"எல்லா வாழ்நிலையின் அடிப்படை வடிவங்களும் விசும்பும்
காலமும் ஆகும். காலத்துக்குப் புறம்பாக வாழ்நிலை
என்பது,
விசும்புக்குப் புறம்பான வாழ்நிலை என்பதன்
அளவுக்குப்
படுமோசமான அபத்தமாகும்.."
- எங்கெல்ஸ் (டூரிங்குக்கு
மறுப்பு - பக்கம் 79)
பருப்பொருளின்
இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் (Space and Time) நடைபெறுகிறது. விசும்பு
என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற
பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து
தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது.
பொதுவாக பருப்பொருள்
நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப்
பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில்
இடம் பெறுகிறது. ஆக பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில்
தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள்
அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ,
மேலோ கீழோ, காணப்படுகிற
மற்றப் பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பென்பது விசும்பில் தான் நிகழ்கிறது.
பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள் யாவும் தம்முள்ளும் பிற பொருட்களோடும் இயக்கத்திலும், மாற்றத்திலும், வளர்ச்சியை
பெறுகிறது. இந்த இயக்கங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொடர்
வரிசையில் நிகழ்கிறது. இந்த தொடர் நிகழ்வுகளினுடைய அளவுகளின் கணக்கீடு
காலத்தில் நிகழ்கிறது.
நிகழ்வுகள் காலத்திலும் விசும்பிலும் நடைபெறுவதால், விசும்பும், காலமும்
பருப்பொருள் இருத்தலின் ஒருவகையினதாக வரையறுக்கப்படுகிறது.
விசும்பின்றி காலமில்லை, காலமின்றி விசும்பில்லை என்ற வகையில் விசும்பும்
காலமும் பிரிக்க முடியாத பிணைப்பில் உள்ளது. விசும்பும் காலமும் பருப்பொருளுடன் தொடர்பும் இணைப்பும் மட்டும் கொண்டிருக்கவில்லை, அவையிரண்டும்
பருப்பொருளைச் சார்ந்தும் இருக்கின்றது. அவைகள் பருப்பொருளின் இயக்கத்தாலும் அது மேற்கொள்ளும்
வடிவத்தாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
விசும்பும் காலமும் வரம்பற்றது என்பது இதன்
அடிப்படைப் பண்பாகும். வெளிப் பார்வைக்கு இவையிரண்டும் வரம்பிற்குட்பட்டதாக
தெரிகிறது. விசும்பும் காலமும் வரம்பிற்குட்பட்ட வடிவமாக
தென்பட்டாலும், வரம்பற்றவையே ஆகும்.
ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே
உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு
விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட
வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது.
இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட
பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால்
இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல்
குறிப்பிட்ட பொருளின் முடிவுக்கு பின்பும் தொடர்கிறது. ஆக
இந்த தொடர் நிகழ்வுக்கு தொடக்கமும் இறுதியும் இல்லை.
காலம் என்றென்றும் வரம்பின்றி
நிலைத்திருக்கிறது.
விசும்பிலும் காலத்திலும் நிகழ்கின்ற மாற்றங்களில் இருந்தே இயற்கை பற்றி மிகவும்
நம்பகமான விஞ்ஞான ஆராய்சி நடைபெற்று வருகிறது. பருப்பொருளின் செயற்பாடு அனைத்தும் விசும்பு
காலம் என்ற இரண்டிலும் பிணைந்த வடிவில்தான் நடைபெறுகிறது. அதாவது
விசும்புக்கும் காலத்துக்கும் இடையேயான உறவு பிரிக்க முடியாத தன்மையினதாகும். அதே போது விசும்பையும் காலத்தையும் பருப்பொருளிலிருந்து
பிரிக்க முடியாது. பருப்பொருள் காலத்தில் நிலையானது என்பதோடு
விசும்பில் எல்லையில்லாதது. பொருளாயத உலகிற்கு எல்லை என்பதில்லை.
பருப்பொருள் காலத்தால் நிரந்திரமானது என்று ஏன்
செல்லப்படுகிறது என்றால், அது சிதைந்து, ஒன்றுமில் மறைந்து போவதில்லை. அது
மற்றொரு பொருளாக மாற்றம் பெறுகிறது. அதாவது பருப்பொருள் ஒன்றுமில்லாததிலிருந்து
தோன்றுவதும் இல்லை, ஒன்றுமில்லாமல் மறைந்து போவதும் இல்லை. மாற்றம்
என்பது மூலக்கூறுகளின் சிதைவும் மற்ற புதிய
பொருட்களுக்கான மூலக்கூறுகளின் சேர்ப்பையும் குறிக்கிறது.
இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை
இயற்கை விஞ்ஞானத்தின் புதுப்புது கண்டிபிடிப்புகள் மெய்ப்பித்து வருகின்றன.
அருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_6.html?m=1