திருத்தல்வாத தத்துவகர்த்தாக்களிடமிருந்து இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலைகளை உறுதியாகப் பாதுகாத்து புறவய உண்மையின் மறுப்பை பற்றிய மாஹிச தத்துவஞானத்தை உறுதிப்படுத்தக் கூடியவைகளாக நவீன பௌதீகம், கணிதம் மற்றும் பல விஞ்ஞானங்களிலிருந்து மாஹிசவாதிகள் எடுத்துரைத்த மேற்கோள் எப்படி ஆதாரமற்றவை என்பதை காட் டினார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றண்டின் துவக்கத்திலும் நடைபெற்ற முக்கிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பகுப்பாய்வு செய்த லெனின், அவற்றைச் சரிவரப் புரிந்து கொண்டால், அவை மார்க்சிய தத்துவஞானக் கருத்து நிலைகளுக்கு முரண்படாததோடு மட்டுமின்றி மாறக அவற்றை ஊர்ஜிதப்படுத்துவதைத் தெளிவாகக் காண்பித்தார்.

1897ஆம் ஆண்டு மின்னணு கண்டுபிடிக்கப்பட்டது. வியக்கத்தக்க ஒரு விஷயம் வெளிப்பட்டது: இந்த மிகச் சிறு துகள்களின் எடை வேகத்தின் குறைவைப் பொறுத்து குறைந்தது. உடனே பல பௌதீக வல்லுநர்களும் அவர்களையடுத்து மார்க்சை மறுக்க நாட்டம் கொண்டிருந்த 'நவீன தத்துவஞானிகளும்", “பருப்பொருள் மறைகிறது" என்றும் பருப்பொருள் அல்லாத, பொருள் அல்லாத 'சக்தியாக” அது 'மாறுகிறது. என்றும் அறுதியிட்டு கூறத் துவங்கினார்கள்.

1896ஆம் ஆண்டு இயற்கை கதிரியக்கம் கண்டுபிடிக்கப் பட்டது: யுரேனிய அணுக்கரு மற்ற மூலகங்களின் அணுக்களாக பிளவுபட்டது. அணுக்கள் பிளவுபடக் கூடியவை, மாறுபடக் கூடியவை என்பதும் இரசாயன மூலகங்கள் ஒன்று மற்றதாக மாறக்கூடும் என்பதும் தெரிய வந்தது. எல்லாப் பொருட்களின் மூல அடிப்படையும் அணுக்களே என்ற கருத்துக்கள் அடியோடு மாறின. அணுக்களின் ஓரினத்தன்மை, அவற்றின் எளிய அமைப்பு, நிலைப்புத் தன்மை, பிரிக்க இயலாத் தன்மை ஆகியவற்றைப் பற்றிய பௌதீக வல்லுநர்களின் கருத்துக்கள் தகர்ந்து விழுந்தன. அப்போது பௌதீக வல்லுநர்களும் “நவீன தத்துவஞானிகளும்'' பொருள்முதல்வாதம் தகர்ந்து விடும், நமது ஞானம் மாறி வருவதால் அதில் புறவயத்தன்மையுடையது எதுவுமே இல்லை என்றெல்லாம் அறிவித்தனர்.

பொருள்முதல்வாதம் தகர்ந்து விழாது, மாறாக முந்தைய பௌதீகத்தின் எளிமையாக்கப்பட்ட (இயந்திர ரீதியான, இயக்க மறுப்பியல் ரீதியான) கருத்துக்கள்தான் தகர்ந்து விழும், பருப்பொருள் மறையவில்லை. பருப்பொருளை எந்த எல்லை வரை நாம் அறிந்திருந்தோமோ அந்த எல்லைதான் மறைந்துவிட்டது என்று லெனின் அவர்களுக்குப் பதில் அளித்தார்.

19ஆம் - 20ஆம் நூற்றாண்டுகளின் எல்லையில் நடைபெற்ற நவீன இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைப் பகுப்பாய்வு செய்த லெனின், இயற்கை விஞ்ஞானங்களும் தத்துவஞானமும் ஒன்றிற்கொன்று மாற்றீடாக அமையாமல் ஒன்றையொன்று இட்டு நிரப்பி, செழுமைப்படுத்தி, இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் சக்தியையும் உண்மையையும் வெளிப்படுத்தி உலகை அறிந்து மாற்றியமைக்கும் மகத்தான பணியில் நண்பர்களாய்-கூட்டாளிகளாய் செயல் படுகின்றன என்று காட்டினார்.

"பருப்பொருள்” கருத்தினத்தைப் பற்றியும் மற்றும் இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை கருத்து நிலைகளைப் பற்றியும் செய்யப்பட்ட ஆழ்ந்த ஆராய்ச்சி, வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துறையில் லெனினால் முன்னெடுத்து வைக்கப்பட்ட ஒரு பெரும் அடியை முன் நிர்ணயம் செய்தது.

பக்தானல், சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையைச் சார்ந்திருக்கவில்லை, அவையிரண்டும் முற்றிலும் சரிசமமானவை (ஒரே மாதிரியானவை) என்ற ஆய்வுரையின் உதவியால் மார்க்சியத்தைத் "திருத்துவதற்குச்" செய்த முயற்சிகளை லெனின் கண்டித்தார். மனிதர்கள் எதைச் செய்தாலும் அவர்கள் குறிப்பிட்ட லட்சியங்களை, அதாவது திட்டவட்டமான உணர்வால் வழி நடத்தப்பட்டு இயங்குகின்றார்கள்; எனவே உணர்வைப் பொறுத்தமட்டில் சமுதாய வாழ்நிலை முதன்மையானதாகக் கூறுவது தவறானது என்று பக்தானவ் வாதிட்டார்.

மனிதர்கள் செயல்படும் முன் குறிப்பிட்ட லட்சியங்களைத் தங்கள் முன் வைக்கின்றார்கள் என்பது சொல்லாமலேயே அமையும் என்கிறார் லெனின்; ஆனால் முதலாவதாக, இந்த லட்சியங்கள் சமுதாய வாழ்நிலையின் வளர்ச்சிப் போக்குகள் மற்றும் முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகும், இவை சமுதாய வாழ்நிலையால்தான் ஏற்படுத்தப் படுகின்றன; இரண்டாவதாக, தங்கள் முன் குறிப்பிட்ட லட்சியங்களை வைத்த மக்கள் சமுதாயத்தில் செயல்பட்டாலும், இந்த நடவடிக்கையின் புறவய ரீதியான விளைவுகள், குறிப்பாக பரந்த வரலாற்று தொடர்பில் இவற்றை எடுத்துக் கொண்டால், முன்னர் முன்வைக்கப்பட்ட லட்சியங்களில் இருந்து சாதாரணமாக மாறுபடும். ஏனெனில் தீர்மானகரமான முடிவாக வாழ்நிலையும் அதன் புறவய விதிகளும் வாய்ப்புகளும்தான் இருக்கின்றன, உணர்வு என்பதோ இந்த வாழ்நிலையின் (கிட்டத்தட்ட சரியான) பிரதிபலிப்பு மட்டுமே ஆகும் லெனின் தொடர்ந்து கூறினார்.

வி.இ.லெனின், அ. அ.பக்தானவ் ஆகிய இருவரின் தத்துவஞான நிலைகளில் நிலவிய மாறுபாடு அவர்களது அரசியல் நிலைகளின் மாறுபாட்டை முன் நிர்ணயம் செய்தது. லெனினிய நிலை என்பது சமுதாய வாழ்நிலையின் புறவய ரீதியான போக்குகளையும் உழைக்கும் வர்க்கங்களின் புறவய ரீதியான நலன்களையும் ஆராய்ந்து எதார்த்தத்தை அதன் உள் விதிமுறைகளையொட்டி மாற்றியமைக்கும் ஒரு நிலையாகும்; பக்தானவின் நிலை என்பது செயல்பாட்டின் லட்சியங்களை அகவய ரீதியாக, தன்னிச்சையாக நிர்ணயிக்கக் கூடிய, உழைப்பாளிகளின் புறவய நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத, வரலாற்றைப் படைக்கும் முக்கிய சக்தியாக மக்கள் திரளினரைக் கருதாது 'மகத்த ஸ்தாபன அமைப்பாளர்களை” அத்தகைய சக்தியாகக் கருதும் நிலையாகும்.

மார்க்சிய தத்துவஞானத்தால் (இயக்க இயல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சித் தத்துவத்தின் அடிப்படையாக, அதன் போராட்டத்தின் போர்த்தந்திர மற்றும் நடைமுறைத் தந்திரத்தின் அடித்தளமாக இருக்க இயலும் என்று லெனின் நிரூபித்தார். இந்த லெனினியக் கருத்து நிலை பூர்ஷ்வா சித்தாந்தத்திற்கு எதிராகவும் பல்வேறு சந்தர்ப்பவாத மற்றும் திருத்தல்வாதப் போக்குகளுக்கு எதிராகவும் இன்று நடைபெறும் போராட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தத்துவஞானம் என்பது நடுநிலைமையானதாக இருக்க முடியாது, இயற்கையாகவே அது வர்க்கத் தன்மையை, கட்சித் தன்மையை உடையது என்று லெனின் நிரூபித்தார். மார்க்சிய தத்துவ ஞானத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய தத்துவார்த்த ஆராய்ச்சிக்கு முன்போன்றே தொடர்ந்து லெனின் பெரும் முக்கியத்துவம் அளித்து வந்தார். தத்துவஞான ஏடுகள் எனும் அவரது புகழ் பெற்ற படைப்பு இதற்கு சான்றாகும். இந்நூலில் ஹெகல், அரிஸ்டாட்டில், ஃபார்பாஹ் போன்ற தத்துவஞானிகள், விஞ்ஞானிகளின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான பகுதிகளும் லெனினுடைய குறிப்புகளும் பெரும்பாலும் 1914-1915ஆம் ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட பல சிறு பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

தத்துவஞான ஏடுகள் நூலின் முக்கிய உள்ளடக்கத்தை உருவாக்கிய விஷயங்கள், பொருள்முதல்வாத இயக்க இயலைப் பற்றி தனி நூல் ஒன்றை எழுத லெனின் திட்டமிட்டிருந்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவரால் இயலவில்லை. தத்துவஞான ஏடுகள் நூல் சிறு கூறுகளால் ஆன ஒரு நூல் என்றாலும் கூட, பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும், லெனினுடைய மற்ற பல நூல்கள், கட்டுரைகளுடன் சேர்ந்து மார்க்சிய இயக்க இயலைப் படைப்பாற்றலோடு வளர்க்கும் பாதையில் இந்நூல் ஒரு புதிய அடி என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு செழிப்பானது.”

(மார்கசிய- லெனினிய அடிப்படைகள்; பக்கம் 167-175)