Wednesday 4 April 2018

அக்ஞானமே (அறியாமையே) உலக - மாயையைப் படைப்பது- தேவிபிரசாத் சட்டோபாத்யாய


“….இந்தியக் கருத்துமுதல்வாதிகளின் பௌதீக உலகம் பற்றிய கருத்தை, ஆராய்ந்து பார்த்தால் கடைசியில் நிஜமல்லாதது தான் என்பதை நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கைக்குப் பக்க பலமாகக் கூறிய சில முக்கியமான சிந்தனைகளைக் கண்டோம். ஆயினும் உலகம் ஏதோ ஒரு வகையில் இருப்பது போல தோற்றம் தருகிறது என்ற உண்மையும் இருக்கத்தான் இருக்கிறது ; இந்தக் தோற்றத்தை என்னவென்று சொல்வது? ஆத்மாதான் இருக்கிறது: அது மட்டுமே இருக்கும் போது பிரகிருதியும் (இயற்கை - பௌதீக உலகு) இருப்பதாகக் கொள்ளும் வகையில் நம்மைக் காணச் செய்வது எது? இந்தக் கேள்விக்கு கருத்த முதல் வாதிகளான இவர்களெல்லாம் - சூன்யவாதிகள், விக்ஞானவாதிகள், மாயாவாதிகள் எல்லோருமே - விடை கூறவேண்டியது அவசியமாகிறது; இதை நன்குணர்ந்த அவர்கள் கூறும் விடைகள் யாவுமே ஒன்றுதான் ; பொய்யான உலகம் தோன்றுவதற்கு இருப்பது போலக் கொள்வதற்கு) நம்மிடமுள்ள குறை - ஒரு வகை மாசு தான் காரணம், இந்தக் குறை, மாசு முக்கியமாக அக்ஞானம் தான் அக்ஞானமே நமது இயல்பாக இருக்கிறது.

உலகம் என்ற மாயைக்குக் காரணமாவது அக்ஞானமே என்ற இந்தக் கருத்து, மிகவும் முக்கியமான - தலைமையற்ற வகையில் இந்தியக் கருத்துமுதல்வாதத்திற்கு அடிப்படையே ஆகிவிடுவதைப் புரிந்து கொள்வது கடினமே இல்லை. இந்தியத் தத்துவம் இன்னது என்று பலரும் புரிந்து கொண்டிருப்பதும் இது அத்வைத வேதாந்தம் என்ற பெயருடன் மட்டுமே தொடர்புடையது என்பதுதான்; அதில் தான் இந்த அக்ஞானம், அவித்யை என்றும் மாயை என்றும் இரண்டு சொற்களால் குறிக்கப்படுகிறது. அத்வைதிகளுக்கு இது மிகவும் முக்கியமான அடிப்படைக் கருத்து என்பது பற்றி ஐயப்பட அவசியமில்லை. ஆனால் இது அவர்கள் கண்டுபிடித்த ஒன்றன்று என்பதைச் சொல்வதுதான் முக்கியம். இந்தியக் கருதத்துமுதல்வாதம் அதன் செயற்பாடு ஏற்பட்டு வளர்ந்த காலம் முதல் இன்று வரை இதையே சார்ந்து நிற்க வேண்டியிருக்கிறது; ஆகவே, கருத்துமுதல் வாதிகள் அனைவருமே ஏதோ ஒரு விளகக்கமும் தருகின்றனர்.

லகம் அக்ஞானத்தால் மந்திர ஜாலம் போல் உண்டாக்கப் படுகிறது 6ான்ற விளக்கம் அவர்கள் அனைவருக்கும் மிகவும் வசதியாகவும் இருக்கிறது, எல்லாருமே கூறுவது என்னவெனில் அறியாமைதான் நம்மை நிஜமாக இல்லாத பொருள்களைக் காணவைக்கிறது ன்பதே.

இதுபற்றி முதலில் இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். இல்லாத பொருளைக் காண்பதற்கு எடுத்தக்காட்டாக அடிக்கடி அவர்கள் கூறுவது கயிற்றில் பாம்பைக் காண்பது. (வெளிச்சம் இல்லாத இடத்தில் மயங்கிச் சுருண்டு வளைந்து கிடக்கும் ஒரு கயிற்றைப் பாம்பு என நினைத்தல்) அங்கே பாம்பு இல்லை; ஆனாலும் பாம்பைக் காண்பதும் உண்மைதான் - இல்லாத பாம்பை நாம் எப்படிப் பிரத்யக்ஷமாகக் காண்கிறோம்? இதற்கு உள்ள ஒரே விடை, நாம் அறியாமையின் பிடியில் இருக்கும் வரை, (வெளிச்சத்தில் அது பாம்பு இல்லை என்று தெரியும் வரை) பாம்பைத்தான் பார்க்கிறோம் என்பதே. அறியாமை நீங்கிச் சரியான அறிவு ஏற்பட்டால், கயிற்றைக் காண்போமே தவிர பாம்பை அல்ல. (சரியான அறிவைத் தருவது வெளிச்சம்) அக்ஞானத்திற்கு உண்மையான இயல்பை மறைக்கும் சக்தி மட்டுமின்றி, அந்தப் பொருள் மீது, தான் தந்திரமாகப் படைக்கும் ஒரு பொய்யான பொருளை ஏற்றிக் காட்டும் சக்தியும் உண்டு என்பதற்கு இதுவே சான்றாகும் என்பார்கள்.

அக்ஞானம் நம் முன்னே கிடக்கும் கயிற்றை மறைப்பதோடு, அதில் தன் மாயப்படைப்பான (நாம் கற்பனை செய்து கொள்ளும்) பாம்பையும் காணச் செய்துவிடுகிறது. கனவிலும் இதே போலத்தான் நிகழ்கிறது ; கனவு காணும் போதும் நாம் அக்ஞானத்தின் வசப்பட்டு விடுகிறோம்; ஆதலால், நம் கண்முன்னே நிஜமாகவே இருக்கும் பொருள்களை (முன்பு அறிந்தவற்றை) மட்டுமே காண்பதில்லை ; முன்னே இல்லாதவற்றையும் திட்ட வட்டமாகக் காண்கிறோம். அவர்களிடம் உள்ள மற்றொரு எடுத்துக் காட்டு ஜாலக்காரன் செய்யும் தந்திரம். இது வேடிக்கை பார்ப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரமே தவிர வேறில்லை. ஜாலக்காரன் தன் மேடையில் கற்பனையால் தோன்றும் ஒரு யானையைக் காட்டுகிறான். இது எப்படி? அவன் பார்ப்பவர்களை அறியாமைக்கு ஆட்படுத்தி விடுகிறான் (கண்ணைக் கட்டி விடுகிறான் என்பது உலக வழக்கு). இது வேடிக்கை பார்ப்பவனை மேடையில் உள்ள நிஜமான பொருளைப் பார்க்க முடியாமல் செய்து விடுவதோடு, அங்கே இல்லாததையும் திட்டவட்டமாகப் பார்க்கச் செய்துவிடுகிறது.

இதுபோன்ற உதாரணங்களைக் கொண்டு, அக்ஞானத்திற்கு இந்த இரண்டு விதமான ஆற்றலும் உண்டு என்று நிலை நாட்ட முனைகிறார்கள். இவற்றில் அறியாமையால் நாம் காண்பது அனைத்துமே அக்ஞானம் தானே படைத்தவைதாம்; இந்தக் கருத்தை நிலை நாட்டி விட்டால் ஆத்மா (பரிபூரணம்) ஒன்று மட்டுமே இருக்கும் இடத்தில் பௌதீகப் பொருளான இயற்கையை கண்டு உணர்ந்து அநுபவிப்பது பற்றிய பரம் ரகசியத்தை விளக்கிய தாகிவிடும் என்பது அவர்களுடைய எண்ணம். ஞானம் பெற்று விட்ட புண்ணியாத்மாக்களுக்கு இந்த ரகசியமே இருக்காது. அவர்கள் ஆத்மா மட்டுமே நிஜமாக இருப்பது என்பதை அறிந்து விட்டவர்கள் ஆவர். அவர்கள் உலகின் மாயத் தோற்றத்தால் ஏமாந்து போய் விடமாட்டார்கள். சாத்திரங்களில் கூறப்படும் அனைத்துடனும் அந்த ஞானிகளின் அநுபவம் அப்படியே ஒத்து வருகின்றன. சாதாரண ஜனங்கள்தான், மாய உலகக் காட்சியால் ஏமாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் குழந்தைகளைப் போல் அறியாமையின் பிடிப்பில் உள்ளனர். அவர்களுக்கு ஞானம் வரவில்லை .
…….
….இது கருத்துமுதல்வாதிக்கு ஒரு பிரச்சனைதான். கயிற்றில் பாம்பை உணர்வது, கயிற்றைக் கயிறாகவே உணர்வது இரண்டுமே மாயம் (கருத்துப் பிழை) என்றால் இவை இரண்டுக்கும் உள்ள நன்கு புலப்படும் வித்தியாசத்தை எப்படிக் காரணம் காட்டி விளக்குவது? இதை விளக்கிவிடலம் என்ற ஆசையில் கருத்துமுதல்வாதிகள் சுற்றி வளைத்துத்தான் அக்ஞானக் கொள்கையைக் கூறுகிறார்கள். பௌதீகமான பொருள்களின் உலகைப் பற்றிப் பொதுவாக எல்லாருக்குமே உள்ள (1) ஆரம்ப அக்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், அதன் கட்டமைப்பிற்குள்ளேயே (2) ஒரு இரண்டாம் பட்சமான அக்ஞானம் இருப்பதாகக் கொள்கிறார்கள். அது தான் புலன்கள் காட்டுவதாகப்படுகின்ற பொய்யான தோற்றங்களைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள். முதலாவது கயிற்றைக் கயிறாகக் காட்டுவது. இரண்டாவதுதான் பாம்பாகக் காட்டுகிறது. இரண்டாவதைக் கொண்டு முதலாவதை விளக்க வழி கிடைக்கிறது. ஆனால் அது மாயைக்குள் இருக்கும் மற்றொரு மாயை. ஆகவே, அதற்கு வேறான ஒரு பெயர் சூட்டுகிறார்கள். பாம்பன்று கயிறு தான் என்பதை பாமரன் ஒருவனுக்குக் கூட எளிதில் உணர்த்திவிட முடியும். ஆனால் மூல அக்ஞானத்தை அப்படி எளிதில் அகற்றி விட முடியாது. அது அகல வேண்டுமானால் மிக உயர்ந்ததும் அனைத்திற்கும் மேலே அப்பாற்பட்டதுமான ஒரு ஞானம் வேண்டும். அதாவது, தான் மட்டுமே பரம் ஸத்யமாயிருக்கும் ஆத்மா ஸத்யத்தை நேரடியாக உணர்தல் வேண்டும்.

அப்படியானால் ஞானிகளும் ஞானம் நிறைந்தும் கூட உலகத்தைத் தொடர்ந்து உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எப்படி ? இதற்கு விளக்கமே வேறு என்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள். ஜாலம் செய்பவனுக்குத் தான் செய்வது - காட்டுவது பொய் என்பது தெரியும். இந்த ஜால வித்தை மந்திர தந்திரமெல்லாம் அறிந்த ஒருவனே அதைப் பார்ப்பவனாகவும் இருந்தால் அவனுக்கும் இது வெறும் தோற்றம் என்பது தெரியும். இந்த இருவரையும் போன்றவர்கள் ஞானிகள். இது தெரியாத பாமர மக்கள் ஜாலத்தால் கட்டுண்டு வேடிக்கை பார்ப்பதைப் போலத்தான் (ஞானிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வெறும் மாயக் காட்சி என்பது அவர்களுக்குத் தெரியும். பாமரனுக்குத் தெரியாது. இந்த உவமையைக் கூறித் தங்கள் தத்துவ நிலைப் பாட்டில் உள்ள மிகக் கடினமான பிரச்சனையைச் சமாளிக்க விரும்புகின்றனர்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
அழிந்தனவும் - பக்கம்  130- 132 & 136-137)

ஆதிசங்கரரின் அத்வைத சாரம்


அநித்தியம், நித்தியம், நித்திய அநித்திய விவேகம், மாயை, பிரம்மம் சத்தியம் உலகம் மித், தத்துவமசி, ஜீவ பிரம்ம ஐக்கியம், சம்சாரம், பன்மையே வியவகார உலகம், ஒருமையே பரமார்த்த உலகம், சத்சித் ஆனந்தம், முக்தி ஆகிய சொற்களின் பொருளை தெரிந்து கொண்டாலே அத்வைதத்தின் சாரத்தை அறியலாம்.

இந்த உலகத்தில் காணும் பொருட்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை நிலைத்த தன்மையற்றவை (அநித்தியமானவை). நிலையற்ற இந்த உலகப் பொருட்களால் கிடைக்கும் இன்பமும் நிலையற்றவை. விருப்பும், வெறுப்பும் நிறைந்துள்ள இந்த உலகம் கனவு போன்றதே. கனவில் காணும் உலகம் பொய்யானதே, அதேபோல் நனவில் காணும் உலகமும் மாயையானதே. இந்த உலகின் நிலையற்ற பன்மை தன்மையினால் தான் அச்சமும் துன்பமும் (சம்சாரப் பந்தம்) நேர்கிறது. நிலையற்றப் பொருட்களால் மக்களுக்கு அமைதி கிடைக்காது. அதனால் நிலையான பொருளை (நித்திய அநித்திய விவேகம்) நாடிச் செல்ல வேண்டும். நிலையான பொருள் (நித்தியமானது) ஆத்மா. மனிதன் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் உண்மையானது (சத்தியமானது) என்ற தவறான நினைப்பில் இருக்கிறான். இது மாயையானது. இதற்கு இருப்புக் கிடையாது, இருப்பிடம் இல்லாமலும் இல்லை, இந்த இரு வகைப்பட்டதன்று, இதுவே மாயையின் நிலை. இந்த மாயையின் அடிப்படையில் தோன்றியதே உலகம். பிரம்மம் சத்தியம் உலகம் அசத்தியம் (பிரம்மம் சத்தியம் உலகம் மித்).

தன்னை உடலாகக் கருதுவதைவிடுத்து, ஆத்மா என்ற நிலையான தன்மைப் பெற்றவன் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்த அத்மா தனித்த ஆத்மா கிடையாது, அது பரமாத்மாவின் (பிரம்மத்தின்) விலகலாகத் தோன்றுகிறது. உண்மையில் பரமாத்மா மட்டுமே உண்மையானது. பிரம்மத்திற்கு வேறான ஒன்றுக்கு இருப்புக் கிடையாது. இருப்பாகத் தோன்றுவது மாயையின் தோற்றமே. “நீயே அது” (தத்துவமசி) என்கிற வேதாந்த மகாவாக்கியத்தை உணர்ந்து நானே பிரம்மம் (ஜீவ பிரம்ம ஐக்கியம்) என்பதை அறிவதே, துன்ப மயமான (வியவகார உலகம்) இந்தப் பன்மை உலகத்தில் இருந்து விடுபடுவதே (முத்தி) விடுதலையாகும். வியவகார உலகில் தான் வேறுபாடுகள் பரமார்த்த உலகில் அனைத்தும் ஒன்றே, ஒருமையே.

ஞானம் பெறுவதற்குக் கர்மம் (செயல்) துணைபுரிகிறது. அந்த செயல் பற்றில்லாமல் அதாவது பலன் கருதாமல் செய்தால் அந்தச் செயல் கர்மவினையை ஏற்படுத்தாது. இந்தச் செயல் ஞானத்திற்கு வழிகாட்டாது, ஆனால் ஞானம் பெறுவதற்குத் தேவைப்படுகிற மனத்தூய்மையை (சித்த சுத்தி) ஏற்படுத்தும். மனத்தூய்மை பெற்றவன் ஞான யோகத்திற்கு தயாராகிறான். பிறகு, துன்பமயமான பன்மைத்தன்மை உடைய வெளிஉலகத்தில் இருந்து விடுபட்டு இயல்பிலேயே என்றும் ஆனந்தமயமானவன் (சத்சித் ஆனந்தன்) என்பதை அறிந்து இன்பத்தில் திழைக்கிறான்.

பிரம்மத்தில் இருந்து பிரிந்தாகக் கருதுவதை விடுத்து பிரம்மமாய் இருப்பதை (ஒருமை) உணர்வதே ஞானமாகும். இந்த ஞானமே சம்சாரத்தில் இருந்து (முக்தியை) விடுதலைத் தருகிறது.  

(இதற்கான விமர்சனம் பிறகு வெளியிடப்படும், அத்வைதத்தைப் அறிந்திருந்தால் தான் அதன் விமர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால் அத்வைதத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.)

Tuesday 3 April 2018

அத்வைதம் சிறு அறிமுகம்


(முடிவு பெறாத எனது நூலில் (ஆதி சங்கரரின் அத்வைதம்) காணப்படும் ஒரு பகுதி, இது வரைவு தான் சற்று விரிவாக்கப்படும்.)

பிறந்தது முதல் இறக்கும் வரை மகிழ்ச்சியை மனிதன் நாடுகிறான். குழந்தையாக இருக்கும் போது எதுகிடைத்தாலும் மகிழ்ச்சியே. ஏன். கிடைக்காமல் போனாலும், இருப்பது எல்லாம், கிடைத்ததெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால் இந்த மகிழ்ச்சி இறக்கும் வரை தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே.

பள்ளியில் சேர்ந்தவுடன் உடன் இருக்கும் குழந்தையுடன் சேர்ந்தது மகிழ்ச்சியே. சிறுகசிறுக இந்த மகிழ்ச்சி குறைகிறது. தமக்கான படிப்பாக இல்லாமல் சமூகத்திற்காகவும், பெற்றோர்களுக்காகவும் உரியப் படிப்பாக மாறும்போது சலிப்பும் வெறுப்பும் ஏற்படுகிறது. கல்லூரிக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்க வைக்கிறது. ஆனால் கல்லூரியை அடைந்தவுடன், கல்லூரியைவிட பள்ளியே மேல் என்று தோன்றுகிறது.

சம்பாதிக்கத் தொடங்கி மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைப்பு வருகிறது. ஆனால் குடும்பப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற போதுமான பணம் இல்லாத போதும், பாதுகாப்பற்ற சூழ்நிலையை சந்திக்கும் போதும் கல்லூரி வாழ்க்கை இதைவிட சுகமானதாகப் படுகிறது. சரி பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துமுடித்தவுடன் சுதந்திரமாக இருக்கலாம் என்றால் சேர்த்துவைத்த சொத்தால் குடும்பத்துக்குள்ளேயே பிணக்கு ஏற்படுகிறது. துக்கமும் மனப் பதட்டமும் தான் மிஞ்சுகிறது. சரி இறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால். சேர்த்து வைத்த வினைகள் அடுத்த பிறவியை ஏற்படுத்துகிறது.

நல்ல குணம் உள்ளவர் கஷ்டங்களையே சந்தித்துவருவதையும், குணக்கேடுடையவர் வாழ்வில் எல்லாம் கிடைத்து மகிழ்ச்சியாக வாழ்வதையும் உலகில் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் முற்பிறவியில் அவர் செய்ய புண்ணிய- பாபங்களே என்கிறது, கஷ்டப் படுபவர் போன பிறவியில் செய்த பாவங்களே இந்தப் பிறவியில் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இப்பிறப்பில் குணக்கேடுடன் இருந்தாலும் போன பிறவியில் புண்ணியம் செய்ததனால் இப்போது அவர் மகிழ்வாய் இருக்கிறார். சேர்த்து வைத்துள்ள புண்ணிய பாவங்கள் மாறிமாறி கழிப்பதற்கே பிறவிகள் தோன்றுவதாக மறுபிறவி கோட்பாடு கூறுகிறது.

கர்மங்களின் தொடர்ச்சியே பிறவி. பிறப்பதும் இறப்பதும், இறப்பதும் பிறப்பதும் என்ற தொடர்ச்சியையே சம்சாரம் என்கிறது வேதாந்தம். மனிதனின் இறுதிக்குறிகோள் முக்தி என்பதாகவே அனைத்து வேதாந்தமும் கூறுகிறது. அதன் வழிமுறைகள் வேறுபடுகின்றன. வேதாந்தத்தினுடைய ஆன்மீகம் மூன்று வகைகளில் காணப்படுகிறது. ஒன்றுநான் உன்னுடையவன்”, இரண்டாவதுஇறைவன் என்னுடையவன்”, மூன்றவாதுநானே அவன்”.

முதலாவது துவைத வேதாந்தம், இரண்டாவது விசிட்டாத்வைதம், மூன்றாவது அத்வைதம். இன்னும் பல வேதாந்தப் பிரிவுகள் இருக்கின்றன. ஆதியிலே இறைவன் உலகத்தைப் படைத்தார். ஜீவன்களைப் படைத்ததும் இறைவனே. எல்லைகளற்ற இறைவனே பரமாத்மா. எல்லைகளுக்குட்பட்ட ஜீவன் ஜீவாத்மா. இரண்டும் வேறுவேறு என்று இந்த சித்தாந்தம் கூறுவதலால் இதற்கு துவைதம் அதாவதுஇரண்டானதுஎன்று பெயர். ஜீவாத்மா தமக்கு வேண்டியதை பரமாத்மாவிடம் வேண்டிக் கொள்ள சொல்கிறது துவைதம்.

விசிட்டாத்வைதம் இரண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறது, ஆனால் ஜீவாத்மாவில் பரமாத்மா அந்தர்யாமியாய் (உடனாய்) உறைகிறார். இந்தப் பரமாத்மா ஜீவனுடன் உறைவதனால் ஜீவன் செய்கின்ற பாப புண்ணியங்களுக்கு பரமாத்மா சாட்சியாக மட்டுமே இருக்கிறார். பக்தியைவிட பரபக்தியையே விசிட்டாத்வைதம் முன்னிருத்துகிறது. ஜீவன் தமக்கு எது வேண்டும் என்பதை பரமாத்மாவே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுகிறது. ஜீவாத்மா பரமாத்மாவிடம் சரணடைந்து தமக்கு எது வேண்டுமோ அதனை அந்த பரமாத்மாவே தீர்மானிக்கட்டும் என்று ஜீவாத்மா பரமாத்மாவிடம் சரணடைகிறது. இந்த அந்தர்யாமி மற்றும் பரபக்தி விசிட்டாத்வைதத்தின் சிறப்பில்புகளாகும். அத்வைதம் பரமாத்மா ஜீவாத்மா என்கிற இரட்டையை மறுக்கிறது, அதனால் தான இந்த சித்தாந்தத்திற்கு அத்வைதம் அதவாது இரண்டல்ல என்று பெயர்பெற்றுள்ளது. இருப்பது ஒன்றுதான் அது பரமாத்மாவான பிரம்மமே, பிரம்மம் சத்தியம் ஜகத் மித் என்பதே அத்வைதத்தின் சித்தாந்தம்.

ஜீவாத்மா, பரமாத்மா என்கிற இரட்டை சித்தாந்தத்தைவிட, பிரம்மம் மட்டுமே உண்மை என்று தமது அத்வைத சித்தாந்தமே சம்சாரத்தில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழிகாட்டி என்கிறார் ஆதிசங்கரர். இவர் தமது சித்தாந்தத்தை, பல்வேறு சிறிய, மற்றும் பெரிய நூல்களை எழுதியுள்ளார். மற்றும் உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றுக்கு எழுதிய விளக்கவுரை (பாஷியம்) மூலம் அத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துகிறார்.

இங்கே பரபக்கமாக அத்வைத சித்தாந்தம் விவரிக்கப்படுகிறது. அதாவது ஆதிசங்கரரின் கருத்துக்களை அவர் விவரிக்கும் முறையில் விளக்கப்படுகிறது.

துவைத மறுப்பு

கர்ம காண்டம், ஞான காண்டம் என்று வேதம் இரண்டாகப் பிரித்தறியப்படுகிறது. இதில் கர்ம காண்டம் துவைதத்தையும், ஞான காண்டம் அத்வைதத்தையும் விவரிக்கிறது. அப்படியிருக்க அத்வைதமே சிறந்த வழி என்று ஏன் கூறப்படுகிறது என்பதை, ஆதிசங்கரர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடற் சிப்பி சூரிய ஒளியால் வெள்ளி போல் ஒளிர்கிறது, பாலைவனத்தில் காணப்படும் கானல் நீர், உண்மையான நீரைப் போல் காட்சி அளிக்கிறது. இவைகள் எப்படி பொய்யானதோ அதேபோல் துவைதம் பிரம்மத்தினால் தோற்றுவிக்ப்பட்ட பொய்யேயாகும். இதற்கு மாறாக துவைதத்தில் அத்வைதம் கற்பிக்கட்டதாக என்று சொல்வது உக்திக்குப் பொருத்தம் இல்லாததாகும். அதுமட்டும் அல்லாது உண்மையானப் பொருளில் இருந்துதான் பொய்யானப் பொருள் கற்பிக்கப்பட முடியும். பொய்யானதில் இருந்து உண்மையானது தோன்றாது.

ஆதிசங்கரர்:-
இரு பாகங்களுடன் கூடிய வேதத்தில் (கர்மகாண்டம், ஞானகாண்டம்), ஒரு பாகம்  (கர்மகாண்டம்) துவைதத்தையே சாதிக்கிறது, மற்றொரு காகம்  (ஞானகாண்டம்) பிரசித்தமான அத்வைதமான பிரம்ம வஸ்துவையே கருத்துடன் சொல்கிறது.

வேற்றுமையற்ற பிரம்மம்தான் உண்மையானது, கிளிஞசலில் (சிப்பியில்) வெள்ளி போலவும், கானலில் நீர் தோன்றுவது போலவும் அந்த பிரம்மத்தில் ஆரோபிக்கப்பட்ட (கற்பிக்கப்பட்ட) துவைதம் வாஸ்தவமல்ல.

உண்மையான அத்வைதம் பொய்யான துவைதத்தில் கற்பிக்கப் பட்டிருக்கட்டுமே என்றால் அது உக்திக்குப் பொருத்தமில்லாதது, ஏனெனில் பொய்யான பொருள்களுக்குத்தான் உண்மைப் பொருளில் ஆரோபம் ஏற்படுகிறது” (சுவாத்ம நிருபணம்- 50 - 52)

இதே பாடலில், வேதத்தில் துவைதம், அத்வைதம் இரண்டும் கூறப்பட்டுள்ளது, ஆனால் துவைதத்தை வேதங்களில் அல்லாது பிற நூல்களாலும் அறிந்து கொள்ள முடியும், அத்வைதமோ வேதத்தினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அத்வைதம் ஆனந்தமயமானது, துவைதம் துக்கமயமானது. துக்கத்திற்கு காரணமான துவைதத்தையல்லாது துக்கமற்ற சத்சித் ஆனந்தமான அத்வைதமே வேதம் எடுத்தியம்புகிறது.

பிரத்யட்சம் முதலான பிரமாணங்களால் அறியப்படாத அத்வைதம் வேதத்தால் கருத்துடன் விளக்கத்தக்கது, துவைதம் கருத்துடன் சொல்லத்தக்கதல்ல, அது தானாகவே உலகில் பிரசித்தமாய் இருப்பதால்.

அத்வைதம், ஆனந்தஸ்வரூபம் துவைதம் எப்பொழுதும் பொறுக்க முடியாத துககமாக இருக்கும். எதில் பலன் இருக்குமோ அதைத்தான் அந்த வேதம் கருத்துடன் கூறுகிறது.” (சுவாத்ம நிருபணம்- 54 - 55)

வேதத்தில் சில கருத்துக்கள் அத்வைதத்தையும், சில கருத்துக்கள் துவைதத்தையும் கூறுகின்றன என்பது உண்மைதான், ஆனால் அத்வைதத்தை வேதமுடிவானதால் துவைத கருத்துக்களை அத்வைதக் கருத்துக்கு விரோதமில்லாமல் அத்வைதத்திற்கு உள்ளடங்கிய வகையில்தான் பொருள் கொள்ள வேண்டும்.

அத்வைத தத்துவத்தை உணர்த்துகிற எல்லா வேதவாக்கிய சமூகங்களுக்கும் மற்ற எல்லா வாக்கியங்களும் அங்கமாக உள்ளதாக சொல்லப்பட்டிருக்கின்றன.” (சுவாத்ம நிருபணம்- 65)

குரு வணக்கம்

       அத்வைதத்தை அடைவதற்கு அத்வைத போதத்தைப் பெற வேண்டும், அதற்கு அத்வைத குருவை நாட வேண்டும் என்பதே அத்வைத மாணவனின் முதல்படியாகும். குரு எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதை ஆதிசங்கரர் தமது விவேகசூடாமணி நூலில் கூறியுள்ளார்.

வேதத்தை நன்கு கற்றுணர்ந்து, பாவமற்று ஆசைவயப்படாதவராக, பிரம்ம ஞானிகளில் சிறந்தவராக- பிரம்ம நிஷ்டையில் ஆழ்ந்து இருப்பவரும், எரிபொருளற்ற நெருப்பின் அமைதியுடனும் கூடியவராக, கருணையே வடிவாய் இருப்பவரும் எவரோ அவரே சிறந்த குரு” 35
சிறந்த அத்வைத குருவைநாடுவது சீடனின் முதல் கடமை. குருவை தேடியடைந்தவுடன், குருவணக்கம் செய்ய வேண்டும். ஸ்ரீசிருங்கேரி ஸ்ரீசாரதாபீடாதீச்வர ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹபாரதீ அவர்களால் ஸ்ரீ சங்கராசார்யரைப் பற்றி இயற்றப்பட்ட தோத்திரப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட குரு வணக்க கதம்பத் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பேருணர்வு, பேரானந்தமாகிய வடிவானவர். சின்முத்திரை காட்டுகிற கையுள்ளவர். ஈசனின் மாற்றுருவம், உபநிஷத்துக்களால் ஸந்சோஷத்துடன் பாடப் பெற்றவர், தன்னைப் புகலடைந்தவருக்கு ஆனந்தமளிப்பவர். அந்த மங்களம் அளிப்பவரான உமக்கு வணக்கம். (பக்கம்-186)


2. ஸம்சாரக் கடலில் ஆழ்ந்து துயருற்ற மக்களை விரைவுடன் நீர் கரையேற்ற வந்தவர் என உமது தனிப்பட்ட புகழை அறிந்து, சிறிதும் முயற்சி கொள்ளாமல் ஐயமின்றி இனிது நிம்மதியுடன் தூங்குகிறேன். (பக்கம்-189)

3. ஸ்ரீ சங்கரர் என்ற பெரியோரோ! அஸ்மிதா (பெருமிதம்), அவித்யா (அறியாமை), ராகம் (விருப்பு), துவேஷம் (வெறுப்பு), அபிநிவேசம் (ஆசை) என்ற ஐந்து கிலேசங்களையும் (வருத்தங்களையும்) நீக்கி, நித்திய, அநித்யப் பொருளை ஆராய்ந்து பகுத்தறிதல், இம்மையிலும் மறுமையிலும் பெறவிருக்கிற இன்பத்தை அற்பம் என்ற எண்ணத்தால் நாடாதிருத்தல், மனவடக்கம், புலனடக்கம் முதலிய ஆறு குணங்களின் நிறைவு, முக்திபெறுவதில் அக்கரை என்ற நான்கு ஸாதனங்களையும் ஆத்மவிசாரத்தையே முக்கியமாகக் கொண்ட புத்தியையும் அளித்து, எனக்கு உமது திருவடிப்பிடிப்பைத் தந்தருள்வீர். (பக்கம்-190) 


4. ஸ்ரீ சங்கராசார்யரே! என்னை வாட்டுகிற பெருநோய் வேறு மருத்துவரால் நீக்கப் பெறுவதில்லை. நீர்தான் உலகின் முதல் வைத்தியர். அஞ்ஞானம் என்ற அந்த நோயை சஞ்சலமற்ற புத்தி என்ற மருந்தைத் தந்து விரைவில் போக்கி எனக்கு உமது திருவடியைப்பற்ற வாய்ப்பு தருவீர். (பக்கம்-193-194)

5. கருணை உள்ளம் படைத்தவரின் முன்நிற்பவரே! ஆத்மா ஒன்றே என்று உணரச் செய்வதால், முடிந்த முடிவான பரம்பொருளிடம் என் மனம் கரைந்து லயமடைந்து மறுபடி வெளிப்படாதபடி செய்வீர். உமது திருவடிப்பிடிப்பைத் தாரீர். (பக்கம்-194)

6. துறவிகளை வெளிப்பொருள் நாட்டத்தை விஷமாகக் கருதச்செய்து, இல்லறத்தார்களுக்கு நற்கருமங்களைச் செய்வதில் நாட்டத்தைத் தந்து அனைவரையும் படிப்படியாக பரமபதம் எனும் பிரும்ம நிலை பெறச் செய்கிற ஸ்ரீ சங்கரப் பெருந்தகையே! உம் திருவடியைப் பற்றிக்கொள்ளத் தருவீர். (பக்கம்-195)

7. கருணைக்கடலே! ஸ்ரீ சங்கரப்பெருமானே! எல்லையற்ற அறியாமைக் கடலில் திடமாக மூழ்கி ஆத்மாவின்-சித் ஆனந்த சொரூபத்தை முழுதும் மறந்துள்ளவனைக் கருணையால் ஆத்மாவை உணர்கிற புத்தி என்ற கயிற்றால் கட்டி மேலே இழுத்துக் கரை சேர்த்து உம் திருவடிகளைப் பற்றிக்கொள்ளச்செய்வீர். (பக்கம்-198)

8. ஸ்ரீ சங்கராசார்யரே! முதலில் நித்ய-அநித்யப் பொருளைப் பகுத்தறிவது முதலிய நானகு சாதனங்களைப் பெறக் காரணமாவதும், நடுவில் சிரவணம் செய்த பொருளைப் பற்றிய மனனத்திற்கு சாதனமாவதும், முடிவில் காட்சிப் பொருளாகாத ஆத்மானந்தத்தைத் தருவதுமான உமது திருவடி என்ற பற்றுக்கோலை எனக்கு அளிப்பீர். (பக்கம்-200)

9. தனது பூர்ண கருணை நிறைந்த கடைக்கண் பார்வையாலும் பலதரப்பட்ட தனது நூல்களாலும் உண்மை நிலையை உணர்த்தித் துறவிகளை முன்னிட்ட மக்கள் திரளைக்காப்பதில் விரதம் பூண்ட ஸ்ரீ சரங்கரப்பெரியோரே! எனக்கு உமது திருவடியைப் பற்றுக்கோலாகத் தருவீர். (பக்கம்-205)

10. குருக்களில் சிறந்தவரே! எப்போதும் எங்கும் செய்யத்தகாதது எதனையும் பலவாறு துனபுறுத்தப்பட்டிருந்தாலும் செய்யமாட்டேன் என்ற மனத்திடத்தை இவனுக்கு அளித்துக் காப்பீர். (பக்கம்-211)

இந்த குருவணக்கத்திலே பேசப்பட்டவைகளை அறிந்து கொள்வதே அத்வைதத்தை அறிந்து கொள்வதற்கு துணைபுரியும். மூன்றாவது குருவணக்கத்தில் கூறப்பட்டதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கிற இன்பத்தை அற்பம் என்று முடிவெடுத்து அதனை நாடாமல் இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஆத்ம விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

எட்டாவது பாடலில், நித்ய-அநித்யப் பொருளைப் பகுத்தறிவது பற்றி பேசப்பட்டுள்ளது.  இந்த நித்ய அநித்யப் பொருளை ஆராய்ந்து அநித்யப் பொருளை நீக்கி நித்ய பொருளை அறிந்து கொள்வதே ஆத்ம விசாரமாகும். இந்த ஆத்ம விசாரம் பிறவிக்கடலை கடந்து முக்தி அடைவதற்கே ஆகும். மறுபடியும் பிறவபெருங்கடலில் அகப்படாமல், அத்வைத முடிபான தத்துவமசி நான் பிரமம்மாக இருக்கிறேன் என்ற நிலையை அடைவதாகும்.

ஆக, பிறவிப் பெருங்கடலில் இருந்து முழுமையாக விடுபட்டு, முக்தி அடைவதற்கு ஆத்ம விசாரத்தைத் தொடங்க வேண்டும்.

அத்வைதம் சிறு அறிமுகம்

முதலில் அத்வைதம் கூறுவதை சுருக்காமக அறிமுகமானப் படுகிறது. அதன் பின் சிலவற்றை சற்று விரிவாக விளக்கப்படுத்தப்படுகிறது. சுருக்கத்தில், சாதன சதுஷ்டயம், தத்துவ விவேகம், மூன்று உடல்கள், மூன்று அவஸ்தைகள், பஞ்ச கோசங்கள், ஆத்மா, படைப்பு வரிசை, ஜீவ பிரம்ம ஐக்கியம், ஜீவன் முக்தன், மூவகைக் கர்மங்கள், முக்தி ஆகியவைகளை முதலில் பார்ப்போம். பின்பு விரிவை நோக்கி செல்லாம்.

சாதன சதுஷ்டயம்

சம்சார பந்தத்தில் இருந்து விடுபட விரும்புகின்ற, அத்வைத சீடன் மேற்கொள்ள வேண்டிய நான்கு சாதனங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சாதன சதுஷ்டயம் என்றால் கடைபிடிக்க வேண்டிய நான்கு சாதனங்கள். விவேகம், வைராக்கியம், ஷட் சம்பத்தி என்று கூறப்படுகிற ஆறு பண்பு நலன்கள், மோட்சத்தின் மீது தீரா ஆசை. இந்த நான்கையும் சீடன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

விவேகம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் நித்தியப் பொருள், அநித்தியப் பொருள் எது என்பதை அறிவதாகும். தோன்றாமலும் அழியாமலும் இருக்கக்கூடியது நித்தியப் பொருள். தோன்றி அழிபவவை அநித்தியப் பொருள். வெளிப்பொருட்கள் அனைத்தும் தோன்றி அழியக்கூடிய அநித்தியப் பொருள். தோன்றாத என்றும் நிலைத்திருக்கிற ஆத்மாவே நித்தியப் பொருள் இதனை அறிவது விவேகம். இந்த விவேகத்தை அடைவதற்கு வைராக்கியம் வேண்டும். இம்மை மறுமை பொருட்களை அனுபவிப்பதில் நாட்டமில்லாது பற்றற்று இருப்பது வைராக்கியமாகும்.

இந்த வைராக்கியம் பெற வேண்டுமானால் சீடன் ஆறுவகை பண்புநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமம், தமம், உபரதி, திதிட்சை, சிரத்தை, சமாதானம் என்பவையே அந்த ஆறுவகைப் பண்புநலன்களாகும்.

மனதை அடக்குவது சமம். புலன்கள் வழியாக வெளிப்பொருட்களில் மனம் ஈடுபடுவதை அடகுவது சமம். புலன்களின் மூலம் அனுபவிக்கின்றவைகளின் மீது ஆசையை ஒழித்து மன அமைதி பெறுதலே இந்தப் பண்புநலனாகும். சமம் என்பதற்கு சாந்தம் அதாவது அமைதி என்று பொருள் மன அமைதியை பெறுவதற்கான வழிகளே சமம்.

மன அமைதியை தமம் என்கிற புலனடக்கத்தின் மூலமே பெறமுடியும். புலன்கள் மூலமாக நுகர்வதைக் கட்டுப்படுததுவதை தமம் குறிக்கிறது. இந்தப் புலனடக்கம் ஜீவன் தமது தர்மத்தை பின்பற்றுவதால் கிட்டும். விதிக்கப்பட்ட செயல்களை செய்வது உபரதி. சுயதர்மாவை அறிந்து அதனை விட்டுவிடாமல் பற்றில்லாமல் செய்து திருப்தி கொள்ளுதல் உபரதி.

சுயதர்மத்தை திருப்திகரமாக செய்வதற்கு சகிப்புத்தன்மை பெற்றிருக்க வேண்டும். இதனையே திதிட்சை வலியுறுத்துகிறது. சுகம் துக்கம், இன்பம் துன்பம் போன்ற இரட்டைகளை பொறுத்துக் கொள்ளுதலே திதிட்சை.

சுயதர்மத்தை சகிப்புத்தன்மையோடு பொறுத்துக் கொள்வதற்கு வைராக்கியம் அவசியம். சுயதர்மத்தை தியாகத்தோடு செய்திட வேண்டுமானால், குருவின் உபதேசிக்கும் வேதாந்தத்தை நம்பிக்கையோடு பின்பற்ற வேண்டும். வேதப் பிராமணத்தை நம்பிக்கையோடு ஏற்பது வைராக்கியம்.

இந்த வைராக்கியம் பெறுவதற்கு மனம் சமமான நிலையில் இருக்க வேண்டும். இதனையே சமாதானம் எனப்படுகிறது. இகலோகப் பயணத்தை விடுத்து, மோட்சம் அடைய வேண்டும் என்ற இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு மனதை சிதறலின்றி ஒருமுகப்படுத்த வேண்டும்.

இவைகள் அனைத்தையும் முக்தி அடைய வேண்டும் என்ற தீரா ஆசை கொண்வடர்களால் தான் முடிவும். இதனையே முமுட்சுதுவம் எனப்படுகிறது. சம்சாரக் கடலில் இருந்து விடுபட்டு முக்தி பெற வேண்டும் என்கிற தகிப்பே முமுட்சுதுவம்.

தத்துவ விவேகம்

அழிவற்ற ஆத்மாவே உண்மையானது, மாறுதலுக்கும் அழிவுக்கும் உள்ளாகிற இப்பிரபஞ்சம் மித்தாகும் அதாவது தோற்றத்தில் காணப்படும் ஆனால் மூன்று காலங்களிலும் மாறிக் கொண்டே இருக்கும்.. இந்த அறிவை பெறுவதே விவேகமாகும். அடுத்து எது ஆத்மா? என்பதை அறிய வேண்டும். இதனை ஆதிசங்கரர் ஸ்தூல, சூக்கும, காரண உடல்களைவிட வேறானதும், பஞ்ச கோசங்களை கடந்ததாகவும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாட்சியாக விளங்குவதாகவும், சச்சிதானந்த வடிவமாக விளங்குவதாகவும் உள்ளது ஆத்மா என்கிறது அத்வைதம்.

இங்கே ஆத்மா என்று குறிப்பிடப்படுவது பரமாத்மா என்கிற பிரம்மத்தையேயாகும். இந்த பிரம்மத்தைப் புரிந்து கொள்வதற்கு மூன்று உடல்களைப் பற்றியும், பஞ்ச கோசங்களைப் பற்றயும் மூன்று அவஸ்தைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

உடல்கள் மூன்று, முதலாவது ஸ்தூல உடல், இரண்டாவது சூக்கும உடல், மூன்றாவது காரண உடல். பஞ்சீகரணம் செய்யப்பட்ட ஐவகை பெரும்பூதங்களால் ஆனதும், நல்வினைப் பயனால் தோன்றியதும், இன்ப துன்பங்களின் இருப்பிடமாயும், இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் என்கிற ஆறுவகை மாற்றங்களுக்கு உட்பட்டது ஸ்தூல உடலாகும்.

பஞ்சீகரணம் செய்யப்படாத ஐவகை பெரும் பூதங்களால் ஆக்கப்படாததும், கர்மங்களால் தோன்றிய சுகம், துக்கம் முதலிய போகங்களை அனுபவிக்க சாதனமாக உள்ளதும், ஐந்து ஞானேந்தியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி என பதினேழு பகுதிகளைக் கொண்டதுமாக உள்ளது எதுவோ அதுவே சூட்சும உடலாகும்.

இப்படிப்பட்டது என்று சொற்களால் விளக்கமுடியாததும், தொடக்கமற்றதாக உள்ள அவித்தை வடிவமாக உள்ளதும், ஸ்தூல மற்றும் சூக்கும உடல்களுக்குக் காரணம் மாத்திரமாக உள்ளதும், தனது உண்மை வடிவை அறியாமலும் உள்ள நிர்விகல்ப வடிவமே காரண உடலாகும். நிர்விகல்பம் என்றால் உபாதிகள் அற்றநிலை, உபாதி என்றால் தன்னிடத்தில் இருப்பதை வேறிடத்தில் இருப்பதாகக் காட்டுவது.

மூன்று அவஸ்தைகள்

விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), தூக்கம் (ஸீஷீப்தி) ஆகிய மூன்று நிலைகளையே மூன்று அவஸ்தைகள் என்று அழைக்கப்படுகிறது.

காது முதலான ஞானேந்திரங்களால், ஒலி முதலான விஷயங்களை அறியும் நிலை எதுவோ அது விழிப்பு நிலை. விழிப்பு நிலையினால் புலன்களின் துணையுடன் வெளிப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது. விழிப்பு நிலையில் எது பார்க்கப்பட்டதோ, எது கேட்கப்பட்டதோ அதனால் ஏற்படும வாசனை மூலம் உறக்கத்தில் தோன்றும் பிரபஞ்சமே கனவு நிலை எனப்படும். எதுவும் அறியப்படாது, ஆனந்தமாக தூங்கும் அனுபவ நிலையே தூக்கம் ஆகும்.

பஞ்ச கோசங்கள்

கோசம் என்றால் உறை என்று பொருள்படும். மூன்று உடல்களும் ஐந்து உறைகளாக பகுக்கப்பட்டுள்ளது. அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்பவைகளே அந்த ஐந்து உறைகளாகும்.

உணவின் சக்தியால் தோன்றி, உணவின் சக்தியால் வளர்ந்து, அன்ன வடிவான பூமியில் எது ஒடுங்குகிறதோ அது அன்னமய கோசம் எனப்படும். அன்னமய கோசமே ஸ்தூல உடலாகும். பிராணன் முதலிய ஐந்து வாயுக்களும், வாக்கு முதலிய ஐந்து கர்மேந்திரியங்களும் பிராணமய கோசம் எனப்படும். மனமும், ஐந்து ஞானேந்திரியங்களும் சேர்ந்து மனோமய கோசம் எனப்படும். புத்தியும், ஐந்து ஞானேந்திரங்களும் சேர்ந்து விஞ்ஞானமய கோசம் எனப்படும். காரண உடலில் உள்ள அறியாமையினால் (அவித்தையினால்) களங்கப்பட்ட சத்வாசம், பிரியம் முதலான விருத்திகளுடனும் கூடியிருப்பது எதுவோ அது ஆனந்தமய கோசம் எனப்படும்.

இந்த ஐந்து கோசங்கள், ஆத்மாவிற்கு உறைகளாக அமைகிறது. அத்மா பிறவற்றுடன் தொடர்பு ஏற்படும் போது, நான் இவ்வுடல், நான் இம்மனம், நான் இவ்வறிவு என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்வது ஆத்மாவிற்கு உறைகளாகிறது. தன்னுடையதாக அறியப்படுகிற வீடு, நகை போன்றவை தன்னைவிட வேறானதாக இருப்பதைப் போல், தன்னுடையதாக அறியப்படும் இந்த ஐந்து கோசங்களும், மூன்று உடல்களும், மூன்று அவஸ்தைகளும் ஆத்மா அல்ல. அப்படி என்றால் ஆத்மா என்பது என்ன?

ஆத்மா

சத் சித் ஆனந்த வடிவமே ஆத்மா, முக்காலங்களிலும் உள்ளது சத் ஆகும், ஞான வடிவமே சித் ஆகும், சுக வடிவமே ஆனந்தம் ஆகும்.  என்றும் ஞான ஆனந்த வடிவானது ஆத்மா. இதுவே ஆத்மாவின் சொரூப லட்சணம். அதாவது ஆத்மாவின் இயல்பான குணம்.

ஜீவனும் ஈஸ்வரனும்

உலகப் படைப்புப் பற்றி கூறிய பிறகு ஜீவன், ஈஸ்வரன் ஆகியவற்றின் படைப்பு பற்றி பேசப்படுகிறது. ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின் பிரதிபிம்பம் ஆவான். அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக அறிகிறான். அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான். மாயை உபாதியோடு கூடிய ஆத்மா ஈஸ்வரன் எனப்படுகிறான். ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஈஸ்வரன் மாயை ஆள்கிறான், ஜீவன் மாயைக்கு ஆட்படுகிறான்.

உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள் உள்ளவரை பிறப்பு, இறப்பு முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை. எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன், அகங்காரம் அற்றவனாகவும் பேரறிவு பெற்றவனாகவும் இருப்பது ஈஸ்வரன். முரண் இவ்வாறு இருக்க மகாவாக்கியமானநீ அதுவாக இருக்கிறார்(தத்துவமசி) என்பதை எவ்வாறு வேறுபாடற்ற ஒன்றாகப் புரிந்து கொள்ள முடிவும் என்ற கேள்வி இயல்பாய் தோன்றும். அதற்கு ஆதிசங்கரர் விளக்கம் அளிக்கிறார், “நீ அதுவாக இருக்கிறார்என்பதில்நீஎன்பது என்பது ஜீவனையும்அதுஎன்பது ஈஸ்வரனையும் குறிக்கும் என்றால் இரண்டல்ல என்கிற அத்வைத விளக்கம் வராது. அதனால் ஆதிசங்கரர் வாச்யார்த்தம், லட்சியார்த்தம் என்ற அணுகுமுறையின் மூலம் விளக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார். வாச்யார்த்தம் என்பது நேரடிப் பொருளைக் குறிக்கும். நேரடிப் பொருளில் முரண்பாடு காணப்பட்டால் அதனை நீக்கி பொருள்கொள்வது லட்சியார்த்தம் எனப்படும். அதாவது முரண்படாத வகையில் அர்த்தப்படுத்துவது லட்சியார்த்தம்.

நீ அதுவாக இருக்கிறார்என்பதில்நீஎன்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய ஆத்மா என்றும், “அதுஎன்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய பிரம்மம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த லட்சியார்த்தத்தில் இரண்டிற்கும் வேறுபாடு காணப்படாததால் ஐக்கியம் சாத்தியமாகிறது.

ஜீவன் முக்தன்

தத்துவமசி என்கிற போதனை அறிந்தவன் தன்னை ஜீனாக கருதாத நிலையில், இவ்வுலகில் இருக்கும் போதே முக்தி அடைகிறான். அவனுக்கு ஜீவன் முக்தன் என்று பெயர். ஜீவன் முக்தனின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.

நான் மனிதன், நான் இந்த உடல், நான் பிராம்மணன், நான் சூத்திரன் என்று ஜீவன் எவ்வாறு நிச்சயமாகக் கருதுகிறானோ, அப்படியே நான் இந்த உடலன்று, நான் பிரம்மணன் இல்லை, சூத்திரன் இல்லை, மனிதன் இல்லை, நான் பற்றற்றவன், சுயம்பிரகாசம் உடையவன், அனைத்து உயிர்களிடத்தும் உள்ளுறைபவன், உருவமற்றவன் என்று உறுதியாக ஜீவன் முக்தன் கருதுகிறான்.

மூவகை கர்மாக்கள்

ஆகாமியம், சஞ்சிதம், பிராப்தம் ஆகியவை மூன்றுவகை கர்மங்களாகும். ஞானம் பெற்ற பிறகு ஞானியின் உடலால் செய்யப்படும் புண்ணிய பாவ வடிவான கர்மங்கள் ஆகாமிய கர்மங்கள் எனப்படும். பலகோடி பிறவிகளுக்குக் காரணமாகவும், முன்னர் செய்த செயல்களால் சம்பாதிக்கப்பட்டதாகவும் உள்ள கர்மங்கள் சஞ்சித கர்மங்களாகும். இந்த உடலைத் தோற்றுவித்து, இந்த உலகத்தில் ஒருவன் அனுபவிக்கும் சுகம், துக்கம் முதலான எந்த கர்மம் கொடுக்கிறதோ அதற்குப் பிராப்த கர்மங்கள் என்று பெயர்.

ஆகாமிய கர்மங்கள் ஞானத்தால் அழிகின்றன. மேலும் ஞானிகளுக்கும் ஆகாமிய கர்மங்களும், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போன்று எந்த சம்பந்தமும் கிடையாது.

பரமாத்மாவே தான் என்று அறிந்த பிரம்ம ஞானி சம்சாரக் கடலைக் கடந்து பிரம்மானந்தத்தை அடைகிறார். புறபொருளில் காணப்படும் பன்மையை மறுதலித்து பிரம்மமே நித்தியம் என்கிற ஒருமையை அத்வைதம் நிலைநிறுத்துகிறது.

ஆத்வைத வேதாந்தத்தை மிகவும் சுருக்கமாக பார்த்தோம். இவற்றில் உள்ள சிலவற்றை சற்று விரிவாக அடுத்துப் பார்ப்போம்.

அடுத்து வரயிருப்பவை:-
  1. ஆதி சங்கரர் வாழ்வும் படைப்பும்
   2. நித்திய அநித்தியப் பொருள்
   3. பிரம்மம் சத்தியம் உலகம் மாயை
   4 ஜீவ பிரம்ம ஐக்கியம்
   5. முக்தி - சம்சாரத்தில் இருந்து விடுதலை
   6. மார்க்சிய தத்துவம்
   7. அத்வைத ஒருமைக்கும் மார்க்சிய ஒருமைக்கும் உள்ள வேறுபாடு