Monday, 29 June 2020

மனிதனுடைய அறிதல் கட்டம் புலனுணர்ச்சியுடன் நின்று விடுகிறதா? – வி.கிரபிவின்


“மனிதன் புலனுணர்ச்சி அறிதல் கட்டத்துடன் நின்று விடுவதில்லை. அவன் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் செல்கிறான்; பொருட்களின் சர்வப்பொதுவான, இன்றியமையாத, முக்கியமான இயல்புகளையும் உறவு களையும், புலனுணர்ச்சி அறிதலுக்கு உட்படாத அவற்றின் முறைப்படியான தொடர்புகளையும் அறிகிறான். இது சிந்தனையின் உதவியினால் பகுத்தறிவு அல்லது தர்க்க ரீதியான அறிதல் கட்டத்தில் நடைபெறுகிறது. ஒரு தருணத்தில் பார்க்க முடியாததை அல்லது முற்றிலும் நேரடியாகப் பார்க்க முடியாததை அறியக் கூடிய ஆற்றல் மனித சிந்தனைக்கு இருக்கிறது. உதாரணமாக, நம்முடைய புலனுணர்ச்சி உறுப்புக்களால் பூமியில் உயிர்களின் தோற்றத்தை அல்லது ஒளிக்கதிரின் வேகத்தைத் தெரிந்து கொள்ள முடியாது; ஆனால் மனிதன் இத்தகைய நிகழ்வுப் போக்குகளையும் புலப்பாடுகளையும் சிந்தனையின் மூலம் அறிதல் சாத்தியம்.

சிந்தனை பொருட்களின் உள்ளார்ந்த, சர்வப்பொதுவான தொடர்புகளை எடுத்துக் காட்டுவதற்கும், இயற்கை, சமூகம், அறிதல் ஆகியவற்றின் மாறுதல்களுக்கும் வளர்ச்சிக்கும் உரிய விதிகளைக் கண்டுபிடிப்பதற்கும், சுற்றியுள்ள உலகத்தின் மிகவும் ஆழமான மர்மங்களை உட்புகுந்து காண்பதற்கும் உதவுகிறது.
… … …
புலனுணர்ச்சி அறிதலைப் போல சிந்தனையும் திட்ட வட்டமான வடிவங்களில் நடைபெறுகிறது. கருதுகோள்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் ஆகியவை இந்த வடிவங்களாகும்.

கருதுகோள் என்பது பொருட்கள், நிகழ்வுகளின் பொதுவான, முக்கியமான அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற சிந்தனை வடிவம் ஆகும். இத்தகைய பொது அம்சங்களின் மொத்தம் கருதுகோளின் உள்ளடக்கமாக இருக்கிறது. கருதுகோள்கள் மொழியில் தனிச் சொல்லினால் அல்லது சொற்களின் தொடரினால் (உதாரணமாக, "பருப்பொருள்", "அங்கஜீவி'', "சமூக பொருளாதார அமைப்பு", இதரவை) எடுத்துரைக்கப்படுகின்றன.

எந்த விஞ்ஞானத்துக்கும் அதற்குரிய கருதுகோள்களின் அமைப்பு இருக்கிறது; அவற்றின் மூலம் அந்த விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்ற விதிகளை வெளியிட்டு அதன் தொடக்கக் கோட்பாடுகளை வகுத்துரைக்கிறது. உதாரணமாக, பருப்பொருள், உணர்வு, இயக்கம், காரண காரியத் தன்மை, இதரவை தத்துவஞானத்தின் அடிப் படையான கருதுகோள்கள். மதிப்பு, பண்டம், இதரவை அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான கருதுகோள்கள்.
… … …
அறிதலின் புலனுணர்ச்சிக் கட்டமும் பகுத்தறிவுக் கட்டமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன. பொருள் அல்லது நிகழ்வின் தனித்தனியான அம்சங்களையும் தொடர்புகளையும் பற்றிய நேரடியான புலனறிவிலிருந்தே விஞ்ஞான ரீதியான அறிதல் தொடங்குகிறது. பின்னர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை பொதுவானதைத் தனியே பிரித்து அறிவதற்குரிய ஆதாரங் களைத் தருகின்றன. அதன் பிறகு பாகுபடுத்தலும் (பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் சில இயல்புகள், உறவுகளைப் பிரித்தெடுத்தல்) பொதுமைப்படுத்தலும் (பிரதானமான, நிர்ணயகரமான இயல்புகளையும் உறவுகளையும் இனங்காணுதல்) நடைபெறுகின்றன. அதன் பிறகு விஞ்ஞான அறிதல் பொருட்கள் மற்றும் நிகழ்வுப் போக்குகளின் உள்தொடர்புகளையும், அவற்றின் பரஸ்பர பாதிப்பையும் மாற்றங்களையும், அவற்றின் வளர்ச்சியில் உள்ள தீர்மானமான நியதிகளையும் வெளிப்படுத்தும்.

நம்முடைய அறிவு ஆழமடைகின்ற பொழுது இத் தொடர்புகள், உறவுகள் - அந்தப் பொருள் கூட-ஆகிய வற்றின் பிரதிபலிப்பு அதனுடைய புலனுணர்ச்சி பிம் பத்தை இழப்பதற்கு முற்படுகிறது; ஆனால் அறிதல் நிகழ்வுப் போக்கு தொடர்ந்து முன்னேறுகிறது, ஏனென்றால் விஞ்ஞானப் பாகுபடுத்தல் நேரடியாகப் பார்க்க முடியாதவற்றைப் புரிந்து கொள்வதை சாத்தியமாக்குகிறது. புலனுணர்ச்சி அறிதலைப் போல சிந்தனை நடை முறையால், செய்முறையான மனித தேவைகளால் தகவமைக்கப்படுகிறது, அவற்றோடு இணைக்கப்பட்டிருக் கிறது, செய்முறையிலிருந்து பெறப்பட்ட விவரங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே நினை விலிறுத்துவது அவசியம்.

மனித அறிதலைப் பற்றிய விதி தோற்றத்திலிருந்து சாராம்சத்துக்கு, வெளிப்புறத்திலிருந்து உட்புறத்துக்கு முன்னேறிச் செல்வது தான். விஞ்ஞானத்தின் மொத்த வரலாற்றிலும் இது நன்கு புலப்படும். உதாரணமாக, மார்க்சுக்கு முந்திய பொருளியலாளர்கள் பலர் பண்டங்களின் வெளிப்புற இயல்புகளை, அதாவது அவற்றின் உபயோகம் (பயன் மதிப்பு), பரிவர்த்த னைத் தகுதி (பரிவர்த்தனை மதிப்பு) ஆகியவற்றைக் கண்டார்கள். ஆனால் பண்டங்களின் இயல்புகளின் வெளித் தோற்றங் களான இவை ஆழமான உள் தொடர்புகளை மூடிமறைக்கின்றன. மார்க்ஸ் இத்தொடர்புகளைக் கண்டுபிடித்தார்; எல்லாப் பண்டங்களிலும் அவற்றின் உற்பத்திக்கு அவசியமான சமூக உழைப்பு என்பது பொதுக் கூறாக இருப்பதை நிறுவினார்.

பண்டம் இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறது; அது பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பின் ஒற்றுமை. ஆகவே பண்டத்தில் அடங்கியுள்ள உழைப்பும் இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். மார்க்ஸ் அதைக் கண்டுபிடித்த பிறகு பண்டத்தின் மதிப்பு உழைப்பின் சமூக இயல்பை, மனிதர்களுக்கு இடையில் சமூக உறவுகளை வெளியிடுகிறது என்பதை எடுத்துக் காட்டினார்.

விஞ்ஞான தத்துவார்த்தச் சிந்தனை உலகத்தை அறிதலிலும் உண்மையைப் புரிந்து கொள்வதிலும் வலிமையான ஆயுதமாக இருப்பதில் அதன் மாபெரும் முக்கியத் வம் அடங்கியிருக்கிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றார் என்ன?-
 பக்கம்- 260-266, முன்னேற்றப் பதிப்பகம் - 1987)

Monday, 11 May 2020

வரலாற்றைப் படைப்பது மக்களே


"மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர். ஆனால் மனிதர்களின், மக்களின் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது ஏது?.. மனிதனின் வரலாற்று நடவடிக்கை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகிற பொருளாயத வாழ்வின் உற்பத்திக்கான புறநிலைமைகள் யாவை? இந்தப் புறநிலைமைகளின் வளர்ச்சிக்குரிய விதி எது?- இவற்றின் மீதெல்லாம் மார்க்ஸ் நமது கவனத்தைத் திருப்பி, வரலாறு அளப்பரிய பல்வகை வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருந்த இயக்கப் போக்காயிருந்த போதிலும் அதை திட்டவட்டமான விதிகளால் ஆளுமை செய்யப்படும் ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையிலே பயில்வதற்கு வழி காட்டினார்"
லெனின் -(காரல் மார்க்ஸ்- வாழ்க்கை வரலாறு)

மார்க்சுக்கு முன்புவரை வரலாற்றை மாமனிதர்களே படைக்கின்றனர் என்ற கருத்தே மேலோங்கி இருந்தது. அதாவது, மாமன்னர்கள், மாமேதைகள், போர்த் தளபதிகள், தத்துவ அறிஞர்கள் போன்ற பெரிய தனி மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று கருதிவந்தனர். பெருந்திரளான மக்கள் வரலாற்று வளர்ச்சியைப் பொருத்தளவில் குருட்டுத்தனமாகச் செயலாற்றும் மந்தைகளே, இவர்களை இந்த மாமனிதர்களே தலைமை தாங்கி செயற்படுத்துகின்றனர் என்பதே அன்றைய கருத்தாக இருந்தது.

கருத்துமுதல்வாதம் சமூக வளர்ச்சியில் பொதுமக்களின் பாத்திரத்தை புறக்கணித்து, தனிநபரின் பாத்திரத்தை முன்னிருத்துகின்றது. சுரண்டும் சமூகத்தில் மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையே காணப்படும் மதிப்பின் வெளிப்பாட்டை இது காட்டுகிறது. உடலுழைப்பின் மீது வெறுப்பையும், மூளை உழைப்பின் மீது தனி விருப்பத்தையும் செலுத்துகிறது. மார்க்சியம் இதனை நிராகரிக்கிறது. வரலாற்று வளர்ச்சியில் பெருந்திரளான மக்களின் பங்கை குறைத்து மதிப்பிட்டுள்ளதையும், தனிநபரின் பங்கை மிகைப்படுத்தி உள்ளதையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறது.

      உற்பத்தியின் போது ஏற்படுகின்ற  புறநிலை பொருளாயதத் தேவைகளே பெரும் மக்களை குறிப்பிட்ட திசையை நோக்கி செல்ல வைக்கிறது. மனிதர்கள் தனிப்பட்டவிருப்பத்தில் அல்லாமல் புறநிலையான சூழ்நிலைகளின் தாக்கத்தில் செயற்படுகின்றனர். பெருந்திரளான மக்களின் நலன்களை தீர்மானிக்கின்ற பொருளாயத அவசியமே இவற்றில் முதன்மைக் காரணமாகிறது.

வரலாறு விதிகளின்படி செயல்படுகிறது என்றால் மக்கள் ஏன் சமூக மாற்றத்துக்கு போராட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

      இயற்கைப் போன்றே வரலாறும் புறநிலை விதிகளின் படியே செல்கிறது. ஆனால் வரலாற்றின் விதிகள் மனிதர்களின் நடவடிக்கைகளின் வழியில்  நிகழ்த்தப்படுகிறது. இந்த வகையில் இயற்கையின் விதியில் இருந்து வரலாற்றின் விதி வேறுபடுகிறது. அப்படி என்றால் மக்கள் தாம் நினைக்கின்றபடி வரலாற்றைப் படைத்திட முடியுமா? இல்லை, இதனை மார்க்ஸ்  தெளிவாக்குகிறார். மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை. தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்தில் இருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு தக்கப்படியும், தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவும் வரலாற்றை உருவாக்கிறார்கள்.

      மனிதர்கள், தாம் ஒரு குறிக்கோளை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்துகின்றனர் என்று, மேம்போக்காக பார்க்கும்போது தோன்றும். ஆனால் ஆழ்ந்து பார்க்கும் போதுதான் அந்த குறிக்கோள்களை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கவில்லை என்பதை அறிந்திட முடியும். மனிதர்கள் தமது குறிக்கோளை வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகளின் நலன்களின் அடிப்படையில்தான் உருவாக்குகின்றனர். இந்த நலன்கள் புறநிலையான பொருளாதார அவசியத் தேவையால் நிர்ணயிக்கப்படுகிறது.

      இந்த புறநிலைமைகளே சக்திகளாக மாறி மனிதர்களின் தேவையின்றி வரலாற்றைப் படைப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், பாட்டாளி வர்க்கத்தின் செயற்பாடும் அவற்றின் முன்னணிப்படையான கட்சியும், புறநிலையால் அளிக்கப்பட்ட வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகளையும் வரலாறு கண்டுள்ளது. சமூக நிகழ்வு, புறநிலையின் அவசியத்தின் அடிப்படையில் மக்களால் நிறைவேற்றப்படுகிறது

      மக்களை மதிக்கின்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதம், தனிநபரின் பாத்திரத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மார்க்சியத் தத்துவம் தனிநபர்களை எந்தவிதத்தில் மதிக்கிறது, எதனை மறுக்கிறது என்பதை புரிந்து கொண்டால், இந்த குற்றச்சாட்டு எவ்வகையில் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

      மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று கூறுகிற தத்துவம், இவர்களைத் தலைமை தாங்கும் தலைவர்கள் தனிநபர்களே என்பதை அறிந்திருக்கிறது. இந்த தனிநபர்களின் சிறப்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு தனிநபர் முதன்மைப் பாத்திரத்தை வகிப்பதற்கு அவர் தனித்த திறமை பெற்றிருக்க வேண்டும். சாத்தியமான சூழ்நிலைமைகள் இருந்தால் மட்டுமே இத்திறமை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலைமைகள் இல்லாதபோது இவரது திறமைகள் வெளிப்படுவதில்லை. ஆக இந்தத்திறமை என்பது சூழ்நிலைமைகளை அறிந்து செயற்படுவதில் அடங்கியிருக்கிறது, சூழ்நிலைமைகளை உருவாக்குவதில் அத் தனிநபர்களின் திறம் அடங்கியிருக்கவில்லை என்பதையே மார்கசியம் வலியுறுத்துகிறது. இந்த தனிநபர் மட்டுமே இந்த வரலாற்று கடமையினை நிகழ்த்த முடியும் என்பதையே மறுக்கிறது. ஏன் என்றால், இந்த வரலாற்றுக் கடமையை இந்தப் பெயர் கொண்ட நபர் நிறைவேற்றியிராவிட்டால் வேறொரு பெயர் கொண்ட நபர் இதனை நிறைவேற்றியிருப்பார்.

      இதனையே எங்கெல்ஸ், நெப்போலியன் இருந்திராவிட்டால் அவனுடைய பாத்திரத்தை வேறு ஒருவன் நிறைவேற்றியிருப்பான், இம்மாதிரி மனிதன் தேவைப்படுகிற போதெல்லாம் அவன் கிடைத்து வந்திருக்கிறான் என்பதே இதற்கு சான்று என்று கூறுவார்.

      ஒரு சிறந்த தனிநபரின் தனித் திறமை என்பது சமூக வளர்ச்சியின் திசைவழியைப் படைப்பதில் அடங்கியிருக்கவில்லை, அந்த திசைவழியை கண்டுபிடித்து அதன்வழியில் செல்வதில் இருக்கிறது. திசைவழியை அறிந்த அவனது திறமையை, திசைவழியை தோற்றுவித்ததாக மிகைப்படுத்தி மதிப்பதையே மார்க்சியம் எதிர்க்கிறது. திசைவழியை கண்டு, அதில் பொது மக்களின் தொடர்பை அறிந்து செயல்படுத்தும் தனிநபரின் திறமையை மார்க்சியம் மதிக்கவே செய்கிறது. சாத்தியமாக்கும் சமூக வளர்ச்சிக்கு உரிய புறநிலைமைகளே வரலாற்றைத் தீர்மானிக்கிறது. அதனை மக்கள் நிறைவேற்றுகின்றனர், அதற்கு தனிநபர்கள் தலைமை தாங்குகின்றனர். ஆக இந்த தனிநபரின் சிறப்பு என்பது புறநிலைமைகளைச் சார்ந்தும், பொதுமக்களின் செயற்பாட்டிலும் அடங்கியிருப்பதை மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த தனிநபர் பிறக்கும்போதே சிறப்பில்புகளோடு பிறக்கவில்லை. தான் பிறந்த சமூகத்தில் காணப்படும் நாகரீகத்தை  தனது செயற்பாடுகளால் தன்வயப்படுத்திக் கொள்ளும் போது தனது சிறப்பில்புகளை வளர்த்துக் கொள்கிறார். சமூக வளர்ச்சிப் போக்கில் தனிநபர் தமது சிறப்பியல்புகளை சமூக செயற்பாட்டின் ஊடே பெற்றுக் கொள்கிறார் என்பதை புரிந்திடும்போது தனிநபரின் பாத்திரத்துக்கு தனிமுதன்மையும், தனிநபர் வழிபாடும் தேவையற்றதாகிவிடும்.

வர்க்க ஆதிக்க சக்திகளுக்கான அறிவுத்துறையினர்களுக்கு, திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு கிடைக்கிற சூழ்நிலைகள், வர்க்க சமூகத்தில் அனைவர்களுக்கும் கிடைப்பதில்லை. இச் சமூகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்களே தனிச்சிறப்பைப் பெற்றவராக இருக்கின்றனர்.

சக்திக்கேற்ற வேலை, திறமைக்கேற்ற கூலி என்ற சோஷலிச சமூகத்தைக் கடந்து, சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற பங்கீடு என்ற கம்யூனிச சமூகத்தில், சில தனிநபருக்கு மட்டும் கிடைக்கிற வாய்ப்புகள் என்ற நிலை நீக்கப்படும். வர்க்க சமூகத்தில் தனிநபருடைய சுதந்திரம் என்பது, ஆளும் வர்க்க தனிமனிதச் சிறப்பு உள்ளவனுக்கான சுதந்திரமாக இருந்தது கம்யூனிச சமூகத்தில் அது மறைந்து அனைவருக்குமான சுதந்திரமாக மாறிவிடும்

வர்க்க சமூகத்தில் தனிநபருக்கு கிட்டுவதாக இருந்த சூழநிலைமைகள் அனைவருக்கும் கிட்டுவதற்கானதாக மாறிவிடும். கம்யூனிச சமூகத்தின் முழுமையான நலன்களோடு, தனிநபரின் நலன்களும் ஒன்றாய்க் காணப்படுவதால் இது சாத்தியப்படும்.

Saturday, 25 January 2020

மதத்தின் வர்க்கத் தன்மை


இருப்பவர், இல்லாதவர், உடைமையுள்ளவர், உடைமையற்றவர், சுரண்டுபவர், சுரண்டப்படுபவர் எனச் சமூகம் இரண்டுபடத் தொடங்கிய காலகட்டத்தில் மதவுணர்வுகள், நிறுவனமதமாக உருப்பெற்று வர்க்கத் தன்மை அடைந்தன. மொத்தச் சமூகமும் இயற்கையை அறிய முடியாத நிலையில் இருந்தபோது காணப்பட்ட மாயவித்தை என்பது, மதம் தோற்றம் பெறும்போது மாற்றம் பெற்றது. மாயவித்தை என்பதை இப்போது சிலர் மட்டும் நிகழ்த்தும்படியான புதுவடிவம் எடுத்தது. அந்தச் சிலரால் மட்டுமே நடத்தக் கூடியதாக மாறியது.

      மதம் தோற்றம் பெற்றவுடன், உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அரசுபுரிபவர் மற்றும் அதிகாரங்கள் அனைத்தும் இறைமயமானதாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு, பணிந்து செல்லும்படி போதிக்கப்படுகிறது. இவ்வுலகில் காணப்படும் துன்பதுயரங்களை பொறுமையுடன், சகித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு, துயரங்கள் என்பது அவரவர் செய்த வினைப்பயன் என்றும், அதனால் சமூகத்தில் தமக்குண்டான கடமைகளை, பலனை எதிர்பார்க்காமல், தியாக உணர்வோடு செய்யும்படி வலியுறுத்துகிறது.

      இவ்வாறு ஒடுக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலித்து, மதம் சுரண்டல் வர்க்கத்தின் சார்பான கருத்துக்களைக் கூறி, மதத்தின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் துயரத்தோடும், பாதுகாப்பற்றும் காணப்படும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கு, அவர்களின் இகலோக துன்பங்களுக்கு மாற்றாக, பரலோக நன்மைகள் கிட்டும் என்று வழிகாட்டப்படுகிறது. இதனால்தான் லெனின் எங்கும் அழுத்திப் பிடித்திருக்கும் ஆன்மீக (அறிவுசார்) ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதம் ஒன்று என்று கூறுகிறார்.

“தொழிலாளர்கள் மீதான இந்தப் பொருளாதார ஒடுக்குமுறை எல்லா விதமான அரசியல் ஒடுக்குமுறையையும், சமூக இழிநிலையையும், வெகுஜனங்களது ஆன்மீக, அறநெறி வாழ்வின் நயமற்ற இருண்ட நிலையையும் உருவாக்கியவண்ணமுள்ளது. தொழிலாளர்கள் தமது பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதற்காக அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அரசியல் சுதந்திரம் பெற்றுக் கொண்டுவிடலாம், ஆனால் மூலதனத்தின் அதிகாரம் வீழ்த்தப்படாதவரை, எந்த அளவிலான சுதந்திரத்தாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் முடிவு கட்டிவிட முடியாது. மிகப் பெருந் திரள்களான மக்களை, ஏனையோருக்காகத் தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக (அறிவுசார்) ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்”.
(சோஷலிசமும் மதமும்) 

வாழ்நாள் முழுவதும் உழைத்து, இல்லாமையில் வாடுபவர்களுக்கு, மதம் மன ஆறுதலுக்கான வழியைத்தான் காட்டுகிறது, வாழ்விற்கான விடையை அதனால் அளித்திட முடியவில்லை. அதாவது உற்பத்தி வளர்ச்சியால் ஏற்பட்ட வர்க்கச்சமூகத்தில் வலிமையிழந்து காணப்படும் மக்களுக்கு மதம் பொறுமையையும், கட்டுப்பாட்டையும் பின்பற்றும்படி வழிகாட்டி, சொர்க்கத்தில் இதற்கான விடையும் விடுதலையும் கிட்டும் என்று போதிக்கிறது. சுரண்டலாளர்களிடம் தர்மவான்களாய் வாழும்படி கேட்டுக் கொள்வதின் மூலம், அவர்களது சுரண்டலுக்கு நியாயம் அளித்திடுகிறது.

இதனை லெனின் விளக்குகிறார்:-
“வாழ்நாள் முழுதும் உழைத்து, இல்லாமையால் துன்புறுவோர் மண்ணுலகில் அடிபணிந்து பொறுமையாய் இருக்கவும், விண்ணுலகில் நற்பேறுக்கிட்டுமென்ற நம்பிக்கையால் மன ஆறுதல் பெறவும் மதம் அவர்களுக்குப் போதிக்கிறது. ஆனால் ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்வோர் மண்ணுலகில் தர்மவான்களாய் வாழ்வதற்கு மதம் அவர்களுக்குப் போதிக்கிறது, சுரண்டலாளர்களாய் அவர்கள் நடத்தும் வாழ்க்கை அனைத்துக்கும் நியாயம் கற்பித்துக் கொள்ள இவ்விதம் அது மிக எளியமையான ஒரு வழியை அளிப்பதோடு, விண்ணுலக இன்ப வாழ்வுக்கும் மிதமான விலையில் அவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கிறது. மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேனும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்.”  
                                                         (சோஷலிசமும் மதமும்) 

சுரண்டலுக்கு ஆளான வர்க்கத்தின் இன்பம் சொர்க்கத்தில், சுரண்டும் வர்க்கத்தின் இன்பம் இவ்வுலகத்தில் என போதிக்கும் மதத்தை மார்க்ஸ் இவ்வுலக துன்பங்களுக்கான காரணத்தை அறியமுடியாமல் மறைக்கும், மழுங்கடிக்கும் போதை என்னும் பொருள்படும்படி, மதம் என்பது மக்களின் அபின் என்று வலியுறுத்தினார்.

மார்க்ஸ்  ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு  என்ற நூலினுடைய முன்னுரையில் கூறுகிறார்:-
“ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்துவிட்டது. மதத்தைப் பற்றிய விமர்சனம் அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது.

.. பரலோகத்தில் வினோதார்த்தமான யதார்த்தத்தில் அதிமானுடனைக் காணவிரும்பிய மனிதன் அங்கு தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையுமே காணவில்லை, தான் தேடுகின்ற இடத்தில் அந்த அதிமானுடன், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது. மனிதன் தனது உண்மையான யதாரத்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.
..
மதஎதிர்ப்பு விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது: மனிதனே மதத்தை உண்டாக்குகிறான், மதம் மனிதனை உண்டாக்குவதில்லை.  இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் இழந்துவிட்டவனின்  தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும். ஆனால் மனிதன் இவ்வுலகிற்கு அப்பால் அமர்ந்திருக்கும் கற்பனையானவன் அல்ல. மனிதன் என்பவன் மனிதனின் உலகம், நாடு, சமூகம் அனைத்தும் தான். இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளன. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. அந்த உலகத்தின் பொதுவான கொள்கையாகவும், அறிவுத் திரட்டலாகவும், தர்க்கத்தின் பிரபல வடிவமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரமாகவும் அது மதிக்கப்படுகிறது. ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்கான பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. அது மனித சாராம்சத்தின் விசித்திரமான புரிந்துணர்வு ஆகும். ஏனெனில் மனித சாராம்சம் என்பது இன்னும் எந்த உண்மையான யதார்த்தத்தையும் அடையவில்லை. எனவே, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, ஆன்மீக மணம் வீசும் மதத்தைக் கொண்டு  விளங்கும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.

மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அவன் அந்தத் தளையை உதறித் தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் பிரம்மையைக்் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை அவனே உருவாக்கவும் பிரம்மையைக் குலைந்த மனிதனைப்போல் அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து, தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன்மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது.

எனவே, வரலாற்றின் கடமை என்பது, உண்மைக்குப் புறம்பான உலகம் மறைந்தவுடனேயே, இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதான். வரலாற்றிற்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கும் தத்துவத்தின் உடனடிக் கடமையும், மனிதன் தன்னைத் தானே அன்னியமாகிக் காட்டும் மகானுபாவ உருவத்தை திரைகிழித்துக் காட்டியவுடனேயே, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அன்னியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்டவேண்டியதுதான். இவ்வாறாக. பரலோகத்தைப்பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது, மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது.
..
விமர்சனம் என்ற ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதத்தின் விமர்சனத்தை அகற்ற முடியாது. பொருளாயத பலத்தைப் பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, கொள்கையும் ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. கொள்கை மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்தவுடனேயே அது மக்களைப் பற்றிப் பிடித்துவிடுகிறது, அது பகுத்தறிவு பூர்வமாக மாறியவுடனேயே மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்துவிடுகிறது. பகுத்தறிவு பூர்வமாக ஆவதெனில், அது விஷயத்தின் ஆணிவேரையே பற்றிப் பிடிக்கவேண்டும். ஆனால் மனிதனுக்கோ மனிதன்தான் ஆணிவேர். ஜெர்மன் கொள்கையின் பகுத்தறிவு வாதத்துக்கும், அதன் காரணமாக அதன் காரியார்த்தமான சக்திக்கும் உரிய கண்கண்ட சாட்சியம் எதுவெனில், அது உறுதியாக, உறுதிப்பாடான மத ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது. மதத்தைப் பற்றிய விமர்சனம் மனிதனுக்கு மனிதன்தான் உன்னதமாக சாராம்சம் என்பதைப் போதிப்தோடு, எனவே கீழ்த்தரமாக, அடிமையாக, ஒதுக்கப்பட்டவனாக, வெறுக்கத்தக்க சாராம்சமாக மனிதனை ஆக்கிவைத்துள்ள எல்லா உறவுகளையும், நாய்களின் மீது வரிபோடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பொழுது  “அட, அப்பாவி நாய்களே”  அவர்கள் உங்களை மனிதர்களைப்போல் நடத்த விரும்புகிறார்களே- என்று கூக்குரல் எழுப்பிய ஒரு பிரஞ்சுக்காரனைக் காட்டிலும் விளக்கமாகக் கூறிவிட முடியாத, அந்த உறவுகள் அனைத்தையும் தூக்கி எறியவேண்டிய திட்டவட்டமான அத்தியாவசியத்தையும் போதிப்பதோடு அது முடிவடைகிறது.
..
இதற்கிடையில், அடிப்படை பூர்வமான ஜெர்மன் புரட்சியின் பாதையில் ஒரு பெரும் தடை குறுகிட்டு நிற்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், புரட்சிகளுக்கு ஒரு செயலற்ற தன்மையும், ஒரு பொருளாயத  அடிப்படையும் தேவை. எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே கோட்பாடும் நிறைவு செய்விக்கப்படுகிறது. ஆனால், ஜெர்மானியச் சிந்தனையின் கோரிக்கைகளுக்கும், ஜெர்மானிய யதார்த்தம் அளிக்கும் விடைகளுக்குமிடையே உள்ள பூதாகரமான வேற்றுமையானது.  குடிமை சமூதாயத்துக்கும் அரசுக்கும், குடிமை சமூதாயத்துக்கும் தனக்குமே இடையேயுள்ள அதேபோன்ற வேற்றுமையைக் கண்டுகொள்ளுமா? கோட்பாடார்த்தமான தேவைகளே உடனடியான காரியார்த்த தேவைகளாகிவிடுமா? யதார்த்த சித்திபெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்.

ஆனால் நவீன நாடுகளைப்போல் அரசியல் விடுதலைக்கான இடைநிலைக் கட்டத்துக்கு அதே சமயத்தில் ஜெர்மனி உயர்ந்து வந்துவிடவில்லை. கோட்பாடு விஷயத்தில் அது மேம்பட்டு எட்டிவிட்ட கட்டங்களுக்கு அது நடைமுறையில் இன்னும் எட்டி வந்துவிடவில்லை .. .. ..
..
.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?

விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன் மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது, எனவே அந்தப் பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.

வளர்ந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:

ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம், இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”

வழக்கம்போல் மார்க்சிய அடிப்படைகளை திரித்து விளக்கம் கொடுக்கும் மார்க்சிய அறிஞர்கள்!! மார்க்ஸ் எழுதிய இந்த முன்னுரையில் காணும் கருத்தையும் திரித்தும், புரட்டியும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதனால் இதனைச் சற்று விரிவாக ஆராய்வோம்.

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்து விட்டது என்றும், மதத்தைப் பற்றிய விமர்சனம், அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது என்றும் மார்க்ஸ் முதலிலேயே கூறியுள்ளார்.

பரலோகத்தில் தம்மை விடுவிக்கும் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன் அங்குத் தமது சொந்தப் பிரதிபிம்பத்தையே கண்டான். அந்த அதிமானுடத்தில், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது, அதனால்  மனிதன் தனது உண்மையான யதார்த்தத்தைக் கண்டறிந்தாக வேண்டும்.

இதனை அடுத்து மத எதிர்ப்பின் அடிப்படையை விவரிக்கிறார். இதுவே இந்த முன்னுரையின் சாரம்சம் என்று சொல்லலாம்.

மதத்தை மனிதன்தான் படைத்தான், மதம் மனிதனை படைக்கவில்லை. இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளது. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, மதம் ஆன்மீக மணத்தோடு குறிப்பிடும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

தம்மை விடுவிக்கும் சக்தி என்று கருதிவந்த பரலோக அதிமானுடன் என்பவன் இகலோக மனிதனின் பிரதிபிம்பம்தான் என்பதை அறிந்து, அதனிடம் நம்பியிருத்தல் பயனற்றது என்பதைத் தெரிந்து, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பதை, ஆன்மீக மணம் கமழும் மறுஉலகத்தை மறுதலிக்கும் போராட்டமாக மாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

இதனை மேலும் விரிவாக்கி, மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக விளங்கும் மதம், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்கிறார் மார்க்ஸ். இது மக்களின் அபினியாக உள்ளது

இதனை சில மார்க்சிய அறிஞர்கள்!! இதயம் இழந்தவர்களுக்கு இதயமாகவும், ஆன்மாவை இழந்தவர்களுக்கு ஆன்மாவாகவும் மதம் உதவுகிறது என்று மாற்றி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர். இங்கு மார்க்ஸ் கூறிய  இது மக்களின் அபினியாக உள்ளது  என்பதற்கும், பொருள்மாற்றி விளக்குகின்றனர்.

‘ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகத்தி்ல், புகலற்ற மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியை நாடுகிறான். தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது. அந்தத் துன்பத்திற்கு உண்மையான, நிரந்தரமான நிவாரணத்திற்குத் தற்காலிக நிவாரணம் மாற்றாக முடியாது. அதேபோல், மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றது’

மார்க்சின் கருத்திற்கு மாறாக கூறப்படும் விளக்கம் இந்த வழியிலேயே செல்கிறது. 

பல காலத்திற்கு முன்பே லெனின் இதற்கான விளக்கத்தை தெளிவோடு எழுதியிருக்கிறார்.  மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேணும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்  (சோஷலிசமும் மதமும்) இங்கே லெனின், மார்க்சினுடைய கருத்தான மக்களின் அபினியே மதம் என்பதற்கு மிகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து கூறுகிறார்:-
“வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு  நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணி திரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது. இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில்  நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன்மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது” 
(சோஷலிசமும் மதமும்)

மார்க்சின் இந்த முன்னுரையின் விளக்கமாகத்தான், லெனின் சுருக்கமாகவும் தெளிவுபடவும் கூறியிருக்கிறார்.

மார்க்சின் முன்னுரைக்குச் செல்வோம்.

உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கு, மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை மறுதலிப்பது மக்களுக்கு அவசியமாகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை (புறநிலைமைகளை) விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம் பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்குப் பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

மதபிரமைகளை விலக்குவதற்காக எழுதப்பட்டதே இந்த முன்னுரை. மதபிரமையிலிருந்து விடுபட முடியாதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள முடியாமல் திணருகின்றனர்.

மதத்தின் மகிழ்ச்சி என்பது மாயையானதே என்பதை அறிந்து, கம்யூனிஸ்ட்டுகள் அதிலிருந்து விடுபட வேண்டும், மற்றவர்கள் விடுபடுவதற்குத் துணைபுரிய வேண்டும், இந்தப் புரிதலில் பின்தங்கியவர்கள் விடுபடுவதற்கான (புற) நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவது பற்றியும் தெளிவாக மார்க்ஸ் கூறுயிருக்கிறார். இதனை மறைத்துவிட்டுத் தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு, அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ, அதே போல மதமும் தற்காலிகமாக கேட்கும் உதயை அளிக்கிறது என்று கருத்துரைப்பது மார்க்ஸ் கணணோட்டத்திற்கு முரணானதாகும்.  மாயையான மகிழ்விலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்வை அடைவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியதின் அவசியம்பற்றியே இந்த முன்னுரையில் மார்க்ஸ்  வலியுறுத்துகிறார்.

மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியன்தான் மதம் என்கிறார் மார்க்ஸ்.

இந்த மாயைச் சூரியனான மதத்தைவிட்டு வெளிவந்து, மனிதன் தனக்கான விடுதலையை தனது உலகத்தில் படைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு மனிதன் தன்னைத்தானே சுற்றிவர வேண்டும். மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியனான மதத்திடமிருந்து விலக வேண்டும்.

தற்போதைய வரலாற்றின் கடமை என்பது உண்மைக்கு மாறான உலகம் (பரலோகம்) மறைந்தவுன், உண்மையான உலகை இங்கு நிறுவுவதற்குப் பாடபட வேண்டியதுதான்.

மனிதனுக்கு அந்நியமான பரலோக அதிமானுடனின் திரை கிழிபடும்போது, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அந்நியப்படுத்தும் தன்மையான திரைகிழிந்து போகிறது. இதன்படி பரலோகம் பற்றிய விமர்சனம் இந்த பூவுலகம் பற்றிய விமர்சனமாக மாற்றம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது என்று மதத்தைப் பற்றிய விமர்சனத்தை அனைத்தும் பற்றிய விமர்சனமாக மார்க்ஸ் கொண்டு செல்கிறார்.

பொருளாயத பலத்தை, பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் கொள்கை என்பது மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, அது ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்கிறார் மார்க்ஸ்.  மார்க்சின் இந்தக் கருத்தும் அதிகமாகப் புரட்டப்படுகிறது.

இங்கு மார்க்ஸ் கொள்கை என்று சொல்வது,  பொதுவாக கொள்கை  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதப் பொதுவான கொள்கை என்றாலும் அது அனைத்து மக்களைப் பற்றிக்கொண்டு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்று கூறவில்லை. அதாவது எந்த வர்க்கத் தன்மை என்றெல்லாம் குறிப்பிடவில்லை.

எந்த வர்க்கத்தின் கருத்தாயினும் அது பொது மக்கள் அனைவரையும் பற்றிக் கொண்டால், பொருளாத சக்தியாக மாறிவிடுகிறது என்று பொருள் கொள்வோமாயின் மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்துபவராவோம். ஏன் என்றால், சமூகம் வர்க்கமாகப் பிளவுற்று இருக்கும்போது கருத்து என்பது அனைவருக்குமானதாக இருக்க முடியாது என்பதை மார்க்சியம் விளக்கியிருக்கிறது. அதன்படி ஒரு வர்க்கக் கருத்து அவ்வர்க்கத்தினரிடையே மற்றும் அவ்வர்க்கச் சார்புடையவரிடத்திலே பற்றும்போது அது பொருளாயத சக்தியாகிறது என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு வர்க்கத்தின் சார்பான கருத்து, பரப்புரையின் மூலம் அனைத்து மக்களையும் பற்றச் செய்திட முடியும் என்ற தப்பான முடிவிற்கு வந்துவிடுவோம். மக்களைப் பற்றிக் கொண்டால் என்று இங்கு மார்க்ஸ் குறிப்பிடுவது கருத்தை அல்ல (Theory) கொள்கையைத்தான்  என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை என்பது வர்க்கச் சார்பானது. இதனைக்  கருத்து  என்று பொதுமைப்படுத்தி விளக்குவது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டத்திற்கே இட்டுச் செல்லும்.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் உருவானதின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல், வெறும் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாக கருதிக்கொண்ட பண்பாட்டு மார்க்சியவாதிகள், எந்த வர்க்கத்தின் கருத்தாயினும், அது மக்களைப் பற்றிக் கொண்டால் பொருளாயத சக்தியாகிவிடும் என்று விளக்கம் கொடுத்துவருகின்றனர். 

மார்க்சின் முன்னுரையின் இறுதிப்பகுதியில் கூறியதை இவர்கள் மீறிவிடுகின்றனர்.  தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தை பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.   இங்கு பாட்டாளி வர்க்கக் கருத்தின் தோற்றத்தையும் அது கொள்கை வடிவம் பெறுவதையும், அதனைப் பாட்டாளி வர்க்கம் பற்றிக் கொண்டு செயல்பட வேண்டியதையும் வலியுறுத்துகிறது. இதே போலத்தான் அனைத்துக் கருத்துப் பிரிவுகளும், அந்தந்த வர்க்கப் பிரிவுமக்களின் மனத்தைப் பற்றுகிறது என்று விளங்கிக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து விளங்கிக்கொள்ளாமல், தமக்கு ஏற்றபடி பிரித்து உடைத்து விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் செறிவோடு தமது கண்ணோட்டத்தை இம்முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொருள்மாற்றி விளக்கம் அளிப்பவர்கள், கொள்கை என்றவுடன், தாம் வகுத்தளித்த கருத்து அல்லது தாம் ஏற்றுக்கொண்ட கருத்து, பாட்டாளிகளின் மனங்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாக மாறிவிடும் என்று விளக்குகின்றனர். முன்னுரையில் மார்க்ஸ்,  யதார்த்த சித்தி பெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்  என்று தெளிவுபடக் கூறியுள்ளார். அதாவது சிந்தனை யதார்த்தத்திற்கு நெருங்கி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கத்தின் யதார்த்த (புறநிலை) சூழலால் உருவாகும் சிந்தனை பாட்டாளி வர்க்கச் சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ வாழ்நிலையில் உள்ள (புறநிலை) சூழ்நிலை முதலாளித்துவ சிந்தனையையே பிரதிபலிக்கும்.

சமூகத்தில் எவ்வளவோ வர்க்கங்கள் இருக்க சமூக விடுதலைக்குப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் தேர்ந்தெடுத்தது ஏன்? சமூக விடுதலை என்பது அனைவருக்கும் ஒரே நேரத்தில் என்று சொல்லாமல் பாட்டாளி வர்க்கத்திற்கு என்று சொன்னதின் நோக்கம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களே இம்முன்னுரைக்குத் தம் மனம்போனபடி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர்.

இம்முன்னுரையின் இறுதியில் உள்ளவற்றை இணைத்துப் பார்ப்போம்:-
.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?
விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன்மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது. எனவே அந்தப்பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.
..வளந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..
தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:
ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம். இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”

இதில் மார்க்ஸ் விடுதலைக்கான சாத்தியப்பாடு பாட்டாளிவர்க்கத்திடம் இருப்பதையும், பாட்டாளி வர்க்கம் தமது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடமும், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடத்திலும் காண்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமான பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் சார்புடையதாகும். இங்கே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவச் சார்பையே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை புரிந்து கொள்ளாததால்தான், பலபேர் தமது கருத்திற்கு ஏற்ப மார்க்சின் இந்த முன்னுரைக்கு விளக்கம் கொடுக்க முனைகின்றனர்.

      ம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை  (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்) என்று எங்கெல்ஸ் கூறுகிறார். இதனை மேலும் விரிவாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் :-
“கம்யூனிஸ்ட்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக இருக்கவிலலை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள். பாட்டாளி வாக்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை”

-என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுள்ளபடி கம்யூனிஸ்டுகள் தமது கோட்பாட்டை உருவாக்குவதற்கு வேண்டிய தத்துவத்தைப் பாட்டாளி வர்க்கத்திடமிருந்தே பெறுகின்றனர். இதனைத்தான் மேலே மார்க்சின் முன்னுரை கூறுகிறது:-  தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது .

      இவ்வாறு மார்க்சின் படைப்புகளை இணைத்துக் கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தின் தத்துவம் என்பது பொருள்முதல்வாதம்தான் என்பதை லெனின் விளக்குவதை பார்ப்போம்.

“பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும்  .. ..

.. ஆகவே பொருள்முதல்வாதத்தை  மறுப்பதற்கும்  பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பலவகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதத்திடமிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் தவறாய்ப் போவதை மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி விளக்கி வந்ததை லெனின் இங்கு குறிப்பிடுகிறார். மேலும்  ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷிவிக்)யின் நகல் வேலைத்திட்டத்திலிருந்து மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் வேலைத் திட்டப்பகுதில ் தெரிவிக்கிறார். சுரண்டும் வர்க்கங்களுக்கும் நிறுவன மதப் பிரசாரங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை முழுமையாக ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். இதன் மூலமே மதக் கேடுகளிலிருந்து உழைக்கும் மக்களை உண்மையிலேயே விடுவிக்க முடியும். இதற்கான விஞ்ஞானக் கல்விக்கும், மத எதிப்புப் பிரச்சாரத்திற்கும்  நிறுவன முறையில் சிறந்த ஏற்பாடுகளைக் கட்டாயம் கம்யூனிஸ்ட் கட்சி  செய்து தர வேண்டும் என்கிறார் லெனின். மதத்தை அரசிலிருந்தும், கல்வி நிலையங்களை மதத்திலிருந்தும் பிரித்துவிடுவதற்கு பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள்கூட வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் உலகில் எங்கும் இவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதற்குக் காரணம் என்று லெனின் கூறுகிறார்:-

மூலதனத்திற்கும் மதப் பிரச்சாரத்திற்கும் இடையில் உண்மையில் பல்வேறு வகைகளில் இணைப்புகள் இருப்பதுதான்.

      இதன்மூலம் மதத்திற்கு உரித்தான வர்க்கச் சார்பை புரிந்துகொள்ள வேண்டும். இதனை லெனின் வேறோர் இடத்தில் மேலும் விவரிக்கிறார். எதிர்ப்புரட்சி பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரிதிநிதி மதத்தைப் பலப்படுத்தவே விரும்புகிறார். மக்களுக்கிடையில் மதத்தின் செல்வாக்குப் பெருகவேண்டும், அதற்கு இன்றைய மதம் போதாக் குறையானதாகவும், காலம் கடந்துவிட்டதாகவும் இருக்கிறது என்று கருதுகிறார். மதம் சமூக வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பூர்ஷ்வா வார்க்கத்தின் பிரதிநிதி விரும்புகிறார்:-
“குறிக்கோள்களைச் சாதிப்பதற்கு லாயக்கற்ற முறையில் கந்தல் கந்தலாகி விட்டன. எனவே சற்று அதிகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட மெருகிடப்பட்ட சாதனங்கள் தேவைப்படுகின்றன. மக்களை வெறிமயக்க முறச்செய்வதற்குப் போலீஸ், மதம் இனிமேல் சரிப்பட்டு வராது. அதிகமான அளவில் பண்புள்ள, சற்று நவீனமான தேர்ச்சித் திறம் அதிகமான மதத்தை எங்களிடம் கொடுங்கள். சுய நிர்வாகம் நடத்தும் மத நிறுவன வட்டாரங்கள் சிறந்தவையாக இருக்கும். இதைதான் எதேச்சாதிகாரத்திடமிருந்து மூலதனம் வேண்டிக் கொண்டிருக்கிறது.
(வர்க்கங்களும் கட்சிகளும் மதம் மற்றும் மாதா கோவில்களின்
பால் அவர்களுடைய மனப்பான்மையும்)

மூலதனத்திற்கும் மதஒடுக்குமுறைக்கும் உள்ள நெருக்கத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்திருக்க வேண்டும், அப்போதுதான் மதத்தின் வர்க்கச்சார்பை அறிந்தவர்களாவார்கள். மதத்திற்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையேயுள்ள உறவையும் சார்பையும் உணராதவர்கள், பாட்டாளி வர்க்க உணர்வை முழுமையாக பெற்றவர்களாக மாட்டார்கள்.