Wednesday 4 April 2018

ஆதிசங்கரரின் அத்வைத சாரம்


அநித்தியம், நித்தியம், நித்திய அநித்திய விவேகம், மாயை, பிரம்மம் சத்தியம் உலகம் மித், தத்துவமசி, ஜீவ பிரம்ம ஐக்கியம், சம்சாரம், பன்மையே வியவகார உலகம், ஒருமையே பரமார்த்த உலகம், சத்சித் ஆனந்தம், முக்தி ஆகிய சொற்களின் பொருளை தெரிந்து கொண்டாலே அத்வைதத்தின் சாரத்தை அறியலாம்.

இந்த உலகத்தில் காணும் பொருட்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை நிலைத்த தன்மையற்றவை (அநித்தியமானவை). நிலையற்ற இந்த உலகப் பொருட்களால் கிடைக்கும் இன்பமும் நிலையற்றவை. விருப்பும், வெறுப்பும் நிறைந்துள்ள இந்த உலகம் கனவு போன்றதே. கனவில் காணும் உலகம் பொய்யானதே, அதேபோல் நனவில் காணும் உலகமும் மாயையானதே. இந்த உலகின் நிலையற்ற பன்மை தன்மையினால் தான் அச்சமும் துன்பமும் (சம்சாரப் பந்தம்) நேர்கிறது. நிலையற்றப் பொருட்களால் மக்களுக்கு அமைதி கிடைக்காது. அதனால் நிலையான பொருளை (நித்திய அநித்திய விவேகம்) நாடிச் செல்ல வேண்டும். நிலையான பொருள் (நித்தியமானது) ஆத்மா. மனிதன் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் உண்மையானது (சத்தியமானது) என்ற தவறான நினைப்பில் இருக்கிறான். இது மாயையானது. இதற்கு இருப்புக் கிடையாது, இருப்பிடம் இல்லாமலும் இல்லை, இந்த இரு வகைப்பட்டதன்று, இதுவே மாயையின் நிலை. இந்த மாயையின் அடிப்படையில் தோன்றியதே உலகம். பிரம்மம் சத்தியம் உலகம் அசத்தியம் (பிரம்மம் சத்தியம் உலகம் மித்).

தன்னை உடலாகக் கருதுவதைவிடுத்து, ஆத்மா என்ற நிலையான தன்மைப் பெற்றவன் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்த அத்மா தனித்த ஆத்மா கிடையாது, அது பரமாத்மாவின் (பிரம்மத்தின்) விலகலாகத் தோன்றுகிறது. உண்மையில் பரமாத்மா மட்டுமே உண்மையானது. பிரம்மத்திற்கு வேறான ஒன்றுக்கு இருப்புக் கிடையாது. இருப்பாகத் தோன்றுவது மாயையின் தோற்றமே. “நீயே அது” (தத்துவமசி) என்கிற வேதாந்த மகாவாக்கியத்தை உணர்ந்து நானே பிரம்மம் (ஜீவ பிரம்ம ஐக்கியம்) என்பதை அறிவதே, துன்ப மயமான (வியவகார உலகம்) இந்தப் பன்மை உலகத்தில் இருந்து விடுபடுவதே (முத்தி) விடுதலையாகும். வியவகார உலகில் தான் வேறுபாடுகள் பரமார்த்த உலகில் அனைத்தும் ஒன்றே, ஒருமையே.

ஞானம் பெறுவதற்குக் கர்மம் (செயல்) துணைபுரிகிறது. அந்த செயல் பற்றில்லாமல் அதாவது பலன் கருதாமல் செய்தால் அந்தச் செயல் கர்மவினையை ஏற்படுத்தாது. இந்தச் செயல் ஞானத்திற்கு வழிகாட்டாது, ஆனால் ஞானம் பெறுவதற்குத் தேவைப்படுகிற மனத்தூய்மையை (சித்த சுத்தி) ஏற்படுத்தும். மனத்தூய்மை பெற்றவன் ஞான யோகத்திற்கு தயாராகிறான். பிறகு, துன்பமயமான பன்மைத்தன்மை உடைய வெளிஉலகத்தில் இருந்து விடுபட்டு இயல்பிலேயே என்றும் ஆனந்தமயமானவன் (சத்சித் ஆனந்தன்) என்பதை அறிந்து இன்பத்தில் திழைக்கிறான்.

பிரம்மத்தில் இருந்து பிரிந்தாகக் கருதுவதை விடுத்து பிரம்மமாய் இருப்பதை (ஒருமை) உணர்வதே ஞானமாகும். இந்த ஞானமே சம்சாரத்தில் இருந்து (முக்தியை) விடுதலைத் தருகிறது.  

(இதற்கான விமர்சனம் பிறகு வெளியிடப்படும், அத்வைதத்தைப் அறிந்திருந்தால் தான் அதன் விமர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால் அத்வைதத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.)

No comments:

Post a Comment