Thursday 6 April 2017

இயக்கவியல் (Dialectics)

இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு
தலைப்பட்மில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி
விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியுற்ற
வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும்
மனித அறிவின் சார்வுநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      இயற்கை, சமூகம் இரண்டிலும் ஏற்படும் வளர்ச்சி, மாற்றம் என்பது விதி (Law) முறையின்படி நிகழ்வதாக பொருள்முதல்வாத இயக்கவியல் (Dialectics) நிறுவுகிறது. இங்கு விதி என்பது, புலப்பாடுகளுக்கு இடையேயான உள்ளார்ந்த இணைப்பும் தொடர்பும் பரஸ்பரம் சார்ந்துள்ளதைக் குறிக்கிறது.

      புலப்பாடுகளில் காணப்படும் அனைத்து தொடர்புகளையும் விதி என்று கொள்வதில்லை. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நிகழக்கூடியதாக இருப்பதே விதி எனப்படும். இவற்றின் தொடர்பு  என்பது நிலைமைகளில் வளர்ச்சித் தன்மையை நிர்ணயிப்பதாக இருக்கும்.

      இயற்கை மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை அறிந்து, அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியைப் புரிந்து மக்கள் உணர்வுபூர்வமாக செயற்பட முடியும் என்பதை இயக்கவியல் ஏற்கிறது.

      இன்றைய சமூகம் நீடித்து இருப்பதில் பலன்களை அனுபவித்து வருபவர்கள், இயற்கையும் சமூகமும் விதிகளின்படி செயற்படுவதை மறுதலிக்கின்றனர். இவர்கள் இயக்கவியலை ஏன் மறுகின்றனர் என்றால், இன்றைய சமூகத்தின் வடிவத்தில் ஏற்படும்  வளர்ச்சியும் மாற்றமும் அதன் இறுதிவிளைவான மறைந்து அடுத்த சமூகத்துக்கு மாறிப் போவதை இயக்கவியல் குறிப்பிடுகிறது. இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் தான் இயக்கவியலை மறுக்கின்றனர்.

      இவர்களின் இயக்கமறுப்பியல், வளர்ச்சி என்பதை அளவுநிலையில் ஏற்படுகின்ற குறைதல் அல்லது கூடுதல் என்பதாக எளிமைப்படுத்துகின்றது. இந்த இயக்கமறுப்பியலின் மாற்றம் என்பது பொருட்களின் தனிப்பட்டவையாகவும் அனைத்துடன் உள்ள தொடர்பிணைப்பை ஏற்றுக் கொள்ளாமையிலும் அடங்கியிருக்கிறது.

      பொருள்முதல்வாதத்தின் இயக்கவியல் அனைத்து பொருட்களின் இணைப்பை வலியுறுத்தி, தனது பொருளாயத ஒருமையை வெளிப்படுத்துகிறது.

      இயக்கவியல், உலகத்தையும் அதன் வளர்ச்சியின் விதிகளையும் அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் செயற்படுவதால், அந்த விதிகளின் வழியில் சென்று இயற்கையையும் சமூகத்தையும் புரட்சிகரமாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.
               
      பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் இயல்பிலேயே இயக்கவியலைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். ஆனால் அந்த இயக்கவியல் எளிமையானதாகவும் விஞ்ஞானத் தன்மையற்றதாகவும் இருந்தது.

      பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஹெகல் இயக்கவியலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வளர்ச்சி என்பது எதிர்மறைச் சக்திகளின் போராட்டம் என்றும் பொருட்களின் உள் முரண்பாடுகள் அதன் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணம் என்றும் கூறினார். அவர் இயக்கவியலை மீண்டும் நடைமுறையில் கொண்டு வந்தது பெரும் சிறப்புக்குரிய செயலாகும். இதன் அடிப்படையில்தான் மார்க்ஸ் தன்னை ஹெகலின் மாணவன் என்று அறிவித்தார்.

      மார்க்ஸ் தனது இயக்கவியல் ஹெகலின் வழிமுறையில் இருந்து வேறுபட்டது மற்றும் நேர் எதிரானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.


      எதார்த்த உலகின் கர்த்தாவாக, கருத்தை ஹெகல் முன்னிறுத்துகிறார். எதார்த்த உலகம் கருத்தின் புறவடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை என்று அவர் கருதுகிறார். மார்க்சுக்கு கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.

      ஹெகலின் இயக்கவியலில் காணப்பட்ட மாயாவாதத் தன்மையை மார்க்ஸ் விமர்சித்து, பொருள்முதல்வாத தன்மை பெற்றதாக அதனை செழுமைப்படுத்தினார். உலகம் எப்படி உள்ளதோ அதை எந்தவித வெளிச் சேர்க்கையும் இன்றிஉள்ளதை உள்ளபடியில் ஆராய்ந்தார்

      பிற நிகழ்வுடன் பல்வகைத் தொடர்புகள் இன்றி எந்த நிகழ்வும் நடைபெறுவதில்லை. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள், நிகழ்வுகளின் பரஸ்பரத் தொடர்பு, புறநிலையான பொதுத்தன்மையைக் காட்டுகிறது. நிகழ்ச்சிகளின் வளர்ச்சி என்பது தம்முள் கொண்டுள்ள தொடர்புகளின் தாக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.

      உலகத்தின் அனைத்து இடைத்தொடர்புகளை நிறுவுகின்ற பொது விதிகளை இயக்கவியல் விதிகள் என்றழைக்கப்படுகின்றன.

இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.

1.   அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

2.    எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

3.    நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

1, அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.  (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

      உலகத்தில் எண்ணற்ற பொருட்களையும், அவற்றின் நிகழ்வுகளையும்  நாம் காண்கிறோம். இவைகள் தொடர்ச்சியான இயக்கத்திலும் மாற்றத்திலும் இருக்கின்றன. இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் மற்ற பொருளோடு வேறுபட்ட தன்மையோடு காணப்படுகிறது. குறிப்பிட்ட பொருள் வேறொரு பொருளுடன் கொண்டுள்ள வேறுபட்ட பண்பைக்கொண்டு அதனை வேறுபடுத்திக் காண்கிறோம். அப் பண்பின் ஒப்பீட்டுத் தன்மையோடு அப்பொருள் நிலைபெற்றிருக்கிறது. அந்தச் ஒப்பீட்டுத் (Relative) தன்மையே அப்பொருளை ஒரு குறிப்பிட்ட பொருளாக திட்டவட்டமாக சுட்டுகிறது

      குறிப்பிட்ட பண்புகள் அப்பொருட்களில் காணப்படும் அளவுகளால் நிலைகொள்கிறது. பண்புகளைப் படைக்கின்ற பொருட்களின் அளவு மாற்றங்கள் அப்பொருளின் பண்பு மாற்றங்களாக வடிவ மாற்றம் பெறுகின்றன.

      இதனைப் புரிந்து கொள்வதற்கு அளவுநிலை, பண்புநிலை என்ற சொல் எதனை விளக்குகிறது என்பதை முதலில் அறிந்திட வேண்டும்.

      அளவு என்பது, ஒரு பொருள் அப்பொருளின்  பண்பு வடிவமாக இருப்பதற்கு உரிய உட்பொருள்களின் அளவைக் குறிக்கிறது. அளவுமாற்றம் என்பது, பழைய உட்பொருட்களில் ஏற்படுகின்ற குறைவு மற்றும் அதிகரிப்பு போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு மறைந்து புதியப் பண்பை பெறுகிறது. இந்தப் புதிய பண்பைப் பெற்றதற்கான, பழைய உட்பொருளில் ஏற்படுத்திய அளவின் மாற்றத்தையே அளவுமாற்றம் என்கிறோம்.

      ஒரு பொருள் எத்தன்மையது என்று வெளிப்படுத்துகிறதோ அந்த வெளிப்பாட்டுத் தன்மையே பண்பு எனப்படும். பண்பு மாற்றம் என்பது பழைய பொருட்களின் உட்பொருளில் ஏற்படுகின்ற அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன், பழைய பண்பு மறைந்து புதிய பண்பைப் பெறுவதைக் குறிக்கிறது. இந்தப் புதிய பண்பை எட்டுகின்ற மாற்றமே பண்பு மாற்றமாகும்.

      ஒரு பொருள், தன்னை ஒரு பொருளாக திட்டவட்டமாய் காட்டிக் கொண்டிருக்கும்போதே தம்முள் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களின் அளவு சிறுகச்சிறுக நடைபெறும். அவ்வாறு சிறுகச்சிறுக ஏற்படும்போது நமது நேரடிப் பார்வைக்கு அவைத் தென்படுவதில்லை.

      சிறிதளவான மாற்றங்கள் அப்பொருளின் பண்பைப் பாதிப்பதிலை, ஆனால் அந்த அளவு மாற்றங்கள் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு நிலையிலிருந்து புதிய பண்புநிலைக்கு திடீரென்று பாய்ச்சலாக மாறிவிடுகிறது.

      அளவுநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இடையீடின்றி படிப்படியாக நடைபெறுகிறது. பண்புநிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட கட்டத்தில் பழைய பண்பின் முறிவும் புதிய பண்பின் தொடக்கமுமாய், பாய்ச்சலாக மாறுகிறது. இதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், அளவுநிலையில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டவுடன், அந்த அளவு மாற்றம் பழைய பண்போடு முரண்படுகிறது. அந்த முரண்பாடு புதிய பண்புடைய புதிய பொருளை படைக்கும் போது தீர்க்கப்படுகிறது.

      அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாக வளர்ச்சியடைகின்ற தொடர் நிகழ்வு, பொருளாயத உலகின் புத்திளமை தோற்றத்துக்குக் காரணமாகிறது.

2.எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

      ஒரு பொருளின் இருப்பு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. எதிர்நிலைகளின் ஒற்றுமை, அவற்றிடையேயான போராட்டம் என்ற இரண்டையும் பெற்றிருக்கின்றது.

ஒரு நிகழ்வில் எதிர்நிலைகள் பரஸ்பரம் முரண்பட்டிருப்பது அவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அந்த முரண்பாட்டின் எதிர்க்கின்ற போக்கு அதாவது நிராகரிப்பது அந்நிகழ்வில் காணப்படும் எதிர்நிலையாகும்.

எதிர்நிலைகளிடையே ஒற்றுமையாய் புலப்படும்போதே அவற்றிடையே நிராகரிக்கின்ற வகையில் போராட்டமும் இருக்கிறது. உள்நிகழ்வுகளில் ஒற்றுமை பெற்றிருக்கும் போதே அவற்றிடையே ஒன்றையொன்று எதிர்க்கின்ற  போராட்டமும் நடைபெறுகிறது.

போராட்டம் என்னும்போது அவற்றில் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது என்ற வகையில் இணைந்தே காணப்படுகிறதுஇந்த ஒற்றுமையின் ஊடே நிரந்திர எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது. எதிர்நிலைகளின் ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றிடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute).
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எதிர்நிலைகளுக்கிடையே காணப்படும் இடை உறவு போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது.

ஒற்றுமை பொருளின் இருப்பையும், போராட்டம் வளர்ச்சியையும் காட்டுகிறது. எதிர்நிலைகளின் போராட்டமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.

3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of Negation)

நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்னும் விதி பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெறுவதற்கான இடைத்தொடர்பை வெளிப்படுத்துகிறது. கீழ்நிலையில் இருந்து மேல்நிலைக்கும், எளிமையானதில் இருந்து கூட்டுநிலைக்கும் ஆன மாற்றத்தைக் குறிக்கிறது.

நிலைமறுப்பு என்பது பழையவற்றுக்கு மாற்றாய் புதியதையும். ஒரு வளர்ச்சியடைந்த கட்டத்தைக் கடந்து புதிய வளர்ச்சியினை எட்டுவதையும் குறிக்கிறது.

பழையதை நீக்கி புதியதை நிலைநிறுத்தும் போது, புதியதுக்கான ஊற்று பழையதின் உள்ளேயே தோன்றுகிறது. அதனால் தான் பழையது முழுமையாக அழிந்து போகிறது என்று கூறாமல், எளிமையானதில் இருந்து கூட்டுநிலையை நோக்கி மேல்நிலை அடைகிறது என்று கூறப்படுகிறது.

பழையதில் உள்ள முரண்பாடு முதிர்ந்து அவற்றின் ஒற்றுமை குலைக்கப்படுவதே நிலைமறுப்பு என்றழைக்கப்படுகிறது.

வளர்ச்சி என்னும் நிகழ்வில் எந்தக் கட்டமும் நிலைத்த தன்மை உடையதல்ல, ஒவ்வொரு கட்டமும் முதிர்ந்து மறைந்து புதியவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டி வருகிறது.

புதியதை நிர்ணயிக்கின்ற போக்கு பழையதின் கருவிலேதான் இருக்கின்றது. இயக்கவியல் என்பது பழையதை அகற்றுவதையும் புதியதின் நிலைநிறுத்தலையும் இணைத்தே விவரிக்கிறது.

பழையதை நிலைமறுத்து  நிலைபெற்ற புதியது, அதன் வளாச்சிப் போக்கில் முதிர்ந்து பழையதாகிறது. பழையதுக்கு முன்பு ஏற்பட்ட நிலையே இதற்கும் ஏற்படுகிறது. அதாவது பழையதின் இடத்தை நீக்கி புதியதும், புதியதின் இடம் இதைவிட மேலான புதிய ஒன்றால்  நிலைமறுக்கப்படுகிறது, இவ்வாறு நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற விதி வளாச்சியின் விதியாக விளங்குகிறது.


இவ்விதி, வளர்ச்சியின் பொதுப் போக்கையும், புதியவற்றுக்குள் நுழைய வேண்டிய செல்வழியையும் காட்டுகிறது.

No comments:

Post a Comment