Wednesday 4 April 2018

அக்ஞானமே (அறியாமையே) உலக - மாயையைப் படைப்பது- தேவிபிரசாத் சட்டோபாத்யாய


“….இந்தியக் கருத்துமுதல்வாதிகளின் பௌதீக உலகம் பற்றிய கருத்தை, ஆராய்ந்து பார்த்தால் கடைசியில் நிஜமல்லாதது தான் என்பதை நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கைக்குப் பக்க பலமாகக் கூறிய சில முக்கியமான சிந்தனைகளைக் கண்டோம். ஆயினும் உலகம் ஏதோ ஒரு வகையில் இருப்பது போல தோற்றம் தருகிறது என்ற உண்மையும் இருக்கத்தான் இருக்கிறது ; இந்தக் தோற்றத்தை என்னவென்று சொல்வது? ஆத்மாதான் இருக்கிறது: அது மட்டுமே இருக்கும் போது பிரகிருதியும் (இயற்கை - பௌதீக உலகு) இருப்பதாகக் கொள்ளும் வகையில் நம்மைக் காணச் செய்வது எது? இந்தக் கேள்விக்கு கருத்த முதல் வாதிகளான இவர்களெல்லாம் - சூன்யவாதிகள், விக்ஞானவாதிகள், மாயாவாதிகள் எல்லோருமே - விடை கூறவேண்டியது அவசியமாகிறது; இதை நன்குணர்ந்த அவர்கள் கூறும் விடைகள் யாவுமே ஒன்றுதான் ; பொய்யான உலகம் தோன்றுவதற்கு இருப்பது போலக் கொள்வதற்கு) நம்மிடமுள்ள குறை - ஒரு வகை மாசு தான் காரணம், இந்தக் குறை, மாசு முக்கியமாக அக்ஞானம் தான் அக்ஞானமே நமது இயல்பாக இருக்கிறது.

உலகம் என்ற மாயைக்குக் காரணமாவது அக்ஞானமே என்ற இந்தக் கருத்து, மிகவும் முக்கியமான - தலைமையற்ற வகையில் இந்தியக் கருத்துமுதல்வாதத்திற்கு அடிப்படையே ஆகிவிடுவதைப் புரிந்து கொள்வது கடினமே இல்லை. இந்தியத் தத்துவம் இன்னது என்று பலரும் புரிந்து கொண்டிருப்பதும் இது அத்வைத வேதாந்தம் என்ற பெயருடன் மட்டுமே தொடர்புடையது என்பதுதான்; அதில் தான் இந்த அக்ஞானம், அவித்யை என்றும் மாயை என்றும் இரண்டு சொற்களால் குறிக்கப்படுகிறது. அத்வைதிகளுக்கு இது மிகவும் முக்கியமான அடிப்படைக் கருத்து என்பது பற்றி ஐயப்பட அவசியமில்லை. ஆனால் இது அவர்கள் கண்டுபிடித்த ஒன்றன்று என்பதைச் சொல்வதுதான் முக்கியம். இந்தியக் கருதத்துமுதல்வாதம் அதன் செயற்பாடு ஏற்பட்டு வளர்ந்த காலம் முதல் இன்று வரை இதையே சார்ந்து நிற்க வேண்டியிருக்கிறது; ஆகவே, கருத்துமுதல் வாதிகள் அனைவருமே ஏதோ ஒரு விளகக்கமும் தருகின்றனர்.

லகம் அக்ஞானத்தால் மந்திர ஜாலம் போல் உண்டாக்கப் படுகிறது 6ான்ற விளக்கம் அவர்கள் அனைவருக்கும் மிகவும் வசதியாகவும் இருக்கிறது, எல்லாருமே கூறுவது என்னவெனில் அறியாமைதான் நம்மை நிஜமாக இல்லாத பொருள்களைக் காணவைக்கிறது ன்பதே.

இதுபற்றி முதலில் இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். இல்லாத பொருளைக் காண்பதற்கு எடுத்தக்காட்டாக அடிக்கடி அவர்கள் கூறுவது கயிற்றில் பாம்பைக் காண்பது. (வெளிச்சம் இல்லாத இடத்தில் மயங்கிச் சுருண்டு வளைந்து கிடக்கும் ஒரு கயிற்றைப் பாம்பு என நினைத்தல்) அங்கே பாம்பு இல்லை; ஆனாலும் பாம்பைக் காண்பதும் உண்மைதான் - இல்லாத பாம்பை நாம் எப்படிப் பிரத்யக்ஷமாகக் காண்கிறோம்? இதற்கு உள்ள ஒரே விடை, நாம் அறியாமையின் பிடியில் இருக்கும் வரை, (வெளிச்சத்தில் அது பாம்பு இல்லை என்று தெரியும் வரை) பாம்பைத்தான் பார்க்கிறோம் என்பதே. அறியாமை நீங்கிச் சரியான அறிவு ஏற்பட்டால், கயிற்றைக் காண்போமே தவிர பாம்பை அல்ல. (சரியான அறிவைத் தருவது வெளிச்சம்) அக்ஞானத்திற்கு உண்மையான இயல்பை மறைக்கும் சக்தி மட்டுமின்றி, அந்தப் பொருள் மீது, தான் தந்திரமாகப் படைக்கும் ஒரு பொய்யான பொருளை ஏற்றிக் காட்டும் சக்தியும் உண்டு என்பதற்கு இதுவே சான்றாகும் என்பார்கள்.

அக்ஞானம் நம் முன்னே கிடக்கும் கயிற்றை மறைப்பதோடு, அதில் தன் மாயப்படைப்பான (நாம் கற்பனை செய்து கொள்ளும்) பாம்பையும் காணச் செய்துவிடுகிறது. கனவிலும் இதே போலத்தான் நிகழ்கிறது ; கனவு காணும் போதும் நாம் அக்ஞானத்தின் வசப்பட்டு விடுகிறோம்; ஆதலால், நம் கண்முன்னே நிஜமாகவே இருக்கும் பொருள்களை (முன்பு அறிந்தவற்றை) மட்டுமே காண்பதில்லை ; முன்னே இல்லாதவற்றையும் திட்ட வட்டமாகக் காண்கிறோம். அவர்களிடம் உள்ள மற்றொரு எடுத்துக் காட்டு ஜாலக்காரன் செய்யும் தந்திரம். இது வேடிக்கை பார்ப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரமே தவிர வேறில்லை. ஜாலக்காரன் தன் மேடையில் கற்பனையால் தோன்றும் ஒரு யானையைக் காட்டுகிறான். இது எப்படி? அவன் பார்ப்பவர்களை அறியாமைக்கு ஆட்படுத்தி விடுகிறான் (கண்ணைக் கட்டி விடுகிறான் என்பது உலக வழக்கு). இது வேடிக்கை பார்ப்பவனை மேடையில் உள்ள நிஜமான பொருளைப் பார்க்க முடியாமல் செய்து விடுவதோடு, அங்கே இல்லாததையும் திட்டவட்டமாகப் பார்க்கச் செய்துவிடுகிறது.

இதுபோன்ற உதாரணங்களைக் கொண்டு, அக்ஞானத்திற்கு இந்த இரண்டு விதமான ஆற்றலும் உண்டு என்று நிலை நாட்ட முனைகிறார்கள். இவற்றில் அறியாமையால் நாம் காண்பது அனைத்துமே அக்ஞானம் தானே படைத்தவைதாம்; இந்தக் கருத்தை நிலை நாட்டி விட்டால் ஆத்மா (பரிபூரணம்) ஒன்று மட்டுமே இருக்கும் இடத்தில் பௌதீகப் பொருளான இயற்கையை கண்டு உணர்ந்து அநுபவிப்பது பற்றிய பரம் ரகசியத்தை விளக்கிய தாகிவிடும் என்பது அவர்களுடைய எண்ணம். ஞானம் பெற்று விட்ட புண்ணியாத்மாக்களுக்கு இந்த ரகசியமே இருக்காது. அவர்கள் ஆத்மா மட்டுமே நிஜமாக இருப்பது என்பதை அறிந்து விட்டவர்கள் ஆவர். அவர்கள் உலகின் மாயத் தோற்றத்தால் ஏமாந்து போய் விடமாட்டார்கள். சாத்திரங்களில் கூறப்படும் அனைத்துடனும் அந்த ஞானிகளின் அநுபவம் அப்படியே ஒத்து வருகின்றன. சாதாரண ஜனங்கள்தான், மாய உலகக் காட்சியால் ஏமாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் குழந்தைகளைப் போல் அறியாமையின் பிடிப்பில் உள்ளனர். அவர்களுக்கு ஞானம் வரவில்லை .
…….
….இது கருத்துமுதல்வாதிக்கு ஒரு பிரச்சனைதான். கயிற்றில் பாம்பை உணர்வது, கயிற்றைக் கயிறாகவே உணர்வது இரண்டுமே மாயம் (கருத்துப் பிழை) என்றால் இவை இரண்டுக்கும் உள்ள நன்கு புலப்படும் வித்தியாசத்தை எப்படிக் காரணம் காட்டி விளக்குவது? இதை விளக்கிவிடலம் என்ற ஆசையில் கருத்துமுதல்வாதிகள் சுற்றி வளைத்துத்தான் அக்ஞானக் கொள்கையைக் கூறுகிறார்கள். பௌதீகமான பொருள்களின் உலகைப் பற்றிப் பொதுவாக எல்லாருக்குமே உள்ள (1) ஆரம்ப அக்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், அதன் கட்டமைப்பிற்குள்ளேயே (2) ஒரு இரண்டாம் பட்சமான அக்ஞானம் இருப்பதாகக் கொள்கிறார்கள். அது தான் புலன்கள் காட்டுவதாகப்படுகின்ற பொய்யான தோற்றங்களைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள். முதலாவது கயிற்றைக் கயிறாகக் காட்டுவது. இரண்டாவதுதான் பாம்பாகக் காட்டுகிறது. இரண்டாவதைக் கொண்டு முதலாவதை விளக்க வழி கிடைக்கிறது. ஆனால் அது மாயைக்குள் இருக்கும் மற்றொரு மாயை. ஆகவே, அதற்கு வேறான ஒரு பெயர் சூட்டுகிறார்கள். பாம்பன்று கயிறு தான் என்பதை பாமரன் ஒருவனுக்குக் கூட எளிதில் உணர்த்திவிட முடியும். ஆனால் மூல அக்ஞானத்தை அப்படி எளிதில் அகற்றி விட முடியாது. அது அகல வேண்டுமானால் மிக உயர்ந்ததும் அனைத்திற்கும் மேலே அப்பாற்பட்டதுமான ஒரு ஞானம் வேண்டும். அதாவது, தான் மட்டுமே பரம் ஸத்யமாயிருக்கும் ஆத்மா ஸத்யத்தை நேரடியாக உணர்தல் வேண்டும்.

அப்படியானால் ஞானிகளும் ஞானம் நிறைந்தும் கூட உலகத்தைத் தொடர்ந்து உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எப்படி ? இதற்கு விளக்கமே வேறு என்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள். ஜாலம் செய்பவனுக்குத் தான் செய்வது - காட்டுவது பொய் என்பது தெரியும். இந்த ஜால வித்தை மந்திர தந்திரமெல்லாம் அறிந்த ஒருவனே அதைப் பார்ப்பவனாகவும் இருந்தால் அவனுக்கும் இது வெறும் தோற்றம் என்பது தெரியும். இந்த இருவரையும் போன்றவர்கள் ஞானிகள். இது தெரியாத பாமர மக்கள் ஜாலத்தால் கட்டுண்டு வேடிக்கை பார்ப்பதைப் போலத்தான் (ஞானிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வெறும் மாயக் காட்சி என்பது அவர்களுக்குத் தெரியும். பாமரனுக்குத் தெரியாது. இந்த உவமையைக் கூறித் தங்கள் தத்துவ நிலைப் பாட்டில் உள்ள மிகக் கடினமான பிரச்சனையைச் சமாளிக்க விரும்புகின்றனர்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
அழிந்தனவும் - பக்கம்  130- 132 & 136-137)

No comments:

Post a Comment