"உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில்
அமைந்து இருக்கிறது,
ஒருசில ஜாலவித்தைச்
சொற்றொடர்களால்
இதை நிரூபிப்பிக்கப்படவில்லை, மாறாக
தத்துவத்தின் மற்றும் இயற்கை
விஞ்ஞானத்தின் நீண்ட சலிப்பூட்டும் வளர்ச்சியேயாகும்"
- எங்கெல்ஸ் (டூரிங்குக்கு
மறுப்பு - பக்கம் 67-68)
பருப்பொருளுக்கு இடையேயான இயக்கங்களின் உறவுகள் பற்றிய
அறிவு, பிரபஞ்சத்தின் பொருளாயத ஒற்றுமைக்கான தடத்தை
நமக்கு வழங்குகிறது.
ஆனால் கருத்துமுதல்வாதம் மற்றும் மதக் கண்ணோட்டங்கள்
உலகின் ஒருமையை கடவுளின் சித்தத்தின்படி உருவானதாக்க் கூறுகின்றது. இக்
கருத்தின்படி இந்தப் பிரஞ்சத்தை கடவுள் படைத்தார்,
அவரே இதன் அனைத்துவிதமான
தொடர்பையும் வளர்ச்சியையும் நிர்ணயித்தார். இந்தக் கண்ணோட்டம் புறநிலை எதார்த்தத்தை மறுக்கவில்லை, இந்த
எதார்த்தத்தை கடவுள் என்ற மேலான எதார்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பிரபஞ்சம் இரண்டாம்
நிலையானதாகக் கருதுகின்றனர்.
இந்தக்
கண்ணோட்டத்தின் சிந்தனைப் பள்ளியை சேர்ந்தவர்கள், இந்தியாவில் துவைதம் மற்றும் விசிட்டாத்வைதம்
போன்றவர்கள். மேலை நாட்டில் ஹெகல் போன்றவர் இந்த
வகையினைச் சேர்ந்த கருத்துமுதல்வாதியாவர்.
மற்றொரு ஒருமை பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை
இந்தியாவில் அத்வைதிகள் எனப்படுவர். இவர்கள் மேலான பரம்பொருளின் இருப்பே மெய்யான
எதார்த்தம். அதன் மாயையான பிரதிபிம்பமே இந்தப் பருப்பொருளாலான
பிரபஞ்சம். அந்த பிரம்மமே சத்தியம்.
இந்தப் பிரபஞ்சம் மித் அதாவது மாயை.
இயற்கைக்கு அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம்
என்று அத்வைதம் கருதுகிறது. கணக்கில்லா தோற்றங்களாகக்
காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த ஒன்றே.
நாம்
காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை “ஏகம் சத்” அதாவது அனைத்தும் இந்த
ஒன்றே என்று விளக்குகிறது அத்வைதம்.
நான்
என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மா. நீ என்று சொல்லும்போதும்
அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே.
அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த
ஒரே ஆத்மாவான பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோகூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும் இவையனைத்தும் பிரம்மத்தின்
மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம்.
இந்தச் சிந்தனைப் போக்குடைய
மேலைய அறிஞர் பெர்கிலி பாதிரியார் ஆவார். இந்தியாவில் ஆதி சங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோராவர்.
இந்தக் கருத்துமுதல்வாத மற்றும் மதக் கண்ணோட்டங்கள்
எதார்த்த உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு உதவிடவில்லை. அறியாத
ஒன்றிற்கு அறியாத இன்னொன்றை அதாவது கடவுள் சித்தம்,
பரம்பொருள் (பிரம்மம்) என்ற
அறியாத மற்றொன்றை முன்வைக்கிறது.
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் இந்த
புறநிலை - அகநிலை கருத்துமுதல்வாதிகளின் சிந்தனைகளை மறுத்து
பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளாயத ஒற்றுமையை மட்டுமே உண்மை என்பதை நிறுவுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் பொருளாயத
ஒற்றுமை இயற்கை, சமூகம் பற்றிய விஞ்ஞான வகைப்பட்ட ஒருமையை முன்வைக்கிறது.
ஒரு பருப்பொருள் எப்படிப்பட்ட தனித்தன்மை பெற்றதாயினும், அது அனைத்துப் பருப்பொருளோடு
பொருளாயதத் தன்மையில் இணைந்த ஒரு முழுமையான வெளிப்பாடாகவே மார்க்சியம் பார்க்கிறது.
அப்பொருள் எவ்வித தனித்தன்மை பெற்றதாயினும், பிரபஞ்சத்தில் காணப்படும்
பிற பருப்பொருளோடு பல லட்சம் கோடி இழைகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது. இந்தப் பிணைப்பு ஒரே
முழுமையானதாகவும், வளர்ச்சியின் போக்கை
நிர்ணயிக்கக் கூடிய புறநிலை தொடர்புகளோடே காணப்படுகிறது.
உலகத்தினுடைய ஒற்றுமையின் உண்மையை, அதன் பொருளாயதத்
தன்மையிலும் உணர்வுநிலையிலிருந்து சுயேச்சையான புறநிலை இருப்பிலும் இயக்கவியல் பொருள்முதல்வாதம்
காண்கிறது.
அளவற்ற பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால்
மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட
உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று, அத்துடன் வேறொன்று எனப்
பொருட்களிடையே இணைப்பைப் பெற்றுள்ளது.
இப்பொருட்கள் அனைத்தும்
விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.
நிகழ்வுகளின் தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன்
ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது, விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும்
ஒற்றுமையாய் நடைபெறுகிறது. விசும்பும், காலமும், பருப்பொருளில் இருந்து
பிரித்தறிய முடியாத புறநிலையானது. இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று
தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.
ஒருமைவாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம்
இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும்.
இயற்கை, சமூகம் இத்துடன் மனித
உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும், வளர்ச்சியடைந்து வருகின்ற
பருப்பொருளின் உற்பத்திகளே.
புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உலகத்தின்
பொருளாயத ஒற்றுமையை உறுதிப்படுத்துகின்றன.
உலகத்தின் பொருளாயத
ஒற்றுமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்பில் இருக்கிறது.
பூமிக்கும் வானத்துக்கும்
ஈர்ப்புச் சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம், வேதியல் மூலகங்கள் உருமாற்றம்
அடைதல், தாவர உலகத்துக்கும் விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும்
இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டுள்ளது. எனவே, இயற்கை மற்றும் சமூக
சக்திகளை அனுசரித்து அவற்றை மனித சமூகத்திற்குச் சேவை புரிவதை சாத்தியமாக்குகிறது.
No comments:
Post a Comment