சர்வதேசக் கண்ணோட்டமான
காரல் மார்க்சின் “மார்க்சிய”த்திற்கு எதிரானதான தனது கண்ணோட்டத்தை, எஸ்.என்.நாகராஜன்
“கீழை
மார்க்ஸியம்” என்று பெயர் சூட்டியுள்ளார். குடும்ப மரபுவழியில் வந்த
வைணவத்தைத் தவிர மற்றதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. அது மட்டுமில்லாமல்
அவரிடம் காணும் பிரதேசப் பிடிப்பு காரணமாக, மற்ற நாடுகளில் காணும் கருத்துக்களை புரிந்து
கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ அவரால் முடியவில்லை.
ஒரு நாட்டில் காணப்படும்
சிந்தனைகளில் கம்யூனிசக் கூறுகள் காணப்படுவது இயல்பே. நவீன கம்யூனிசமான மார்க்சியத்திற்கும்
இத்தகைய சிந்தனைக்கும் நெருக்கம் இருக்கும், நெருக்கம் என்ன அதன் தொடர்ச்சியே நவீன
கம்யூனிசம். மார்க்ஸ் பிறக்கும் போதே தம்மை மார்க்சியவாதியாக தோன்றவில்லை, தான் எப்போது
நவீன கம்யூனிசவாதியாக பரிணமித்தது பற்றி அவரே சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்பனாவாத கம்யூனிஸ்டுகளின்
புறநிலை வரம்பும், விஞ்ஞான கம்யூனிஸ்டுகளின் புறநிலை வரம்பும் பற்றி மார்க்சியம் பேசுகிறது.
இத்தகைய மார்க்சியத்தை எஸ்.என்.நாகராஜன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. வர்க்கம் பற்றி பேசும்
அவருக்கு அன்பில் காணும் வர்க்கத் தன்மை புரியவில்லை. அன்பு என்று பொத்தாம்பொதுவாக
பேசுகிறார்.
எஸ்.என்.நாகராஜன்:- “என்னுடைய
கீழை மார்க்ஸியத்துக்கான அடிப்படை அன்பு வழியிலான ஊழியம். ….. ‘நண்பனே, அன்பின்
வழியே அறிந்துகொள்’ என்கிறார் கபீர். அதாவது, ‘அறிவுக்கே அன்பு வேண்டும்’
என்கிறான். ‘அன்பை அறியாதவன் உயிரையே அறியாதவன்’ என்கிறார் நாராயண குரு. மார்க்ஸால்
இந்த மரபைப் புரிந்துகொள்ள முடியாது. இந்தியாவையேகூட மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தவறாக
புரிந்துகொண்டிருந்தனர்.”
இது அப்பட்டமான மனிநேயப்
பார்வையாகும். இது எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். இந்த மனிநேயப் பார்வை ஏன்
நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்ததின் விளைவும் அதனை நடைமுறைப்படுத்த
வேண்டிய சூழ்நிலையைப் பற்றிய போதனையும் தான் மார்க்சியம்.
எஸ்.என்.நாகராஜன்:- “வைணவத்தில் ‘முக்குறும்பைத் துறத்தல்’ என்று
சொல்வார்கள். சாதிச் செருக்கு, செல்வச் செருக்கு, ஞானச் செருக்கு இது மூன்றையும் கைவிட்டால்தான்
சக மனுஷனைச் சமமாக ஒருவன் பாவிக்க முடியும். சமத்துவம் பேச முடியும். மார்க்ஸியத்தை
வைணவத்துடன் நான் பொருத்தும் புள்ளியும் இதுதான்.”
இந்த முக்குறும்பைப்பின் தோற்றத்திற்கான புறநிலைக்
காரணத்தை அறிந்து உணர்ந்தியது தான் மார்க்சியம். இந்த முக்குறும்பை நீக்குவதற்கான புறநிலைமையின்
மாற்றத்தைப் பற்றிதான் மார்க்சியம் பேசுகிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் கீழை மார்க்சியம்
- மேலை மாக்சியம் என்று எஸ்.என்.நாகராஜன் பேசுகிறார். வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை
வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்கிற சமூகம் பற்றிய பொருள்முதல்வாதம் கீழை மேலை நாடுகள்
அனைத்துக்குமானதுதான்.
எஸ்.என்.நாகராஜன்:- “எது
எப்படியாயினும் மனுஷனின் அகங்காரம் ஒழியாமல், சக மனுஷன் மேல் அக்கறை வராமல் எந்த
மாற்றமும் நடக்காது.”
வாழ்நிலையில்
ஏற்படுகிற மாற்றமே சிந்தனையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிற பொருள்முதல்வாதப்
பார்வையற்ற எஸ்.என்.நாகராஜன்
மாற்றத்தை மனித மனங்களின் சிந்தனையில் ஏற்படுகிற தனித்த மாற்றமாக பார்க்கிறார்.
இவரது “வைணவ மார்க்சியத்தில்” இயக்கவியல் பொருள்முதல்வாதத்தற்கு இடம் ஏது?
வைணவத்தை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள்
ஸ்ரீரங்கம் கோயிலினுள் செல்ல முடியாத நிலையினை எஸ்.என்.நாகராஜன் அறியாமலா
இருப்பார். ‘அன்பை
அறியாதவன் உயிரையே அறியாதவன்’ என்கின்ற போதனைகள் கோயில் நுழைவுக்குத் எப்படி
தடையாய் போனது. மேலைநாடுகளில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டாலும்
கோயிலுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறதா?
இந்த நிலையில்
மேலையைவிட கீழை எந்த வகையில் உயர்ந்ததாகப் அவர் பார்க்கிறார். சொந்த
தேசப்பிடிப்பும், குடும்ப வைணவ மதச்சிந்தனையைவிட்டு வெளியே வர முடியாதவரால்
சர்வதேச சிந்தனையான மார்க்சியத்தை புரிந்து ஏற்றுக் கொள்ள முடியுமா?
எஸ்.என்.நாகராஜன்:- “‘அன்பை அறியாதவன் உயிரையே அறியாதவன்’ என்கிறார் நாராயண
குரு. மார்க்ஸால் இந்த மரபைப் புரிந்துகொள்ள முடியாது. இந்தியாவையேகூட மார்க்ஸும்
ஏங்கெல்ஸும் தவறாக புரிந்துகொண்டிருந்தனர்.”
அன்பெனும் அறநிலைப்
பார்வையைக் கடந்து சிந்திக்க முடியாத எஸ்.என்.நாகராஜனிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க
முடியாது.
“இவ்வளவு பாகுபாடுகள்
இடையே கடவுளை நியாயப்படுத்த முடிகிறதா?” என்கிற கேள்விக்கு, “இரண்டு விதமான
உண்மைகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. ஒன்று, விஞ்ஞானம் சொல்லக்கூடிய உண்மை.
இன்னொன்று, விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட உண்மை. கடவுள் கற்பனையாகவேகூட
இருக்கட்டும். கனவும் கற்பனையும் இல்லை என்றால், மனுஷன் வெறும் ஜடம்தான்.” எஸ்.என்.நாகராஜன்
அவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்பது அறிந்த ஒன்று தான்.
ஆனால் அவரால் அறியாதது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது
என்னவென்றால், எங்கெல்ஸ்:-
“இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பால் எதுவும் இல்லை. நம்முடைய மதக் கற்பனைகள்
படைத்துள்ள கடவுளர்கள் எனப்படுவோர் நமது சொந்த சாரத்தின் விசித்தரமான பிரதிபலிப்பு
மட்டுமே.” (லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின்
முடிவும்) என்கிற மார்க்சியப் பார்வையே.
மதத்தின் விசித்தரமான பிரதிபலிப்பை
உண்மை என்று எஸ்.என்.நாகராஜன்
புரிந்துள்ளர். அதனால்
தான் மார்க்சிய பொருள்முதல்வாததிற்கு நெருக்கமான இந்தியத் தத்துவங்கள் பல இருக்க,
மார்க்சியத்திற்கு எதிரான வைணவத்தை மார்க்சியத்திற்கு நெருக்கமானதாக சுட்டுகிறார்.
மனிதன் இறந்த பிறகு
வைகுண்டத்திற்கு சென்று பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்று வைணவம் பேசுகிறது,
இதற்கு மாறாக உண்மைக்கு மாறான பரலோகத்தை மறுதலித்து இவ்வுலகில் உண்மையான
சமூகத்தைப் படைப்பது பற்றி மார்க்சியம் கோருகிறது.
மார்க்ஸ்:-
“.. பரலோகத்தில் வினோதார்த்தமான
யதார்த்தத்தில் அதிமானுடனைக் காணவிரும்பிய மனிதன் அங்கு தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத்
தவிர வேறு எதையுமே காணவில்லை, தான் தேடுகின்ற இடத்தில்
அந்த அதிமானுடன், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக்
காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது. மனிதன் தனது
உண்மையான யதாரத்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்
…….
மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள
மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள
பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய
பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும்.
மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப்
பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப்
பற்றிய விமர்சனமாக உள்ளது.
கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி
எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ளவேண்டும்
என்பதற்காக அல்ல, மாறாக, அவன்
அந்தத் தளையை உதறித் தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க
வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் பிரம்மையைக்
குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை அவனே
உருவாக்கவும் பிரம்மையைக் குலைந்த மனிதனைப்போல் அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து,
தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன்மூலம்
அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி
வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான்
மதம் என்பது.
எனவே, வரலாற்றின் கடமை
என்பது, உண்மைக்குப் புறம்பான உலகம் மறைந்தவுடனேயே,
இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதான். வரலாற்றிற்குப்
பணியாற்றுவதற்காகக் காத்திருக்கும் தத்துவத்தின் உடனடிக் கடமையும், மனிதன் தன்னைத் தானே அன்னியமாகிக் காட்டும் மகானுபாவ உருவத்தை
திரைகிழித்துக் காட்டியவுடனேயே, அதன் புனிதமற்ற
உருவங்களிலுள்ள தன்னைத்தானே அன்னியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக்
காட்டவேண்டியதுதான். இவ்வாறாக. பரலோகத்தைப்பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய
விமர்சனமாக மாறுகிறது, மதத்தைப் பற்றிய விமர்சனம்
உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது.”
(ஹெகலின்
உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு)
உண்மைக்குப்
புறம்பான பரலோகத்தைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுவது
பற்றி மார்க்சியம் பேசுகிறது. இந்த அரசியலை எஸ்.என்.நாகராஜன் ஏற்றுக் கொள்ளாததால் வைணவ ஆழ்வார்களின் பாசுரத்தில் வீழ்கிறார்.
அந்தப் பாசுரங்கள், வாழ்க்கையைவிட்டு ஓடி வைகுண்டத்தில் தஞ்சம் அடைய அழைக்கிறது. மார்க்சியம்
சமத்துவ வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.
“வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.”
(திருமங்கையாழ்வார்)
வைணவத்தைப்
போல் மார்க்சியம் வாழ்க்கையைவிட்டு வெளியேறச் சொல்லவில்லை. மனிதனின்
மதப் பிரம்மையைக் குலைத்து, அவனைச் சிந்திக்கவும்,
செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை
அவனே உருவாக்கவும் வழிகாட்டுகிறது.
இந்த
மார்க்சிய வழிகாட்டும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாததால் எஸ்.என்.நாகராஜன், “கிராம ராஜ்ஜியத்துக்குத் திரும்பவில்லை
என்றால், ஒட்டுமொத்த உலகமுமே அதற்குள் சர்வ நாசமாகிவிடும். இந்தியாவும் அதற்கு
விலக்கல்ல. ஆழ்வார்கள் காட்டிய பாதையே நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே
வழி.. அன்பு வழி. மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறல்ல.” என்கிறார்.
கிராமத்தை நோக்கி, சமூகத்தைப்
பின்னோக்கி அழைத்துச் செல்கிறார். ஆனால் மார்க்சியம், கிராமங்கள் மற்றும் நகரங்கள்
ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலையை ஒழித்தலைப் பற்றியும் அவற்றுக்கு இடையிலான மாறுபாடுகளை
நீக்குதல் பற்றியும் பேசுகிறது.
“சோவியத் ஒன்றியத்தின்
பொருளாதார பிரச்சினைகள்” என்ற நூலில் ஸ்டாலின் இதுபற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
“கிராமங்கள் மற்றும் நகரங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயம்
ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலையை ஒழிப்பது என்பது, மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்
வெகுகாலம் முன்னரே விவாதித்த, நன்கு அறியப்பட்ட ஒரு பிரச்சினை ஆகும். கிராமங்களை
நகரங்கள் சுரண்டுதல் மற்றும் முதலாளித்துவத்தின் கீழ் தொழில்துறை, வர்த்தகம்
மற்றும் கடன்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி காரணமாக பெரும்பாலான கிராமப்புற
மக்கள் நாசமாக்கப் படுவது, விவசாயிகள் மீதான சுரண்டல் (expropriation) ஆகியவையே
இந்த முரண்நிலைக்குக் (antithesis) காரணமாகும். எனவே, முதலாளித்துவத்தின் கீழ்
கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலை என்பதை நலன்களின்
மோதல் (antagonism of interests) என்று தான் கருத வேண்டும். கிராமப்புற மக்களிடையே
நகரங்களுக்கும், பொதுவாக “நகரவாழ் மக்களுக்கும்” எதிரான மனநிலை தோன்றுவதற்கு இதுவே
காரணமாக இருந்தது.
நமது நாட்டில் முதலாளித்துவமும் சுரண்டல் அமைப்பும்
ஒழிக்கப்பட்டு சோசலிச அமைப்பு முறை உறுதியாக நிறுவப்பட்டு விட்டது என்பதால்,
கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான எதிர்ப்புணர்வு (antagonism)
நிச்சயமாக மறைந்து போவது தவிர்க்க இயலாதது. மேலும் அதுவே நடந்தது.
நிலச்சுவான்தார்களையும் குலாக்குகளையும் அகற்றுவதில் (eliminating) நமது
விவசாயிகளுக்கு சோசலிச நகரங்களும் நமது உழைக்கும் வர்க்கமும் ஆற்றிய மாபெரும்
உதவியானது, உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணிக்கான
அடித்தளத்தை உறுதிப்படுத்தியது. மேலும், விவசாயிகளுக்கும் கூட்டுப் பண்ணைகளுக்கும்
டிராக்டர்கள் மற்றம் இதர இயந்திரங்களையும் முறையாக வழங்கியது உழைக்கும்
மக்களுக்கும் இடையிலான கூட்டணியை நட்புறவாக மாற்றியது.
கிராமங்கள் மற்றும் நகரங்கள், தொழிற்துறை
மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலைக்கான அடிப்படை முகாந்திரங்களை
தற்போதைய சோசலிச முறை ஏற்கனவே அகற்றி விட்டது (eliminated) என்பது தான் இதற்குப்
பொருளாகும்”
(கிராமங்கள் மற்றும் நகரங்கள், மூளை உழைப்பு
மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலையை ஒழித்தல்,
அவற்றுக்கு இடையிலான
மாறுபாடுகளை நீக்குதல்)
எஸ்.என்.நாகராஜனின் அன்பு வழிபட்ட மதத்தைப் பற்றி
மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
எங்கெல்ஸ்:- “பிற மனிதர்களோடு நமக்குள்ள
உறவுகளில் முற்றிலும் மானுட வகைப்பட்ட உணர்ச்சிகளுக்கான சாத்தியப்பாடு, நாம்
வாழ்ந்து தீர வேண்டிய, வர்க்கப் பகைமையையும் வர்க்க ஆட்சியையும் அடிப்படையாகக்
கொண்டுள்ள இச்சமுதாயத்தால் இக்காலத்தில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வுணர்ச்சிகளை ஒரு மதமாக ஏற்றிப் போற்றுவதன்
மூலம் அதை மேலும் குறைப்பதற்கு நமக்கு நியாயம் எதுவும் இல்லை. அதேபோல், வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் வர்க்கப் போராட்டங்களைப் புரிந்து கொள்வதை தற்கால
வரலாற்றியல், குறிப்பாக ஜெர்மனியில், ஏற்கெனவே பெருமளவு கொச்சைப்படுத்தியுள்ளது.
எனவே இப்போராட்டங்களின் வரலாற்றை கிறிஸ்துவ திருச்சபை வரலாற்றின் வெறும்
பிற்சேர்க்கையாக மாற்றுவதின் மூலம், அப்படிப்பட்ட புரிதலை முற்றிலும்
சாத்தியமற்றதாக்கிவிடும் தேவை நமக்கு இல்லை.
இன்றைக்கு ஃபாயர்பாக்கைத் தாண்டி நாம் எவ்வளவு
தூரம் வந்து விட்டோம் என்பது இங்கே ஏற்கெனவே தெளிவாகிறது. அன்பு வழிப்பட்ட, அவரது
புதிய மதத்தைப் போற்றி அவர் எழுதிய “மிகச் சிறந்த நூற்பகுதிகள்” இன்றைக்கு
முற்றிலும் படிக்க இயலாதவை ஆகிவிட்டன.”
(லுத்விக்
ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள
ஜெர்மன்
தத்துவஞானத்தின் முடிவும்)
எஸ்.என்.நாகராஜனின் அன்புவழிபட்ட வைணவ மதத்தைத் தாண்டி
மார்க்சியம் வளர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை. நம் நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு
வளர்ந்த சர்வதேசிய கண்ணோட்டமான மார்க்சியமே வழிகாட்டியாகும்.
1.அறிவியல் தொழில்நுட்பம் குறித்த எஸ்.என்.கருத்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
ReplyDelete2 இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட கட்சி அமைப்பு கூடாது. இங்கு ஒற்றை ஆட்சி கூடாது.பொதுவுடைக் கட்சி இந்திய அளவில் ஆணையிடக் கூடியதாக இருக்கக் கூடாது. இந்தியா ஒரு துணைக்கண்டம். இங்கு பல நாடுகள் இருக்கும். மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி என்பது குடி நாயகத்துக்கு வேட்டு - என்னும் எஸ்.என். கருத்து குறித்த தங்கள் எதிர்வினையை அறிய விரும்புகிறேன்.
3 பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாது எனும் எங்கெல் சின் கருத்து தற்போது ஏற்புடையதா?தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
எஸ். என். நாகராஜனின் கருத்துகள் வெறும் வைணவ அன்பு என்னும் போலி போதையில் தெரிவிக்கப் பட்டவை மட்டுமே தவிர வேறில்லை. அன்பே சிவம் என்னும் கூற்றுக்கு எந்த வகையிலும் மாறுபட்டதல்ல. அப்பட்டமான சுரண்டல்கள் காரணமாக எழும் கடுமையான சமூக எதிர்வினையைத் தவிர்க்க அன்பு என்னும் போலிப் போர்வை மதவாதிகளுக்குத் தேவைப்பட்டது. அதை உலக நியதியாக மாற்ற முயற்சிப்பது அபாயகரமானது. எந்தப் புள்ளியிலும் அதனுடன் இணையாத மார்க்சியத்துடன் அதை ஒப்பிட்டுச் செய்ய முற்படுவது இன்னும் அபாயம். இத்தகைய கருத்துக்களை இது போன்றே உடனுக்குடன் அம்பலப்படுத்த வேண்டும்
ReplyDeletekumaravel@ எஸ்.என்.நாகராஜன் பேட்டிக்கு உடனடி எதிர்வினை தான் இது, அவரது நூலின் அடிப்படையில் முழுமையாக விமர்சிக்கப்பட வேண்டும். அவ்வாறு எழுதும் போது உங்கள் கேள்விக்கான பதில் அதில் கிடைக்கும்.
ReplyDelete