Saturday 18 June 2016

உண்மையைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு (The Marxist Theory of Truth)

"பொருள்முதல்வாதிக்கும், கருத்துமுதல்வாதத் தத்துவஞான
ஆதரவாளருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு
பொருள்முதல்வாதி புலனுணர்ச்சி, புலனறிவுக்காட்சி,
கருத்து மற்றும் பொதுவாக மனிதனுடைய உணர்வுநிலை
புறநிலையான எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகிறார்கள்
என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. நம்முடைய
உணர்வுநிலையினால் பிரதிக்கப்படுகின்ற இப்புறநிலை எதார்த்தத்தின்
இயக்கமே உலகம். கருத்துக்கள், புனறிவுக் காட்சிகள்,
இதரவற்றின் இயக்கத்துடன் எனக்கு வெளியே இருக்கின்ற
பருப்பொருளின் இயக்கம் பொருந்துகிறது"
லெனின் - (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

விஞ்ஞான அறிதலின் நோக்கமே உண்மையை புரிந்து செயற்படுவதற்கே ஆகும். இங்கு உண்மை என்பதை முழுமுதலான அதாவது  நிரந்தரமான உண்மை என்று எதையும் குறிப்பிடவில்லை. நிரந்தர, அறுதியான, புனிதமான, மாறாத உண்மை என்ற ஒன்று எங்கும் கிடையாது.

அப்படி என்றால் மார்க்சியம் உண்மை என்று எதைக் குறிப்பிடுகிறது.
               
புறநிலை எதார்த்தத்தை பிழையின்றி சரியாக பிரதிபலித்தல், புறநிலையில் இருக்கின்றபடியே கருத்தாக்கமாக உணர்வில் மீண்டும் உண்டாக்குதல் என்பதே உண்மையாகும். அதாவது எதார்த்தத்துடன் பொருந்துகின்ற புறநிலை உலகத்தைப் பற்றிய அறிவே உண்மை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

இதனை வேறுவிதமாக் கூறினால், புறநிலையாக இருக்கும் எதார்த்தத்தை, உணர்வில் கருத்தாக்கமாக பிரதிபலிப்பதே உண்மை எனப்படுகிறது.

இந்த உண்மை என்பது நமக்கு புறநிலையாக, நம்மைச் சார்ந்திராமல் சுயேச்சையாக இருக்கிறது. அதனால்தான் உண்மையினை புறநிலை உண்மை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

புறநிலை எதார்த்தம் மாறாமல் இருப்பதில்லை, அதனால் புறநிலை உண்மை என்பதும் மாறாதிருப்பதில்லை.

புறநிலை உண்மையை எவ்வாறு மனிதன் அறிந்து கொள்கிறான்? மனிதனின் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்தாக்கங்கள் புறநிலையை முழுமையாக வெளிப்படுத்துகிறதா? அரைகுறையாக வெளிப்படுத்துகிறதா?

இதற்கான விடையை அறுதி உண்மை, ஒப்பீட்டு உண்மை என்ற வகைப்பிரிவு நமக்கு பதில் அளிக்கிறது.

அறிதலின் வளர்ச்சி நிகழ்முறையில் ஏற்கெனவே அறிந்தவற்றுக்கும், இனிமேல் அறியப்போகிறவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் வழியில் அறுதி உண்மை என்பதையும், ஒப்பீட்டு உண்மை என்பதையும் அறிந்து கொள்ளலாம். அறிதலின் மட்டத்தில் சரிப்படுத்த முடியாத அதாவது மாற்ற முடியாத நிலைக்கும், மாற்றம் ஏற்படப் போவதற்கும் அதாவது மாறிக் கொண்டிருப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் உண்மையானது, அறுதியானது மற்றும் ஒப்பீடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

அறுதி உண்மை என்பது எதார்த்தத்தின் முற்றிலும் முழுமையான உள்ளடகத்தின் பிரதிபலிப்பாகும். எதார்த்தத்தின்  சில தன்மைகளையும், அவற்றுக்கிடையே இருக்கின்ற உறவுகளையும் சரியாகப் பிரதிபலிப்பதால் அது அறுதியானது. இந்த அறுதி உண்மையை எதிர்காலத்தில் நிராகரிக்கவும் முடியாது.

                ஓப்பீட்டு உண்மை என்பது நிறைவற்றது,  முழுநிறைவைப் பெற்றிராத அரைகுறையானது, கிட்டத்தட்ட சரியானது. கிட்டத்தட்ட சரியானது என்று கூறுவதின் பொருள், அது இன்னும் நிறைவற்றதாக இருப்பதனாலாகும். மேலும் துல்லியப்படுத்தி திருத்தப்பட்டு நிறைவாக்கப்படுவதற்கு, வரலாற்று வழியிலும், கால வரம்புக்கு உட்பட்ட தன்மையிலும் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.

இப்படிச் சொல்வதால், ஒப்பீட்டு உண்மையை அறுதி உண்மைக்கு எதிராக திருப்பிவிடக் கூடாது. குறையான அறிவிலிருந்தே துல்லியமான அறிவை நோக்கிய முன்னேற்றம் நடைபெறுகிறது. அறுதி உண்மையின் பயணத்தில் ஒரு கட்டமே ஒப்பீட்டு உண்மை.

அறிவு என்பதை எதார்த்தத்தோடு பொருந்துவதையே இயக்கவியல் பொருள்முதல்வாதம் சுட்டுகிறது. எதார்த்தம் மாறுதல் அடைகின்றபோது அதைப் பற்றிய அறிவும் அதற்கு ஏற்ப மாற்றம் அடையும். உண்மை என்பது சூக்குமமானதாக இருப்பதில்லை, எப்போதும் அது தூலமானதே.

சுற்றியுள்ள எதார்த்தம் முடிவற்றது, இடையறாத இயக்கத்திலும் வளர்ச்சியிலும் காணப்படுகிறது. ஒப்பீட்டு உண்மைகளின் மொத்தத்தின் செல்வழியில் அறுதி உண்மையை நோக்கி இடையறாத, முடிவற்ற நெருக்கத்தின் செயல் முறையாக அறிதல் நிகழ்முறை நடைபெறுகிறது.

இந்த அடிப்படையில், தயாரான, நிலையான, முழுமையான, எல்லா நிலைகளிலும் சரியான, இறுதியான முடிவை வழங்க எந்த சித்தாந்தத்தினாலும் முடியாது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம். ஆனால் மனிதனின் அறிதலின் வாய்ப்புகள் வரம்பற்றதும், அறிதல் என்பது முடிவின்றி தொடர்ந்து செல்லும் செயல்முறையாகவும் பார்க்கிறது.

அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள உற்பத்திச் சக்திகளின் அளவே மனிதர்களின் அறிவை தீர்மானிக்கிறது, எதார்த்த உலகம் மாறிக் கொண்டே இருப்பதனால் அறிவை முடிவற்றது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

மனிதர்களின் நடைமுறை என்பது பொருள் உற்பத்தி நிகழ்வுகளைக் குறிக்கிறது. இதனோடே சமூக அரசியல், வர்க்கங்களின் தோற்றம் மாற்றம் ஆகியவை நிகழ்கிறது. மனிதர்களின் சமூக நடைமுறையே அறிதலின் தொடக்கப் புள்ளியாகவும் அடிப்படையாகவும் இருக்கிறது. அதவாது உற்பத்திச் செயற்பாடுகளின் காரணமாகவே அறிதலின் தோற்றமும் மாற்றமும் நிகழ்கிறது.

அறிதல் என்ற நிகழ்ச்சிப் போக்கு சிக்கலும், முரண்பாடும் கொண்டதாகும். அதனால் மனித அறிவு எதார்த்தத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.


நடைமுறையையும், தத்துவத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் தத்துவம் சமூக நடைமுறையில் இருந்து தோன்றுகிறது, வளர்கிறது. பின்பு அதுவே சமூகத்தை மாற்றியமைக்கும் வலுவான சக்தியாக உருப்பெறுகிறது. சமூகத்தில் பலகாலமாக காணப்படும் பின்தங்கிய நிலைமைகளை தூக்கியெறிவதற்கும், புதிய சமூகத்தைத் தோற்றுவிக்கவும் - தேவைப்படும் நடைமுறையையும், செயல்படுத்தும் கருவிகளையும் தத்துவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

No comments:

Post a Comment