"சமூக வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும்
உணர்வுநிலையினைக் கைவரப்பெற்று, ஆழ்ந்த சிந்தனை அல்லது
மனவெழுச்சியுடன் திட்டவட்டமான குறிக்கோள்களை நோக்கிச்
செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வுவழியிலான ஒரு நோக்கம்
இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில்
எதுவும் நிகழ்வதில்லை."
எங்கெல்ஸ்-(லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்)
மனிதன், உணர்வுநிலை (Consciousness) என்ற மேலான ஒன்றை பெற்றிருக்கிறான். இந்த உணர்வுநிலையைக் கொண்டே தனது செயற்பாட்டின் குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்கிறான். அடையவேண்டும் என்ற குறிக்கோளை அவன் எதன் அடிப்படையில் உருவாக்கிக் கொள்கிறான் என்பதில்தான் உணர்வுநிலை பற்றி அறிவதில் அனைவருக்கும் நாட்டம் ஏற்படுகிறது.
இங்கு நாம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் உணர்வுநிலையின் தோற்றம் எதில் காண்கிறது என்பதை பார்ப்போம்.
விலங்கினம் தமது உயிர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக இயற்கையில் கிடைத்திடும் காய், கனிகளைப் தமது கைகளால் பறித்து உண்கிறது. இவ்விலங்கினங்களில் குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த மனிதக் குரங்குகள் தமக்கு தேவைப்படும் இயற்கைப் பொருட்களை பெறுவதற்கு, கற்கள், நீண்ட குச்சிகள், தடித்த கம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கின. பின்பு இந்தக் கருவிகளை தம்மைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டன.
கைக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம், விலங்கின வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரை இயற்கையோடு நேரடியான தொடர்பில் மட்டும் இருந்த மனித இனம், இதன்பிறகு கருவிகளின் உதவியால் தொடர்பினை வலுப்படுத்திக் கொண்டது. இந்நிலையில் அன்றைய மனித சமூகத்துக்கு கிட்டிய உணவின் அளவுகளின் கூடுதல், அவற்றின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதன் தொடர்ச்சியாக தமக்கு தேவைப்படும், இயற்கைப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப தனது கைக்கருவிகளை அமைத்துக் கொள்ளும் மறுவினை நிலையைப் பெற்றன. படிப்படியாக மறுவினை என்ற நிலையில் இருந்து உணர்வுநிலையினை அடைந்தது. அதாவது குறிப்பிட்ட வடிவமைக்கப்பட்ட கைக்கருவிகள் உற்பத்திக் கருவிகளாக மாற்றம் பெற்று, இயற்கையை தமக்கானதாக மாற்றுவதின் நோக்கம் கொண்டதான உணர்வுநிலை செயற்பாடாக படிப்படியான வளர்ச்சியில் மாற்றம் பெற்றது.
இந்த செயற்பாடு விலங்கினத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதக்குரங்கின் நிலையிலிருந்து, மனித இன நிலையினைத் தொட்டன. இப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில், தொடக்க கால மனித இனம், தமக்கு வேண்டிய பொருளை, தமது கைகருவிகளின் மூலம் அடைகின்ற பொழுது, தமது செயற்பாடு பொருளறிந்த வழியில் உணர்வுபூர்வமானதாக நிகழ்வதை உறுதி செய்தது.
இவ்வாறு விலங்கினத்திலிருந்து மனிதனாக மாறுகின்ற போது கருவிகளைப் பயன்படுத்திய வழியில் உணர்வுநிலை தோன்றியதாக மார்க்சியம் விவரிக்கிறது.
மனிதன், உணர்வுநிலையைக் கொண்டே உலகைப் பற்றிய அறிவைப் பெறுகிறான். தம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை உணருகிறான். உணர்வுநிலை என்பது மூளையின் சாதாரணப் பண்பல்ல, பொருளாயத உலகத்தோடு ஏற்படுகின்ற பரஸ்பர செயல்பாடுள்ள மூளையின் பண்பாகும். இவை புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பாகும்.
எதார்த்த உலகத்தை பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றுள்ள மூளையின் திறம் என்பது பருப்பொருளுடன் அதற்குள்ள உறவின் கால வளர்ச்சியின் விளைபயனேயாகும்.
புறநிலையின் பிரதிபலிப்பு என்பதை அகநிலையில் அப்படியே படியும் பிம்பமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. கல்வியின் தெளிவு, படைப்புத் திறமை ஆகியவை ஒரு நபர் பெற்றிருக்கவில்லை என்றால் இப்பிரதிபலிப்பு சரியானதாக இருக்காது. அந்த நபருக்கு பொருட்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கண்டுணருவதற்கு படைப்புத் திறமை அவசியமானதாகும். இவற்றில் காணப்படும் குறைபாடு பிரதிபலிப்பில் பிரதிபலிக்கவே செய்யும்
தன்னைச் சுற்றி நடைபெறுவதை நோக்கியபோது தோன்றும் விழிப்புநிலையே உணர்வுநிலையின் தன்மையைக் காட்டுகிறது. மனிதன் தனது சொந்த வாழ்நிலையில், தனது இருத்தலை உணர்ந்து, வெளியுலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு அதன்மீது தன்னுடைய செயற்பாட்டை தீர்மானிக்கும் போது உணர்வுநிலை தோன்றுகிறது.
இந்த விழிப்பு என்ற பிரதிபலிப்பின் பண்பு மனிதனிடத்தில் மட்டுமே காணக்கூடியதாகும். அதனால்தான் மனிதன் சமூகத்தில் செயல்படுபவனாகவும் அதனை மாற்றுபவனாகவும் இருக்கிறான்.
நினைவற்ற நிலையில் இருப்பவன் அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவன் அவனது பக்கத்தில் நிகழ்வனவற்றை உணராது உணர்வற்றவனாகவே இருப்பான். புறநிலையிலிருந்து எந்த தூண்டுதலையும் பெறாததால் அவனிடம் உணர்வுநிலையோ எண்ணங்களோ உண்டாவதில்லை. ஆனால் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது பக்கத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அந்த நபர் தமது செவிகளால் அதனை உணருகிறார். அந்த நபருக்கு துப்பாக்கியின் வெடித்தல் என்பது வெறும் சத்தமாக மட்டும் அறிந்து கொள்ளப்படுவதில்லை. சாலையில் ஏற்பட்ட இந்த துப்பாக்கியின் சத்தத்தை தன் செவியால் உணர்ந்தவுடன், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடி ஒளிந்து கொள்கிறான். இந்த துப்பாக்கிச் சண்டை யாருக்கு இடையே நிகழ்கிறது. இதனோடு அண்மையில் ஏற்பட்ட இது போன்ற துப்பாக்கிச் சண்டைகள், அது பற்றிய நினைவுகள் போன்றவற்றின் துணையோடு -விழிப்புணர்வோடு -உணர்வுநிலையோடு செயற்படுகிறான். ஆக புலனுணர்வுகளால் உணராத போது மனிதனிடம் சிந்தனைகள் தோன்றுவதில்லை புலனுணர்வு, புலனறிவு, கருத்தாக்கங்கள் ஆகியவை தோன்றி செழுமைப்படுத்துவதின் மூலமே சிந்தனைகள் தோன்றுகின்றன.
மனிதனது உணர்வுநிலையை எதார்த்த உலகின் நேரடிப் பிரதிபலிப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. மனிதனது ஒப்பீட்டுத் தன்மையும் இதில் அடங்கியிருக்கிறது. பொருள் உற்பத்தி, பகிர்வு, வினியோகம் போன்ற உற்பத்தி உறவுகளின் சார்பில், சமூகம் பற்றிய உணர்வுநிலை தோன்றுகிறது.
மனிதன் தனது குறிக்கோள்களை தமது உணர்வுநிலையினால் நிர்ணயிக்கிறான், இந்த உணர்வுநிலையினதான விழிப்புணர்வு என்பது அவன் ஈடுபடுகின்ற உற்பத்தியின்போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளால் உருவாகிறது. கருத்தாக்கம் என்பது அந்தந்த காலத்திய உற்பத்தி சக்திகளை பயன்படுத்தும்போது மனிதர்களிடையே ஏற்படுகிற உற்பத்தி உறவுகளால்தான் தோற்றம் பெறுகிறது. இதனைக் கடந்த காலத்தை ஆராயும்போதும், எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்கின்றபோதும் அறிந்து கொள்ள முடிகிறது.
உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பே உணர்வுநிலை. அதாவது புறநிலையான பருப்பொருளின் இயக்கவியல் வகைப்பட்ட பொருளாயத்தின் பிரதிபலிப்பே உணர்வுநிலை. இதன் துணையோடு மனிதன் எதார்த்த உலகத்தை அறிவதோடு மாற்றுவதற்கான செயற்பாட்டையும் அமைத்துக்கொள்கிறான்.
No comments:
Post a Comment