("மார்க்சியச்
சிந்தனை மையம்" நடத்தும் இணையம் வழிச் சொற்பொழிவில்
(18-09-2023) "பொருள்முதல்வாதப்
பார்வையில் அத்வைதம்"
என்கிற தலைப்பில் பேசியது)
முகநூலில் வீடியோவாகக் காண:-
https://www.facebook.com/100018542332482/videos/981750796264013
“பொருள்முதல்வாதப் பார்வையில் அத்வைதம்” என்பது இன்று
எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு.
“பொருள்முதல்வாதப் பார்வையில் அத்வைதம்” என்று கூறும்போதே
இரண்டும் வெவ்வேறு என்பது தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. பொருள்முதல்வாதம் என்பது இங்குள்ள
பலருக்குத் தெரிந்திருக்கும். மார்க்சியச் சிந்தனை மையத்தில் உள்ள தோழர்கள் அனைவருக்கும்
தெரிந்திருக்கும். அத்வைதம் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பலர் அறியாமல்
இருக்கலாம்.
அத்வைதம் என்கிற சொல்லின்
பொருளை முதலில் பார்ப்போம். அத்வைதம் என்றால் துவைதத்துக்கு எதிரானது, மாறானது. “துவி”
என்றால் இரண்டு, இரண்டு பொருளை ஏற்றுக் கொண்ட தத்துவத்துக்கு துவைதம். அத்வைதம் என்றால்
இரண்டு பொருளை ஏற்றுக் கொள்ளாதது. அத்வைதம் என்றால் இரண்டு அல்லாதது அதாவது ஒன்று.
இந்த, ஒன்று, இரண்டு என்பது எதைக் குறிக்கிறது என்பதை பார்ப்போம்.
துவைதம் என்றால் இரணடு
பொருள் என்று பார்த்தோம் அல்லவா, அந்த இரண்டில் ஒன்று ஆத்மாவையும் மற்றொன்று பரமாத்மாவையும்
குறிக்கிறது, ஆத்மாவை, ஜீவன் என்றும் பரமாத்மாவை, பிரம்மம் என்றும் கூறலாம்.
ஆத்மா வேறு பரமாத்மா வேறு
என்று இரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பது துவைதம். அதாவது ஜீவன் வேறு பிரம்மம் வேறு
என்று துவைதம் பிரித்துக் கூறுகிறது.
இங்கே ஜீவன் என்பது மனிதனின்
உயிரைக் குறிக்கவில்லை, ஆத்மாவையே குறிக்கிறது. உயிர் மனிதனது பிறப்பின் போது இருக்கிறது
மறையும் போது உயிரும் மறைந்து போகிறது. ஆனால் ஆத்மா என்பது மனிதனாகப் பிறப்புக்கு முன்பும்
இருந்தது, மறைந்த பின்பும் இருக்கப் போகிறது என்று ஆத்மாவை ஏற்றுக் கொண்ட தத்துவங்கள்
கூறுகின்றன. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது.
பிரபஞ்சத்தைப் படைத்தது
பரமாத்மா, அதாவது பிரம்மம். பிரம்மத்துக்கு தோற்றமும் முடிவும் கிடையாது.
இந்த இரண்டு என்பதை அத்வைதம்
ஏற்றுக் கொள்ள வில்லை, பரமாத்மாவை மட்டுமே அதாவது பிரம்மத்தை மட்டுமே ஏற்கிறது. பிரபஞ்சத்தையும்
உயிரையும் அத்வைதம் மாயை என்கிறது. பிரம்மம் என்கிற ஒன்றை மட்டுமே அத்வைதம் ஒப்புக்
கொள்கிறது.
ஒருமையே அத்வைதத்தின் அடிப்படைக்
கொள்கை. அந்த ஒருமை என்பது பிரம்மம். பிரம்மம் மட்டுமே உண்மையானது மற்ற அனைத்தும் மாயையானது
என்பதே அத்வைதத்தின் கொள்கை.
படைக்கும் சக்தியை, தத்துவம்
பிரம்மம் என்று கூறுகிறது. இதற்கு உருவம் கிடையாது.
படைக்கும் சக்தியை மதம் கடவுள் என்று அழைக்கிறது, கடவுளுக்கு உருவம் கொடுக்கப்படுகிறது.
அந்த உருவத்துக்கு மனைவியும்கூட இருக்கிறார் என்பது நமக்குத் தெரிந்ததே.
உலகையும் ஆத்மாவையும் அத்வைதம்
ஏன் மறுக்கிறது என்பதைப் பார்ப்போம். அத்வைதம் பரமாத்மாவை நித்திய பொருளாகப் பார்க்கிறது, அதாவது அதற்கு தோற்றமும் அழிவும் கிடையாது.
ஆனால் மனிதனும் பிரபஞ்சமும் மாறும் பொருள், மேலும், அழியும் பொருள், அதை அநித்தியப் பொருள் என்று அத்வைதம் கூறுகிறது.
இதை ஆதி சங்கரர் நித்ய, அநித்தியப் பொருள்
பற்றிய விவேகம் என்கிறார்.
விவேகம் என்றால் அறிவு.
அத்வைதம் அறிவாக எதைக் கருதுகிறது என்றால், நித்தியப் பொருள் எது?, அநித்தியப் பொருள்
எது? என்று பிரித்து அறிவதே விவேகம், என்கிறது அத்வைதம்.
தத்துவம் இரண்டு போக்குகளைக் கொண்டது ஒன்று பொருள்முதல்வாதம்
மற்றொன்று கருத்துமுதல்வாதம் (materialism and idealism). இந்த பிரபஞ்சம் எதோ ஒரு
வகையில் படைக்கப்பட்டது என்று கூறுவது கருத்துமுதல்வாதம். கருத்துமுதல்வாதத்தை இரண்டு
விதமாக பிரிக்கலாம். ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம்
(subjective
idealism and objective idealism).
புறநிலை கருத்துமுதல்வாதம்,
பிரபஞ்சத்தைப் படைக்கும் அந்த சக்தியை புறத்தில், அதாவது இந்த உலகுக்கு அப்பால் இருக்கிறது
என்று கருதுகிறது. அதனால்தான் இதற்கு புறநிலை கருத்துமுதல்வாதம் (objective
idealism) என்று
பெயர். அந்தப் படைக்கும் சக்தியை புறத்தில் காணாது மனதில், அதாவது அகத்தில் காண்பது
அகநிலை கருத்துமுதல்வாதம் (subjective
idealism).
அத்வைதத் தத்துவம் அகநிலை
கருத்துமுதல்வாதம் ஆகும்.
இந்தியாவில் உள்ள தத்துவங்கள்
கருத்துமுதல்வாதத்தை மட்டும் கொண்டதாக இல்லை, பொருள்முதல்வாதம் பல இருக்கிறது. இந்திய
தத்துவங்களில் பொருளமுதல்வாதக் கூறுகளைக் கொண்ட தத்துவங்கள் நிறைய இருக்கிறது, குறிப்பாக
சொல்ல வேண்டும் என்றால் உலகாயதம், பூதவாதம், சாங்கியம், வைசேஷிகம் போன்றவை. இதன் வளர்ச்சியே,
இன்று நாம் மார்க்சிய தத்துவமாகக் கூறப்படுகிற இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே
இந்திய கருத்துமுதல்வாதம் உலகாயதப் பார்வையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இன்று
நவீன பொருள்முதல்வாதத்தின் பார்வையில் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, நா.வானமாமலை போன்றோர்கள்
நவீன உலகாயதமான, மார்க்சியத் தத்துவமான, இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வையில் கருத்துமுதல்வாதத்தை
விமர்சித்துள்ளனர். அதன் அதனடிப்படையில் தான் இன்று நாம் அத்வைதத்தைப் பார்க்கிறோம்.
ஆதி சங்கரர்தான் அத்வைதத்தைப்
படைத்தாரா? என்ற கேள்விக்கு, இல்லை என்பதே பதில் ஆகும். அத்வைதக் கருத்துக்கள் உபநிடதங்களிலேயே
காணப்படுகிறது. அங்கே அத்வைதம் விரிவாகப் பேசவில்லை என்றாலும் தொடக்க நிலையில் உள்ளது.
“தத்வமசி” என்கிற அத்வைத மகாவாக்கியங்கள் உபநிடதத்தில் காணப்படுகிறது.
கிபி எட்டாம் நூற்றாண்டில்,
இன்றைய கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த ஆதி சங்கரர் அத்வைதத்தை நிறுவனப்படுத்தினார்.
அதை ஒழுங்குபடுத்தி தொகுத்து, வகுத்துத் தந்தார். அவர் இல்லாமல் இன்றைய நிலையில் உள்ள
அத்வைதத்தைக் காண முடியாது. அந்தளவுக்கு அத்வைதத்துக்கு அவர் பங்களிப்பை செய்துள்ளார்.
அதனால் அத்வைதத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் ஆதி சங்கரரிடம் இருந்தே தொடங்க
வேண்டி இருக்கிறது. விவேகானந்தர், ரமணர் ஆகியோரும் அத்வைதத்தை விளக்கியவர்களே.
ஆதிசங்கரர் பல நூல்களை
எழுதி உள்ளார். அதில் தோத்திரப் பாடல்களும் இருக்கின்றன, சித்தாந்தப் பாடல்களும் இருக்கின்றன,
மேலும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய நூல்களுக்கும் பாஷியம்
அதாவது விரிவுரையும் எழுதி உள்ளார். அவரது விரிவுரைகளில் அத்வைத அறிவு முழுமையாக வெளிப்படுகிறது
என்று கூறலாம். அதில்தான் அத்வைதத்துக்கு மாறான தத்துவத்தை ஆதி சங்கரர் விமர்சித்துள்ளார்.
பிற தத்துவங்களை பரப்பக்கமாகக்
கூறி அதனை விமர்சித்து தனது அத்வைத சித்தாந்தத்தை ஆதி சங்கரர் நிறுவி உள்ளார். இதுதான்
இந்தியத் தத்துவ விமர்சன முறை ஆகும். ஒவ்வொருவரும் தமக்கு எதிரான தத்துவங்களை பரபக்கமாகத்
தொகுத்துத்தந்து அதனை விமர்சனம் செய்து தமது சித்தாந்தத்தை நிறுவுவார்கள்.
ஆதி சங்கரர் எழுதிய பரபக்கத்தில்
அதாவது அவர் எதிர்த்த தத்துவங்களில் இந்திய தொடக்கநிலை பொருள்முதல்வாதமான உலகாயதம்,
சாங்கியம் போன்ற தத்துவங்களும் காணப்படுகிறது. அங்கே அவர் அன்றையப் பொருள்முதல்வாதத்
தத்துவத்தை மறுத்து அத்வைதத்தை நிறுவியுள்ளார். இன்று நாம் அத்வைதம் என்கிற அகநிலை
கருத்துமுதல்வாதத் தத்துவத்தை மறுத்து நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவத்தை
நிறுவப் போகிறோம். இது இந்திய தத்துவ விமர்சன முறை ஆகும்.
டூரிங்குக்கு மறுப்பு நூலில் எங்கெல்ஸ் கூறியதை
இங்கே நினைவு கொள்ள வேண்டும். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை அன்றைய
தொடக்க நிலை பொருள்முதல்வாதத்தால் விளக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினையில் தெளிவு
காணும் பொருட்டு, கருத்துமுதல்வாதம் உடலில் இருந்து ஆத்மா பிரிக்கப்பட்டதாகவும், இறுதியில்
ஆத்மாவுக்கு இறப்பில்லாத நிலை பற்றிய விளக்கத்தினாலும், மேலும் ஒரு கடவுள் கோட்பாட்டையும்
படைத்தது.
இதன் மூலம் பழைய பொருள்முதல்வாதம்
பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக,
சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவு, விஞ்ஞான வழியில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இன்றைய நிலையில் மார்க்சிய தத்துவமான நவீன பொருள்முதல்வாதத்தால் கருத்துமுதல்வாதம்
நிலைமறுக்கப்பட்டது என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
விளக்குகிற அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலமாக, சிந்தனை எவ்வாறு
தோன்றுகிறது என்பதை பருப்பொருளுக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்வை விஞ்ஞான வழிமுறையில்
விளக்கப்பட்டுள்ளது.
எங்கெல்ஸ்:-
“தொன்மைக் காலத் தத்துவம் பழைமையான, தன்னியல்பாக உருவான பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆத்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆத்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியாக ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால், தத்துவத்தின் மேலதிக வளர்ச்சிப் போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது.”
(டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 241)
ஆதி சங்கரரின் சித்தாந்த
நூல்களில் மிகவும் முக்கியமானது என்று மூன்றைக் குறிப்பிடலாம். 1.தத்துவ போதம், 2.ஆத்ம
போதம், 3.விவேக சூடாமணி. இதில் உள்ள விவேக சூடாமணியை மட்டும் படித்தாலேயே அத்வைதத்தை
முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.
அத்வைதத்தை ஆதி சங்கரர்
எவ்வாறு விளக்குகிறார் என்பதை அடுத்துப் பார்ப்போம்.
அதற்கு முதலில் ஆதி சங்கரர்
கூறுகிற சாதன சதுஷ்டயம் என்பதை அறிந்து
கொள்ள வேண்டும். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு உறுப்புகள் அல்லது நான்கு கருவிகள்
என்று பொருள் ஆகும். அந்த நான்கைப் பார்க்கலாம்.
முதலாவது, நித்தியப் பொருள் அநித்தியப் பொருள் ஆகியவற்றை
அறிகிற அறிவு. நித்திய என்றால் நிலைத்த என்று பொருள், எது நிலைத்த பொருள், எது
நிலையற்ற பொருள் என்பதை பிரித்து அறிவது முதலாவது.
இரண்டாவது வைராக்கியம். இவ்வுலகம் மறுவுலகம் அகிய பொருட்களை
அனுபவிப்பதில் ஈடுபாடில்லாமல் இருக்கும், பற்றற்ற நிலையே வைராக்கியம். அதர்வது இந்த
உலகத்தில் உள்ள பொருட்களின் மூலம் கிடைக்கிற இன்பம, துன்பமாக இருந்தாலும் சரி, சொர்கம்
நரகம் போன்ற புற உலகத்தில் கிடைக்கும் இன்பத துன்பமாக இருந்தாலும் சரி அனைத்தின் மீதும்
ஈடுபாடு செலுத்தாமல் பற்றற்ற நிலைனை அடைவதே வைராக்கியம்.
மூன்றாவது ஷட் சம்பந்தி அதாவது ஆறு பண்பு நலன்கள். இதில்
ஆறு விசயங்கள் பேசப்படுகிறது. இந்த ஆறு விசங்களைப் பார்த்துவிட்டு, நான்கு உறுப்புகளில்
உள்ள நான்காவதை அடுத்துப பார்ப்போம்
1. சமம், 2. தமம், 3. உபரதி, 4. திதிக்ஷா, 5. சிரத்தை, 6. சமாதானம் என்கிற இந்த ஆறையும் சேர்த்தே
ஷட்சம்பந்தி என்று கூறப்படுகிறது. இந்த சொற்களைக் கண்டு மிரளத் தேவையில்லை. இது சமஸ்கிருதச்
சொற்கள் அதனால் நமக்குப் உடனடியாகப் புரியவில்லை, இதில் உள்ள சிரத்தை என்பது ஒரளவுக்குக்
கேட்ட சொல்லாக இருக்கலாம்.
ஒவ்வொரு சொல்லின் விளக்கத்தைப்
பார்ப்போம்.
1. சமம் என்றால் மனவடக்கம். புறவுலக ஆசைகளை மனதில் அடக்குதல்
மனவடக்கம். அதாவது புறத்தில் இருக்கும் பொருட்களின் மீது ஆசை கொள்ளாது, மனதை அடக்கிக்
கொள்ளுதல் மனவடக்கம்.
2. உபரதி என்றால், அவரவருக்கு விதிக்கப்பட்ட சுயதர்மத்தை
அதாவது பிறப்பால் விதிக்கப்பட்ட கடமையை தவறாது செய்வது ஆகும்.
3. தமம் என்றால் புலனடக்கம். புறவுலகில் ஈடுபடாமல் ஐம்புலன்களை
அடக்குதல் புலனடக்கம் ஆகும். ஐம்புலன்களின் மூலமே புறவுலகம் அறியப்படுகிறது, அவ்வாறு
அறிவதினாலேயே ஆசை தோன்றுகிறது. ஆசை அடக்க வேண்டும் என்றால் ஐம்புலன்களை அடக்க வேண்டும்.
4. திதிக்ஷா என்றால் குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு
போன்ற இரட்டைகளைப் பொறுத்துக் கொள்ளுதல். இந்த இரட்டைகள் ஒன்றுக்கு ஒன்று எதிரிடையான
தன்மை கொண்டவை, இந்த இரட்டைத் தன்மையை சமமாக மதிக்க வேண்டும், அதனைப் பொறுத்துக் கொள்ள
வேண்டும். இதுதான் திதிக்ஷா. பணக்காரன்-ஏழை என்கிற இரட்டையையும் இதில் நாம் சேர்த்துக்
கொள்ளலாம். குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம் போன்றவற்றைப் பொறுங்ததுக் கொள்வது போல பணக்காரன்-ஏழை
என்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதினால், பணக்காரன்-ஏழை என்பதையும்
சேர்த்துக் கொள்ளலாம்.
5. சிரத்தை என்றால் நம்பிக்கைக் கொள்ளுதல். வேதாந்தத்தின்
மிது நம்பிக்கைக் கொள்ளுதல், இதனை உபதேசிக்கிற குருவினிடம் நம்பிக்கைக் கொள்ளுதல் சிரத்தை
ஆகும். சிரத்தையோடு இருந்தல் என்றால் நம்பிக்கையோடு இருத்தல் என்று பொருளாகும்.
6. சமாதானம் என்றால் மனதை ஒருமுகப்படுத்துதல். மனதையும் புலன்களையும்
அடக்கி ஒருமுகப்படுத்துதல் சமாதானம். இந்த ஆறையும் சேர்த்ததே ஷட் சம்பந்தி அதாவது ஆறு
பண்பு நலன்கள் என்று அழைக்கப்படுகிறது.
சாதன சதுஷ்டயம் அதாவது நான்கு உறுப்புகளில் மூன்றைப் பார்த்துவிட்டோம்
இறுதியான நான்காவது மோட்சத்தில் விருப்பம்.
மோட்சத்தில் விருப்பம் கொள்ளுதல் என்றால்
உலக வாழ்க்கையில் ஆசைகொள்ளாது முக்தி அடைய வேண்டும் என்பதில் விரும்பம் கொள்ளுதல்.
இந்த நான்கையும் கடைப்பிடிப்பது
அத்வைதத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும்.
ஒவ்வொரு தத்துவத்துக்கும்
பின்னால் வர்க்க நலன்கள் அடங்கி இருக்கிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. இதை
அத்வைதம் போன்ற கருத்துமுதல்வாதம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் தத்துவங்களின் நோக்கத்தை
வைத்து அதனதன் வர்க்க நலனை விளக்க பொருள்முதல்வாதத்தால் முடியும்.
அத்வைதத்தின் நோக்கம் முக்தி
அடைவதே ஆகும். முக்தி அடைவதற்கே அத்வைதம் வழிகாட்டுகிறது. மனிதன் சமூகத்தில் இருந்து
உடனே விலகி, முக்தியை அடைவதற்கு வழியை அது காட்டுகிறதா என்றால், அதுதான் இல்லை.
முக்திதான் நோக்கம் என்றால்,
உலகை வெறுத்து, உடனடியாக முக்திக்கான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும். ஆனால்
அத்வைதம் அப்படி செய்யவில்லை.
முக்தி அடைவதற்கு சமூகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே
அத்வைதத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்தில்தான் அத்வைதத்தின் வர்க்க
நலன்கள் அடங்கி இருக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை
மனிதன் துன்பத்துக்கு ஆளாகிறான் என்பது இன்றைய சமூக நிலைமைகளால் நாம் அறிந்து கொள்ள
முடிகிறது. ஒருவன் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் வரைதான் உழைக்க முடியும். 20 மணிநேரம்
உழைத்த வரலாறும் இருக்கிறது. இன்று 8 மணிநேர உழைப்பு என்பது சட்டமாக இருக்கிறது. இந்த
எட்டு மணிநேரம் உழைக்கிற உழைப்பாளிகளையும், பல இடங்களில் 10 அல்லது 12 மணிநேரம் உழைக்கிற
உழைப்பாளிகளையும் இன்று நாம் பார்க்க முடிகிறது. அப்படி உழைத்தும் அந்த உழைப்பாளியின்
குடும்பத்துக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவை பற்றாகுறையாகவே
இருக்கிறது. இன்றைய நிலையில் மருத்துவ செலவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக நாள் முழுதும் உழைத்தும்
உழைப்பாளிகளுக்குப் பற்றாக் குறையாகவே இருக்கிறது.
இதன் அடிப்படையில் அத்வைதம்
என்ன கூறுகிறது என்றால், சம்சாரம் என்பது பெருங்கடல், அதைக் கடக்கவே முடியாது. தமிழில்
இல்லறம் என்று கூறப்படுவதை அத்வைதம் சம்சார
சாகரம் என்கிறது. சாகரம் என்றால் கடல். சம்சாரம் ஏன் கடலாகக் கூறப்படுகிறது என்றால்,
பெருங்கடல் போல மனிதனது பிறப்பு தொடர்ந்து விரிந்து செல்கிறது. செய்கின்ற வினையினால்
அதாவது கர்மத்தினால் பிறவி தொடர்கிறது. பிறப்பதைத் தடுக்க வேண்டும் என்றால் கர்மத்தை,
அதாவது பிறப்பால் விதிக்கப்பட்ட வேலையை, பலன் எதிர்பார்க்காமல் பின்பற்ற வேண்டும்.
அப்படிப் பின்பற்றினால் கர்மங்கள் ஏற்படுவதில்லை, பிறவிகள் முடிவுக்கு வருகிறது, அடுத்து
முக்திக்கு செல்ல வேண்டும்.
சம்சாரக் கடலைக் கடக்க
வேண்டும் என்றால் முக்தி மீது நாட்டம் வேண்டும் என்று ஏன் அத்வைதம் கூறுகிறது என்பதை
அடுத்துப் பார்ப்போம்.
மாறிக் கொண்டும் அழிந்துக்
கொண்டும் இருக்கிற இந்த புறவுலகில் நாட்டம் செலுத்துவதினால் கிடைக்கும் இன்பம் நிலையானதில்லை.
இந்த உலகம் மாயை ஆகும். இந்த மாயையில் இருந்து விடுபட்டு முக்தி அடைய வேண்டும். முக்தி
என்பது பரமாத்மாவுடன் ஒன்றுவதாகும். அந்த பரமாத்மா மட்டுமே நித்தியப் பொருள், உண்மையில்
அது மட்டுமே இருக்கிறது. அதில் இருந்து பிரிந்ததாக கருதுவது, அதில் இருந்து ஆத்மா,
பிரபஞ்சம் தோன்றியதாக கருதுவது மாயை என்கிறது அத்வைதம்.
மாயை என்றால் முழுமையாக
இல்லை என்ற பொருளில் அத்வைதம் கூறவில்லை.
“மாயை
ஆனது, இருப்பு உடையது அன்று, இருப்பு இல்லாதது அன்று, இருவகைப்பட்டதும் அன்று. பகுக்கப்பட்டதாகவோ,
பகுக்கபடாததாகவோ இருவகைப்பட்டதாகவோ இல்லை. உறுப்புகளை உடையதாகவோ, உறுப்புகள் இல்லாததாகவோ,
இருவகைப்பட்டதாகவோ இல்லை, மிகவும் ஆச்சரியமானது மாயை. அதை இப்படிப்பட்டது என்று வசனங்களால்
விளக்கிக் கூற முடியாத உருவம் கொண்டது.” (விவேக சூடாமணி - 109)
-என்கிறார் ஆதி சங்கரர்.
அதாவது மாயை என்பதை இருக்கிறது என்று கூறிட முடியாது, இல்லை என்றும் கூறிட முடியாது.
மாயை அநிர்வசனீய உருவம் கொண்டது, அதாவது வசனங்களால் விளக்கிக் கூறிட முடியாத ஒன்று.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மாயை என்பது முற்ற முழுக்க இல்லை என்ற பொருளில்
அத்வைதம் கூறிடவில்லை.
குழப்பமாக இருக்கிறதா,
இந்த குழப்பத்தைத் தவிர்க்க ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
ஒரு மனிதன் தூங்கும் போது
கனவு காண்கிறான். அதில் ஒரு சிங்கம் அவனைத் துரத்துகிறது, அவன் தலைதெறிக்க ஓடுகிறான்.
மூச்சு வாங்குகிறது, தாகம் எடுக்கிறது. அந்த நேரத்தில் முழிப்பு வந்துவிடுகிறது. கனவு
தான் என்று அமைதி கொள்கிறான், ஆனால் அவனுக்கு வேர்க்கிறது, தாகம் எடுக்கிறது. தண்ணீர்
குடித்தப் பிறகே தாகம் அடங்குகிறது. அவன் கண்டது கனவுதான் அதனால் அதை இல்லை என்று கூறலாம்,
ஆனால் வேர்க்கிறதே, தாகம் எடுக்கிறதே, தண்ணீர் குடித்தப்பிறகே தாகம் தீர்கிறதே. அப்படி
என்றால் அது ஒரு வகையில் இருக்கிறது என்று கூற வேண்டி வருகிறது. கனவு என்பது உண்மை
அல்ல ஆனால் வேர்ப்பதைக் கொண்டும், தாகம் எடுப்பதைக் கொண்டும் உண்மை என்றும் கூற வேண்டி
வருகிறது என்பது அத்வைதத்தின் விளக்கமாகும்.
கனவு மாயையானது. அதாவது கனவு உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை.
அதே போல நனவும் உண்மை இல்லை பொய்யும் இல்லை என்கிறது அத்வைதம்.
மாறிக் கொண்டிருக்கிற அனைத்தும்
உண்மையானது அல்ல. அநித்தியானது உண்மை அல்ல. மாறாததே உண்மையானது, நித்தியமானது. எது
மாறாதது என்றால் பரமார்த்மா, அதாவது பிரம்மம். பிரம்மம் நித்தியமானது, மாறுவதில்லை,
தேய்வதில்லை, பிறப்பதும் இல்லை, மறைவதும் இல்லை என்பதே அத்வைதத்தின் கொள்கை.
மேலே எளிய உதாரணமாகப் பார்க்கப்பட்டதை
ஒரு தத்துவ விளக்கமாக அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.
கனவு, நனவு ஆகியவற்றை அத்வைதம்
மனிதனின் மூன்று அவஸ்த்தைகள் மூலம் விளக்குகிறது.
மூன்று அவஸ்தைகள் என்றால்
மூன்று நிலைகள் என்று பொருளாகும். முதலாவது நிலை விழிப்பு நிலை, இரண்டாவது நிலை
கனவு நிலை, மூன்றாவது நிலை ஆழ்ந்த உறக்க
நிலை.
ஐம்புலன்களின் மூலம், வெளி
உலகம் அறியப்படுவது விழிப்பு நிலை. விழிப்பு
நிலையில்தான் வெளிப் பொருட்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அடுத்து கனவு நிலை. விழிப்பு
நிலையில் எது பார்க்கப்பட்டதோ, எது கேட்கப்பட்டதோ அதனால் ஏற்படும் தொடர்பால் தூக்கத்தில்
எந்த உலகம் தோன்றுகிறதோ அது கனவு நிலை. கனவுநிலையை
அரைத் தூக்க நிலை என்று கூறலாம்.
மூன்றாவது உறக்க நிலை, அதாவது ஆழ்ந்த தூக்க நிலை. “அடித்துப்
போட்டது போல தூங்கிவிட்டேன், எனக்கு எதுவும் அப்போது தெரியவில்லை, ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.”
என்று கூறப்படும் நிலையே உறக்க நிலை. அப்போது கிடைக்கிற ஆனந்தமே உண்மையான ஆனந்தம் என்கிறது
அத்வைதம். விழிப்பு, கனவு ஆகிய நிலைகளில் இருந்து விடுபட்ட நிலையில், மனங்களின் அலைவுகளில்
இருந்து விடுபட்ட ஆத்மா ஆனந்தத்தை உணர்கிறது.
காரணம் அங்கு மனம் செயல்படவில்லை, ஆத்மா மட்டுமே செயல்படுகிறது என்று அத்வைதம் கருதுகிறது.
ஆத்மா அனுபவிக்கிற அந்த
ஆனந்தமே, நித்திய பொருளால் கிடைக்கும் ஆனந்தம், மாறும் பொருட்களான உலகப் பொருட்களினால்
கிடைக்கம் ஆனந்தம் நித்தியமானது அல்ல, அப்பொருளும் அநித்தியம், அதனால் கிடைக்கும் ஆனந்தமும்
அநித்தியம். அதாவது உலகப் பொருட்களால் கிடைக்கும் இன்பம் நிலையானது அல்ல, ஆத்மா அனுபவிக்கிற
இன்பமே நிலையானது என்கிறது அத்வைதம்.
இந்த ஆன்மீக நிலையை அறிந்தவன்,
அடுத்து வைராக்கியம் கொள்ள வேண்டும். உலகின்
மீதும் உலகப் பொருட்களின் மீதும் பற்றை விடுவதே வைராக்கியம். பற்றை விட வேண்டுமானால் உலகை வெறுக்க வேண்டும்.
உலகை வெறுக்க வேண்டுமானால்
“நான்" என்கிற நினைப்பை விடுக்க வேண்டும், தனது உடல் என்கிற நினைப்பை ஒழிக்க வேண்டும்.
சம்சாரக் கடலில் தவிப்பதில்
இருந்து விடுபட வேண்டும் என்றால், மனிதனுக்கு பிறவிப் பிணிக்குக் காரணங்களாகக் காணப்பட்ட
வேறு தடைகளும் இருக்கின்றது. அவைகளுக்கு எல்லாம் வேர் “நான்” என்கிற அகங்காரம் ஆகும்.
எதுவரை கெடுதல்களுக்குக் காரணமான அகங்காரத்துடன் ஒருவனுக்குத் தொடர்பு இருக்கிறதோ,
அதுவரை அதனிடம் இருந்து, முற்றிலும் வேறான ஆனந்த நிலையை அடைவதற்கு வழியான முக்தியைப்
பற்றி பேச்சுக்கு சிறிதும் இடம் இல்லை. நான் என்கிற அகங்காரத்தின் பிடியில் இருந்து
விடுதலை பெற்றவன் தனது உண்மை உருவமான ஆத்மாவை மீண்டும் அடைகிறான். (விவேக சூடாமணி
– 298 - 300) என்று ஆதி சங்கரர் விளக்குகிறார்.
ஆன்மீக உலகத்தை பரமார்த்த சத்தியம் என்றும் இந்த உலகத்தை
வியவகார சத்தியம் என்றும் ஆதி சங்கரர்
கூறுகிறார். பரமார்த்த சத்தியம் என்பது ஆத்ம நிலையில் ஒன்றியதாகும், வியவகார சத்தியம்
என்பது இகவுலக வாழ்க்கை ஆகும். இந்த வியவகார உலகத்தை மாயை என்று ஆதி சங்கரர் கூறி,
பரமார்த்த உலகில் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறார்.
இந்த உலகம் இருப்பதாகக்
கருதுவது அவித்தை என்கிறார் ஆதி சங்கரர். அவித்தை என்றால் அறியாமை. இருட்டில் குறைந்த
ஒளியில் சிப்பி மின்னும் போது அது வெள்ளி போன்று தோற்றம் கொடுக்கிறது. உண்மையில் இருப்பது
சிப்பிதான். வெள்ளி என்று கருதுவது அறியாமை. அதே போல, இருள் சூழ்ந்த நிலையில் சிறிய
வெளிச்சத்தில் காணப்படும் கயிறு, அறியாமையினால் பாம்பு போலத் தோன்றுகிறது. உண்மையில்
அங்கு இருப்பது கயிறுதான்.
சிப்பி வெள்ளியாக தோன்றுவது
போல, கயிறு பாம்பாக தோன்றுவது போல உலகம் உண்மை போல் தோன்றுகிறது. இது அறியாமையினால்
ஏற்படுகிறது என்பது அத்வைதத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும்.
இந்த உலகம் மாயை என்பதை
அறிந்து ஆத்மாவில் இன்பம் காண வேண்டும் என்றால், “நான்” என்கிற அகங்காரத்தை விட வேண்டும்.
“நான்” என்கிற அகங்காரத்தை விட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவேக சூடாமணியில் ஆதி
சங்கரர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.
“பரமாத்ம
தத்துவத்தை அனுபவிப்பதற்கான கருவி தான் இவ்வுடல். தொடக்கம் இல்லாத அறியாமையினால் வந்து
சேர்ந்த தொடர்பில் இருந்து விடுபடுவதற்கான வழியில் இதை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், அதனை வளர்ப்பதில் மட்டும் எவன் பற்று வைக்கின்றானோ அவன் அதனால்
தன்னையே நாசப்படுத்திக் கொள்கிறான்.
உடலை
வளர்ப்பதில் பற்று உடையவனாக இருந்து கொண்டு ஆத்ம தரிசனத்திற்கு ஆசைப்படுபவன், மரக்கட்டை
என்று கருதி ஒரு முதலையைப் பிடித்து ஆற்றைக் கடப்பதற்கு முயல்பவனைப் போன்றவனாவான்.
முக்தி
விருப்பத்தைப் பொறுத்தவரை உடல் முதலியவற்றில் உள்ள மோகம்தான் கொடிய எமன். மோகம் முழுமையாக
நீங்கியவன் முக்தி அடைவதற்கு அருகதையானவன்.
உடல்,
மனைவி, மகன் என்ற பந்தங்களில் இருந்து விடுபட்டு மோகமாகின்ற எமனை அடக்கி, மோகத்தினை
நீக்கிய முனிவர்கள் உயர்ந்ததான விஷ்ணு பதத்தை அடைகின்றனர்”
(விவேக சூடாமணி – 83 - 86)
இங்கே விஷ்ணு பதம் என்பது
முக்தி நிலை ஆகும். இப்படி அத்வைதம் உடலையும், மனைவியையும், மகனையும் விட்டுவிட வேண்டும்
என்று கூறுவதால் இந்தத் தத்துவத்தால் யாருக்கு என்ன நன்மை இருக்கிறது என்று மேலோட்டமாகப்
பார்க்கும் போது தோன்றும். வர்ணாஸ்ரம தர்மத்தை விட வேண்டும் என்று எங்கேயும் ஆதி சங்கரர்
கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்வைதம் இரண்டு உலகத்தைப்
பற்றி பேசுகிறது என்று பார்த்தோம். ஒன்று வியவகார உலகம், அதாவது இந்த உலகம், அடுத்து
பரமார்த்த உலகம் அதாவது ஆன்மீக உலகம். இந்த
உலகத்தைவிட்டு உடனே வெளியேறி ஆன்மீக உலகத்துக்கு வந்துவிடு என்று அத்வைதம் கூறவில்லை.
பகவத்கீதைக்கு ஆதி சங்கரர்
விரிவுரை எழுதும் போது அதற்கு ஒரு முன்னுரை எழுதி உள்ளார் அதில் உள்ளதைப் பார்ப்போம்.
இரண்டு தர்மங்கள் உலகில்
உள்ளன. ஒன்று பிரவிருத்தி தர்மம், மற்றென்று
நிவிருத்தி தர்மம். வேதங்களில் கூறியுள்ளதைக்
கடைப்பிடிப்பது பிரவிருத்தி தர்மம். அதாவது சுயதர்மத்தைக் கடைப்பிடிப்பது பிரவிருத்தி
தர்மம். இது கர்ம யோகம் எனப்படும். ஞானம்
மற்றும் வைராக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது நிவிருத்தி தர்மம். இது ஞான யோகம் எனப்படும்.
பிரவிருத்தி தர்மத்தை முன்வைத்து
கூறும் போது ஆதி சங்கரர் என்ன கூறுகிறார் என்பதை அடுத்துப் பார்ப்போம்.
உலகின் நிலையான தன்மையைப்
பாதுகாக்க விரும்பி, முழுமுதற் கடவுளான விஷ்ணு, தனது தெய்வ சக்தியால் கிருஷ்ணனாக அவதரித்தார்.
பிராமணத்துவம் நிலைபெற்றாலேயே வைதீக தர்மத்தைக் காத்திட முடியும் என்பதினாலேயே கிருஷ்ணர்
அவதரித்தார். மேலும் வர்ணாசிரம வேறுபாடுகள் வைதீக தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன
என்று ஆதி சங்கரர் நேரடியாகவே கூறியுள்ளார்.
ஆக வர்ணாசிரம வேறுபாட்டை
போக்குவதற்கு ஆதி சங்கரர் அத்வைதத்தை போதிக்கவில்லை. இறுதியில் முக்தியைப் பற்றி பேசினாலும்
அதற்கு முன்பு வேத தர்மத்தை, அதாவது வர்ணாசிரம தர்மத்தை, அதாவது சாதிய தர்மத்தை பின்பற்றுவதை
வலியுறுத்தவே அத்வைதத்தை போதித்துள்ளார்.
பகவத்கீதையும் சுயதர்மத்தை
காப்பதற்கே எழுதப்பட்டுள்ளது. சத்திரியரான அர்ச்சுனன் போர்புரிவதை நிறுத்திய போது,
சத்திரியரின் கடமை போர்புரிவது என்பதை வலியுறுத்துவதற்கு எழுதப்பட்டதே பகவத்கீதை. சத்திரியரின்
வர்ண தமர்மமான போரை நிகழ்த்தும்படி கிருஷ்ணன் பகவத்கீதையில் போதித்துள்ளார். சத்திரியர்
மட்டுமல்ல அனைத்து வர்ணத்தாரும் அவரவர் சுய-தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்பதை பகவத்
கீதை போதிக்கிறது.
கீதையின் நான்காவது அத்தியாயத்தின்
பதிமூன்றாவது பாடலில் கிருஷ்ணன் என்கிற கடவுள் கூறுகிறார், “என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறைப்பாடு
உருவாக்கப்பட்டது.” இவ்வாறு கீதையில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது
நான்கு வர்ணத்தாருக்கான, அதாவது நான்கு சாதிகளுக்கான வேலைகளையும் கீதையில் கூறப்பட்டுள்ளது.
“பிராமணர்,
சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோரின் கடமைகள் இயற்கையில் இருந்து உண்டான குணங்களுக்கு
ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கின்றன.
மனவடக்கம்,
புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், அனுபவ ஞானம், ஆத்திகம் ஆகியவை பிராமணர்களுக்கு
இயல்பான கடமைகள் ஆகும்.
வீரதீரம்,
துணிவு. உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, ஆளுமை ஆகியவை சத்திரியர்களுக்கு
இயல்பாக உண்டான கடமைகள் ஆகும்.
வேளாண்மை,
பசுக்களைக் காத்தல், வணிகம் இவை வைசியர்களுக்கு உரிய இயல்பான கடமைகள் ஆகும். பிறருக்கு
சேவை வடிவான கடமை சூத்திரர்களுக்கு இயல்பாக ஏற்பட்டதாகும்.
மனிதன்
ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையினை கண்ணுங்க கருத்துமாக செய்வானால் சித்தி அடைவதற்கு உரிய
பக்குவ நிலை அடைகிறான்”
(பகத்கீதை
18:41-45)
சித்தி அடைவதற்கு உரிய பக்குவம் என்றால் முக்தி
அடைவதற்கு உரிய பக்குவம் என்று பொருள் ஆகும். இதைப் படிக்கும்போது எதோ அவர்களது குணங்களுக்கு
ஏற்ப வர்ணம் வகுக்கப்பட்டுள்ளது, இது இயல்பானதுதானே என்று மேலோட்டமாகப் பார்த்தால்
தோன்றும். இதற்கு அடுத்து வருகிற கீதையின் பாடல் வைதீகத்தின் போக்கை தெளிவு படுத்துகிறது.
“நன்கு
கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய கடமையைக் காட்டிலும் குறைகளுடையதாயினும் தனக்கான கடமையே
உயர்ந்தது. இயல்புக்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறவன் பாவதை அடையமாட்டான்.
குறைகள்
உடையதாயினும் உடன் பிறந்த கடமையை ஒருவன் விடக்கூடாது. ஏனென்றால் புகையால் சூப்பட்ட
நெருப்பு போல எல்லாச் செயல்களும் குறையினால் சூழப்பட்டுள்ளன.”
(பகத்கீதை
18:46)
இந்த கீதையின் பாடல்கள்
மூலமாக என்ன தெரிகிறது என்றால், ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை சிறப்பாக செய்யாது
போனாலும் பரவாயில்லை, அதையே செய்ய வேண்டும். நெருப்பு தேவையான ஒன்று, அது பயன்படுத்தும்போது
நெருப்பு புகையைக் கக்குகிறது என்பதனால் நெருப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முயுமா?.
அது போல குறைவு உடையதாயினும் ஒவ்வொருவருக்கும் பிறப்பால் விதிக்கப்பட்ட கடமையை தவறாது
செய்ய வேண்டும். மேலும் விதிக்கப்பட்ட கடமையை விடுத்து மற்ற கடமையை சிறப்பாக செய்ய
முடிந்தாலும் அதை செய்யாதே, அப்படி செய்தால் பாவம் ஏற்படும் என்று கீதையால் எச்சரிக்கப்படுகிறது.
இதற்கு விரிவுரையில் ஆதி சங்கரர் கூறிய ஒரு பகுதியை
மட்டும் இங்கே பார்ப்போம், ஒருவனின் சுயதர்மம் குறையுள்ளதாயினும், இதில் உள்ள “ஆயினும்”
என்னும் சொல்லை மனதிற் கொள்க என்கிறார் ஆதி சங்கரர்.
இதை ஒர் உதாரணத்தின் மூலம்
விளக்குகிறார். விஷத்தில் புழுத்த புழுக்களுக்கு விஷம் தீமை செய்யாது, அதுபோல சுபாவத்தால்
தனக்கமைந்த கடமையை செய்வதால் ஒருவனுக்கு பாவம் உண்டாகாது என்று விளக்கம் கொடுக்கிறார்.
இதன் மூலம் நமக்கு என்ன
தெரிகிறது.
ஒரு பிராமணன் சிறப்பாக
விவசாயம் செய்ய முடிகிறது என்றால் அவன் விவசாயம் செய்யக்கூடாது, அவனுக்கு விதிக்கப்பட்ட
செயல்கள் குறைபாடு உடையதாக இருந்தாலும் பரவாயில்லை. இதன் மூலம் சிறந்த செயல்களுக்கு
மதிப்பு கொடுக்காமல் பிறப்பால் உருவான சாதியத்துக்கு கீதை மதிப்புக் கொடுக்கிறது என்பது
தெரிகிறது. குணங்களுக்குத் தக்கப்படி வர்ணாஸ்ரம தர்மம் விதிக்கப்படவில்லை என்பது இதில்
இருந்து புரிகிறது
சுயதர்மத்தை கடமையாக செய்வது கர்ம யோகம் ஆகும்.
அதாவது பிறப்பால் உருவாக்கப்பட்ட கடமையை சிறப்பாகக் கடைப்பிடிப்பது கர்ம யோகம். இதை
முடித்து முக்தியை அடைய முனைவது ஞான யோகம்.
கர்மத்தை செய்வதற்குத்
தகுதியுடையவன், ஞான மார்க்கத்தில் செல்லும் தகுதியைப் பெறுவதற்குமுன்பு, கர்மங்களைச்
செய்தல் அவசியம் (4-46) ஆகும் என்று ஆதி சங்கரர் பகவத்கீதையின் விரிவுரையில் எழுதியுள்ளார்.
முக்தியைப் பற்றி பேசியிருந்தாலும்
அதற்கு முன்பு கர்மத்தை அதாவது சுயதர்மத்தை கடைபிடிப்பது அவசியம் என்றே ஆதி சங்கரர்
வலியுறுத்தி உள்ளார். ஞான யோகத்துக்கு செல்வதற்கு சித்த சுத்தியாக கர்ம யோகத்தை அதாவது
சுயதர்மத்தை செய்ய வேண்டும். சித்த சுத்தி என்றால் மனத் தூய்மை- மனத் தெளிவு. மனத்
தெளிவு பெற வேண்டுமானால் சுயதர்மத்தை அதாவது சாதி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான்
செய்கின்ற செயல்களினால் கர்ம வினைகள் சேராது. பிறவிகள் ஏற்படாது.
சம்சார தொடர்பு ஒழிக்க
வேண்டும் என்றால் அதாவது பிறவித் தொடர்ச்சி முடிய வேண்டும் என்றால் சுயதர்மத்தைக் கடைபிடிக்க
வேண்டும். இதை ஆதி சங்கரர் கூறுவதை அப்படியே பார்ப்போம்.
“வேதத்தைப்
பிரமாணமாக முழுதும் நம்பியவனுக்கு சுயதர்மத்தை கடைபிடிப்பதால் மனத்தூய்மையும் ஏற்படுகிறது.
இங்ஙனம் மனத்தூய்மை பெற்ற அவனுக்கு இறை அனுபூதி கிடைக்கிறது. அதுவே சம்சாரத்தை நாசமடையச்
செய்கிறது”
(விவேக சூடாமணி- 148)
சுய தர்மத்தை கடைப்பிடிப்பது
எப்படி என்பது முக்கியமான ஒன்றாகும். சாதிய தர்மத்தை நிஷ்காமிய கர்மமாக செய்ய வேண்டும்.
அதாவது பிறப்பால் உருவான கடமையை பலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான்
வினை தொடர்ச்சி ஏற்படாது. அதாவது மறுபிறப்பு உண்டாகாது. செய்கின்ற வேலையின் பலனை நாடினால்
அது கர்மாவாகத் தொடரும், பலனை எதிர் பார்க்காமல் செய்தால் அந்த வினை கழிந்துவிடும்
புதிய வினையும் ஏற்படாது என்பது வினைக் கோட்பாட்டின் கருத்து.
செய்கின்ற தொழிலில் பலனை
எதிர்ப்பார்க்காமல் இருந்தால் சித்த சுத்தி- மனத் தூய்மை ஏற்பட்டு முக்தி நோக்கிய ஞான
மார்க்கத்தில் பயணிக்க முடியும்.
உண்மையில் முக்தி என்பது அத்வைதத்தில் முக்கியமான ஒன்றால்ல,
மனத் தூய்மைக்காக கர்ம யோகத்தை அதாவது வேதாந்தத்தால் நிர்ணிக்கப்பட்ட சுயதர்மத்தை,
பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதை போதிப்பதற்கே அத்வைதம் தோற்றிவிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் சுயதர்மத்தை அத்வைதம் வலியுறுத்தி பேசுகிறது.
பகத்கீதையின் இரண்டாவது
அத்தியாத்தின் நாற்பத்தி ஏழாவது பாடலுக்கு ஆதி சங்கரரின் விரிவுரையைப் பார்ப்போம்.
“கர்மம்
செய்கையில், எச்சூழ்நிலையிலும், அதன் பயன் மீதுப் பற்று வைக்காதே. கர்மத்தின் பயனிலே உனக்கு எப்போது பற்று உண்டாகுமோ, அப்போது
நீ கர்மத்தின் பயனைப் பெறுவதற்குக் காரணமாவாய். ஆகையினால் உனது நோக்கம் கர்மத்தின் பயன்கள்
மீது இல்லாதிருக்கட்டும். கர்மத்தின் பயன் மீது பற்றுடையவனாக ஒருவன் கர்மத்தைச் செய்யும்
பொழுது, அக்கர்மத்தின் பயனாக அவன் மீண்டும் பிறப்பெடுக்கிறான். பயன் மீது பற்று வைக்கக் கூடாதெனில், இத்துன்பமிகு
கர்மத்தைச் செய்வதால் என்ன பயன் என்று கருதி நீ கர்மம் செய்யாமலும் இராதே.”
துன்பம் மிகுந்து காணப்பட்டாலும்
சுய-தர்மத்தை கைவிடாதே என்பதே ஆதிசங்கரரின் கருத்தாக இருக்கிறது.
சமூகத்தில் மனிதர்களிடையே
ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதற்கு காரணமாக அத்வைதம் என்ன கூறுகிறது, அநித்திய பொருளான உலகப்
பொருளில் ஈடுபட்டதே காரணம் என்கிறது. மாறுகின்ற பொருளால் நித்திய இன்பம் கிடைக்காது,
நித்திய இன்பமானது ஆத்ம ஒருமையிலேயே இருக்கிறது. சுயதர்மத்தை முடித்துவிட்டு ஆத்ம ஒருமைக்கும்,
முக்திக்கும் செல்ல வேண்டும் என்கிறது அத்வைதம்.
அச்சம் என்பது பன்மையினால்
ஏற்படுகிறது. இந்த உலகம் பன்மைமயமானது. ஆத்ம ஒருமையில் பன்மை மறைந்து போகிறது, அச்சம்
இல்லாது போகிறது. உலகப் பொருட்கள் என்கிற பன்மையினால் ஏற்படுகிற துன்பங்களுக்கு, அச்சத்துக்கு
தீர்வாக முக்தியை அடைய வேண்டும் என்கிறது அத்வைதம்.
உலகத்தில் காணப்படும் துன்பங்களைக் கண்டு இயக்கவியல்
பொருள்முதல்வாதம் அச்சப்படவில்லை. உலகத் துன்பங்களுக்குக்கான காரணத்தையும் அதனை நீக்குவதற்கான
வழியினையும் மார்க்சியத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்துள்ளது.
சமூகத்தில் உள்ள வேறுபாடுகளுக்குக்
காரணமாக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ன கூறுகிறது, பழங்குடி சமூகத்தில் உள்ள மனிதர்கள்
உணவைச் சேகரித்தனர், கிடைத்ததை அனைவரும் சமமாகப் பங்கிட்டனர். காலம் செல்ல செல்ல கருவிகளைப்
பயன்படுத்தினர். அப்போது சற்று கூடுதலாக பொருள் கிடைத்தது. பிறகு உழைப்புப் பிரிவினை
ஏற்பட்டது, இறுதியில் சொத்துடைமை தோன்றியது.
அதாவது பழங்குடி சிதைவின்
போது சொத்துடைமை தோன்றியது. பழங்குடிகளிடம் காணப்பட்ட ஆதி பொதுவுடைமை சமூகம் சிதைந்தது.
சிதைவைத் தொடர்ந்து உழைப்பைப் பெறுபவர் உயர்ந்தவராகவும், உழைப்பைச் செலுத்துபவர் தாழ்ந்தவராகவும்
கருதப்பட்டனர். உழைப்பைச் செலுத்துபவர் ஏழைகளாகவும் உழைப்பைப் பெறுபவர் பணக்கார்களாகவும்
மாறினர். இதுமுதல் வர்க்க வேறுபாடு சமூகத்தில்
தோன்றியது.
சமூகத்தில் உள்ள இன்றைய
பெரும்பான்மையான துன்பங்களுக்கு இந்த தொத்துடைமையே காரணம் ஆகும். சொத்துடைமை இருக்கும்வரை
வர்க்க வேறுபாட்டை ஒழிக்க முடியாது. சொத்துடைமையின் உச்ச வடிவமான முதலாளித்துவத்தின்
சிதைவின் போது சொத்துடைமை அழிக்கப்படுகிறது. அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுகிறது அதனைத்
தொடர்ந்து வர்க்க வேறுபாடு முடிவுக்கு வருகிறது.
உலகத்தில் காணும் துன்வங்களுக்குக்
காரணத்தையும் அதைத் தீர்ப்பதற்கான வழியினையும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இவ்வாறு
விளக்குகிறது.
அத்வைதம் சமூக வேறுபாட்டுக்கு
தீர்வு இல்லை என்று முக்திக்கு அழைப்பு விடுக்கிறது. அதுவரை சாதிய வழியில் நிர்ணயிக்கப்பட்ட
வேலைகளை பலனை எதிர்பார்க்காமல் செய்ய கட்டளை இடுகிறது. இந்த அகநிலைக் கருத்துமுதல்வாதத்
தத்துவம், வர்க்க வேறுபாடுள்ள சமூகத்தில், ஆளும் வர்க்கமான சுரண்டும் வர்க்கத்துக்கு
சாதகமாக இருக்கிறது.
சமூகத்தில் காணப்படும்
துன்பங்களுக்குத் இங்கே தீர்வில்லை என்று கூறுகிறது. இப்படிக் கூறுவதின் மூலம், அத்வைதம்
இருக்கும் சமூகத்தை அப்படியே ஏற்கும்படி உழைக்கும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. ஏற்றத்தாழ்வான
நிலைமையை எதிர்த்துப் பயனில்லை என்று கூறுவதின் மூலம் இருக்கும் சுரண்டல் சமூகத்தை
அப்படியே ஏற்கும்படி செய்கிறது. இந்தத் தத்துவத்தின் போக்கு சுரண்டும் வர்க்கத்துக்கு
சாதகமாக இருக்கிறது.
பொருள்முதல்வாதம் சமூக
வேறுபாட்டுக்குத் தீர்வாக சொத்துடைமையின் நீக்கத்தைக் கோருகிறது. அதன் மூலம் சமூகத்திலேயே
சிறப்பாக ஆனந்தமாக வாழ வழிகாட்டுகிறது. இந்த பொருள்முதல்வாத வழிகாட்டுதல் உழைக்கும்
மக்களுக்கு சாதகமாக இருக்கிறது.
அத்வைதம் சுரண்டும் வர்க்கத்தின்
நலனைப் பிரதிபலிக்கிறது, இயக்கவியல் பொருள்முதல்வாதம் தொழிலாளர்களின் வர்க்க நலனைப்
பிரதிபலிக்கிறது.
வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடே
தத்துவம் ஆகும். அதனால் தத்துவங்கள் வர்க்க சார்புடையதாகவே காணப்படுகிறது.
அத்வைதமும் ஒருமை பேசுகிறது
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் ஒருமை பேசுகிறது ஆனால் இரண்டும் வேறுவேறான ஒருமையைப்
பேசுகிறது.
மார்க்சிய ஒருமையை முதலில்
பார்ப்போம். உலகில், பிரபஞ்சத்தில் பல பொருட்கள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் தனித்திருக்கிறது
அதன் தனித்தத் தன்மையே அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் எவையும் பிறவற்றுடன்
தொடர்பற்று தனித்து இருப்பதில்லை, அனைத்துடனும் இணைந்து காணப்படுகிறது. இதையே மார்க்சியம்
பொருளாதார ஒருமை என்று கூறுகிறது. மார்க்சிய
பொருளாதார ஒருமை, பன்மை ஏற்று அதனில் காணும் ஒருமை பேசுகிறது.
அத்வைத ஒருமை, பன்மையை
மாயை என்று மறுத்து, பரமாத்மா ஒன்றே உண்மையானது என்று ஒருமை பேசுகிறது.
அத்வைத ஒருமையை சிறிது
விளக்கமாகப் பார்ப்போம்.
ஆத்மாவைத் தவிர்த்தப் பொருட்கள்
உலகில் நிறைந்து காணப்படுகிறது, இந்தப் பன்மையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆத்மாவும்
பிரமாத்மாவும் ஒன்று என்கிற ஐக்கியம் ஏற்பட்டவுடன் அச்சம் ஏற்படுவதில்லை என்கிறது அத்வைத
ஒருமை. தத்துவமசி என்கிற உபநிடதச் சொல்லும்
ஆத்மா-பிரம்ம ஒருமையைக் குறிக்கிறது. நீ அதுவாக இருக்கிறாய் என்பதே தத்துவமசி என்பதன்
பொருளாகும். அதாவது ஆத்மாவே பரமாத்மாவாக இருக்கிறது.
முக்தி நிலையாக, ஆத்மா,
பரமாத்மாவை அடைதல் என்று அத்வைதம் கூறவில்லை. பிரிந்ததாக கருதிய அறியாமை நீங்கியது, சேர்ந்தே ஒருமையாக இருப்பதை அறிந்து
கொண்டது. இதற்கு புதியதாக எதையும் செய்ய வேண்டாம். இந்த ஞானம் வந்தால் போதும் என்கிறது
அத்வைதம்.
இதைப் புரிந்து கொள்வதற்கு
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். கழுத்தில் போட்டிருந்த தங்க மாலை குளிப்பதற்கு முன் கழற்றி
வைக்கப்பட்டது. குளித்துவிட்டு வந்து பார்க்கும் போது காணவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது அந்த மனிதருக்கு அச்சம் ஏற்படும், எவ்வளவு மதிப்புள்ள பொருள் காணவில்லையே என்று
பதற்றம் ஏற்படும். வழக்கமாக வைக்கும் இடத்தில் வைக்காமல் மாற்றி வைத்தால் கண்ணில் படவில்லை.
இப்போது கிடைத்துவிட்டது. அந்த மனிதருக்கு பதற்றம் குறைந்து பெருத்த ஆனந்தம் ஏற்படுகிறது.
எதையும் இழக்காமல் எப்படி துன்பம் ஏற்படுகிறது என்றும் பார்வையில் பட்டவுடன் ஆனந்தம்
ஏற்படுகிறது என்றும் பார்த்தோம்.
இந்த ஆனந்தம் புதியதா?,
அந்தப் பொருள் முன்பே அவனிடம் இருந்தது தான் அதை இழந்ததாக தவறாக எண்ணப்பட்டது. மாயையாக
கருதப்பட்டது, மாயையாக இழந்த போது துன்பம் ஏற்படுகிறது, மாயை நீங்கிய போது பழைய இன்பம்
தொடர்கிறது. அதே போல அறியாமையினால் ஆத்மா பரமாத்மாவிடம்
இருந்து பிரிந்ததாக துன்பப்பட்டுக் கொண்டிருந்தது, அறியாமை நீங்கியவுடன் ஞானம் கிடைத்தது,
சத்சித் ஆனந்தம் என்பதை அறிந்து கொண்டது. சத்சித் ஆனந்தம் என்றால் என்றும் ஆனந்தமயமானது
என்று பொருள்.
ஆத்மா இயல்பிலேயே ஆனந்தமயமானது,
அதை அறியாததினால்தான் உலகில் நிலையற்றப் பொருட்களில் நிலையற்ற இனபத்தை மனிதன் தேடிக்
கொண்டிருக்கிறான். இவ்வுலகம் நித்தியமானது அல்ல, ஆத்மாவே நித்தியமானது என்கிற அறிவைப்
பெற்று, உலகியல் விதிக்கப்பட்ட சுயதர்மத்தை அதாவது பிறப்பால் உருவான சாதிய தர்மத்தை,
பலனை எதிர் பார்க்காமல் செய்தால் வினைகள் கறைந்து போகும் புதிய வினைகள் ஏற்படாது என்கிறது
அத்வைதம்.
அத்வைத ஒருமையானது, உலக
இன்பத்தை மாயை என்றுகூறி, முக்தியில் ஆனந்தத்தை காட்டுகிறது. மார்க்சிய ஒருமையானது
அத்வைத ஒருமையை விமர்சித்து, சொத்துடையை ஒழிப்பதின் மூலம் இந்த உலகத்திலேயே ஆனந்தத்தைக்
காட்டுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதம் உலகத்தில் துன்பங்களுக்கு அடிப்படை சொத்துடைமை
என்பதைப் புரிந்து அதை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது. அத்வைதம்
உலகை வெறுத்து ஆத்ம விடுதலைக்கு அழைப்பு விடுக்கிறது.
முக்தி இன்பத்தை மறுத்து,
உலகத்திலேயே இன்பதை உருவாவதற்கான வழிகளை சுட்டிக்காட்டும் பொருள்முதல்வாத்தில் உழைக்கும்
வர்க்கத்தின் நலன்கள் அடங்கி இருப்பதினால், உழைக்கும் வர்க்கம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை
தமது உலகக் கண்ணோட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,
அத்வைதத்தை மட்டும் விமர்சிக்கவில்லை, தனக்கு எதிரான அனைத்துத் தத்துவப் போக்குகளையும்
விமர்சிக்கிறது.
பொருள்முதல்வாதப் பார்வையில்
அத்வைதம் விமர்சிக்கப்பட்டது போல அனைத்துக் கருத்துமுதல்வாதப் போக்குகளையும் விமர்சிக்க
வேண்டும்.