Thursday 6 April 2017

இயக்கவியலின் வகையினங்கள்

(Categories of dialectics)

எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடிகிறது. அரசியல் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தை படித்தறிவற்கு சரக்கின் இரட்டைத் தன்மை, உழைப்பின் இரட்டைத் தன்மை, உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள், மூலதனம், உபரி மதிப்பு, மறுவுற்பத்தி போன்ற வகையினங்களை அறிந்திருக்க வேண்டும். தத்துவம் என்ற விஞ்ஞானத்துக்கு  உணர்வுநிலை, பருப்பொருள், விசும்பு, காலம், அறிவுத் தோற்றவியல் போன்ற வகையினங்கள் இருக்கிறது.

இயக்கமறுப்பியல் கண்ணோட்டம், புறநிலையின் கூறுகளின் இணைப்பையும் தொடர்பையும் ஒப்புக் கொள்வதில்லை. அதனால் காரணம், விளைவு, உள்ளடக்கம், வடிவம் என்பது போன்ற வகையினங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

வகையினங்கள், புறநிலையான உண்மைகளை அறிதலின் நிகழ்வுப்போக்கால் உருவாகின்றன. இந்த வகையினங்களின் மூலம் சுற்றியுள்ள உலகின் புறநிலைக் கூறுகளின் பிரதிபலிப்பைக்கொண்டு அனைத்தின் தொடர்பு, இணைப்பு ஆகியவைகளை அறிந்துகொள்ளப்படுகிறது.


இந்த வகையினங்களை அறிந்து கொள்ளும்போது அவற்றின் சொல்விளக்கத்தோடு நின்றுவிடக்கூடாது. அச்சொல் உணர்த்தும்  விளக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதன் ஆழ்ந்த பொருளை அறிய வேண்டும்.

1.தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

உலகில் காணப்படும் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் அவற்றுக்கே உரிய தனியான தன்மையும், அவைகளுக்கு உரிய பொதுத் தன்மையும் பெற்றதாக இருக்கிறது. முற்றிலும் ஒரே மாதிரியான இரண்டை பார்க்க முடியாது. ஓரே மரத்தில் காணப்படும் இலைகள் ஒவ்வொன்றும் சிறுமாற்றங்களையேனும் தம்முள் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவ்விலைகளுக்கிடையே உள்ள பொதுத் தன்மையாக அவைகள் ஒருகுறிப்பிட்டவகை மரத்தின் இலைகள் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

சமூகத்தில் காணப்படும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கின்றனர், அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் ஒத்ததன்மை பெற்றவர்களாவர்.

ஓரேவிதமாக, திரும்பத்திரும்ப  நிகழும் தன்மையே சர்வப்பொதுவானது என்றழைக்கப்படுகிறது. ஒரேவிதப் பொருட்களில் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் காணமுடிகிறது. அவற்றிடையே காணப்படும் வேறுபடுத்தும் தன்மையை தனியானது என்று அழைக்கிறோம்.

 ஒப்பிட்டுப் பார்க்கையில் அவற்றுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், குறிப்பான தன்மை மற்றும் பொதுவானது ஆகிய  மூன்றையும் பிரித்தறிவதற்கு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாம்பழம் என்பது தனியானது. மாமரம் என்பது குறிப்பானது.  மரம் என்ற வகையில் சர்வப்பொதுவானது.

அதே போல் சமூக மாற்றம் என்பது சர்வப்பொதுவானது. அதில் தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி போன்றவை குறிப்பானது. குறிப்பிட்ட நாட்டில் நடைபெறுவதை தனியானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

தனியானது, குறிப்பானது, சர்வபொதுவனது ஆகியவை பிரிக்க முடியாத ஒற்றுமையைக் கொண்டதாகும்.

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

ஒரு நிகழ்வு நடைபெற்றது என்றால், அது நடைபெறுவதற்கான காரணங்களின்றி தோன்றுவதில்லை. நிகழ்வு குறிப்பிட்ட காரணங்களின் விளைவாகும். காரணம் இன்றி ஒரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகின்ற காரணியே அந்நிகழ்வு தோன்றுவதற்கான காரணமாகும். ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வை உருவாக்குகிறது என்றால் முந்தையது காரணம் என்றும்  பிந்தையது விளைவு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது காரணமான நிகழ்வு எப்போதும்  விளைவுக்கு முன்பானதுவிளைவு காரணத்துக்கு பிந்தியதாகும்.

காரணத்தால் ஏற்படுகிற விளைவு என்பது காலவரிசைத் தொடரை வெளிப்படுத்துகிறது. இத் தொடர்ச்சி காரணமும் விளைவும் இடங்களை மாற்றிக் கொள்வதையும் உணர்த்துகிறது. இப்போது விளைவாய் காணப்படும் நிகழ்வு மற்றொன்றுக்கு காரணமாகும்போது முந்தைய விளைவு புதியதுக்குக் காரணமாகிறது. இவ்வாறே இதன் தொடர்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பிட்ட காரணங்கள் நிலவும் போது குறிப்பிட்ட விளைவைக் கட்டாயம் ஏற்படுத்துகிறது என்பதில் அவற்றின் அவசியத் தன்மை அடங்கியிருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டின் காரணத்தால்தான் பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது. சந்தையின் தேவையை அறிந்திட முடியாமல் முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுகிறது. திட்டமிடாத வகையில் தனித்தனி முதலாளிகளின் லாபநோக்கில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து உற்பத்தியில் ஈடுபடுத்துவதால் உண்டாகும் மிகை உற்பத்தியின் காரணமாகவே பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

அவசியம் என்பது காரணத்தின் விளைவாய் நடைபெறுகிறது. அதாவது சில தொடர்புகளினுடைய இயல்புகளினால் ஏற்படுகின்ற சூழ்நிலைமைகளால் உருவாவதே அவசியம்.  தற்செயல் என்பது நடைபெறலாம், அல்லது நடைபெறாமல் போகலாம் என்பதை உணர்த்துகிறது.

புறநிலைமைகளினுடைய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததின் விளைவாய் அவசியம் தோன்றுகிறது. அதே போன்று தற்செயலும் முழுதும் காரணங்களற்ற  நிலைமைகளில் தோன்றுவதில்லைதற்செயல் நிகழ்ச்சிகள் தோன்றுதற்கான காரணங்களும் இருக்கவே செய்கிறது. தற்செயல் என்பதை காரணமற்ற விளைவாய் பார்க்க முடியாது.

ஏன் என்றால் அவசியம் போன்றே, தற்செயலும் புறநிலைத் தன்மையானது. அதனால் தற்செயலை அவசியத்தின் வெளிப்பாடாக, அவசியத்துக்கு துணைபுரிவதாக இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தற்செயல் ஒப்பீட்டு நிலையானது தான், அவசியத்தின் தொடர்புகளற்ற தற்செயல் என்பது கிடையாது. குறிப்பிட்ட நோக்கில் அது தற்செயலானது, அதுவே வேறொரு நோக்கில் அவசியத்தின் தொடர்பு பெற்றிருப்பதை காணலாம்.

தற்செயல் என்பது நடைபெறலாம் அல்லது நடைபெறாது போகலாம், ஆனால் சாத்தியமானதே. அதாவது தற்செயல் எந்த சாத்தியமற்ற நிகழ்வையும் நடத்திக் காட்டுவதில்லை. தற்செயல் என்பது இடைத்தொடர்பின் ஒரு முனையேயாகும், அதன் மற்றொரு முனை அவசியமாக இருக்கிறது.

இயக்கவியல் பற்றிய அறியாமை பலபேரை அவசியத்தையும் தற்செயலையும் எதிர் எதிர்நிலைக்குக் கொண்டு செல்கின்றது. ஒருசிலர் அவசியத்தின் அடிப்படையில் மட்டும் நிகழ்வுகள் உலகில் நடைபெறுகிறது என்று நினைக்கின்றனர். இவர்கள் அவசிய நிலையை அறுதியான ஒன்றாக பரம்பொருளாக காண்கின்றனர்.

மற்றும் சிலர் அவசியம் என்பதை மறுக்கின்றனர். தற்செயலால் மட்டுமே அனைத்தும்  நிகழ்கிறது என்கின்றனர். ஆனால் இயக்கவியல், அவசியத்தின் அடிப்படையில் மட்டும் அல்லது தற்செயலாகத்தான் நிகழ்வுகள் மட்டும் நடைபெறுகின்றன என்பதை மறுத்து, இவ்விரண்டுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை ஏற்றுக் கொள்கிறது.

தற்செயல் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிப் போக்கில் அவசியமாகிறது.

அவசியம் என்பதை தூய நிலையில் புரிந்து கொள்ளக் கூடாது. பல்வேறு தற்செயல் நிகழ்வின் தொடர்ச்சியில் அவசியம் ஆகிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் எதிர்வினை புரிகிறது.

இதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாய் விளக்கலாம். நிறைமாதக் கர்ப்பிணி இரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இடையில் பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. பிரசவிப்பதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதே இரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்கிறார். அந்த மருத்துவரின் உதவியுடன் இரயில் பெட்டியிலேயே பிரசவம் சுகமாக நடைபெறுகிறது. மருத்துவரின் பயணம் ஒரு தற்செயல் நடவடிக்கையே. ஆனாலும் இந்த தற்செயல் நிகழ்ச்சி பிரசவத்தின் தேவையை நிறைவேற்றி விடுகிறது

சமூக மாற்றம் என்பது, வரலாற்று வளர்ச்சியின் விதியின்படி ஏற்படுகிறது. இது வரலாற்றின் அவசியத்தைக் குறிக்கிறது. இந்த சமூக மாற்றம் பல்வேறு தற்செயல் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. புரட்சியை நிகழ்த்தும் போது அந்தக் கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நபர் தற்செயலான செயற்பாடே, ஆனால் இந்த தற்செயல் அவசியத்தின் செயல்முறைகளின் மூலமாகவே நடைபெறுகிறது

4. உள்ளடக்கமும் வடிவமும்  (Content and Form)

உள்ளடக்கம் என்பது குறிப்பிட்ட நிகழ்வின் இருப்புக்கும், அதன் வடிவங்கள் தோன்றுவதற்கான நிர்ணயிப்பாகவும் இருக்கிறது. வடிவம் என்பது உள்ளடக்கத்தின் கட்டமைப்பாகவும், அது நிலவுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது.

உள்ளடக்கமும் வடிவமும் ஒன்றை  ஒன்று பிரிக்க முடியாத நெருக்கம் கொண்டவையாகும். ஒரு நிகழ்வு என்பது உள்ளடகத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ளடக்கம் நிர்ணயகரமான தன்மையைப் பெற்றிருக்கிறது.

உள்ளடகத்துக்கு பொருத்தமான வடிவம் என்பது அந்நிகழ்வின் வளர்ச்சிக்கு முக்கிய  நிபந்தனையாக இருக்கிறது. இந்த பொருத்தம் என்பது முழுமையானதாக, மாறாததாக, நிலையானதாக கருத முடியாது.

வடிவம் உள்ளடக்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், வடிவம் ஒப்பீட்டு வகையில் சுதந்திரம் பெற்றிருக்கிறது. தன்னளவில் உள்ளடக்கத்தோடு எதிர்வினை புரிகிறது. இந்த எதிர்வினை இரண்டு வகைகளில்  நிகழ்கிறது. ஒன்று உள்ளடக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றது அப்போது உள்ளடக்கத்தின் வளர்ச்சி சீரானதாக இருக்கிறது. மற்றொன்று உள்ளடக்கத்தின் ஏற்றவகைக்கு பொருந்தாமல் இருக்கின்றது, அப்போது வளாச்சியைத் தாமதப் படுத்துகிறது அல்லது பின்னோக்கித் தள்ளுகிறது.

உள்ளடக்கம் வடிவம் இவற்றில் உள்ளடக்கம் முதலில் மாற்றம் பெறுகிறது அதற்கு ஏற்ப வடிவத்தில் மாற்றம்  நிகழ்கிறது. புதிய உள்ளடக்கத்துக்கும் பழைய வடித்துக்கும் இடையே முரண்பாடு முற்றி மோதல் வலுப்பெறுகிறது. மோதலின்  விளைவாய் பழைய வடிவம் தூக்கி எறியப்பட்டு புதிய உள்ளடக்கத்துக்குப் பொருத்தான புதிய வடிவம் தோற்றுவிக்கப்படுகிறது.

உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள இடைத் தொடர்பை சரியான வகையில் புரிந்து கொள்ளுதல் நடைமுறை வேலைக்கு முக்கியமானதாகும்.

தண்ணீர் திரவமாக இருப்பதால் அதனை  ஒரு பாத்திரத்தில் வைக்கிறோம். அப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை 100 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்கும் போது தண்ணீர் நீராவியாக மாறுகிறது. உரு மாறிய நீராவியை தற்போது அதே பாத்திரத்தில் நிறுத்திவைக்க இயலாது. மாறாக அதை அடைத்து வைப்பதற்கு  சிலிண்டர் தேவைப்படுகிறது. எனவே உள்ளடக்குத் தக்கபடி அதனைத்தாங்கும் வடிவம் மாறி விடுகிறது.

நிலப்பிரபுத்துவம் நிலவியபோது முடியாட்சி அதன் அரசியல் வடிவமாக இருக்கிறது. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றியபோது பழைய அரசியல் வடிவமான முடியாட்சி ஒவ்வாததாகி விடுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற வடிவமாக நாடாளுமன்றம் தோன்றுகிறது. ஆனால் அந்த நாடாளுமன்றம் பிரதம மந்திரியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் இவையிரண்டும் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

புதியதான ஒன்று தோன்றுவதற்கான நிலைமைகள் நிலவுவது சாத்தியம் என்றழைக்கப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தன்மைகளையும், நிகழ்வுகளையும் எதார்த்த வளர்ச்சியின் புறநிலையான தன்மையாக  சாத்தியம் பிரதிபலிக்கிறது.

எதார்த்தம் என்பது விரிவான பொருளிலும் குறுகிய பொருளிலும் அறியப்படுகிறதுவிரிந்த பொருளில் எதார்த்தம் என்பது புறநிலையில் நிலவுகின்ற அனைத்தையும் குறிக்கிறது. குறுகிய பொருளில் எதார்த்தம் என்பது செயற்படுத்தப்பட்டதை அதாவது நிறைவேற்றப்பட்டதை குறிக்கிறது.


சாத்தியமும் எதார்த்தமும் தம்முள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. எதார்த்தத்தின் வளர்ச்சியில் சாத்தியம் தோன்றுகிறது. சாத்தியமானதின் தயாரிப்பினால் யதார்த்தம் ஆகிறது.

சமூக வாழ்வில், உணர்வும் சித்தமும் கொண்ட மக்கள் செயற்படுகின்றனர். சமூக வாழ்வில் மாற்றம் என்பது இயற்கையில் நிகழ்வதுபோல் மக்களைச் சாராமல் நிகழ்வதில்லை. சமூகத்தில், மாற்றத்தை நிகழ்த்துவதற்கு புறநிலைமைகளோடு, மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபடுகின்ற உறுதியான வர்க்கம், அதற்கு துணைபுரிய அனைத்து மக்கள், இவற்றைத் தலைமை தாங்கி நடத்தக் கட்சி போன்ற அகநிலைமைகளும் அவசியமாகின்றன.

இயற்கை மாற்றம் தன்னியல்பாகவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாக செயற்படுகிறது. சமூக மாற்றத்துக்கான நடைமுறைக் கோட்பாட்டை வகுத்துக் கொள்வதற்கும், பாட்டாளி வாக்கம் தம்மை உறுதிபடுத்துவதற்கும்  இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை கட்சி உறுதியாகக் கையாள வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்முரண்பாட்டின் முதிர்ச்சியின் வெளிப்பாடாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எல்லாப் பொருளாதார நெருக்கடியும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. இந்தத் தொடர் நிகழ்வு முரண்பாட்டின் முதிர்ச்சியை, புரட்சியை ஏற்படுத்தும்  சாத்தியப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. கட்சி, அதற்கு ஏற்றத் தலைமை, அன்றைய வர்க்கங்களின் கூட்டணி ஆகியவை இந்த சாத்தியப்பாட்டைத் தேர்ந்தெடுத்து, எதார்த்தமாக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமானவை எதார்த்தமாகும்.

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

ஒவ்வொரு பொருளும் இரண்டு தன்மை பெற்றுள்ளது. ஒன்று சாராம்சம் மற்றொன்று புலப்பாடு (Phenomenon). பார்க்கின்ற பொருளின் புறவடிவமே புலப்பாடு. புலப்படுகின்ற வடிவத்தைத் தீர்மானிக்கின்ற அல்லது புறவடிவத்தில் வெளிப்படுகின்ற உள்ளடக்கம் சாராம்சம் (Essence).

சாராம்சம் என்பது பொருளின் அடிப்படைகளின் இணைப்புகளையும் உள்விதிகளையும் இணைத்த முழுமையைக் குறிக்கிறது. இவையே அப்பொருளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இந்தப் பொருட்களின் மாற்றம், வளர்ச்சி என்பது உடனடியாக மேற்பரப்பில் அதாவது புறவடிவத்தில் வெளிப்படுவதில்லை. அந்த மாற்றங்கள் புறவடிவத்தின் உள்ளே சூக்குமமாக மறைந்து இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்கள் புலனுறுப்புகளால் நேரடியாக  அறியப்படுவதில்லை. புலனுறுப்புகளின் ஒட்டுமொத்த விளைவின் ஊடே, சூக்கும சிந்தனையின் வாயிலாக அறியப்படுகிறது.

புலப்பாடு என்பது நிகழ்வின் தோற்றாப்பாடேயாகும். ஒரு பொருளின் இயக்கத்தை அதாவது நிகழ்வை மனிதன் நேரடியாக புலன்களின் மூலம் அறிவதை இது காட்டுகிறது. அதாவது பொருளினுடைய நிகழ்வின் மேற்பரப்பை முதலில் மனிதன் கவனிக்கிறான். பொருளினுடைய நிகழ்முறையின் வெளிப்பாடான புறத்தோற்றத்தையே புலப்பாடு என்கிறோம்.

சாராம்சமும் புலப்பாடும் இரண்டும் ஒன்றிணைந்த பகுதியாகும். இதில் சாராம்சம் இல்லாமல் புலப்பாடு இல்லை. சாராம்சத்தில் தோன்றியது புலப்பாட்டு வடிவமாக வெளிப்படுகிறது. சாராம்சத்தின் உள்ளடக்கத்தை புலப்பாட்டு வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.

மின்சாரம் என்பது சாராம்சமாகும், அந்த மின்சாரத்தின் ஆற்றல் மின்விசிறியாக, மின்சார ரயிலாக, மின்மோட்டாராக நமக்குப் புலப்படுகிறது. எந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடும், அந்த உட்சாரத்தின் ஆற்றலையே பிரதிபலிக்கின்றன.


சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவவர்க்கத்திற்கும் இடையிலான பகைமை, வர்க்கப் போராட்டமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது

No comments:

Post a Comment