Saturday 18 June 2016

அறிவுத் தோற்றுவாய் (Origin of knowledge)

"நமக்கு வெளியே பொருட்கள் இருக்கின்றன. நம் புலனறிவுக்
காட்சிகளும் கருத்துக்களும் அவற்றின் பிம்பங்கள். இந்த
பிம்பங்களைச் சரிபார்த்தலை, உண்மையான மற்றும் போலியான
பிம்பங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காண்பதை
நடைமுறை நிறைவேற்றுகிறது."
லெனின் -(பொருள்முதுல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

உலகை அறிந்து கொள்ள முடியுமாமனிதனின் சிந்தனை உண்மையை அறிந்து கொள்ளும் திறமையினை பெற்றுள்ளதா? இவை தத்துவத் தேடலில் முக்கியமான கேள்விகளாகும்.

இக்கேள்விகளுக்கு நேர்மறையான பதிலை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. உலகை அறிந்துகொள்ள முடியும். மனிதனது  அறிவு புறநிலை உண்மையை சரியாக பிரதிபலிக்கிறது என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மனிதனைச் சுற்றியுள்ள உலகமே அவனது அறிதலுக்கான தோற்றுவாயாகும். இந்தப் புறநிலைமைகள் மனிதனிடம் தாக்கம் செலுத்துகிறது. இந்த தாக்கத்தை மனிதன் சோதித்து பார்த்து அறிந்து கொள்கிறான். சோதித்ததில் தவறானவற்றை சரிப்படுத்துகிறான், சரியானவற்றில் தொடர்கிறான்

அறிதல் என்பது எளிமையான பிரதிபலிப்பல்ல. அது ஒரு சிக்கலான நிகழ்வாகும். முழுமையற்றதில் இருந்து துல்லியமானதை நோக்கியும், அறியாமையில் இருந்து அறிவை நோக்கியும் பயணித்து உண்மையை அடைகிறது.

மனித அறிதலின் நோக்கம் நடைமுறையேயாகும். உலகின் வளர்ச்சியின்  விதிகளைப் புரிந்து கொள்வது, தன்னுடைய நடைமுறையில் அந்த அறிதலின் விளைவைப் பயன்படுத்திக் கொள்வதற்கேயாகும்.

அறிதல் என்பது மூளையில், எதார்தத்தினுடைய பருப்பொருட்கள் மற்றும் புலப்பாடுகளின்  பிரதிபலிப்பேயாகும். இவை புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பாகும்.

அறிதல் என்பது மூளையின் தனிப்பட்ட செயல் அல்ல. பொருளாயத உலகுடன் பரஸ்பர வினையினால் உருவான மூளையின் செயற்பாடாகும். மனிதன் சுற்றியுள்ள உலகத்தை எந்தளவுக்கு மாற்றக் கற்றுக் கொண்டானோ அந்தளவுக்கு அவனது அறிவு வளர்ச்சி பெறுகிறது.

மனித அறிதல், சமூக வளர்ச்சியின் விளைவாகவும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றி அமைத்திடும்போது ஏற்படும் பயனுமாகும். உலகம் எல்லையற்றது, அதனால் மனிதனது அறிதலும் முடிவற்றது.

அறிதல் செயற்பாடு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. 1.புலனுணர்ச்சி (Sensation), 2.புலனறிவு (Perception).

பொருளாயத உலகைப் பற்றி, தொட்டறியக் கூடிய உறுப்புகளின் மூலம் தெரிந்து கொள்வதை இந்த புலனுணர்ச்சி குறிக்கிறது. புலனுணர்ச்சியால்  கிடைக்கப்ப பெற்றவைகள், சொந்த அனுபவத்தால் அதாவது நடைமுறையால் பலமுறை சோதித்து சரிபடுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் எதார்த்தத்தை புலனுணர்ச்சிகள் சரியாகப்  பிரதிபலிக்கின்றன என்ற முடிவிற்கு வருகிறது.

அறிதலின் இரண்டாம் நிலை புலனறிவு ஆகும். இது சிக்கல் நிறைந்த அறிதல் முறையாகும். ஒரு பொருளைப் பற்றி, ஒவ்வொரு புலனுறுப்புகளும் தனித்தனியான தன்மைகளை மட்டுமே தருகின்றன. இவற்றை ஒரு முழுமையான ஒன்றாகத் திரட்டுகின்ற செயற்பாடே புலனறிவு எனப்படும்.

புலனறிவு, தனித்தனி புலனுணர்வால் அறிந்தவற்றை திட்டவட்டமான ஒன்றாய் அறிந்திட உதவுகிறது. அதாவது புலன்களால் அறியப்பட்டவைகளை ஒன்றாக்கித் தொகுத்து முழுமையாகப் பிரதிபலித்துக் காட்டுகிறது.


மனிதனின் அறிதல் உணர்வுக் கட்டத்திலேயே நின்றுவிடுவதில்லை. உணரப்பட்டவைகளில் இருந்து எண்ணம், சிந்தனை, கருத்தாக்கங்கள் தோன்றுகிறது.

புலனுறுப்பால் அறியப்பட்டவைகளை மீண்டும் மீண்டும் தோன்றச் செய்கிறது. அவ்வாறு தோற்றம் பெறுவதே எண்ணம் எனப்படுகிறது. அதாவது நினைவில் வைத்துள்ள பொருட்களின் தோற்றங்களை ஒப்பிட்டு, சீர்தூக்கி, பகுத்தாராய்ந்து பொதுமைப்படுத்தப்படுவதே எண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

புலனுறுப்புகளால் அறியப்பட்ட விவரங்கள் பகுத்தாராயப்பெற்ற எண்ணங்களால் சிந்தனை உருவாகிறது.

சமூகத்துக்கும், மொழிக்கும் அப்பால் சிந்தனை தோன்ற முடியாது. புலன்களால் திரட்டப்பட்ட  விவரங்கள் மொழியின் வழியிலேயே பொதுமைப்படுத்தப்பட்டு எண்ணமாக, சிந்தனையாக மாற்றப்படுகிறது. மொழி இல்லாது போனால் பொதுமைப்படுத்துகிற நிகழ்வை நிறைவேற்ற முடியாது. இவ்வகையில் சிந்தனையும் மொழியும் இணைந்திருக்கின்றன.

தொலைக்காட்சிச் செய்தியில் இந்த ஆண்டு மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவதை வீட்டில் இருந்தவாறு ஒருவன் கேட்கிறான். இந்த மழையைப் பற்றி  பிறரிடம் பேசவும் செய்கிறான். ஆனால் மழையோ, மழையினால் உண்டான மண்வாசனையோ, அதன் குளிர்ச்சியோ அவனிடத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்றாலும் எதுபற்றி பேசப்படுகிறது என்பதை அவன் புரிந்து கொள்கிறான். இங்கு குறிப்பிடுகின்ற மழை என்ற சொல் எப்படி அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையை தோற்றுவிக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

மக்கள் பல ஆயிரமாண்டுகளாக வரலாற்றில் தமது நடைமுறையில் மழையைப் பலமுறை பார்த்து இதைப் பற்றி ஒரு கருத்தாக்கத்தை பெற்று இது மழை என்ற சொல்லோடு இணைத்துப் புரிந்துவைத்துள்ளனர். மொழியைக் கற்கும் போது நமக்கு முன்னர் வாழ்ந்த தலைமுறைகளால் சேகரித்து வைக்கப்பட்ட அறிவை மொழியின் வழியில் பெறுகிறோம்.

புலனறிவு, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்தாக்கம் (Concept)  உருவாகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் உள்ளடக்கத்தை துல்லியமான வடிவத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மாமரம் என்பதைக் கற்பனையில் கொண்டுவர முடியும். ஆனால் மரம் என்பதைக் கற்பனையில் பார்க்க முடியாது. ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்க முடியும்.

கருத்தாக்கத்தை, புலனறிவு, எண்ணம், சிந்தனை ஆகியவற்றின் மொத்தம் என்று எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது  சிக்கலான, நீடித்த செயல் முறையின் விளைவாகும். ஏராளமான தனித்தனி நிகழ்ச்சிகள் பொதுவான, முக்கியமான, அவசியமான புறநிலைத் தொடர்புகளால் உருவாகின்றன.

புலனுறுப்புகள் சரியான தகவல்களை அளிக்கின்றனவா? புறநிலையில் இருந்து பெறுகின்ற தகவல்களைக் புரிந்து கொள்ளும்போது திரிபுகள் சாத்தியமா?


அறிதல் நிகழ்முறையின்படி பெறுகின்ற அறிவு நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்ட பிறகுதான் உண்மை என்று முடிவெடுக்கப்படுகிறது. பெற்ற அறிவைக் கொண்டு செயல்படும்போது நடைமுறையில் பொருத்த மற்றது உண்மைக்கு மாறானதாகிறது, பொருத்தமானது உண்மையாகிறது.

No comments:

Post a Comment