பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான்
முரணற்ற தத்துவஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும்,
மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும்
என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக்
குப்பைக்கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை
எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும்போரின் களனாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்ருண்டின்
இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை 'மறுப்பதற்கும்',
பலவீனப்படுத் துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று
பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர்.
இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான்
செய்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு
ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும்
மிகவும் தவறாய் இருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக்
ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத்தெளிவாகவும்
முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப்
போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம் நூற்ருண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை
முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு,
குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை-இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல் வாதம் தோன்றியது-திரட்டிய
செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினர். இந்தச் செல்வங்களில்
பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான,
ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்;
நிரந்தரமாக வளர்ச்சியடையும் வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும்
மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில்
ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம்
மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்கமுறையில் உறுதிப்படுத்தியுள்ளன.
அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய 'புதிய' மறு வியாக்கியானங்களைக் கொண்டு
முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.
தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார்.
இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினர். மார்க்சின்
வரலாற்றுத்துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக
அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும்
தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவைபோய், வியப்பூட்டும் அளவுக்கு
ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத்
துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின்
வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னுமொரு
சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய
அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை
- அது காட்டுகிறது.
இயற்கை என்பது
-அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது-மனிதனுக்கு அப்பால்
சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின்
சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக
மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார
அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின்
மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு
அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்திவரும்
ஆதிக்கத்தைப் பலப்படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.
மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும்.
இந்தப் பொருள்முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு,
மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)
No comments:
Post a Comment