Monday, 10 December 2018

பருப்பொருளும் இயக்கமும் (Matter and Motion)



"இயக்கம் என்பது பருப்பொருளின் நிலைநிற்புப் பாங்காகும். இயக்கமின்றி
பருப்பொருள் எங்கும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.
...
இயக்கமில்லாத பருப்பொருள், பருப்பொருள் இல்லாத இயக்கம் போலவே
எண்ணிப்பார்க்க இயலாதது. எனவே இயக்கம் பருப்பொருளைப் போலவே
படைக்க முடியாதது மற்றும் அழிக்க முடியாதது, ... அதை மாற்ற
மட்டுமே இயலும்."
                         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 89)

      உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருட்கள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் ஒன்றும் இல்லை.

        பருப்பொருளின் இருப்பு என்பதே இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றி பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் (Space and Time) தவிர்த்து வேறு வழியில் நடைபெறுவதில்லை.

        ஒவ்வொரு பொருளும் தம்முள்ளும் பிறபொருட்களுடனும் இணைந்து செயற்படுவதையே இயக்கம் என்று கூறுகிறோம். இந்த இயக்கம் பார்வைக்கு இயக்கமற்றதாக இருக்கலாம். இயக்கமற்ற அமைதிநிலை என்பது பொருளின் ஒப்பீட்டுத் தன்மையில் தான் காணப்படுகிறது. இந்த அமைதிநிலை இயக்கத்தின்போது பொருட்களின் உறுப்புகள் சமநிலையில் காணப்படுவதால் இந்த இயக்கம் ஒப்பீட்டுத் தன்மையினதான இயக்கமாக கருதப்படுகிறது. இந்த சமநிலையின் குறிப்பிட்ட திட்டவட்டமான நிலையினை அடைந்தவுடன் ஒப்பீட்டு நிலையிலான சமநிலையை முறிந்து, புதிய நிலைக்கு மாற்றம் அடைகிறது. அந்நிலையிலிருந்து அடுத்த நிலைமாற்றம் ஏற்படும் வரை தற்காலிகமாக ஒப்பீட்டு நிலையில் இயக்கமற்றதாகக் காணப்படுகிறது.

        ஒவ்வொரு மாற்றமும் ஒப்பீட்டு நிலையில் திட்டவட்டமான, ஒரு நிலையில் நிலைபெற்று நிகழ்கிறது. இந்நிகழ்வின் ஒப்பீட்டுநிலை குலைகின்றபோதே அடுத்த நிலைக்கு மாறுகிறது. புதிய நிலையிலும், அதே ஒப்பீட்டு நிலையும், சமநிலையும், அதன் முறிவும், புதிய அமைப்பின் தோற்றமும் என மீண்டும் மீண்டும் புதியது தோன்றிய வண்ணம் எல்லையில்லா தொடர்ச்சியாக நிகழ்வுகள் செல்கிறது.

        விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகின்ற பருப்பொருளின் இயக்கம் என்பது அப்பொருட்களின் மாறுதல் அடைகின்ற வடிவத்தையே குறிப்பிடுகிறது. இந்த மாறுதல் பெறுகின்ற இயக்கமே அப்பொருளின் இருப்பின் நிலையை வெளிப்படுத்துகிறது.

        இன்றைய   விஞ்ஞானக் கருத்துக்களின்படி பருப்பொருளின் இயக்கவடிவங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

விசும்பில் இடம் பெயரும் துகள்களின் இடப்பெயர்ச்சி, இயந்திரவியல் இயக்கம். வெப்பம், நிறை, ஆற்றல் போன்றவை இயற்பியல் இயக்கம். மூலக்கூறுகளின் சேர்ப்பும் பிரிப்பும் வேதியல் இயக்கம். சமூகத்தில் பொருளாதார அமைப்பு முறையில் ஏற்படுகிற மாற்றம் சமூக இயக்கமாகும்.

        மேலே குறிப்பிடுகின்ற குறிப்பிட்ட இயக்கங்களை ஆராய்வது தனித்தனியான விஞ்ஞானப் பிரிவாகும். தத்துவம் அனைத்து விஞ்ஞானங்களையும் உள்ளடக்கி  ஆராய்கிறது. தத்துவத்தை விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் என்பதற்கு இதுவே காரணமாகும்.

        பருப்பொருளின் இயக்கம் என்பதை மார்க்சிய தத்துவம், அனைத்துவித  விஞ்ஞான இயக்கங்களையும் உட்படுத்திக் கூறுகிறது. இயக்கம் என்பது பருப்பொருளின் பிரிக்க முடியாத பண்பாகும். இந்த இயக்கம், தன் இயல்பில் உள்முரண்பாடோடும், பிறவற்றுடனும் செயல், எதிர்செயல் என்ற தொடர்போடும் நடைபெறுகிறது.

        இயக்க வடிவங்கள் அனைத்தும் கண்டிப்பான உட்தொடர்பும், உட்சார்பும் கொண்டவையாகும். இயக்கத்தில் சிலவடிவங்கள் பிறவடிவங்களின் தோற்றத்துக்குக் காரணமாகின்றன.  பருப்பொருளின் இயக்கத்தின் ஒவ்வொரு வடிவமும் அதற்குரிய தனித்தன்மைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வடிவமும் தமது அடுத்த வடிவத்துக்குத் தேவைப்படுவதுடன் இணைந்து தகவமைத்துக் கொள்கிறது. இயக்கத்தை படைத்திட இயலாது, அதே நேரத்தில் அழித்திடவும் முடியாது.

        மனிதன் எண்ணிலடங்கா பொருட்களின் புலப்பாடுகளால் சூழப்பட்டுள்ளான். கண்ணுக்குத் தெரியும் பெரிய நட்சத்திரம் முதல், கண்ணுக்குத் தெரியாத அணுத்துகள் வரையிலான புலப்பாட்டின் தாக்கத்தில் இருக்கிறான்.

        பருப்பொருள் நம்மை சார்ந்து இல்லாமல் இருந்தாலும், நமது உணர்நிலையில்  பிரதிபலிக்கிறது. பிரபஞ்சத்தில் காணப்படும் பருப்பொருள் நமது  உணர்வுநிலையில்  பிரதிபலிக்கிறது என்பதில் தான் அதன் பொருளாயதத் தன்மை அடங்கியுள்ளது.

        சூனியத்திலிருந்து எதுவும் தோன்றுவதில்லை. அதே போல் எந்தப் பருப்பொருளும் எந்த சுவடுமின்றி மறைந்து போவதும் இல்லை என்பதை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறது. ஒன்றுமற்றதிலிருந்து பருப்பொருள் தோன்றவில்லை அதே போல் அது ஒன்றுமற்றதாய் மறைந்திடாமல் மற்றொன்றாய் மாறுகிறது. இவ்வகையில் பருப்பொருளின் அழியும் தன்மையை மறுத்து மாறும் தன்மையை சுட்டுகிறது. இவ்வாறு மார்க்சியத்தின் பருப்பொருள் பற்றிய கண்ணோட்டம், தெய்வீக சக்தியின் குறிக்கீட்டை மறுதலிக்கிறது. கடவுள், ஏதுமற்றதிலிருந்து இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறுகின்ற கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை விஞ்ஞான அடிப்படையில் மார்க்சியம் இவ்வகையில் மறுக்கிறது.

        புத்தம்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பருப்பொருள் பற்றிய அறிவை விரிவாக்கி ஆழப்படுத்தவே செய்கிறது. பருப்பொருளின் கட்டமைப்பு எவ்வகையினதாக இருந்தாலும், அதன் பிரதிபலிப்பு மனிதனுடைய அறிதலில் எவ்வகையான மாற்றம் ஏற்படுத்தினாலும், பருப்பொருள் என்பது புறநிலையிலான எதார்த்தம் என்பதை மறுக்க முடியாது.

1 comment:

  1. Excellent. Can you translate this post into English?

    ReplyDelete