"மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர்.
ஆனால் மனிதர்களின், மக்களின் பெருந்திரளின் செயல் நோக்கங்களை
நிர்ணயிப்பது ஏது?.. மனிதனின் வரலாற்று நடவடிக்கை எல்லாவற்றிற்கும்
அடிப்படையாக அமைகிற பொருளாயத வாழ்வின் உற்பத்திக்கான
புறநிலைமைகள் யாவை? இந்தப் புறநிலைமைகளின் வளர்ச்சிக்குரிய
விதி எது?- இவற்றின் மீதெல்லாம் மார்க்ஸ் நமது கவனத்தைத் திருப்பி,
வரலாறு அளப்பரிய பல்வகை வேறுபாடுகளும் முரண்பாடுகளும்
கொண்டிருந்த இயக்கப் போக்காயிருந்த போதிலும் அதை திட்டவட்டமான
விதிகளால் ஆளுமை செய்யப்படும் ஒரு சீரான இயக்கப் போக்காக
விஞ்ஞான அடிப்படையிலே பயில்வதற்கு வழி காட்டினார்"
லெனின் -(காரல் மார்க்ஸ்- வாழ்க்கை வரலாறு)
மார்க்சுக்கு முன்புவரை வரலாற்றை மாமனிதர்களே படைக்கின்றனர் என்ற கருத்தே மேலோங்கி இருந்தது. அதாவது, மாமன்னர்கள், மாமேதைகள், போர்த் தளபதிகள், தத்துவ அறிஞர்கள் போன்ற பெரிய தனி மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று கருதிவந்தனர். பெருந்திரளான மக்கள் வரலாற்று வளர்ச்சியைப் பொருத்தளவில் குருட்டுத்தனமாகச் செயலாற்றும் மந்தைகளே, இவர்களை இந்த மாமனிதர்களே தலைமை தாங்கி செயற்படுத்துகின்றனர் என்பதே அன்றைய கருத்தாக இருந்தது.
கருத்துமுதல்வாதம் சமூக வளர்ச்சியில் பொதுமக்களின் பாத்திரத்தை புறக்கணித்து, தனிநபரின் பாத்திரத்தை முன்னிருத்துகின்றது. சுரண்டும் சமூகத்தில் மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையே காணப்படும் மதிப்பின் வெளிப்பாட்டை இது காட்டுகிறது. உடலுழைப்பின் மீது வெறுப்பையும், மூளை உழைப்பின் மீது தனி விருப்பத்தையும் செலுத்துகிறது. மார்க்சியம் இதனை நிராகரிக்கிறது. வரலாற்று வளர்ச்சியில் பெருந்திரளான மக்களின் பங்கை குறைத்து மதிப்பிட்டுள்ளதையும், தனிநபரின் பங்கை மிகைப்படுத்தி உள்ளதையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறது.
உற்பத்தியின் போது ஏற்படுகின்ற புறநிலை பொருளாயதத் தேவைகளே பெரும் மக்களை குறிப்பிட்ட திசையை நோக்கி செல்ல வைக்கிறது. மனிதர்கள் தனிப்பட்டவிருப்பத்தில் அல்லாமல் புறநிலையான சூழ்நிலைகளின் தாக்கத்தில் செயற்படுகின்றனர். பெருந்திரளான மக்களின் நலன்களை தீர்மானிக்கின்ற பொருளாயத அவசியமே இவற்றில் முதன்மைக் காரணமாகிறது.
வரலாறு விதிகளின்படி செயல்படுகிறது என்றால் மக்கள் ஏன் சமூக மாற்றத்துக்கு போராட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இயற்கைப் போன்றே வரலாறும் புறநிலை விதிகளின் படியே செல்கிறது. ஆனால் வரலாற்றின் விதிகள் மனிதர்களின் நடவடிக்கைகளின் வழியில் நிகழ்த்தப்படுகிறது. இந்த வகையில் இயற்கையின் விதியில் இருந்து வரலாற்றின் விதி வேறுபடுகிறது. அப்படி என்றால் மக்கள் தாம் நினைக்கின்றபடி வரலாற்றைப் படைத்திட முடியுமா? இல்லை, இதனை மார்க்ஸ் தெளிவாக்குகிறார். மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை. தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்தில் இருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு தக்கப்படியும், தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவும் வரலாற்றை உருவாக்கிறார்கள்.
மனிதர்கள், தாம் ஒரு குறிக்கோளை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்துகின்றனர் என்று, மேம்போக்காக பார்க்கும்போது தோன்றும். ஆனால் ஆழ்ந்து பார்க்கும் போதுதான் அந்த குறிக்கோள்களை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கவில்லை என்பதை அறிந்திட முடியும். மனிதர்கள் தமது குறிக்கோளை வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகளின் நலன்களின் அடிப்படையில்தான் உருவாக்குகின்றனர். இந்த நலன்கள் புறநிலையான பொருளாதார அவசியத் தேவையால் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த புறநிலைமைகளே சக்திகளாக மாறி மனிதர்களின் தேவையின்றி வரலாற்றைப் படைப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், பாட்டாளி வர்க்கத்தின் செயற்பாடும் அவற்றின் முன்னணிப்படையான கட்சியும், புறநிலையால் அளிக்கப்பட்ட வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகளையும் வரலாறு கண்டுள்ளது. சமூக நிகழ்வு, புறநிலையின் அவசியத்தின் அடிப்படையில் மக்களால் நிறைவேற்றப்படுகிறது
மக்களை மதிக்கின்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதம், தனிநபரின் பாத்திரத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மார்க்சியத் தத்துவம் தனிநபர்களை எந்தவிதத்தில் மதிக்கிறது, எதனை மறுக்கிறது என்பதை புரிந்து கொண்டால், இந்த குற்றச்சாட்டு எவ்வகையில் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று கூறுகிற தத்துவம், இவர்களைத் தலைமை தாங்கும் தலைவர்கள் தனிநபர்களே என்பதை அறிந்திருக்கிறது. இந்த தனிநபர்களின் சிறப்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு தனிநபர் முதன்மைப் பாத்திரத்தை வகிப்பதற்கு அவர் தனித்த திறமை பெற்றிருக்க வேண்டும். சாத்தியமான சூழ்நிலைமைகள் இருந்தால் மட்டுமே இத்திறமை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலைமைகள் இல்லாதபோது இவரது திறமைகள் வெளிப்படுவதில்லை. ஆக இந்தத்திறமை என்பது சூழ்நிலைமைகளை அறிந்து செயற்படுவதில் அடங்கியிருக்கிறது, சூழ்நிலைமைகளை உருவாக்குவதில் அத் தனிநபர்களின் திறம் அடங்கியிருக்கவில்லை என்பதையே மார்கசியம் வலியுறுத்துகிறது. இந்த தனிநபர் மட்டுமே இந்த வரலாற்று கடமையினை நிகழ்த்த முடியும் என்பதையே மறுக்கிறது. ஏன் என்றால், இந்த வரலாற்றுக் கடமையை இந்தப் பெயர் கொண்ட நபர் நிறைவேற்றியிராவிட்டால் வேறொரு பெயர் கொண்ட நபர் இதனை நிறைவேற்றியிருப்பார்.
இதனையே எங்கெல்ஸ், நெப்போலியன் இருந்திராவிட்டால் அவனுடைய பாத்திரத்தை வேறு ஒருவன் நிறைவேற்றியிருப்பான், இம்மாதிரி மனிதன் தேவைப்படுகிற போதெல்லாம் அவன் கிடைத்து வந்திருக்கிறான் என்பதே இதற்கு சான்று என்று கூறுவார்.
ஒரு சிறந்த தனிநபரின் தனித் திறமை என்பது சமூக வளர்ச்சியின் திசைவழியைப் படைப்பதில் அடங்கியிருக்கவில்லை, அந்த திசைவழியை கண்டுபிடித்து அதன்வழியில் செல்வதில் இருக்கிறது. திசைவழியை அறிந்த அவனது திறமையை, திசைவழியை தோற்றுவித்ததாக மிகைப்படுத்தி மதிப்பதையே மார்க்சியம் எதிர்க்கிறது. திசைவழியை கண்டு, அதில் பொது மக்களின் தொடர்பை அறிந்து செயல்படுத்தும் தனிநபரின் திறமையை மார்க்சியம் மதிக்கவே செய்கிறது. சாத்தியமாக்கும் சமூக வளர்ச்சிக்கு உரிய புறநிலைமைகளே வரலாற்றைத் தீர்மானிக்கிறது. அதனை மக்கள் நிறைவேற்றுகின்றனர், அதற்கு தனிநபர்கள் தலைமை தாங்குகின்றனர். ஆக இந்த தனிநபரின் சிறப்பு என்பது புறநிலைமைகளைச் சார்ந்தும், பொதுமக்களின் செயற்பாட்டிலும் அடங்கியிருப்பதை மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த தனிநபர் பிறக்கும்போதே சிறப்பில்புகளோடு பிறக்கவில்லை. தான் பிறந்த சமூகத்தில் காணப்படும் நாகரீகத்தை தனது செயற்பாடுகளால் தன்வயப்படுத்திக் கொள்ளும் போது தனது சிறப்பில்புகளை வளர்த்துக் கொள்கிறார். சமூக வளர்ச்சிப் போக்கில் தனிநபர் தமது சிறப்பியல்புகளை சமூக செயற்பாட்டின் ஊடே பெற்றுக் கொள்கிறார் என்பதை புரிந்திடும்போது தனிநபரின் பாத்திரத்துக்கு தனிமுதன்மையும், தனிநபர் வழிபாடும் தேவையற்றதாகிவிடும்.
வர்க்க ஆதிக்க சக்திகளுக்கான அறிவுத்துறையினர்களுக்கு, திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு கிடைக்கிற சூழ்நிலைகள், வர்க்க சமூகத்தில் அனைவர்களுக்கும் கிடைப்பதில்லை. இச் சமூகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்களே தனிச்சிறப்பைப் பெற்றவராக இருக்கின்றனர்.
சக்திக்கேற்ற வேலை, திறமைக்கேற்ற கூலி என்ற சோஷலிச சமூகத்தைக் கடந்து, சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற பங்கீடு என்ற கம்யூனிச சமூகத்தில், சில தனிநபருக்கு மட்டும் கிடைக்கிற வாய்ப்புகள் என்ற நிலை நீக்கப்படும். வர்க்க சமூகத்தில் தனிநபருடைய சுதந்திரம் என்பது, ஆளும் வர்க்க தனிமனிதச் சிறப்பு உள்ளவனுக்கான சுதந்திரமாக இருந்தது கம்யூனிச சமூகத்தில் அது மறைந்து அனைவருக்குமான சுதந்திரமாக மாறிவிடும்
வர்க்க சமூகத்தில் தனிநபருக்கு கிட்டுவதாக இருந்த சூழநிலைமைகள் அனைவருக்கும் கிட்டுவதற்கானதாக மாறிவிடும். கம்யூனிச சமூகத்தின் முழுமையான நலன்களோடு, தனிநபரின் நலன்களும் ஒன்றாய்க் காணப்படுவதால் இது சாத்தியப்படும்.
No comments:
Post a Comment